பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சுந்தரம் செந்தில்நாதன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 187

 1. எம் வணக்கம்

  காலை நேர விடியலிலே
  கதிரவனுக்கு எம் வணக்கம்
  தங்கச் சேலை உடுத்திய
  தாயவளின் அலை மடியில்
  பயணித்து அனுதினமும்
  பல பொருள் ஈட்டுகிறோம்
  முங்கி குளித்து
  முத்து எடுப்போரும் யாம்
  மீன் பிடித்து கரைக்கு
  மீண்ட பின் விற்போரும் யாம்
  உணவு ருசிக்க உலகிற்கு
  உப்பு அளிப்போரும் யாம்
  இத்தனையும் கொடுத்து
  இனிதே வாழ்விக்கும்
  ஆழி அன்னைக்கும் எங்களின்
  அன்பான வணக்கம்
  வாழ்த்தி எம்மை
  வாழ்விப்பீர் இருவரும்

 2. சாதனை செய்வீர்…

  ஆதவன் உதிக்கும் நேரம்
  அழகிய காலை நேரம்,
  வேதனை மறையும் நேரம்
  வெற்றியைத் தொடங்கும் நேரம்,
  சோதனை செய்திடும் கதிரவன்
  சொக்கத் தங்கமாய்க் கடலும்,
  சாதனை செய்வீர் இன்றே
  சாயும் கதிரின் முன்னே…!

  செண்பக ஜெகதீசன்…

 3. சென்றவர் மீள்வரோ!

  ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தங்கள்
  அப்பாவை, அண்ணாவைத் தம்பிமாரை
  மீளவும் தாம் காண்போமா அல்லதன்னார்
  தாழமுக்க வலயத்துள் நுழைந்திட்டாரா?

  வீசிய சூறாவளியில் சிக்கினாரா?
  விதி முடிந்து கடலுக்குப் பலியானாரா?
  ஆசையிலே பெருமீனைப் பிடிக்கச் சென்று
  அதன் வாய்க்கு இரையாக வீழ்ந்திட்டாரா?

  எல்லையிலே அயல் நாட்டுப் படைகள் நின்று
  எதிர்படுவோர்க் கின்னல்தரும் இயல்புக் கஞ்சி
  தொல்லைக்குள் ளாகாமற் தூர ஓடி
  துறை தெரியாதாழ் கடலிற் தொலைந்திட்டாரா?

  கொதியறிந்து வலை வீசக் கொஞ்சந் தூரம்
  கோடறியா தெல்லைதனைத் தாண்டிச் செல்ல
  கொலை வெறியில் எதிர்ப் படைஞர் தாக்கினாரா?
  கொடுமையினாற் தமர் உயிரைப் போக்கினாரா?

  என்று மனங்கவன்றபடி அடி வானத்தை
  ஏக்கமுடன் பார்க்கின்றார் கரையில் நின்று
  ஒன்றுமிலை கடல் விழிம்பில் உற்றுப்பார்க்க
  உருளையென மிதப்பதெது படகா வென்று

  ஏது மறியாராகத் தவித்து நின்று
  எதிரில் வரும் படகுகளின் வரவு காண
  கடல் விழிம்பிற் செங்கதிரோன் வரவுக்காகக்
  கையுயர்த்திக் காத்திருக்கும் இளையோர் கூட்டம்.

  தமர் – தம்மவர் – உறவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.