வாழ்ந்து பார்க்கலாமே 42
க. பாலசுப்பிரமணியன்
நம்மை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்
நம்மைத் தோற்கடிக்க உலகில் நம்மைத் தவிர வேறு எந்த சக்தியும் தேவையில்லை. நம்மில் பலரும் நம்மை நாமே தோற்கடித்துக்கொண்டிருக்கின்றோம். முந்தைய பகுதிகளில் நாம் கண்டது போல வெற்றியும் தோல்வியும் ஒரு பார்வைகள்தான். எந்த இரண்டு பேருடைய வெற்றியையும் தோல்வியையும் ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் தவறானது.
ஒரு பள்ளியில் படித்த இரண்டு பெண் குழந்தைகள். ஒரு பெண் நல்ல புத்திசாலி. நல்ல உழைப்பாளி. நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர். அந்தப் பெண்ணின் தோழி வாழ்க்கையை சற்றே எளிதாக எடுத்துக்கொண்டு மேலே சொல்லக்கூடியவர். அவருடைய தந்தை ஒரு பெரும் செல்வந்தர். திரைப்படத் துறைகளில் சாதனை படைத்தவர். ஆகவே அந்தப் பெண் ஒரே குழந்தை என்பதனால் வாழ்க்கை வசதிகளை அதிகம் கொடுத்தவர். இந்த இரண்டு நண்பர்களும் பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பொழுது முதலாவது பெண் மேலாண்மைத் துறையில் முதுநிலை படிப்பு முடித்து நிர்வாக வல்லுனராக வேலையில் சேர்ந்தார். இரண்டாவது பெண்ணோ இளநிலை படிப்பு முடித்ததுமே தன்னுடைய தந்தையின் தொழில் நிர்வாகத்தில் பங்கேற்றுக் கொண்டார். ஒரு நிலையில் முதல் பெண்ணுக்குச் சரியான வேலை கிடைக்காமல் தேடி ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பொழுது அந்த நிறுவனத்தின் சொந்தக்காரராக இருப்பது தன்னுடைய தோழி எனத் தெரிய வந்தது.
அதன் காரணமாக ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டு தன் விதியையும் தன்னுடைய இயலாமையையும் மேற்கோளாக்கி மன உளைச்சலை உண்டாக்கிக்கொண்டார். நாளடைவில் இது வளர்ந்து ஒரு மன நோயாகவே உருவாகிவிட்டது.
இது போன்ற பல நிகழ்வுகளை நாம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். அந்த நேரங்களில் நாம் ஏதோ தவறு செய்து விட்டது போன்ற குற்ற உணர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மனப்பான்மை நம்முடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக மாறி வாழ்க்கையைத் தடம் புரளச் செய்யும். எனவே இந்த மாதிரி உணர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதல் மிக அவசியம். வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் ஒருவருடைய பதவியினாலோ அல்லது புகழினாலோ அல்லது செல்வத்தினாலோ மட்டும் வருவதில்லை. ஒருவருடைய வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டது -அதில் நேர்மையும் வாய்மையும் உழைப்பும் சேவை மனப்பான்மையும் எவ்வாறு ஓங்கி நிற்கின்றன என்பதைப் பொருத்துத் தான் ஒருவரை எடை போட வேண்டும்.
பல செல்வந்தர்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் வெளி உலகிற்குத் தம்மை ஒரு பெரிய மனிதனாக காட்டிக்கொள்வதில் பெருமைப் படுகின்றனர். அதே நேரத்தில்தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டால் தங்களுடைய கடன்களைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வதற்கும் தயங்குவதில்லை. எனவே வாழ்க்கையில் செல்வம் மட்டும் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைப்பு முட்டாள்தனமானது.
நம்மை நாமே ஏற்றுக்கொள்ளுதல் (Self-Acceptance ) என்பது ஒரு மிகப் பெரிய வெற்றி மற்றும் முதிர்ச்சியின் அறிகுறி.. அதுவே வாழ்க்கையின் முழு மகிழ்ச்சிக்கு அடிப்படை. நம்முடைய உடல், அழகு, நிறம், குடும்பம், கல்வி, சந்தர்ப்ப சூழ்நிலைகள், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு விட்டால் நம்மை விட அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. நம்முடைய உடமைகள் நமக்கு இறைவனால் அளிக்கப்பட்டவை. அதில் நிச்சயமாகக் குறையிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவைகளை நாம் எப்பொழுது மற்றவர்களின் உடமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றோமோ அப்பொழுதே நமது துயரங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு விடுகின்றது. இதை நாம் உணர வேண்டும்.
