மு. பூங்கொடி

முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழ் உயராய்வு மையம்

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

திருநெல்வேலி – 627008

——————————————————————-

     ”சோதிடம்” என்பதற்குச் “சோதிட சாத்திரம்”, “நன்னிமித்தம்”, “சாத்திரங்களில் ஒன்று”, என்று தமிழ் அகராதிப் பொருள் தருகின்றது1. கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்து ஒருவரது வாழ்க்கையில் தக்க பலாபலன்களைக் கணிக்கும் சாத்திரம் சோதிட சாத்திரமாகும். இதைக் கணித்துக் கூறும் நிபுணர் “சோதிடர்” எனப்படுகிறார். இவைகளேயன்றி எண் சோதிடம், கைரேகை சாத்திரம் என்பவையும் இதில் அடங்கும். மற்றும் பெயர் ராசி பார்த்தல், பூ வைத்துப் பார்த்தல் முதலியவற்றையும் சோதிடத்தின் கூறுகளாகக் கருதலாம். ”கோசாரம்” என்பதும் இதில் அடங்கும். இது வேத சாத்திரங்களின் ஒரு பகுதியே ஆகும். ஒருவரின் பிறப்பு நிலை, முற்பிறவி, வருங்காலம், மறு பிறவி பற்றியும் சோதிடத்தில் தெரிவிக்கப்படும். இத்தகைய சோதிடக்கலை குறித்தப் பல செய்திகளைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைப்பதைக் காணலாம். இதனால் பழந்தமிழர் சோதிடக் கலையில் சிறந்து விளங்கினர் என்பதையும் அறியலாம். இக்கட்டுரை பண்டைத் தமிழ்க் காப்பியமான பெருங்கதையில் சோதிடக்கலை குறித்து ஆராய்கிறது.

 

பெருங்கணிகன்:

     சோதிடர்கள் பெருங்கணிகன் என்று இலக்கியங்களில் அழைக்கப்பட்டனர். சோதிடர்களுக்கு அக்காலத்தில் சமுதாய மதிப்பு மிக்கிருந்ததை இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம். சிலம்பில்,

“ஆசான் பெருங்கணி அறந்திறல் அமைச்சர்

தானைத் தலைவர் தம்மொடு குழீஇ

மன்னர் மன்னன் வாழ்க என்றேத்தி

முன்னிய திசையின் முறைமொழி கேட்ப”2

என்ற பாடலடியின் மூலம் அரசவையில் மன்னர்களைச் சுற்றி ஆசிரியன், சோதிடன், அமைச்சன், படைத்தலைவன், போன்றோர் இருந்தனர் என்றும் இவர்களின் ஆலோசனைப்படியே அரசன் இயங்குவான் என்றும் அத்தகையோருள் “பெருங்கணி” என்று குறிக்கப்பட்டச் சோதிடரும் ஒருவராவர் என்றும் அறிய முடிகிறது.

     மக்களைக் கணிக்கும் சோதிடர்களுக்குக் கணி அல்லது கணிப்போன் என்றும்,  அரசவைச் சோதிடர்களுக்குப் பெருங்கணிகன் என்ற பெயரும் இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இதற்குச் சான்றாகப் பெருங்கதையில்

“தம்மிற் பெற்ற தவம்புரி தருக்கத்

தரும்பரி சாரத்துப் பெருங்கணி வகுத்த” (இ.கா.2:23–24)

என்ற அடியினைச் சான்றாகக் கூறலாம். இவ்வடியில் “பெருங்கணி” என்ற சொல்லிற்கு “அரசனுக்குரியக் கணியைப் பெருங்கணி” என்பர்3 என்று பெருங்கதை குறிப்புரை ஆசிரியர் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் கணிப்பு:

பெருங்கதையின் உஞ்சைக்கண்டத்தில் சேடக முனிவரின் மகளான மிருகாபதிக்கு ஆலங்காடு என்னும் காட்டில் ஆண் குழந்தை ஒன்று பிறக்கின்றது. இதனைக் கண்டச் சேடக முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். மேலும் அம்மகவு தோன்றிய நாளினை ஆராய்ந்து சாதகம் எழுதினர் என்று பெருங்கதை குறிப்பிடுகின்றது, இதனை

