நாகேஸ்வரி அண்ணாமலை

மனிதன் மிருகங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதனாலோ என்னவோ மனிதனுக்குள் நிறைய மிருக உணர்வுகள் உள்ளன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.  மனிதன் ‘நாகரிகம்’ பெற்றுப் படிப்படியாக வளர்ந்து அவனுக்குள் இருந்த மிருக உணர்வுகள் ஒவ்வொன்றாக அவனை விட்டுப் போய்விட்டதாக எல்லோரும் நினைத்தாலும் அவை இன்னும் மனிதனுக்குள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். வெகு ஆழமாக மனிதனின் மனதிற்குள் போய்விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அவ்வப்போது அந்த மிருக உணர்வுகள் வெளியே வரத்தான் செய்கின்றன.

கால்பந்து. ஃபேட்மிண்டன் டென்னிஸ், ஹாக்கி போன்ற எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.  இருவரோ பலரோ இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாடி யாரோ ஒருவர் அதில் வெற்றி பெறுகிறார்.  அதில் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்துவதில்லை.  அந்த விளையாட்டுக்களைக் கண்டு பலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.  அதில் தவறு ஏதும் இல்லை.  ஆனால் இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும், துன்புறுத்தும் குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களில் மனிதர்கள் என்ன சந்தோஷம் காண்கிறார்கள் என்று எனக்கு எப்போதும் புரிந்ததில்லை.  நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் எங்கள் ஊரில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குத்துச்சண்டையைத் தவறாமல் பார்த்து வருவார்.  அவருக்கு அது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.  அப்போதே இதில் என்ன சந்தோஷம் காண்கிறீர்கள் என்று கேட்டுவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றும்.  ஆனால் அவர் வயதில் பெரியவர்.  அவரிடம் அப்படிக் கேட்கும் தைரியம் ஒருபோதும் எனக்கு வந்ததில்லை.  தொலைக்காட்சிப் பெட்டியில் பல சானல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போதோ விளம்பரங்களிலோ குத்துச்சண்டை என் கண்களில் பட்டுவிட்டால் சில வினாடிகள் கூட அதை என்னால் சகிக்க முடியாது.  அந்த அளவிற்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உடல் அளவில் துன்புறுத்துவதை என்னால் பார்க்க முடியாது.

அதே மாதிரி மாமிசபட்சிணிகளான புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் அப்பாவி மான்களையோ ஆடுமாடுகளையோ அடித்துக் கொல்லுவதையும் என்னால் படங்களில்கூட பார்க்க முடியாது.  எப்படித்தான் மனிதன் மிருகங்களை வேட்டை ஆடுகிறானோ.  அவை துடித்து உயிர்விடுவதைப் பார்க்கும் மனிதனுக்கு மிருக உணர்வு இல்லையென்று எப்படிக் கூறுவது?

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் அரசர்கள் ஆண்டுகொண்டிருந்தபோது சில காட்டுப் பன்றிகளை பயிர்கள் உள்ள விளைநிலத்திற்குள் விரட்டிப் பின் அவர்கள் வளர்க்கும் நாய்களை அவற்றின் பின்னால் ஓடவிட்டு அந்த நாய்கள் அந்தக் காட்டுப் பன்றிகளைக் குதறுவதைப் பார்த்து ரசிப்பார்களாம்.. இப்போதும் அந்த அரசர்களின் வழியில் வந்தவர்கள் இம்மாதிரி விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்களாம்.  மனிதன் எந்த அளவிற்கு மிருகம்போல் நடந்துகொள்கிறான்.  மிருகங்கள்கூட தங்கள் உணவுக்காகவும் பாதுகாப்பிற்காகவும்தான் மற்ற மிருகங்களைத் துன்புறுத்துகின்றன.  மனிதனைப்போல் அந்த துன்பத்தில் இன்பம் காணுவதாகத் தெரியவில்லை.

2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ‘தமிழர்களின் வீரவிளையாட்டான’ ஜல்லிக்கட்டைத் தடைசெய்திருந்தது.  ஆனால்,  மத்திய அரசு அந்தத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.  ‘வீரர்கள்’ எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.  காளைகளை அந்த ’வீரர்கள்’ துன்புறுத்தப் போவதை வேடிக்கை பார்க்கப் பலர் ஆவலோடு காத்திருந்தார்கள்!  அந்த வீரவிளையாட்டில் அவர்கள் காளைகளின் வாலை முறுக்குவதையும் அவற்றின் தலையைத் திருகுவதையும் அவற்றின் முதுகில் குத்துவதையும் பார்ப்பதில் என்ன சந்தோஷம் இருக்கிறது?  காளைகள் மட்டுமல்ல, பல ‘வீரர்’களும் அல்லவா காயமடைகிறார்கள்?  அதையும் பார்த்து மகிழ ஒரு கும்பல் இருக்கிறது என்றால் இது மிருக உணர்வு அல்லாமல் வேறு என்ன?

தமிழகத்தில் தொன்றுதொட்டே ஏறு தழுவுதல் என்ற மரபு இருந்தது என்று இலக்கியம் கூறுகிறது..  இப்போதைய ஜல்லிக்கட்டின் முன்னோடி என்கிறார்கள் இதை.  வசதி படைத்த சீமான்கள்  காளைகளை வளர்த்து அவற்றை அடக்குபவர்களுக்குத்தான் தங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுப்பார்களாம்.  அப்படிப்பட்டவனை மணக்கத்தான் பெண்ணும் விரும்புவாளாம்.  அவன் அறிவிலியாகவோ முரடனாகவோ இருந்துவிட்டால் அவளுடைய கதி என்ன?  அப்படி இருந்தாலும் வீரனாக – அதாவது காளையை அடக்குபவனாக – இருந்தால் மட்டும் போதும் என்று பேசாமல் இருந்துவிடுவாளா?  அப்படியே இந்த மரபு அப்போது இருந்திருந்தாலும் இப்போதைய கணினி யுகத்தில் எந்தப் பெண் இப்படி காளையை அடக்குபவனை விரும்பி மணந்துகொள்வாள்?

பழைய ரோம சாம்ராஜ்ஜியத்தில் குற்றம் புரிந்தவர்களை உயிரோடு பசியோடு இருக்கும் சிங்கத்திற்கு இரையாக்குவார்களாம்.  இதை ரசித்துப் பார்க்க ஊரே கூடுமாம்.  இன்னும் அந்த மனோபாவத்தில்தான் நாம் இருக்கிறோமா?  மனிதன் எவ்வளவோ வளர்ச்சி பெற்று நாகரிகம் அடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்வதெல்லாம் உண்மை இல்லையா? மிருக உணர்விலிருந்து அவன் எப்போதுமே விடுதலை பெறப் போவதில்லையா?

தினம் தினம் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொன்று தன் பசியைப் போக்கிக்கொள்கிறானே அது எப்படி சரியாகும் என்று சிலர் கேட்கலாம்.  அதுவும் சரியல்ல, இதுவும் சரியல்ல.  மனிதனால் மிருகங்களை அடக்கி ஆள முடியும் என்ற ஒரே காரணத்தால் அவற்றை மனிதன் கொன்று தின்பது மிகவும் கொடியது.  அமெரிக்காவை எதிலும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் நாம் கோழிகளை அமெரிக்காவில் போல் ஈவு இரக்கமில்லாமல் அவற்றிற்கு வேதனை ஏற்படுத்தும் வகையில் குறுகிய காலத்திலேயே கொழுக்கவைத்து உண்கிறோம்.  அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.  தேவை இல்லாததை விட்டுவிட்டு தேவையானதை கற்றுக்கொள்ளலாமே.  இப்போது அமெரிக்காவில் மிருகங்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது, அதனால் பால், வெண்ணெய் போன்ற பதார்த்தங்களையும் விட்டுவிடும் கூட்டம் பெருகி வருகிறது.

மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று நிர்வாக ஆணைப் பிறப்பித்து, அதை பீட்டா போன்ற மிருக ஆர்வலர்கள் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் அந்த ஆணையை ரத்துசெய்து, அதன் பிறகு தமிழக இளைஞன் ஒருவன் தீக்குளித்து இப்போது எல்லாம் முடிவடைந்தது என்று கொள்ளலாம்.  ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் சிலர் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.  என்னைப் பொறுத்தவரை பல காளைகள் மனிதனின் துன்புறுத்தலுக்கு இலக்காகாமல் தப்பின என்ற விஷயம் மனதுக்கு ஒரு நிம்மதியையே கொடுக்கிறது..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.