ஒரு முறை எனக்கு ஒரு விருது கிடைத்தது. அதைக் கொடுக்க வந்தவர் ஒரு நீதியரசர். சுமார் ஒரு மணி நேரம் மிகவும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களுக்குப் பின் அலுவலகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் வரும்படி உத்தரவிடப்பட்டது. அன்று நான் சென்ற பொழுது அமர்ந்திருந்த நீதியரசர் எனக்கு விருது கொடுத்தவர். அந்த நேரத்தில் அவர் என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அது அவர் தொழில் தர்மம். நேர்மையின் விளக்கம். நான் வருத்தப்பட முடியுமா? அல்லது அவருடன் பழகியிருக்கிறேன் என்பதற்காக சலுகைகள் எதிர்பார்க்க முடியுமா? அவருடைய அந்தச் செயலுக்காக நான் அவரைப் பெரிதும் மதித்தேன்.
இதுதான் வாழ்க்கையின் உண்மை. பல நேரங்களில் நம்முடைய உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், கூட வேலைபார்த்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளில் சென்றிருப்பார்கள். அவரவர்களுடைய சாதனைகள், பதவிகள், வாழ்க்கை நிலைகள் வேறு வேறாக இருக்கும். அதன் காரணமாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
சமீபத்தில் வந்த செய்தி. காவல் துறையில் இருக்கும் ஒரு போலீஸ்காரருடைய மகன் நன்கு படித்து அதே போலீஸ் துறையில் ஒரு மேலதிகாரியாக வந்த பொழுது அவருடைய தந்தை தன் மகன் முன் நின்று சல்யூட் அடித்தார். உண்மையில் தன் மகனை அந்தப் பதவியில் பார்த்த தந்தைக்கு நிச்சயம் பெருமிதமாக இருந்திருக்க வேண்டும். தன் மகன்கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கின்றதே என்று வருத்தப்பட முடியுமா? அல்லது தாழ்வு மனப்பான்மை கொள்ள முடியுமா?
தந்தைக்கு உபதேசம் செய்ய முருகன் துணிந்தபொழுது தந்தையை தன் முன்னே ஒரு சீடனாக மண்டியிட்டு அமர வைக்கவில்லையா? வாழ்க்கையின் ஏற்றங்களும் தாழ்வுகளும் நம்முடைய வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பதில்லை. இரண்டும் வாழ்க்கையின் நிகழ்வுகளின் மீது நாம் கொள்ளும் பார்வைகள்தான்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்த நேரத்தில் என்னோடு வேலை பார்த்த ஒரு ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னே சந்தித்தார். ” பார்த்தீர்களா சார். நம்மகிட்டே படித்த அந்த மாண்வர்களெல்லாம் எங்கேயோ மேல போய்விட்டார்கள். நாம தான் அப்படியே இருக்கோம்” நான் சிரித்தேன். உண்மை. நீதியரசர்கள் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், என்று பல சிறப்பான தொழிலில் அவர்களை பார்க்கும் பொழுது நமக்குப் பெருமையாக இருக்கின்றது. அதற்காக நாம் ஏன் நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்? ஏணிப்படிகள் ஏற்றிவிட்ட பின் தங்களுக்குச் சொந்தமான மூலையிலே ஒதுங்கிவிடுவதுதான் வாழ்க்கையின் நியதி?
“செய்யும் தொழிலே தெய்வம்” என்ற மனப்பான்மையுடன் செய்யும் பொழுது எல்லாத் தொழில்களும் தெய்வீகத் தன்மை அடைந்து விடுகின்றனவே? இதற்காக நாம் ஏன் வாடி வதங்க வேண்டும்? ஒவ்வொரு நாளும் நாம் இன்று நன்றே செய்ய வேண்டும் என்று எழுந்து அதை நடத்திக் காட்டும் பொழுது அந்த ஒவ்வொரு நாளும் வெற்றியின் அறிகுறி தானே?
தினமும் நாம் நமது வெற்றிகளைக் கொண்டாடலாமே? முயன்று பார்க்கலாமா?
(தொடரும்)