Author: admin

  • பரிமேலழகர் உரைத் திறன் – 4

    பரிமேலழகர் உரைத் திறன் – 4

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘அழுக்காறு’ – பாவமா? பாவியா?

    முன்னுரை

    சமய அடிப்படையில் உரைகாண்பது, மெய்யியல் அடிப்படையில் உரையெழுதுவது, அரசியல் கொள்கைகளுக்கு இயைய உரை காண்பது, இலக்கண அடிப்படையில் உரை காண்பது, காரண காரிய அடிப்படையில் உரை காண்பது, சொற் பயன்பாட்டுக்கான (பதப்பிரயோகத்திற்கான) காரணம் கண்டறிந்து உரையெழுதுவது, அதிகாரத் தலைப்பு, இயல், பால் இவற்றின் பிரிவினைக்கேற்ப உரைகாண்பது எனப் பரிமேலழகர் உரையறி திறன் பலவாம். எல்லா நெறிகளிலும் செந்நெறி சென்று குறள் நெறி காண முயலும் கொள்கையுடையார் அவர்.  ‘நோக்கு’ என்னும் பழந்தமிழ் திறனாய்வு நெறியைப் பயன்படுத்தி அவர் எழுதிய உரையே திருக்குறள் உரையாகும். குறட்பாவை ஓரலகாகக் கொண்டால், அதனுள் அடங்கிய, அடிகள், சீர்கள், அசைகள் எனத் தனித்தனியாக நோக்கியுணர்ந்த பிறகே அவர் உரையெழுதுகிறார். ஓர் உருவகப் பொருத்தத்திற்கு அவர் கூறும் விளக்கம் இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகிறது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அழுக்காறாமை’ என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளாக அமைந்திருப்பது,

    “அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்” (168)

    இந்தக் குறட்பாவிற்கு,

    • “அழுக்காறு என ஒரு பாவி” ‘அழுக்காறு’ எனச் சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி
    • “திருச்செற்றுத், தீயுழி உய்த்துவிடும்” தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.

     எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘ஒரு’ என்பதற்கு உலகவழக்கினையொட்டி ஓர் எண்ணாகக் கொள்ளாது ‘ஒப்பில்லாத’ என உரை காண்கிறார்.
    • ‘திரு’ என்பது செல்வத்தைக் குறிப்பதால் அது ‘இம்மைப் பயன்’ எனவும் ‘தீயுழி’ என்பது நரகத்திற்கோர் பெயராதலின் ‘மறுமை’ எனவும் கண்டறிகிறார்.
    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னை உடையானை’ என வருவித்துக் கொள்கிறார்.

     பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை (அழுக்காறு என்னும் பண்பை உடையவனை) இருமையும் கெடுத்தற் கொடுமை பற்றி (பண்பாகிய) அழுக்காற்றைப் (பண்பியாகிய) பாவி என்றார்.” கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின்.”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னைஉடையானை’ என வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘உடையானை’ என்னும் பொழிப்புரையை விளக்கவுரையில் ‘தன்னை ஆக்கினானை’ என மாற்றிக் கொள்கிறார். அதாவது ‘அழுக்காறு’ என்னும் பண்பைத் தானே உருவாக்கி அதனை உடைமையாகக் கொண்டானாம்.
    • ‘அழுக்காறு’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் ‘பிறர் ஆக்கம் பொறாமை’ (35) என்று பொருள் வரையறை செய்கிறார். ‘பிறர் ஆக்கம் கண்டவழி மகிழ்ச்சியடைய வேண்டிய ஒருவன் பொறாமைப் படுகிறான்’ என்றால் அந்தப் பண்பு அவனால் உருவாக்கிக் கொள்ளப்பட்டது என்பது பெறப்படும்
    • படவே அழுக்காறு என்பது செம்பில் களிம்பு போலல்லாது மனிதன் தானே தேடிக்கொண்ட பண்பு என்பதை அறிய முடியும். அறியவே அவன் தேடிய செல்வம் அவனைக் காக்க வேண்டியதிருக்க, அவன் அழிவுக்குக் காரணமாகிறது என்பது நுண்ணியம்.
    • பண்பைப் பண்பியாகத் திருவள்ளுவர் உருவகித்ததற்கான காரணத்தைத் தனக்கே உரிய புலமையாற்றலால் விளக்கிக் காட்டுகிறார்.
    • எதிர்மறைப் பண்புகள் காரணமாகக் கொடுஞ்செயலைச் செய்தாரைப் ‘பாவி’ என அழைப்பது உலக வழக்கு. அவ்வழக்கின் அடிப்படையிலேயே திருவள்ளுவர் அழுக்காறுடையானைப் பாவி என்றாராம். அதாவது அழுக்காற்றை உடையவனைத் தீயவன், கேடன், கயவன் என்றெல்லாம் அழைக்காது அவனைப் ‘பாவி’ என ஏன் அழைத்தார் என்பதற்கான காரணத்தை வள்ளுவர் உலக வழக்கினால் அறிந்தார் என்பதாம்.

     பரிமேலழகர் கண்ட உரையருமை

    ஓர் உருவகத்தின் காரணத்தை ஆராய்ந்து எழுதியிருக்கும் அழகருடைய உரை மாண்பு இப்படி அமைகிறது. ‘அன்பு’ என்பது பண்பு. அதற்குச் செயல் கிடையாது. அதாவது அன்பு தானாக செயல்படாது. அந்தப் பண்பைத் தனக்கு இயல்பாகக் கொண்டவன்தான் அதன் பெருமையைத் தன் செயல் வழி உணர்த்த முடியும். சான்றாக ‘இரக்கம்’ என்ற உயரிய பண்பு வள்ளற்பெருமான் வழியாகச் செயல்பட்டுப் பெருமையுற்றது. ‘நன்மை’ செயல்படாது. நல்லவன்தான் செயல்படுவான். ‘தீமை செயல்படாது’ தீயவன்தான் செயல்படுவான். எனவே பண்புக்குப் பண்பி இல்லை. ‘அழுக்காறு உடையான்கண்ணேயே’ (135) ஆக்கம் சேராதேயன்றி அழுக்காற்றிடம் சேராது என வள்ளுவர் கூறவில்லை என்பதையும் நோக்குதல் வேண்டும்.

    ஆனால் திருவள்ளுவர் ‘பண்பு செயல்படும்’ என்று கூறுகிறார். அதாவது பண்பே பண்பியாகச் செயல்படும் என்று கூறுகிறார். பண்பு தானாகச் செயல்படுமா? இதுதான் வினா? ‘படாது’ என்பது உண்மை. சில நேர்வுகளில் பண்பு பண்பியாகச் செயல்படும் என்பது திருவள்ளுவர் கருத்து. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் முன்னெடுக்கிறபோது அதற்கான விளக்கத்தை அவர் கூறினாரிலர்.

    ‘பண்பி இதனைச் செய்வான்’ எனக் கூறாது ‘பண்பே இதனைச் செய்யும் (விடும்) எனக் கூறியமைகிறார் திருவள்ளுவர். இப்போது உரையாசிரியருக்குப் பொறுப்பு கூடுதலாகிறது. நூலாசிரியரின் சொற் பயன்பாட்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதுதான் உரையாசிரியர் பணியே தவிர நூலாசிரியர் பதிவில் குறைகாண்பது நெறியாகாது. ‘அழுக்காறு’ என்பது ஒரு பண்பு. அது பண்பி அல்ல. பாவம் என்பது பண்பு. ‘பாவி’ என்பவன் பண்பி. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. ஆனால் திருவள்ளுவர் அழுக்காற்றையே ஒரு பாவி என்கிறார். இலக்கணப்படி இது உருவகம். ஆனால் பொருளுணர் நெறிப்படி இது சரியன்று. ஆனால் கூறுகிறவர் தெய்வப்புலவர். ஒரு நுட்பமின்றி இவ்வாறு கூறியிருக்கமாட்டார். அந்த நுட்பம் என்ன? பண்புக்குப் பண்பி இல்லை என்பது உண்மைதான். ஆனால் திருவள்ளுவர் மானுடத்தின் எதிர்மறைப் பண்புகளில் பொறாமையை அதாவது பிறர் ஆக்கம் கண்டவழி வயிற்றெரிச்சல் படுகின்ற அந்த அழுக்காற்றைச் சாதாரண எதிர்மறைப் பண்புகளில் ஒன்றாகக் கொள்ளவில்லை. அதனைத் தனியாகப் பிரித்து அதன் கொடுமையைச் சுட்டுகிறார். மற்ற எதிர்மறைப் பண்புகள் பிறருக்கு எதிராகவே செயல்படும்.  ஆனால் அழுக்காறாகிய இப்பண்பு கொண்டவனுக்கே எதிரியாகும். மற்ற பண்புகள் செயல்பட ‘பண்பி’ தேவை. இதனைச் செயல்படுத்த தனியாக ஒரு ஆள் தேவையில்லை. அந்தப் பண்பே அந்த அழிவுச் செயலை மேற்கொள்ளும். யார்மீது? எவன் பொறாமை கொண்டானோ அவன்மீதே அது தன் தாக்குதலைத் தொடுக்கும்.  கம்பியில்லாமலேயே பாய்கின்ற மின்சாரம் அழுக்காறு!

    ‘ஒரு’ என்ற சொல்லுக்கு ஒப்பற்ற என அழகர் உரையெழுதினார், ‘ஏனைய பாவங்களின் செயல்படு எல்லை இம்மை மட்டுமே. அழுக்காறு மறுமையையும் அழிக்கும் பேராற்றல் உடையது என்னும் அதன் ஒப்பின்மையாகிய வலிமை நோக்கி. திருவள்ளுவர் பண்பியில்லாத பண்பைப் பண்பியாக்கினார். அதாவது பாவத்தைப் பாவியாக்கினார். அழகர் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து எழுதினார்.

    திருவள்ளுவர் காட்டிய உடைமைகளும் அல்லாதனவும்

    மானுடம் சிறக்க மாந்தர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் திருவள்ளுவர் ‘உடைமை’ என்னும் சொல்லால் நேர்முகமாகச் சுட்டுவார். ‘அன்புடைமை’, ‘அடக்கமுடைமை’ முதலிய பத்து உடைமைகளை அவர் கூறுவார். இருக்கக் கூடாத, அல்நெறி செல்லக் காரணமாகும் இயல்புகளை எதிர்மறையில் சுட்டுவது அவர்தம் வெளிப்பாட்டு நெறி, ‘பயனில சொல்லாமை’, ‘பிறனில் விழையாமை’, ‘புறங்கூறாமை’ முதலியன இவ்வாறு அமைந்தவை.

    பண்புகள் இடம் மாறினால்

    எதிர்மறைப் பண்பாகிய அழுக்காற்றினை உடைமையாக்கி, இருக்க வேண்டிய உடன்பாட்டுப் பண்பாகிய ஒழுக்கத்தை எதிர்மறையாக்கியும் வள்ளுவர் சிந்தித்திருக்கிறார். அதாவது ஒருவனுக்கு இருக்க வேண்டிய பண்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்? என்று சிந்தித்த வள்ளுவர், ‘இருக்கக் கூடாத பண்பு உடைமையானால் என்ன ஆகும்? என இருவகையாகவும் சிந்தித்திருக்கிறார் என்பதாம்.

    “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு’ (135)

    உடன்பாட்டுப் பண்புகளை வள்ளுவர் உடைமைகளாகச் சொல்லுவார் என்பது மேலே குறிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குறட்பாவில் ‘அழுக்காறுடையான்’ என எதிர்மறைப் பண்பு உடைமையாகக் குறிக்கப்பட்டது. மேலும் உடைமையாக இருக்க வேண்டிய ஒழுக்கம் ‘ஒழுக்கமிலான்’ என எதிர்மறையால் குறிக்கப்பட்டது காண்க. அதனால் இருவழியும் ஒருவனுக்குக் கேடு என்பதை மிக நுட்பமாக வள்ளுவர் குறித்திருக்கிறார். இவற்றையெல்லாம் உள்வாங்கியே பரிமேலழகர் உரை அமைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

    பரிமேலழகரின் நினைவாற்றல்

    ‘பண்பு’ ஒரு செயலூக்கி என்பதைப் ‘பாவி’ என்னும் சொல்லால் குறித்த வள்ளுவத்தைத் தம் உரையாற்றலால் உணர வைத்த பரிமேலழகர் இதனையொத்த இன்னொரு சொல்லுக்கும் இவ்வாறே உரையெழுதுகிறார். “இன்மை என ஒரு பாவி’ (1042) என்பதற்கு மேல் ‘அழுக்காறென ஒரு பாவி’ (168) என்புழி உரைத்தாங்கு உரைக்க” என்று நினைவூட்டுகிறார். இந்த இரண்டு பாடல்களுக்கும் இடையே தொள்ளாயிரம் பாடல்களுக்கு மேல் இருக்கின்றன என்பதையும் அக்காலக் கல்விமுறை, சுவடிவழிக்கல்வியே என்பதையும் உட்கொண்டால் பரிமேலேழகர் உட்பட உரையாசிரியர்கள் அனைவர்தம் நினைவாற்றலையும் அறிந்து கொள்ள முடியும்.

    நிறைவுரை

    பண்பிதான் செயல்படும் என்பது உண்மையேயாயினும் சில நேர்வுகளில் பண்பே பண்பியாகச் செயல்படும். அது நேர்முகமானால் நன்மை. எதிர்முகமானால் பேரழிவு. ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகத்   திருவள்ளுவர் உருவகம் செய்தது ஏன் என்பதற்குப் பரிமேலழகர் கண்ட உரைநுட்பம் இதுதான். பரிமேலழகர் உரையால் பண்புக்கும் செயலாற்றல் உண்டு என்று அறிந்து கொண்ட நாம் எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான் வள்ளுவரால் அடைய வேண்டிய பயன். ‘மனம்போல் வாழ்வு என்பதும் ‘உன் மனசார சொல்லு’ என்பனவும் அவை! எண்ணங்கள் செயலுக்கு மூலம் மட்டுமன்று. பல நேர்வுகளில் அவையே செயலூக்கியுமாகும்.!

    (தொடரும்)

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 2

    எட்டுக் கோணல் பண்டிதன் – 2

    தி. இரா. மீனா

    ஷ்டவக்கிரன் ஜனக மன்னர் சந்திப்பும், நெருக்கமும்

    அஷ்டவக்கிரனும், அவர் தந்தையின் குருவான உத்தாலக ஆருணியின் மகன் சுவேதகேதுவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஜனகமன்னரைக் காண அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் மிதிலையை நோக்கி வந்துகொண்டிருக் கும்போது வழியில் ஜனகரையும் அவரது பரிவாரங்களையும் சந்திக் கின்றனர். எதிர்ப்படும் காவலர் அங்கு கூடியுள்ள மக்களைப் பார்த்து “வழி விடுங்கள்! மன்னன் வருகிறார்… அவருக்கு வழிவிடுங்கள்…’ என்கிறார். அதைக் கேட்ட அஷ்டவக்கிரன் காவலரைக் கோபமாகப் பார்க்க, அவர் அவனைத் தள்ளிவிட முயல்கிறார். அஷ்டவக்கிரனின் தோற்றம் வித்தியாசமாகத் தெரிவதால் அவர் தன் செயலிலிருந்து பின்வாங்கி அவனைத் தள்ளி விடாமல் ’சொல்வது காதில் கேட்கவில்லையா? வழிவிடு, மன்னர் வருகிறார் என உரத்த குரலில் கூறுகிறார். அதற்கு “பார்வையற்றோர், ஊனமுடையவர்கள், பெண்கள், பாரம் சுமப்போர், வேதமறிந்தோர்.. என்ற வகைமக்களைக் கண்டால் எதிர்ப்படுபவர்கள்தான் அவர்களுக்கு வழிவிடவேண்டும் என்று உங்கள் மன்னனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்” என்று சத்தமாகச் சொல்கிறான். இந்தப் பேச்சைக் கேட்டு காவலர் அதிர்ந்து நிற்கிறார். ஜனகருக்கு அஷ்ட வக்கிரனின் இந்தச் சொற்கள் காதில்விழ அனைவரையும் நிற்கச் சொல்லி விட்டு உடல் குறைபாடுள்ள அவனைப் பார்க்கிறார். அவனுடைய தோற்றத்தை விட அவன் சொற்களே அவரைப் பாதிக்கின்றன ’அந்த இளைஞன் சொல்வது சரியே! அவனுக்கு நாம் வழிவிட வேண்டும்…’ அவர் கூறியதைக் கேட்டு அரச பரிவாரங்கள் அவர்களுக்கு வழிவிடுகின்றன.

    இதையடுத்து அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் ஜனகரின் அரண்மனையை அடைந்த போது, அங்குள்ள வாயில் காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, “இது விளையாட்டு மைதானமில்லை, ஜனகரின் சபை உங்களுக்கு இங்கே என்ன வேலை? உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்களும், முனி வர்களும் கூடுமிடமிது. இங்கிருந்து போய்விடுங்கள். உங்கள் வயதுச் சிறுவர் கள் என்ன செய்வார்களோ அதைச் செய்யுங்கள்” என்கிறான்.

    சுவேதகேது கோபமாக ஏதோ சொல்ல முயல அஷ்டவக்கிரன் அவனைத் தடுத்து “அப்படியென்றால் நரைத்த முடியும், நடுங்கும் முதுமையும் இருந்தால்தான் உள்ளே அனுமதிப்பேன் என்று சொல்கிறீர்களா?” என்று கேட்கி றான். காவலர் சிறிது தடுமாறிவிட்டு ’நான் சொல்லவருவது என்னவென்றால், வயதான பிறகுதான் உங்களால் வேதங்கள்பற்றி உணர முடியும், இளமையான இந்த நேரத்தில் அல்ல..’ தன் விளக்கத்தை அஷ்டவக்கிரன் புரிந்து கொள்வான் என்று காவலர் நினைக்கிறார்.

    ’நான் வேதம் கற்றவன், அதனால் உள்ளேபோக நீங்கள் அனுமதித்தாக வேண்டும்.’ என்று கட்டளையிடுவது போலப் பேசுகிறான். காவலர் மறுப்புத் தெரிவிக்க முயலும் பொழுதில் ஜனகர் அரண்மனை முற்றத்திற்கு வருகிறார். அஷ்டவக்கிரனைப் பார்த்ததும் அவருக்கு வியப்பேற்படுகிறது. அவன் சாதாரணமானவனில்லை என்றும், அவர்களின் சந்திப்பு இயல்பாக நிகழவில்லை என்றும் ஜனகர் உணர்கிறார். அவனை உள்ளே அனுமதிக்கக் கட்டளையிடுகிறார்.

    ஜனகருடன் அவைக்குள் வந்த அஷ்டவக்கிரனை கூடியுள்ளவர்கள் வினோதமாகப் பார்க்கின்றனர். அம்மாதிரி்யான தோற்றமுடைய ஒருவனை அவர்கள் தங்கள் வாழ்வில் கண்டதேயில்லை. அவர்கள்  யாரையும் பொருட்படுத்தாமல் அஷ்டவக்கிரன் நேரடியாக மன்னனிடம் சென்று “இங்கு விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன், அதில் பங்கு பெற நான் விரும்புகிறேன்…” அவன் கூறியதைக் கேட்டதும் சபை முழுவதும் சிரிக்கிறது… இவ்வளவு அருவெருப்பான தோற்றம் கொண்ட வயதில் சிறிய ஒருவன் சிறந்த முனிவராகிய பண்டியை எப்படி வெல்லமுடியுமென்றும் அது அறிவற்ற செயல் என்றும் அனைவரும் கூறுகின்றனர். அவனைப் பார்த்துச் சிரித்தவர்களைப் பற்றிய சிந்தனையில்லாதவனாக நிற்கிறான்.

    அவர்கள் அனைவரும் சிரிப்பை நிறுத்தியதும், அஷ்டவக்கிரன் அவர்களைப் பார்த்து கண்களில் நீர் வரும்வரை சிரிக்கிறான். அனைவரும்  வியப்போடு அவனைப் பார்க்கின்றனர். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு , ”இந்த அறிஞர்கள்தான் என்னுடன் சண்டையிட்டு விவாதிக்கப் போகிறவர்களா? ஜனகரின் சபை பெரும் பண்டிதர்களால் நிரம்பியிருக்குமென்று நினைத்திருந்தேன், ஆனால் நான் இங்கு பார்ப்பது சக்கிலியர்களைத்தான். இது உங்கள் சபையில்லையா? அல்லது நான்தான் தவறான இடத்திற்கு வந்துவிட்டேனா?’ அஷ்ட வக்கிரன் அமைதியாகப் பேசுகிறான்.

    எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாமல் நின்ற ஜனகர் “நீ பேசுவதன் பொருளென்ன?சிறந்த பண்டிதர்களை நீ ஏன் அப்படிக் குறிப்பிடவேண்டும்?” எனக் கேட்கிறார். ”காலணி தைப்பவர்கள் தோலைப் பார்த்த அளவில் அது கொண்டு காலணியைத் தயாரிக்க முடியுமா இல்லையா என்று முடிவு செய்து விடுவார்கள்.. என்னால் என்ன செய்ய இயலுமென்பது உங்கள் மனிதர்களுக்குத் தெரியாது… என் தோற்றத்தைப் பார்த்துவிட்டு என்னால் விவாதத்தில் போட்டியிட முடியாது என்று முடிவு செய்து விட்டனர். அம்மாதிரி யானவர்களை உங்கள் ஆலோசகர்களாக வைத்திருக்கிறீர்கள்..’ அஷ்டவக்கிரன் சொல்ல அவையிலுள்ளவர்கள் தலை குனிகின்றனர்.

    “தன்னை எதிர்கொள்வதற்கு முன்பே பல முனிவர்களைக் கொன்றவன் பண்டி. அதனால் பண்டியோடு சவால் விட்டு விவாதத்திற்கு வருபவர்களின் புலமையை முதலில் நான் சோதித்தறிவேன். எனக்கு உடன்பாடு என்றால் மட்டுமே அவர்களை அவனிடம் அனுப்புவேன்“ என்று ஜனகர் கூறுகிறார். தன்னை அவர் சோதிக்கலாமென்கிறான் அஷ்டவக்கிரன். அதையடுத்து உட்பொருள் கொண்ட பலகேள்விகளை ஜனகர் அவனிடம் கேட்கிறார். அறி வார்ந்த கேள்விகளும், அதற்கு மிக எளிமையாகக் கிடைக்கும்  பதில்களும் அவையினரை வியப்படையச் செய்கின்றன. ஜனகரே வாயடைத்துப் போகிறார்.

    மறுநாள் அஷ்டவக்கிரன் — பண்டி இடையில் விவாதம் நடக்கிறது. அனை வரும் மெய்மறந்து கவனிக்கின்றனர். ஜனகரின் கேள்விகளுக்கு அஷ்ட வக்கிரன் அளித்த பதில்களை அவையினர் கேட்டிருந்ததால், இன்று பண்டியின் வெற்றி முகம் மாறலாம் என்று நினைக்கின்றனர். விவாதம் மிகுந்த அளவு புதிரான கருத்துக்களைக் கொண்டதாக இருக்க, அறிவு நிறைந்த அஷ்டவக்கிரனிடம் பண்டி தோற்றுப் போகிறான். ஜனகர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியின் எல்லையிலிருக்க அஷ்டவக்கிரன் எவ்வித உணர்வும் வெளிப்படுத்தாதவனாக இருக்கிறான்.

    ’பண்டியின் விதிப்படி, அவர் விவாதத்தில் தோற்றுப்போனால், போட்டியில் வெற்றி பெற்றவர் எதைக் கேட்டாலும் அவர் தரவேண்டும்…’ என மன்னன் சொல்ல, அஷ்டவக்கிரன் ’பண்டி என்ன விரும்பினாரோ அதுவே எனக்கும் வேண்டும். என் தந்தை உட்பட மற்ற முனிவர்கள் மூழ்கடிக்கப்பட்ட ஏரியில் பண்டி மூழ்கடிக்கப் படவேண்டும்.. இதுதான் என் விருப்பம்’ என்கிறான்.

    ஜனகர் எதுவும் சொல்லவில்ல, சொல்வதற்கு எதுவுமில்லை. அவையினர் அஷ்டவக்கிரனின் முடிவுகேட்டு மகிழ்கின்றனர். அப்போது பண்டி மன்னரிடம் ’அஷ்டவக்கிரனின் விருப்பம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நான் என்னைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.!” என்கிறான்.

    “நான் எங்கிருந்து வந்தவன் அல்லது இந்த விவாதங்கள் ஏன் அரங்கேறின என்றெல்லாம் உங்களுக்குத் தெரியாது. நான் உண்மையைக் கூறப்போகிறேன். நான் கடற் கடவுள் வருணனின் மகன். என் தந்தை கடலினடியில் ஒரு வேள்வி நடத்த நினைத்து, அதற்கு வேதங்களை நன்கறிந்த பண்டிதர்கள் வர வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பத்தை நிறைவேற்றவே நான் இங்கு வந்தேன். விவாதத்தில் பங்கு கொண்டு என்னிடம் தோற்றவர்களை நான் நீரில் மூழ்கடித்து கடலிற்கடியில் தந்தையிடம் அனுப்பிவிடுவேன். அங்கு அவர்கள் கூடி வேள்வி நடத்துவார்கள் “.

    முனிவர்கள் வேள்வி நடத்துவதற்காக மட்டும் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று பண்டி கூறியது… அவ்வாறெனில்… அஷ்டவக்கிரனின் இதயம் படபடக்கிறது. ’மன்னனே! நீரில் மூழ்கடிக்கப்பட்ட முனிவர்கள், அறிஞர்கள் யாருமே இறக்கவில்லை. என் தந்தை நடத்திய வேள்வி நேற்றுத்தான் முடிவடைந்தது. நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அவர்கள் கடலிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்..’ பண்டி பேசி முடிக்கிறான்.

    மன்னன், அஷ்டவக்கிரன், அவையினர் அனைவரும் பண்டியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போகின்றனர். அனைவரும் ஏரிப்பகுதிக்குச் விரைந்த போது நீரிலிருந்து முனிவர்களும், அறிஞர்களும் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருப்பதைக் காண்கின்றனர்.

    [தொடரும்]

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)

    ச. கண்மணி கணேசன்
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

    முன்னுரை

    அஃறிணைப் பொருட்களுள்; அணிகலனில் கோத்த மணிகள், மேகலையின் வடங்கள், மழை தரும் மேகங்கள், வரகுக்காட்டின் களை, பல்கிப்பெருகிய நாணல் கிழங்கு, கரும்பு, மூங்கில், பூத்துக்காய்த்துப் பசுந்துளிர் போர்த்துக் கவர்த்த மரங்கள்; ஆகியவற்றின் ஒவ்வொரு தொகுதியும் கிளை என்று தொகை இலக்கியத்தில் பேசப்படுகிறது.

    யானை, பன்றி, கரடி, மான், குரங்கு  முதலிய விலங்குகள்; கிளி, குருவி, குருகு, பருந்து, காகம், மனைக்கோழி, கம்புட்கோழி, காட்டுக் கோழி முதலிய பிற பறவைக் கூட்டங்கள்; கரையான், பாம்பு, பல்லி முதலிய ஊர்வன; தும்பி, தேனீ, வண்டு, குளவி முதலிய பூச்சிகள்; சங்கு, இறால், நண்டு, வாளைமீன், பிற மீன்கள், தவளை முதலிய நீந்துவன அனைத்தும் கிளை என்னும் சுற்றத்தோடு கூடி வாழ்வதையும்; வளர்வதையும்; தேடுவதையும்; பகிர்வதையும்  தொகை நூல்கள் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களில் குறிப்பிடுகின்றன.

    மக்கள் கூடி வாழ்வதைப் புனையும் அகஇலக்கியத்தில் ‘கிளை’ எனும் சொல்லுக்குச் ‘சுற்றம்’ என்னும் பொருள் எல்லா இடங்களிலும் துல்லியமாகப் பொருந்துகிறதா  என்பது கேள்விக்குரியது. ஏனெனில் சொத்துப் பங்கீடும், பெண்களுக்கே உரிய புகுந்தவீடும் உயர்திணையாகிய மக்களுக்கு மட்டுமே உள்ளன.

    புற இலக்கியத்தில் கிளை

    ‘கிளை’ எனும் சொல் பொதுவாக  சுற்றம் என்று பொருள்படினும்; அது  பங்காளிகளை மட்டும் குறிக்குமிடங்களும் உள.

    புறப்பாடல்களில் இடம்பெறும் ‘கிளை’ பெரிதும் கூத்தர், பாணர், பொருநர் ஆகிய இரவலரின் பெருஞ்சுற்றத்தைச் சுட்டுகின்றன (மதுரைக்.- அடி- 751; பதிற்.- 32, 42, 49; புறம்.- 136, 144, 163, 173, 253, 254, 378, 388). பேகனின் மனைவியிடம் பரணர்;

    “கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு” (புறம்.- 144)

    என்று கேட்கும் போதும்,

    “யாமவன் கிளைஞரேம் அல்லேம்” (மேற்.)

     என்று அவள் பதிலிறுக்கும் போதும் ‘கிளை’ சுற்றம் என்றே பொருள்படுகிறது.

    போர்க்களத்தில் தம் கணவர்  இறந்துபட அவனுடலைத் தூக்கி மடியில் வைத்து அரற்றும் மனைவியரின் ஒப்பாரியில்; (புறம்.- 253& 254) ‘கிளை’ பங்காளிகளைக் குறிக்கிறது.

    மலையமான் திருமுடிக்காரியை;

    “கிளையொடும் பொலிக” (புறம்.- 126)

    என்று புலவர் வாழ்த்தும்போது ‘கிளை’ அவனது  பங்காளிகளையே குறிக்கிறது.

    நெருக்கமான குடும்ப உறவு பற்றிய குறிப்பில் ‘கிளை’க்கு உரிய பொருள் நுட்பம் புலனாகிறது.

    “இருங்கிளை இனனொக்கல்” (பட்டி.- 61)

    எனும் பாடலடி கிளை பற்றிய வரையறையை உரைக்கிறது. அதாவது கிளை ஒரே இனத்தவரை மட்டும் உள்ளடக்கியதாகும். இதைப் பண்டைத்  தமிழகத்தில் ஜாதி இருந்தமைக்கு ஆதாரமாகும் அரிய குறிப்பாகக் கொள்ளலாம்.

    ஆண்முதன்மைச் சமுதாயத்தில் ஒரு குடியின் கிளை அக்குடும்பத்து ஆண்மக்கள் வாயிலாகவே பல்கிப் பெருகும் என்ற கொள்கை நிலவியது; நிலவுகிறது. இன்றளவும் பெண்கள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீடு சென்று வாழ்வதே நடைமுறையாக உள்ளது. கோயில் வழிபாடுகள் தொடர்பான உரிமை, தகுதி ஆகிய நடைமுறையிலும், வாழ்வியல் சடங்கு சம்பிரதாயங்களிலும்,  ஈமச்சடங்கிலும் இக்கொள்கை பேரிடம் வகிப்பதைக் காண்கிறோம்.

    மோர் விற்ற பொருளை வைத்து ஆய்மகள் தன் கிளையோடு உணவு அருந்தினாள் என்பது பெரும்பாணாற்றுப்படைச் செய்தி (அடி.- 163). இங்கு பங்காளிகளே கிளையாவர் என்னும் நுட்பம் பொதிந்துள்ளது. ஆதலால் தான் அவளுடன் சேர்ந்து உண்கின்றனர்.

    மகாபாரதக் கதையை விரிவாகப் பேசும்;

    “வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
    முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
    ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா
    கைபுனை அரக்கு இல்லைக் கதழெரி சூழ்ந்தாங்கு
    களிதிகழ் கடாஅத்த  கடுங்களிறு அகத்தவா
    முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல்
    ஒளிஉரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்தன்
    உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல” (கலித்.- 25)

    என்ற பாடலில் திருதராஷ்டிரனின் மூத்த மகனாகிய துரியோதனன் சூழ்ச்சியில்  இருந்து பீமன் தன் உடன்பிறப்புக்களாகிய பாண்டவர்களைக் காப்பாற்றிய புராணச் செய்தி உள்ளது. தன் மனதிற்கினிய சகோதரர்களைக்; காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றும் யானை போல அவன் அரக்கு் மாளிகையிலிருந்து காப்பாற்றிய செய்கை விளக்கம் பெறுகிறது. பங்காளிகளாகிய பாண்டவர் கிளை என்று குறிப்பிடப்படுவது நம் கொள்கையை வலியுறுத்தும் இன்னொரு சான்றாக அமைகிறது.

    இன்றும் சில சமூகங்களில் ‘கிளை’ என்னும் சொல்லால் பங்காளிகளைக் குறிக்கின்றனர். (எ.டு.) கொண்டையங்கோட்டை மறவர்.

    இக்கூட்டத்தில் இளையவரோடு முதியவரும் அடங்குவர் (பெரும்.- 258).

    தமிழர் வாழ்வியலில் கிளை பெறுமிடம் கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது.

    “அன்பெனப்படுவது தன் கிளை செறாமை” (கலித்.- 133)

    என அன்பிற்குச் சொல்லப்படும் வரையறை கிளை போற்றுவதன் மேன்மையை வலியுறுத்தும். இக்கொள்கைக்கு மாறுபட வாழ்வதை;

    “கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று” (கலித்.- 34)

    என இழிவாகப் பேசுகிறது செவ்விலக்கியம். உறவினர் கேட்டை நீக்கித் தாங்குவதும், பங்காளிகளை ஊட்டுவதும் இல்வாழ்வான் கடமை என்பதை;

    “கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்” (அகம்.- 93)

    வாழும் வாழ்க்கையே பெருமையுடையது எனப் போற்றுகிறது பண்டை இலக்கியம்.

    பின்புலத்தில் கிளையின் பயன்பாடு 

    அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. பாடலின் பின்புல விளக்கத்தில் ஆங்காங்கு கிளை இடம்பெறுகிறது.

    தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகக் காணப்படுகிறது. பரதவர், குறவர், வேட்டுவர், உழவர் எனப் பல பிரிவினரும் கிளையுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபடக் காண்கிறோம்.

    பரதவர் மீன்வேட்டைக்குக் கிளையுடன் அவரவர் திமிலில் செல்வர் (நற்.- 331; அகம்.- 30) அது மட்டுமின்றி கோட்சுறாவால் கிழிந்த வலையைச் சீராக்கவும் கிளையுடன் கூடி முயன்றனர் (நற்.- 207).

    குறச்சிறார் கிளையுடன் தினைக்கொல்லையில் விளையாடிப் பறவை ஓட்டுகின்றனர் (நற்.- 44)

    ஆறலைக்கள்வர் கிளையுடன் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் (அகம்.- 193)

    உழவர் கருவுற்ற வாளைமீன் கூட்டம் போல விலாப்புடைக்கத் தம் கிளையோடு சேர்ந்து உண்டனர் (பரி.- 7)

    கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பரக்கக் காணப்படுகிறது. குன்றக் குறவன் கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பல பாடல்களில் பதிவாகி உள்ளது (நற்.- 341; திருமுரு.- அடி- 196; அகம்.- 172, 348 ) பரதவனும் கிளையோடு தேறல் மாந்துகிறான் (நற். – 388) வேட்டுவன் தான் எய்த அம்பிலிருந்து ஆமான் உயிர்தப்பி விட்டதால் அணங்குற்றது எனக் கிளையோடு சேர்ந்து மலை மேலுள்ள கடவுளுக்கு மழை வேண்டி வழிபாடு நிகழ்த்தினான் (நற்.- 165)

    அகஒழுக்கச் சித்தரிப்பில் கிளை

    கிளை  நான்கு பாடல்களில் மட்டுமே சிறுபாத்திரத் தகுதியைப் பெறுகிறது.

    மூங்கில் புதர் போலப் பல பங்காளிகளை உடையவன் தந்தை. அனைவரும் போற்றும் படியாக அவனது வாழ்க்கை முறையும் அமைந்து இருந்தது. ஆனால் தலைவி தற்போது தலைவனுடன் போய்த் தீரவேண்டிய கட்டாயமான சூழல்.  தன் களவொழுக்கம் பற்றித் தோழியிடம் வருந்தும் தலைவி;

    “முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த”  (அகம்.- 268)

    தந்தைக்கு அவப்பெயர் வரும்படியாகத் தலைவனோடு தான் கொண்ட நட்பின் விளைவு துன்புறுத்தி விட்டதே எனப் புலம்புகிறாள். இங்கு இயல்பாக ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்படும் பாசப்பிணைப்பு வெளிப்படுகிறது. பங்காளிகளின் முன்னர் தன் தந்தை தலைகுனிய நேரிடுவதை எண்ணி அவள் மனம் வெதும்புவது நம் மனதையும் நோகச் செய்கிறது.

    பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. களவு முற்றிய நிலையில் தலைவனை வரைவிற்குத் தூண்டும் தோழி; தலைவியின் தந்தை மட்டுமின்றிக் கிளைக்கும் அவலநிலை ஏற்படாதபடித் தலைவன் ஒத்துக் கொண்டமை பற்றி எடுத்துரைத்து மனம் ஆறுகிறாள்.

    “கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென” (குறுந்.- 247)

    பெண்கேட்டு வரத் தலைவன் சம்மதித்ததால் விளையும் நன்மையை எடுத்து உரைக்கிறாள். தலைவன் ஒத்துக் கொள்ளாது விலகிவிட்டால் அது தலைவியின் தந்தைக்கு மட்டுமின்றி; அத்தனை பங்காளிகளுக்கும் அவப்பெயராகி விடும். எனவே அந்த இளிவரலினின்று மீள உறுதுணையாகும் தெப்பம் போலத் தலைவன் சம்மதம் கிடைத்து விட்டது எனத் தோழியும் தலைவியும் அமைதியுறுகின்றனர்.

    திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். மோர் விற்று வரும் ஆயர் குலப் பெண்ணின் இளமையும் அழகும்; அவள் மேல் ஆர்வம் மீதூரும் தலைவனையும் மருட்டுகிறது; அவளிடம் மோர் வாங்கும் பிற  பெண்களையும் மருட்டுகிறது. அவரவர் கணவர் கண்ணில் இவள் பட்டுவிட்டால் ஏற்படும் ஏதத்தை எண்ணி;

    “எழுநின் கிளையொடும் போகென்று” (கலித்.- 109)

    விரைந்து அனுப்பிவிட்டனர். வாசலை அடைத்துத் தம் கணவர் அவள் பின்னே போகாமல் பாதுகாத்தனர். ஆய்ச்சி தன் கிளையோடு சேர்ந்து சென்றால் தமது கணவர் அவளைப் பின்தொடர மாட்டார் என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

    கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும்.

    “கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே” (குறுந்.- 80)

    என்ற ஔவையாரின் பாடலடியில் மனைவி பங்காளிகள் துணையுடன் தன் கணவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்கின்ற பொருளே கிடைக்கிறது.

    தொகுத்தோர் இப்பாடலுக்கு எழுதிய அடிக்குறிப்பில் இது பரத்தை கூற்று என்கின்றனர். ஆயினும் தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடிய ஔவையை இது இழிவுபடுத்துவதாக அமைகிறது என்பது என் கருத்தாகும். அதியனால் புரக்கப்பட்ட ஔவைக்கு அந்த  அரண்மனையில் நிலவிய அசூயையான சூழலை இப்பாட்டு காட்டுகிறது. புனல்விளையாட்டிற்குத் தன் கலைக்குழுவினரோடு கிளம்பும் ஔவை; ‘தலைவி (அதியனின் மனைவி) தன் கணவனைப் (அதியனை) பங்காளிகளோடு சேர்ந்து காத்துக் கொள்ளட்டும்; நாம் புனலாடச் செல்வோம்’ என்று சொல்வதாகப் பொருள் கொள்வதில் இடர்பாடு எதுவும் ஏற்படவில்லை.

    முடிவுரை

    உயிரற்ற பொருட்களின் கிளை தொகுதி எனும் பொருள்பட்டது. அஃறிணை உயிர்களின் கிளை கூட்டம் எனும் பொருள்பட்டது. மக்களின் கிளை சுற்றம் என்னும் பொதுப்பொருளையும், இடம் நோக்கிப் பங்காளிகள் என்னும் சிறப்புப் பொருளையும் பெற்றது. மக்களின் கிளையில் இளையவரும் முதியவரும் அடங்குவர். கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது. அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகும். பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும். கிளை என்னும் சிறுபாத்திரம் அன்றைய சமுதாயக் கொள்கையைத் தெளிவுறுத்துகிறது.

    Share
  • Invitation: Madras Month Lecture Series 2020

    Invitation: Madras Month Lecture Series 2020

    Roja Muthiah Research Library  Foundation for South Indian Studies 

    invite you for

    Madras Month Lectures – 2020

    Programme

    Lecture 1: 12 August 2020  | 6.30 p.m. | Online Lecture (In English)

    Exploring Prehistoric Tamilnadu by Prof. Shanti Pappu & Dr. Kumar Akhilesh 

    Zoom ID : 885 8499 7905    

     

    Lecture 2: 19 August 2020  | 6.30 p.m. | Online Lecture (In Tamil)

    Print Culture in Tamilnadu by Prof. V. Arasu

    Zoom ID : 892 9827 3935

    Facebook live – www.facebook.com/rmrl.in

     

    Lecture 3: 26 August 2020  | 6.30 p.m. | Online Lecture (In Tamil)

    சபாநாடகங்களும் தமிழ் சினிமாவும்  by S. Theodore Baskaran

    Zoom ID : 895 7535 4784

    Facebook live – www.facebook.com/rmrl.in

     

    Lecture 4: 02 September 2020  | 6.30 p.m. | Online Lecture (In English)

    Making a Dravidian Voice by Dr. Amanda Weidman

    Zoom ID : 857 7692 7793

    Facebook live – www.facebook.com/rmrl.in

     

    Lecture 5: 09 September 2020 | 6.30 p.m. | Online Lecture (In English)

    The School of Arts, Madras: Imagining a museum of labour by C. P. Krishnapriya in conversation with  Bhooma Padmanabhan

    Zoom ID : 833 2017 1132

    Facebook live – www.facebook.com/rmrl.in

    ———

    About the speakers

    Prof. Shanti Pappu, is the founder/secretary, Sharma Centre for Heritage Education (SCHE), India. She obtained her Ph.D. from the Deccan College, researching the prehistoric archaeology of northern Tamil Nadu, and is a former Homi Bhabha and Charles Wallace fellow, and served as Professor of Prehistory at the Deccan College, Pune. She has over 20 years of experience in prehistoric archaeology, directing (along with Dr. Kumar Akhilesh) multidisciplinary research projects at Attirampakkam, Sendrayanpalayam and other prehistoric sites in Tamil Nadu, under the project, Prehistory and Palaeoenvironments in SE India. She has recruited and coordinated international teams from Spain, France, the USA and Sri Lanka to work in India, and has established collaborations with key research institutions in India. She is researching the life and work of R.B.Foote and is interested in the issues related to the history of archaeology in India. She has published 2 books and over 30 research papers in peer-reviewed journals, including Nature (2018) and Science (2011). She is on the advisory board, INQUA-HaBCom and executive committee, IPPA, and is Joint-Secretary, ISPQS, Board of Studies Members of  Institute of Epigraphy and Archaeology , Tamil Nadu State Department of Archaeology. She has organized and participated in conferences/workshops in India and abroad; and along with K.Akhilesh has organized workshops on prehistory under the R.B.Foote Memorial series in India, and currently the Down Ancient Trails, online lecture forum. She is responsible for developing the public archaeology and outreach programs at the SCHE and in developing the children’s museum. Her interests lie in prehistory and Quaternary studies, history of archaeology, ethno-and experimental archaeology.

    Dr. Kumar Akhilesh, is the Director, Sharma Centre for Heritage Education. He received his Ph.D. from the Deccan College, Pune, under the guidance of the late Prof. V.N. Misra, researching the prehistory of the Damin industries, Jharkhand. He is also a Homi Bhabha Fellow (2016-2018), and worked on a project of experimental archaeology and implications for hominin cognition. He is joint-director of the research program at Attirampakkam and is directing the project Prehistory and Palaeoenvironments in SE India, including research at the site of Sendrayanpalayam and prehistoric sites of southern Tamil Nadu. He is an expert knapper and currently directing a program on experimental knapping to replicate lithic technologies documented at Attirampakkam and other prehistoric sites in south India and elsewhere, and is currently expanding into the field of lithic microwear studies. He has extensive field experience in southern and eastern India and has published in Nature (2018), Science (2011) and other peer-reviewed journals. He has also worked in the field of satellite remote sensing applications for prehistoric research in this region, utilizing GIS and other techniques for both research, culture resource management and predictive modeling to locate new sites. He has organized several workshops on South Asian prehistory and lithic technology, running the R.B.Foote Memorial series for several years now. In addition, he has presented his research at conferences and workshops in India and abroad. He is secretary, INQUA-HaBCom. He has been conducting programs in public archaeology and outreach for children, teachers, ECRs, local stakeholders and the like in the field of archaeology and is involved in developing the children’s museum at the Sharma Centre for Heritage Education.

    Prof. V. Arasu was till recently the Professor and head of the department of the Tamil Department at the University of Madras. His researches have been multidisciplinary encompassing literature, history and culture. He engages Tamil pedagogy with epigraphy, archaeology and sociology. He has guided several researchers who are well placed. He has unearthed several hidden rare material that are relevant to Tamil society and its understanding. He has edited and published more than 45 monographs and collection of articles which are important for understanding of Tamil Studies.

    Theodore Baskaran started his career as Researcher in Tamil Nadu State Archives before he joined the Indian Postal Service in 1964. He retired as the Chief Postmaster General, Tamilnadu Circle. Baskaran has been for writing for more than 45 years. His book, The Message Bearers is a pioneering work on Theatre and Cinema. His second book, The Eye of the Serpent (1996) won the Golden Lotus (Best Book on Cinema) Award in 1997. He has also written several books and articles on film history in Tamil. He has lectured on cinema in many universities including Princeton University, The Australian National University and the University of Chicago.[3] In 2000, he won the Ki Va Ja prize awarded by the Kamban Kazhagam. He was a Hughes Visiting Scholar in the University of Michigan in 2001 and taught a course on Film Studies. He was a jury member at the 2003 National Film Awards. During 1998–2001, he was the Director of the Roja Muthiah Research Library. He is a member of the library’s Board of Trustees. He has also acted in a supporting role in the 2010 Tamil film Aval Peyar Thamizharasi.

    Baskaran is a keen bird watcher and a naturalist. He is a former honorary wild life warden and the South India Representative of the International Primate Protection League. He is a trustee of WWF-India. His collection of essays on nature and wild life conservation has been published as The Dance of the Sarus (Oxford University Press) in 1999. He edited a book of articles on nature titled “The Sprint of The Black Buck” ; Penguin (2009). He has authored a number of books in Tamil on Cinema and environment.

    Dr. Amanda Weidman is Associate Professor of Anthropology at Bryn Mawr College, USA. She is the author of the book, Singing the Classical, Voicing the Modern: The Postcolonial Politics of Music in South India (2006). Her new book on playback singing in the Tamil film industry, entitled Brought to Life by the Voice, will be published in 2021 by University of California Press.

    Bhooma Padmanabhan is a Chennai-based curator, researcher and art program manager. She completed her BA in Fine Arts from Stella Maris College, Chennai, and her MFA in Art History from the M.S. University of Baroda. She started her career in the arts as a curator at Dakshinachitra, following which she moved to Delhi to work at the newly established Foundation for Indian Contemporary Art (FICA). In a decade with this young and rapidly growing grant-making foundation she worked with some of India’s most exciting young artists, supporting critical public art projects and growing FICA’s public programming and educational outreach. She has since curated numerous contemporary art exhibitions, both solos and group shows, experimenting with the curatorial space as platforms for learning, resource sharing, and collaboration. In 2018 she was a researcher with the Kochi Biennale’s Students Biennale programme which focused on studying the material and pedagogic environments of India’s vast network of art colleges. Bhooma is now the co-curator of the 3rd edition of the Chennai Photo Biennale. 

    CP Krishnapriya is a practicing visual artist based in Chennai. She completed her Masters from the Govt. College of Fine Arts, Chennai. Her work is multidisciplinary in nature; she uses paintings, drawings, collage, found objects and sculptural installations to engage with her concerns. The works primarily deal with the self and its relationship with its environment. History and local political discourses are also woven into the imagery that she creates.

    She is interested in understanding the process of art pedagogy. Her other interests are contemporary art practices, history, theatre and environmental studies. She has been part of numerous art exhibitions and art camps. She is also part of art collectives and groups based in Chennai. She was one of curators of the two editions of the Students’ Biennale, Kochi (2016-17 and 2018-19). She was a resident artist at University of Pennsylvania in the fall of 2017 and the summer 2019, supported by the South Asia Centre, Upenn.

    Share
  • இராமாவதாரம்

    இராமாவதாரம்

    ஆ. கிஷோர் குமார் 

    அயோத்தி 

    அணி நகரமாய் விளங்கிய
    ஒரு மணி நகரம்..
    குறையே இல்லாத
    ஒரு தனி நகரம்.
    செழிப்பிலும் களைப்பிலும்
    நிறை நகரம்..

    அறுபதாயிரம் ஆண்டுகளாய்
    அலுக்காமல் ஆண்டு
    கொற்றக்குடையை விரித்து
    வீரத்தில் ஆரமாய்
    வீற்றிருக்கும்
    தசரதன் பெயர் கொண்ட மன்னன்
    அதன் காரணம்..

    தயரதனின்  ஆளுகையில்
    அயோத்தியே மின்னியது.
    அரண்மனையை
    அந்த  ஒளிச்சிதறல் பின்னியது…

    அரசனின்
    அலங்கரிக்கப்பட்ட
    அரண்மனையில்
    ஆயிரமாயிரம் நெய் விளக்குகள்..
    அவற்றில் மூன்று
    தசரதனின் முத்து விளக்குகள்..
    கோசலை கைகேயி சுமித்திரை
    என்ற பெயர் பூண்டு ஒளிர்ந்த
    தசரதனின் ஒளி  விளக்குகள்..
    அவை நெய் விளக்குகள் அல்ல..
    தயரதன் அணைப்புக்காக  எரியும்
    மெய்   விளக்குகள்..

    தகவுடன்  நாடாண்ட  மன்னன்
    மகவு இல்லாமல்
    மனக்குறையில் தவித்து தளர்ந்தான்  ….
    தன் குலகுரு வசிட்டரிடம்
    கொட்டினான் அவன் குறையை..

    வசிட்டர் 

    இவர் மலையளவு கற்றவர்
    இவர் வேள்வி வளர்த்தால்
    வேதமே விரும்பி இவர்
    வாயருகே சென்றமரும்..
    இவர் தசரதனின் குலகுரு..

    குருவின் கட்டளையின்றி
    செருவுக்கும் செல்லமாட்டான் தசரதன்..

    அவன் கண்ணில் தெரிந்த
    கவலையும் திவலையும்
    வசிட்டர் அறிந்தார்..
    பின் வரிந்தார்..

    தசரதனே
    மான்கொம்புடன் கானகத்தில் பிறந்த
    ரிஷ்ய ஸ்ருங்கர் எனும்
    கலைக்கோட்டு முனிவரை
    வணங்கி அழைத்து வா.
    அவர் தலைமையில்
    புத்ர காமேஷ்டி யாகம் நடத்து.
    யாகம் முடிகையில்
    உன் சோகம் தீரும்…

    குருவின் கட்டளையைச்
    சிரமேல் கொண்டான்..
    கலைக்கோட்டு முனியைத்
    தலைமை தாங்க வருமாறு
    தண்டனிட்டு அழைத்து வந்தான் தயரதன்…

    கலைக்கோட்டு முனி 

    இவர் பிரம்மனின் பேரன்..
    பெண் வாசனை அறியாப் பெருமுனி..
    வேதமே இவர் புசிக்கும் சாதம்…
    இவர் பாதம் பட்டால்
    பாலை நிலத்திலும் பெய்யெனப் பெய்யும்.
    அந்த அருமுனி தலைமையில்
    யாகம் துவங்கியது.

    காமத்தீ அழித்த பெருமுனி கை
    ஓமத்தீ வளர்த்தது..
    முனிவனின் மந்திர தாகத்தில்
    வளர்ந்த நெருப்பு…
    நெய்யைத் தண்ணீராய் விழுங்கி
    வளர்ந்தது வான் வரை..

    வேள்வியை வளர்த்தது வேதம்..
    அதிலிருந்து வெளிப்பட்டது பூதம்..
    பூதத்தின் கையில் தங்க வட்டில்..
    வட்டிலில் இருந்தது ஒரு தெய்வ அமுது..

    முனிவர் உரைத்தார்…
    மன்னா வட்டிலில் இருப்பதை எடு..
    உன் மனைவிகளுக்குப் பகிர்ந்து கொடு..
    உன் வம்ஸத்திற்கு கிடைக்கும் வடு..
    முனிவர் உரைக்க
    மன்னன் பணிந்தான்

    வட்டில் அமுதில் பாதியை அவன்
    கோசலைக்குக் கொடுத்தான்..
    மீதியில் பாதியைக்
    கைகேயிக்கும் சுமித்திரைக்கும்
    பகிர்ந்து கொடுத்தான்..

    வெற்றி பெற்றது வேள்வி.
    விடை பெற்றது
    மன்னனின் சோகம்..
    நால்வர் பிறந்தனர்
    அரசிகள் மூவருக்கும்..

    அகிலம் வணங்கும்
    அரங்க நகரப்பன்
    கோசலை வயிற்றில்
    குழந்தையாய்ப் பிறந்தான்..
    ராமன் எனும் நாமம் கொண்டான்

    மற்றைய தினம் போல
    அற்றைய  தினம் இல்லை
    அது பகலவன் தன் கதிர்களை
    அங்குமிங்கும் சிந்திக்கொண்டிருந்த
    பங்குனி மாதம்
    வளர்பிறையன்று
    நவமி திதியில்
    புனர்பூசத்தில்
    நான்காம் பாதம்

    வேதமாய் வந்து
    பரப் ப்ரம்மம் பிறக்கையில்
    ஐந்து கிரகங்களும்
    உச்சத்தில் இருந்தன.
    அச்சுதனை வணங்கி
    அச்சத்தைத் துறந்தன..

    வரதனின் அன்புக்குப்
    பாத்திரமான பரதன்
    அவன் கைகேயிக்குப் பிறந்தான்.
    இலக்குவனும் சத்ருக்கனனும்
    சுமித்திரைக்குப் பிறந்தனர்..
    பார் புகழச் சிறந்தனர்..

    சுபம்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

    தி. இரா. மீனா

    சத்தியக்கா

    சரணர்களின் வீட்டுமுற்றத்தைப் பெருக்கித் தூய்மைப்படுத்துவது இவரது காயகமாகும். ’சம்பு ஜக்கேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    1. “மலர்தூவி வணங்குவது நியமமில்லை
    மந்திரம் தந்திரம் நியமமில்லை
    தூபம் தீபாரதனை நியமமில்லை
    பிறர் பணம்,பிறன் மனை,பிறதெய்வங்களை
    விரும்பாததுவே நியமம்
    சம்பு ஜக்கேஸ்வரனில் காண்பீர் நித்தியநியமம்”

    2. “காதலனுக்கு வேட்கையில்லை எனக்கும் பொறுமையில்லை
    மனதின் வேட்கையறியும் தோழியரில்லை என்ன செய்வேன்?
    மன்மத பகைமையின் அனுபவத்திற்குள் மனம் உள்ளது.
    என்ன செய்வேன்? நாட்கள் வீணாவதால் இளமை கழியுமுன்
    சம்பு ஜக்கேஸ்வரனோடு இணைத்து விடு தாயே.”

    3. “முலையும் கூந்தலுமிருப்பதால் பெண்ணென மெய்ப்பிக்கமுடியாது
    தாடிமீசை கத்தியிருப்பதால் ஆணென மெய்ப்பிக்க முடியாது
    அது உலகின் கண்ணோட்டம், அறிந்தவரின் நீதியன்று.
    கனி எதுவானாலும் இனிப்பே காரணம்
    அழகற்ற மலருக்கு நறுமணமே காரணம்
    இதன் வகையை நீயேயறிவாய் சம்பு ஜக்கேஸ்வரனே“

    சித்தபுத்தய்யாவின் பூண்னியஸ்திரி காளவ்வே 

    “பீமேஸ்வரா“ இவரது முத்திரையாகும்.

    “விரதக் கேடுடையோன் இலிங்கமற்றவனைக் காண்பது
    இறந்த ஞமலியைக் காகம் பார்ப்பது போலாம்
    அவனுடன் தொடர்பு வேண்டாம் பீமேஸ்வரனே“

    சித்தராமா 

    சித்தராமேஸ்வரா பன்னிரண்டாம் நூற்றாண்டின் முதல் வரிசை வசனக்காரர்களில் இவரும் ஒருவர். சிறுவனாக இருந்தபோதே அறியாமை உடைய பக்தராக இருந்தவர் மாடு மேய்ப்பது இவரது காயகம். ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ச்சுனரைக் கண்டார். பின்னர் சொன்னலிகே வந்து கோயில் கட்டினார். அதற்கு ’யோகரமணீய திருத்தலம்’ என்று பெயரிட்டார். இலிங்கம் நிறுவுதல், குளம், ஏரிகள் அமைப்பது ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு செயல் பட்டதால் ’கர்மயோகி’ எனப் போற்றப்பட்டார். அல்லமாபிரபு இவரைக் கல்யாணுக்கு அழைத்து வந்து பசவேசரிடம் ’இலிங்கதீட்சை ’பெற வைத்தார். கல்யாண் புரட்சிக்குப் பிறகு ’சொன்னலிகே’ சென்று இறைவனோடு ஐக்கியமானார். ’கபிலசித்த மல்லிகார்ஜூனா’  இவரது முத்திரையாகும்.

    1. “அங்கத்திற்கு இன்பம் அளித்தவரைக் கண்டேனேயன்றி
    இலிங்கத்துக்கு கொடுத்தவரைப் பார்க்கவில்லை.
    இலிங்கத்துக்குப் பதினாறு வகையில் உபச்சாரங்கள்
    செய்தவரைப் பார்த்தேனேயன்றி
    உள்ளம் கொடுத்தவரைக் காணேன்.
    உள்ளம் கொடுத்தவரைக் கண்டேனேயன்றி
    உள்ளமே இலிங்கமானவரைக் காணவில்லை,
    கபிலசித்தி  மல்லிகார்ஜூனனே“

    2. “ஐயனே! நீரை இரும்பு உட்கொண்டதைப் போல
    ஒலியை அமைதி உட்கொண்டதைப் போல
    கானல்நீரை வெட்டவெளி உட்கொண்டதைப் போல
    என்னை எப்போதும் ஆட்கொள்வாய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    3. “அறிந்தவன் எப்படி இறந்தான்?
    அறிந்தவன் எப்படிப் பிறந்தான்?
    அறிந்தவன் எப்படிக் கொடிய தளையில் சிக்கினான்?
    அறிந்தவனே சிரஞ்சிவியாம் பாராய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    4. “நீரெல்லாம் ஒன்றாம் ;
    பனைமரத்தில் நிலைத்து மதுவென்றானது,
    கற்பகத் தருவில் நிலைத்து அமுதமானது.
    தேகமெல்லாம் ஒன்றே;
    பெண்ணுள் நிலைத்துப் பிறவிக்கு மூலமானது,
    இலிங்கத்துள் நிலைத்துப் பிறவிக்குக் காட்டுத் தீயானது பாராய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    5. “செதுக்கிய கல் இலிங்கமென்றானது
    செதுக்காத கல் வெறுங்கல்லென்றானது;
    வழிபாடு செய்பவன் பக்தனென்றானான்;
    வழிபாடு செய்யாதவன் மனிதனென்றானான்;
    கல்லானாலென்ன, பக்திக்குதவியது
    மனிதனானாலென்ன, பக்திக்குக் காரணமானான்;
    கல் இலிங்கமல்ல, இலிங்கம் கல்லல்ல  பாராய்,
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    6. “கற்பக விருட்சத்தை மரமெனலாமா?
    காமதேனுவைப் பசுவெனலாமா?
    பரிசவேதியைக் கல்லெனலாமா?
    நம் கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் அடங்கியோர்
    அனைவரையும் மனிதரெனலாமோ?

    7. “பார்க்கலாம் கைக்குள் கிடைக்காது
    அறியலாம் அடையாளப்படுத்த முடியாது
    உணரலாம் இணையமுடியாது
    உவமையற்ற இத்தகு மேன்மையை
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே, உன் சரணர் அறிவார்.”

    8. “பக்தர்கள் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்
    திருமணத்தில் இணைகின்றனர்.
    பக்தர்கள்  மண்மீது காதல்கொள்கின்றனர்
    வாங்கி வீடுகட்டுகின்றனர்
    பக்தர்கள் சொத்தின்மீது காதல் கொள்கின்றனர்
    வேதனைக்குள்ளாகின்றனர்
    கபிலசித்த மல்லிகார்ஜூனா!”

    [தொடரும்]

    Share
  • புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்

    புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran.ta@gmail.com.

    “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக”.   (குறள் 391)

    எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாபெறும் ஏமாற்றத்தின் மனித இயலாமையின் மொத்த வடிவமாக விளங்கி வருவது இக்குறள். மனிதனைச் சுயச்சார்போடு சமூக இணைவோடு மனித வளத்தோடு வாழ்விக்க சமூக அமைப்புகள் முயன்ற அனைத்து முயற்சிகளும் நிறைவடையாத ஓவியமாக நிற்பாதைக் காணலாம்.

    இந்தியாவில் முதல் தேசிய கல்விக் கொள்கை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1968 இல் கொண்டு வரப்பட்டது. பிறகு இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை பிரதமர் ராஜிவ் காந்தி ஆட்சியில் நீண்ட போராட்டங்களுக்குப் பின் 1986 இல் கொண்டு வரப்பட்டது. பின்னர் நரசிம்மராவ் காலத்தில் 1992 இல் பல திருத்தங்கள் செய்யப்பட்டது. உலக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த 1990க்கு பிறகு இந்தியாவிலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது. உலகமயம். தனியார்மயம், தாராளமயம், என்ற கொள்கை உலகத்தின் அமைப்பு முறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கல்வி சேவைத் துறையில் இருந்து வணிகத் துறைக்குத் தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கியது. இதன் பிறகு பெரும் பாய்ச்சலாக இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும் மூலதனத்தில் கல்வியை வழங்க முற்பட்டன. பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பரவலாக்கப்பட்டது. அரசு தனது கல்விப் பணியின் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு தனியாரின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியது. உயர் கல்வியின் கட்டுப்பாடுகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டன. பாடத்திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல், கல்லூரிக்கு அனுமதி வழங்குதல் என்று தனது செயல்பாட்டின் மூலம் பொருளாதாரப் பலத்தைப் பெற்றுக் கொண்டது. இது மாபெரும் ஊழலுக்கு வித்திட்டது. பல்கலைக்கழகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்றம் பெற்றன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பொறியியல், கலை அறிவியல், மருத்துவம் ஆகியவை தனியாரின் உள்ளங்கைக்குள் சென்று விட்டன. பெரும் லாபம் ஈட்டும் தொழிலாகக் கல்வி மாற்றப்பட்டது. கல்வியின் செயல்பாடு பரவலாக்கப்பட்டதோடு எளிமையாக்கபட்டது.

    அந்த வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் எதிர்ப்பார்ப்புகளும் செயல்பாடுகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இஸ்ரோவின் தலைவராக இருந்த கே. கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டவை ராமர் கோவிலும் புதிய கல்விக் கொள்கையும் தான்.

    இந்தத் தேர்தல் அறிக்கை பல ஜனநாயகவாதிகளைத் தூங்க விடாமல் தவிக்கச் செய்தது. அவர்களின் கனவில் சமஸ்கிருத அசுரனின் வடிவம் பயத்தை உருவாக்கி வந்தது. அவர்களின் ஓயாத ஓலத்தின் மூலம் இன்று மும்மொழிக் கொள்கை சற்று ஆசுவாசத்தை அனைவருக்கும் அளித்துள்ளது. மேலும் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவமும் பேணப்பட்டுள்ளது. இம் மாறுபாடுகள் உலகலாவிய சிந்தனையின் தாக்கத்தில் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சியில் அமைச்சரவை செயலராக இருந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இப்புதிய தேசிய கல்விக் கொள்கை இன்று (29.07.2020) நடைமுறைக்கு வந்துள்ளது.

    • நடைமுறையில் இருந்து வரும் 10 +2 என்ற முறை மாற்றப்பட்டு  5+ 3 + 3 + 4 என்ற அமைப்பைப் பெறுகிறது.
    • 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
    • 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படுகிறது. தற்போது 3 1/2 வயது இருந்து வருகிறது.
    • 6 ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை மற்றும் தொழிற் பயிற்சி பாடங்கள்.
    • 8 ஆம் வகுப்பு வரையிருந்த கட்டாயக் கல்வி 12 ஆம் வகுப்பு வரை மாற்றப்பட்டுள்ளது.
    • இணைவுப் பெற்ற கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகவும் பிறகு பல்கலைக்கழகமாகவும் மாற்றப்படும்.
    • ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியியல் B.Ed படிப்பு வழங்கப்படும். (B.A, B.Ed ., B.Sc,B.Ed).
    • உயர் கல்வியில் மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் ஓரிரு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு கல்வியைத் தொடரலாம்.
    • மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும். (NTA)
    • உயர் கல்வியில் சேருவோரின் சதவீதம் 26.3% யில் இருந்து 50% ஆக 2035 ஆம் ஆண்டுக்குள் உயர்த்துதல்.
    • நாட்டின் மொத்த உற்பத்தியில் 6% கல்வி நிதி ஒதுக்குதல்.
    • சிறப்பு கல்வி மண்டலங்கள்
    • எம் ஃபில் படிப்பு நிறுத்தம்
    • வெளிநாடுகளில் இந்தியக் கல்வி நிறுவனங்களின் கல்வி வளாகங்களைத் தொடங்குதல்.
    • IIT,IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக பல்துறை மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள் (MERU) அமைக்கப்படும்.

    மேலும் இவற்றை நடைமுறைப்படுத்த பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை,

    • ஒற்றை ஒழுங்கு முறை ஆணையம்
    • தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வி வளர்ச்சி)
    • மாதிரி பொது பல்கலைக்கழகம்
    • சர்வதேச மாணவர் அலுவலகம்
    • மத்திய கல்வி அமைச்சகம்
    • இந்திய உயர் கல்வி கவுன்சில் (மாணவர் சேர்க்கை)
    • தேசிய தேர்வுகள் முகமை (NTA) (நுழைவுத் தேர்வு)

    இவ்வாறு 2019 ஆம் ஆண்டு பொது மக்களின் கருத்துக் கேட்பு பொது தளத்தில் 2 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டன. (குறிப்பாக மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படும் செயல்பாடு பற்றி) இப்போது பல மாறுதல்களுடன் இக்கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது சுட்டுரையில் ” நீண்ட நாட்களாக மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, லட்சக்கணக்கானோரின வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். கல்வி நமது தேசத்தை ஒளி நிறைந்ததாகவும் வளம் மிகுந்ததாகவும் மாற்றட்டும். புரியன கற்றல், புதிய ஆராய்ச்சி. புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த சகாப்தத்தில் புதிய கல்விக் கொள்கை, இந்தியாவை அறிவுசார் மையமாக மாற்றும்” என்று கூறியுள்ளார்.

    நரேந்திர மோடி அவர்களின் சிந்தனை எதிர்ப்பார்ப்பும் வள்ளுவரின் சிந்தனை எதிர்ப்பார்ப்பும் நீண்ட நெடிய கனவு நிலைகளாக மட்டுமே இருப்பதை மனித சமூக வாழ்வியல் யதார்த்தம் நமக்கு உணர்த்த தவறுவதில்லை. சமூகத்தில் மனித ஏற்றத்தாழ்வுகள் மிகவும் நிரப்பமுடியாத இடைவெளியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் இக்கல்விக் கொள்கை எந்த வகை மாற்றங்களை உருவாக்கும் என்று ஆழமாகச் சிந்திக்க வேண்டியத் தேவை  ஏற்படுகிறது. 1986 யில் உருவாக்கப்பட்ட நோக்கம் மேட்டுக்குடி மக்களின் கனவுகளுக்கு அடிப்படையாகவும் பரந்த உழைக்கும் மக்களுக்கு  ஏமாற்றமாகவும் அமைந்ததைப் போல இக்கல்விக் கொள்கை மாறாமல் இருக்க சில கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மூன்று வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புதல் என்பது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய செயலாக உள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சுமையில் இருந்து விடுபடுவதாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் கீழ் நடுத்தர வர்க்கம், உழைக்கும் மக்கள் இதனைச் செயல்படுத்துவது என்பது நடைமுறை சிக்கல்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணரலாம். மூன்று வயதில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் அடிப்படை கட்டமைப்பு இந்திய கிராமச் சமுகத்தில் பெரும்பாலும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

    மாணவர்களுக்கு காலை உணவும் மதிய உணவும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது சிறந்ததாகும். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல் சொல்லி மாளாது. உணவு தரமாகவும், உரிய நேரத்தில் வழங்கப்படுதலும், உணவு பரிமாறுதலில் கவனமும் மிகவும் உளவியல் சார்ந்த கூறுகளைக் கொண்டது. இளம் சிறார்களின் மன வளத்தைப் பாதிக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இக் கல்வி முறை நோய்க்கூறு கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கி விடும் ஆபத்து இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு NCERT க்கு வழங்கப்பட்டுள்ளது. NCERT உருவாக்கும் பாடத்திட்டம் உலகிலேயே சிறந்த அறிவார்ந்த பாடத்திட்டமாகவே இருந்தாலும் சமூக பொருளாதார சாதிய மத ஏற்றத்தாழ்வுகள் கொண்ட மேடு பள்ளமான ஒரு சமூகத்தில் இது சமமான விளைவை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. அது மட்டுமல்லாமல் இது அறிவு ஏற்றத் தாழ்வை மேலும் அதிகரிக்க உதவுமே அல்லாமல் சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திடாது. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது பல முன் தயாரிப்புகளை எதிர்நோக்கி இருக்கிறது. முதலில் சமூக பொருளாதார ரீதியில் ஒரு பொது நிலை சமூகத்தை நாம் உருவாக்கியிருந்தால் இது போன்ற ஒற்றைத்தன்மை கல்வி முறை பலன் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் உச்ச வளர்ச்சியும் உச்ச வீழ்ச்சியும் கொண்ட எதிர் எதிர் துருவங்கள் அமைந்துள்ள சமூகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பாடத்திட்டம் ஒருவருக்கு வரப்பிரசாதமாகவும் மற்றவர்களுக்குச் சாபமாகவும் அமைந்துவிடக் கூடும்.

    அரசியல் சமூக பொருளாதார சாதிய மத ஏற்றத்தாழ்கள் சிக்கல்கள் கவனத்தில் கொள்ளப்படாத எந்தப் புதிய கல்விக் கொள்கையும் ஒட்டு மொத்த சமச்சீரான சமூக அறிவுசார் வளர்ச்சிக்கு வித்திட வாய்ப்பே இல்லை. 2020 ஆம் ஆண்டோ, 2047 இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டோ வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாத ஒரே எதிர்ப்பார்ப்பை முன்வைக்கக் கூடிய விளைவையே ஏற்படுத்தக் கூடும்.

    இன்னும் ஐம்பது ஆண்டுகள் சென்ற பிறகும் வள்ளுவனைத் தாண்ட முடியாத சமூகமாகத் தான் நாம் “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” (குறள் 391) என்று சொல்லிக் கொண்டிருக்க மட்டுமே அதிக வாய்ப்புள்ளது.

    Share
  • ‘விதிமீறல்’ – ஒரு விளக்கம்

    ‘விதிமீறல்’ – ஒரு விளக்கம்

    ச.சுப்பிரமணியன்

    (தொல்காப்பிய விதி நெறி பற்றிய ஆய்வுப் பார்வை)

    முன்னுரை

    ‘காரண காரிய தொடர்ச்சி’ என்பது பழந்தமிழ் உரைகளில் காணப்படும் ஒரு தொடர். ஒன்றுக்குக் காரணமாக இருப்பது மற்றொன்றின் காரியமாக இருக்கும். அதே காரியம் வேறொன்று தோன்றுவதற்குக் காரணமாயிருக்கும். இது இரண்டு பொருள்களுக்குள்ளே சுழற்சி முறையில் நிகழ்வதும் உண்டு. மேகம் மழையாகிக் கடல் நீராகும். கடல் நீர் ஆவியாகி மேகமாகும். இந்தக் காரண காரிய தொடர்ச்சி இருபொருளுக்குள்ளேயே அமைந்துவிடும். பால் தயிராகும்., மோராகும்., வெண்ணெயாகும்., நெய்யாகும். ஆனால் நெய் அவைபோல மீளுருவம் அடைய இயலாது. ஆய்வு என்பதும் இவ்வாறு பல நிலைகளைக் கொண்ட ஒருவழிப் பாதையே. அந்தமில்லாமல் நீண்டு கொண்டே செல்வதுதான் அதற்குப் பெருமை. அதனால்தான் ஆய்வினைத் ‘தொடரோட்டம்’ என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அண்மையில் ‘கடிதொடர் இல்லை:  தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்’ என்னுந் தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் திரு.தி.மோகன்ராஜ் என்பார் எழுதிய கட்டுரையொன்று வல்லமையில் வெளியாகியிருந்தது. அக்கட்டுரையைப் பலமுறை நோக்கியுணர்ந்து ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. ஆய்வாளரின் அந்தக் கட்டுரையின் கையைப் பிடித்துக் கொண்டு இந்தக் கட்டுரை நடைபயில்கிறது.

    பின்னூட்டம் போதாதா?

    மேற்கண்ட கட்டுரை பற்றிய நம்முடைய கருத்துக்களைத் தொடக்கத்தில் பின்னூட்டமாகவே பதிவு செய்துவிடலாமென எண்ணியிருந்தோம். கருத்துக்கள், எடுத்துக்காட்டுக்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதில் பின்னூட்டம் அவ்வளவாகப் பயன்தராது பின்னூட்டத்தில் குறைநிறைகளைச் சுட்டுகிறபோது போதிய தெளிவு அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அதனால் இந்தத் தனிக்கட்டுரை. இந்தக் கட்டுரைக்குக் காரணமானது அந்தக் கட்டுரை. அதற்குரிய பாராட்டுக்களை முதலில் சொல்லி நம் கருத்துக்களைப் பின்னர்ப் பதிவு செய்யலாம். இது வயதில் மூத்தவன் (75) என்ற முறையில் நம் கடமையாகும்.

    • இந்தத் தலைமுறை ஆய்வாளர் ஒருவர் பழந்தமிழ் இலக்கணத் துறையைத் தமது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்த பெருந்துணிச்சலை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.
    • எண்பொருளவாகச் செலச்சொல்லிஎன்பார் வள்ளுவர். கடினமான பொருளை எளிய சொற்களால் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அரிய சான்றாக அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.
    • பால்காட்டாது என்னும் முன்னிலை விகுதிகளுக்கு மாற்றாகப் பொருத்தமான வழக்குச் சொற்களைத் தேடித் தொகுத்திருக்கும் ஆய்வுழைப்பு போற்றத்தகுந்தது.
    • பத்திகளில் நிரல்பட ஆய்ந்த பொருண்மைகளை எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது ஆய்வு நெறியில் ஆய்வாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    மறுப்புரையன்று

    இளம் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்துவதுதான் நம்முடைய நோக்கம். மாணவப் பருவத்தலிருந்தே விவாதங்களில் நமக்கு நம்பிக்கை கிடையாது. எதிலிருந்தும் ஏதாவது பெறமுடியும் என்பதே நம் நிலைப்பாடு. ‘பால்காட்டாத சில வினைகள் மக்கள் வழக்கில் தற்போது  பால்காட்டுகின்றன’ என்னும் ஒருவரிக் கருதுகோளை அடிப்படையாக வைத்து ஆய்வாளர் படைத்திருக்கும் ஆய்வுக்கட்டுரையின் பொருண்மையில் நமக்கு மாறுபாடு இல்லை. அதற்கான உரிமையும் எனக்கில்லை. அது அவரைச் சார்ந்தது. அவருக்குரியது. தரவுகளைக் கருதுகோளோடு பொருத்திக்காட்டுவதும் விளக்கமளிப்பதும் அவர் பணியே. முன் மதிப்பீடு என்பது பெரும்பாலும் கட்டுரையின் புறக்கட்டுமானத்தைப பற்றியதேயாதலின் அதுபற்றியும் நாம் ஏதும் சொல்வதற்கில்லை. எனவே ஆய்வுக்கான கருதுகோள், ஏற்ற தரவுகள், அவற்றுக்கான விளக்கம், பொருண்மை தொடர்பான முந்தைய ஆய்வுக் கருத்துக்கள், தொடர் விவாதம், முடிவு என்பன யாவும் ஆய்வாளரின் தனியுடைமை. எனவே இவைபற்றிய எதிலும் நம் கருத்துக்கு இடமேயில்லை.

    இந்தக் கட்டுரையின் இப்போதைய தேவை

    மேற்படிக் கட்டுரையின் தலைப்பில் காணப்படும் ‘விதிமீறல்’ என்னும் சொல்லே இக்கட்டுரைக்குத் தலைத்தூண்டுதலாகும்.  இரண்டு. அவர் காட்டியிருக்கும் செயற்கையான எடுத்துக்காட்டு. மூன்றாவது வடமொழிப் பயன்பாடு. இந்த மூன்றும் ஆய்வாளர் எழுதியிருக்கும் கட்டுரைப் பொருண்மை பற்றியதன்று என்பது தெளிவாகும். ஆய்வின் அணுகுமுறையில் அளவுக்கு மீறிய தெளிவு வேண்டும். எடுத்துக்காட்டுக்களில் மயக்கம் நிலவக்கூடாது. பழந்தமிழ் இலக்கணம் மற்றும் மக்கள் வழக்காற்றியல் பற்றிய கட்டுரையொன்றில் தேவையற்ற நிலையில் வடமொழிப் பயன்பாடு ஏற்கத்தக்கதன்று. ஆய்வுப் பொருண்மையின் ஆழத்தையும் வெளிப்பாட்டுச் சிறப்பினையும் பாதிக்கின்ற அல்லது எள்ளளவும் கட்டுரைக்குப் பெருமை சேர்க்க இயலாத ‘சரிகைச் சொற்கள்’ ஆய்வுக்கட்டுரைகளில் இடம் பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அல்நெறி களைந்து நன்னெறி காட்டுவது நெறியாளர்கள் கடமை. இந்த நம் கொள்கைகளைத் தமிழியல் ஆய்வு நலம் கருதிப் பொதுவெளியில் பதிவிட வேண்டும் என்னும் நம் துடிப்பே இந்தக் கட்டுரைக்குக் காரணமாகும். எனவே அக்கட்டுரைக்கு இந்தக் கட்டுரையை ஒரு பின்னிணைப்பாகக் கொள்ளலாமேயன்றி எந்த நிலையிலும் மறுப்பாகக் கொள்ளுதல் வேண்டா என வேண்டப்படுகிறது. 

    மக்கள் மொழிக்குத்தான் நூலிலக்கணம்

    மொழி என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மக்களுக்குப் பகிரப்படும் பொருள்களில் ஒன்றன்று. அது ஒரு இனத்தின் பண்பாட்டுக் கூறு. ‘தமிழ்’ என்ற சொல் மொழியைக் குறிக்கும் போது ஒரு இனத்தின் அடையாளமாக அதாவது அவ்வினத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாகத்தான் கருதப்படும். தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழன் பேசுவதால்தான் அது தமிழ். அதனால் அம்மொழியிலக்கணமும் அவர்தம் வாழ்வியலில் பயன்படுத்திய மொழிக் கூறுகளை ஆராய்வதாகத்தான் இருக்க முடியும்.   ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ என்னும் தொடரில் ‘வழக்கு’ என்பது நடப்பியல். ‘செய்யுள்’ என்பது தொல்காப்பியருக்கு முன்னிருந்த வழக்காறு உள்ளிட்ட செய்யுளும். இருந்தவற்றைக் கொண்டு இலக்கணம் செய்த தொல்காப்பியர் சமகாலச் சமுதாயத்தில் காணப்படும் மாற்றங்களையும் பதிவு செய்திருக்கிறார். எதிர்கால நோக்கோடு செய்யப்பட்டனவையே புறனடை. சுருக்கமாகச் சொன்னால் இருந்த நிலை அறிந்து இருக்கின்ற நிலையைச் சுட்டி எதிர்வரும் நிலையை அனுமானிப்பதுதான் இலக்கணம். ‘மக்கட் பெருங்கடல்’ நாளும் பயன்படுத்தும் சொற்களை நோக்க இப்பணி முற்றுப்பெற இயலாத பணி. ஆனால் அரிய பணி. ஒரு மொழியில் எல்லாக் காலத்திலும் நிலவிய அனைத்துக் கூறுகளையும் ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கணம் ஆராய்ந்துவிட முடியும் என எண்ணுவது நெறியன்று. வழிநூல் தோன்றுவதற்கு அதுதான் காரணம். இந்த அடிப்படையில் தொல்காப்பியத்தில் காணப்படும் விதிகளுக்கு மூலம் மக்கள் வழக்கே என்பதற்கான சில சான்றுகளைப் பின்வரும் பத்திகளில் காணலாம்.

    “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
    செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
    முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
    புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்”

    என்னும் நூற்பாவை நோக்கினால்,

    1. செந்தமிழ் நாட்டு மக்கள் வழக்கொடு ஆராய்ந்தார்
    2. முன்னோர் செய்த நூல்களை ஆராய்ந்தார்
    3. முறைப்பட முரணாகா வகையில் சிந்தித்தார்
    4. புலமைத் திறத்தோடு ஆராய்ந்தார்
    5. பிறர் குறை கூறா வண்ணம் கட்டமைப்புச் செய்தார்.

    என்னும் தொல்காப்பியர் இலக்கணம் செய்த நெறிமுறைகளை அறிந்து கொள்ள இயலும். ‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்’ என்னும் தொடர் சிந்தனைக்குரியது. தமிழின் நிலைத்தன்மைக்கு அதுதான் தலையாய காரணம். எல்லா மொழிக்கும் இது பொது. மொழியின் அழிவுக்கு அல்லது மறைவுக்கு மக்கள் நடப்பியல் பயன்பாடு குறைவே காரணமாகும். எந்தப் பொருளும் புழங்கினால்தான் துரு பிடிக்காது. அம்மியிலிருந்து ஆட்டாங்கல்வரை இதுதான் நிலை!

    குரங்கு குற்றியலுகரமா?

    ‘குடகு’, ‘குரங்கு’ என்னும் சொற்களின் ஈறு உகரம் குறைந்தொலிப்பதால் குற்றியலுகரம் என இலக்கணம் சொல்லுவதாகக் கருதுவது பிழை. மக்கள் அப்படி அந்தச் சொற்களை உச்சரிக்கிறார்கள்.

    “நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
    குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்தே”

    எனத் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் என்பதற்காக மக்கள் பேசவில்லை. அவர்கள் அந்தச் சொற்களில் மொழிமுதல் ககர உகரத்தை முழுமையாகவும் மொழியிறுதி உகரத்தைக் குறைந்தும் (குறைத்து அல்ல)   உச்சரிக்கிறார்கள். ‘புணர்மொழியிடை இன்னும் குறுகுவதற்கும்’ மக்கள் வழக்கே காரணம். இவற்றை நுட்பமாக நோக்கி இலக்கணம் செய்ததுதான் தொல்காப்பியரின் அரும்பணி. இது அரும்பணி என்பதாலேயே அவர் மக்களுக்கு இலக்கண விதிகளைப் போதித்தார் எனக் கருதலாகாது.

    நெடிலுக்கு மாத்திரை இரண்டா?

    மாத்திரை பற்றி இலக்கணம் என்ன சொல்லியது? நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்று சொல்லியது. ஆனால் உண்மை நிலை என்ன? ‘ஐ’ என்னும் உயிர்நெடில் மெய்யோடு கலந்து ஒலிக்கின்ற நிலை உட்பட எந்த நிலையிலும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கப்படவில்லை. அப்படி இரண்டு மாத்திரையளவு ஒலிக்கப்படும் சொல் தமிழ்மொழியிலேயே இல்லை. ‘நெடிலுக்கு இரண்டு மாத்திரை’ என்று எழுதியதற்கு மக்கள் வழக்கு தெரியாமற் போனதும் ஏனைய நெட்டெழுத்துக்களின் மாத்திரை ஒப்புமை நோக்கியதுமே காரணம் எனலாம். வழக்கறிந்த நிலையில் வரையப்பட்ட இலக்கணம்தான்,

    “ஓரள பாகும் இடனுமா ருண்டே
    தேருங் காலை மொழிவயினான” (எழுத்து – 57).

    ‘ஐப்பசி’ ‘கைப்பை’ ‘இடையன்’ ‘குவளை’ என்னும் சொற்களில் எல்லாம் ஐகாரம் முழுமையாகப் ஒலிக்கப்படுவதில்லை என்ற வழக்கினை அறிந்தவுடன் ‘நெடில் இரண்டு மாத்திரை’ என்னும் விதி தளர்ச்சியடைந்து விடுவதை அறிதல் வேண்டும். அது மட்டுமன்று ‘கை, பை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிகள் இரண்டு மாத்திரையினின்றும் குறுகி ஒலிக்கும் என்னும் வழக்குண்மையைத் ‘தேருங்காலை என்னும் மிகையினால் உரையாசிரியர்கள் தழுவிக் கொள்கிறார்கள் என்பதையும் அறிதல் வேண்டும். குற்றியலுகர இலக்கணம் முழுமையுமே வழக்கை நோக்கித்தான் அமைந்திருக்கிறது. ‘குடகு’ என்ற சொல்லில் அமைந்துள்ள இரண்டு உகரங்களை வெவ்வேறு அளவினவாக உச்சரிப்பது மக்கள் வழக்கே தவிர தொல்காப்பியத்தின் விதியைப் பின்பற்றி அல்ல.

    வழக்குக்கு வாழ்க்கைப் பட்ட தொல்காப்பியம்

    ‘மரப்பெயர்’ப் புணர்ச்சியில் வருமொழியோடு இணையுங்கால் ‘அம்முச்’ சாரியை பெறும் என்பது விதி. ஆனால் மக்கள் ‘அம்’ என்பதைத் தனித்து உச்சரிப்பதில்லை. ‘புளி அம் கோடு’ என்னாது ‘புளியங்கோடு’ என்றுதான் சொல்லுகிறார்கள். ‘அம்’ மின் ஈறு மகரமாக இருப்பினும் அது திரியும் என்பது வழக்கு. ஒரே வகையான புணர்ச்சிக்கு எத்தனை வகையான திரிபு என்பதை அறிந்து கொண்டால் மொழியிலக்கணத்தில வழக்கின் ஆதிக்கம் புரியக் கூடும்.

    “அம்மின் இறுதி கசதக் காலை
    தன்மெய் திரிந்து ஙஞந ஆகும்” (எழுத்து – 129)

    புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல் (மக்கள் வழக்கு) நுட்பமாகச் சொன்னால் ‘புளியங்கோடு’ என்னும் சொல் வழக்கு. தொல்காப்பியம் கண்டறிந்த சொல் அன்று. அந்த வழக்குச் சொல்லை ஆராய்ந்த தொல்காப்பியம் அதில் இரண்டு பெயர்ச்சொற்களை ஒரு சாரியை இணைக்கிறது என்பதையும் அச்சாரியை வருமொழி எழுத்திற்கேற்பத் திரியும் (இன எழுத்தாக மாறும்) என்பதைக் கண்டறிந்து கூறுகிறார். இங்கேயும் அவர் மக்கள் வழக்குக்குத்தான் முன்னுரிமை தருகிறார்.

    எய்தியது விலக்கல் ஏன்?

    அளவுப்பெயர்கள் ஏகாரச் சாரியைப் பெற்று முடியும் எனக் கூறும் தொல்காப்பியம் “உயிரும் புள்ளியும் இறுதியாகி அரையென வரூஉம்” (164) என்னும் நூற்பாவில் சாரியை இல்லாத சொற்களைப் (உழக்கரை, செவிட்டரை) பட்டியலிடுகிறது.

    வளமோடு வாழ்வது சரியா?

    மகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்குங்கால் சாரியை பெறும் என்பது விதியன்று, மக்கள் வழக்கு. வழக்கு நோக்கிய தொல்காப்பிய விதி. முறத்தில் அரிசி பொறுக்கும் பாட்டிகள் உண்டு. முகத்தில் முகம் பார்க்கும் கன்னிகள் உண்டு. மரத்தில் ஏறிப் பழத்தைப் பறித்தவர்கள் உண்டு. இத்தனைச் சொற்களையும் கண்ட தொல்காப்பியம்

    “மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை” (185)

    என விதி செய்கிறது. ஆனால் இங்கே நடப்பது என்ன? நாம் படித்தவர்கள். முனைவர்ப் பட்டம் பெற்றவர்கள். ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறவர்கள். கல்வி நிலையங்களில் பேராசிரியர்கள். என்ன செய்கிறோம்! இந்த வழக்கை மறுதலிக்கிறோம் “அளவோடு பெற்று வளமோடு வாழ்கிறோம்”. ‘வளத்தோடு’ என்பதுதான் வழக்கு என்பதைக்கூட நாம் தெரிந்தே மறுதலிக்கிறோமே? இதனால் ஒரு பண்பாட்டுக்கூறு சிதலமடைவது தெரியவில்லையா? ஒரு மாணவன் மரமில் ஏறிப் பழமைப் பறித்தேன் என்று எழுதினால் அதனை ஏற்றுக் கொள்வார்களா? இது விதிமீறலா இல்லையா? திட்டமிட்ட மீறல்! மொழியழிக்கும் சதி!. ஒரு நூலின் இலக்கண விதி மக்கள் வழக்கில் இயல்பாக மாறி வழங்குவதை விதிமீறல் என்றால் ஒட்டுமொத்த சமுதாயத்தையே மறுதலிக்கும் இச்செயலை என்னவென்பது?

    வழக்கோடு போராடித் தோற்கும் இலக்கணம்

    ‘பல’, ‘சில’ என்னும் சொற்கள் தமக்குள் புணருமாயின் லகரம் றகரமாகத் திரிந்து புணரும் என்று விதிசெய்கிறது தொல்காப்பியம்,

    “தொடரல் இறுதி தம்முன் தாம் வரின்
    லகரம் றகர ஒற்று ஆகலும் உரித்தே” (எழுத்து – 214)

    ‘பற்பல’, ‘சிற்சில’ எனப் புணரும் என விதித்த அந்த விதி அடுத்த சில நொடிகளில் மாற்றம் பெறுகிறது. காரணம் வழக்கு வேறுமாதிரியாகவும் அமைந்து விடுகிறது. எப்படி அமைந்து விடுகிறது?. ‘பலப்பல, சிலச்சில’ என அமைந்தவுடன் தொல்காப்பியம் இலக்கணவிதியின் பரப்பளவை இன்னும் விரிவு செய்து கொள்கிறது.

    “வல்லெழுத்தியற்கை உறழத் தோன்றும்” (எழுத்து – 215)

    என்று எழுதுகிறது. அதனை எழுதிய பிறகும் அதாவது மக்கள் வழக்கின் பெரும்பரப்பின் எல்லை கண்ணுக்குத் தெரியவில்லை. பலபல, சிலசில, பல்பல, சில்சில எனவும் வழங்கப்படுவது அறிந்த நச்சினார்க்கினியர் என்ன செய்கிறார். தொல்காப்பிய விதிகளுக்குள் அடைத்து அதற்குப் பெருமை சேர்க்க எண்ணுகிறார். எண்ணி என்ன செய்கிறார்? மிகையினால் தழுவிக் கொள்கிறார்!. மேலும் பல் என்னும் சொல் புணர்ச்சியில் ‘பன்’ எனத் திரிவதையும் ஆய்தமாக மாறுவதையும் இதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி இல்லை எனத் தெரிந்து கொண்டு இப்படி எழுதுகிறார்.

    “இயற்கை என்றதனான் அகரம் கெடத் திரிந்தும் திரியாதும் உறழ்ந்து முடிதலும் கொள்க. தோன்றும் என்றதனான் அகரம் கெட லகரம் மெல்லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்துமுடிதலும் கொள்க”

    ஐந்து வகையான வழக்குகளுக்கு ஒரு வழக்கிற்குத்தான் ‘தீர்ப்பு’ எழுதப்படுகிறது. மற்றவற்றை உரையாசிரியர் மிகையில் அடக்குகின்ற முயற்சிதான் தொல்காப்பியத்தில் நடந்தேறியிருக்கிறது. மக்கள் விதியை மீறியிருக்கிறார்கள் என்றால் எந்த இடத்தில் மீறியிருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமல்லவா?

    ‘மகவின்கை, மகவின் செவி’ என்பன போன்ற சொற்களைக் கண்டு, ‘மகப் பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை’ (218) என விதி செய்த தொல்காப்பியம் அது அத்துச் சாரியைப் பெற்றும் முடியலாம் என்பதைக் கண்டவுடன் அடுத்த நூற்பாவிலேயே “அத்தவண் வரினும் வரைநிலை இன்றே” (219) என வழக்குக்கு வளைந்து வழிகொடுப்பதைக் காணலாம்.

    ‘ஒன்பது’ என்ற எண்ணுப்பெயர் ‘நூறு’ என்னும் எண்ணுப்பெயரோடு இணைகிறபோது ‘தொள்ளாயிரம்’ என வழங்கப்படுவது மக்கள் வழக்கு. ‘நூறின் மடங்கு எப்படி ஆயிரம் ஆனது?’ என்னும் வினா எழுவது சரியே. இன்றைக்கும் மக்கள் வழக்கில் ஒன்றினைக் காணமுடியும். ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மேல் சென்றால் அதனை முழுமையாகச் சொல்லாமல் அதனை முன்னிறுத்திச் சில்லரையைச் ‘சொச்சம்’ என்பர். சான்றாக ஆயிரத்து இருபது (1020) என்றால் அதனை முழுமையாகச் சொல்லாமல் ‘ஆயிரத்துச் சொச்சம்’ என்பர். இந்த அளவு ஆயிரத்துக்குக் குறைவாக அமையுமானால் அப்போது ‘இருபது குறைய ஆயிரம்’ என்பார்களே தவிர ‘தொள்ளாயிரத்து எண்பது’ எனச் சொல்வது வழக்கன்று.

    “மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தும்
    இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது” 103

    முதலிய நூற்பாக்களால் தொல்காப்பியமே மக்கள் வழக்காகிய இதனைப் பின்பற்றியிருக்கிறது. இந்த நெறியைப் பின்பற்றித்தான் ஆயிரத்துக்கு நூறு குறைவாக இருக்கிறபோது அதனை ‘ஒன்பது நூறு’ என வழங்காமல் தொள்ளாயிரம் என வழங்கியிருக்க வேண்டும். இது அனுமானமே. ஆனால் தொல்காப்பியம் என்ன விதி சொல்கிறது தெரியுமா?

    “ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்றே
    முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
    நூறென் கிளவி நகாரம் மெய்கெட
    ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப!
    ஆயிடை வருதல் இகர ரகாரம்
    ஈறு மெய்கெடுத்து மகரம் ஒற்றும்”

    இல்லாத ஊருக்குப் போகாத பாதையைத்தான் தொல்காப்பியம் காட்டுவதாகக் கட்டுரையாளர் உணர்கிறார்.

    1. ‘ஒ’ ‘தொ’ ஆகும் (ஆகுமா?)
    2. ‘ன்’ ள் ஆகி இரட்டும் (எப்படி இரட்டும்?)
    3. நூறு என்பதிலுள்ள நகரம் கெடும் (ஏன் கெடவேண்டும்)?
    4. ‘ஊ’” (நூ) ஆ ஆகும். எப்படி ஆகும்?
    5. ‘இ’ ரகாரம் ஆகுமாம். எப்படி?

    மக்கள் வழக்கு என்பது கடல். இலக்கண வரையறை என்பது கரை. கடல்தான் கரையுடைக்குமேயன்றிக் கரை கடலை ஒன்றும் செய்ய இயலாது. எல்லா வழக்குச் சொற்களுக்கும் இலக்கணம் கூறிவிடலாம் என எண்ணியதன் விளைவாகக் கூட இந்த நூற்பா அமைந்திருக்கலாம். ஏனைய எண்ணுப்பெயர் புணர்ச்சிகளை நிரலாகக் கூறி வந்த தொல்காப்பியம் தொள்ளாயிரத்தைப் புறனடையில் அடக்கியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது. அவ்வாறின்றி விளக்கமுறை இலக்கணம் கூறியது அவ்வளவு சரியானதன்று என்பது போல அறிஞர் தமிழண்ணல் இந்த நூற்பாவிற்குச் “சுற்றி வளைத்து விதி கூற வேண்டியதில்லை” என எழுதுகிறார். இந்தச் சான்றிலிருந்து தொல்காப்பியத்தை விஞ்சியது தழிழர்களின் பண்பாட்டு வழக்கு என்பது பெறப்படும். மொழியின் கட்டமைப்புக்கு (புலனெறி வழக்கத்தின் அடிப்படையில்) முறையான இலக்கணம் கூறி வழிநடத்திய தொல்காப்பியம் வழக்குச் சொற்களுக்கு இலக்கண விதிகளை வகுப்பதில் மாபெரும் வெற்றியடைந்ததாகக் கூறமுடியாது.

    குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை

    விதிமீறல்களுக்கான எடுத்துக்காட்டொன்றில் உடம்படுமெய் பெறுவதற்குப் பொதுப்பெயர், விரவுப்பெயர் என்னும் நிலைப்பாட்டைக் கட்டுரையாளர் சுட்டுவது தெளிவுறவில்லை. வல்லினம் மிகுவதற்கும் மிகாமைக்கும், உடம்படுமெய் பெறுவதற்கும் பெறாமைக்கும் எந்தவிதியில் விரவுப்பெயர், பொதுப்பெயர் என்பன அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டுரையாளர் சுட்டியிருக்க வேண்டும். இனி,

    “நான் முத்தை வாங்கினேன் / நான் முத்துவைப் பார்த்தேன்.”

    என்னும் எடுத்துக்காட்டால் ஒன்று பொதுப்பெயர் என்றும் மற்றொன்று சிறப்புப்பெயர் என்பதும் சற்றும் பொருந்தாது. இரண்டு காரணங்கள். ஒன்று, உடம்படுமெய் தோன்றுவதற்குப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என்னும் வரையறை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்த எடுத்துக்காட்டில் உள்ள இரண்டு முத்துக்களுமே குற்றியலுகரமே!. முத்தை வாங்கியவன் முத்தைப் பார்த்திருக்க இயலாதா? இல்லை முத்துவைப் பார்த்தவன் முத்துவை வாங்கியிருக்கக் கூடாதா? இரண்டு, தொடர்களிலும் எள்ளின் முனையளவும் வேறுபாடு இல்லை. பூங்கொத்து மற்றும் இலக்கணக்கொத்து என்னும் இரண்டு தொகைச் சொற்களையும் பொருளில் வேறுபடுத்திக் காட்டுவதில் தெளிவில்லை. சொற்கள் வினைகளால் வேறுபட்டு நிற்கும். அவ்வளவுதான்!. கட்டுரையாளர் தந்திருக்கும் விளக்கம் மேலாய்வுக்கு உரியது.

    வலிமையில்லாத சான்றுகள்

    ஆய்வுக்கான வலிமையான கருதுகோளை உருவாக்கிக் கொள்வதும் எடுத்துக் கொள்வதும் பாராட்டக் கூடியதுதான். ஆனால் சிக்கல் எங்கே தோன்றும் என்றால் அக்கருதுகோளை நிறுவுவதற்கான தரவுகள் அதனினும் வலிமையாக அமைதல் வேண்டும். சான்றுகள் தரவுகளுக்குத் துணை நிற்பதாக அமைதல் வேண்டும். இந்தக் கட்டுரையில் அவை  முழுமையாக அமைந்திருக்கிறதா என்பது நோக்கத்தக்கது. சில எடுத்துக்காட்டுக்கள்,

    1. தமிழில் சொற்களின் மீநிலைப் பகுப்புஎன்கிறார் ஆசிரியர். இந்தத் தொடரில்மீநிலைஎன்னும் சொல்லாட்சி இனம் சுட்டியதா? இல்லையெனின் இது வெற்றெனத் தொடுத்தல் ஆகாதா? தமிழ்ச் சொற்களின் பகுப்பு என்றாலே அமையாதா?
    2. ‘வான் பான் பாக்கு’ முதலியவை இலக்கிய வழக்குகள். மக்கள் வழக்கு என்பதற்குச் சான்றுகள் இல்லை.
    3. ‘தொன்மைத்தாகலின்’ எனத் தனித்தமிழ் பேணும் ஆசிரியர் ‘வாசித்து’ என்று எழுதுவது ஏன்? ‘மரியாதை ஒருமை’ என்னும் பயன்பாடு தமிழில் உண்டா? ‘வழக்கின் ஆகிய உயர்சொற்கிளவி’ என்னும் தொல்காப்பியம் கடினமாக இருக்கிறதா என்ன?
    4. ‘தொடர்’ என்றால் புரியாதா? வாக்கியம் என்றால்தான் புரியுமா? ‘தொடரையே’ புரிந்து கொள்ளாத புறத்தேர்வாளர் ஆய்வேட்டை எப்படி மதிப்பிட இயலும்? ‘தமிழ்ச்சமுதாயம்’ என்றால் அது தமிழ்ச்சமூகத்தைக் குறிக்காதா? பாரத சமுதாயம் வாழ்கவே எனப் பாரதியார் பாடவில்லையா? இருபத்தோராம் நூற்றாண்டிலும் இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தால் மொழித்தூய்மை பற்றியும் 75 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மொழிப்போர் பற்றியும் கட்டுரையாளரின் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது.
    5. ‘பற்றாக்குறை’ போதாமையாவதால் கட்டுரைப் பொருள் சிறந்துவிடுமா? இது பயண இலக்கியத்தைப் பிரயாண இலக்கியம் எனச் சொல்லுவதுபோல் இருக்கிறது. இந்தப் பயன்பாடே அடிப்படை தவறு. வரையறை இல்லாத ஒன்றுக்குப் போதாமை எப்படி வரும்? ‘பிறமொழித்தாக்கம்’ என்பதைப் ‘புறமொழித்தாக்கம்’ என மாற்றியுரைப்பதன் பயன் என்ன? ‘பொதுமக்கள்’ என்பதை ‘வெகுமக்கள்’ என்பதால் என்ன பயன்? பயனற்ற மாற்றத்தால் யாருக்கு என்ன பயன்?
    6. தற்காலத்தில் தமிழ்மொழியில் வழங்கப்படும் இலக்கண முறைப்படி அமையாத தொடர்கள்’ என்று ஒரு தொடர் வருகிறது. வழக்கு இலக்கண முறையின்படிதான் அமைய வேண்டும் என விதியேதும் உண்டா? 
    7. ‘இலக்கணங்களில் இவை வரையறுக்கப்படாத நிலையில் இம்மாற்றம் இலக்கண மீறல் ஆகும்’ எனவும் ஒரு தொடர் வருகிறது. இலக்கணம் வரையறுக்கப்படாத நிலையில் வழங்கப்படும் மாற்றம் எப்படி மீறலாக முடியும்?
    8. ‘அவனுங்க வந்தானுங்க’ என்பதன் செம்மையான வடிவம் ‘அவன்கள் வந்தான்கள்’ என்பதும் ‘அவளுக வந்தாளுக’ என்பதன் செம்மையான வடிவம் ‘அவள்கள் வந்தாள்கள்’ என்பதும் என எழுதுகிறார் ஆசிரியர். இவை செம்மையான வடிவம் என்பதற்கான அளவுகோல் எது? அல்லது எந்த நூல்? சிக்கலே பலர்பால், ‘இருபால் பன்மை’ காட்டாது என்பதுதானே? செம்மையான வடிவமே இல்லாத போது அதனை ஊகம் செய்வது நெறியன்று செம்மையான வடிவத்திற்குக் கட்டுரையாசிரியர் சான்று தந்திருக்க வேண்டும்! (பால் காட்டும் முன்னிலை விகுதிகளுக்குப் பாரதியையும் பாரதிதாசனையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் இதற்கும் எடுத்துக்காட்டு தந்திருக்க வேண்டும் அல்லவா? படர்க்கைப் பலர்பால் பால் காட்டும் நிலையில் அடைந்திருக்கும் வழக்கு மாற்றங்களை மட்டுமே கட்டுரையாளர் சுட்டியிருந்தால் இந்த வினா எழுந்திருக்காது.
    9. ‘முத்தழகைப் பார்த்தேன்’ ‘முத்தழகுவைப் பார்த்தேன்’ என்பதெல்லாம் கட்டுரைக்காக உருவாக்கப்பட்ட செயற்கையான எடுத்துக்காட்டுக்களாகத் தோன்றுகின்றனவேயன்றி உண்மையான வழக்காகத் தோன்றவில்லை. இத்தகைய கருத்தினை நிலைநாட்ட கட்டுரையாளர் விரும்பியிருந்தால் “விமானம் கொழும்புவில் தரையிறங்கியது’, ‘வைரமுத்துவைக் கண்டேன்’, ‘பெங்களூருவில் கலகம்” என்பன போன்ற எடுத்துக்காட்டுக்களைக் காட்டியிருக்கலாம்.
    10. ‘அரசிடம் முறையிட்டேன்’ என்று எழுதுபவர் யார்? ‘அரசுவிடம் முறையிட்டேன்’ என்று எழுதுபவர் யார்? இரண்டுக்குமான பொருள் வேறுபாடு என்ன?
    11. ‘முத்தழகு என்பது குற்றியலுகரச் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையிலும்’ என்னுந் தொடரில் கட்டுரையாசிரியர் முத்தழகு என்னும் சொல்லைக் குற்றியலுகர ஈறாக நோக்குகிறாரா? சிறப்புப்பெயராக நோக்குகிறாரா? மரப்பெயர், எண்ணுப்பெயர் முதலிய குற்றுகர ஈறுகளைப் பற்றி ஆராயும் எழுபத்தெட்டு நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியக் குற்றியலுகரப் புணரியலில் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் புணர்ச்சி ஆராயப்பட்டுள்ளதா? குற்றியலுகரத்தில் அத்தகைய பகுப்பு உண்டா?
    12. வழக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கான களம் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் பயன்பாடா? குற்றியலுகரம் பற்றியதா? அல்வழி வேற்றுமைப் பொருளா என்பதில் கட்டுரையாளர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஆய்வுக்களத்தின் பொருள் வரையறை இன்னும் செப்பமாயிருந்திருக்கக்கூடும்.

    நிறைவுரை

    பொதுவெளியில் செய்யப்படும் பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் பாராட்டுக்கள் மறுப்புக்கள் என்ற அளவில் அமைவது இயற்கை. இந்தக் கட்டுரை அவ்விரண்டோடும் ஆய்வு நெறிகளையும் ஆய்வுக்கட்டுரைகளில் பின்பற்றப்பட வேண்டிய மொழித்தூய்மையையும் சுட்டிக் காட்டுகிறது. ஆய்வேடுகளில் பின்பற்றப்பட வேண்டிய மொழித்தூய்மையை அறிஞர் மு.வ. நூல்களிலும் மொழிஞாயிறு பாவாணர் ஐயா நூல்களிலும் பரக்கக் காணலாம். கருதுகோளுக்கான தரவுகளைத் திரட்டுங்கால் கையில் அகப்படுகிற தரவுகளையெல்லாம் கருதுகோளில் திணித்துவிடலாம் என எண்ணுதல் இயற்கையே. கருதுகோள் வலிமை பெறுவது தரவுகளின் எண்ணிக்கையால் அல்ல. தரத்தால். எடுத்துக்காட்டுக்கள் இயல்பாக இருக்க வேண்டுமேயன்றி நாமே இட்டுக்கட்டியதாக ஆகிவிடக் கூடாது. மொழி மக்கள் சமுதாயத்தின் மாபெரும் உடைமை. இலக்கண ஆசிரியர்கள் அதற்குக் காப்புரிமை கோர இயலாது. தொல்காப்பியம் தனக்கு முந்தைய கால வழக்குகளையும் தன்கால வழக்குகளையும் புலனெறிவழக்கத்தோடு ஆராய்ந்திருக்கிறது. அவர் நூலெழுதிய பிறகு உண்டான மாற்றங்களை உரையாசிரியர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்த வகையில் சொல்லதிகாரத்தின் உரியியல் நச்சினார்க்கினியர் உரை சேனாவரையரைப் பின்னுக்குத்தள்ளி விடுவதைக் காணலாம். எனவே ‘விதிமீறல்’ என்பதற்கே இடமில்லை. கருத்துப் பரிமாற்றங்களின் தேவை கருதி வழக்கு மொழியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் ‘விதிமீறல்’ என்றால் முனைவர்ப் பட்டம் பெற்று துறைத்தலைமை பீடத்தை அணிசெய்யும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஏனைய கல்வி நிலையங்களில் பணியாற்றும் தமிழாசிரியப் பெருமக்களும் தெரிந்தே செய்கின்ற பிழைகளை எச்சொல்லால் சுட்டுவது?

    குறிப்பு:  இக்கட்டுரையின் ஒவ்வொரு அசைக்கும் நாமே பொறுப்பு. எவரும் எதற்கும் தொடர்பு கொள்ளலாம். (sangilisubramanian46@gmail.com)

    Share
  • சா.கந்தசாமியும் எனது நினைவுகளும்

    சா.கந்தசாமியும் எனது நினைவுகளும்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்
    ramachandran.ta@gmail.com.

    மதுரை தியாகராசர் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் படிக்கும்போது சா. கந்தசாமி எனக்கு அறிமுகம் ஆனார். தமிழ்த்துறை நூலகம் பல அரிய புத்தகப் பொக்கிஷங்களைக் கொண்டதாக இருந்தது. பேராசிரியர்கள் பேச்சிமுத்து, அருணகிரி, கு.ஞானசம்பந்தம் போன்றவர்களின் ஊக்கத்தால் வாசிப்புப் பழக்கம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. சா.க வின் கதைகளைக் கைகளில் வைத்துக்கொண்டு கல்லூரியின் ஆற்றங்கரையோரத் தென்னந்தோப்புப் பகுதியில் படித்துத் திரிந்தது நினைவுக்கு வருகிறது. ஆலமர நிழலும் அரசமர இலையோசையும் இதம் தர இவரின் கதைகளோடு பயணித்தக்  காலம் அது. தெப்பக்குளம் நடு மண்டபத்தில் சாயங்காலம் வரை இவரின் கதைகளோடு உறவாடிய தருணங்கள் அற்புதமானவை.

    சாயாவனம், விசாரனைக் கமிஷன், அவன் ஆனது, தக்கையின் மீது நான்கு கண்கள், ஆறுமுகச்சாமியின் ஆடுகள் போன்றவை இவரின் முக்கிய படைப்புகளாக விளங்கின. மேலும் கனடா குறித்த தனது பயண அனுபவங்களை இரண்டு நூல்களாக எழுதியுள்ளார். இவற்றைக் கவிதா பதிப்பகம் செம்மையாகப் பதிப்பித்துள்ளது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் சாயாவனத்தை வெளியிட்டுள்ளது.

    இலக்கியத்தளத்தில் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களிலும் (சாகித்ய அகாதெமி) இவரின் சமரசமற்ற பங்களிப்புப் போற்றத்தக்கது. ‘அவன் ஆனது’ என்ற நாவலைப் படித்து பெரும் வியப்பிற்கு உள்ளானேன். எளிய மனிதர்கள் சமூக அவலங்களில் சிக்கியடையும் அனுபவங்களின் தொகுப்பாக இந்நாவல் விளங்கியது. சமூக இயக்கத்தில் தன்மை இணைத்துக் கொள்ள முடியாதவனின் அவல வாழ்க்கை இந்நாவல். இவரின் நாவல்களில் கதைக் கூறும் முறையும் கதை இயங்கிச்செல்லும் போக்கும் மிகவும் யதார்த்தத் தளத்தை அடைந்து விடுகிறது. அழகியல் கூறுகளோ கலைத்தன்மையை நோக்கிய எத்தனிப்புகளோ இல்லாமல் கதைகள் நகர்ந்து செல்கின்றன.

    தமிழ்ப் படைப்பாளி என்ற தோரணையில் இருந்து விடுபட்டு ஒரு கம்பிரமான மிடுக்கான தோற்றத்தில் வலம் வரும் ஆளுமையாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவர். சமரச மற்றவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் பொதுநிலையிலிருந்து மீறி தனது இருத்தலை மிகவும் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டவர் சா.க அவர்கள்.

    இந்திய அளவில் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ப் படைப்பாளிக்கும் மிகப் பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தவர் சா.க என்னும் கம்பீரமான ஆளுமை. தமிழ் இலக்கியச் சமூகம் இவரின் இழப்பை மனக் கனத்தோடு கடந்து செல்கிறது.

    ஒரு படைப்பாளிக்கு ஒரு சமூகம் செய்யும் உண்மையான நினைவேந்தல் என்பது அவரின் படைப்புகளைப் புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதும் பரவலாக்குவதும் தான். பல விருதுகளைப் பெற்றுள்ள, பலருக்கு  விருதுகள் கிடைக்க காரணமாக இருந்துள்ள இவரின் படைப்புகளைப் போற்றுவோம். அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.  ஓர் இலக்கிய முன்னோடியை நினைவு கூர்வோம்.

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 3

    பரிமேலழகர் உரைத் திறன் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகின் காரணம் கடவுளா? கடவுளின் காரியம் உலகமா?

    முன்னுரை

    ‘பார்வை’, ‘நோக்கு’ இவற்றிடையே வேறுபாடு உண்டு. ‘பார்வை’ என்பதைத் திருவள்ளுவர் ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு’ என்று விளக்கிக் காட்டுவார். கண்ணின் வினையாக மட்டும் நிகழும்போது அது பார்வை. மனமும் அறிவும் இணைந்து கண்வழிச் செயல்படுவது நோக்கு. இதனையும் திருவள்ளுவர் ‘குறிக்கொண்டு நோக்குதல்’ என்னும் தொடரால் குறிப்பர். பரிமேலழகர் அத்தனைக் குறட்பாக்களையும் படித்து அல்லது பார்த்து உரையெழுதாமல் ‘நோக்கியே’ உரையெழுதியிருக்கிறார். இதனை நூலின் முதற் குறட்பா உரையிலேயே அறிய முடியும். “திருவள்ளுவர் என்ன கருதி இப்படி எழுதியிருக்கிறார்?” என்னும் பெருங்கவலை கொண்டவர் பரிமேலழகர். அப்படி அவர் கவலைப்பட்டு உரையெழுதிய குறட்பாக்களில் ஒன்றின் உரையருமையை இம்மூன்றாவது கட்டுரையில் காணலாம்.

    திறனானறியும் குறட்பாவும் உரையும்

    திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற் குறள்,

    “அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”

    என்பதாகும். இதற்குப் பரிமேலழகர்,

    • “எழுத்தெல்லாம் அகரம் முதல” — எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன
    • “உலகு ஆதி பகவன் முதற்று” — உலகம் ஆதி பகவனாகிய முதலை உடைத்து

    எனப் பொழிப்புரை எழுதியிருக்கிறார். குறட்பாவின் கிடக்கை நிலை மாறாது  உரைநடைப் பாங்கிற்காகச் சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப்  பொழிப்புரை கண்டிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்கான விளக்கவுரை பின்னாலே இப்படி அமைந்திருக்கிறது.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும் ஆதிபகவற்குத் தலைமை, செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி ‘எல்லாம்’ என்றார். ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகன் என்பது கருத்தாகக் கொள்க! ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

    விளக்கவுரையில் காணப்படும் உரையருமை

    இனிப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கவுரையை ஒவ்வொரு தொடரையும் சிந்தனைக்குட்படுத்தினால் அவ்வுரை எழுதுவதற்கு அவர் எவ்வளவு காலம் தம் சிந்தனையைச் செலவழித்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தொடராய்வு தொடர்கிறது.

    1. “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு. ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார்.  அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று. எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர்.
    2. அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார் என்பதாம். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.
    3. “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார்.
    4. “ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார். வரிவடிவம் செயற்கை. நாத வடிவம் இயற்கை. அகரத்திற்குத் தலைமை நாதவடிவினால் எல்லா எழுத்துக்கள் உள்ளும் கலந்து நிற்பது. இறைவன் உலக உயிர்களை அறிவது செயற்கை உணர்வால் அன்று. இயற்கை உணர்வால் முற்றும் அறிகின்ற பேராற்றல் உடையவன். ‘காத்தும் படைத்தும் கரந்தும்’ என்பர் அடியார். தனித்தும் கலந்து நிற்பது இறையியல்பு. ‘ஏகன் அநேகன்’ என்பது திருவாசகம்.
    5. ‘ஆதிபகவன் என்னும் இருபெயரோட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு” என்று எழுதுகிறார். ஆதிபகவன் என்பது தமிழாயின் ஒற்று மிகுந்திருக்க வேண்டும். மிகாமையின் அது வடமொழியாயிற்று எனத் தம் இலக்கணப் புலமையைக் காட்டுகிறார். ஆதிபகவன் ஒரு சொல் என்பது கருத்து.
    6. “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி எல்லாம் என்றார்” என்று தமது கூரிய நோக்கினைப் புலப்படுத்துகிறார். எழுத்து அகர முதல என்றாலே போதும். “எழுத்தெல்லாம் அகர முதல” எனச் சொல்வானேன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அவர் காலத்தில் தமிழோடு ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வடமொழியையும் உட்கொண்டு எழுதுகிறார். இங்கே ஒரு கருத்து சிந்தித்தற்குரியது. வாயைத் திறந்தாலே வரும் ஒலி அகரமேயாதலின் உலகின் எல்லா மொழிக்கும் அவ்வொலி தலைமையொலி என்பது உணரப்படவேண்டும். இன்றைக்குப் பரிமேலழகர் உரையெழுதியிருந்தால் அகரவொலியை உலகின் அனைத்து மொழிக்கும் தலைமையொலி என்றுதான் எழுதியிருப்பார். (இது கடடுரையாளர் அனுமானம்.)
    7. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது” என எழுதுகிறார்.  தமிழில் ‘உலகு’ என்னும் சொல் ஆகுபெயராகாது. உலகு என்பது பலபொருள் ஒருசொல். ‘உலகு சிரித்தது’ என்னும்போது அது மக்களைக் குறிக்கும். ‘உலகு செழித்தது’ என்கிறபோது அது மண்ணைக் குறிக்கும். இந்த விளக்கத்தைக் “காலம் உலகம்” என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா ஆராய்கிறது. பரிமேலழகர் எந்த இடத்திலும் உலகு என்பதை ஆகுபெயராக்கி உரையெழுதினார் இலர். ‘புல்லாகிப் பூடாகி’ எனவரும் அனைத்துயிர்களுக்கும் இறைவன் முதலானவன் என்பது கருத்து.
    8. ‘ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது என்று எழுதுகிறார்.
    9. “இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது”. என எழுதுகிறார். முதற்கடவுள் என்பதனால் இரண்டாவது, மூன்றாவது கடவுள் இருப்பதாகப் பொருளில்லை. சொரூபம், அருவம், அருவுருவம், உருவம் என இறையுணர்நிலை நான்கு என்பது ஆன்றோர் கருத்து. ‘சொரூபம்’ என்பது அறிவுக்கும் நினைவுக்கும் உணர்வுக்கும் எட்டாத நிலை. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்பது பெரியபுராணம். அந்த நிலைக்கு இறைவனின் தலைநிலை அல்லது முதல் நிலை என்பது பெயர். அந்த நிலையை அறிவதற்குப் படிநிலைகள் பல உள. சொரூப நிலையில் உள்ள கடவுளையே முதற்கடவுள் என்று பரிமேலழகர் கூறுகிறார். விரிக்கின் பெருகும்.

    பரிமேலழகர் உரை அருமை

    இந்தக் குறட்பாவின் கிடக்கைநிலை உரை மேலே சொல்லப்பட்டது.  “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கைநிலைப் பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காண முடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக் கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் திருவள்ளுவர் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக் காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

    பரிமேலழகரைத் தொடர்ந்த நச்சினார்க்கினியர்

    இலக்கிய உரையாசிரியர்களில் பரிமேலழகருக்கு இணையாகவும் எண்ணிக்கையில் பெருமளவு இலக்கியங்களுக்கு உரையெழுதியவராகவும் கருதப்படுகிறவர் நச்சினார்க்கினியர். இலக்கிய இலக்கணங்களுக்கு உரையெழுதி உரைமுடி கண்டவர். அவர்,

    • ‘எழுத்தெனப்படுப’ எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவின் விளக்கவுரையில் “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார் என்பது உணர்த்தற்கு ‘னகர இறுவாய்’ என்றார் என எழுதுகிறார். “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்கும்” என்னுந் தொடர் பரிமேலழகரின் “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி” என்னும் உரைத்தொடரை அப்படியே உள்வாங்கி யமைந்திருப்பது காண்க.
    • “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில் அவருடைய விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது. “இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம் அதுபோல இறைவனாகிய முதலை உடையது உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க”

    என்று எழுதிக்காட்டும் நச்சினார்க்கினியர் “இறைவனாகிய முதலை உடையது உலகம்” என்னும் தொடரில் திருக்குறளின் கிடக்கைநிலை உரையைக் கருத்திற் கொள்ளாது பரிமேலழகர் உரைவிளக்கத்தைப் போற்றிக் கொள்கிறார். இதனால் பழந்தமிழ் உரையாசிரியர்கள் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி வந்த புலமை மாண்பு வெளிப்படுவதைக் காணலாம்.

    நிறைவுரை

    ‘உலகம் இருப்பதால் இறைவன்’ என்னும் அனுமானத்தால் ஏற்படும் மயக்கத்தைத் தம் புலமையால் மாற்றி ‘உலகத்திற்கு முதல்வன் இறைவன்’ என்னும் உண்மையைக் கண்டறிந்து கூறியதே இந்தக் குறட்பாவில் அழகரின் உரையருமை எனலாம்.

    (தொடரும்)

    Share
  • சிற்பி 85

    சிற்பி 85

    முனைவர் ஔவை நடராசன்

    கவியரசர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கிய நாளிலிருந்தே இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் புதுமைக்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்ட தனிப் பெருந்தகை எனப் பல முறைகள் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    சிற்பி அவர்களைப் பெரும் பேராசிரியர் என்று நினைக்கலாம். நாடறிந்த கவியரசர் என்று நாம் போற்றிப் புகழலாம். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களைத் தோள் மேல் சுமந்து அவர்களுக்கெல்லாம் ஆக்கம் தேடி, நன்மை செய்வதற்கு முன் நிற்கும் அவர் இந்திய நாட்டின் இலக்கியக் கழகமாகிய சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவராகவும் இருந்து ஆற்றி வருகிற தொண்டுகளை நாடு மறக்காது.

    அருமைப் பேராசிரியர் சிற்பி அவர்கள், அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தவர். அருட்செல்வர் பேசும்போது சொல்வார், புரட்சி, புதுமை ஆகியவற்றிற்கும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் சிற்பி அவர்கள்.  எவருக்கும் எளிதில் வளைந்து கொடுக்கமாட்டார்.  தன்னுடைய கருத்தை நேர்மை பட நின்று பேசுவதில் அவர் என்றும் சிறந்தவர்.  அவருடைய புலமை அடுக்கடுக்காக எடுத்துப் பேசுவதாகும்.

    சிற்பி அவர்களுக்கு 85 வயதா? என்று கேட்கும்போதே நான் வியப்படைகிறேன்.

    அண்மையில்கூட, கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஏழெட்டு இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு, மறுநாள் புது தில்லி சென்று அங்கு இலக்கியக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்பதை பார்க்கும் போது அந்த விரைவும் ஆற்றலும் சோர்வில்லாத திறத்தையும் கண்டு நான் வியப்படைகிறேன்.

    பேராசிரியர் சிற்பி அவர்கள் தாம் தொட்ட துறைகள் அனைத்திலும் உயரத்தைத் தொட்டவர்.

    தற்பெருமை தானறியாத தகைமையன் என்பது போல, அவருடைய அடக்கமும் ஆன்றவிந்த பெருமையும் போற்றத்தக்கவை.

    கவியரசர், சிந்தனையாளர், சீர்திருத்தவாதி என்று எல்லாத் துறைகளிலும் பெருமை வாய்ந்தவர்.

    கவியரசர் சிற்பி பல்லாண்டு காலம் வாழ்க.

    பலருக்காகத் தொண்டு செய்யும் அவரின் கைகள், உதவி செய்வதற்காக நடந்து செல்லும் அவரின் கால்கள், தளர்ச்சி இல்லாமல் ஊருக்கெல்லாம் உதவிட வேண்டும் என்று ஊற்றெடுக்கும் மாட்சி, மனம் இளமையோடு இருக்க வேண்டும்.

    அவர் வாழ்க பல்லாண்டு.

    வாழ்க சிற்பியின் சிறப்பு.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 1

    எட்டுக் கோணல் பண்டிதன் – 1

    தி. இரா. மீனா

    இராமாயணம், மகாபாரதம், மற்றும் சில உபநிடதங்களில் வணக்கத்திற்குரியவராகப் போற்றப்படும் அஷ்டவக்கிரன் தான் வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான ஆன்மீகச் சிந்தனையை வளர்த்தவர். அஷ்டம் என்றால் எட்டு என்றும், வக்கிரன் என்றால் கோணல் என்றும் பொருள். பிறக்கும்போதே இரு பாதங்கள், இரு கால் மூட்டுகள், இரு கைமூட்டுகள், மார்பு மற்றும் தலை ஆகியவற்றில் கோணல்கள் காணப்பட்டதால் இது அவருக்கு காரணப் பெயராகிறது. அவருடைய தந்தையின் சாபத்தால் இக்குறை அவருக்கு ஏற்படுகிறது.

    அவர் தாயின் கருப்பையிலிருந்த போது, முனிவரான அவருடைய தந்தை கஹோதா அவருக்குப் பல்வேறு வகையான பாடங்களை விவரித்துச் சொல்வார். அதனால் பிறப்பதற்கு முன்னால் கருவிலிருக்கும் போதே ’தன்னிலை’ என்பது குறித்துப் பல்வேறு விளக்கங்களை அறிந்தவராகிறார். ஒரு நாள் அவ்வகையான பாட விளக்கத்தின் போது தந்தை ஏதோ ஒன்றைத் தவறாகச் சொல்லிவிடுகிறார். அதைச் சுட்டிக் காட்டுவது போலக் குழந்தை ’ஹும்’ என்கிறது. துரதிர்ஷ்டவசமாக தந்தை  கோபமடைந்து, எட்டு விதமான ஊனத்தோடு குழந்தை பிறக்கட்டும் என்று சாபமிடுகிறார். அதனால் உடல் ரீதியான குறைகளோடு குழந்தை பிறக்கிறது.

    அவன் இளைஞனான பிறகு ஒரு முறை தன் தந்தையோடு ஜனக மன்னரால் நடத்தப்படும் மிக உயர்ந்த விவாதமொன்றிற்குப் போகிறான். ஜனகர் அரசனாக இருந்த போதிலும் மெய்யறிவு தேடுபவர். ஞானம் பெறத் துடிப்பவர். அதனால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள அனைத்து ஆன்மீகவாதிகளையும்  தன் அவையில் ஒன்று சேர்க்கிற அளவுக்கு அரசனின் தேடல் அமைகிறது.

    தினமும் தன் அன்றாடப் பணிகளை விரைவாக முடித்து, அவையிலுள்ள அறிஞர்களின் விவாதங்களில், பேச்சுகளில் கலந்துகொள்வார். வெவ்வேறு வகையான துறைகளில் மேம்பட்டிருக்கிற அறிஞர்களின் விவாதங்கள் நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று கால எல்லையற்று நடக்கும். அவற்றில் தொடர்ந்து பங்கு கொள்வார். எனினும் அவர் தேடிய  ஞானத்தைத் தருவாரில்லை.

    ஒரு முறை அம்மாதிரியான ஒரு விவாதத்திற்கு அஷ்டவக்கிரனின் தந்தை கஹோதா அழைக்கப்பட, தந்தையோடு அவனும் செல்கிறான். விவாதம் தொடங்கி அறிஞர்கள் இடையே பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அஷ்டவக்கிரன் எழுந்து நின்று “இவையனைத்தும் வீண் பேச்சு. இவர்கள் யாருக்குமே ’தன்னிலை’ என்பது குறித்து எதுவும் தெரியாதெனினும் எல்லோரும் அது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். எனினும், என் தந்தை உள்பட யாருக்கும் ’தன்னிலை’ பற்றி எதுவும் தெரியாது” என்கிறான்.

    ஜனகர் அவனைப் பார்த்து “நீ  சொன்னதை  உன்னால் நிரூபிக்க முடியுமா? இல்லையெனில் இந்த உடலைக் கூட நீ இழந்து விடக்கூடும்” என்கிறார்.

    “என்னால் நிரூபிக்க முடியும். ”அவன் பதில் சொல்கிறான்

    “அதற்காக உனக்கு என்ன வேண்டும்?” ஜனகர் கேட்கிறார்.

    “அதற்கு நான் சொல்வதை முழுவதுமாக நீங்கள் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு உடன்பட்டால்தான் நான் விளக்க முடியும். நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே நீங்கள் செய்தால் ’உங்களை’ நீங்கள் அறிய நான் உதவ முடியும்.”

    அவனுடைய நேர்மையைப் பாராட்டிய ஜனகர் “சரி, நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்“ என்கிறார்.

    “நான் காட்டில் வசிக்கிறேன். அங்கு வாருங்கள்“ என்று சொல்லிப் போகிறான்.

    சில நாட்களுக்குப் பிறகு ஜனகர் காட்டிற்குப்  போக, படை, பட்டாளம் தொடர்கிறது. உள்ளே செல்லச் செல்ல, காடு அடர்த்தியாகிக் கொண்டே போகிறது. நீண்ட தேடலின் போது ஜனகர் தனித்துப் போகிறார். காட்டை விட்டு வெளியேற முயலும் போது திடீரென ஒரு மரத்தினடியில் அஷ்டவக்கிரன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார். உடனே குதிரையை விட்டிறங்கும் போது, ஒரு கால் சேணை வளையத்திலும் மற்றொரு கால் மேலே தூக்கியுமிருக்க, ”நில்லுங்கள். அப்படியே நில்லுங்கள்” என்று அஷ்டவக்கிரன் சொல்ல,  ஜனகர் அப்படியே வசதியற்ற ஒரு நிலையில் ஒரு கால் மேலே இருக்க, குதிரையில் தொங்கியபடி இருக்கிறார்.

    அந்தத் தடுமாற்றமான நிலையில் நின்றிருக்கும் நிலை — அது கணப்பொழுது எனவும், நீண்ட காலமெனவும் கருத்துகள் சொல்லப்படுகின்றன. அஷ்டவக்கிரன் சொன்ன அந்த நிலையிலேயே நின்று ’தன்னிலை’ உணர்ந்திருக்கிறார். ஜனகரின் ஐயங்களையும் அஷ்டவக்கிரன் தீர்த்து வைக்க,  ஜனகர் ஞானம் பெறுகிறார். குதிரையிலிருந்து இறங்கி அஷ்டவக்கிரனின் திருவடி தொட்டு “அரண்மனையும், அரசாட்சியும் எனக்கு முக்கியமில்லை. நான் உன்னுடன் இருக்கிறேன்“ என்கிறார். ஆனால் அவனோ “ஞானம் பெற்ற அரசன், மக்களுக்கு வேண்டும்“ எனச் சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி வைக்கிறான். ஜனகர்,  அஷ்டவக்கிரனின் ஆசிரமத்திற்கு அடிக்கடி வருகிறார்

    ஆசிரமத்திலுள்ளவர்கள் இதை விரும்பவில்லை. அரசனான இவரிடம் நம் குரு என்ன ஆன்மீகம் கண்டார்? வாழ்வையே அர்ப்பணித்து வந்த துறவிகளான நம்மைப் புறக்கணிப்பது நியாயமானதா? எனத் தமக்குள் பேசிக்கொண்டனர். இதை உணர்ந்து கொண்ட அஷ்டவக்கிரன், அவர்களின் தவறான பார்வையைச் சரிசெய்ய முடிவு செய்கிறான். ஒருநாள் அவன் ஆசிரமத் துறவிகளோடு விவாதித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஜனகரும் வந்து கலந்துகொள்கிறார். சிறிது நேரத்தில் அங்கு ஓடி வந்த வீரனொருவன் ஜனகரை வணங்கி, “அரசனே, அரண்மனை பற்றியெரிகிறது. அனைவரும் நிலைகுலைந்துள்ளனர்” என்கிறான். கோபத்துடன் எழுந்த அரசன், “இந்தக் கூட்டத்திற்குள் வந்த குறுக்கிட உனக்கு எவ்வளவு துணிவு வேண்டும். வெளியே போ” என்று விரட்டுகிறார். அவன் அங்கிருந்து ஓட, விவாதம் மீண்டும் தொடர்கிறது.

    சிறிது நாட்கள் கழித்து, அஷ்டவக்கிரன் மற்றுமொரு திட்டமிடுகிறான். துறவிகள் கூடியிருக்க, அவன் சொற்பொழிவு நிகழ்த்துகிறான். திடீரென அங்கு ஓடிவரும் ஆசிரம உதவியாளன், “குரங்குகள், துறவிகளின் ஆடைகள் உலர்த்தியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து ஆடைகளை நாசம் செய்கின்றன” என்று பதற்றத்தோடு சொல்கிறான்.

    துறவிகள் வேகமாக எழுந்து தங்கள் ஆடைகளைப் பாதுகாக்க ஓடுகின்றனர். அங்கு சென்ற போது குரங்குகள் இல்லாததையும், அவர்களது உடைகள் அப்படியே உலர்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கின்றனர். என்ன நடந்தது என்று உணர்ந்து தலைகுனிந்து திரும்புகின்றனர். விவாதம் தொடர்கிறது. அதனிடையே “தன் அரண்மனை பற்றியெரிந்து கொண்டிருந்த போதும்  அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி, சொற்பொழிவின் போது குறுக்கிட்ட வீரன் மீது அரசன் கோபம் கொண்டான். அவன் சிந்தனை அது. துறவிகளான உங்களுக்கு உடைமை என்று எதுவுமில்லாத போதும், செய்தி கேட்டதும் ஓடினீர்கள், நான் பேசுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் எவருமே சீந்தாத அந்த உடைகளைப் பாதுகாக்க ஓடினீர்கள். உங்கள் துறவு எங்கே? அவன் அரசன், ஆனாலும் துறவி“ என்று அவர்களின் தவறான பார்வையை மாற்றுகிறான்.

    ஒரு மனிதனுக்குள்ளான வளர்ச்சியென்பது அவன் வெளியுலகில் என்ன செய்கிறான் என்பதல்ல, தனக்குள் அவன் எப்படிச் செயல்படுகிறான் என்பதில்தான் உள்ளது என்பதை அறிவித்த உயர்விது.

    தன்னிலை, மெய்ம்மை, தன்னையுணர்தல், விடுதலை ஆகியவை குறித்து அஷ்டவக்கிரனுக்கும் ஜனகருக்குமிடையே நடந்த உரையாடலை விளக்குவதுதான் அஷ்டவக்கிர கீதை. இதற்கு அஷ்ட சம்ஹிதை என்ற பெயருமுண்டு. இது பகவத்கீதையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும் தத்துவத்தைப் பற்றி, அது முன்னிறுத்தும் பார்வை வேறுபடுகிறது.

    [தொடரும்]

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

    ச.கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திரங்களுள் ‘ஏதிலர்’ என்னும் பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும்போது ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறக்  காண்கிறோம். புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள. அகப் பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. ஏதில் தன்மை பற்றிய விளக்கம் மூலம் ஏதிலர் யாரெனப் புரிந்துகொள்ளலாம்.

    ஏதில் தன்மை

    தொடர்பேதும் இல்லாது துன்பம் அல்லது சிக்கலுக்குக் காரணமாகும் அயல் தன்மையே ஏதில் தன்மை ஆகும்.

    பிரிவை விரும்பாத தலைவியின் கோணத்தில் தலைவன் பிரியக் காரணமாகும் பொருள்பற்று தன்னைத் துன்புறுத்துவதால்;

    “ஏதில் பொருள் பிணி” (அகம்.- 43)

    ஆகிறது. இதேபோல் நம்மைக் காத்தற்கு உரியவன் இவனென்று நிழல் தேடி வந்தடைந்த குடிகளைத் தன் தலைப்பாரமாக ஏற்றுப்; புகழை விரும்பி; அயல்நாட்டில் தொடர்ந்து தங்கும் தலைவன் தன்மையும் (குறுந்.- 89) ஏதில்தன்மை என்றே பெயர் பெறுகிறது. தலைவன் திரும்பி வந்து சேரவில்லை ஆதலால்; கார்ப்பருவம் இன்னும் தொடங்கவில்லை என நம்பவிரும்பும் தலைவிக்கு இடியும் அதைக் கேட்டு ஆடும் மயிலும் ஒன்றற்கொன்று தொடர்பே இல்லாத அயலாராகத் தோன்றுவதால்;

     “ஏதில் கலந்த இரண்டற்கு” (குறுந்.- 194)

    என்கிறாள். செல்வக்குடியைச் சேர்ந்த தாயின் கோணத்தில் உடன்போன தலைவிக்குச் சிலம்புகழி நோன்பியற்றும் தலைவனின் வறியமனை;

    “ஏதில் வறுமனை” (அகம்.- 369) யாகத்

    தெரிவதன் காரணம்; தலைவியின் பிறப்பு வளர்ப்பிற்கும் தலைவன்
    வாழ்க்கை முறைக்கும் சற்றும் தொடர்பில்லை எனும் மனக்குறையாகும்.
    திணைமாந்தர் கோணத்தில் தம் ஊரைக் கைப்பற்றிய குறுநில மன்னர்;

    “ஏதில் மன்னர்” (அகம்.- 346)

    என்று சொல்லப்படுவதால்; அவர் அயலகத்திலிருந்து தம்மூர் வந்தவர் என்னும் கருத்து தெளிவாகிறது.

    ஏதிலரும் நொதுமலரும்

    முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும் அழைப்பதுண்டு. ‘நொதுமலர்’ என்ற சொல்லுக்கு ஏதிலர் என்றும்; ‘ஏதிலாளனை’  என்ற சொல்லுக்கு நொதுமல் தன்மை உடையவன் என்றும் பொருள் கூறுவர்.

    பகற்குறியில் சந்தித்து மீளும் தலைவனிடம் தோழி;

    “நொதுமலர் போலப் பிரியின்
    கதுமெனப் பிறிதொன்று ஆகலும் அஞ்சுவல்” (அகம்.- 300)

    என்கையில் தலைவி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவாளோ என்று அஞ்சுவதை விளக்கும் உரையாசிரியர் ஏதிலர் என்றே பொருள் கூறுவர்.

    “ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே” (ஐங்.- 232)

    எனும் பாடலடி சுட்டும் தலைவனை நொதுமல் தன்மை உடையவன் என்று உரைவிளக்கம் தருகிறார் பொ.வே.சோமசுந்தரனார்.

    குழுப்பாத்திரமாக ஏதிலர்

    சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர்.

    மடலேறித் தன் காதலில் வெற்றி பெற்ற தலைவன்; திருமணத்திற்கு முன்னர் கொண்ட காதல்நோய் பற்றிப் பேசுங்கால்;

    “இளையாரும் ஏதிலவரும் உளைய” (கலித்.- 138)ப்

    பேசிப் பேசித் துன்பம் தீர்ந்ததாகக் கூறுவதில் ஏவலரும், ஏதிலரும் அடங்குகின்றனர்.

    களவுக்காலத்தில் புனக்காவலுக்கு வந்து பறவைகளை ஓட்ட வேண்டிய  தலைவி; தன் பணியைச் செய்யாமல் தலைவனின் பிரிவை எண்ணி அழத்தொடங்கும் போது; உடனிருந்த தோழி அவள் அழுகையை அடக்குகிறாள்.

    “எழாஅ ஆகலின் எழில்நலம் தொலைய
    அழாதீமோ நொதுமலர் தலையே” (நற்.- 13)

    என்ற பாடலடிகளில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசும்  தோழியின் குரல்; அவளது வாயை விட்டு வெளியேறாமல் தலைவிக்கு மட்டுமே கேட்குமளவு கமுக்கமாக அமைவதன் காரணம் அயலாருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பது தான். பாடல் அவரை நொதுமலர் என்கிறது.

    தோழி அறத்தோடு நிற்கவும்; பின்னர் வேற்று வரைவிற்குரிய ஏற்பாடுகள் தொடங்கிய போது;

    “மீன்வலை மாப்பட்டாங்கு
    இது மற்று எவனோ நொதுமலர் தலையே” (குறுந்.- 171)

    என்று மிரள்கிறாள் தலைவி. மீனுக்காக வலை வீசிய போது மான் வந்து சிக்கியது போல; வரைபொருள் நிமித்தம் பிரிந்து சென்ற தலைவன் வருமுன்னர் பெண் கேட்டு வந்த அயலவர் இப்பாடலில் நொதுமலர் என்று சுட்டப்படுகின்றனர்.

    தனிப்பாத்திரமாக நொதுமலாட்டி

    பெண்பால் விகுதி பெற்று நொதுமலாட்டி எனப் பூவிலைப் பெண்ணைக் குறிக்கப் பயின்று வருவதுண்டு. பருவம் கண்டு ஆற்றாமல்; கணவன் தன்னை மறந்துவிட்டானே  எனத் தவிக்கும் மனைவிக்குப் பூ விற்கும் பெண்ணைப் பார்க்கும் தோறும் அடக்கமாட்டாத அழுகை வருகிறது.

    “…………..பாதிரி………..
    புதுமலர் தெருவுதொறு நுவலும்
    நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே” (நற்.- 118)

    எனுங்கால் ‘நொதுமலாட்டி’ என்ற சொல் பெண்பால் விகுதியுடன்  அயலாளைக் குறிக்கிறது.

    ஏதிலர் உள்ளேற்கும் பிற பாத்திரங்கள்  

    சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர்  ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் ஒருவராக உள்வாங்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என்று முறையே ஆண்பால், பலர்பால் விகுதி பெற்றுத் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதும் உண்டு.

    வெறியாடி முருகனைக் காரணம் காட்டும்;

    “ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)

    பூரித்துத் தலைவன் சிறைப்புறத்து இருந்து கேட்கும்படித் தோழியிடம் சிரிக்கிறாள் தலைவி. அவளது கோணத்தில் வேலன் யாரோ ஒருவன். வெறியாட்டை அஞ்சிய தலைவியும் அவனை; ‘ஏதில் வேலன்’ (அகம்.- 292) என்கிறாள்.

    தலைவனின் புறத்தொழுக்கத்திற்குத் துணை செய்யும் பாணன், இயல்பாகவே தலைவிக்கு ஏதிலன் ஆகின்றான். தலைவனின் பரத்தமை காரணமாகச் சினம்கொண்டவள்;

    “ஏதில் பெரும்பாணன் தூதாட” (கலித்.- 96)

    நிகழ்ந்த மாறுபாட்டைத் தொடர்ந்து விவரிக்கிறாள். பரத்தையிடம் இருந்து திரும்பிவந்த கணவனிடம் பரத்தையின் மணத்தை நுகர்ந்த தலைவி;

    “ஏதிலர் நாறுதி” (பரி.- 8)

    என்று விலகுகிறாள். இதேபோல் பரத்தையை ஏதிலார் என்று சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்.- 78, 80, 81, 84; பரி.- 24).

    பிரிவால் மெலிந்த தன்னைக் கண்டு அடையாளம் தெரியாமல் ஏதிலாட்டி என்று எண்ணிப் பருவம் திரும்பிப் போய்விட்டதோ எனக்  கவல்கிறாள் (நற்.- 56) தலைவி. தன் ஆயத்தோடு சேர்த்துத் தம்மை நொதுமலாளர் என்று வேறுபிரித்து உரைக்கிறாள். நெய்தல்திணை சார்ந்த தலைவிக்கு வேற்றுத்  திணை சார்ந்த தலைவன் பரிசுப் பொருளாகத் தான் வாழும் இடத்துத் தழை கொண்டு தைத்த ஆடையைக் கொடுக்க; அவள் காரணம் கூறி மறுக்கிறாள். ‘எம் நிலத்தைச் சேர்ந்த பெண்டிர் வண்டல் பாவைக்குக் கூட இங்கு கிடைக்கும் நெய்தல்தழை கொண்டு தைத்த ஆடையே புனைவர்’.

    “நொதுமலாளர் கொள்ளார் இவையே
    எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
    நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்” (ஐங்.- 187)

    எனத் தாம் அந்தத் தழையாடைக்கு அயலார் என்பதைப் புரிய வைக்கிறாள். அதைப் பெற்றுக் கொண்டு அணிந்தால்; தானே தன் களவை வெளிப்படுத்த  நேரிடும் என்பதே அவள் கருத்து.

    பூவைக்  காரணம் காட்டித் தலைவன் ஏதிலன் எனப்படுவதுண்டு (கலித்.- 107& 111). தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போகிய தலைவன் தாய்க்கு ஏதிலன் ஆகிறான். வேளாண் தொழிலால் செல்வம் மிகுந்த மனையை விட்டுக் காதலனுடன் சென்ற தன் மகள் ஏமாந்து விட்டதாக எண்ணிக் குமைகிறாள் தாய்.

    “ஏதிலன் பொய்மொழி நம்பி” (அகம்.- 117)யவள்;

    என்பது மகட்போக்கிய தாயின் எண்ணத்தைக் காட்டுகிறது. தன் அறியாப் பருவத்து மகள் யாரோ ஒருவனை நம்பிவிட்டாளே என்ற தவிப்பு மிகும்  போதும் (அகம்.- 17), தலைவி ஊடல்கொள்ளும் போதும் (நற்.- 50& 395) தலைவன் நொதுமலாளன் ஆகிறான். களவுக்  காலத்தில் ஊரார் அலருக்கு  இடையே பிரிந்துறையும் தலைவன் உறவும் பகையும் அல்லாதவன்;

    “நயனறத் தொடுத்தல் வல்லியோரே
    நொதுமலாளர் அது கண்ணோடாது” (அகம்.- 298)

    என்று தலைவனைப் பற்றித் தலைவி ஆற்றுவெள்ளத்திடம் ஆற்றாமல் புலம்புகிறாள். ‘உன்னைப் போலவே தலைவன் கண்டும் காணாமல் கண்ணோட்டமின்றி நொதுமலாளனாய் நடந்து கொள்கிறான்’ எனும் போது தலைவன் ஏதிலர் கூட்டத்தில் சேர்க்கப்படுகிறான். புறத்தே ஒழுகிநின்ற தலைவன் பற்றித் தோழியிடம் பேசித் தன் மனக்குறையை ஆற்றும் தலைவி ‘அவன் திரும்பி வந்தால் என்னைத் தொடாதே’ என்று மறுத்து உரைப்பேன் எனச் சாடப் பயன்படுத்தும் வசை ‘ஏதிலாளன்’ என்பதே. இதே வசையைப் புனையும் பாடல்கள் பல (ஐங்.- 34; நற்.- 74, 216). தன் மனதில் உள்ள ஏக்கத்தைத் தோழியிடம் தெருவில் விவரித்த  தலைவனின் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குபவளாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் தலைவி; ‘வாரணவாசிக்குச் செல்பவர் எல்லாம் துறக்கம் எய்துவர்’ எனும் நையாண்டியுடன்; ‘தெருவில் செல்பவர் புலம்பலை எல்லாம் என்னிடம்  வந்து சொல்லித் தொந்தரவு செய்யாதே’ எனத் தோழியை அறிவுறுத்தும் போது; ஏதிலன் என்றே விமர்சிக்கிறாள் (கலித்.- 60).

    தலைவி பாடிய உலக்கைப்பாட்டை ஆதாரமாகக் காட்டி; ஊரார் அலர் தூற்றுங்கால் தோழியின் கோணத்தில் அவர் ஏதிலராகின்றனர் (குறுந்.- 89). தோழி தலைவியிடம்;

    “உள்ளி நொதுமலர் ஏர்புரை தெள்ளிதின்” (நற்.- 11)

    ‘நீ அவன் வரமாட்டான் என்று எண்ணத் தொடங்கினால் ஏற்படவிருக்கும் ஏதத்தை எண்ணிப்பார்’ என்கிறாள். ஊரார் பழிசுமத்தி விடும் சிக்கலை முன்மொழிய; ஏதிலரின் கூட்டத்தில் ஊரார் உள்வாங்கப் படுகின்றனர். ஊரார் பேச்சைக் கேட்டுப் பொருள்வயின் பிரிய நினைக்கும் தலைவனை;

    “ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை” (கலித்.-22) என்று பிரிவுக்கு மறுக்கும் தலைவியும் ஊராரை ஏதிலார் ஆக்குகிறாள். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (கலித்.- 14). காமம் மிக்க கழிபடர் கிளவியாக நிலவைப் பார்த்துப் பேசும் தலைவி; தன் நோய்க்கு ஊராரால் தீர்வு சொல்லவோ செய்யவோ இயலாது என்பதை;

    “காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
    எல்லாரும் தேற்றார் மருந்து” (கலித்.- 145)

    எனப் பாடும் பெருந்திணைச் செய்தியும் ஊராரை ஏதிலர் கூட்டத்துள் சேர்க்கிறது. இவ்வண்ணமே கைக்கிளைச் செய்தியிலும்; ஊரார் ஏதிலர் எனப்படுகின்றனர் (கலித்.- 113)

    உவமைகளில் ஏதிலர்  

    ஆயத்தோடு ஆடிக் கொண்டிருக்கும் தலைவியைத் தழுவ விரும்பிய தலைவனுக்கு அவனது அசட்டுத்தைரியம் கைகொடுத்தது. எல்லார் நடுவிலும் புகுந்து;

    “நொதுமலர் போலக் கதுமெனத் தழுவி” (குறுந்.- 294)

    முயங்கியமை பற்றிய தலைவியின் கூற்று அவனை ஏதிலர் என உவமிக்கிறது. ஆதலால் அன்னை இற்செறித்து விட்டாள் என்கிறாள்.

    தான் வாழும் சேரிக்கு வந்தாலும் தன்னைக் கண்டுகொள்ளாமல் செல்லும் தலைவனால் சேரி;

    “ஏதிலாளர் சுடலை போல” (குறுந்.- 231)ப் பார்க்கப்பட்டது என்ற சேரிப்பரத்தையின் வாக்கு செவ்விலக்கியக் காலத்துச் சமூகநிலையையும்; தனித்தனிச் சுடலை இருந்தமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. (உரையாசிரியர் இப்பாடலைத் தலைவி கூற்று என்று சொல்வது ஏற்புடையதன்று).

    இரவுக்குறியில் தன்னிடம் வம்பு வளர்க்கும் வயோதிகப் பார்ப்பானை ‘புலியைப் பிடிப்பதற்காகச் செய்த முயற்சியில் அகப்பட்ட குறுநரி’ என்று வசை பாடும்போது;

    “ஏதில் குறுநரி பட்டற்றால்” (கலித்.- 65)

    என ஏதிலனாக உவமிக்கிறாள் தலைவி.

    செயல் திறமையும் மதிநுட்பமும் இல்லாத அரசன் நாட்டில் அயலாரின் படை நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதைப் போல இளவேனில் பருவம் தொடங்கித் துன்புறுத்தியது என்ற உவமையிலும் (கலித்.- 27) ஏதிலாளனின் பயன்பாடு உள்ளது.

    புறப்பாடல்களில் ஏதிலர்

    சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு வீற்றிருந்தமை கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்;

    “ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது” (புறம்.- 58)

    இருவரும் ஒற்றுமையுடன் தம் நட்பைத் தொடர வேண்டுகிறார். இங்கு ஏதில்மாக்கள் என்று சொல்லப்படுவோர் ‘கோள் சொல்பவர்’. இக்காலத் தமிழில் ‘வத்தி வைப்பவர்’ உரையாசிரியர் ‘குறளை சொல்பவர்’ என்கிறார். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (புறம்.- 35)

    முடிவுரை    

    சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர். அகப்பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும்; பெண்பால் விகுதியோடு நொதுமலாட்டி என்றும் சுட்டுவதுண்டு. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கி ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறுவதையும் காண்கிறோம். சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர் ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் இணைக்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என முறையே ஆண்பால், பலர்பால் விகுதியுடன் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதுண்டு. ஏதிலர் உவமைகளாக  எடுத்து  ஆளப்படுவதுண்டு. புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

    தி. இரா. மீனா

    சிவலெங்க மஞ்சண்ணா 

    பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்த இவர் கல்யாண் நகருக்கு வந்த பின்னர் சரணராகியவர். ’ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூனலிங்கம்’ இவரது முத்திரையாகும்.

    1. “உடலைக் கட்டியணைத்து நிறை கண்களால் கண்டு
    கைகள் மகிழும் வரை வணங்கி
    மனப்பூர்வமாக அறிவது, இடைவெளியற்ற இன்பம்
    ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு
    கூடுகின்ற  கூட்டமாம்“

    2. “உடல் சோர்ந்து உள்ளம் உருகி காயகம் செய்யாமல்
    பிறரை வருத்தி, நயந்து இரந்து செய்வது தாசோகமா?
    எத்தொழிலையும் மனத்தூய்மையுடன்
    செய்கிற குருஜங்கமரைச் சமமாக எண்ணும்
    இலிங்கதேகமுடையோருடன் ஒரே தன்மையில் உறவாடினால்
    ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு நிறைவாம்.”

    3. “சுவையறிய நாவாகி வந்து
    மணமறிய நாசியாகி வந்து
    உருவமறிய கண்களாகி வந்து
    ஒலியறிய செவியாகி வந்து
    உணர்வறிய தோலாக வந்து
    உடலில் நின்று ஐம்முகமாய் ஆனாய்
    ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கமே“

    சண்முகசுவாமி

    ’அகண்டேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “கல்கல்லென ஒலியெழுப்பினால் காதலன் வருவானென
    எல்லா வழியும் தேடிப் பார்க்கிறேன் அன்னையரே,
    காதலனின் சொல்லை மனமொன்றிக் கேட்கிறேன்
    அகண்டேஸ்வரன் என்னும் காதலனைக் கண்டால் மகிழ்ச்சி
    காணாமல் போயின் கடுந்துன்பமாம் அன்னையரே“

    2. “பால்குடத்தின் மீது மோர்குடம் வைத்தென்ன
    உறையாகுமா ஐயனே சரியான கலவையின்றேல்?
    அங்கம் மீது இலிங்கம் இருந்தென்ன,சிவஞானமில்லாமல்
    பொருந்தி சமரசமாகுமா  ஐயனே அகண்டேஸ்வரனே.”

    சகலேச மாதரசா

    அரசராக இருந்து சரணரானவர். ’சகலேஸ்வர தேவ’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆசையைவிடச் சிறியவரில்லை
    ஆசையின்மையை விடப் பெரியவரில்லை
    கருணையை விட தர்மமில்லை
    ஆராய்ச்சியை விட  உதவியில்லை
    அனைத்துயிருக்கும் சகலேஸ்வரனைத் தவிர தெய்வமில்லை”

    2. “ஈசனிலும் பெரியவரில்லை
    ஆசையினும் சிறியோரில்லை
    எல்லைக்கப்பால் திசையில்லை
    பிரார்த்தனைக்கப்பால் புண்ணியமில்லை
    அனைத்தின் பதியே சகலேஸ்வரதேவனே
    மெய்யுணர்வுக்கப்பால் உதவியில்லை“

    3. “ஏரி கட்டலாமே தவிர நீர் நிரப்ப முடியுமா?
    ஆயுதம் தரலாமன்றி கற்றுணர்த்த முடியுமா?
    மணமுடிக்கலாமன்றி ஆண்மைக்கு உதவமுடியுமா?
    மேன்மை காட்டலாமன்றி நினைவை நிறுத்த முடியுமா?
    படிப்பு கால்,புத்தி முக்காலெனும் பழமொழிக்கேற்ப
    குருவின் கருணையிருந்தும் சாதித்தவனல்லன்,
    சகலேஸ்வர தேவனே“

    சங்கமேஸ்வர அப்பண்ணா

    ’பசவப்பிரிய கூடல சென்ன சங்கமதேவ’ இவரது முத்திரையாகும்.

    “அன்றன்று நிரம்பியது மிகுதியெனும் எண்ணம் வேண்டும்
    முன்னோர்களை நினைக்க வேண்டும்
    ஜங்கமன் வந்தால் வஞ்சனையின்றிச் செய்ய வேண்டும்
    இதை எனக்கு வரமாக்கு
    பசவப்பிரிய  கூடல சங்கமதேவனே“

    சகரத பொம்மண்ணா

    ’சகரத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    “மலர் பறிப்பாரேயன்றி மணம் பறிப்பவருண்டோ?
    பேசுவரேயல்லாமல் பேச்சின் உணர்வைக் கண்டவருண்டோ?
    இது நீதியின் பாடம்
    ஒழுங்குடன் செயல்படும் போது
    உணர்வு தூய்மையோடிருக்க வேண்டும்.
    பேச்சறிந்து பேசும் போது
    ஒழுங்கும் புலமையும் இணைந்திருக்க வேண்டும்.
    அதுவே ஆன்ம ஐக்கியம்
    சரகத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரனே.”

    சத்திகேதாய மாரய்யா

    குடை பிடிக்கும் காயகத்துடன் சேர்ந்து மரம் வெட்டுவது,தீப்பந்தம் பிடிப்பது ஆகியவற்றையும் செய்து வந்தவர். ’ஐக்கடேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    “உதயத்தில் உற்பத்தியாகி, பகலில் நிலையாகி
    அந்தியில் அழிகின்ற உடல் சுமந்து மீண்டும்
    அமைதியில் நின்று துன்பம் நீக்கும் இடம் காட்டுவாய்
    பகலில் பசிதாகம், இரவில் புலன்களின் செயல்
    என உடல் சுமந்து
    ஐம்பொறிகளுக்கு உடலானாயன்றோ
    ஐகடேஸ்வர இலிங்கமே“

    [தொடரும்]

    Share
  • கோவை ஞானி – அஞ்சலி

    கோவை ஞானி – அஞ்சலி

    முனைவர் ம. இராமச்சந்திரன் 
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

    உள்ளங்கைக்குள் இதயம் தேடும் உன்னத ஆன்மா, அன்பெனும் பெருவெளியில் நீண்ட உரையாடலின் குரல் கோவை ஞானி. அவரோடு சேர்ந்து சுற்றும் தருணங்களைப் பெற்றவன் நான். அவரின் உள்ளங்கை குளுமை இன்றும் மானுடத்தின் பேரன்பின் வெளிப்பாடாக உணர்கிறேன்.

    எனது கைகளைப் பற்றிக்கொண்டு என்னுள் அவர் தேடும் நான் பெரும் வியப்பின் மளைப்பாக இருந்தது. அவர் இதயத்தின் அன்பை நோக்கிய பயணம் அது. கைகளோடு கைசேர்த்து நடந்த தூரங்கள் குறைவுதான் என்றாலும் அது எழுப்பிய உன்மத்த அதிர்வுகள் அதிகம்.

    ஒற்றைக் குரலாக ஒலிக்கத் துணிந்து தனது அன்பின் தென்றலால் அனைவரது இதயங்களையும் இட்டு நிரப்பியவர். மார்க்சிய ஒளி தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் தனக்கான அவதானிப்புகளுடன் காத்திரமாகச் செயல்பட்டவர் இவர்.

    புத்தகங்களின் அடுக்குகளில் ஒற்றைச் சரடாக விளங்கி தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடுகளையும் தொடர்ச்சியாகத் தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர்.

    தமிழ்ச் சமூகம் ஒரு உன்னதமான வழிகாட்டியை இழந்து நிற்பதாகத் தோன்றுகிறது. இலை உதிர்வது உரமாகத்தான் என்றாலும் இதயத்தின் கனம் கூடத்தான் செய்கிறது.

    Share