‘விதிமீறல்’ – ஒரு விளக்கம்

0

ச.சுப்பிரமணியன்

(தொல்காப்பிய விதி நெறி பற்றிய ஆய்வுப் பார்வை)

முன்னுரை

‘காரண காரிய தொடர்ச்சி’ என்பது பழந்தமிழ் உரைகளில் காணப்படும் ஒரு தொடர். ஒன்றுக்குக் காரணமாக இருப்பது மற்றொன்றின் காரியமாக இருக்கும். அதே காரியம் வேறொன்று தோன்றுவதற்குக் காரணமாயிருக்கும். இது இரண்டு பொருள்களுக்குள்ளே சுழற்சி முறையில் நிகழ்வதும் உண்டு. மேகம் மழையாகிக் கடல் நீராகும். கடல் நீர் ஆவியாகி மேகமாகும். இந்தக் காரண காரிய தொடர்ச்சி இருபொருளுக்குள்ளேயே அமைந்துவிடும். பால் தயிராகும்., மோராகும்., வெண்ணெயாகும்., நெய்யாகும். ஆனால் நெய் அவைபோல மீளுருவம் அடைய இயலாது. ஆய்வு என்பதும் இவ்வாறு பல நிலைகளைக் கொண்ட ஒருவழிப் பாதையே. அந்தமில்லாமல் நீண்டு கொண்டே செல்வதுதான் அதற்குப் பெருமை. அதனால்தான் ஆய்வினைத் ‘தொடரோட்டம்’ என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அண்மையில் ‘கடிதொடர் இல்லை:  தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்’ என்னுந் தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் திரு.தி.மோகன்ராஜ் என்பார் எழுதிய கட்டுரையொன்று வல்லமையில் வெளியாகியிருந்தது. அக்கட்டுரையைப் பலமுறை நோக்கியுணர்ந்து ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. ஆய்வாளரின் அந்தக் கட்டுரையின் கையைப் பிடித்துக் கொண்டு இந்தக் கட்டுரை நடைபயில்கிறது.

பின்னூட்டம் போதாதா?

மேற்கண்ட கட்டுரை பற்றிய நம்முடைய கருத்துக்களைத் தொடக்கத்தில் பின்னூட்டமாகவே பதிவு செய்துவிடலாமென எண்ணியிருந்தோம். கருத்துக்கள், எடுத்துக்காட்டுக்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதில் பின்னூட்டம் அவ்வளவாகப் பயன்தராது பின்னூட்டத்தில் குறைநிறைகளைச் சுட்டுகிறபோது போதிய தெளிவு அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அதனால் இந்தத் தனிக்கட்டுரை. இந்தக் கட்டுரைக்குக் காரணமானது அந்தக் கட்டுரை. அதற்குரிய பாராட்டுக்களை முதலில் சொல்லி நம் கருத்துக்களைப் பின்னர்ப் பதிவு செய்யலாம். இது வயதில் மூத்தவன் (75) என்ற முறையில் நம் கடமையாகும்.

  • இந்தத் தலைமுறை ஆய்வாளர் ஒருவர் பழந்தமிழ் இலக்கணத் துறையைத் தமது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்த பெருந்துணிச்சலை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.
  • எண்பொருளவாகச் செலச்சொல்லிஎன்பார் வள்ளுவர். கடினமான பொருளை எளிய சொற்களால் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அரிய சான்றாக அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.
  • பால்காட்டாது என்னும் முன்னிலை விகுதிகளுக்கு மாற்றாகப் பொருத்தமான வழக்குச் சொற்களைத் தேடித் தொகுத்திருக்கும் ஆய்வுழைப்பு போற்றத்தகுந்தது.
  • பத்திகளில் நிரல்பட ஆய்ந்த பொருண்மைகளை எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது ஆய்வு நெறியில் ஆய்வாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

மறுப்புரையன்று

இளம் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்துவதுதான் நம்முடைய நோக்கம். மாணவப் பருவத்தலிருந்தே விவாதங்களில் நமக்கு நம்பிக்கை கிடையாது. எதிலிருந்தும் ஏதாவது பெறமுடியும் என்பதே நம் நிலைப்பாடு. ‘பால்காட்டாத சில வினைகள் மக்கள் வழக்கில் தற்போது  பால்காட்டுகின்றன’ என்னும் ஒருவரிக் கருதுகோளை அடிப்படையாக வைத்து ஆய்வாளர் படைத்திருக்கும் ஆய்வுக்கட்டுரையின் பொருண்மையில் நமக்கு மாறுபாடு இல்லை. அதற்கான உரிமையும் எனக்கில்லை. அது அவரைச் சார்ந்தது. அவருக்குரியது. தரவுகளைக் கருதுகோளோடு பொருத்திக்காட்டுவதும் விளக்கமளிப்பதும் அவர் பணியே. முன் மதிப்பீடு என்பது பெரும்பாலும் கட்டுரையின் புறக்கட்டுமானத்தைப பற்றியதேயாதலின் அதுபற்றியும் நாம் ஏதும் சொல்வதற்கில்லை. எனவே ஆய்வுக்கான கருதுகோள், ஏற்ற தரவுகள், அவற்றுக்கான விளக்கம், பொருண்மை தொடர்பான முந்தைய ஆய்வுக் கருத்துக்கள், தொடர் விவாதம், முடிவு என்பன யாவும் ஆய்வாளரின் தனியுடைமை. எனவே இவைபற்றிய எதிலும் நம் கருத்துக்கு இடமேயில்லை.

இந்தக் கட்டுரையின் இப்போதைய தேவை

மேற்படிக் கட்டுரையின் தலைப்பில் காணப்படும் ‘விதிமீறல்’ என்னும் சொல்லே இக்கட்டுரைக்குத் தலைத்தூண்டுதலாகும்.  இரண்டு. அவர் காட்டியிருக்கும் செயற்கையான எடுத்துக்காட்டு. மூன்றாவது வடமொழிப் பயன்பாடு. இந்த மூன்றும் ஆய்வாளர் எழுதியிருக்கும் கட்டுரைப் பொருண்மை பற்றியதன்று என்பது தெளிவாகும். ஆய்வின் அணுகுமுறையில் அளவுக்கு மீறிய தெளிவு வேண்டும். எடுத்துக்காட்டுக்களில் மயக்கம் நிலவக்கூடாது. பழந்தமிழ் இலக்கணம் மற்றும் மக்கள் வழக்காற்றியல் பற்றிய கட்டுரையொன்றில் தேவையற்ற நிலையில் வடமொழிப் பயன்பாடு ஏற்கத்தக்கதன்று. ஆய்வுப் பொருண்மையின் ஆழத்தையும் வெளிப்பாட்டுச் சிறப்பினையும் பாதிக்கின்ற அல்லது எள்ளளவும் கட்டுரைக்குப் பெருமை சேர்க்க இயலாத ‘சரிகைச் சொற்கள்’ ஆய்வுக்கட்டுரைகளில் இடம் பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அல்நெறி களைந்து நன்னெறி காட்டுவது நெறியாளர்கள் கடமை. இந்த நம் கொள்கைகளைத் தமிழியல் ஆய்வு நலம் கருதிப் பொதுவெளியில் பதிவிட வேண்டும் என்னும் நம் துடிப்பே இந்தக் கட்டுரைக்குக் காரணமாகும். எனவே அக்கட்டுரைக்கு இந்தக் கட்டுரையை ஒரு பின்னிணைப்பாகக் கொள்ளலாமேயன்றி எந்த நிலையிலும் மறுப்பாகக் கொள்ளுதல் வேண்டா என வேண்டப்படுகிறது. 

மக்கள் மொழிக்குத்தான் நூலிலக்கணம்

மொழி என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மக்களுக்குப் பகிரப்படும் பொருள்களில் ஒன்றன்று. அது ஒரு இனத்தின் பண்பாட்டுக் கூறு. ‘தமிழ்’ என்ற சொல் மொழியைக் குறிக்கும் போது ஒரு இனத்தின் அடையாளமாக அதாவது அவ்வினத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாகத்தான் கருதப்படும். தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழன் பேசுவதால்தான் அது தமிழ். அதனால் அம்மொழியிலக்கணமும் அவர்தம் வாழ்வியலில் பயன்படுத்திய மொழிக் கூறுகளை ஆராய்வதாகத்தான் இருக்க முடியும்.   ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ என்னும் தொடரில் ‘வழக்கு’ என்பது நடப்பியல். ‘செய்யுள்’ என்பது தொல்காப்பியருக்கு முன்னிருந்த வழக்காறு உள்ளிட்ட செய்யுளும். இருந்தவற்றைக் கொண்டு இலக்கணம் செய்த தொல்காப்பியர் சமகாலச் சமுதாயத்தில் காணப்படும் மாற்றங்களையும் பதிவு செய்திருக்கிறார். எதிர்கால நோக்கோடு செய்யப்பட்டனவையே புறனடை. சுருக்கமாகச் சொன்னால் இருந்த நிலை அறிந்து இருக்கின்ற நிலையைச் சுட்டி எதிர்வரும் நிலையை அனுமானிப்பதுதான் இலக்கணம். ‘மக்கட் பெருங்கடல்’ நாளும் பயன்படுத்தும் சொற்களை நோக்க இப்பணி முற்றுப்பெற இயலாத பணி. ஆனால் அரிய பணி. ஒரு மொழியில் எல்லாக் காலத்திலும் நிலவிய அனைத்துக் கூறுகளையும் ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கணம் ஆராய்ந்துவிட முடியும் என எண்ணுவது நெறியன்று. வழிநூல் தோன்றுவதற்கு அதுதான் காரணம். இந்த அடிப்படையில் தொல்காப்பியத்தில் காணப்படும் விதிகளுக்கு மூலம் மக்கள் வழக்கே என்பதற்கான சில சான்றுகளைப் பின்வரும் பத்திகளில் காணலாம்.

“எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்”

என்னும் நூற்பாவை நோக்கினால்,

  1. செந்தமிழ் நாட்டு மக்கள் வழக்கொடு ஆராய்ந்தார்
  2. முன்னோர் செய்த நூல்களை ஆராய்ந்தார்
  3. முறைப்பட முரணாகா வகையில் சிந்தித்தார்
  4. புலமைத் திறத்தோடு ஆராய்ந்தார்
  5. பிறர் குறை கூறா வண்ணம் கட்டமைப்புச் செய்தார்.

என்னும் தொல்காப்பியர் இலக்கணம் செய்த நெறிமுறைகளை அறிந்து கொள்ள இயலும். ‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்’ என்னும் தொடர் சிந்தனைக்குரியது. தமிழின் நிலைத்தன்மைக்கு அதுதான் தலையாய காரணம். எல்லா மொழிக்கும் இது பொது. மொழியின் அழிவுக்கு அல்லது மறைவுக்கு மக்கள் நடப்பியல் பயன்பாடு குறைவே காரணமாகும். எந்தப் பொருளும் புழங்கினால்தான் துரு பிடிக்காது. அம்மியிலிருந்து ஆட்டாங்கல்வரை இதுதான் நிலை!

குரங்கு குற்றியலுகரமா?

‘குடகு’, ‘குரங்கு’ என்னும் சொற்களின் ஈறு உகரம் குறைந்தொலிப்பதால் குற்றியலுகரம் என இலக்கணம் சொல்லுவதாகக் கருதுவது பிழை. மக்கள் அப்படி அந்தச் சொற்களை உச்சரிக்கிறார்கள்.

“நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்தே”

எனத் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் என்பதற்காக மக்கள் பேசவில்லை. அவர்கள் அந்தச் சொற்களில் மொழிமுதல் ககர உகரத்தை முழுமையாகவும் மொழியிறுதி உகரத்தைக் குறைந்தும் (குறைத்து அல்ல)   உச்சரிக்கிறார்கள். ‘புணர்மொழியிடை இன்னும் குறுகுவதற்கும்’ மக்கள் வழக்கே காரணம். இவற்றை நுட்பமாக நோக்கி இலக்கணம் செய்ததுதான் தொல்காப்பியரின் அரும்பணி. இது அரும்பணி என்பதாலேயே அவர் மக்களுக்கு இலக்கண விதிகளைப் போதித்தார் எனக் கருதலாகாது.

நெடிலுக்கு மாத்திரை இரண்டா?

மாத்திரை பற்றி இலக்கணம் என்ன சொல்லியது? நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்று சொல்லியது. ஆனால் உண்மை நிலை என்ன? ‘ஐ’ என்னும் உயிர்நெடில் மெய்யோடு கலந்து ஒலிக்கின்ற நிலை உட்பட எந்த நிலையிலும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கப்படவில்லை. அப்படி இரண்டு மாத்திரையளவு ஒலிக்கப்படும் சொல் தமிழ்மொழியிலேயே இல்லை. ‘நெடிலுக்கு இரண்டு மாத்திரை’ என்று எழுதியதற்கு மக்கள் வழக்கு தெரியாமற் போனதும் ஏனைய நெட்டெழுத்துக்களின் மாத்திரை ஒப்புமை நோக்கியதுமே காரணம் எனலாம். வழக்கறிந்த நிலையில் வரையப்பட்ட இலக்கணம்தான்,

“ஓரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயினான” (எழுத்து – 57).

‘ஐப்பசி’ ‘கைப்பை’ ‘இடையன்’ ‘குவளை’ என்னும் சொற்களில் எல்லாம் ஐகாரம் முழுமையாகப் ஒலிக்கப்படுவதில்லை என்ற வழக்கினை அறிந்தவுடன் ‘நெடில் இரண்டு மாத்திரை’ என்னும் விதி தளர்ச்சியடைந்து விடுவதை அறிதல் வேண்டும். அது மட்டுமன்று ‘கை, பை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிகள் இரண்டு மாத்திரையினின்றும் குறுகி ஒலிக்கும் என்னும் வழக்குண்மையைத் ‘தேருங்காலை என்னும் மிகையினால் உரையாசிரியர்கள் தழுவிக் கொள்கிறார்கள் என்பதையும் அறிதல் வேண்டும். குற்றியலுகர இலக்கணம் முழுமையுமே வழக்கை நோக்கித்தான் அமைந்திருக்கிறது. ‘குடகு’ என்ற சொல்லில் அமைந்துள்ள இரண்டு உகரங்களை வெவ்வேறு அளவினவாக உச்சரிப்பது மக்கள் வழக்கே தவிர தொல்காப்பியத்தின் விதியைப் பின்பற்றி அல்ல.

வழக்குக்கு வாழ்க்கைப் பட்ட தொல்காப்பியம்

‘மரப்பெயர்’ப் புணர்ச்சியில் வருமொழியோடு இணையுங்கால் ‘அம்முச்’ சாரியை பெறும் என்பது விதி. ஆனால் மக்கள் ‘அம்’ என்பதைத் தனித்து உச்சரிப்பதில்லை. ‘புளி அம் கோடு’ என்னாது ‘புளியங்கோடு’ என்றுதான் சொல்லுகிறார்கள். ‘அம்’ மின் ஈறு மகரமாக இருப்பினும் அது திரியும் என்பது வழக்கு. ஒரே வகையான புணர்ச்சிக்கு எத்தனை வகையான திரிபு என்பதை அறிந்து கொண்டால் மொழியிலக்கணத்தில வழக்கின் ஆதிக்கம் புரியக் கூடும்.

“அம்மின் இறுதி கசதக் காலை
தன்மெய் திரிந்து ஙஞந ஆகும்” (எழுத்து – 129)

புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல் (மக்கள் வழக்கு) நுட்பமாகச் சொன்னால் ‘புளியங்கோடு’ என்னும் சொல் வழக்கு. தொல்காப்பியம் கண்டறிந்த சொல் அன்று. அந்த வழக்குச் சொல்லை ஆராய்ந்த தொல்காப்பியம் அதில் இரண்டு பெயர்ச்சொற்களை ஒரு சாரியை இணைக்கிறது என்பதையும் அச்சாரியை வருமொழி எழுத்திற்கேற்பத் திரியும் (இன எழுத்தாக மாறும்) என்பதைக் கண்டறிந்து கூறுகிறார். இங்கேயும் அவர் மக்கள் வழக்குக்குத்தான் முன்னுரிமை தருகிறார்.

எய்தியது விலக்கல் ஏன்?

அளவுப்பெயர்கள் ஏகாரச் சாரியைப் பெற்று முடியும் எனக் கூறும் தொல்காப்பியம் “உயிரும் புள்ளியும் இறுதியாகி அரையென வரூஉம்” (164) என்னும் நூற்பாவில் சாரியை இல்லாத சொற்களைப் (உழக்கரை, செவிட்டரை) பட்டியலிடுகிறது.

வளமோடு வாழ்வது சரியா?

மகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்குங்கால் சாரியை பெறும் என்பது விதியன்று, மக்கள் வழக்கு. வழக்கு நோக்கிய தொல்காப்பிய விதி. முறத்தில் அரிசி பொறுக்கும் பாட்டிகள் உண்டு. முகத்தில் முகம் பார்க்கும் கன்னிகள் உண்டு. மரத்தில் ஏறிப் பழத்தைப் பறித்தவர்கள் உண்டு. இத்தனைச் சொற்களையும் கண்ட தொல்காப்பியம்

“மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை” (185)

என விதி செய்கிறது. ஆனால் இங்கே நடப்பது என்ன? நாம் படித்தவர்கள். முனைவர்ப் பட்டம் பெற்றவர்கள். ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறவர்கள். கல்வி நிலையங்களில் பேராசிரியர்கள். என்ன செய்கிறோம்! இந்த வழக்கை மறுதலிக்கிறோம் “அளவோடு பெற்று வளமோடு வாழ்கிறோம்”. ‘வளத்தோடு’ என்பதுதான் வழக்கு என்பதைக்கூட நாம் தெரிந்தே மறுதலிக்கிறோமே? இதனால் ஒரு பண்பாட்டுக்கூறு சிதலமடைவது தெரியவில்லையா? ஒரு மாணவன் மரமில் ஏறிப் பழமைப் பறித்தேன் என்று எழுதினால் அதனை ஏற்றுக் கொள்வார்களா? இது விதிமீறலா இல்லையா? திட்டமிட்ட மீறல்! மொழியழிக்கும் சதி!. ஒரு நூலின் இலக்கண விதி மக்கள் வழக்கில் இயல்பாக மாறி வழங்குவதை விதிமீறல் என்றால் ஒட்டுமொத்த சமுதாயத்தையே மறுதலிக்கும் இச்செயலை என்னவென்பது?

வழக்கோடு போராடித் தோற்கும் இலக்கணம்

‘பல’, ‘சில’ என்னும் சொற்கள் தமக்குள் புணருமாயின் லகரம் றகரமாகத் திரிந்து புணரும் என்று விதிசெய்கிறது தொல்காப்பியம்,

“தொடரல் இறுதி தம்முன் தாம் வரின்
லகரம் றகர ஒற்று ஆகலும் உரித்தே” (எழுத்து – 214)

‘பற்பல’, ‘சிற்சில’ எனப் புணரும் என விதித்த அந்த விதி அடுத்த சில நொடிகளில் மாற்றம் பெறுகிறது. காரணம் வழக்கு வேறுமாதிரியாகவும் அமைந்து விடுகிறது. எப்படி அமைந்து விடுகிறது?. ‘பலப்பல, சிலச்சில’ என அமைந்தவுடன் தொல்காப்பியம் இலக்கணவிதியின் பரப்பளவை இன்னும் விரிவு செய்து கொள்கிறது.

“வல்லெழுத்தியற்கை உறழத் தோன்றும்” (எழுத்து – 215)

என்று எழுதுகிறது. அதனை எழுதிய பிறகும் அதாவது மக்கள் வழக்கின் பெரும்பரப்பின் எல்லை கண்ணுக்குத் தெரியவில்லை. பலபல, சிலசில, பல்பல, சில்சில எனவும் வழங்கப்படுவது அறிந்த நச்சினார்க்கினியர் என்ன செய்கிறார். தொல்காப்பிய விதிகளுக்குள் அடைத்து அதற்குப் பெருமை சேர்க்க எண்ணுகிறார். எண்ணி என்ன செய்கிறார்? மிகையினால் தழுவிக் கொள்கிறார்!. மேலும் பல் என்னும் சொல் புணர்ச்சியில் ‘பன்’ எனத் திரிவதையும் ஆய்தமாக மாறுவதையும் இதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி இல்லை எனத் தெரிந்து கொண்டு இப்படி எழுதுகிறார்.

“இயற்கை என்றதனான் அகரம் கெடத் திரிந்தும் திரியாதும் உறழ்ந்து முடிதலும் கொள்க. தோன்றும் என்றதனான் அகரம் கெட லகரம் மெல்லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்துமுடிதலும் கொள்க”

ஐந்து வகையான வழக்குகளுக்கு ஒரு வழக்கிற்குத்தான் ‘தீர்ப்பு’ எழுதப்படுகிறது. மற்றவற்றை உரையாசிரியர் மிகையில் அடக்குகின்ற முயற்சிதான் தொல்காப்பியத்தில் நடந்தேறியிருக்கிறது. மக்கள் விதியை மீறியிருக்கிறார்கள் என்றால் எந்த இடத்தில் மீறியிருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமல்லவா?

‘மகவின்கை, மகவின் செவி’ என்பன போன்ற சொற்களைக் கண்டு, ‘மகப் பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை’ (218) என விதி செய்த தொல்காப்பியம் அது அத்துச் சாரியைப் பெற்றும் முடியலாம் என்பதைக் கண்டவுடன் அடுத்த நூற்பாவிலேயே “அத்தவண் வரினும் வரைநிலை இன்றே” (219) என வழக்குக்கு வளைந்து வழிகொடுப்பதைக் காணலாம்.

‘ஒன்பது’ என்ற எண்ணுப்பெயர் ‘நூறு’ என்னும் எண்ணுப்பெயரோடு இணைகிறபோது ‘தொள்ளாயிரம்’ என வழங்கப்படுவது மக்கள் வழக்கு. ‘நூறின் மடங்கு எப்படி ஆயிரம் ஆனது?’ என்னும் வினா எழுவது சரியே. இன்றைக்கும் மக்கள் வழக்கில் ஒன்றினைக் காணமுடியும். ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மேல் சென்றால் அதனை முழுமையாகச் சொல்லாமல் அதனை முன்னிறுத்திச் சில்லரையைச் ‘சொச்சம்’ என்பர். சான்றாக ஆயிரத்து இருபது (1020) என்றால் அதனை முழுமையாகச் சொல்லாமல் ‘ஆயிரத்துச் சொச்சம்’ என்பர். இந்த அளவு ஆயிரத்துக்குக் குறைவாக அமையுமானால் அப்போது ‘இருபது குறைய ஆயிரம்’ என்பார்களே தவிர ‘தொள்ளாயிரத்து எண்பது’ எனச் சொல்வது வழக்கன்று.

“மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தும்
இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது” 103

முதலிய நூற்பாக்களால் தொல்காப்பியமே மக்கள் வழக்காகிய இதனைப் பின்பற்றியிருக்கிறது. இந்த நெறியைப் பின்பற்றித்தான் ஆயிரத்துக்கு நூறு குறைவாக இருக்கிறபோது அதனை ‘ஒன்பது நூறு’ என வழங்காமல் தொள்ளாயிரம் என வழங்கியிருக்க வேண்டும். இது அனுமானமே. ஆனால் தொல்காப்பியம் என்ன விதி சொல்கிறது தெரியுமா?

“ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்றே
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகாரம் மெய்கெட
ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப!
ஆயிடை வருதல் இகர ரகாரம்
ஈறு மெய்கெடுத்து மகரம் ஒற்றும்”

இல்லாத ஊருக்குப் போகாத பாதையைத்தான் தொல்காப்பியம் காட்டுவதாகக் கட்டுரையாளர் உணர்கிறார்.

  1. ‘ஒ’ ‘தொ’ ஆகும் (ஆகுமா?)
  2. ‘ன்’ ள் ஆகி இரட்டும் (எப்படி இரட்டும்?)
  3. நூறு என்பதிலுள்ள நகரம் கெடும் (ஏன் கெடவேண்டும்)?
  4. ‘ஊ’” (நூ) ஆ ஆகும். எப்படி ஆகும்?
  5. ‘இ’ ரகாரம் ஆகுமாம். எப்படி?

மக்கள் வழக்கு என்பது கடல். இலக்கண வரையறை என்பது கரை. கடல்தான் கரையுடைக்குமேயன்றிக் கரை கடலை ஒன்றும் செய்ய இயலாது. எல்லா வழக்குச் சொற்களுக்கும் இலக்கணம் கூறிவிடலாம் என எண்ணியதன் விளைவாகக் கூட இந்த நூற்பா அமைந்திருக்கலாம். ஏனைய எண்ணுப்பெயர் புணர்ச்சிகளை நிரலாகக் கூறி வந்த தொல்காப்பியம் தொள்ளாயிரத்தைப் புறனடையில் அடக்கியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது. அவ்வாறின்றி விளக்கமுறை இலக்கணம் கூறியது அவ்வளவு சரியானதன்று என்பது போல அறிஞர் தமிழண்ணல் இந்த நூற்பாவிற்குச் “சுற்றி வளைத்து விதி கூற வேண்டியதில்லை” என எழுதுகிறார். இந்தச் சான்றிலிருந்து தொல்காப்பியத்தை விஞ்சியது தழிழர்களின் பண்பாட்டு வழக்கு என்பது பெறப்படும். மொழியின் கட்டமைப்புக்கு (புலனெறி வழக்கத்தின் அடிப்படையில்) முறையான இலக்கணம் கூறி வழிநடத்திய தொல்காப்பியம் வழக்குச் சொற்களுக்கு இலக்கண விதிகளை வகுப்பதில் மாபெரும் வெற்றியடைந்ததாகக் கூறமுடியாது.

குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை

விதிமீறல்களுக்கான எடுத்துக்காட்டொன்றில் உடம்படுமெய் பெறுவதற்குப் பொதுப்பெயர், விரவுப்பெயர் என்னும் நிலைப்பாட்டைக் கட்டுரையாளர் சுட்டுவது தெளிவுறவில்லை. வல்லினம் மிகுவதற்கும் மிகாமைக்கும், உடம்படுமெய் பெறுவதற்கும் பெறாமைக்கும் எந்தவிதியில் விரவுப்பெயர், பொதுப்பெயர் என்பன அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டுரையாளர் சுட்டியிருக்க வேண்டும். இனி,

“நான் முத்தை வாங்கினேன் / நான் முத்துவைப் பார்த்தேன்.”

என்னும் எடுத்துக்காட்டால் ஒன்று பொதுப்பெயர் என்றும் மற்றொன்று சிறப்புப்பெயர் என்பதும் சற்றும் பொருந்தாது. இரண்டு காரணங்கள். ஒன்று, உடம்படுமெய் தோன்றுவதற்குப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என்னும் வரையறை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்த எடுத்துக்காட்டில் உள்ள இரண்டு முத்துக்களுமே குற்றியலுகரமே!. முத்தை வாங்கியவன் முத்தைப் பார்த்திருக்க இயலாதா? இல்லை முத்துவைப் பார்த்தவன் முத்துவை வாங்கியிருக்கக் கூடாதா? இரண்டு, தொடர்களிலும் எள்ளின் முனையளவும் வேறுபாடு இல்லை. பூங்கொத்து மற்றும் இலக்கணக்கொத்து என்னும் இரண்டு தொகைச் சொற்களையும் பொருளில் வேறுபடுத்திக் காட்டுவதில் தெளிவில்லை. சொற்கள் வினைகளால் வேறுபட்டு நிற்கும். அவ்வளவுதான்!. கட்டுரையாளர் தந்திருக்கும் விளக்கம் மேலாய்வுக்கு உரியது.

வலிமையில்லாத சான்றுகள்

ஆய்வுக்கான வலிமையான கருதுகோளை உருவாக்கிக் கொள்வதும் எடுத்துக் கொள்வதும் பாராட்டக் கூடியதுதான். ஆனால் சிக்கல் எங்கே தோன்றும் என்றால் அக்கருதுகோளை நிறுவுவதற்கான தரவுகள் அதனினும் வலிமையாக அமைதல் வேண்டும். சான்றுகள் தரவுகளுக்குத் துணை நிற்பதாக அமைதல் வேண்டும். இந்தக் கட்டுரையில் அவை  முழுமையாக அமைந்திருக்கிறதா என்பது நோக்கத்தக்கது. சில எடுத்துக்காட்டுக்கள்,

  1. தமிழில் சொற்களின் மீநிலைப் பகுப்புஎன்கிறார் ஆசிரியர். இந்தத் தொடரில்மீநிலைஎன்னும் சொல்லாட்சி இனம் சுட்டியதா? இல்லையெனின் இது வெற்றெனத் தொடுத்தல் ஆகாதா? தமிழ்ச் சொற்களின் பகுப்பு என்றாலே அமையாதா?
  2. ‘வான் பான் பாக்கு’ முதலியவை இலக்கிய வழக்குகள். மக்கள் வழக்கு என்பதற்குச் சான்றுகள் இல்லை.
  3. ‘தொன்மைத்தாகலின்’ எனத் தனித்தமிழ் பேணும் ஆசிரியர் ‘வாசித்து’ என்று எழுதுவது ஏன்? ‘மரியாதை ஒருமை’ என்னும் பயன்பாடு தமிழில் உண்டா? ‘வழக்கின் ஆகிய உயர்சொற்கிளவி’ என்னும் தொல்காப்பியம் கடினமாக இருக்கிறதா என்ன?
  4. ‘தொடர்’ என்றால் புரியாதா? வாக்கியம் என்றால்தான் புரியுமா? ‘தொடரையே’ புரிந்து கொள்ளாத புறத்தேர்வாளர் ஆய்வேட்டை எப்படி மதிப்பிட இயலும்? ‘தமிழ்ச்சமுதாயம்’ என்றால் அது தமிழ்ச்சமூகத்தைக் குறிக்காதா? பாரத சமுதாயம் வாழ்கவே எனப் பாரதியார் பாடவில்லையா? இருபத்தோராம் நூற்றாண்டிலும் இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தால் மொழித்தூய்மை பற்றியும் 75 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மொழிப்போர் பற்றியும் கட்டுரையாளரின் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது.
  5. ‘பற்றாக்குறை’ போதாமையாவதால் கட்டுரைப் பொருள் சிறந்துவிடுமா? இது பயண இலக்கியத்தைப் பிரயாண இலக்கியம் எனச் சொல்லுவதுபோல் இருக்கிறது. இந்தப் பயன்பாடே அடிப்படை தவறு. வரையறை இல்லாத ஒன்றுக்குப் போதாமை எப்படி வரும்? ‘பிறமொழித்தாக்கம்’ என்பதைப் ‘புறமொழித்தாக்கம்’ என மாற்றியுரைப்பதன் பயன் என்ன? ‘பொதுமக்கள்’ என்பதை ‘வெகுமக்கள்’ என்பதால் என்ன பயன்? பயனற்ற மாற்றத்தால் யாருக்கு என்ன பயன்?
  6. தற்காலத்தில் தமிழ்மொழியில் வழங்கப்படும் இலக்கண முறைப்படி அமையாத தொடர்கள்’ என்று ஒரு தொடர் வருகிறது. வழக்கு இலக்கண முறையின்படிதான் அமைய வேண்டும் என விதியேதும் உண்டா? 
  7. ‘இலக்கணங்களில் இவை வரையறுக்கப்படாத நிலையில் இம்மாற்றம் இலக்கண மீறல் ஆகும்’ எனவும் ஒரு தொடர் வருகிறது. இலக்கணம் வரையறுக்கப்படாத நிலையில் வழங்கப்படும் மாற்றம் எப்படி மீறலாக முடியும்?
  8. ‘அவனுங்க வந்தானுங்க’ என்பதன் செம்மையான வடிவம் ‘அவன்கள் வந்தான்கள்’ என்பதும் ‘அவளுக வந்தாளுக’ என்பதன் செம்மையான வடிவம் ‘அவள்கள் வந்தாள்கள்’ என்பதும் என எழுதுகிறார் ஆசிரியர். இவை செம்மையான வடிவம் என்பதற்கான அளவுகோல் எது? அல்லது எந்த நூல்? சிக்கலே பலர்பால், ‘இருபால் பன்மை’ காட்டாது என்பதுதானே? செம்மையான வடிவமே இல்லாத போது அதனை ஊகம் செய்வது நெறியன்று செம்மையான வடிவத்திற்குக் கட்டுரையாசிரியர் சான்று தந்திருக்க வேண்டும்! (பால் காட்டும் முன்னிலை விகுதிகளுக்குப் பாரதியையும் பாரதிதாசனையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் இதற்கும் எடுத்துக்காட்டு தந்திருக்க வேண்டும் அல்லவா? படர்க்கைப் பலர்பால் பால் காட்டும் நிலையில் அடைந்திருக்கும் வழக்கு மாற்றங்களை மட்டுமே கட்டுரையாளர் சுட்டியிருந்தால் இந்த வினா எழுந்திருக்காது.
  9. ‘முத்தழகைப் பார்த்தேன்’ ‘முத்தழகுவைப் பார்த்தேன்’ என்பதெல்லாம் கட்டுரைக்காக உருவாக்கப்பட்ட செயற்கையான எடுத்துக்காட்டுக்களாகத் தோன்றுகின்றனவேயன்றி உண்மையான வழக்காகத் தோன்றவில்லை. இத்தகைய கருத்தினை நிலைநாட்ட கட்டுரையாளர் விரும்பியிருந்தால் “விமானம் கொழும்புவில் தரையிறங்கியது’, ‘வைரமுத்துவைக் கண்டேன்’, ‘பெங்களூருவில் கலகம்” என்பன போன்ற எடுத்துக்காட்டுக்களைக் காட்டியிருக்கலாம்.
  10. ‘அரசிடம் முறையிட்டேன்’ என்று எழுதுபவர் யார்? ‘அரசுவிடம் முறையிட்டேன்’ என்று எழுதுபவர் யார்? இரண்டுக்குமான பொருள் வேறுபாடு என்ன?
  11. ‘முத்தழகு என்பது குற்றியலுகரச் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையிலும்’ என்னுந் தொடரில் கட்டுரையாசிரியர் முத்தழகு என்னும் சொல்லைக் குற்றியலுகர ஈறாக நோக்குகிறாரா? சிறப்புப்பெயராக நோக்குகிறாரா? மரப்பெயர், எண்ணுப்பெயர் முதலிய குற்றுகர ஈறுகளைப் பற்றி ஆராயும் எழுபத்தெட்டு நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியக் குற்றியலுகரப் புணரியலில் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் புணர்ச்சி ஆராயப்பட்டுள்ளதா? குற்றியலுகரத்தில் அத்தகைய பகுப்பு உண்டா?
  12. வழக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கான களம் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் பயன்பாடா? குற்றியலுகரம் பற்றியதா? அல்வழி வேற்றுமைப் பொருளா என்பதில் கட்டுரையாளர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஆய்வுக்களத்தின் பொருள் வரையறை இன்னும் செப்பமாயிருந்திருக்கக்கூடும்.

நிறைவுரை

பொதுவெளியில் செய்யப்படும் பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் பாராட்டுக்கள் மறுப்புக்கள் என்ற அளவில் அமைவது இயற்கை. இந்தக் கட்டுரை அவ்விரண்டோடும் ஆய்வு நெறிகளையும் ஆய்வுக்கட்டுரைகளில் பின்பற்றப்பட வேண்டிய மொழித்தூய்மையையும் சுட்டிக் காட்டுகிறது. ஆய்வேடுகளில் பின்பற்றப்பட வேண்டிய மொழித்தூய்மையை அறிஞர் மு.வ. நூல்களிலும் மொழிஞாயிறு பாவாணர் ஐயா நூல்களிலும் பரக்கக் காணலாம். கருதுகோளுக்கான தரவுகளைத் திரட்டுங்கால் கையில் அகப்படுகிற தரவுகளையெல்லாம் கருதுகோளில் திணித்துவிடலாம் என எண்ணுதல் இயற்கையே. கருதுகோள் வலிமை பெறுவது தரவுகளின் எண்ணிக்கையால் அல்ல. தரத்தால். எடுத்துக்காட்டுக்கள் இயல்பாக இருக்க வேண்டுமேயன்றி நாமே இட்டுக்கட்டியதாக ஆகிவிடக் கூடாது. மொழி மக்கள் சமுதாயத்தின் மாபெரும் உடைமை. இலக்கண ஆசிரியர்கள் அதற்குக் காப்புரிமை கோர இயலாது. தொல்காப்பியம் தனக்கு முந்தைய கால வழக்குகளையும் தன்கால வழக்குகளையும் புலனெறிவழக்கத்தோடு ஆராய்ந்திருக்கிறது. அவர் நூலெழுதிய பிறகு உண்டான மாற்றங்களை உரையாசிரியர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்த வகையில் சொல்லதிகாரத்தின் உரியியல் நச்சினார்க்கினியர் உரை சேனாவரையரைப் பின்னுக்குத்தள்ளி விடுவதைக் காணலாம். எனவே ‘விதிமீறல்’ என்பதற்கே இடமில்லை. கருத்துப் பரிமாற்றங்களின் தேவை கருதி வழக்கு மொழியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் ‘விதிமீறல்’ என்றால் முனைவர்ப் பட்டம் பெற்று துறைத்தலைமை பீடத்தை அணிசெய்யும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஏனைய கல்வி நிலையங்களில் பணியாற்றும் தமிழாசிரியப் பெருமக்களும் தெரிந்தே செய்கின்ற பிழைகளை எச்சொல்லால் சுட்டுவது?

குறிப்பு:  இக்கட்டுரையின் ஒவ்வொரு அசைக்கும் நாமே பொறுப்பு. எவரும் எதற்கும் தொடர்பு கொள்ளலாம். (sangilisubramanian46@gmail.com)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.