குறளின் கதிர்களாய்…(232)
உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.
-திருக்குறள் -473(வலியறிதல்)
புதுக் கவிதையில்…
தன் வலிமையின்
அளவறியாமல்,
தன் மன ஊக்கத்தினால்
தொடங்கி,
தொடர இயலாமல் கெட்டவர்கள்
தரணியில் பலர்…!
குறும்பாவில்…
ஆர்வத்தில் தன்வலிமை அறியாமல்
தொடங்கிய செயலைத் தொடரமுடியாமல்
கெட்டோர் பலர் காசினியில்…!
மரபுக் கவிதையில்…
வலிமை தமக்கே என்னவென்ற
விபரம் தன்னை அறியாமலே,
வலியச் சென்றே தம்மைவிட
வலியார் மாட்டுச் சென்றாங்கே
வலிமை காட்டும் செயல்தொடங்கி
வீணாய்த் திரும்புவர் தொடராமலே,
நிலையிது கண்டே பலரிடத்தில்
நினைந்து செயல்படு வலியறிந்தே…!
லிமரைக்கூ..
தன்வலிமை யறியாத போது,
வலியோரிடம் செயல்தொடங்கித் தொடராதோர்
வாழ்வில் வெற்றியென்ப தேது…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
வலிமதெரிஞ்சி செயல்படணும்,
தன்னோட
வலிமதெரிஞ்சி செயல்படணும்..
தம்பெலம் என்னண்ணு தெரியாமலே
வலியவங்கிட்ட
செயலச் செய்யத் தொடங்கி
முடியாமத் திரும்பி
அழிஞ்சிபோனவர் ஆயிரம்பேர்..
அதால
செயல்படணும் செயல்படணும்
வலிமதெரிஞ்சி செயல்படணும்,
தன்னோட
வலிமதெரிஞ்சி செயல்படணும்…!
செண்பக ஜெகதீசன்…