இந்த வார வல்லமையாளர் விருது!

தெரிவு: முனைவர் நா. கணேசன்

 

   இயல் விருது கனடா எம்பி இராதிகாவிடம் பெறுதல்

இந்த வார வல்லமையாளராக  சூழலியலாளர் சு. தியடோர் பாஸ்கரனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவின் இன்றைய மாபெரும் பிரச்சினை, இயற்கை அழிவு தான். பல உயிரினங்கள் உலகிலே எங்கும் இல்லாதவை: கடலுயிரிகள், மீன்கள், பூச்சிகள், புழுக்கள், விலங்குகள், பறவைகள், வனவிலங்குகள், 10,000 ஆண்டுகளாக வேளாண்மையில் உருவாக்கிய நாட்டு மாடுகள், எருமைகள், கோழிகள், நாட்டு நாய்கள், … மரங்கள், தாவரங்கள், செடிகள், கொடிகள் எனப் பல இனங்கள் காணாமல் போகின்றன. மணல், கிரானைட், தாதுமணல், … அள்ளப்படுகின்றன. அரசியல் கட்சிகள் இயற்கைப் பாதுகாப்பு, காட்டு வளங்கள், எல்லைகளை ஊடுருவாமல் காத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் இல்லை.

இந்த வாரம் 10-ஆம் தேதி அன்று, “கையிலிருக்கும் பூமி – இயற்கை சார்ந்த கட்டுரைகள்” என்னும் பாஸ்கரனின் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா, பண்டைய கலைவரலாறு, இயற்கைச் சூழலியல், கானுயிரிகள், நாட்டுநாய்கள், .. என்ற துறைகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதிவருபவர். பல ஆண்டுகளாக என் ஆய்வுகளைப் படித்துப் பாராட்டுபவர் திரு. பாஸ்கரன். காந்திஜியின் நண்பர் கோவை அய்யாமுத்து திருப்பூரில் 1000 ராட்டைகள் சுழன்று கதர் இயக்கம் வளர்வதைப் படமாக்கியவர். அந்த அரிய பதிவு, மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கைவரலாற்று ஆவணப்படத்தில் பயன்பட்டதைச் சொல்லியுள்ளார். கேழையாடு, அழுங்கு/அணுங்கு என்னும் எறும்புதின்னி போன்றவற்றின் செய்திகளை விவரித்துள்ளார். பரதநாட்டியத்தை குஜராத்தில் பரப்பிய மிருணாளினி சாராபாய் – விக்ரம் சாராபாய் என்னும் விஞ்ஞானியின் மனைவியார் இந்தத் தமிழ்ப் பெண்மணி – பற்றி இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். முதல் நடராஜர் வடிவம், பல்லவர்களின் சீயமங்கலம் குகையில் இருப்பதை விளக்கி தமிழ் இந்துவில் எழுதினார். ஆங்கிலத்தில் மட்டுமே பேசப்பட்டுவந்த பல செய்திகளை நல்ல தமிழில் எழுதுபவர். பார்ப்போலாவைப் பேட்டி கண்டு ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் வெளியிட்டார். மிச்சிகன் பல்கலை வரலாற்றுப் பேராசிரியர் தாமஸ் ட்ரௌட்மன்   திராவிட மொழிக்குடும்பம் என்னும் கோட்பாடு கண்டறிந்த வரலாற்றை நூலாக ஆய்ந்தபோது பல்லாற்றானும் உதவினார். அவரது சகோதரர், முனைவர் சு. கி. ஜெயகரன் குமரிக்கண்டம் என்னும் புராண ஆக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளார் (காலச்சுவடு பதிப்பகம்).

சீவக சிந்தாமணி காப்பியம் கம்பனுக்கு முன்னோடி. அக் காப்பியம் உருவான நகரம் தாராபுரம். பெருவஞ்சி என்று அழைக்கப்பட்ட தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் (78) சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுலைப்பட்டம் பெற்றார்.  இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India)  அறங்காவலராக இருந்தார். தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார்காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தால் 1996இல் வெளியிடப்பட்ட்து. சென்ற ஆண்டு பெங்குயின் பதிப்பகம்  இவரை தொகுப்பாசிரியராக்க் கொண்டு The Sprint of the Blackbuck  நூலை வெளியிட்ட்து.

உயிர்மை பதிப்பகம் இவரது மூன்று நூல்களானஇன்னும் பிறக்கத தலைமுறைக்காக (2006)’, தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)  இவற்றைப் பதிப்பித்தது.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலைகானுறை வேங்கை  ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார்.    உயிர்மை, பசுமை விகடன் பத்திரிக்கைகளில் இவரது பத்தி வெளியாகின்றது. ஹிந்து நாளிதழிலும் ஃப்ரண்ட்லைன் இதழிலும் காட்டுயிர் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார்.  1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A)  தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக கருதப்படுகின்றது.  பற்றிய  The Eye of the Serpent என்ற  இவரது நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை  1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு  பாம்பின் கண்  2012இல் வெளிவந்தது.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (287)

  1. தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள். நெடு நாளைய நண்பர் என்ற
    உரிமை வேறு இருக்கிறது. என் மகன் அவருடைய சிஷ்யபிள்ளை. அண்மையில் ரோஜா முத்தையாவில் சந்தித்து பழங்கதைகள் பேசிக்கொண்டோம். அவருடைய சாதனைகள் பல.
    ஶ்ரீ.ஸெளந்தரராஜன் எனப்ப்டும் இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *