மீ.விசுவநாதன்

அத்யாயம்: 45

அவன், அது, ஆத்மா

(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
(மீ.விசுவநாதன்)
அத்தியாயம்: 45

அவன் “காட்பரி நிறுவனத்தில்” 27.01.1976 அன்று சென்னையில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அதன் தென்மாநில அதிகாரியாக ஆதிகேசவன் என்பவர் இருந்தார். அவனுக்கு அந்த அலுவலகத்தில் நேர்காணல் என்று எதுவும் நடைபெற வில்லை. “நீ ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பையன் என்றும், உன் பெற்றோர் நாணயமானவர்கள் என்றும்தான் திரு. ஆதிலக்ஷ்மணன் அவர்களால் உனக்கு இந்தக் கம்பெனியில் வேலை கொடுத்திருக்கிறது. அதை நீ காப்பாற்ற வேண்டும். உனக்கு இப்பொழுது இருபது வயதுதான் ஆகிறது, இன்னும் நிறையப் படி. நேரத்தை வீணாக்காதே” என்று அந்த உயர் அதிகாரி ஆதிகேசவன் அவனிடம் சொல்லி, வேலைக்கான கடிதத்தை அவனிடம் தந்தார். அதைப் படித்துப் பார்த்து விட்டு, அதன் நகலில் கையெழுத்திட்டுத் தருமாறு கூறினார். அது ஒரு தற்காலிகப் பணி என்றும் , ஆறு மாதங்களுக்குப் பின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும், தினப்படி இருபது ரூபாய், அதுவும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நூறு ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்தக் கடிதத்தில் இருந்தது. ஒரு நாளைக்கு இருபது ரூபாய் என்பது அப்பொழுது நல்ல ஊதியம். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் கடித நகலில் கையெழுத்திட்டுக் கொடுத்தான். அவனுக்கு அந்த அலுவலகத்தில் வேலைகளைக் கற்றுத்தரச் சொல்லி அங்கு இருந்த திரு. துர்கா பிரசாத், ஆர். நாகராஜன், கே.வி.ராகவன் போன்றவர்களிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தார் ஆதிகேசவன் அவர்களின் உதவியாளர் திருமதி. சுகன்யா சங்கர். அப்படித் துவங்கிய அவனது “காட்பரி நிறுவன”ப் பயணம் அவன் பணியில் இருந்து நல்ல பெயருடன் ஓய்வு பெற்ற 30.06.2013 நாள் வரை, சுமார் முப்பத்து ஏழரை ஆண்டுகள் சென்னையிலேயே அவன் மனம்போல நன்றாகவே சென்றதற்கு அவனுக்குப் பெற்றோர்களின் ஆசியும், ஆதிலக்ஷ்மணன் அவர்கள் அவன்மீது கொண்ட அன்பும்தான் காரணம். இந்தப் பயணத்தில் அவன் கற்றது ஏராளம். அவனை ஏளனமாகப் பார்த்தவர்களை எல்லாம் அவன், அவனது நல்ல செயல்களால் வியக்க வைத்த பாடங்கள் அனந்தம். அவனுக்கு நிறைய இலக்கிய அன்பர்களை, எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைக்கக் காரணமாக இருந்தது ஒருவகையில் இந்த “காட்பரி நிறுவனமும்”, அதன் பம்பாய் அலுவலக உயர் அதிகாரியுமான ஆதிலக்ஷ்மணன் அவர்களின் தொடர்பும்தான் என்று சொல்ல வேண்டும்.

இலக்கிய சிந்தனை அமைப்பாளர்கள்:
அவன் காட்பரி நிறுவனத்தில் சேரும் முன்பாகவே இலக்கிய சிந்தனையின் மாதக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான். அப்பொழுது அது சென்னையில் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு இடத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று நடைபெறும். அந்த மாதம் வார, மாதப் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளில் இருந்து ஒரு கதையை ஒருவர் தேர்ந்தெடுத்து அதுபற்றிப் பேசுவதும், வேறுஒரு அறிஞர் இலக்கியம் பற்றிப் பேசுவதும் வழக்கம். அந்த வருட “தமிழ்ப் புத்தாண்டு” தினத்தில் இலக்கிய சிந்தனை ஆண்டு விழா கொண்டாடி, அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு சிறுகதைகளை “வானதிப் பதிப்பகம்” மூலமாகப் புத்தகமாகக் கொண்டுவருவதும், அதில் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்து ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதும், ஏதேனும் ஒரு சிறந்த படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி ஒருவர் ஆய்வு செய்த நூலை வெளியிடுவதும் இன்றுவரை ஒரு மரபாக இருந்து வருகிறது. அவனும் பல முறை “இலக்கிய சிந்தனை” அமைப்பின் மாதக் கூட்டங்களில் பேசியும், கதைகளைத் தேர்வு செய்தும் இருக்கிறான். அந்த அமைப்பின் அமைப்பாளர்களாக திரு. R. A. K. பாரதியும், திரு. ப. லெட்சுமணன் அவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகச் செய்தது இலக்கியமானாலும், முக்கியமாக “காட்பரி நிறுவனம்” இருந்ததை அவனறிவான்.

அதுவரை தான் தயாரிக்கும் பொருள்களை தென்மாநிலங்களில் “T.TK.”நிறுவனத்தின் மூலமாக விநியோகித்து வந்த “காட்பரி நிறுவனம்” 1.8.1978 முதல் தானே தன் நேரடிப் பார்வையிலேயே விநியோகஸ்தர்களையும், அவர்களுக்குப் பொருள்களை அனுப்புகிற “ஏஜென்ட்” அமைப்புகளையும் ஏற்பாடு செய்தது. அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்நாடு, பாண்டிச்சேரிக்கான “ஏஜென்ட்” அமைப்பான “கற்பகாம்பாள் ஏஜென்சி”யின் உரிமையாளர் திரு. ப. லக்ஷ்மணனும், அதை நிர்வகிக்கும் அதிகாரியாகத் திரு. R. A. K. பாரதியும் இருந்தனர். அதன் அலுவலகம் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் அருகில் உள்ள ஒரு பெரிய இடத்தில் இருந்தது. நல்ல நேர்மையான நிர்வாகிகளான அவர்களுடன் காட்பரி நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஆதிலக்ஷ்மணன் அவர்களுக்கு நல்ல நட்பு இருந்தது. அதற்குக் காரணமே இலக்கியமும், தமிழ்ப் பற்றுமாகவும் இருந்தது என்று அவனிடம் ஆதிலக்ஷ்மணன் அவர்களே சொல்லி இருக்கிறார்.

அவன் அலுவலக வேலையாக அடிக்கடி “கற்பகாம்பாள் ஏஜென்சி” அலுவலகத்திற்குச் சென்று வருவான். அப்பொழுது R. A. K. பாரதி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் தான் எழுதிய கவிதைகளை அவரிடம் காட்டுவான். அவர் அதை ரசித்தும், விமர்சனம் செய்தும் பாராட்டுவார். ஒரு முறை ஒரு கதை எழுதி அவரிடம் காண்பித்தான். அதைப் படித்துவிட்டு இதை இன்னும் சரிசெய்தால் நல்ல குறுநாவலாக வரும் என்றார். அவன் அந்தக் கதையையே கிழித்துப் போட்டு விட்டான். அவன் எழுதிய சிறுகதைகள் பத்திரிகையில் வரும் பொழுது அது பற்றி பல முறைகள் “பாரதி” அவனைப் பாராட்டி இருக்கிறார். அவனது முதல் சிறுகதைத் தொகுதியான “இரவில் நனவில்” புத்தகத்தைப் படித்துவிட்டு,” ரொம்ப நல்லாருக்கு..விசு..எழுத்துல நல்ல ஸ்டைல் ஒனக்கு வந்திருக்கு” என்று அவனை வாழ்த்தினார்.

“அண்ணாமலை கைதொழ”
“எம்.எஸ் .வி”. அவர்கள் இசையமைக்கும் அழகை நேரில் காணும் வாய்ப்பு அவனுக்கு இரண்டு முறைகள் கிடைத்தன. அதில் ஒன்று அவன் நண்பர்களுடன் திருவல்லிக்கேணி வசந்தாமேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, விடுதியின் சொந்தக்காரர் 1978ம் வருடம் “மே” மாதத்தில் ஒரு படம் எடுக்க பூஜை போட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் படத்தயாரிப்பாளரான விடுதியின் சொந்தக்காரர் அவனை அழைத்திருந்தார் (அவனுக்கு அதில் விருப்பம் இருந்த காரணத்தால்) ஜெமினி ஸ்டுடியோவில் பூஜையுடன் பாடல் ஒலிப்பதிவு. படத்தின் இயக்குநர் மல்லியம் ராஜகோபால்., எம்.எஸ்.வி. இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டான். எம்.எஸ்.வி. அவர்கள் மெட்டுச் சொல்ல அதற்கு “இங்கே ஒரு சங்கம் அதில் சங்கம் அடைந்தேனே …அங்கே அவள் அங்கம் அதில் அங்கம் வகித்தேனே” என்ற அழகான வரிகளைக் கவியரசர் சொல்ல, அதற்கு இசையமைத்த எம்.எஸ்.வி. அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குப் பாடிக் காட்ட, எம்.எஸ்.வி. அவர்களின் உதவியாளர் ஜோசப்கிருஷ்ணா துணையுடன் அந்த மிக இனிமையான பாடல் ஒலிப்பதிவான தருணம் இன்றும் அவனுக்கு அதே இனிமையுடன் நினைவிருக்கிறது. பணப்பிரச்சனையால் அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது. ஆனால் அந்தப் பாடல் மட்டும் அவனுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது முறை 1999ம் வருடம் “அண்ணாமலை கைதொழ” என்ற தேவார, திருவாசகப் பாடல்களின் இசைத் தொகுப்புக்கு எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைக்கும் பொழுது முழுமையாக இரண்டு தினங்கள் அவருக்கு வெகு அருகிலேயே இருந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றான். அ.ச.ஞானசம்மந்தன் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பதினேழு பாடல்களுக்கு மெட்டமைத்து, தனது குழுவினருடன் அவர் இசையமைத்த அழகையும், அந்த இசையிலேயே அவரும் மூழ்கிக் குளித்த அவரின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் நேரில் கண்டு ஆனந்தம் அடைந்தான்.

“இலக்கிய சிந்தனை” அமைப்பாளர்களில் ஒருவரான R. A. K. பாரதி அவர்கள் அவனிடம் ,”விஸ்வநாதா…தேவார, திருவாசகத்தில் இருந்து சில பாடல்களை அறிஞர் அ.ச.ஞா. தேர்வு செய்திருக்கிறார். அதற்கு “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமைக்கப் போகிறார். இரண்டு நாட்கள் அதன் ஒலிப்பதிவு மைலாப்பூர், கச்சேரி ரோட்டில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் நடக்கவிருக்கிறது. ஒனக்கு இதிலெல்லாம் ஈடுபாடுண்டே..முடிந்தால் இரண்டு நாட்கள் லீவு போட்டு வாயேன். மிகக் குறைந்த பேர்கள்தான் இருப்பார்கள். அ.ச.ஞானசம்மந்தன் இருப்பார். முடிந்தால் சீதாவையும் (அவனுக்கு மனைவி) கூட்டிக்கொண்டு வா” என்றார். இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு காலையில் எட்டு மணிக்குச் சென்று இரவு பதினோரு மணிக்குத்தான் திரும்பினான்.

ஒலிப்பதிவுக் கூடத்தின் உள்ளே அ.ச.ஞா. அவர்கள் அமர்ந்திருந்து ஒவ்வொரு தேவார திருவாசகப் பாடலுக்கும் ஒரு சிறு உரை தருவார். அதை எம்.எஸ்.வி.அவர்கள் நுணுக்கமாகக் கேட்டுப் பதிவு செய்வார். ஒலிப்பதிவு முடிந்தவுடன் அ.ச.ஞா. கூறும் அற்புதமான விளக்கங்களைக் கேட்டு ரசிப்பார். அடுத்ததாக எந்தப் பாட்டு யார் பாட வேண்டும் என்று திட்டமிட்டபடி பாட அழைத்திருந்தார். இசையமைக்கும் குழுவினர் ஒரு கூடத்தில் இருப்பார்கள். அவர்களுக்குக் குறிப்புகள் தந்து வழிநடத்துவார். உடனே தனது இடத்திற்கு வந்து பாடகர்களுக்கான பாடலைத்தந்து, அதை எப்படிப் பாடவேண்டும் என்றும் கற்றுத் தருவார். குறித்த காலத்தில் ஒலிப்பதிவை முடித்துவிட்டு, அதை அங்கே உடனேயே போட்டுக் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொள்வார்.

“அண்ணாமலை கைதொழ” என்ற அத்தொகுப்பில் அப்பர் தேவாரத்தில் இருந்து “எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே ..சிந்தை உள்ளும் சிரத்துளும் தங்கவே” என்ற பாடலுக்கான இசைக்குறிப்பை (பதிவு செய்த ஒலிநாடாவை) எஸ்.பி.பி. இடம் தந்து,” பாலு..இதக் கேளு..பாடு” என்றார். எஸ்.பி.பி. அதைப் பணிவோடு பெற்றுக்கொண்டு எம்.எஸ்.வி.யையும், அங்கே அமர்ந்திருந்த அ.ச.ஞா. அவர்களையும் வணங்கி விட்டுப் பாடுவதற்காக ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் சென்று விட்டார். அவர் சென்றவுடன், “பாலுவிடம் ரொம்பப் பணிவும், கிரகிப்புத்தன்மையும் ஜாஸ்த்தி. என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதை அப்படியே பாடி இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாய்டுவான்” என்று அங்கிருந்த அ.ச.ஞா., ப.லஷ்மணன், பாரதி ஆகியோர்களிடம் எம்.எஸ்.வி. கூறினார். பாடல்களை எல்லாம் “டிராக்”கில் பாடியவர் எம்.எஸ்.வி.யின் உதவியாளராக இருக்கும் அனந்தநாராயணன். அவர் எம்.எஸ்.வி.யின் செல்லப்பிள்ளை.

“தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்” என்ற திருவாசகப் பாடலை கிருஷ்ணராஜூவும், ராகவேந்தரின் மகளும் பாடினர். அந்தப் பாடலில் “தேராந்த வீதிப் பெருந்துறையான் நிருனடஞ்செய்” என்று ஒரு வரி வரும். அதற்கு இசை அமைக்கும் பொழுது எம்.எஸ்.வி.யிடம் அ.ச.ஞா. அவர்கள், ” எம்.எஸ்.வி….இந்த இடத்துல இறைவன் தேரில் ஊர்வலம் வருகிறார்…” என்று சொல்லும் பொழுது, “ஆங்….புரிஞ்சுது..புரிஞ்சுது..என்று சொல்லி “மாலாரி” ராகத்தில் அதை மிக அழகாக அமைத்தார். நாதஸ்வரம், மேளம் என்று அந்த இசை அமர்க்களமாக இருக்கும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ப.லஷ்மணன் பரவசப்பட்டு எம்.எஸ்.வி.யின் கையைப் பிடித்துப் பாராட்டினார். அந்தப் பாடலைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கும்.

இரண்டாவது நாள் “சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக” என்ற திருவாசக, திருப் பொன்னூசல் பாடலை “சிந்து” பாடினாள். ரொம்பவும் அற்புதமான, மனம் ஊஞ்சலாடுகின்ற வண்ணம் அந்தப் பாடலுக்கு மெல்லிசைமன்னர் இசையமைத்திருப்பார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்து முடிக்கும் பொழுது இரவு மணி பதினொன்று. அப்பொழுது அங்கிருப்பவர்களிடம்,” இதப் போலத்தான் “ஆயர்பாடி மாளிகையில்” பாட்டையும் நள்ளிரவுல ஒலிப்பதிவு செய்தோம்” என்றார் எம்.எஸ்.வி.

அப்பொழுது அவனுடன், அவனது மனைவியும், அவனது மைத்துனி “கலாவும்” இருந்தனர். கலா நன்றாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர். அவன் எம்.எஸ்.வி.அவர்களிடம்,” இவங்க என் மைத்துனி ..கலா ..கர்நாடக சங்கீதம் கற்றவர்” என்று அறிமுகம் செய்து வைத்தான் . உடனே அவர் தன் ஆர்மோனியப் பெட்டியின் மீது தனது வலதுகை விரல்களைப் பரப்பியபடி,” அம்மா..எங்க..ஒரு பாட்டுப் பாடு” என்றார். கலாவும் கொஞ்சம் பாடினாள். ,” அம்மா ஒனக்கு நல்ல சாரீரம் இருக்கு…நிறைய பிராக்டீஸ் பண்ணனும் ..நல்ல வருவே..” என்று வாயார வாழ்த்தினார் அந்த இசை மேதை.

இதுபோன்ற பல நல்ல தொடர்புகளை அவனுக்கு ஏற்படுத்தித் தந்தவர் திரு. பாரதியும், திரு. ப. லக்ஷ்மணன் அவர்களும். பாரதி டெல்லியில் மத்திய அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருந்தவர். அதைத் துறந்து சென்னைக்கு வந்தவர். அவரும் திரு. ப.லக்ஷ்மணன் அவர்களும் நல்ல புரிதல் கொண்ட அன்பு நண்பர்கள். ஆடம்பரம் இல்லாதவர்கள். திரு. ப. லக்ஷ்மணன் பெரும் செல்வந்தர். ஆனாலும் மிகுந்த பணிவும், எளிமையும், பண்பும் கொண்டவர்.

அவனுக்கு மகன் “கிருஷ்ணா”வின் திருமணத்திற்கு( 9.2.2014) அவனும், அவனுக்கு மனைவி சீதாவும் திரு. ப. லக்ஷ்மணன் அவர்களுக்கு பத்திரிகையைத் தந்து, “கல்யாணம் எங்கள் ஊர் கல்லிடைகுறிச்சியில் வைத்து நடைபெற இருக்கிறது.. நீங்கள் கட்டாயம் வரவேண்டும்” என்று சொன்ன பொழுது, அவர், “நான் அன்று திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் இருப்பேன். 12.02.2014 அன்று நீங்கள் ஊரில் இருப்பீர்களா? பொண்ணும், புள்ளையும் அங்க இருப்பாங்களா ” என்று கேட்டார். ” எல்லோருமே ஊரில் இருப்போம் நீங்கள் அவசியம் வாருங்கள்” என்றனர் . “கட்டாயம் வருகிறேன்” என்றார். உடனே அவன் ,”அழகு சுந்தரத்தையும், அவரது குடும்பத்தினரையும் திருமண வரவேற்புக்கு வரச்சொல்லுங்கள்” என்றான். (டாக்டர் அழகு சுந்தரம் அவர்களுக்கு நல்ல நண்பன் என்ற முறையில்). ” நான் வரேன்ல …என் பையன் அழகு சுந்தரம் எதுக்கு?…அனாவசியமா, அதிகமா ஒரு மூணு சாப்பாடு தேவையா? காசை வீணாக்கப் படாது…..நான் சொல்லறதக் கேளுங்க…” என்று சொன்னார். அவனுக்கு அது நியாயமாகப் பட்டது. அதே குணம் திரு. பாரதிக்கும் உண்டு. அற்புதமான எளிய மனிதர்கள்.

இலக்கிய சிந்தனை மூலமாக அவனுக்கு நல்ல எழுத்தாளர்கள் மாத்திரம் கிடைக்க வில்லை. அவனுக்கு நல்ல நண்பர்களாகவும் கிடைத்ததுதான் பெரும் பேறு.

“பம்பாய் ஆதிலக்ஷ்மணன்” நினைவுப் பரிசு”
02.08.1991 அன்று பம்பாய் தமிழ்ச் சங்கத் தலைவர் தனது அறுபதாவது வயது பூர்த்தி ஆன சில மாதங்களில், தன்னுடைய ஊரான (பிறந்த ஊர் சாம்பூர்வடகரை. விருப்பமாய் இருந்தது தென்காசியில்) தென்காசியில் மரணமடைந்தார். தனது உயிலில்,” சென்னையில் இருக்கும் “இலக்கிய சிந்தனை” அறக்கட்டளை அமைப்புக்கு ரூபாய் ஒருலக்ஷம் கொடுக்கவும்” என்று எழுதியிருக்கிறார். அந்தத் தொகையை திரு. ஆதிலக்ஷ்மணன் அவர்களின் ஷட்டகர் (சகலை) திரு. ஆர்.எஸ். மணி அவர்கள் அவனுக்கு ஒரு காசோலையாக அனுப்பி, “இந்த ஒரு லக்ஷரூபாய்”யை இலக்கிய சிந்தனைக்காக ஆதிலக்ஷ்மணன் கொடுக்கச் சொல்லி உயில் எழுதி இருக்கிறார் என்று சொல்லி, “ப. லக்ஷ்மணன் அவர்களிடம் கொடுத்து விடு” என்று கடிதம் எழுதி இருந்தார். அவன் அந்தக் காசோலையை இலக்கிய சிந்தனை அமைப்பாளரான திரு. பாரதியிடம் கொண்டுக் கொடுத்தான். அந்தத் தொகையை அவர்களது அறக்கட்டளையில் சேர்த்துக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் (1992ம் வருடம் தமிழ் புத்தாண்டு இலக்கிய சிந்தனை ஆண்டு விழா முதல்) தமிழ்த் தொண்டு புரிந்த ஒரு அறிஞருக்கு ரூபாய் பதினைந்தாயிரம் (Rs . 15,000/-) “பம்பாய் ஆதிலக்ஷ்மணன்” நினைவுப் பரிசாக வழங்கி வருகின்றனர்.

28.01.2016
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *