அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

0

ச.கண்மணி கணேசன்,
முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

சிறுபாத்திரங்களுள் ‘ஏதிலர்’ என்னும் பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும்போது ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறக்  காண்கிறோம். புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள. அகப் பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. ஏதில் தன்மை பற்றிய விளக்கம் மூலம் ஏதிலர் யாரெனப் புரிந்துகொள்ளலாம்.

ஏதில் தன்மை

தொடர்பேதும் இல்லாது துன்பம் அல்லது சிக்கலுக்குக் காரணமாகும் அயல் தன்மையே ஏதில் தன்மை ஆகும்.

பிரிவை விரும்பாத தலைவியின் கோணத்தில் தலைவன் பிரியக் காரணமாகும் பொருள்பற்று தன்னைத் துன்புறுத்துவதால்;

“ஏதில் பொருள் பிணி” (அகம்.- 43)

ஆகிறது. இதேபோல் நம்மைக் காத்தற்கு உரியவன் இவனென்று நிழல் தேடி வந்தடைந்த குடிகளைத் தன் தலைப்பாரமாக ஏற்றுப்; புகழை விரும்பி; அயல்நாட்டில் தொடர்ந்து தங்கும் தலைவன் தன்மையும் (குறுந்.- 89) ஏதில்தன்மை என்றே பெயர் பெறுகிறது. தலைவன் திரும்பி வந்து சேரவில்லை ஆதலால்; கார்ப்பருவம் இன்னும் தொடங்கவில்லை என நம்பவிரும்பும் தலைவிக்கு இடியும் அதைக் கேட்டு ஆடும் மயிலும் ஒன்றற்கொன்று தொடர்பே இல்லாத அயலாராகத் தோன்றுவதால்;

 “ஏதில் கலந்த இரண்டற்கு” (குறுந்.- 194)

என்கிறாள். செல்வக்குடியைச் சேர்ந்த தாயின் கோணத்தில் உடன்போன தலைவிக்குச் சிலம்புகழி நோன்பியற்றும் தலைவனின் வறியமனை;

“ஏதில் வறுமனை” (அகம்.- 369) யாகத்

தெரிவதன் காரணம்; தலைவியின் பிறப்பு வளர்ப்பிற்கும் தலைவன்
வாழ்க்கை முறைக்கும் சற்றும் தொடர்பில்லை எனும் மனக்குறையாகும்.
திணைமாந்தர் கோணத்தில் தம் ஊரைக் கைப்பற்றிய குறுநில மன்னர்;

“ஏதில் மன்னர்” (அகம்.- 346)

என்று சொல்லப்படுவதால்; அவர் அயலகத்திலிருந்து தம்மூர் வந்தவர் என்னும் கருத்து தெளிவாகிறது.

ஏதிலரும் நொதுமலரும்

முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும் அழைப்பதுண்டு. ‘நொதுமலர்’ என்ற சொல்லுக்கு ஏதிலர் என்றும்; ‘ஏதிலாளனை’  என்ற சொல்லுக்கு நொதுமல் தன்மை உடையவன் என்றும் பொருள் கூறுவர்.

பகற்குறியில் சந்தித்து மீளும் தலைவனிடம் தோழி;

“நொதுமலர் போலப் பிரியின்
கதுமெனப் பிறிதொன்று ஆகலும் அஞ்சுவல்” (அகம்.- 300)

என்கையில் தலைவி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவாளோ என்று அஞ்சுவதை விளக்கும் உரையாசிரியர் ஏதிலர் என்றே பொருள் கூறுவர்.

“ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே” (ஐங்.- 232)

எனும் பாடலடி சுட்டும் தலைவனை நொதுமல் தன்மை உடையவன் என்று உரைவிளக்கம் தருகிறார் பொ.வே.சோமசுந்தரனார்.

குழுப்பாத்திரமாக ஏதிலர்

சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர்.

மடலேறித் தன் காதலில் வெற்றி பெற்ற தலைவன்; திருமணத்திற்கு முன்னர் கொண்ட காதல்நோய் பற்றிப் பேசுங்கால்;

“இளையாரும் ஏதிலவரும் உளைய” (கலித்.- 138)ப்

பேசிப் பேசித் துன்பம் தீர்ந்ததாகக் கூறுவதில் ஏவலரும், ஏதிலரும் அடங்குகின்றனர்.

களவுக்காலத்தில் புனக்காவலுக்கு வந்து பறவைகளை ஓட்ட வேண்டிய  தலைவி; தன் பணியைச் செய்யாமல் தலைவனின் பிரிவை எண்ணி அழத்தொடங்கும் போது; உடனிருந்த தோழி அவள் அழுகையை அடக்குகிறாள்.

“எழாஅ ஆகலின் எழில்நலம் தொலைய
அழாதீமோ நொதுமலர் தலையே” (நற்.- 13)

என்ற பாடலடிகளில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசும்  தோழியின் குரல்; அவளது வாயை விட்டு வெளியேறாமல் தலைவிக்கு மட்டுமே கேட்குமளவு கமுக்கமாக அமைவதன் காரணம் அயலாருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பது தான். பாடல் அவரை நொதுமலர் என்கிறது.

தோழி அறத்தோடு நிற்கவும்; பின்னர் வேற்று வரைவிற்குரிய ஏற்பாடுகள் தொடங்கிய போது;

“மீன்வலை மாப்பட்டாங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே” (குறுந்.- 171)

என்று மிரள்கிறாள் தலைவி. மீனுக்காக வலை வீசிய போது மான் வந்து சிக்கியது போல; வரைபொருள் நிமித்தம் பிரிந்து சென்ற தலைவன் வருமுன்னர் பெண் கேட்டு வந்த அயலவர் இப்பாடலில் நொதுமலர் என்று சுட்டப்படுகின்றனர்.

தனிப்பாத்திரமாக நொதுமலாட்டி

பெண்பால் விகுதி பெற்று நொதுமலாட்டி எனப் பூவிலைப் பெண்ணைக் குறிக்கப் பயின்று வருவதுண்டு. பருவம் கண்டு ஆற்றாமல்; கணவன் தன்னை மறந்துவிட்டானே  எனத் தவிக்கும் மனைவிக்குப் பூ விற்கும் பெண்ணைப் பார்க்கும் தோறும் அடக்கமாட்டாத அழுகை வருகிறது.

“…………..பாதிரி………..
புதுமலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே” (நற்.- 118)

எனுங்கால் ‘நொதுமலாட்டி’ என்ற சொல் பெண்பால் விகுதியுடன்  அயலாளைக் குறிக்கிறது.

ஏதிலர் உள்ளேற்கும் பிற பாத்திரங்கள்  

சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர்  ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் ஒருவராக உள்வாங்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என்று முறையே ஆண்பால், பலர்பால் விகுதி பெற்றுத் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதும் உண்டு.

வெறியாடி முருகனைக் காரணம் காட்டும்;

“ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)

பூரித்துத் தலைவன் சிறைப்புறத்து இருந்து கேட்கும்படித் தோழியிடம் சிரிக்கிறாள் தலைவி. அவளது கோணத்தில் வேலன் யாரோ ஒருவன். வெறியாட்டை அஞ்சிய தலைவியும் அவனை; ‘ஏதில் வேலன்’ (அகம்.- 292) என்கிறாள்.

தலைவனின் புறத்தொழுக்கத்திற்குத் துணை செய்யும் பாணன், இயல்பாகவே தலைவிக்கு ஏதிலன் ஆகின்றான். தலைவனின் பரத்தமை காரணமாகச் சினம்கொண்டவள்;

“ஏதில் பெரும்பாணன் தூதாட” (கலித்.- 96)

நிகழ்ந்த மாறுபாட்டைத் தொடர்ந்து விவரிக்கிறாள். பரத்தையிடம் இருந்து திரும்பிவந்த கணவனிடம் பரத்தையின் மணத்தை நுகர்ந்த தலைவி;

“ஏதிலர் நாறுதி” (பரி.- 8)

என்று விலகுகிறாள். இதேபோல் பரத்தையை ஏதிலார் என்று சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்.- 78, 80, 81, 84; பரி.- 24).

பிரிவால் மெலிந்த தன்னைக் கண்டு அடையாளம் தெரியாமல் ஏதிலாட்டி என்று எண்ணிப் பருவம் திரும்பிப் போய்விட்டதோ எனக்  கவல்கிறாள் (நற்.- 56) தலைவி. தன் ஆயத்தோடு சேர்த்துத் தம்மை நொதுமலாளர் என்று வேறுபிரித்து உரைக்கிறாள். நெய்தல்திணை சார்ந்த தலைவிக்கு வேற்றுத்  திணை சார்ந்த தலைவன் பரிசுப் பொருளாகத் தான் வாழும் இடத்துத் தழை கொண்டு தைத்த ஆடையைக் கொடுக்க; அவள் காரணம் கூறி மறுக்கிறாள். ‘எம் நிலத்தைச் சேர்ந்த பெண்டிர் வண்டல் பாவைக்குக் கூட இங்கு கிடைக்கும் நெய்தல்தழை கொண்டு தைத்த ஆடையே புனைவர்’.

“நொதுமலாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்” (ஐங்.- 187)

எனத் தாம் அந்தத் தழையாடைக்கு அயலார் என்பதைப் புரிய வைக்கிறாள். அதைப் பெற்றுக் கொண்டு அணிந்தால்; தானே தன் களவை வெளிப்படுத்த  நேரிடும் என்பதே அவள் கருத்து.

பூவைக்  காரணம் காட்டித் தலைவன் ஏதிலன் எனப்படுவதுண்டு (கலித்.- 107& 111). தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போகிய தலைவன் தாய்க்கு ஏதிலன் ஆகிறான். வேளாண் தொழிலால் செல்வம் மிகுந்த மனையை விட்டுக் காதலனுடன் சென்ற தன் மகள் ஏமாந்து விட்டதாக எண்ணிக் குமைகிறாள் தாய்.

“ஏதிலன் பொய்மொழி நம்பி” (அகம்.- 117)யவள்;

என்பது மகட்போக்கிய தாயின் எண்ணத்தைக் காட்டுகிறது. தன் அறியாப் பருவத்து மகள் யாரோ ஒருவனை நம்பிவிட்டாளே என்ற தவிப்பு மிகும்  போதும் (அகம்.- 17), தலைவி ஊடல்கொள்ளும் போதும் (நற்.- 50& 395) தலைவன் நொதுமலாளன் ஆகிறான். களவுக்  காலத்தில் ஊரார் அலருக்கு  இடையே பிரிந்துறையும் தலைவன் உறவும் பகையும் அல்லாதவன்;

“நயனறத் தொடுத்தல் வல்லியோரே
நொதுமலாளர் அது கண்ணோடாது” (அகம்.- 298)

என்று தலைவனைப் பற்றித் தலைவி ஆற்றுவெள்ளத்திடம் ஆற்றாமல் புலம்புகிறாள். ‘உன்னைப் போலவே தலைவன் கண்டும் காணாமல் கண்ணோட்டமின்றி நொதுமலாளனாய் நடந்து கொள்கிறான்’ எனும் போது தலைவன் ஏதிலர் கூட்டத்தில் சேர்க்கப்படுகிறான். புறத்தே ஒழுகிநின்ற தலைவன் பற்றித் தோழியிடம் பேசித் தன் மனக்குறையை ஆற்றும் தலைவி ‘அவன் திரும்பி வந்தால் என்னைத் தொடாதே’ என்று மறுத்து உரைப்பேன் எனச் சாடப் பயன்படுத்தும் வசை ‘ஏதிலாளன்’ என்பதே. இதே வசையைப் புனையும் பாடல்கள் பல (ஐங்.- 34; நற்.- 74, 216). தன் மனதில் உள்ள ஏக்கத்தைத் தோழியிடம் தெருவில் விவரித்த  தலைவனின் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குபவளாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் தலைவி; ‘வாரணவாசிக்குச் செல்பவர் எல்லாம் துறக்கம் எய்துவர்’ எனும் நையாண்டியுடன்; ‘தெருவில் செல்பவர் புலம்பலை எல்லாம் என்னிடம்  வந்து சொல்லித் தொந்தரவு செய்யாதே’ எனத் தோழியை அறிவுறுத்தும் போது; ஏதிலன் என்றே விமர்சிக்கிறாள் (கலித்.- 60).

தலைவி பாடிய உலக்கைப்பாட்டை ஆதாரமாகக் காட்டி; ஊரார் அலர் தூற்றுங்கால் தோழியின் கோணத்தில் அவர் ஏதிலராகின்றனர் (குறுந்.- 89). தோழி தலைவியிடம்;

“உள்ளி நொதுமலர் ஏர்புரை தெள்ளிதின்” (நற்.- 11)

‘நீ அவன் வரமாட்டான் என்று எண்ணத் தொடங்கினால் ஏற்படவிருக்கும் ஏதத்தை எண்ணிப்பார்’ என்கிறாள். ஊரார் பழிசுமத்தி விடும் சிக்கலை முன்மொழிய; ஏதிலரின் கூட்டத்தில் ஊரார் உள்வாங்கப் படுகின்றனர். ஊரார் பேச்சைக் கேட்டுப் பொருள்வயின் பிரிய நினைக்கும் தலைவனை;

“ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை” (கலித்.-22) என்று பிரிவுக்கு மறுக்கும் தலைவியும் ஊராரை ஏதிலார் ஆக்குகிறாள். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (கலித்.- 14). காமம் மிக்க கழிபடர் கிளவியாக நிலவைப் பார்த்துப் பேசும் தலைவி; தன் நோய்க்கு ஊராரால் தீர்வு சொல்லவோ செய்யவோ இயலாது என்பதை;

“காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றார் மருந்து” (கலித்.- 145)

எனப் பாடும் பெருந்திணைச் செய்தியும் ஊராரை ஏதிலர் கூட்டத்துள் சேர்க்கிறது. இவ்வண்ணமே கைக்கிளைச் செய்தியிலும்; ஊரார் ஏதிலர் எனப்படுகின்றனர் (கலித்.- 113)

உவமைகளில் ஏதிலர்  

ஆயத்தோடு ஆடிக் கொண்டிருக்கும் தலைவியைத் தழுவ விரும்பிய தலைவனுக்கு அவனது அசட்டுத்தைரியம் கைகொடுத்தது. எல்லார் நடுவிலும் புகுந்து;

“நொதுமலர் போலக் கதுமெனத் தழுவி” (குறுந்.- 294)

முயங்கியமை பற்றிய தலைவியின் கூற்று அவனை ஏதிலர் என உவமிக்கிறது. ஆதலால் அன்னை இற்செறித்து விட்டாள் என்கிறாள்.

தான் வாழும் சேரிக்கு வந்தாலும் தன்னைக் கண்டுகொள்ளாமல் செல்லும் தலைவனால் சேரி;

“ஏதிலாளர் சுடலை போல” (குறுந்.- 231)ப் பார்க்கப்பட்டது என்ற சேரிப்பரத்தையின் வாக்கு செவ்விலக்கியக் காலத்துச் சமூகநிலையையும்; தனித்தனிச் சுடலை இருந்தமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. (உரையாசிரியர் இப்பாடலைத் தலைவி கூற்று என்று சொல்வது ஏற்புடையதன்று).

இரவுக்குறியில் தன்னிடம் வம்பு வளர்க்கும் வயோதிகப் பார்ப்பானை ‘புலியைப் பிடிப்பதற்காகச் செய்த முயற்சியில் அகப்பட்ட குறுநரி’ என்று வசை பாடும்போது;

“ஏதில் குறுநரி பட்டற்றால்” (கலித்.- 65)

என ஏதிலனாக உவமிக்கிறாள் தலைவி.

செயல் திறமையும் மதிநுட்பமும் இல்லாத அரசன் நாட்டில் அயலாரின் படை நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதைப் போல இளவேனில் பருவம் தொடங்கித் துன்புறுத்தியது என்ற உவமையிலும் (கலித்.- 27) ஏதிலாளனின் பயன்பாடு உள்ளது.

புறப்பாடல்களில் ஏதிலர்

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு வீற்றிருந்தமை கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்;

“ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது” (புறம்.- 58)

இருவரும் ஒற்றுமையுடன் தம் நட்பைத் தொடர வேண்டுகிறார். இங்கு ஏதில்மாக்கள் என்று சொல்லப்படுவோர் ‘கோள் சொல்பவர்’. இக்காலத் தமிழில் ‘வத்தி வைப்பவர்’ உரையாசிரியர் ‘குறளை சொல்பவர்’ என்கிறார். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (புறம்.- 35)

முடிவுரை    

சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர். அகப்பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும்; பெண்பால் விகுதியோடு நொதுமலாட்டி என்றும் சுட்டுவதுண்டு. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கி ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறுவதையும் காண்கிறோம். சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர் ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் இணைக்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என முறையே ஆண்பால், பலர்பால் விகுதியுடன் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதுண்டு. ஏதிலர் உவமைகளாக  எடுத்து  ஆளப்படுவதுண்டு. புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.