-மேகலா இராமமூர்த்தி

boy on tree branch

மரத்தின் கிளையில் சாய்ந்துபடுத்து அலைபேசியை ஆராய்ந்துகொண்டிருக்கும் இளைஞனைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து, அதனைப் படக்கவிதைப் போட்டிக்கு நல்கியிருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கு என் நன்றி!

”எல்லாப்பொருளும் இதன்பால் உள” என்று திருக்குறளை அன்றைய புலவோர் புகழ்ந்தது இன்றைய அலைபேசிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்துகின்றது. நம் உள்ளங்கைக்குள் உலகையே விரித்துக்காட்டி, மாயக்காரனாய் நம்மை  மலைக்கவைக்கின்றது இந்த அலைபேசி!

பயன்பாடுகளைப் பொறுத்து நன்மையொடு தீமையும் இந்த அலைபேசியால் அவனிக்குக் கிடைத்துவருவது கண்கூடு. கத்தியைப் பயன்படுத்துவதுபோல் கவனத்தோடும் புத்தியோடும் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் தீயவிளைவுகளைத் தடுக்கலாம்.

அலைபேசியின் நன்மை தீமைகளை அலசிஆராயக் கவிவாணர்கள் வரிசையில் காத்திருப்பதால் அவர்களை வரவேற்று நான் விடைபெறுகிறேன்.

*****

படித்துப்பட்டம் பெற்றும் வேலை கிடைக்கும் வேளை இன்னும் வாராததால் மரக்கிளையில் அலைபேசியோடு அளவளாவிக்கொண்டிருக்கும் உழவர்குடித் தோன்றலையும், அவன் தேடிவந்த நகரத்தின் நரகவாழ்வையும், பட்டம்பெற்ற அவனுள்ளம் உண்டிகொடுத்து உயிர்கொடுக்கும் உழவுத்தொழிலையே மீண்டும் நாடிநிற்பதையும் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா..!

அய்யா! அவனங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தால்..
……………அன்றாடம் அலைந்து ஓய்ந்தவனெனவும் தெரியும்.!
அய்யே!இனியிந்த நாய்ப்பிழைப்பு வேண்டாமென..
……………அருவருக்குமவன் மனநிலையையும் அறிய முடியும்!
ஒய்யாரமாய் ஓய்வெடுக்க ஒடிந்துவிழுந்த கிளையின்..
……………ஓரத்திலமர்ந்து நீநினைவது என்னவென்பதும் புரியும்!
வெய்யிலுக்கு மரநிழல்தரும் சுகம்போல இப்போது..
……………வீணாகப்போகும் நேரத்தில் வாட்ஸ்அப் இதம்தரும்!

படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலைதேடியிங்கே..
……………பல்லாயிரம் பேர்வருவார் மொத்தமாக ஓரிடத்துக்கு!
அடிக்கொரு அலுவலகம் இருந்தாலுமதன் கதவுகள்..
……………அனைத்திலும் வேலை காலியில்லை எனுமறிவிப்பு.!
கடிமணமாகாத காளையரென்றால் குடியிருக்க வீடு..
……………கிடைக்காது இக்கொடுமை போதாதெனில் அங்கே!
முடியைப் பிய்த்துக்கொண்டு முழுநேரமும் வேலை..
……………முடிந்தபின்னும் வீடுதிரும்ப முடியா நிலையிதுவே!

சொந்த ஊரிலிருந்த சுகமெல்லாமிங்கே இல்லை..
……………சந்துபொந்துக்குப் பஞ்சமில்லை சத்துண வில்லை!
பந்தங்கள் இருந்தும் பெயருக்குத்தான் சொந்தம்..
……………பணக்காரத் தனத்தினால் உறவுக்குக் வந்ததுகேடு!
மந்திரசக்தியால் மாம்பழம் பறிப்பது போலத்தான்..
……………எந்திரசக்தி கொண்டுதான் எதுவுமிங்கே இயங்குது!
சிந்திக்கக் கூடயிங்கே சிறிதளவேனும் நேரமில்லை..
……………பந்தியிலுட்கார்ந்து சாப்பிட பக்கத்தில் நிற்கவேணும்!

உழைக்கும் விவசாயி குடும்பத்தில் பிறந்தவனவன்..
……………ஊர்விட்டு ஊர்வந்தான் பிழைப்புதேடி ஒருவனாக.!
உழவுக்குடி உயரவே உயர்படிப்பு படித்தானவன்..
……………உயரும் நாகரீகத்தில் நரகமேமேலென நினைத்தான்!
அழகுதிமிர்க் காளைபோல கட்டுடல் மேனிகொண்ட..
……………அவன்மனது…உழவுத் தொழில்மீதே நிழலாடுகிறது.!
உழலுமவன் மனதுக்கு ஆறுதலுமிங்கில்லை மீண்டும்..
……………இழந்ததைப்பெற கிராமத்துக்கே போக விழைகிறான்!

*****

”நாணயத்தின் இருபக்கங்கள்போல் நன்மையும் தீமையும் கலந்த கலவையாய் உலவும் அலைபேசியை, படிக்கும் வயதில் சிறியோர் தவிர்த்தல் நலம்; பெரியோரும் முறையறிந்து பயன்படுத்துதலே பலம்” எனும் நன்மொழிகளைத் தாங்கி நிற்கின்றது திரு. பழ.செல்வமாணிக்கத்தின் கவிதை.

தீதும் நன்றும்:

தூரத்தை குறைக்க வந்தது தான் தொலை பேசி!
துயரத்தை தர வந்தது ஏனோ இந்த அலை பேசி!
விஞ்ஞானத்தின் வியத்தகு படைப்பு இந்தக் கைபேசி!
ஆனால் குடும்பத்தை தீவுகளாய் பிரித்த
அரக்கன் இந்த அலை பேசி!
காதலனைப் பிரியாத காதலியாய் கைக்குள்ளே
எப்போதும் கை பேசி!
உணவு மறந்தது! காரணம் அலை பேசி!
உறக்கம் போனது! காரணம் அலை பேசி!
நேரடிப் பேச்சும் குறைந்தது! காரணம் அலை பேசி!
சிந்தனை குறைந்தது! காரணம் அலை பேசி!
வாகனத்தை ஓட்டும் போதும் விலகாத கை பேசி!
எமனின் பாசக் காயிறாய் உயிரெடுக்கும் கை பேசி!
சிட்டுக்குருவிகளே இவ்வுலகில் இல்லாமல்!
அழித்தது இந்த அலை பேசி!
சின்னஞ் சிறு பிள்ளைகளை சீரழித்தது இந்தக் கை பேசி!
தீமைகள் மட்டும் தருவதா இந்த அலை பேசி!
நன்மைகள் பல உண்டு, இதனால், நீ அதை யோசி!
பயணத்தை குறைத்து,
நேரத்தை நமக்குத் தரும் இந்தக் கைபேசி!
பயன் தரும் செய்திகள், பலவற்றை நம்மிடம்
கொண்டு சேர்ப்பது இந்த அலை பேசி!
வேலைக்குச் செல்லும் பெண்களின் கூடவே இருக்கும்
பாதுகாவலன் இந்த அலை பேசி!
தொழில் செய்ய உதவும் தோழன்!
இசையைத் தரும் இனிய கலைஞன்!
குறுஞ்செய்தி கொண்டு செல்லும் அஞ்சல் காரன்!
அழகுக் காட்சிகளை அள்ளித் தரும் அன்பு நண்பன்!
நாணயத்திற்கு இரண்டு பக்கம்!
நல்லது , கெட்டது அனைத்திலும் இருக்கும்!
படிக்கும் வயதில் வேண்டாமே அலை பேசி!
நல்ல புத்தகங்கள் நீ வாசி!
நாளைய உலகம் உயர்வு பெற!
நான் சொன்னதை நீ யோசி!

***** 

வெட்டப்பட்ட மரத்தின்மேல் சாய்ந்திருக்கும் இளைஞனின் வாழ்க்கைப் பாதையை நமக்கு வெட்டவெளிச்சமாக்கும் திருமிகு. சொல்லின் செல்வி, போதிமரமாய் அந்தப் பாதிமரம் அவ்விளைஞனுக்கு ஞானத்தைத் தானம் செய்வதையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை.

மரத்தோடு மடி சாய்ந்த நேரம்
வாராத படிப்பை
வாதாடி முடித்தேன்
வாய்தாக்கள் போல் அரியர் வைத்து
நான்காண்டுகள் ஓடின.

சொல்லாத என் காதல்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென்று
கல்லாத காவியத்தை
கற்றவனாய் ஒப்பித்துவிட்டு
விடைக்காக காத்திருக்கிறேன்
மூன்றாண்டுகள் ஓடின.

பிடிக்காத வேலையில் சேர்ந்து
அடுக்கான பொறுப்புகள் வகித்து
மிடுக்காக வலம் வந்து பார்த்து
பொறுப்பான ஆண் மகனாய் ஆனேன்
இராண்டாண்டுகள் ஓடின.

கடந்து வந்த பள்ளிப்படிப்பையும்
பட்டப்படிப்பையும்
பாலைவன கானல்நீரைப்போல
பாவையவள் காதலையும்
எதிர்கால முன்னேற்றப்பாதையும்
எண்ணிப்பார்த்து பார்த்தே
ஓராண்டும் ஓடின.

இவையனைத்தும் அழகாய் பதிவானது
மட்டுமல்ல
என் கையிலிருக்கும் கைப்பேசியிலும் தான்.

இந்த
வெட்டப்பட்ட மரத்தின்
கிளைப்போல்
என் எத்தனை ஆசைகளை
வெட்டியுள்ளது
தோல்வியெனும் கோடாரி.

ஆனால்
நான் தோள் சாயும்
அன்பு மரமே..
புனிதமிக்க
உன் மீது அமரும் முன்
என்
காலணிகளை அகற்றிவிட்டு விட்டது போல
புத்தன் சொன்ன புத்திமதி போல
ஆசைகளை அகற்றிவிட்டு
புனிதமான
இலட்சியங்களை
எளிதால் அடையலாம் தானே.
தினம் சாயுங்காலம்
நான் சாய மடிதரும்
என் நண்பனே..!
என் மரமே ! ???

*****

வெட்டுண்ட மரம், தான் உயிரோடு இருந்தபோதும் வெட்டப்பட்டு வீழ்ந்தபோதும் பயன்பட்ட விதத்தைப் பாந்தமாய்ச் சொல்வதையும், வெட்டப்படபோகும் மரமோ, ”அழுதாலும் தொழுதாலும் கோடரியால் எனக்கு விளையப்போகும் கேடகற்ற யாருளர்?” என்று அழுதுபுலம்புவதையும் உணர்வுமிகு கவிதையாக்கியுள்ளார் திரு. சி. ஜெயபாரதன்.

சுட்ட மரமும், சுடாத மரமும்

சுடாத மரத்தின் கூக்குரல்
தலைக்கு மேலே கத்தி
தொங்குது !
வெட்டப் போகிறார் !
விலைக்கு வாங்கத்
தரகர் கையில்
நிறைய பணக் கத்தை !
அழுதாலும் பயனில்லை !
தொழுதாலும் பயனில்லை !
பரம்பரை வாரிசு இனிமேல்
பிறந்திடாது !
விதியை வெல்ல
நிதியால் தான் முடியுது !
நாளை எனக்கில்லை !
நரக வாழ்வில்
நம்பிக்கை இல்லை !
நமன் வரும்
தருணமிது எனக்கு !
வாசலில் நிற்கிறான்,
வழிவிடு எனக்கு !
கோடரிக்குத் தலை கொடுக்கவா ?
உடல் அளிக்கவா ?
கடவுளே காப்பாத்து !

++++++++++++

சுட்ட மரத்தின் கூக்குரல் !

வெட்டப் பட்டுக் கீழே
வீழ்ந்து கிடக்கிறேன் பார் !
மட்டப் பலகையாய்
வீடு கட்ட உதவினேன் !
மாட்டு வண்டிச் சக்கரம்
ஆக்க உதவினேன் !
கப்பல் கட்ட, படகு கட்ட
உப்புக் கடலில் மீன் பிடிக்க
உதவினேன் !
கனிகள் காய்க்கும்
மரமானேன் ஒரு காலம் !
இருந்தாலும்
ஆயிரம் பொன் நான் !
இறந்தாலும்
ஆயிரம் பொன் !

*****

மரத்தையும், மரத்தில் சாய்ந்திருக்கும் இளைஞனையும், அவன் கையிலிருக்கும் அலைபேசியையும் முன்னிலைப்படுத்தித் தம் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்து ஆழ்ந்த கருத்துக்களை அளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுபெற்றிருப்பது அடுத்து…

இப்படிக்கு…

அதிர்ஷ்டசாலி நான்..!
‘கை வலிக்கிறது’ என ஒரு போதும்

எனை நீ கீழே இறக்கி விட்டதில்லை

‘தூக்க முடியவில்லை நடந்து வா’ என்ற வார்த்தையை
நான் உன்னிடம் இருந்து கேட்டதில்லை

‘வேலை இருக்கிறது; பின்பு கவனிக்கிறேன்’ என
ஒருநாளும் எனைத் தனியே விட்டுச் சென்றதில்லை

என் அழுகுரல் கேட்டு ஒரு நொடி கூடத் தாமதித்ததில்லை
உடனே ஓடிவந்து கையில் ஏந்திக் கொள்வாய்

நித்தமும் அரவணைப்பு; நீங்காத பந்தம்; நிறைவான பாசம்…

பொறாமைப் படத்தானே செய்வார்கள்- உன்
தாயும் தந்தையும்; மகனும் மகளும்; அன்பான மனைவியும்…

பேசாத எனைப் பேணிக்காக்கிறாய்
பேதையாய் உன் பின் வருபவரைப் பரிதவிக்க வைக்கிறாய்!!

அன்பே… நீ எனை நேசிப்பதைப் போல
அவர்களையும் நேசித்துப் பாரேன்…
அழகாகும் உன் வாழ்க்கை; வரமாகும்; வசந்தம் வீசும்..!

இப்படிக்கு
உன் கைபேசி…

”குடும்பத்தை மறந்து, உறவுகளைத் துறந்து அலைபேசியையே ஆருயிர்க்காதலியாய் எப்போதும் அணைத்திருக்கும் இளைஞனே! பேசாத என்னைப் பேணிக்காக்கும் நீ, பேசும் பொற்சித்திரங்களான உன் குழந்தைகளை மறந்ததேன்? என்னிடம் காட்டும் பாசத்தை அவர்களிடமும் காட்டு; குடும்பத்தை நோக்கியும் உன் நேசக்கரத்தை நீட்டு” எனும் இக்கவிதை இன்றைய இளைஞர்களுக்கான எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கக் காண்கிறேன். காலத்தின் தேவையறிந்து கவிதை பாடியிருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி 137-இன் முடிவுகள்

 1. ////இப்படிக்கு…

  அதிர்ஷ்டசாலி நான்..!
  ‘கை வலிக்கிறது’ என ஒரு போதும்
  எனை நீ கீழே இறக்கி விட்டதில்லை

  ‘தூக்க முடியவில்லை நடந்து வா’ என்ற வார்த்தையை
  நான் உன்னிடம் இருந்து கேட்டதில்லை

  ‘வேலை இருக்கிறது; பின்பு கவனிக்கிறேன்’ என
  ஒருநாளும் எனைத் தனியே விட்டுச் சென்றதில்லை

  என் அழுகுரல் கேட்டு ஒரு நொடி கூடத் தாமதித்ததில்லை
  உடனே ஓடிவந்து கையில் ஏந்திக் கொள்வாய்

  நித்தமும் அரவணைப்பு; நீங்காத பந்தம்; நிறைவான பாசம்…

  பொறாமைப் படத்தானே செய்வார்கள்- உன்
  தாயும் தந்தையும்; மகனும் மகளும்; அன்பான மனைவியும்…

  பேசாத எனைப் பேணிக்காக்கிறாய்
  பேதையாய் உன் பின் வருபவரைப் பரிதவிக்க வைக்கிறாய்!!

  அன்பே… நீ எனை நேசிப்பதைப் போல
  அவர்களையும் நேசித்துப் பாரேன்…
  அழகாகும் உன் வாழ்க்கை; வரமாகும்; வசந்தம் வீசும்..!

  இப்படிக்கு
  உன் கைபேசி…////

  முதன்மை வெகுமதி பெற்ற இந்தக் கவிதைக்கும், போட்ட படத்துக்கும்
  ஏதாவது ஓர் உடன்பாடு, ஒப்புமை, உறவு உள்ளதா ?

  சி. ஜெயபாரதன்

 2. ஜெயபாரதன் ஐயா அவர்களே..
  என் கண்ணுக்கும் சிந்தனைக்கும், மனிதனும் அவன் கைபேசியும் தான் தெரிந்தது. அதை எனக்கு தெரிந்தவாறு கவி வடித்தேன்.. தாங்கள் ஒப்புமை இல்லை என்று கருதினால் இனி உங்கள் கவிதைகளை வாசித்து எழுத கற்றுக் கொள்கிறேன்.
  கருத்துக்கு நன்றி

 3. ஒரு அற்புதமான கவிதை.புதிய சிந்தனை. அலை பேசி ஒரு வேளை நம்மோடு பேசினால், குடும்பத்தை நிச்சயம் கவனிக்க அறிவுறுத்தியிருக்கும்.
  கவிதாயினி சத்தியப்ரியா சூரியநாராயணன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.

 4. மிக்க நன்றி திருமிகு பழ.செல்வமாணிக்கம் ஐயா அவர்களே? தங்களைப் போன்ற சிறந்த கவிஞர்களின் பாராட்டுக்கள் என் எழுத்துக்களுக்கு ஊக்குவிப்பு…

 5. ஜெயபாரதன் ஐயா அவர்களே.. படத்தில் கைபேசி உள்ளதை தாங்கள் கவனிக்க தவறியதேன்?

 6. மதிப்புக்குரிய சத்தியப்ரியா சூரியநாராயணன் அவர்களுக்கு,

  படத்தில் கைபேசி உள்ளது என் வயதான கண்களுக்குத் தெரிய வில்லை. மன்னிக்க வேண்டும்.

  அந்த படத்தில் கல்லும் புல்லும் கூடக் காணலாம். அத்துடன் என் கண்களுக்குப் பளிச்செனத் தெரிந்தது முதலில் வெட்டிய மரமும், பிறகு வெட்டாத மரங்களும். மற்ற சிலரது கண்களுக்கும் வெட்டிய மரம் சட்டெனத் தென்பட்டுள்ளது.

  கூரிய உங்களது கண்களுக்குத் தெரிந்தது என் கண்கள் காணாது போனதால், நான் பரிசை இழந்தேன்.

  நான் இப்படி அடிக்கடிச் சண்டை போடுவேன் நடுவர் மேகலா இராமமூர்த்தியுடன். அவரும் கோபித்துக் கொள்ளார்.

  பாராட்டுகள்.
  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.