பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பு உருவாக்கம் – பரவல் – பதிப்பரசியல்

1

முனைவர் ப.திருஞானசம்பந்தம்

முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழியற் புலம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21

            பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே நிறுவனம், திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஆகியன தனிநபர் சார்ந்து, பதிப்புக்குழுவை உருவாக்கிப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வெளியிட்டன. இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் பாட நூல்கள் சார்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இவை பெரிதும் வணிக நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டிருந்தன. மேலும் எளிமைப்படுத்துதல் என்ற தன்மையில் சுருக்கமான உரைகளைக் கொண்ட பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வெளிவரக் கூடிய கீழ்க்கணக்குப் பதிப்புகள் குறித்துத் தனியொரு சூழலில் விவாதிக்க வாய்ப்புண்டு. இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே, கழகம் ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்புச் செயல்பாடுகள், பதினெண்கீழ்க்கணக்கின் தொகுப்பு முறைகள், பதினெட்டு நூல்களின் எண்ணிக்கை குறித்த வரையறைகள் மட்டும் இங்குக் கவனப்படுத்தப்படுகின்றன.

            இரங்கசாமி நாயக்கர் 1870இல் சென்னைத் துறைமுகம் அருகே உள்ள கந்தகோட்டத்தில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினார். இது 1920இல் பி.இரத்தின நாயக்கர் ஸன்ஸ் பதிப்பகமாக உயர்வு பெற்றது. இப்பதிப்பகத்தின் மூலம் ஆத்திசூடி, சித்தர் ஞானக்கோவை, தனிப்பாடற்றிரட்டுகள், சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டன. 1838ஆம் ஆண்டு திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், திருக்குறளின் பரிமேலழகர் உரையைத் தழுவி, பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் எழுதிப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பினைக் களத்தூர் வேதகிரி முதலியார் மீள்பதிப்பாகப் பி.இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டதாக ஒரு குறிப்பு கிடைக்கின்றது. புத்தகங்களில் இடம்பெற்றிருந்த சிறிய எழுத்துகள் வாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் எழுத்துக்கள் பெரியதாக இடம்பெறும் வகையில், பெரிய எழுத்து கருட புராணம் பெரிய எழுத்து மகாபாரதம் என்று அட்டைகளில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிட்டனர். இதனைப் பிற பதிப்பகங்களும் பின்பற்றியுள்ளன. மேலும் கர்ண மோட்சம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகப் பிரிதிகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1934இல் இரத்தின நாயகர் ஸன்ஸ் நிறுவனம் திருமகள் விலாச அச்சியந்திரசாலையின் மூலம் நாலடியார் மூலத்தையும் களத்தூர் வேதகிரி முதலியார் இயற்றிய உரையையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இந்நூலின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடல்,  பன்னிரு பாட்டியல் கூறும் கீழ்க்கணக்கு என்பதற்கான விளக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ(டு) ஏலாதி யென்பவே

கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு.

இப்பாடலின் பின்னிரண்டு அடிகள், முந்தைய பதிப்பாசிரியர்கள் கொண்ட அடிகளில் இருந்து மாறுபட்டுள்ளன. ஆனால் பொருண்மை கொள்ளல் முறையில் மாற்றமில்லை. பதினெட்டு நூல்களின் பெயர்களை வேதகிரி முதலியார் தமது நாலடியார் பதிப்பில் தந்ததோடு, அவற்றுள் ஒன்றாகக் கைந்நிலையினைக் குறிப்பிடுகின்றார். இன்னிலையினைக் குறிப்பிடவில்லை.

பதினெண் கீழ்க்கணக்கின் நூல்களாவன:-

 1. நாலடியார் 9. திணைமொழி ஐம்பது
 2. நாண்மணிக்கடிகை 10. திணைமாலை நூற்றைம்பது

                        நால் நாற்பது                         11. முப்பால்

 1. இனியவை நாற்பது 12. திரிகடுகம்
 2. இன்னா நாற்பது 13. கோவை ‘ஆசாரக்கோவை’
 3. கார்நாற்பது 14. பழமொழி
 4. களவழி நாற்பறது 15. மாமூலம் ‘சிறுபஞ்சமூலம்’

            நால் ஐந்திணை    16. காஞ்சி ஷமுதுமொழிக்காஞ்சி|

 1. ஐந்திணை ஐம்பது 17. ஏலாதி
 2. ஐந்திணை எழுபது 18. கைந்நிலை என்பன.

 (களத்தூர் வேதகிரி முதலியார்: 1934 : 4).

கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடலில் உள்ள கோவை, முப்பால் ஐந்தொகை என்ற தொடர்களுக்குரிய பொருள் கொள்ளல் முறையைக் குறித்தும் வேதகிரி முதலியார் தெளிவாக விளக்கியுள்ளார். கோவை, காஞ்சி என்பதற்குப் பொருள் – திருக்கோவையார், மதுரைக்காஞ்சி. முப்பாலுக்குத் திருக்குறள் அல்லாது வேறு நூல். ஐந்திணை என்பதற்கு ஐந்தொகை எனப் பாடங்கொண்டு வேறு ஐந்து நூல்கள் என இவர் காலத்து வழக்கிலிருந்த தொகை முடிபுகளை வேதகிரி முதலியார் மறுத்துரைக்கின்றார்.

            வேதகிரி முதலியாருக்குக் கீழ்க்கணக்கைச் சார்ந்து கைந்நிலை என்ற தெளிவான கருத்திருந்ததை மேற்கண்ட கூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது.

            மர்ரே ராஜம் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ஏல நிறுவனத்தில் கணக்களாராகப் பணியாற்றினார். பின்னர் அந்நிறுவனத்தை ஏற்று நடத்தினார். ஏலத் தொழிலின் மூலம் பல்வேறு அறச்செயல்களைச் செய்து வந்த இவருக்குச் ச.வையாபுரிப்பிள்ளையோடு 1940இல் தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு அறச்செயல்களைச் செய்வதுபோல் நூல்களை அச்சிட்டு வழங்குவதும் அறக்கொடை எனச் ச.வையாபுரிப்பிள்ளை ராஜத்திடம் கூறுகின்றார். தமிழ்மொழி மீது ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பொறுப்பைச் ச.வையாபுரிப்பிள்ளை அவர்களிடமே கொடுக்கின்றார். இதன்மூலம் தமிழ் இலக்கியங்கள் பல சந்தி பிரித்து எளிமையாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அச்சிட்டு வெளியிடப்பட்டன. திவ்ய பிரபந்தம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்கணக்கு, வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்த பதிப்பாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூற் பதிப்பு முயற்சி குறித்தும், பதினெட்டு நூல்கள் எவை என்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

            செவ்விலக்கிய நூல்களையும் பிற நூல்களையும் தனித்தனி நூல்களாக வெளியிட்ட மர்ரே நிறுவனம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை ஒரே தொகுதியாகப் பதிப்பித்தது. இப்பதிப்புப் பணியில் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, வி.மு.சுப்பிரமணியம், மு.சண்முகம் மூவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பை உருவாக்கினர். இப்பதிப்பிற்குரிய ஆலோசனைகளைப் பெ.நா.அப்புஸ்வாமி, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வேங்கடராஜுலு ரெட்டியார். கி.வா.ஜாகநாதன், அ.ச.ஞானசம்பந்தன், சா.கணேசன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பதிப்பின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு என்ற சொல்லுக்கான விளக்கம், பதினெட்டு நூல்கள் குறித்த விவாதங்கள், பதினெட்டு நூல்களிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை, ஆழ்வார் திருநகரியின் ஏட்டுப் பிரதிக் குறிப்பு, பதினெட்டு நூல்களின் காலம், பதினெட்டு நூல்களின் பொருண்மை அடிப்படையிலான பகுப்பு மற்றும் விளக்கம் உள்ளிட்ட பல செய்திகளை விரிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. பதினெட்டு நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையையே மர்ரே பதிப்பு கொண்டுள்ளது. இதற்குக் காரணம் மர்ரே பதிப்பு முயற்சியில் முன்னோடி நிலையில் செயல்பட்டவர் ச.வையாபுரிப்பிள்ளை. இப்பின்புலத்திலேயே மர்ரே பதிப்பு கைந்நிலையைப் பதினெண்கீழ்க்கணக்கின் ஒன்றாகச் சேர்த்து, இன்னிலையைச் சேர்க்கவில்லை.