“ஆதிரா ஞாலத் தரசுவீற் றிருந்த

கணித வுரைக் கெல்லாங் காரண னாதலிற்

புதையிரு ளகற்றும் பொங்கொளி மண்டிலம்

உதயண னாகெனப் பெயர்முதற் கொளீஇ” (உ.கா.11:79–83)

இப்பாடல் வரிகள் மூலம் சூரிய உதயத்தில் பிறந்தமையினால் அவன் உதயணன் என்னும் பெயர் பெறுவதற்கு உரியவனென்று நாமகரணம் (பெயர் சூட்டுதல்) செய்தது மட்டுமின்றி அவனுடைய வரலாறு அநேகருடைய வரலாறுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் கூறுவதாகக் கொங்குவேளிர் உஞ்சைக் காண்டச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் நம்பி பிறந்தான் என்ற செய்தி தெரிந்ததும் உதயணனின் தோழர்களும், நகர மாந்தர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர்ப் பெருங்கணிகள் ஒன்று கூடி நம்பிக்குச் ”சாதகர்மம்”4 (பிறந்த போது செய்யும் ஒரு சடங்கு) செய்தனர்.

”பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்

சிறந்த நற்கோ ளுயர்ந்துழி நின்று

வீக்கஞ் சான்ற வாருயி ரோகையும்

நோக்கி யவரு நுகருஞ் செல்வத்

தியாண்டுந் திங்களுங் காண்டகு சிறப்பிற்

பக்கமுங் கோளு முட்கோ ளறைஇ

இழிவு மிவையென விசைய நாடி

வழியோ ரறிய வழுவுத லின்றிச்

சாதகப் பட்டிகை சாலவை நாப்பண்

அரும்பொறி நெறியி னாற்ற வமைத்த” (ந.கா.5:73–82)

மேற்கண்ட பாடல் வரிகள் மூலம் சாதகம் நன்குக் கணித்து வரைந்த சாதகப் பட்டிகையினை (சாதகம் எழுதிய பத்திரிக்கை) இலச்சினையிட்டு (மூடி முத்திரையிட்டு) மன்னனிடம் வழங்கியதாகவும், அச்சாதகமானது மரபு பிறழாமல் எழுதப்பட்டது என்பதனையும் அறிய முடிகிறது.

திருமணநாள் கணிப்பு:

     உதயணன் வாசவதத்தைத் திருமணத்திற்கான நல்ல நாளினைச் சோதிடர் குறித்துத் தருகின்றார். அதனை முரசு கொட்டும் வள்ளுவன் யானை மீது அமர்ந்து முரசறைந்து நகர மக்களுக்கு அறிவிக்கின்றான். இதனை

”வாசவதத் தையொடு வதுவைக் கூடிக்

கோல நீள்மதிற் கொடிக்கோ சம்பி

மாலை மன்னவன் மண்மகன் ஆகும்

காலை இதுவெனக் கதிர்மணிக் கடிப்பில்” (இ.கா.2:49–52)

என்ற இலாவாண காண்டத்தின் கடிக்கம்பலை என்னும் காதையின் பாடலடிகள் சுட்டிக்காட்டுகின்றன.

     உதயணனுக்கும், பதுமாபதிக்கும் திருமணம் நடைபெறுவதற்காக நாள் குறித்ததனைக் கோள்களின் வழி மூலம் ஆராய்ந்து உறுதி செய்யும் மரபு இருந்ததாகப் பெருங்கதையில் மகத காண்டத்தில் “பதுமாபதி வதுவை” என்னும் காதையின் பாடல் வரிகள் மூலம் நாம் அறிய முடிகிறது.

“தோழ ரெல்லாந் தோழிச்சி யாகத்

தாழ்வ ளாமெனத் தாழாது வலிப்ப

நன்னெறி யறியுநர் நாடறிந் துரைப்ப” (ம.கா.22:39–41)

வேள்விக்கு நேரம் குறித்தல்:

உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் திருமணம் முடிந்தவுடன் உயிர் ஒன்று என்னும் உரிமையைத் தருகின்ற திருமண வேள்வி நடத்துதற்கேற்ற அந்தணர்களுக்குரிய நேரத்தினைப் பெருங்கணிகன் மூலம் நாள்கோள் முதலியவற்றை விழிப்புடன் ஆராய்ந்து குறிக்கப்பட்டு மக்களுக்கு வள்ளுவன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதனை

”இடிஉறழ் முரசின் ஏயர்பெரு மகற்கும்

பிடிமகிழ் யானைப் பிரச்சோதனன் மகன்

வடிமலர்த் தடக்கை வாசவதத் தைக்கும்

ஓருயிர்க் கிழமை ஓரை அளக்கும்

பேரிய லாளர்” (இ.கா.3:2–6)

எனும் பாடல் வரிகள் மூலம் பொழுதறிந்து (வேள்வி நடத்துதற்கேற்ற காலத்தினை) கூறியதாகக் கொங்குவேளிர் குறிப்பிடுகின்றார்

சோதிட நூல்கள்:

தமிழில் சோதிட நூல்கள் வீமேசுரி உள்ளமுடையான், குமாரசுவாமியம், சாதகாலங்காரம், சாதக சிந்தாமணி, செகராஜசேகரம், சந்தான தீபிகை, கார்த்திகேயம், அம்மனீயம் போன்ற நூல்களேயன்றிப் பல தற்கால சோதிட நூல்களும், சோதிட இதழ்களும் உள்ளன. அகத்தியர் நாடி சோதிடம் போன்ற நூல்களும் உள்ளன5.

 முடிவுரை:

 • சோதிடம் தொடர்பான பல செய்திகள் பெருங்கதையில் மிகுதியாகப் பதிவாகியுள்ளன.
 • சோதிடர்களுக்குச் சமுதாயத்திலிருந்த மதிப்பினைப் பெருங்கதைப் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
 • அரசவைச் சோதிடர் பெருங்கணிகன் எனப்பட்டார்.
 • தமிழர்கள் குழந்தை பிறந்த நாளைச் சாதகமாகக் கணித்து எழுதினர் என்பதைப் பெருங்கதை எடுத்துரைக்கிறது.
 • ஆண்டு, திங்கள், பக்கம், கோள் ஆகியவற்றின் துணை கொண்டு சாதகம் எழுதி அதற்குச் ”சாதகப் பட்டிகை” என்று பெயர் வைத்த பெருமையும் பெருங்கதைக்கே உரியதாகும்.

——————————————–

அடிக்குறிப்புகள்:

 1. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி ப. 726
 2. சிலம்பு, நடுகற்காதை
 3. உ. வே. சா.,பெருங்கதை, இ.கா. பக்கம்.6
 4. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி ப. 617
 5. சி. நா. கிருஸ்ணமாச்சாரியார், உலகை வளர்த்த ஆய கலைகள் : 64, ப. 88

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பெருங்கதையில் சோதிடக்கலை

 1. சிறப்பான நுண்ணிய கண்ணோட்டம் – அரிய தகவலைகள்…பாராட்டுக்கள்

 2. சோதிடமெனும் நிமித்தக் கலையில் சாதகம் எனும் கோள் நிலை ஆய்தல், உள்ளங்கை ரேகை ஆய்தல், உள்ளங்கால் படிவம் ஆய்தல், எண்நிமித்தம் , பெயர்நிமித்தம், பிரசன்ன நிமித்தம், பறவைச் சோதிடம், உடல் இலக்கணம் , பெருவிரல் ரேகைக் கொண்ட நாடி ஓலைகள் நிமித்தம் என்று பலப் பிரிவுகள் உண்டு.
  அந்தக் கலையின் வல்லுநராவதற்கும் சிலத் தகுதிகளும் நியமங்களும் முக்கியமாகப் பெரியோர்களின் ஆசான்களின் தெய்வங்களின் அருள் வேண்டும். இதில் விந்தையும் வியப்பும் என்ன வென்றால் ஒரு உண்மை நிகழ்வினை மேற்கூரிய எல்லா வழிகளிலும் ஆய்ந்தாலும் எல்லாமே உறுதி படுத்தும்!. நவீன விஞ்ஞானம் இப்பொழுது தான் இதற்குள் ஆய்விட முற்பட்டிருக்கிறது. நமது பாரதம் இதன் மூல ஆதாரம் என்றாலும் கிரேக்கர், ரோமானியர்,சீனர், சப்பானியர் இதில்
  விதவிதமான வழிமுறைகள் பின்பற்றுகின்றனர். இக்கலை பிரபஞ்ச‌ ரகசியத்தையும் பிறப்பு இரகசியத்தையும் அறியப் பயன்படுவதால் நியமம் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *