இந்த வார வல்லமையாளர் (251)

தமிழகத்திலேயே முதல்முறையாக `திருநங்கை’ என்ற அடையாளத்துடன் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர், தற்போது முதல் திருநங்கை சித்த மருத்துவராகவும் ஆகப்போகிறார்.  `திருநங்கை’ என்ற அடையாளத்துடனே கல்லூரியிலும் சேர்ந்துள்ளார்,தாரிகா பானு.

தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கும் நிலக்குடிதான் இவரது சொந்த ஊர். அம்மா, அப்பா நாலு அண்ணன்கள், கடைசியாக இவர். திருநங்கையாக தன்னை உணர்ந்த இவர் 2014ல வீட்டைவிட்டு வெளியேறினார். இவர் திருநங்கையாக இருப்பது வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னால் அடையாளத்தோடு வாழமுடியவில்லை என்பதால் வெளியேறியதாகவும் கூறுகிறார். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்தபின் தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக்கும் திருநங்கை கிரேஸ் பானுவை சந்தித்தார்.

கிரேஸ் பானு முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. திருநங்கைகளின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். தாரிகா பானுதிருநங்கைகளுக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நமது சமூகச் சூழலில், கிராமப்புறத்தில் பிறந்து மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிப்பதற்கு பல்வேறு போராட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில், கிராமத்துச் சூழலில் திருநங்கையாக வளர்ந்து, பிறகு குடும்பத்தைவிட்டு வெளியேறி, தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் தனக்கு வந்த இன்னல்களை எல்லாம் மீறி தாரிகா பானு இன்று அடைந்திருக்கும் நிலை வரவேற்கத்தக்கது.

தாரிகா பானுவை, அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கேட்டபோது, பள்ளியில் இடம் கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பிறகு, முதன்மைக் கல்வி அலுவலரிடம் சென்று `திருநங்கை’ என்ற மூன்றாம் பாலின அடையாளத்தோடு படிக்க அரசு அனுமதி வழங்கியுள்ள உத்தரவைக் காட்டியிருக்கிறார் கிரேஸ் பானு. அதன்பிறகு அந்தப் பள்ளியிலேயே சேர்ந்து படித்து வெற்றி கண்டார் தாரிகா பானு.

பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, கல்லூரியில் உடனடியாக சீட் கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ் பானு வழக்கு தொடர்ந்து நீதி கேட்ட பிறகே சீட் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு அரசுக் கல்லூரியிலேயே வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காத்திருப்பு, வழக்கு எனத் தொடர்ந்த போராட்டங்கள். கடைசியாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கியுள்ளார் தாரிகா பானு.

எளிமையாக நமக்கு கிடைக்கும் விசயங்கள் பலவற்றுக்கும் போராட்டம், வழக்கு இவற்றை, ஒவ்வொரு முறை கல்விக்காக முன்னேறும்போதும் தாரிகா பானுவும் கிரேஸ் பானுவும் முன்னெடுத்துள்ளனர். அடிப்படையான கல்வியைப் பெறுவதற்கே 2017-ம் ஆண்டிலும் திருநங்கைகள் போராடவேண்டியுள்ளது. பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும்தான் பொதுப்புத்தியில் திருநங்கைகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், `TG’ என்ற முன்றாம் பாலின அடையாளத்தோடு பொறியியல் கல்லூரியில், கலைக் கல்லூரியில் தற்போது பல திருநங்கைகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளிலும் உள்ளனர். சிலர் காவல் துறையிலும் பணிபுரிகின்றனர். ஆனால், அப்படி நல்ல நிலைக்குச் செல்வதற்குப் பல இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்கவேண்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் கிரேஸ் பானு திருநங்கைகளுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.

திருநங்கை தாரிகா பானுபடிப்பை முடித்துவிட்டு சென்னைப் போன்ற பெருநகரங்களில் வேலை தேடுவது என்பதே சிரமமான ஒன்று. தன் குடும்பத்தினருடன் எந்தவிதமான தொடர்புமில்லாமல் பொருளாதாரரீதியாகவும் சமூகத்தில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுவதற்கும் திருநங்கைகள் படும் துயரத்தின் வலியை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

திருநங்கைகள் அனைவருக்கும் தாரிகாபானுவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும் என வல்லமை நம்புகிறது

வல்லமையாளர் தாரிகா பானுவுக்கு நல்வாழ்த்துகள்

(நன்றி: விகடன்)

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

செல்வன்

பொருளாதார வல்லுநர்

Share

About the Author

has written 61 stories on this site.

பொருளாதார வல்லுநர்

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.