            பதினெண்கீழ்க்கணக்கின் பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்க உதவி மூவருள் ஒருவரான மு.சண்முகம் பிள்ளை பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பதவுரை எழுதிய வெளியிடும்போது இன்னிலையைச் சேர்த்து வெளியிட்டுள்ளார். இது இங்குக் கவனத்திற் கொள்ளத்தக்கது

            இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழின் பல்வேறு பொருண்மை சார்ந்த நூல்களை உரைகளோடு வெளியிட்டது. அவற்றுள் பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பும் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.பாலசுந்தனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர் உள்ளிட்ட அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். அவ்வுரைகளின் முன்னுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். இதில் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்பது குறித்த விரிவாய் விவாதித்துள்ளனர். அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

 • இன்னிலையை ஏற்பவர்கள் – ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.சு.பாலசுந்தரனார் (இளவழகனார்)
 • கைந்நிலையை ஏற்பவர் – சி.புன்னைவனநாத முதலியார்
 • இன்னிலை, கைந்நிலை இரண்டையும் குறிப்பிட்டு இதில் எதை ஏற்பது என்ற தெளிவில்லாதவர் – சங்குப் புலவர்
 • திணைமாலை – மணி.திருநாவுக்கரசு

            பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த பதினெட்டு நூல்கள் எவையெவை என்பது குறித்த தெளிவு கிடைத்த பிறகும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெளிவந்த கழகப் பதிப்புகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தின. திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்வழி வெளிவந்துள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூற்பதிப்புகளில் ஒன்றாக இன்னிலை தொகுக்கப்படவில்லை (பக்.345). இக்குறிப்பை நெ.சுப்பையா பிள்ளை ‘பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்| என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்காலங்களில் வெளிவந்த பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகளில் இன்னிலை, கைந்நிலை இரண்டும் சேர்த்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. கழகப் பதிப்புகளை உருவாக்கிய பதிப்பாசிரியர்கள் சிலர், தொடக்ககால பதிப்பாசிரியர்கள் முன்னெடுத்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்துள்ளனர். இதன்மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த சில குழப்பமான முடிவுகளைத் தங்களது பதிப்புகளில் முன்வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பு.சி.புன்னைவனநாத முதலியார், வா.மகாதேவ முதலியார், அ.நடராசப் பிள்ளை ஆகியோர்.

            ந.மு.வேங்கடசாமி நாட்டார் கீழ்க்கணக்கின் கார்நாற்பது (1925), களவழி நாற்பது (1924, 1935), இன்னா நாற்பது (1935), இனியவை நாற்பது (1936) என்னும் நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவற்றை ‘நானாற்பது மூலமும் உரையும் என்று ஒரே தொகுப்பாக்கி கழகம் வெளியிட்டுள்ளது. இவற்றின் முகவுரைகளில் பதினெட்டு நூல்களுள் ஒன்றாக இவர் இன்னிலையினைச் சுட்டுகின்றார். கைந்நிலையினை ஏற்கவில்லை. ஆனால் இவர் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் குறிப்பிடும் பழம்பெரும் வெண்பாவைக் காட்டி அதற்குக் கீழ் நால், ஐந்திணை, என்ற தொடரின் அடிப்படையில் எழுந்த விவாதங்களையும் சேர்த்து பதிவு செய்கின்றார்.

            நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்களுக்குத் தி.பாலசுந்தரனார் இயற்றிய உரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இதில் நான்மணிக்கடிகையின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாவன எவை என்று கூறும்போது இவர் இன்னிலையினைச் சேர்த்து குறிப்பிட்டுள்ளார். கைந்நிலையினைக் குறிப்பிடவில்லை (தி.சு.பாலசுந்தரம்: 2007: iii). பிற நூல்களின் பதிப்புரையில் அந்நூல்கள் குறித்த செய்திகளை மட்டுமே சுட்டியிருக்கின்றார். பாலசுந்தரனார் கீழ்க்கணக்கு நூல்களுக்கு  உரை எழுதிய காலத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இன்னிலை பதிப்பு பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இக்காரணத்தினால் இன்னிலையை இவர் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் குறித்திருக்க வேண்டும்.

            திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஐந்திணையைம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது முதலிய நூல்களுக்குச் சி.புன்னைவனநாத முதலியார் இயற்றிய விருத்தியுரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது குறித்த தமது கருத்துகளைச் சி.புன்னைவனநாத முதலியார் முன்வைத்துள்ளார். குறிப்பாகத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஐந்திணையைம்பது ஆகிய நூல்களின் முகவுரைகளில் கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னிலையினை இவர் குறிப்பிடவில்லை. பிற நூற்பதிப்புகளின் முகவுரையில் இவ்வெண்ணிக்கைப் பற்றிய கருத்து எதையும் கூறாமல் அந்நூற்களின் அமைப்பு, பாடல்களின் சிறப்பு ஆகியவற்றை மட்டுமே விளக்கிச் சென்றுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும்போது கைந்நிலையினைக் குறிப்பிட்டாலும், கழக உரையாசிரியர்களில் மற்றவர்களுக்கு இருந்த கருத்துத் தெளிவு சி.புன்னைவனநாத முதலியாருக்கும் இல்லை. (2007: xvv). இக்கருத்தையே சிறுபஞ்சமூலத்தின் நூன்முகத்திலும் (2007:v) இவர் குறிப்பிட்டுள்ளார்.

            கழகத்தார் இன்னிலை, கைந்நிலை இரு நூல்களுக்கும் சங்குப்புலவரை உரையெழுதச் சொல்லி இரு நூல்களையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர். அவற்றின் பதிப்புரையில் இவற்றில் எதை நீக்கி எதைக் கொள்ளுவது என்ற மயக்கம் கழகத்திற்கு ஏற்பட்டதாகச் சங்குப்புலவர் குறிப்பிடுகின்றார். ‘‘பதினேழு நூல்களைக் காண்பீர்கள்: பதினெட்டாவது நூல் இன்னது எனத் துணிவின்றிப் புலவருலகம் மயங்குகிறது. ‘நாலடி நான்மணி’ என்ற வெண்பாவின் பாடவேறுபாடு இம்மயக்கத்திற்குக் காரணமாம். இதனை இந்நூலின் முன்னுரையிற் காண்க. துணிவாக ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் உரையெழுதி வெளியிடக் கருதிக் காலந் தாழ்த்திருந்தும் பயனின்றாய் முடிந்தது. இன்னிலையும், கைந்நிலையும், பதினெட்டாம் நூல் எனப் புலவருலகம் எண்ண ஏட்டிலிருந்து கொண்டுவந்து காட்டிப் பதித்து வெளியிட்டனர் இருசான்றோர். எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என மயங்கி நிற்கும் காலம் இது” (இன்னிலை – கைந்நிலை, பதிப்புரை, ப.3). அடுத்து ‘கைந்நிலை வரலாறு’ என்ற தலைப்பில் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை பதிப்பு முயற்சிகள், கிடைக்கும் கைந்நிலை ஏட்டுச் சுவடியில் உள்ள பாடல்களின் சிதைவு நிலை, ரா.இராகவையங்காரின் ஆலோசனை மற்றும் அவரிடம் இருந்து பெற்ற கைந்நிலை ஏட்டுச் சுவடியினை ஒப்புநோக்கிப் பதிப்பித்த இ.வை.அனந்தராமையாரின் கருத்து விளக்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைந்நிலையின் பாடல்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராச நம்பி ஆகிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமையினை எடுத்துக்காட்டி கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்று நிறுவ முயல்கின்றார். ஆனால் இறுதியாக இன்னிலை, கைந்நிலை இரு நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற தெளிவினைச் சங்குப்புலவர் கூறவில்லை. மாறாக இதைத் தமிழ்ப்புலவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கின்றார்.

“இன்னிலை, கைந்நிலை என்ற இரு நூல்களிற் பதினெண்கீழ்க்கணக்கின் இறுதியாக நிற்கத்தக்க நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இனித் தமிழ் மொழிப் புலவர் கடமையாம்; இவ்விரு நூல்களுக்கும் விளக்கவுரை வரைவித்து அச்சிற்பதித்து வெளியிடுவது நம் கடமையாம் எனக் கழகத்தார் கருதினர். இவ்விரு நூல்களுக்கும் உரையெழுதும் கடமை எனக்குரிய தாயிற்று. கழகப் பணியாளர்களில் ஒருவனாதலின் மறுத்தற்கு வழியின்றி ஏற்று என் சிற்றறிவிற் கெட்டியவாறு உரை வரைந்து தந்தேன்”(சங்குப் புலவர், 2007: 9, 10).

கழகத்தாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு நூல்களுக்கும் சங்குப்புலவர் உரையெழுதியதை மேற்சுட்டிய கருத்தின் வழிப் புரிந்துகொள்ள முடிகின்றது.

            மணி.திருநாவுக்கரசு முதலியார் ‘நாலடி நான்மணி’ என்று தொடக்கும் வெண்பாவில் ‘மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே’ என்ற பாடத்தைக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பான விவாதத்தினை முன்னெடுக்கின்றார். பதினெட்டு நூல்களுள் இன்னிலையை ஒரு சாராரும், கைந்நிலையை ஒரு சாராரும், திணைமாலையை ஒரு சாராரும் உடன்படுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். இவர் ஒரு சாரார் கருத்தை மட்டும்; பதிவுசெய்வது இங்குக் கவனத்திற்குரியது. “இனியொரு சாரார் மேலே கூறியவாறு ஐந்து திணை நூல்களையும் உடன்பட்டு, அதனோடு ‘இன்னிலை’, ‘கைந்நிலை’ என்னும் இரு நூல்களையும் கூட்டிக் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவெனக் கூறும் வெண்பாவின்கண் தொகை வரையறை காணப்படாமையின், பதினெட்டுக்குமேலும் இருபது நூல்கள் கீழ்க்கணக்கைச் சார்ந்தனவெனக் கொள்ளுதற் கண் வரக் கடவதாய இழுக்கென்னை என்பர். அது பொருந்தாமை மேலே காட்டிய பேராசிரியர் உரையான் இனிது உணரப்படும். அதனுள் அவர் பதினெண்கீழ்க்கணக்கெனத் தெளிவுறக் கூறியிருத்தல் காண்க” (மணி. திருநாவுக்கரசு முதலியார்: 2007: 5). திணைமாலை என்ற பெயரிலான நூலை ஐந்திணை நூல்களோடு சேர்த்து இவர் கணக்கிட்டு கொள்கின்றார். இன்னிலை, கைந்நிலை ஆகிய இரண்டு நூல்களையும் சேர்க்க இருபது நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்தது என்று கருத்து இருந்தது இதன்மூலம் புலனாகின்றது.

தொகுப்பாக

            இரத்தின நாயகர் ஸன்ஸ், மர்ரே நிறுவனப் பதிப்புகளில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கை குறித்த தெளிவாகக் கருத்துகள் இருந்ததைப் பார்க்க முடிகின்றது. திருநேல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகப் பதிப்புகள் சைவ சமயப் பற்றினை வெளிப்படுத்தும் வகையில் உரையினை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார், இளவழகனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர், மணி.திருநாவுக்கரசு முதலியார் ஆகியோர் இன்னிலையினைக் கீழ்க்கணக்கினைச் சேர்ந்த நூல் என்று அடையாளப்படுத்த முயன்றுள்ளனர். இன்னிலை ஒரு போலி நூல், கற்பித நூல் என்று தெளிவான முடிபுகள் கண்ட பிறகும் இவ்வாறு இவர்கள் செயல்பட்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றது.

            பதினெண்கீழ்க்கணக்கு என்ற எண்ணிக்கை வரையறையில் உள்ள குழப்பமான முடிவுகளுக்குத் தெளிவுகள் காணப்பட்ட பின்பும், மீண்டும் தெளிவைத் தேடிக் குழப்பங்கள் உருப்பெற்று வருகின்றன. இவ்வகையான குழப்பங்களுக்கு வெகுசனத் தளத்தில் பதினெண்கீழ்க்கணக்கின் பதிப்புகளைக் கொண்டு சென்ற பதிப்பு நிறுவனங்களே காரணமாக அமைகின்றன. இவை தொடக்க காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் தனித்தனியே பெரும் புலவர்களைக் கொண்டு உரையெழுதச் செய்து பதிப்பித்தன. பின்னர்ப் பொருண்மை வாரியாக இவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தன. அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக உரையோடு கூடிய பதிப்பு, மூலப் பதிப்பு எனப் பல நிலைப்பட்ட பதிப்பாக்க முயற்சியில் ஈடுபட்டன. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தனர். இதுபோல் கல்வி நிறுவனங்களில் பயிலும் பாடமாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் தொடக்க காலம் முதல் இடம் பெற்றிருந்தன. எளிய உரை நோக்கிய மாணவர்களின் செயல்களால் பதிப்பு நிறுவனங்கள் பலரையும் உரையெழுதச் செய்து அதை அச்சிட்டு வழங்கலாயின. இம்முயற்சிகளே பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பதை மறுவாசிப்பு செய்யக் காரணமாயின. இந்த வாசிப்பினால் தொடக்க காலப் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முன்வைத்த கருத்துகளை இவர்கள் மீண்டும் புதியனவாகத் தாங்கள் முன்வைப்பதைப்போல் முன்வைத்து ஒரு மாயத் தோற்றத்தினைக் கட்டமைக்க முயன்றிருக்கின்றனர். இவ்வகையான முயற்சிகளில் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? திணைமாலையா? என்ற குழப்பம் மீண்டும் தலைத்தூக்கியது.

—————————————————-

சான்றாதார நூல்கள்

1925    ந.மு.வேங்கடசாமி நாட்டார், நானாற்பது மூலமும் உரையும் (கார்நாற்பது, களவழி   நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ  சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை.

1934    சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் வேதகிரி முதலியார் இயற்றிய உரையும், பி.இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை.

1956    பதினெண்கீழ்க்கணக்கு – காஞ்சி யேலாதி கோவை பதவுரை விளக்கங்களுடன்,     திருநெல்வேலி  தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை.

1981    பதினெண்கீழ்க்கணக்கு, பதிப்பு – ஆசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கி  வெளியிடப்பட்டது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு.

1982    வேம்பத்தூர் முத்துவேங்கடசுப் பாரதியார், பிரபந்த தீபிகை, பதிப்பாசிரியர்கள்:             ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (திரிகடுகம், நான்மணிக்கடிகை,         சிறுபஞ்சமூலம்),           திருநெல்வேலி            தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற்          பதிப்புக்கழகம், சென்னை.

2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (இன்னா நாற்பது, இனியவை நாற்பது,           கார்நாற்பது, களவழி நாற்பது), கழக வெளியீடு, சென்னை.

2007    பதினெண்கீழ்க்கணக்கு (ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது,           திணைமாலை நூற்றைம்பது, இன்னிலை – கைந்நிலை), கழக வெளியீடு, சென்னை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பு உருவாக்கம் – பரவல் – பதிப்பரசியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *