கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 6
-மேகலா இராமமூர்த்தி
கூனி என்றழைக்கப்பட்ட மந்தரை என்பவள் கேகய நாட்டு இளவரசியான கைகேயி தயரதனை மணமுடித்துக் கோசலத்துக்கு வந்தபோது பணிப்பெண்ணாக அவளுடன் வந்தவள். இந்த மந்தரை ஒருமுறை குடத்தில் நீரெடுத்துக்கொண்டு மற்றபெண்களோடு அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தபோது வெளியில் தன் தோழர்களோடு நின்றுகொண்டிருந்த இளம்பிள்ளையான இராமன் விளையாட்டாக ஒரு மண்ணுருண்டையை வில்லில் வைத்து இவள் முதுகில் குறிபார்த்து அடித்துவிட்டான். முதுகில் மண்ணுருண்டை விழுந்தவேகத்தில் மந்தரையின் இடுப்பிலிருந்த குடம் சரிய அதிலிருந்த நீர் சிதறியது. இதுகண்டு மற்றபெண்கள் சிரிக்க, மந்தரைக்கு அஃது அவமானமாய்ப் போய்விட்டது!
”யார் இந்த வேலையைச் செய்தது?” என்று அவள் பார்த்தபோது அங்கே தாமரைக் கண்ணனான இராமன் புன்முறுவலோடு நின்றிருக்கக் கண்டாள். அப்போதே அவன்மீது வெறுப்பு, பகை, பழியுணர்ச்சி முதலிய வேண்டத்தகாத தீய எண்ணங்கள் அவள் உள்ளத்தில் குடியேறிவிட்டன. அவள் நல்லபெண்மணியாக இருந்திருந்தால், ”பெரியவர்களிடம் இப்படி நடந்துகொள்வது முறையில்லை!” என்று சிறுவன் இராமனை அப்போதே அதட்டிவிட்டுச் சென்றிருக்கலாம்; அல்லது சிறுபிள்ளையின் அறியா விளையாட்டு இது என்று அதனைப் பெரிதுபடுத்தாமல் விட்டிருக்கலாம்.
கூனியோ உள்ளமும் கோடிய கொடியாளாக இருந்தமையால் அந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கக் காலம்பார்த்துக் கொண்டிருந்தாள்; இப்போது அந்தக் காலம் வாய்த்ததாகக் கருதியவள், தன் எண்ணத்தை ஈடேற்றக் கேகயன் மடமானான கைகேயியைக் கேடயமாகப் பயன்படுத்த எண்ணி அவள் அரண்மனையை நோக்கி விரைந்தாள்.
வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் கூனியை உண்டை வில்லால் அடித்த செய்தி குறிப்பிடப்படவில்லை. பரதனுக்குப் பட்டம் கிடைக்கவேண்டும் எனும் நோக்கத்தில் அவள் இராமனுக்கு எதிராகச் செயற்படுவதாகவே காட்டப்பட்டுள்ளது என்பது இங்கே கருதத்தக்கது.
கைகேயியின் அரண்மனையைக் கூனி அடைந்தபோது அவள் பஞ்சணையில் தன்னுடைய கடைக்கண்கள் கருணைபொழிய உறங்கிக்கொண்டிருந்தாள் என்கிறார் கம்பர். பிறவியிலேயே இனிய இயல்பும், கருணை உள்ளமும் கொண்டவர்களாலேயே உறங்கும்போதும் அவ்வினிய இயல்புகளை முகத்தில் வெளிக்காட்ட இயலும். கைகேயியின் கண்கள் உறங்கும்போதும் அளி பொழிந்தன என்பதன் வாயிலாகக் கள்ளமற்ற அவள் வெள்ளை உள்ளத்தை நமக்குக் குறிப்பாய் உணர்த்துகின்றார் கம்பர்.
நிம்மதியாய் நித்திரை செய்துகொண்டிருந்த கைகேயியின் சீறடிகளை அரவு தீண்டுவதுபோல் தீண்டி அவளை எழுப்பினாள் கூனி. அவள் முற்றாகத் துயில் நீங்குமுன்னே அவசரமாய்த் தன் உரையைத் தொடங்கினாள்.
”வருத்துகின்ற கொடிய விடப் பாம்பாகிய இராகு தன்னை நெருங்கும்போதும், தன் தண்மை சிறிதும் குன்றாமல் ஒளிவீசும் வெண்திங்களைப்போல் மிகப்பெரிய துன்பம் உன்னை வருத்திப் பிணிக்க வருகின்ற காலத்திலும் அதுகுறித்துக் கவலாமல் நீ நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறாயே!” என்றாள் கைகேயியைப் பார்த்து.
அணங்குவாள் விடஅரா அணுகும் எல்லையும்
குணம்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்
பிணங்குவான் பேர்இடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லைநீ உறங்குவாய் என்றாள். (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1540)
அதைக்கேட்டு நகைத்த கைகேயி, ”உலகங்களுக்கெல்லாம் வேதம்போல் விளங்குகின்ற இராமனை மகனாகப் பெற்ற எனக்கு என்ன துன்பம் வந்துவிடும் என்று நீ அஞ்சுகிறாய்?” என்று கேட்டாள்.
…விராவரும் புவிக்கு எலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ என்றாள். (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1542)
“அட விவரமறியாப் பெண்ணே! உன் செல்வமும் நல்வாழ்வும் வீழ்ந்தன; கோசலை தன்னுடைய மதியினால் இனி நல்வாழ்வு பெறப்போகிறாள்!” என்று படபடத்தாள் கூனி.
”ஏனடி மந்தரை…ஏற்கனவே கோசலை நன்றாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! மன்னர் மன்னனாகிய தயரதன் அவள் கணவன்; பார் புகழும் பரதன் அவள் மகன். இதற்குமேல் புதிதாக அவள் பெறப்போகும் நல்வாழ்வு என்ன?” என்றாள் கைகேயி முறுவலித்தபடி.
இராமனைத் தன் மகன் என்றும் பரதனைக் கோசலை மகன் என்றும் கைகேயி குறிப்பிடுவதிலிருந்தே மாற்றாள் மகன் என்ற வேற்றுமையின்றி அவர்கள் ஒருவர் மகனை இன்னொருவர் நேசித்திருப்பதை நமக்கு அறியத் தருகின்றார் கம்பர்.
இதைக் கேட்டதும் கூனியின் சினம் கூடியது. ”சுத்தவீரர்கள் நகைக்கும்படி, பெண்ணென்றும் பாராமல் தாடகையை வதைத்த இராமன் நாளை முடிசூடப் போகிறான். அதனால்தான் சொன்னேன் கோசலை நாளைமுதல் புதுவாழ்வு பெறப்போகிறாள் என்று” எனச் சொன்னதுதான் தாமதம் கைகேயி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்.
”அருமைத் தோழியே! செவியினிக்கும் நற்செய்தியை எனக்குச் சொல்லியிருக்கிறாய்! பிடி இந்த மாலையை!” என்று விலையுயர்ந்த இரத்தினமாலை ஒன்றைக் கூனியிடம் களிப்போடு நீட்டினாள்.
கசந்த நெஞ்சோடு மாலையைக் கண்ட கூனியின் சினம் எல்லை கடந்தது. அப்போது அவளுடைய மெய்ப்பாடுகள் எப்படி இருந்தன என்பதைக் கம்பர் காட்சிப்படுத்தும் விதம் அருமை!
தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீஉக
விழித்தனள் வைதனள் வெய்து உயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே. (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1548)
கொடுமனக்கூனி கைகேயியின் மகிழ்ச்சிகண்டு கோபத்தோடு சத்தமிட்டாள்; அதட்டினாள்; தன்னுடைய சிறிய கண்களில் நெருப்புப் பொறி சிதற விழித்துப் பார்த்தாள்; திட்டினாள்; வெப்பப் பெருமூச்சு விட்டாள்; தன் கோலத்தைச் சிதைத்தாள்; அழுதாள்; இறுதியில் தன் கோபத்தின் உச்சத்தைக் காட்டும்வகையில் கைகேயி தந்த இரத்தின மாலையைத் துச்சமெனக் கருதி நிலத்தில் ஓங்கியெறிந்து நிலத்தைக் குழியாக்கினாள்.
தொடர்ந்து பேசிய கூனி, ”அடி பைத்தியக்காரி! பரதனுக்கு ஆட்சி கிடைக்காமல் இராமனுக்குக் கிடைக்கிறதே என்று சிறிதும் வருந்தாத நீ ஒரு நல்ல தாயா? பரதா! உனக்கு வாய்த்த தந்தையும் கொடியன்; தாயும் தீயள்; நீ என் செய்வாய் அப்பா!” என்று அரற்றி ஓலமிடவே பொறுமையிழந்த கைகேயி,
”உன் அபத்த உரைகளை நிறுத்து மந்தரை! மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதன் எப்படி முடிசூடமுடியும்? உன் மதியீனத்துக்கு ஓர் அளவில்லையா? என் தோழி என்பதால் உன்னைப் பொறுத்தேன்; இல்லையேல் இவ்வாறு பேசிய உன் நாவைத் துண்டித்திருப்பேன்! நீ இங்கிருந்து புறப்படு உடனே!” என்றாள் சினம் கொப்பளிக்க!
கூனி அதற்கெல்லாம் அஞ்சவுமில்லை; அங்கிருந்து அகலவுமில்லை. கைகேயியின் கால்களில் விழுந்துவணங்கி, அவள் மனத்தை இளக்கி, மீண்டும் தன் துர்ப்போதனைகளைத் தொடர்ந்தாள்.
“ஏன் மூத்தவன் இருக்கும்போது இளையவனுக்கு முடிசூட்ட முடியாது? இப்போது தயரதனையே எடுத்துக்கொள்! அவன் இராமனைவிட வயதில் மூத்தவன் தானே? அவனிருக்கும்போதுதானே அவனைவிட வயதில் இளையவனான இராமனுக்கு முடிசூட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆகவே, இராமனிருக்கும்போது ஏன் அவனைவிட வயதில் இளையவனான பரதனுக்கு முடிசூட்டக் கூடாது?” என்று கேள்விகேட்டுக் கைகேயியின் வாயை அடைத்தாள்.
தன் குரலை சற்றுக் குழைவாக்கிக்கொண்டு பேச்சைத் தொடர்ந்த கூனி, ”கைகேயி உனக்கொன்று தெரியுமா? அருள்நிரம்பிய அறவாழ்வை மேற்கொள்ளும் தவசீலர்கள்கூடப் பெறற்கரிய செல்வத்தைப் பெற்றபிறகு எண்ணம் வேறுபட்டவர்களாக – மனம் மாறுபட்டவர்களாக ஆகிவிடுகின்றார்கள். செல்வத்தின் தன்மை அது! எனவே நாளை அரசபதவி பெற்றபின்பு இராமன் கோசலை போன்றோரின் இயல்பும் மாறிப்போய்விடும். அவர்கள் உன்னையும் உன் மகனையும் கொல்லக்கருதித் துன்புறுத்தாவிட்டாலும், நீங்களே சாகும்படிப் பல்வேறு இன்னல்களைச் செய்வார்கள் என்பது உறுதி!” என்றாள்.
அறன்நிரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும்
பெறல்அருந் திருப்பெற்றபின் சிந்தனை பிறிதுஆம்
மறம்நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால்
இறல்உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல். (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1565)
”அதுமட்டுமா? உனக்குத் தேவையானவற்றைக்கூடக் கோசலையின் அனுமதிபெற்றே நீ பெறமுடியும். நீயாக உன் விருப்பப்படி யாருக்கும் எவ்வித தான தருமங்களும் செய்யவியலாது. இனி, காலாகாலத்துக்கும் அரசுரிமை இராமனுக்கும் அவனுடைய வாரிசுகளுக்குமே போகுமே ஒழியப் பரதனுக்குக் கிட்டாது” என்றெல்லாம் கூனி தொடர்ந்து சொல்லி எச்சரிக்கவே கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது.
விளைவு? அடுத்து என்ன செய்து இராமனின் பட்டாபிடேகத்தை நிறுத்துவது என்று கூனியிடமே யோசனை கேட்கும் நிலைக்கு வந்துவிட்டாள் கைகேயி!
ஊழிற் பெருவலி யாவுள?
[தொடரும்]
*********************
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவைகம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.