ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 54
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber)
எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை அன்னை இதயத்தை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அவரது முகங்கள் காலை ஒளிச்சுடரில் குளிக்கக் காத்திருந்து சத்தியத்தின் விடிவுக்காகக் கிழக்கை நோக்கித் திரும்பியுள்ளன. நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும் விடுதலை உணர்வும் கொண்ட முகத்தோடு என்னைக் கடந்து சென்றார். கலில் கிப்ரான். (Mister Gabber)
___________________
இசை தனித்துவ மொழி
___________________
இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது
அது உயிரூட்டும் உணர்வு !
இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது
அதுவே அதன் நெஞ்சு !
படைக்கும் போது
கடவுள்
இசை யெனும்
தனித்துவ மொழியை
மனிதனுக்கு அளித்துளான் !
அனைத் துக்கும் வேறு பட்ட
இனிய மொழி அது !
ஆதி மனிதன்
அதன் உன்னதம் பாடினான்
அடர்ந்த கான கத்தில் !
இசை மகள் அரசனின்
இதயம் கவர்ந்து
ஆசனத்தி லிருந்து
இறங்கி வரச் செய்தாள் !
___________________
ஊழ் விதிப் புயலின்
அசுரத் தாக்கலில்
பாழ் பட்டுப் போன
மெல்லிய பூக்களே
நமது ஆத்மா வெல்லாம் !
அதிகாலைத் தென்றலில் கூட
ஆடி நடுங்கிடும்
ஆத்மாக்கள் !
வானி லிருந்து வீழும்
பனித் துளிகளால்
கூனிப் போகும் நமது ஆத்மா !
___________________
பறவையின் இசை ஒலிகள்
மனிதரின்
உறக்கம் கலைத்திடும் மங்கிய
உதயப் பொழுதில் !
முடிவிலாக் கடவுளின்
உன்னத
மகத்துவம் பாடும் போது
மனிதரை
ஒன்று படுத்த
அழைப்பிதழ் அனுப்பிடும்
புள்ளினத் தின்
இசை ஓசை !
___________________
~ நிறைவுற்றது ~
___________________