திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின்  அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!

நரசய்யா

“கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்

பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
அறிவா ரறிவா ரறியா ரறியார்
ஒருகாம் பிருதலையும் பூ”

பெருந்தொகை பாட்டு எண் 1800

அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
(கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று
இறங்குக்காற் பாடியது )

சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை
நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!

அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.

********

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண
வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு
வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!

அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும்
அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.

“புஷபவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.

சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’

“சீ” * * * *

திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ
திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”

தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும்
சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று
அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப்
பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!

அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?

ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டு
கயிற்றையும் சுற்றிக கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஒருகாம்பிருதலையும் பூ

  1. மிக அருமை! ‘பூப்பு’ என்ற இயற்கைநிகழ்வு எல்லாராலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படாது. எனக்குத்தெரிந்த குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். கவலைப்பட்ட பெற்றோர்களே மிகுதி.

    மகிழ்ச்சி ஏன்? ‘விரைவில் தங்களுடைய பொறுப்புத்தீரப் பெண்ணை ஒருவன்கையில் தள்ளிவிடலாம், குடும்பம் பெருகிப் பேரன்/பேத்தி வருவார்கள்’ என்றா? கவலை ஏன்? இவளை ஒருத்தன் கையில் பிடித்துக்கொடுக்கவேண்டுமே, செலவுக்கு என்ன செய்யப்போகிறோம்? என்ற உணர்வாலா? சின்ன வயசில் பூப்படையுமுன்பே அவசர அவசரமாக … வயது வேறுபாடுகூடப் பாராமல் … ஒருத்தன் கையில் பிடித்துக்கொடுத்து … வயசான அவன் போனபிறகு இந்தப்பெண் தன் வீட்டுக்கே திரும்பவந்து அங்கே புதிதாக வந்திருக்கும் தம்பி பெண்டாட்டி அண்ணி எல்லாரிடமும் அவதிப்பட்டதையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், கண்டிருக்கிறேன்.

    ஆண்டவன் படைப்பில் நேர்மையில்லை. பெண்பிறவி பாவப்பட்ட பிறவி, கவலைதருவதுதான். 

    வணக்கத்துடன்,
    ராஜம்

    http://www.letsgrammar.org
    http://mytamil-rasikai.blogspot.com
    http://viruntu.blogspot.com

  2. கருத்தாழம் மிக்க கதை- அல்ல அல்ல- தினந்தோறும் சமுதாயத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வு. தாய்தந்தையர் உள்ளங்களை அழகுறப்படம் பிடித்துக்காட்டுகிறது. சிறுகதையின் இலக்கணத்தைப் பாங்குற விளக்கும் எழுத்தோவியம். பிரசுரித்த வல்லமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.