பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: வினா முந்துறாத உரை இல்லை

பழமொழி: கனா முந்துறாத வினை இல்லை

கல்லா தான் கண்ட கழி நுட்பங் கற்றார்முற்
சொல்லுங்காற் சோர்வு படுதலா – னல்லாய்
வினாமுந் துறாத வுரையில்லை யில்லைக்
கனாமுந் துறாத வினை.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை,
கனா முந்துறாத வினை.

பொருள் விளக்கம்:
முறையாகக் கல்வியைக் கற்றிராத கல்லாதவர் ஒருவர் மிக நுட்பமான மெய்ப்பொருளினை அறிந்து கொண்டாலும், அதனைக் கற்றார் முன் விளக்கிக் கூறுவதற்கு தக்க கல்வியறிவினைப் பெறாததால் அவர் கூற்று முக்கியத்துவம் பெறாமல் போகும். நற்பண்புகள் அமைந்த பெண்ணே, கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை (அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை என அறிவாயாக)

பழமொழி சொல்லும் பாடம்: சிறந்தவகையில் பொருள் புரிந்து கொள்ள அதற்கேற்ற முறையான அடிப்படைக் கல்வியைக் கற்றிருத்தல் அவசியம், கல்வியின்றி நுண்ணறிவு பெறுதல் இயலாது. டாக்டர் அப்துல் கலாம் சொன்ன “கனவு காணுங்கள்” என்பதன் அடிப்படையைக் காட்டுகிறது “கனா முந்துறாத வினை இல்லை” என இப்பாடல் கூறும் பழமொழி. குறிக்கோளினை எண்ணியபிறகுதான் அதை அடையும் செயல் துவங்குகிறது. பதில் வருவதற்குக் காரணம் அதற்கேற்ற கேள்வி எழும்புவது. தக்க அடிப்படைக் கல்வி இல்லாத பொழுது ஆராயும் மனப்பான்மை பெறாத காரணத்தினால் கண்டுகொண்ட நுட்பத்தின் அடிப்படையும் விளங்காது. பல அறிவியல் நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் அது ஏன் நிகழ்கிறது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களைக் கொண்டு இக்கூற்றைப் புரிந்து கொள்ளலாம். அதனால் இயற்கையறிவு பெற்றிருப்பினும் நுண்பொருளை அறிவதற்குத் தக்க அடிப்படைக் கல்வி தேவை என்பதை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். தேவையான கல்விப் பயிற்சியின்றி கற்றோரை எதிர்கொள்வதை வள்ளுவர்,

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (குறள்: 401)

தேவையான நூல்களைக் கற்று கல்வியைப் பெறாத ஒருவர் கற்றறிந்த சான்றோருடன் கலந்துரையாடுவது, விளையாட்டிற்குத் தேவையான கட்டங்களை வரைந்து கொள்ளாமல் தாயக்கட்டையை உருட்ட முற்படுவதற்கு ஒப்பாகும் என்கிறார். அத்தகையவர் நிலையை,

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். (குறள்: 405)

கல்லாத ஒருவர் கற்றறிந்த மேதைகள் முன்னிலையில் எல்லாம் அறிந்தவர் போல உரையாட முற்படும்பொழுது அவரது உண்மையான அறிவுத் தகுதி எளிதில் வெளிப்பட்டுவிடும் என்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.