இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (181)
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்களுடன் சிறியதோர் இடைவெளியின் பின்னால் மீண்டும் மடல்வழி உங்களோடு இணைவதில் மனம் பெருமகிழ்வடைகிறது.
ஏறத்தாழ நான்கு வாரங்கள்… நான்கு வாரங்கள் என்றால் என்ன ஒரு மாதம்தானே என எண்ணும்போது மனதினில் மிகவும் இலகுவாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது. அந்த நான்கு வாரங்கள் தன்னுள் எத்தனையோ நிகழ்வுகளின் தொகுப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதன் முழு விபரத்தையும் ஆராய்ந்தால் நான்கு வாரங்கள் எனும் அந்தக் காலத்தின் தாத்பரியத்தை நன்கு உணர முடிகிறது.
தமிழ்த்தாயின் இருப்பிடம், தமிழகத்தின் தலைநகராம் சென்னையை நோக்கிய எனது பயணமும் அந்தப் பயணத்தின் விளைவால் நெஞ்சில் தொகுக்கப்பட்ட அனுபவப் பக்கங்கள். ஆமாம் இந்த நான்கு வாரக் காலம் எனது நெஞ்சத்திரையில் தன் காலமெனும் தூரிகையினால் வரைந்த ஓவியங்கள் எத்தனையோ. எத்தனையோ திட்டங்களை மனதில் வகுத்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்கும் பயணத்தின் முடிவில் அதில் அரைவாசி கூட நிறைவேற்றப்படாமல் திரும்பும்போது கொடுக்கும் ஏமாற்றத்துளிகளால் நிரம்பும் நெஞ்சக் குட்டையில் நீந்தும் அனுபவமும் தனியானதுவே,
இம்முறை பயணத்தின் போது சிலதைக் கொடுத்த அந்த இறைவன் சிலதை எடுத்துக் கொண்டும் விட்டான். ஒவ்வொரு வருடமும் எமது சென்னைப் பயணத்தின் முக்கிய அம்சமே எனது மனைவியின் தந்தை, நான் என் தந்தை ஸ்தானத்தில் நிலைநிறுத்தி வணங்கும் ஒரு உன்னத மனிதருடன் ஒரு சில வாரங்களைச் செலவிடப் போகிறோம் எனும் எண்ணமேயாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் என் மாமனாரை நீ இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என்று தன்னோடு அழைத்துக் கொண்டுவிட்டான் அந்த அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை எனும் சக்தி.
இவ்வருட பயணத்தின் போது அவரில்லை. அவரில்லாத ஒரு சென்னைக்குச் செல்கிறோம் எனும் வருத்தம் என் அன்பு மனைவியின் நெஞ்சத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை நான் நன்றாக அறிந்திருந்தேன். இருப்பினும் இப்பயணத்தின் எதிர்பார்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் தன்னுள் என் மனைவி அடக்கிக் கொண்டதனையும் நான் நன்கு அறிந்திருந்தேன்.
எழுத்து எனும் இந்த அற்புதக் கடமையால் தமிழன்னை எனக்கீந்த உறவுகள் எத்தனையோ. அவற்றில் சில உடன்பிறப்புகளை விட அதிகமான நெருக்கத்தையும், பாசத்தையும் பொழிபவை என்றால் மிகையாகாது.
அத்தகைய தமிழன்னை எனக்களித்த தம்பிகளில் சுரேஷ் மிகவும் முக்கியமான ஒருவர். அண்ணா, அண்ணி என்று எம்மீது அளவுகடந்த பாசத்தைக் கொட்டி வருபவர். அந்த அன்புக்கு அவரின் மனைவி தங்கை விஜி ஒன்றும் சளைத்தவரல்ல. அந்தத் தம்பி சுரேஷின் தாயாரை நான் சந்தித்த சந்தர்ப்பங்கள் சிலவே இருப்பினும் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் ஏதோ மறைந்த என் அன்னையின் ஞாபகங்கள் என் உள்ளத்தின் உணர்வுகளோடு இணைந்து ஆனந்த ராகம் மீட்டும். அவரிடம் ஆசி பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன். அந்த அன்பு அன்னையை ஜனவரி மாதம் 16ம் திகதி இறைவன் தன்னோடு அழைத்துக் கொண்டு விட்டான். எனது லண்டன் பயணத்திற்காக விமான நிலையம் செல்ல வேண்டியதால் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை. தம்பிக்கு தொலைப்பேசியில் ஆறுதல் சொல்லவே என்னால் முடிந்தது.
அது தவிர என் மற்றோர் தம்பி திருப்பூர் ஸ்ரீதர் “வாருங்கள், வாருங்கள்” என்று எனது ஒவ்வொரு சென்னைப் பயணத்தின் போதும் வருந்தியழைத்தும் செல்ல முடியாதிருந்த ஒருநிலையை இப்பயணத்தின் போதே மாற்ற முடிந்தது. ஆமாம் அவருடன் சில நாட்கள் , திருப்பூரிலும், திண்டுக்கல்லிலும் செலவழித்ததோடு எனது நீண்டநாள் கனவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் தரிசனம் செய்யும் கனவும் நிறைவேறியது. அது மட்டுமின்றி புதுவருடத்திற்கு முந்திய 2015ம் ஆண்டின் கடைசிநாள் பழனிமலையில் முருகனைத் தரிசிக்கும் பாக்கியமும் பெற்றோம்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இ-சங்கமம் இணையத்தளத்தின் ஆசிரியரான தம்பி விஜய் எனும் விஜயக்குமார் தனது நண்பருடன் எனைத்தேடி திருச்செங்கோட்டிலிருந்து சென்னை வந்து சந்தித்த அனுபவம் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது. அதன் பின்னால் அவரைச் சந்திக்க பலமுறை எண்ணிய போதும் சந்திக்க முடியாத நிலை. இப்போது அவர் தினமலர் ஈரோடு நிருபராகவும், ஈரோடு புதிய தலைமுறை செய்தியாளராகவும் இருக்கிறார். அந்தத்தம்பியை அவருடைய ஊர் திருச்செங்கோட்டில் சந்திக்க முயன்றபோது அலுவலகப்பணிகளால் அழுந்திப்போயிருந்த அவர் எனக்காத் தனது பணிகளை சிறிது ஒத்திப் போட்டு அர்த்தநாரீஸ்வரர் ஆலய வாசலில் வந்து சந்தித்த நிகழ்வு என் நெஞ்சத்தைத் தாலாட்டுகிறது.
ஒரேயொரு ஏமாற்றம்! திருப்பூர் நோக்கி இரெயிலில் பயணிக்கும் போதுதான் சகோதரி பவளசங்கரி ஈரோட்டில் தான் இருக்கிறார் என்று அவர்மூலம் கேள்விப்பட்டேன். என்னைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்த சகோதரி பவளசங்கரி, அதே அவலுடன் இருந்த என்னால் நேரமின்மை எனும் ஒரே காரணத்தினால் சந்திக்க முடியாமல் போனதே ஏமாற்றமென்பேன். இருந்தாலும் சகோதரியோடு தொலைப்பேசியில் உறவாடியது ஓரளவு சந்திக்க முடியாமல் போன ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவியது.
சென்னையில் எனது வழமையான அனைத்து நண்பர்களின் சந்திப்பில் குறிப்பாகக் கவியரசர் கண்ணதாசனின் மைந்தன் எனது இனிய நண்பர் காந்தி கண்ணதாசன், நண்பர், நாடக மன்னன், நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோரின் சந்திப்பு இதமாக இருந்தது.
சந்திக்க முடியாமல் போனவர்கள் பட்டியலில் இசைக்கவி ரமணன், தம்பி தேவகோட்டை இராமநாதன், அன்பு நண்பர் பாண்டியராஜன், அற்புதப் பேச்சாளர், இலக்கியத் தென்றல் பி.என் பரசுராமன் பலர் இடம்பெற்றது மிகவும் வேதனையான விடயம்.
இருப்பினும் அடுத்த விஜயத்தின் போது அனைவரையும் சந்திக்கலாம் எனும் எண்ணம் நெஞ்சுக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அனைத்தையும் முடித்துக் கொண்டு இதோ மீண்டும் இலண்டனில் காலதேவன் தாராளமாக வழங்கும் பனிக்குளிரில் கடந்த வாரங்களை அசைபோடும் நேரம்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan