Month: January 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    e7836f31-1105-46fe-bcd0-4ee303c4e429

    ”நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளைக் கண்ணனில் காண்’’….கிரேசி மோகன்….

    Share
  • மகாத்மாவின் குரல் (ஒரு நினைவாஞ்சலி)

    1. ஒரு மனிதனின் சிந்தனை ,சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் ஒருமைப்பாடு இருக்கும்பொழுதுதான் அவனுக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைக்கிறது.

    2. கோழைகளால் மன்னிக்க முடியாது. மன்னிப்பதற்கு ஒரு உறுதியான நெஞ்சம் தேவை.

    3. அகிம்சை மனிதனின் மிக சக்திவாய்ந்த ஆயுதம். உலகத்தில் புத்திகூர்மை கொண்டு தயாரிக்கப்பட்ட மிக வலுவான ஆயுதங்களை விட அகிம்சை வலுவானது.

    4. உலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு நீங்கள் .முன்னோடியாக இருக்கவேண்டும்.

    5. நாளையே உங்கள் இறுதிநாள் என நினைத்துக்கொண்டு வாழவேண்டும். காலம்காலமாக நீங்கள் வாழப்போவதாக நினைத்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    b47c3d1a-34a4-48ae-9d95-514481054188

    ”ஆவர்த் தனத்தோடு ஆலா பனைசெய்யும்
    கோவர்த் தனகானம் கேளுங்கோ, -ஸ்ரீவத்ஸ
    மச்சத்தின் பின்னே மகாலஷ்மி வைத்தவனே,
    உச்சத்தில் வைக்கும் உறவு’’….கிரேசி மோகன்…

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: வினா முந்துறாத உரை இல்லை

    பழமொழி: கனா முந்துறாத வினை இல்லை

    கல்லா தான் கண்ட கழி நுட்பங் கற்றார்முற்
    சொல்லுங்காற் சோர்வு படுதலா – னல்லாய்
    வினாமுந் துறாத வுரையில்லை யில்லைக்
    கனாமுந் துறாத வினை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
    சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லாய்
    வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை,
    கனா முந்துறாத வினை.

    பொருள் விளக்கம்:
    முறையாகக் கல்வியைக் கற்றிராத கல்லாதவர் ஒருவர் மிக நுட்பமான மெய்ப்பொருளினை அறிந்து கொண்டாலும், அதனைக் கற்றார் முன் விளக்கிக் கூறுவதற்கு தக்க கல்வியறிவினைப் பெறாததால் அவர் கூற்று முக்கியத்துவம் பெறாமல் போகும். நற்பண்புகள் அமைந்த பெண்ணே, கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை (அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை என அறிவாயாக)

    பழமொழி சொல்லும் பாடம்: சிறந்தவகையில் பொருள் புரிந்து கொள்ள அதற்கேற்ற முறையான அடிப்படைக் கல்வியைக் கற்றிருத்தல் அவசியம், கல்வியின்றி நுண்ணறிவு பெறுதல் இயலாது. டாக்டர் அப்துல் கலாம் சொன்ன “கனவு காணுங்கள்” என்பதன் அடிப்படையைக் காட்டுகிறது “கனா முந்துறாத வினை இல்லை” என இப்பாடல் கூறும் பழமொழி. குறிக்கோளினை எண்ணியபிறகுதான் அதை அடையும் செயல் துவங்குகிறது. பதில் வருவதற்குக் காரணம் அதற்கேற்ற கேள்வி எழும்புவது. தக்க அடிப்படைக் கல்வி இல்லாத பொழுது ஆராயும் மனப்பான்மை பெறாத காரணத்தினால் கண்டுகொண்ட நுட்பத்தின் அடிப்படையும் விளங்காது. பல அறிவியல் நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் அது ஏன் நிகழ்கிறது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களைக் கொண்டு இக்கூற்றைப் புரிந்து கொள்ளலாம். அதனால் இயற்கையறிவு பெற்றிருப்பினும் நுண்பொருளை அறிவதற்குத் தக்க அடிப்படைக் கல்வி தேவை என்பதை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். தேவையான கல்விப் பயிற்சியின்றி கற்றோரை எதிர்கொள்வதை வள்ளுவர்,

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல். (குறள்: 401)

    தேவையான நூல்களைக் கற்று கல்வியைப் பெறாத ஒருவர் கற்றறிந்த சான்றோருடன் கலந்துரையாடுவது, விளையாட்டிற்குத் தேவையான கட்டங்களை வரைந்து கொள்ளாமல் தாயக்கட்டையை உருட்ட முற்படுவதற்கு ஒப்பாகும் என்கிறார். அத்தகையவர் நிலையை,

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும். (குறள்: 405)

    கல்லாத ஒருவர் கற்றறிந்த மேதைகள் முன்னிலையில் எல்லாம் அறிந்தவர் போல உரையாட முற்படும்பொழுது அவரது உண்மையான அறிவுத் தகுதி எளிதில் வெளிப்பட்டுவிடும் என்கிறார்.

    Share
  • அவன், அது , ஆத்மா (45)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 45

    அவன், அது, ஆத்மா

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
    (மீ.விசுவநாதன்)
    அத்தியாயம்: 45

    அவன் “காட்பரி நிறுவனத்தில்” 27.01.1976 அன்று சென்னையில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அதன் தென்மாநில அதிகாரியாக ஆதிகேசவன் என்பவர் இருந்தார். அவனுக்கு அந்த அலுவலகத்தில் நேர்காணல் என்று எதுவும் நடைபெற வில்லை. “நீ ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பையன் என்றும், உன் பெற்றோர் நாணயமானவர்கள் என்றும்தான் திரு. ஆதிலக்ஷ்மணன் அவர்களால் உனக்கு இந்தக் கம்பெனியில் வேலை கொடுத்திருக்கிறது. அதை நீ காப்பாற்ற வேண்டும். உனக்கு இப்பொழுது இருபது வயதுதான் ஆகிறது, இன்னும் நிறையப் படி. நேரத்தை வீணாக்காதே” என்று அந்த உயர் அதிகாரி ஆதிகேசவன் அவனிடம் சொல்லி, வேலைக்கான கடிதத்தை அவனிடம் தந்தார். அதைப் படித்துப் பார்த்து விட்டு, அதன் நகலில் கையெழுத்திட்டுத் தருமாறு கூறினார். அது ஒரு தற்காலிகப் பணி என்றும் , ஆறு மாதங்களுக்குப் பின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும், தினப்படி இருபது ரூபாய், அதுவும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நூறு ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்தக் கடிதத்தில் இருந்தது. ஒரு நாளைக்கு இருபது ரூபாய் என்பது அப்பொழுது நல்ல ஊதியம். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் கடித நகலில் கையெழுத்திட்டுக் கொடுத்தான். அவனுக்கு அந்த அலுவலகத்தில் வேலைகளைக் கற்றுத்தரச் சொல்லி அங்கு இருந்த திரு. துர்கா பிரசாத், ஆர். நாகராஜன், கே.வி.ராகவன் போன்றவர்களிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தார் ஆதிகேசவன் அவர்களின் உதவியாளர் திருமதி. சுகன்யா சங்கர். அப்படித் துவங்கிய அவனது “காட்பரி நிறுவன”ப் பயணம் அவன் பணியில் இருந்து நல்ல பெயருடன் ஓய்வு பெற்ற 30.06.2013 நாள் வரை, சுமார் முப்பத்து ஏழரை ஆண்டுகள் சென்னையிலேயே அவன் மனம்போல நன்றாகவே சென்றதற்கு அவனுக்குப் பெற்றோர்களின் ஆசியும், ஆதிலக்ஷ்மணன் அவர்கள் அவன்மீது கொண்ட அன்பும்தான் காரணம். இந்தப் பயணத்தில் அவன் கற்றது ஏராளம். அவனை ஏளனமாகப் பார்த்தவர்களை எல்லாம் அவன், அவனது நல்ல செயல்களால் வியக்க வைத்த பாடங்கள் அனந்தம். அவனுக்கு நிறைய இலக்கிய அன்பர்களை, எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைக்கக் காரணமாக இருந்தது ஒருவகையில் இந்த “காட்பரி நிறுவனமும்”, அதன் பம்பாய் அலுவலக உயர் அதிகாரியுமான ஆதிலக்ஷ்மணன் அவர்களின் தொடர்பும்தான் என்று சொல்ல வேண்டும்.

    இலக்கிய சிந்தனை அமைப்பாளர்கள்:
    அவன் காட்பரி நிறுவனத்தில் சேரும் முன்பாகவே இலக்கிய சிந்தனையின் மாதக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான். அப்பொழுது அது சென்னையில் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு இடத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று நடைபெறும். அந்த மாதம் வார, மாதப் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளில் இருந்து ஒரு கதையை ஒருவர் தேர்ந்தெடுத்து அதுபற்றிப் பேசுவதும், வேறுஒரு அறிஞர் இலக்கியம் பற்றிப் பேசுவதும் வழக்கம். அந்த வருட “தமிழ்ப் புத்தாண்டு” தினத்தில் இலக்கிய சிந்தனை ஆண்டு விழா கொண்டாடி, அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு சிறுகதைகளை “வானதிப் பதிப்பகம்” மூலமாகப் புத்தகமாகக் கொண்டுவருவதும், அதில் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்து ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதும், ஏதேனும் ஒரு சிறந்த படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி ஒருவர் ஆய்வு செய்த நூலை வெளியிடுவதும் இன்றுவரை ஒரு மரபாக இருந்து வருகிறது. அவனும் பல முறை “இலக்கிய சிந்தனை” அமைப்பின் மாதக் கூட்டங்களில் பேசியும், கதைகளைத் தேர்வு செய்தும் இருக்கிறான். அந்த அமைப்பின் அமைப்பாளர்களாக திரு. R. A. K. பாரதியும், திரு. ப. லெட்சுமணன் அவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகச் செய்தது இலக்கியமானாலும், முக்கியமாக “காட்பரி நிறுவனம்” இருந்ததை அவனறிவான்.

    அதுவரை தான் தயாரிக்கும் பொருள்களை தென்மாநிலங்களில் “T.TK.”நிறுவனத்தின் மூலமாக விநியோகித்து வந்த “காட்பரி நிறுவனம்” 1.8.1978 முதல் தானே தன் நேரடிப் பார்வையிலேயே விநியோகஸ்தர்களையும், அவர்களுக்குப் பொருள்களை அனுப்புகிற “ஏஜென்ட்” அமைப்புகளையும் ஏற்பாடு செய்தது. அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்நாடு, பாண்டிச்சேரிக்கான “ஏஜென்ட்” அமைப்பான “கற்பகாம்பாள் ஏஜென்சி”யின் உரிமையாளர் திரு. ப. லக்ஷ்மணனும், அதை நிர்வகிக்கும் அதிகாரியாகத் திரு. R. A. K. பாரதியும் இருந்தனர். அதன் அலுவலகம் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் அருகில் உள்ள ஒரு பெரிய இடத்தில் இருந்தது. நல்ல நேர்மையான நிர்வாகிகளான அவர்களுடன் காட்பரி நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஆதிலக்ஷ்மணன் அவர்களுக்கு நல்ல நட்பு இருந்தது. அதற்குக் காரணமே இலக்கியமும், தமிழ்ப் பற்றுமாகவும் இருந்தது என்று அவனிடம் ஆதிலக்ஷ்மணன் அவர்களே சொல்லி இருக்கிறார்.

    அவன் அலுவலக வேலையாக அடிக்கடி “கற்பகாம்பாள் ஏஜென்சி” அலுவலகத்திற்குச் சென்று வருவான். அப்பொழுது R. A. K. பாரதி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் தான் எழுதிய கவிதைகளை அவரிடம் காட்டுவான். அவர் அதை ரசித்தும், விமர்சனம் செய்தும் பாராட்டுவார். ஒரு முறை ஒரு கதை எழுதி அவரிடம் காண்பித்தான். அதைப் படித்துவிட்டு இதை இன்னும் சரிசெய்தால் நல்ல குறுநாவலாக வரும் என்றார். அவன் அந்தக் கதையையே கிழித்துப் போட்டு விட்டான். அவன் எழுதிய சிறுகதைகள் பத்திரிகையில் வரும் பொழுது அது பற்றி பல முறைகள் “பாரதி” அவனைப் பாராட்டி இருக்கிறார். அவனது முதல் சிறுகதைத் தொகுதியான “இரவில் நனவில்” புத்தகத்தைப் படித்துவிட்டு,” ரொம்ப நல்லாருக்கு..விசு..எழுத்துல நல்ல ஸ்டைல் ஒனக்கு வந்திருக்கு” என்று அவனை வாழ்த்தினார்.

    “அண்ணாமலை கைதொழ”
    “எம்.எஸ் .வி”. அவர்கள் இசையமைக்கும் அழகை நேரில் காணும் வாய்ப்பு அவனுக்கு இரண்டு முறைகள் கிடைத்தன. அதில் ஒன்று அவன் நண்பர்களுடன் திருவல்லிக்கேணி வசந்தாமேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, விடுதியின் சொந்தக்காரர் 1978ம் வருடம் “மே” மாதத்தில் ஒரு படம் எடுக்க பூஜை போட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் படத்தயாரிப்பாளரான விடுதியின் சொந்தக்காரர் அவனை அழைத்திருந்தார் (அவனுக்கு அதில் விருப்பம் இருந்த காரணத்தால்) ஜெமினி ஸ்டுடியோவில் பூஜையுடன் பாடல் ஒலிப்பதிவு. படத்தின் இயக்குநர் மல்லியம் ராஜகோபால்., எம்.எஸ்.வி. இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டான். எம்.எஸ்.வி. அவர்கள் மெட்டுச் சொல்ல அதற்கு “இங்கே ஒரு சங்கம் அதில் சங்கம் அடைந்தேனே …அங்கே அவள் அங்கம் அதில் அங்கம் வகித்தேனே” என்ற அழகான வரிகளைக் கவியரசர் சொல்ல, அதற்கு இசையமைத்த எம்.எஸ்.வி. அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குப் பாடிக் காட்ட, எம்.எஸ்.வி. அவர்களின் உதவியாளர் ஜோசப்கிருஷ்ணா துணையுடன் அந்த மிக இனிமையான பாடல் ஒலிப்பதிவான தருணம் இன்றும் அவனுக்கு அதே இனிமையுடன் நினைவிருக்கிறது. பணப்பிரச்சனையால் அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது. ஆனால் அந்தப் பாடல் மட்டும் அவனுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    இரண்டாவது முறை 1999ம் வருடம் “அண்ணாமலை கைதொழ” என்ற தேவார, திருவாசகப் பாடல்களின் இசைத் தொகுப்புக்கு எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைக்கும் பொழுது முழுமையாக இரண்டு தினங்கள் அவருக்கு வெகு அருகிலேயே இருந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றான். அ.ச.ஞானசம்மந்தன் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பதினேழு பாடல்களுக்கு மெட்டமைத்து, தனது குழுவினருடன் அவர் இசையமைத்த அழகையும், அந்த இசையிலேயே அவரும் மூழ்கிக் குளித்த அவரின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் நேரில் கண்டு ஆனந்தம் அடைந்தான்.

    “இலக்கிய சிந்தனை” அமைப்பாளர்களில் ஒருவரான R. A. K. பாரதி அவர்கள் அவனிடம் ,”விஸ்வநாதா…தேவார, திருவாசகத்தில் இருந்து சில பாடல்களை அறிஞர் அ.ச.ஞா. தேர்வு செய்திருக்கிறார். அதற்கு “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமைக்கப் போகிறார். இரண்டு நாட்கள் அதன் ஒலிப்பதிவு மைலாப்பூர், கச்சேரி ரோட்டில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் நடக்கவிருக்கிறது. ஒனக்கு இதிலெல்லாம் ஈடுபாடுண்டே..முடிந்தால் இரண்டு நாட்கள் லீவு போட்டு வாயேன். மிகக் குறைந்த பேர்கள்தான் இருப்பார்கள். அ.ச.ஞானசம்மந்தன் இருப்பார். முடிந்தால் சீதாவையும் (அவனுக்கு மனைவி) கூட்டிக்கொண்டு வா” என்றார். இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு காலையில் எட்டு மணிக்குச் சென்று இரவு பதினோரு மணிக்குத்தான் திரும்பினான்.

    ஒலிப்பதிவுக் கூடத்தின் உள்ளே அ.ச.ஞா. அவர்கள் அமர்ந்திருந்து ஒவ்வொரு தேவார திருவாசகப் பாடலுக்கும் ஒரு சிறு உரை தருவார். அதை எம்.எஸ்.வி.அவர்கள் நுணுக்கமாகக் கேட்டுப் பதிவு செய்வார். ஒலிப்பதிவு முடிந்தவுடன் அ.ச.ஞா. கூறும் அற்புதமான விளக்கங்களைக் கேட்டு ரசிப்பார். அடுத்ததாக எந்தப் பாட்டு யார் பாட வேண்டும் என்று திட்டமிட்டபடி பாட அழைத்திருந்தார். இசையமைக்கும் குழுவினர் ஒரு கூடத்தில் இருப்பார்கள். அவர்களுக்குக் குறிப்புகள் தந்து வழிநடத்துவார். உடனே தனது இடத்திற்கு வந்து பாடகர்களுக்கான பாடலைத்தந்து, அதை எப்படிப் பாடவேண்டும் என்றும் கற்றுத் தருவார். குறித்த காலத்தில் ஒலிப்பதிவை முடித்துவிட்டு, அதை அங்கே உடனேயே போட்டுக் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொள்வார்.

    “அண்ணாமலை கைதொழ” என்ற அத்தொகுப்பில் அப்பர் தேவாரத்தில் இருந்து “எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே ..சிந்தை உள்ளும் சிரத்துளும் தங்கவே” என்ற பாடலுக்கான இசைக்குறிப்பை (பதிவு செய்த ஒலிநாடாவை) எஸ்.பி.பி. இடம் தந்து,” பாலு..இதக் கேளு..பாடு” என்றார். எஸ்.பி.பி. அதைப் பணிவோடு பெற்றுக்கொண்டு எம்.எஸ்.வி.யையும், அங்கே அமர்ந்திருந்த அ.ச.ஞா. அவர்களையும் வணங்கி விட்டுப் பாடுவதற்காக ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் சென்று விட்டார். அவர் சென்றவுடன், “பாலுவிடம் ரொம்பப் பணிவும், கிரகிப்புத்தன்மையும் ஜாஸ்த்தி. என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதை அப்படியே பாடி இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாய்டுவான்” என்று அங்கிருந்த அ.ச.ஞா., ப.லஷ்மணன், பாரதி ஆகியோர்களிடம் எம்.எஸ்.வி. கூறினார். பாடல்களை எல்லாம் “டிராக்”கில் பாடியவர் எம்.எஸ்.வி.யின் உதவியாளராக இருக்கும் அனந்தநாராயணன். அவர் எம்.எஸ்.வி.யின் செல்லப்பிள்ளை.

    “தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்” என்ற திருவாசகப் பாடலை கிருஷ்ணராஜூவும், ராகவேந்தரின் மகளும் பாடினர். அந்தப் பாடலில் “தேராந்த வீதிப் பெருந்துறையான் நிருனடஞ்செய்” என்று ஒரு வரி வரும். அதற்கு இசை அமைக்கும் பொழுது எம்.எஸ்.வி.யிடம் அ.ச.ஞா. அவர்கள், ” எம்.எஸ்.வி….இந்த இடத்துல இறைவன் தேரில் ஊர்வலம் வருகிறார்…” என்று சொல்லும் பொழுது, “ஆங்….புரிஞ்சுது..புரிஞ்சுது..என்று சொல்லி “மாலாரி” ராகத்தில் அதை மிக அழகாக அமைத்தார். நாதஸ்வரம், மேளம் என்று அந்த இசை அமர்க்களமாக இருக்கும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ப.லஷ்மணன் பரவசப்பட்டு எம்.எஸ்.வி.யின் கையைப் பிடித்துப் பாராட்டினார். அந்தப் பாடலைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கும்.

    இரண்டாவது நாள் “சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக” என்ற திருவாசக, திருப் பொன்னூசல் பாடலை “சிந்து” பாடினாள். ரொம்பவும் அற்புதமான, மனம் ஊஞ்சலாடுகின்ற வண்ணம் அந்தப் பாடலுக்கு மெல்லிசைமன்னர் இசையமைத்திருப்பார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்து முடிக்கும் பொழுது இரவு மணி பதினொன்று. அப்பொழுது அங்கிருப்பவர்களிடம்,” இதப் போலத்தான் “ஆயர்பாடி மாளிகையில்” பாட்டையும் நள்ளிரவுல ஒலிப்பதிவு செய்தோம்” என்றார் எம்.எஸ்.வி.

    அப்பொழுது அவனுடன், அவனது மனைவியும், அவனது மைத்துனி “கலாவும்” இருந்தனர். கலா நன்றாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர். அவன் எம்.எஸ்.வி.அவர்களிடம்,” இவங்க என் மைத்துனி ..கலா ..கர்நாடக சங்கீதம் கற்றவர்” என்று அறிமுகம் செய்து வைத்தான் . உடனே அவர் தன் ஆர்மோனியப் பெட்டியின் மீது தனது வலதுகை விரல்களைப் பரப்பியபடி,” அம்மா..எங்க..ஒரு பாட்டுப் பாடு” என்றார். கலாவும் கொஞ்சம் பாடினாள். ,” அம்மா ஒனக்கு நல்ல சாரீரம் இருக்கு…நிறைய பிராக்டீஸ் பண்ணனும் ..நல்ல வருவே..” என்று வாயார வாழ்த்தினார் அந்த இசை மேதை.

    இதுபோன்ற பல நல்ல தொடர்புகளை அவனுக்கு ஏற்படுத்தித் தந்தவர் திரு. பாரதியும், திரு. ப. லக்ஷ்மணன் அவர்களும். பாரதி டெல்லியில் மத்திய அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருந்தவர். அதைத் துறந்து சென்னைக்கு வந்தவர். அவரும் திரு. ப.லக்ஷ்மணன் அவர்களும் நல்ல புரிதல் கொண்ட அன்பு நண்பர்கள். ஆடம்பரம் இல்லாதவர்கள். திரு. ப. லக்ஷ்மணன் பெரும் செல்வந்தர். ஆனாலும் மிகுந்த பணிவும், எளிமையும், பண்பும் கொண்டவர்.

    அவனுக்கு மகன் “கிருஷ்ணா”வின் திருமணத்திற்கு( 9.2.2014) அவனும், அவனுக்கு மனைவி சீதாவும் திரு. ப. லக்ஷ்மணன் அவர்களுக்கு பத்திரிகையைத் தந்து, “கல்யாணம் எங்கள் ஊர் கல்லிடைகுறிச்சியில் வைத்து நடைபெற இருக்கிறது.. நீங்கள் கட்டாயம் வரவேண்டும்” என்று சொன்ன பொழுது, அவர், “நான் அன்று திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் இருப்பேன். 12.02.2014 அன்று நீங்கள் ஊரில் இருப்பீர்களா? பொண்ணும், புள்ளையும் அங்க இருப்பாங்களா ” என்று கேட்டார். ” எல்லோருமே ஊரில் இருப்போம் நீங்கள் அவசியம் வாருங்கள்” என்றனர் . “கட்டாயம் வருகிறேன்” என்றார். உடனே அவன் ,”அழகு சுந்தரத்தையும், அவரது குடும்பத்தினரையும் திருமண வரவேற்புக்கு வரச்சொல்லுங்கள்” என்றான். (டாக்டர் அழகு சுந்தரம் அவர்களுக்கு நல்ல நண்பன் என்ற முறையில்). ” நான் வரேன்ல …என் பையன் அழகு சுந்தரம் எதுக்கு?…அனாவசியமா, அதிகமா ஒரு மூணு சாப்பாடு தேவையா? காசை வீணாக்கப் படாது…..நான் சொல்லறதக் கேளுங்க…” என்று சொன்னார். அவனுக்கு அது நியாயமாகப் பட்டது. அதே குணம் திரு. பாரதிக்கும் உண்டு. அற்புதமான எளிய மனிதர்கள்.

    இலக்கிய சிந்தனை மூலமாக அவனுக்கு நல்ல எழுத்தாளர்கள் மாத்திரம் கிடைக்க வில்லை. அவனுக்கு நல்ல நண்பர்களாகவும் கிடைத்ததுதான் பெரும் பேறு.

    “பம்பாய் ஆதிலக்ஷ்மணன்” நினைவுப் பரிசு”
    02.08.1991 அன்று பம்பாய் தமிழ்ச் சங்கத் தலைவர் தனது அறுபதாவது வயது பூர்த்தி ஆன சில மாதங்களில், தன்னுடைய ஊரான (பிறந்த ஊர் சாம்பூர்வடகரை. விருப்பமாய் இருந்தது தென்காசியில்) தென்காசியில் மரணமடைந்தார். தனது உயிலில்,” சென்னையில் இருக்கும் “இலக்கிய சிந்தனை” அறக்கட்டளை அமைப்புக்கு ரூபாய் ஒருலக்ஷம் கொடுக்கவும்” என்று எழுதியிருக்கிறார். அந்தத் தொகையை திரு. ஆதிலக்ஷ்மணன் அவர்களின் ஷட்டகர் (சகலை) திரு. ஆர்.எஸ். மணி அவர்கள் அவனுக்கு ஒரு காசோலையாக அனுப்பி, “இந்த ஒரு லக்ஷரூபாய்”யை இலக்கிய சிந்தனைக்காக ஆதிலக்ஷ்மணன் கொடுக்கச் சொல்லி உயில் எழுதி இருக்கிறார் என்று சொல்லி, “ப. லக்ஷ்மணன் அவர்களிடம் கொடுத்து விடு” என்று கடிதம் எழுதி இருந்தார். அவன் அந்தக் காசோலையை இலக்கிய சிந்தனை அமைப்பாளரான திரு. பாரதியிடம் கொண்டுக் கொடுத்தான். அந்தத் தொகையை அவர்களது அறக்கட்டளையில் சேர்த்துக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் (1992ம் வருடம் தமிழ் புத்தாண்டு இலக்கிய சிந்தனை ஆண்டு விழா முதல்) தமிழ்த் தொண்டு புரிந்த ஒரு அறிஞருக்கு ரூபாய் பதினைந்தாயிரம் (Rs . 15,000/-) “பம்பாய் ஆதிலக்ஷ்மணன்” நினைவுப் பரிசாக வழங்கி வருகின்றனர்.

    28.01.2016
    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (181)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    அன்பான வணக்கங்களுடன் சிறியதோர் இடைவெளியின் பின்னால் மீண்டும் மடல்வழி உங்களோடு இணைவதில் மனம் பெருமகிழ்வடைகிறது.

    ஏறத்தாழ நான்கு வாரங்கள்… நான்கு வாரங்கள் என்றால் என்ன ஒரு மாதம்தானே என எண்ணும்போது மனதினில் மிகவும் இலகுவாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது. அந்த நான்கு வாரங்கள் தன்னுள் எத்தனையோ நிகழ்வுகளின் தொகுப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதன் முழு விபரத்தையும் ஆராய்ந்தால் நான்கு வாரங்கள் எனும் அந்தக் காலத்தின் தாத்பரியத்தை நன்கு உணர முடிகிறது.

    தமிழ்த்தாயின் இருப்பிடம், தமிழகத்தின் தலைநகராம் சென்னையை நோக்கிய எனது பயணமும் அந்தப் பயணத்தின் விளைவால் நெஞ்சில் தொகுக்கப்பட்ட அனுபவப் பக்கங்கள். ஆமாம் இந்த நான்கு வாரக் காலம் எனது நெஞ்சத்திரையில் தன் காலமெனும் தூரிகையினால் வரைந்த ஓவியங்கள் எத்தனையோ. எத்தனையோ திட்டங்களை மனதில் வகுத்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்கும் பயணத்தின் முடிவில் அதில் அரைவாசி கூட நிறைவேற்றப்படாமல் திரும்பும்போது கொடுக்கும் ஏமாற்றத்துளிகளால் நிரம்பும் நெஞ்சக் குட்டையில் நீந்தும் அனுபவமும் தனியானதுவே,

    இம்முறை பயணத்தின் போது சிலதைக் கொடுத்த அந்த இறைவன் சிலதை எடுத்துக் கொண்டும் விட்டான். ஒவ்வொரு வருடமும் எமது சென்னைப் பயணத்தின் முக்கிய அம்சமே எனது மனைவியின் தந்தை, நான் என் தந்தை ஸ்தானத்தில் நிலைநிறுத்தி வணங்கும் ஒரு உன்னத மனிதருடன் ஒரு சில வாரங்களைச் செலவிடப் போகிறோம் எனும் எண்ணமேயாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் என் மாமனாரை நீ இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என்று தன்னோடு அழைத்துக் கொண்டுவிட்டான் அந்த அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை எனும் சக்தி.

    இவ்வருட பயணத்தின் போது அவரில்லை. அவரில்லாத ஒரு சென்னைக்குச் செல்கிறோம் எனும் வருத்தம் என் அன்பு மனைவியின் நெஞ்சத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை நான் நன்றாக அறிந்திருந்தேன். இருப்பினும் இப்பயணத்தின் எதிர்பார்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் தன்னுள் என் மனைவி அடக்கிக் கொண்டதனையும் நான் நன்கு அறிந்திருந்தேன்.

    எழுத்து எனும் இந்த அற்புதக் கடமையால் தமிழன்னை எனக்கீந்த உறவுகள் எத்தனையோ. அவற்றில் சில உடன்பிறப்புகளை விட அதிகமான நெருக்கத்தையும், பாசத்தையும் பொழிபவை என்றால் மிகையாகாது.
    அத்தகைய தமிழன்னை எனக்களித்த தம்பிகளில் சுரேஷ் மிகவும் முக்கியமான ஒருவர். அண்ணா, அண்ணி என்று எம்மீது அளவுகடந்த பாசத்தைக் கொட்டி வருபவர். அந்த அன்புக்கு அவரின் மனைவி தங்கை விஜி ஒன்றும் சளைத்தவரல்ல. அந்தத் தம்பி சுரேஷின் தாயாரை நான் சந்தித்த சந்தர்ப்பங்கள் சிலவே இருப்பினும் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் ஏதோ மறைந்த என் அன்னையின் ஞாபகங்கள் என் உள்ளத்தின் உணர்வுகளோடு இணைந்து ஆனந்த ராகம் மீட்டும். அவரிடம் ஆசி பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன். அந்த அன்பு அன்னையை ஜனவரி மாதம் 16ம் திகதி இறைவன் தன்னோடு அழைத்துக் கொண்டு விட்டான். எனது லண்டன் பயணத்திற்காக விமான நிலையம் செல்ல வேண்டியதால் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை. தம்பிக்கு தொலைப்பேசியில் ஆறுதல் சொல்லவே என்னால் முடிந்தது.

    அது தவிர என் மற்றோர் தம்பி திருப்பூர் ஸ்ரீதர் “வாருங்கள், வாருங்கள்” என்று எனது ஒவ்வொரு சென்னைப் பயணத்தின் போதும் வருந்தியழைத்தும் செல்ல முடியாதிருந்த ஒருநிலையை இப்பயணத்தின் போதே மாற்ற முடிந்தது. ஆமாம் அவருடன் சில நாட்கள் , திருப்பூரிலும், திண்டுக்கல்லிலும் செலவழித்ததோடு எனது நீண்டநாள் கனவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் தரிசனம் செய்யும் கனவும் நிறைவேறியது. அது மட்டுமின்றி புதுவருடத்திற்கு முந்திய 2015ம் ஆண்டின் கடைசிநாள் பழனிமலையில் முருகனைத் தரிசிக்கும் பாக்கியமும் பெற்றோம்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இ-சங்கமம் இணையத்தளத்தின் ஆசிரியரான தம்பி விஜய் எனும் விஜயக்குமார் தனது நண்பருடன் எனைத்தேடி திருச்செங்கோட்டிலிருந்து சென்னை வந்து சந்தித்த அனுபவம் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது. அதன் பின்னால் அவரைச் சந்திக்க பலமுறை எண்ணிய போதும் சந்திக்க முடியாத நிலை. இப்போது அவர் தினமலர் ஈரோடு நிருபராகவும், ஈரோடு புதிய தலைமுறை செய்தியாளராகவும் இருக்கிறார். அந்தத்தம்பியை அவருடைய ஊர் திருச்செங்கோட்டில் சந்திக்க முயன்றபோது அலுவலகப்பணிகளால் அழுந்திப்போயிருந்த அவர் எனக்காத் தனது பணிகளை சிறிது ஒத்திப் போட்டு அர்த்தநாரீஸ்வரர் ஆலய வாசலில் வந்து சந்தித்த நிகழ்வு என் நெஞ்சத்தைத் தாலாட்டுகிறது.

    ஒரேயொரு ஏமாற்றம்! திருப்பூர் நோக்கி இரெயிலில் பயணிக்கும் போதுதான் சகோதரி பவளசங்கரி ஈரோட்டில் தான் இருக்கிறார் என்று அவர்மூலம் கேள்விப்பட்டேன். என்னைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்த சகோதரி பவளசங்கரி, அதே அவலுடன் இருந்த என்னால் நேரமின்மை எனும் ஒரே காரணத்தினால் சந்திக்க முடியாமல் போனதே ஏமாற்றமென்பேன். இருந்தாலும் சகோதரியோடு தொலைப்பேசியில் உறவாடியது ஓரளவு சந்திக்க முடியாமல் போன ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவியது.

    சென்னையில் எனது வழமையான அனைத்து நண்பர்களின் சந்திப்பில் குறிப்பாகக் கவியரசர் கண்ணதாசனின் மைந்தன் எனது இனிய நண்பர் காந்தி கண்ணதாசன், நண்பர், நாடக மன்னன், நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோரின் சந்திப்பு இதமாக இருந்தது.

    சந்திக்க முடியாமல் போனவர்கள் பட்டியலில் இசைக்கவி ரமணன், தம்பி தேவகோட்டை இராமநாதன், அன்பு நண்பர் பாண்டியராஜன், அற்புதப் பேச்சாளர், இலக்கியத் தென்றல் பி.என் பரசுராமன் பலர் இடம்பெற்றது மிகவும் வேதனையான விடயம்.

    இருப்பினும் அடுத்த விஜயத்தின் போது அனைவரையும் சந்திக்கலாம் எனும் எண்ணம் நெஞ்சுக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அனைத்தையும் முடித்துக் கொண்டு இதோ மீண்டும் இலண்டனில் காலதேவன் தாராளமாக வழங்கும் பனிக்குளிரில் கடந்த வாரங்களை அசைபோடும் நேரம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • காரைக்குடி கம்பன் கழகத்தின் பிப்ரவரி மாதக் கூட்டம்

    காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் பொழிவாக நடைபெற உள்ளது. புதிய தலைப்பு புதிய துறை. முனைவர்  அரிமளம் பத்மநாபன் (இசைவாணர்) அவர்கள் கம்பனில் இசைத்தமிழ் என்ற பொருளில் இசை உரை ஆற்ற உள்ளார்கள் . இசையோடு இயலும் நாடகமும் ஆகப் பொழியும் இப்பொழிவிற்கு அனைவரும் வருக.

    நாள் – 6-2-16 சனிக்கிழமை

    இடம்-கிருஷ்ணா திருமணமண்டபம் காரைக்குடி .

    நேரம் சரியாக மாலை ஆறுமணி

    வரவேற்புரை- திரு கம்பன்அடிசூடி, பழ.பழனியப்பன்
    தொடக்கவுரை- தகைமிகு சி.நா.மீ உபயதுல்லா
    இசையுரை- கம்பனில் இசைத்தமிழ்
    முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்
    நன்றி-சொ.சேதுபதி
    இரவு சிற்றுண்டி
    அனைவரும் வருக

    கம்பன் புகழ்பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்
    அழைப்பு இதனுடன் உள்ளது

    11

    1213

    14

    15

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 54

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     

    “நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber)

    எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை அன்னை இதயத்தை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அவரது முகங்கள் காலை ஒளிச்சுடரில் குளிக்கக் காத்திருந்து சத்தியத்தின் விடிவுக்காகக் கிழக்கை நோக்கித் திரும்பியுள்ளன. நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும் விடுதலை உணர்வும் கொண்ட முகத்தோடு என்னைக் கடந்து சென்றார். கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________
    இசை தனித்துவ மொழி
    ___________________

    இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது
    அது உயிரூட்டும் உணர்வு !
    இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது
    அதுவே அதன் நெஞ்சு !
    படைக்கும் போது
    கடவுள்
    இசை யெனும்
    தனித்துவ மொழியை
    மனிதனுக்கு அளித்துளான் !
    அனைத் துக்கும் வேறு பட்ட
    இனிய மொழி அது !
    ஆதி மனிதன்
    அதன் உன்னதம் பாடினான்
    அடர்ந்த கான கத்தில் !
    இசை மகள் அரசனின்
    இதயம் கவர்ந்து
    ஆசனத்தி லிருந்து
    இறங்கி வரச் செய்தாள் !
    ___________________

    ஊழ் விதிப் புயலின்
    அசுரத் தாக்கலில்
    பாழ் பட்டுப் போன
    மெல்லிய பூக்களே
    நமது ஆத்மா வெல்லாம் !
    அதிகாலைத் தென்றலில் கூட
    ஆடி நடுங்கிடும்
    ஆத்மாக்கள் !
    வானி லிருந்து வீழும்
    பனித் துளிகளால்
    கூனிப் போகும் நமது ஆத்மா !
    ___________________

    பறவையின் இசை ஒலிகள்
    மனிதரின்
    உறக்கம் கலைத்திடும் மங்கிய
    உதயப் பொழுதில் !
    முடிவிலாக் கடவுளின்
    உன்னத
    மகத்துவம் பாடும் போது
    மனிதரை
    ஒன்று படுத்த
    அழைப்பிதழ் அனுப்பிடும்
    புள்ளினத் தின்
    இசை ஓசை !
    ___________________

    ~ நிறைவுற்றது ~
    ___________________

    Share
  • கோவை தமிழ் இலக்கியப் பாசறையின் சிறந்த மரபுக் கவிஞர் விருது

    கோவை தமிழ் இலக்கியப் பாசறை தம்முடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டின் சிறந்த மரபுக் கவிஞராகப் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களைத் தேர்ந்தெடுத்து 26-01-2016 அன்று கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராகத் திகழ்ந்த விஞ்ஞானி திரு.பொன்ராசு அவர்கள் விருத்தக் கவிதை வித்தகர் என்ற விருது அளித்து சிறப்பு செய்தார்.

    11

    12

    13

    Share
  • வல்லமைக் கவிஞர்!…

    பெருவை பார்த்தசாரதி

    a23491e2-7faa-4581-a8e8-aee10b8bc5ca

     c2aad4bf-ad76-4da8-a738-f6da4d4239eb

    இப்பொழுதெல்லாம், எந்த ஒரு அழைப்பிதழையும் கொடுப்பதற்கும், அவ்வளவாக யாரும் நேரில் வருவதில்லை. அலைபேசியில் அழைப்பிதழின் நகல் வந்தவுடன், என்ன சார்?.. அழைப்பிதழ் வந்ததா!..கண்டிப்பாக குடும்பத்துடன் வந்துவிடுங்கள்!.. என்கிற அன்பான வேண்டுகோளுடன் முடிந்துவிடுகிறது.

    இப்படித்தான், கவிஞர் ரவிச்சந்திரன் எழுதி வெளியிடும் “காதல் பொதுமறை” என்கிற நூலும், இந்த நூலை அது வெளிவருவதற்கு முன்பே ஆய்வு செய்து இரண்டு ஆய்வு நூல்களாக வெளியிடுபவர் முனைவர் வைகை மலர் அவர்களும் என்பதை  அலைபேசியில் வந்த அழைப்பிதழ் மூலம் அறிந்தேன்.

    “நூல் வெளியீட்டு விழா” அழைப்பிதழை பார்த்தவுடன், ஒரு மகிழ்ச்சியான விஷயம், வல்லமை மின் இதழில் எழுதிவருகின்ற பலருடைய பெயருக்கு முன்னால், “வல்லமை” என்கிற அடைமொழியோடு அச்சடிக்கப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை மேடைக்கு அழைக்கும்போதெல்லாம், அரங்கமெங்கும் “வல்லமை” என்கிற வார்த்தை எதிரொலித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. விழா முடிந்தவுடன், புதிதாக வந்திருந்தவர்கள் சிலர், என்னிடம் சிலர் வல்லமை என்பதற்கு விளக்கம் கேட்க, அவர்களுக்கு இந்த மின் இதழின் சிறப்பை நான் எடுத்துரைத்தேன்.

    தொகுப்புரை வழங்கிய தொகுப்புரை வழங்கிய கவிஞர் ஜோதிபாசு அவர்கள், விழாவின் முதல் பேச்சாளராக, “வல்லமை தமிழ்தேனி” என்று அழைக்க, அவரும், மிகச் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார், அடுத்து வந்தது “வல்லமை புகழ் – பேராசிரியர் நாகராஜன்”, வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையோடு கூடிய பேச்சு, அரங்கத்தில் சிரிப்பொலி, அதற்கடுத்து “வல்லமை வில்லவன் கோதை”, நிறைய குறிப்புகளுடன் சற்று அதிக நேரம் கவிஞரின் நூல் பற்றிப் பேசினார், அடுத்து நட்சத்திரப் பேச்சாளர் என்று அழைக்க, பல வித சிரமங்களையும் பாராமல் பெங்களூருவிலிருந்து வந்த “வல்லமைப் பேச்சாளர் ஷைலஜா”, நூல் பற்றிய மதிப்பீட்டை வாசித்தார். கடைசியாகப் பேச வந்தவர் “வல்லமை ஆதிரா முல்லை” மகிழ்ச்சியாகப் பேசினார்.

    இடையே அடியேனுக்கும் ஒரு சிறுபங்கு, நான் கவிஞர் ரவிச்சந்திரனோடு நெருங்கிப் பழகிய அனுபவங்களை மட்டும் விழாவில் பேசினேன். தவிர்க்க முடியாத காரணங்களால், வல்லமை நிறுவனர் திரு அண்ணா கண்ணன் அவர்களும், தலைமை ஆசிரியர் திருமதி பவளசங்கரியும் விழாவிற்கு வரமுடியவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

    இந்த விழாவில் இரண்டு சிறப்பம்சத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    ஒன்று..

    ஒரு நூல் வெளிவருவதற்கு முன்பே, அதைப் பற்றிய இரண்டு ஆய்வு நூல்கள் சேர்ந்து வெளிவருவது இதுவே முதல் முறை. இந்த இரண்டு ஆய்வு நூல்களையும் முனைவர் வைகை மலர் அவர்கள் எழுதி வெளியிட்டிருந்தார்கள்.

    இன்னொன்று…

    ஆங்கில நூல்களுக்கு இணையாக, தரமான முறையில் அச்சிடப்பட்டு வெளிவரும் காதல் பற்றிய தமிழ் நூல் என்பதை தலைமை உரை ஆற்றிய திரு ஜானகிராமன் தெளிவுபடுத்தினார்.

    விழாவின் நிறைவாக ஏற்புரை ஆற்ரிய காவிரிமைந்தன் அவர்கள், “தனக்கு ஏற்பட்ட சொல்லோட்டம்தான்” இந்த நூலை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டார்.

    இதற்கு முன் நான் குறிப்பிட்டிருந்த கவிஞர் ரவிச்சந்திரன்?..யார் அவர் என்று நினைக்கின்ற வேளையில், கவிஞர் காவிரிமைந்தனின் இயற்பெயர் ‘ரவிச்சந்திரன்’ என்பதை அறியாதவர் அறிந்துகொள்ளலாமே!.

    அழைப்பிதழில் அச்சிட்டிருந்த அனைத்து நபர்களும் அருமையாக கவிஞரின் இதர நூல்கள் பற்றியும், அயல் நாட்டில் அவர் ஆற்றிவரும் பணிகள் பற்றியும், கவிஞரைப் பற்றிய சொந்தக் கருத்துக்களையும் மேடையிலே நயம்பட எடுத்துரைத்தார்கள்.

    இவ்விழாவில் புலவர் ஆறுமுகம் பேசுகையில் ஒரு முத்தான கருத்தைப் பலர் முன்னிலையிலும் வைத்ததை நான் மிகவும் ரசித்தேன். அதாவது நாம் எந்த விழாவைக்கொண்டாடினாலும், அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய நாயகனை மட்டுமே புகழுகிறோமே தவிர, இச்சாதனையின் பின்னால் இருக்கக்கூடிய, அவருக்கு உறுதுணையாய் இருந்த அவரின் மனைவியைப் பற்றி ஒரு வரி கூடச் சொல்லுவதில்லை என்று சொன்னதோடு, கவிஞர் குடும்பத்தினர் அனைவரையும் மேடைக்கு அழைத்துப் பாராட்டினார்.

    நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும், மிகச் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டாலும், மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய விழா, இரவு 10 மணி வரையிலும் சுறுசுறுப்பாக இயங்கி, பூரி, ஊத்தப்பம், கிச்சடி, இனிப்பு என்று தட்புடலாக இரவு விருந்து நடந்து முடிந்தது.

    தற்போது கவிஞர் காவிரிமைந்தன் வல்லமையோடு இணைந்து புதிய எழுத்தாளர்களையும், புதிய போட்டிகளையும் நடத்தி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளைகுடா நாடுகளிலும் வல்லமையின் புகழைப் பரப்பிவருகிறார்.

    தற்போது, சென்னையில் நடந்த தனது சொந்த நூல் வெளியீட்டு விழாவிலும், வல்லமை அன்பர்களுக்கு வாய்ப்பளித்தற்கு, அனைவரும் வல்லமையின்  மடலாடலில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள் என்பது, இங்கே குறிப்பிடத்தக்கது.

    வளைகுடா நாடுகளில், வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர், கண்ணதாசன் தமிழ்சங்கம் போன்ற வற்றின் மூலம் தமிழர்களை ஒன்றிணைத்து, பல விழாக்களை நடத்திவருவதன் மூலம் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து, ஊக்குவித்து வருவது, அங்கே பணிபுரியும் தமிழ் ஆர்வலர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    தற்போது, தனது தமிழ்பணியில் சிறிதளவை வல்லமையோடு இணைத்துக் கொண்ட கவிஞர் காவிரிமைந்தன் எத்துணையோ பட்டம் பெற்றிருந்தாலும், இன்றிலிருந்து, தலைப்புக்கு ஏற்றவாறு, அவரை…

    “வல்லமைக் கவிஞர்”

    என்று நாம் அழைத்தாலென்ன!..

    அன்புடன்

    பெருவை பார்த்தசாரதி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    cc8635e1-d33d-4464-978f-2b5b924c8369

    ”மந்தியாம் ஆன்மா மகத்துவ சாட்சியாய்,
    புந்திக்கோ முந்தும் பயபக்தி, -இந்திர
    கர்வம் அடக்கிய கண்ணன் உரைப்பது
    மர்மமாம் நானார் ‘’மலை’’ப்பு’’….கிரேசி மோகன்….

    கண்ணனை ‘’ஆராயாதே அனுபவி’’….
    ஆச்சரியத்தை ஆன்மக் குரங்கு அனுபவிக்க….
    ’’நான்’’மக்கு குரங்கு கோல் கொண்டு ஆராயுது’’
    சரியா கேசவ்….!

    புந்தி -புத்தி…பயத்தால் பக்தி….

    Share
  • ஆண்டவனை வேண்டுகின்றேன் !

    ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

    வல்லமையை உருவாக்கி வாழ்ந்திடுக தமிழென்று
    நல்லதொரு தீர்மானம் எடுத்துநின்ற அண்ணாகண்ணன்
    சொல்லவொணா துயரத்தால் சோகமதில் மூழ்கிவிட்டார்
    அல்லல்நின்று அவர்மீள ஆண்டவனை வேண்டுகின்றேன் !

    தமிழறிஞர் அப்பாவை தானிழந்து நிற்குமவர்
    தளர்வுநிலை போவதற்கு தான்வேண்டி நிற்கின்றேன்
    அமுதானதமிழ் மொழியை அணைத்துநின்ற அப்பாவை
    அவர்பிரிந்து விட்டநிலை அடிமனதைத் தொடுகிறதே !

    மேகலா துயர்கண்டு மேனியெலாம் சிலிர்க்கிறது
    சோகமாய் நிற்குமவர் சுமையகன்று வரவேண்டும்
    தாகமாய் தமிழ்வளர்க்கும் தமிழ்நாட்டுக் குடும்பமதன்
    சோகமதில் பங்குகொண்டு துயருற்று நிற்கின்றேன் !

    தந்தையை இழந்து வாடும் அண்ணாகண்ணன், மேகலா , மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து .. உங்கள் தந்தையாரின் ஆன்மா நற்கதி
    அடைய இறைவனப் பிரார்த்திக்கின்றேம்.

    Share
  • உலகப் பொறியியல் சாதனை ஒப்பற்ற பனாமா கடல் இணைப்புக் கால்வாய்

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    crucpana

    Panama Canal (1870-1914)

    [The Greatest Engineering Marvel]

    https://youtu.be/v4_yX_8HXig

    https://youtu.be/YzCULxAmkRU

    https://youtu.be/i5cFJ4j0qzw

    https://youtu.be/VF7cA6I3zGY

    https://youtu.be/VOu8aqE5GN0

    +++++++++++++++++++++++

    Location -1

    Location of Canal

     

    மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்;

    மலைமேல் கட்டிய அணை நீர்க் கணவாய்;

    வட தென் அமெரிக்கக் கண்டங்கள் பிரிக்கும்

    இடைத்தொட்டி நிரப்பி ஏற்றி இறக்கும் கப்பலை.

    மனிதர் கட்டிய மகத்தான பனாமாக் கால்வாய்

    ஒப்பிலா நீர் மார்க்கம், உன்னத ஓர் ஆக்கம்.

     

    Parallel Locks

    முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப் பனாமா கால்வாய் கருதப்படுகிறது. அலாஸ்கா விலிருந்து டெக்ஸஸ் வர பனாமா கால்வாய் வழியாகக் கப்பல் பயணம் செய்தால் 16 நாட்கள் ஆகின்றன. அவ்வித மின்றி கப்பல் தென்னமெரிக்கா வின் ஹோர்ன் முனையைச் [Cape Horn] சுற்றி வந்தால் 40 நாட்கள் எடுக்கும்! பனாமா கால்வாய் இல்லாவிட்டால், நியூ யார்க்கிலிருந்து கடல் மார்க்கமாகத் தென்னமெரிக்க முனையைச் சுற்றி, ஸான் ஃபிரான்சிஸ்கோவை அடைய 9000 மைல் மிகையாக 18,000 மைல் தூரமும், நீடித்த நாட்களும் எடுக்கும்! உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத் திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 90 ஆண்டுகளாக கோடான கோடி டாலர் மதிப்புள்ள வாணிபப் பண்டங்களையும், கார் வாகனங்களையும் இருபுறமும் பரிமாறி வந்துள்ளது! அனுதினமும் கடக்கும் சுமார் 32 கப்பல்கள் சராசரி ஒவ்வொன்றும் 28,000 டாலர் பயணக் கட்டணம் செலுத்துகின்றன!

     

    How the Locks work

    ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் டன் வணிகச் சுமைகள் [Commercial Cargoes] பனாமா கால்வாய் மூலமாகக் கடந்து செல்கின்றன. அவற்றில் 22% பெட்ரோலியம், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட பண்டங்கள் 16% தானியங்கள் குறிப்பிடத் தக்கவை. எல்லாவற்றிலும் மேலாக 2.4 மில்லியன் டன் கார் வாகனங்கள், கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, புதுக்கார் வணிகம் பெருகி வளர்கிறது. அமெரிக்கா கட்டி முடித்து பூர்வ ஒப்பந்தம் எழுதி 96 ஆண்டுகள் உரிமை கொண்டாடி 1999 டிசம்பர் 31 ஆம் தேதி, பனாமா கால்வாய் ஆட்சி உரிமையை, பனாமா குடியரசின் கைவசம் அளித்தது!

    சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும்

    சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது! பனாமா கால்வாயைப் போல் இருமடங்கு நீளமானது! 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடித்துத் திறந்து விடப்பட்ட 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் [Suez Canal] இயங்கி வரும் போது, புதுக் கண்டங்களான வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் நடுவில் குறுகிய தளமான [Isthmus] பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் பசிபிக் கடல்களை இணைக்க 400 ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறைக் கைவிடப் பட்டன! இறுதியில் 1914 ஆம் ஆண்டில் பூர்த்தியான பனாமா கால்வாய் 50 மைல் நீளம் கொண்டது. மத்தியதரைக் கடலை விட 30 அடி உயர்ந்த செங்கடலை இணைக்க, கடல்மட்ட நேரடித் தொடர்புக் கால்வாய் வெற்றிகரமாய் வெட்டப் பட்டது. ஆனால் பனாமா நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக் கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! மலை மீது செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர் மட்டத்துக்கு முதலில் கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக் கீழிறங்கிக் கடல் மட்டத்துக்கு வர வேண்டும்!

    Canal Locks -5

    சூயஸ் கால்வாயைப் பூர்த்தி செய்த பிரென்ச் நிபுணர் ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] பிரென்ச் அரசின் ஆணையில் பனாமா கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகளை ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் [Goethals] 1914 இல் பூர்த்தி செய்தார். பனாமா கால்வாயைக் கட்ட பிரென்ச், அமெரிக்க மேற்பார்வைகளில் பணி செய்த 80,000 நபர்களில் 30,000 பேர் நோயிலும், விபத்திலும் மாண்டனர்! பயங்கர பனாமா மலைக் காடுகளில் 44 ஆண்டுகள் (1870-1914) சிக்கலான அந்த இமாலயப் பணியை முடிக்க எஞ்சினியர்கள் எவ்விதம் திறமையாகப் போராடினார்கள் என்பதைப் பற்றி விளக்கிறது, இந்தக் கட்டுரை.

    பனாமா கால்வாய் தோற்றத்தின் வரலாறு

    ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, பொற்களஞ்சியம் தேடிப் புதிய கடல் மார்க்கத்தில் புகுந்து, அமெரிக்காவை நெருங்கிய கிரிஸ்டொபர் கொலம்பஸ் (1451-1506) முதன் முதலில் தரைவழியாக அதைக் கடக்க முயன்று தோல்வியுற்றார்! சுமார் 400 ஆண்டுகளாக பனாமா நாட்டின் குறுகிய தளப்பரப்பின் வழியே கால்வாய் ஒன்றை அமைத்திட ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்துத் தலையிட்டு முயற்சிகள் செய்தன! ஸ்பெயின் ராணுவக் கடல்தீரர் வாஸ்கோ நுனீஸ் தி பல்போவா [Vasco Nunez de Balboa (1475-1519)] 1513 இல் முதன்முதல் பனாமா நகரை அடைந்து, குன்று ஒன்றில் ஏறி நின்று பரந்து விரிந்த பசிபிக் கடலைப் பிரமிப்போடு கண்டு, உலகுக்கு அறிவித்த ஐரோப்பியர்! 1534 இல் ஸ்பெயின் மன்னர் முதலாம் சார்ல்ஸ், கால்வாய் அமைத்திட முதன்முதல் பனாமாவின் சுருங்கிய பீடத்தில் தளஆய்வு [Land Survey] செய்ய உத்தரவிட்டார். ஆனால் அவரது ஆணைக்குக் கீழ் பணியாற்றிய ஸ்பானிஸ் ஆளுநர் [Spanish Governor] ஓர் அதிருப்தியான தகவலை அனுப்பியதால், கால்வாய்த் திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் பல்லாண்டுகளாக ஸ்பானிஸ் கடல்வணிகர் பனாமா நாட்டின் இரண்டு கடற்கரைகளையும் நீர்வழியாக இணைக்க முயன்று தோல்வி யுற்றனர்!

    Canal Locks -2A

    பிரென்ச் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் (1808-1873) பிரான்சுக்கு உரிமையான பனாமா தளப் பகுதியில் கால்வாய் ஆக்கிட 1860 இல் முயன்றார். கடல்மட்டக் கால்வாய் ஒன்றைப் பனாமா கட்டி முடிக்க, 1882 இல் பிரென்ச் கம்பெனி ஒன்று தயாரானது. 1855 இல் அமைத்த பனாமா ரயில் பாதையை ஒட்டியே, கால்வாயும் வெட்டத் திட்டமிடப் பட்டது. 1869 இல் வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கட்டி முடித்து ‘சூயஸ் கால்வாய் தீரர் ‘ [The Hero of Suez] எனப் பெயர் பெற்ற ஃபெர்டினட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps], சில ஆண்டுகளுக்குப் பிறகு, 74 ஆம் வயதில் பனாமா கால்வாயை அமைக்க நியமனம் ஆனார்! ஃபெர்டினட் லெஸ்ஸெப்ஸ் ஏழு வருடங்கள் பணிசெய்த பின், 1889 இல் பிரென்ச் கம்பெனி நொடித்துப் போனது! காரணம், பனாமா தளத்தையும், பாறைகளையும் தோண்டிய 20,000 கூலியாட்கள் வேனிற்தள நோய்களால் [மலேரியா, மஞ்சள் காய்ச்சல்] செத்து மடிந்தனர்! பிரென்ச் கட்டிட, மருத்துவ நிபுணர்களுக்கு ஒருவிதக் கொசுக்கள் மலேரியா, மஞ்சல் காய்ச்சலை உண்டாக்குவது, அப்போது தெரியாமல் போனது! பெருமழை பெய்து குட்டை, குளங்களில் நீர் நிரம்பி, வேனிற் தளப் பனாமாவின் ஈரடிப்புப் பூமியில் கொசுக்கள் கோடிக் கணக்கில் பெருகிப் பணியாட்கள் பலரது உயிரைக் குடித்தன!

    அமெரிக்க அரசாங்கம் பனாமா அல்லது நிகராகுவா நாட்டின் வழியாகக் கால்வாய் ஒன்றை அமைக்க 1887 இல் முடிவு செய்து, 1889 இல் காங்கிரஸ் ‘மாரிடைம் கால்வாய்க் கம்பெனி ‘ என்னும் ஒரு குழுவைத் தயாரித்தது. அப்போது நியமனமாகிய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் [26th American President, Theodore Roosevelt (1858-1919)] பனாமா புதுக் குடியரசுடன் தொடர்பு கொண்டு, பிரான்ஸிடமிருந்து கால்வாய்த் திட்டத்தை வாங்க ஏற்பாடுகள் செய்தார். பிரான்ஸ் பனமா கால்வாய்த் திட்ட வேலைகளை 100 மில்லியன் டாலருக்குக் குறைவாக விற்கப் போவதில்லை என்று அறிவித்தது! அதே சமயம் நிகாராகுவாவில் கால்வாய் கட்டி முடிக்க 40 மில்லியன் டாலரே (1900 நாணய மதிப்பு) தேவைப்பட்டது! இறுதியில் 40 மில்லியன் டாலருக்கே பிரான்ஸ் பனாமா கால்வாயின் திட்டப் பணிகளையும் உரிமையையும் [ஆபீஸ், தளவாடங்கள், கருவிகள், உபகரணம், ரயில் வண்டிகள், தளப்படங்கள், தளவியல் ஆய்வுகள், 50 மில்லியன் குயூபிக் மீடர் தோண்டல் கால்வாய்] அமெரிக்காவுக்கு விற்றது! பனாமா குடியரசுக்குச் சொந்தமான குறுக்குத் தளத்தில் [Isthmus] 43 மைல் நீளமும் 10 மைல் அகண்ட கால்வாய் அரங்கம் [Canal Zone] அமெரிக்க அரசின் பொறுப்பில் 100 வருடத் தொடர் ஒத்திக்கு [100 Year Perpetual Lease] விடப்பட்டது.

    Canal Bridge

    அமெரிக்க பனாமா பூர்வ ஒப்பந்தம், கால்வாய்த் திட்டம்.

    பனாமா நாடு 1900 ஆண்டுகளில் கொலம்பியா அரசின் ஆணைக்குக் கீழிருந்தது. முதல் ஒப்பந்தப்படி [Hay-Herran Treaty], அமெரிக்கா கொலம்பியாவுக்கு முன்பணம் ஒரு மில்லியன் டாலரும், ஆண்டு தோறும் 250,000 டாலரும் அளிக்க வேண்டும். கொலம்பியா நூறாண்டுகளுக்கு கால்வாயை நெருங்கிய ஆறு மைல் அகற்சி நிலப்பகுதியை அமெரிக்காவுக்கு ஒப்பந்த வாடகைக்கு விட வேண்டும். டிசம்பர் 31, 1999 இல் அமெரிக்கா பனாமா கால்வாயை, பனாமா நாட்டுக்கு முடிவில் ஒப்படைத்து விட வேண்டும். கொலம்பியா அந்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ளா விட்டாலும், பனாமா அரசு நில உரிமையை அமெரிக்காவுக்கு விற்க விழைந்தது.

    Ship in Panama Canal

    அமெரிக்கா முதல் ஆக்கிரமிப்புப் போரில் வெற்றி பெற்று, அடுத்து பனாமா நாட்டில் பரவிய நோய்களின் மீது தொடுத்தது! மழைநீர்க் குளம், குட்டைகளில் பெருகும் கொசுக்களால் ஏற்படும் கடும் வேனிற் தள நோய்களான மலேரியா, மஞ்சள் நோய் மற்றும் காச நோய், காலரா, டிப்திரியா, அம்மை, பிளேக் போன்ற கொடும் நோய்களை ஒழிக்க அமெரிக்க மருத்துவ நிபுணர் வில்லியம் கார்கஸ் பனாமா நாட்டுக்கு அனுப்பப் பட்டார். டாக்டர் கார்கஸின் ஆணை ஆட்கள் எங்கெங்கு குளம், குட்டைகள் உண்டோ அங்கெல்லாம் பூச்சி கொல்லி தூளையும், ஆயிலையும் கலந்து ஊற்றினார்கள். நோயில் தாக்கப்பட்ட பணியாட்கள் கொசுவலைக் குள்ளே தனித்து அடைக்கப் பட்டனர். நாட்டின் இரு முனைகளில் இருந்த கொலான் [Colon], பனாமா நகரங்கள் நவீன முறையில் புதுப்பிக்கப் பட்டன. அடுத்து கால்வாய் அமைப்பில் அமெரிக்கா ஈடுபட்டது.

    Canal Locks -6

    பல கால்வாய்த் திட்டங்களில் அனுபவம் பெற்ற அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் (1828-1928) பனாமா திட்டத்திற்குப் பிரதம எஞ்சினியராக நியமனம் ஆனார். நான்கு ஆண்டுகளாய் சிவில் எஞ்சினியர்கள் பனாமா கால்வாய்த் திட்ட முறைகளையும், விவரங் களையும் மாற்றிக் கொண்டே வந்தனர். சூயஸ் கால்வாய் போன்று கடல்மட்டக் கால்வாயை அட்லாண்டிக், பசிபிக் கடல்களுக்கும் நேரடியாக அமைக்க முதலில் திட்டம் உருவானது! அவ்விதம் கால்வாய் படைப்பதற்குப் பல மைல் நீளமுள்ள மலைகளையும், பாறைகளையும் வெடிமருந்தால் பிளக்கத் தேவையான ஏராளமான நிதிச் செலவுக்கும், கால நீடிப்புக்கும் அமெரிக்க அரசு தயாராக வில்லை! இறுதியில் மூவடுக்குத் தடாகப் படிகள் கொண்ட, ‘நீரழுத்த புனைத் தொட்டிகள் ஏற்பாடுத் ‘ [Three Stage Hydraulic Locks System] திட்டம் ஒன்று ஒப்புக் கொள்ளப் பட்டது. ஐயமின்றி அத்திட்டம் நிதிச் செலவையும், கட்டும் நேரத்தையும் பெருமளவில் குறைத்தது.

    Expansion

    கொலானுக்கும், பனாமா நகருக்கும் இடையே உள்ள மலைப் பிரதேசத்தில், அணைகள் கட்டப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டது. மூன்று அணைகள் கட்டப் பட்டு, மூன்று ஏரிகள் செயற்கையாக அமைக்கப் பட்டன. அவற்றில் காட்டுன் ஏரி [Gatun Lake] என்று பெயர் பெற்றது மனிதன் அமைத்த உலகப் பெரும் ஏரியாகக் கருதப்படுகிறது! அதன் நீளம் 1.5 மைல், அகலம் அரை மைல், ஆழம் 80 அடி! கடல்மட்டத்திற்கு சுமார் 90 அடி [26 மீடர்] மேலுள்ள அந்த செயற்கை ஏரியில் வேனிற் கால மழை எப்போதும் பெய்து, நீரை நிரப்பிக் கொண்டே வருகிறது. பனாமா கால்வாயில் செல்லும் கப்பல் முதல் 7 மைல் தூரம் கடல்மட்டத்தில் கடந்து, ஏரியை நெருங்கும் போது மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30 அடி வீதம் நீரால் தூக்கப்பட்டு 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரியில் பயணத்தைத் தொடர்கிறது. பிறகு பனாமா நகரை நெருங்கும் போது மறுபடியும் மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30 அடி வீதம் தணிந்து, முடிவில் 90 அடி இறங்கி மீண்டும் கடல்மட்டக் கால்வாயில் தொடர்கிறது. அத்தகைய அதிசயப் பொறியியல் நூதனப் பனாமா கால்வாய் 1914 ஆகஸ்டு மாதம் கட்டி முடிக்கப் பட்டது.

    அத்திட்டத்துக்கு மொத்த நிதி ஒதுக்கம்: 23 மில்லியன் டாலர் [1900 நாணய மதிப்பு]. பனாமா கால்வாயில் பணிசெய்தவர் எண்ணிக்கை: 40,000! 1904 முதல் 1914 வரைச் செலவான தொகை: 400 மில்லியன் டாலர்! கால்வாய்த் தளபதி: அமெரிக்க கர்னல் ஜியார்ஜ் கோதல்ஸ். தொன்னூறு வயதாகப் போகும் [2004] பனாமா கால்வாய், இன்றும் உலகப் பெரும் மனிதச் சாதனைகளில் ஒன்றாக எண்ணப்படுகிறது!

    பனாமா கால்வாய் கட்டமைப்பில் பொறியியல் பிரச்சனைகள்

    அமெரிக்க எஞ்சினியர்களுக்கு பனாமா மலைகளில் வெட்டித் தோண்டிய ‘குலேபிரா கணவாய் ‘ [Culebra Cut] பெரும் இன்னல்களைக் கொடுத்தது! அடுத்து தாறுமாறாய் ஓடும் ஆறுகளைத் திருப்பி, காட்டுன் அணையைக் கட்டி [Gatun Dam], மலைகளுக்கு இடையே செயற்கை முறையில் காட்டுன் ஏரியை [Gatun Lake] உண்டாக்கியது இமாலயச் சவால் பணியாய் ஆகிவிட்டது! ஏரியின் உயரத்துக்கு ஏற்றி, இறக்கும் சிக்கலான மாபெரும் காங்கிரீட் புனல் தொட்டிகளைக் [Three Stage Hydraulic Locks] கட்டுவதும், அவற்றின் உள்ளே மூடித் திறக்கும் பூதக் கதவுகளைத் தயாரித்து இயக்குவதும் பெரும் பிரச்சனைகளைத் தந்தன! இரட்டைத் தொட்டிகளான அவற்றின் நீளம்: 1000 அடி, அகலம்: [110+110] =220 அடி, ஆழம்: 80 அடி. நீரழுத்தக் கதவுகளின் அகலம்: 55 அடி, உயரம்: 80 அடி.

     

    1000 அடி நீண்ட கப்பல்கள், ஆயிரக் கணக்கான டன் சுமைக் கப்பல்கள், சுற்றுலா மாளிகைக் கப்பல்கள் பல, கம்பீரமாகக் கால்வாயில் மிதந்து, 85 உயரம் தூக்கப்பட்டு காட்டுன் ஏரியில், கண்கொள்ளாக் காட்சிகளின் இடையே ஊர்ந்து, 85 அடி கீழே இறக்கப் பட்டு 50 மைல்களைக் கடந்து இருபுறமும் கடலைத் தொடுகின்றன! பயணத்தின் போது கப்பல் ஒன்று ஆறு புனல் தொட்டிகளின் வழியே கடக்கின்றன. பயங்கரப் பனாமாக் காடுகளை முதலில் செப்பணிட்டு இரயில் பாதை அமைக்கப்பட்ட போது, ஒவ்வோர் தண்டவாள இணைப்புக்கும் ஒரு நபர் உயிர்ப்பலி யானதாக அறியப் படுகிறது!

    Ship Passing

    பனாமா கால்வாயை இயக்கத் தனிப்பட்ட எந்த வித வெளிப்புறச் சக்தியும் தேவை யில்லை! புனல் தொட்டிகளில் கப்பலை அடைத்து ஏற்றவோ, இறக்கவோ நீர்த் தேவையாகும் போது செயற்கையாக ஆக்கப்பட்ட ஏரிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறது! கடந்து செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 30 மில்லியன் காலன் நீர் தேவைப்படுகிறது. உயர்ந்த மலைகளுக்கு இடையே பரந்த ஏரியின் செலவு நீரை அடிக்கடி பெய்யும் மழை 1914 ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் நிரப்பி வருகிறது. ஏரியில் கட்டப்பட்ட அணைகள், நீரின் மட்டத்தைச் சீராக ஒரே உயரத்தில் நிலை நிறுத்தி வருகின்றன.

    Ship in Panama Canal -1

    அணைக்கட்டு மின்சக்தி நிலையம் ஏரிநீரைக் கீழனுப்பி மின்சார உற்பத்தியும் தொடர்ந்து நிகழ்கிறது. அந்த மின்சக்தியே, புனல் தொட்டியின் பூதக் கதவுகளைத் திறக்கவும், பூட்டவும் செய்யும் மின்சார மோட்டார்களை ஓட்டுகிறது. கப்பலை முன்னும், பின்னும் வழி இழுக்கும் ‘கழுதை எஞ்சின்களுக்கு ‘ [Mule Engines] வேண்டிய மின்சக்தியும் நீர்நிலை மின்சக்தி நிலையத்திலிருந்து கிடைக்கிறது. கப்பலை முதலில் இழுத்து எல்லைக் கோட்டில் முன்னிறுத்தும் ‘வழிகாட்டிப் படகு ‘ [Rowboat] பெட்ரோலில் இயங்குகிறது.

    1000 அடி நீளம், 110 அடி அகலமுள்ள ஒவ்வொரு புனல் தொட்டியும், 70,000 டன் கனக்கும் பளுக் கப்பலை 28 அடி உயரத்துக்குத் தூக்கவோ அல்லது 28 அடிக்குத் தணிக்கவோ திறமை யுடையது. கப்பல் நகர்ச்சியைப் புனல் தொட்டியில் கையாள்பவை, இருபக்கமும் நகரும் கழுதை எஞ்சின்கள். பெரும் கப்பல் புனல் தொட்டியில் சுய ஆற்றலில் நகர்ந்தால், அதன் அசுரப் பளுவேகம் [Momentum (Mass X Velocity)] கதவுகளை உடைத்துப் பழுதாக்க வாய்ப்புகள் நேரிடலாம்! எதிர்பாராத அவ்வித விபத்துகள் நேரா வண்ணம், கப்பல் நகர்ச்சியைக் கழுதை எஞ்சின்கள் முன்புறம் இரண்டும், பின்புறம் இரண்டும் கட்டுப் படுத்துகின்றன.

    Two Locks

    புனல் தொட்டியில் கீழ் மட்ட நீரளவு 50 அடி உயரம். பூத வடிவான அதன் கதவுகள், கப்பலின் 10 மாடித் தள உயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்! இரட்டை வடிவில் கட்டப்பட்ட மூவடுக்குக் காட்டுன் புனல் தொட்டிகள் [Gatun Locks] கடல் கட்டத்துக்கு 85 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இரட்டைப் புனல் தொட்டிகளில் ஒன்று நேர்போக்குப் பயணக் கப்பலை உயர்த்தவும், அடுத்தது எதிர்போக்குக் கப்பலை இறக்கவும் ஒரே சமயத்தில் பயன்படலாம்.

    புனல் தொட்டியில் கப்பல் நகர்வதற்கு இரு புறத்திலும் தண்டவாளங்களில் மும்மூன்று இழுப்பு எஞ்சின்கள் நகர்ந்து வரும். கதவுகள் திறந்த பின்பு, காத்திருக்கும் கப்பல் புனல் தொட்டிக்குக் கழுதை எஞ்சினால் இழுத்து வரப்படுகிறது. கப்பல் சுய ஆற்றலில் உள்ளே நுழைந்தால், சரியான சமயத்தில் நிறுத்த முடியாமல், கதவுகளை உடைத்து விடக் கூடும்! அதனால் முன்புறம் கப்பலை இழுக்க ஒன்று அல்லது இரண்டு எஞ்சின்களும், பின்புறம் பளுவேகத்தைக் குறைத்துக் கட்டுப்படுத்த ஒரு எஞ்சினும் புனல் தொட்டில் பயணத்தின் போது பயன்படுகின்றன. மோட்டர் இயக்கத்தில் பழுது ஏற்பட்டுக் கதவுகள் திறக்க முடியாமல் போனால், அபாய அணைநீர் பயன்படத் தயாராகச் சேமிக்கப் பட்டுள்ளது.

     

    கப்பல் ஒன்று பனாமா கால்வாயில் எவ்விதம் கடக்கிறது ?

    பூத வடிவான சில பயணக் கப்பல்கள் ஒற்றைவழிக் கட்டணமாக 100,000 டாலர் கொடுக்கின்றன! இதுவரை மிகையான தொகை தந்தது, பிரிட்டனின் மாளிகைக் கப்பல் ‘ராணி எலிஸபெத் II ‘ தொகை 150,000 டாலர்! கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலிலிருந்து, இரண்டு முறை மூவடுக்குப் புனல் தொட்டிகளில் ஏறி இறங்கிக் கால்வாய் வழியாக 50 மைலைக் கடந்து, பசிபிக் கடலை அடைய குறைந்தது 23 மணி, கூடியது 30 மணி நேரமாகிறது! புனல் தொட்டியைக் கப்பல் நெருங்குவதும், தொட்டிக்குள் கப்பல் நகர்வதும், நீர்மட்டம் ஏறி இறங்குவதும், கதவுகளைத் திறந்து மூடிக் கப்பலை விடுவிப்பதும், கால்வாய் அதிபதிகள் கவனிப்பாக மின்சார ரயில்களைக் கையாண்டு, கண்காணிப்பாகச் செய்ய வேண்டி யிருப்பதால், அதிக காலதாமதம் அங்குதான் நேரிடுகிறது. நீர் உயரம் சீராக மட்டமாக ஆகாவிட்டால், கதவுகளைத் திறக்க சுயத்தடுப்பு இயக்கிகள் தடை செய்யும்!

    5:00 PM. உதாரணமாக மாலை 5 மணிக்கு அட்லாண்டிக் கடலிலிருந்து புகும் கப்பல் 7 மைல் தூரம் மண்டிக் கால்வாயில் மிதந்து, லிமான் வளைகுடாவைத் [Lemon Bay] துறைமுகத்தை அடைகிறது. வளைகுடாவில் நுழையும் போது கப்பல் காப்டன், துறைமுக அதிபதிக்கு அறிவிப்பு செய்கிறார். அப்போது கப்பலின் பெயர், எண், நீளம், அகலம், சுமக்கும் பொருள், பாரத்தின் எடை போன்ற விபரங்கள் அறிவிக்கப் படவேண்டும். கால்வாய்ப் பயணப் போக்கைக் கையாளும் அதிகாரிகளின் எண்ணிக்கை, வழிகாட்டிப் படகுகள் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு ஏற்றபடி, அந்தக் கப்பலுக்கு நுழைவு அனுமதி விரைவாகவோ, தாமதமாகவோ அளிக்கப்படலாம்.

    7:30 PM. கால்வாய் அதிபதி கப்பலைச் சோதித்து, அறிக்கைத் தாள்களைச் சரிபார்க்கிறார். கப்பலின்

    நீளம், அகலம், உயரம், வடிவ அமைப்பு சோதனைக் குள்ளாகிறது.

    8:30 PM. துறைமுக அதிபதி கடப்புக் கட்டணத் தொகையைக் [Toll Charges] கணக்கிட்டுப் பெற்றுக் கொள்கிறார். கப்பல் ஒன்று சுமார் 80,000 -100,000 டாலர் தொகை கொடுக்க நேரிடலாம்.

    5:30 AM. கால்வாய் அதிபதி ஒருவர் கப்பலில் ஏறித் தூரத் தொடர்பு இணைப்பை ஏற்படுத்துகிறார்.

     

    6:10 AM. கப்பல் கால்வாய்ப் பயணத்தைத் துவங்குகிறது. கடல் பரப்பில் 11.5 மைல் தொலைவு நகர்ந்து 85 அடி உயரமுள்ள காட்டுன் ஏரியை நெருங்குகிறது. அந்த உயரத்தில் ஏற முதல் காட்டுன் புனல் தொட்டியின் [First Gatun Locks] முன்னால் நிற்கிறது, கப்பல். புனல் தொட்டியின் இருபுறமும் இருப்புப் பாதையில் நகரும் 170 H.P. [170 Horse Power] ரயில்களுடன், கப்பலின் முன் முனை வளையம் வடக் கயிறுகளால் பிணைக்கப் படுகிறது. அந்த ரயில்கள் அங்கு மிங்கும் மெல்ல அசைத்துக் கப்பலைத் தொட்டியின் மையத்துக்குக் கொண்டு வந்து, உட்புறம் இழுக்கின்றன. பிறகு கப்பலின் பின் வளையம் அடுத்த இரண்டு ரயில் வண்டிகளுடன் வடக் கயிற்றால் பிணைக்கப் பட்டு கப்பலின் நகர்ச்சி கதவுகளின் மீது மோதி விடாதபடி தடை செய்யப் படுகிறது.

    6:30 AM. கப்பல் முதல் புனல் தொட்டியின் நடுவில் முழு உடம்பும் மிதக்க நிற்க பின்புறக் கதவுகள் மூடுகின்றன. தொட்டியில் ஏரியின் நீர் செலுத்தப்பட்டு நீர்மட்டம் 28 அடி உயர்ந்து, கப்பலும் 28 அடி எழும்புகிறது. இரண்டாம் தொட்டியில் அதே நீர்மட்ட அளவு ஏற்கனவே உள்ளதால், முன்புறக் கதவுகள் திறக்கப் பட்டு, கப்பல் அடுத்த புனல் தொட்டிக்குள் இழுக்கப் படுகிறது.

    அடுத்த தொட்டிக் கதவுகள் மூடிய நிலையில் நீர்மட்டம் 28 அடி அதிகமாக்கப்பட்டு, கப்பல் இன்னும் 28 அடி உயர்கிறது. இதே போல் மூன்றாவது புனல் தொட்டியிலும் நிகழ்ந்து கப்பல் அடுத்து 28 அடி உயரத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அவ்விதம் ஒவ்வொரு கப்பலை 85 அடி மேலே கொண்டு வர சுமார் 26 மில்லியன் காலன் ஏரி நீர் தேவைப் படுகிறது.

    7:30 AM. கயிறுப் பிணைப்புகள் அகற்றப்பட்டு, கப்பல் விடுபட்டு காட்டுன் ஏரியில் இப்போது பயணம் செய்கிறது. 32 மைல் நீளமான காட்டுன் ஏரி மனிதர் அமைத்த உலகப் பெரும் ஏரி! சாக்ரஸ் ஆறு [Chagres River] காட்டுன் ஏரியில் சங்கமம் அடைகிறது. ஏரியின் முடிவில் உள்ள கம்போவா [Gamboa] முதல் குறுகிய குலிபிரா கணவாய் [Culebra Cut] நீர் வழியாக அடுத்துக் கப்பல் செல்கிறது. கணவாயின் குறுகிய அகலம் 500 அடி!

    11:20 AM. கப்பல் இப்போது 8.5 மைல் தூரம் கெய்லார்டு நீர்க் கணவாய் [Gaillard Cut] வழியாகச் செல்கிறது. கப்பலின் கால்வாய் அனுமதி வேகம் 7 mph [6 Knots]. குறுகிய ஆழமற்ற கால்வாய் பகுதி அது! 1:00 PM. நீர்க் கணவாய் முடிவில் அடுத்த முதல் புனல் தொட்டி, ‘பெட்ரோ மிகியூவல் ‘ [Pedro Miguel Locks] வருகிறது.

    2:30 PM. கப்பல் முதல் புனல் தொட்டியுள் நிறுத்தப் படுகிறது. அதன் மூலம் கப்பல் 30 அடி உயரம் கீழ் இறங்குகிறது.

    3:10 PM. முதல் புனல் தொட்டியைக் கடந்து, கப்பல் இப்போது மிராபுளோரஸ் ஏரியில் [Miraflores Lake] நகர்கிறது.

    3:30 PM. இப்போது கடைசி இரண்டு மிராபுளோரஸ் புனல் தொட்டிகளை [Miraflores Locks] நெருங்குகிறது. அவற்றை இரண்டையும் தனித்தனியாகக் கடந்து கப்பல் 55 அடி உயரம் [27 அடி+28 அடி] கீழே இறக்கப்பட்டு கடல்மட்டத்தில் மீண்டும் கப்பல் பயணம் செய்கிறது.

    4:10 PM. மூன்றாவது மிராபுளோரஸ் புனல் தொட்டியை விட்டுக் கப்பல் இப்போது பல்போவா துறைமுகத்தை அண்டுகிறது. அப்போது அமெரிக்கன் பாலத்தைக் [Bridge of America] கடந்து 7.5 மைல் பயணம் செய்து பசிபிக் கடலை அடைகிறது. அங்கிருந்து கப்பல் ஸான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ, ஹாங்ஹாங், சிட்னி, சிங்கப்பூர், பாம்பே அல்லது சுற்றுலா நகருக்கு கிளம்புகிறது.

    பனாமா கால்வாயில் எதிர்காலப் புதிய செம்மைப்பாடுகள்

    1914 ஆண்டில் கட்டி முடித்த பனாமா கால்வாய், உலக வரலாற்றில் எகிப்தின் மகத்தான மாபெரும் பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியான அசுர சாதனையாகக் கருதப் படுகிறது! அதை டிசைன் செய்து, 50 மைல் நீளம் பனாமா மலைக் காடுகளைத் தோண்டிக் கால்வாய் அமைத்த அமெரிக்காவின் பிரதம எஞ்சினியர் ஜியார்ஜ் கோதல்ஸ் உன்னத வெற்றித் தீரராக வரலாற்றில் இடம் பெறுகிறார். தற்போது பனாமா கால்வாய் வயதானாலும், ஆண்டுக்கு 12,000 கப்பல்களைத் தன்வழியே இருபுறமும் கடத்திப் பெரு ஊதியம் பெற்று வருகிறது! ஆயினும் ஐம்பது மைலைக் கப்பல் கடக்க ஆகும் சராசரி 30 மணி நேரத்தைக் [காத்திருக்கும் 6 மணி நேரம் உள்பட] குறைக்க புது முறைகள் வழிகள் கையாளப்பட வேண்டும்!

    தொன்னூறு ஆண்டுகளாகப் [2004] பணியாற்றும் பனாகா கால்வாயின் நீர்க் கணவாயும், புனல் கதவுகளும் பழமையாகி, முழுவதும் மாற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது! மழைப் பொழிவுகளால் நேரும் நிலச் சரிவுகளால், கால்வாயில் சகதி மண்டி அடிக்கடி நீக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது. புதிதாய் ஆக்கப் படும் கப்பல்களின் நீட்சி, அகலம் மிக நீண்டு விட்டதால், கால்வாயின் அகலம், புனல் தொட்டிகளின் நீள, அகலம் அதிகமாக்க வேண்டிய எதிர்காலச் செம்மைப்பாடு தேவையாகி விட்டது! தற்போது 106 அடி அகலமுள்ள கப்பல்கள்தான் பனமா கால்வாயில் பயணம் செய்ய முடியும்! கப்பலின் சுமைதாங்கிப் பாரத் திறம் 65,000 டன்னிலிருந்து, 300,000 டன்னாக இப்போது பெருகி விட்டது! கெய்லார்டு குறுகிய நீர்க் கணவாய் 500 அடி அகலத்திலிருந்து 730 அடி அகலத்துத் தோண்டப்பட்டு, இரட்டைப் போக்குவரத்து [Two-Way Passage] அமைக்கப் பட வேண்டும்! பனாமா கால்வாயை எதிர்காலத்தில் திருத்தங்கள் செய்யத் தேவைப் படுவது ஒரு பில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது!

    அட்லாண்டிக் பசிபிக் கடல்களை வேறு வழிகளில் இணைக்க, அமெரிக்கா தயாரித்த மூன்று விதப் புதுத் திட்டங்கள் பனாமா குடியரசுக் கைவசம் உள்ளன. 1. கொலம்பியா 2. மெக்ஸிகோ 3. நிகராகுவா ஆகிய மூன்று கடற் பாதைத் திட்டங்கள். மெக்ஸிகோ, கொலம்பியா வழியாகச் செல்லும் கால்வாய், கடல் மட்டக் கால்வாய்கள். நிகராகுவா தேர்ந்தெடுக்கப் பட்டால், புனல் தொட்டி ஏற்பாடுகள் தேவைப்படும். இம்மூன்றில் ஒரு புதிய கால்வாய் எதிர்காலத்தில் அமைக்கப் பட்டால், பனாமா குடியரசில் தற்போது பணிபுரியும் 14,000 நபர்களின் பிழைப்பில் பெரும் பாதகம் விளையும்! அவர்களில் பணிபுரியும் 4000 பேர்கள் பனாமா குடிமக்கள்!

    தகவல்:

    1. The New American Desk Encyclopedia [1989]

    2. National Geographic Picture Atlas of Our World [1990]

    3. National Geographic Society -The Builders, Marvels of Engineering [1992]

    4. The Panama Canal, G.W. Goethuls By: The Columbia Electronic Encyclopedia [2003]

    5. History of Canal Construction, Panama Canal Lakes & Locks By: Broadcast Partners [2003]

    6. Panama Canal Completed, Two Oceans Joined By: Patricia Maloney Markun.

    7. Infrastructure: Panama ‘s Canal Holds Vision of New Growth By: Aileen Cho in Panama [2001]

    8. The Panama Canal [1994 Report]

    9. http://www.industrytap.com/panama-canal-expansion-impacts-worldwide-shipping/450 [January 2, 2013]

    10. http://www.theatlantic.com/photo/2015/06/expanding-the-panama-canal/396716/ [Photos]

    11. https://en.wikipedia.org/wiki/Panama_Canal [January 25, 2016]

    12. https://en.wikipedia.org/wiki/Panama_Canal_expansion_project [January 25, 2016]

    ****

    Share
  • இரங்கல் செய்தி

    ஒரு துயரமான செய்தி.

    வல்லமை மின்னிதழின் நிறுவனரும், சிறந்த கவிஞரும், தமிழறிஞருமான அன்புச் சகோதரர் திரு அண்ணாகண்ணன் அவர்களின் தந்தையார், தமிழாசிரியர் திருமிகு சீ. குப்புசாமி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் அவர்தம் குடும்பத்தார் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 9 மணியளவில் கும்பகோணம் நகரில் நடைபெறும்.

    Share
  • இரங்கல் செய்தி

    unnamed

    வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், அன்பினிய தோழியுமான திருமதி மேகலா அவர்களின் அன்புத் தந்தையார், தமிழறிஞர்,  ’இலக்கணக் கொண்டல்’ , முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள்  இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தார் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை வேண்டுகிறோம்.

    மேகலா

    Share