Author: admin

  • உலக வாழ்க்கைக்குத் தமிழ்-கற்றல் கற்பித்தல்

    முனைவர் பி.ஆர்.லக்ஷ்மி.

    தமிழ் இன்றைய அளவில் உலகில் பல நாடுகளிலும் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி கிராமங்களை மிகுதியாகக் கொண்டதனால் மேசைக்கணினி, மடிக்கணினி என்ற அளவில் கற்பித்தல் முறைகளை இணையத்தினை துணைக்கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருப்பதுபோல திறன்பேசிகள் வழியாகக் கற்பித்தல் பணியினைத் தமிழ்நாட்டில் அளிக்க இயலாது. தமிழ்நாட்டில் ஆசிரியர்களினால் செய்யப்பட்ட பல படைப்பாற்றல் திறன்மிகுந்த துணைக்கருவிகள் வழியாகக் கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாசிப்புப் பயிற்சியில் துணைக்கருவிகளின் பயன்பாடு இன்றிமையாதது. வாசிப்புப் பயிற்சியின்றி ஒரு மாணவனால் முழுமையாக எழுதும் பயிற்சியினை அடைய இயலாது. வகுப்பறையில் மின்பலகைக்கணினி வழியாகவோ, ஏடுகளில் தொடர்ச்சியாக எழுத வைப்பதாலோ தமிழ் எழுத்துகளை முழுமையாகக் கற்பித்தல் என்பது இயலாத ஒன்று. எழுதும்போதே அந்த எழுத்துக்குரிய உச்சரிப்பினைச் சொல்லிக்கொண்டே எழுதப் பழக்கினால் உச்சரிப்பும் தெளிவாகும்.

    வெளிநாடுகளில் தமிழ்-கற்றல் கற்பித்தல் வாரம் ஒருமுறை தமிழ்க்கல்வி என்ற அளவில் இயங்கி வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் அத்தமிழ் மக்களுக்குப் பண்பாட்டினை அறிய வைப்பதற்கும், எழுதவும், பேசவும் தமிழ் அறிந்து கொள்ள மட்டுமே தமிழ்மொழி தேவைப்படுகிறது. எனவே அவர்கள் வாழும் இடத்திற்கேற்ற வகையில் திறன்பேசிகள் வழியாகவும் மின்பலகைக்கணினி வழியாகவும் தமிழ் கற்க இயலும்.

    வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியர் அன்றைய பாடத்திட்டத்திற்கான செயல்முறைவடிவ அட்டையினைத் தயார் செய்து கொள்ளவேண்டும். கற்பித்தல் முறைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு முறைகள்தான் ஒரு வகுப்பறையில் உட்புகுத்த இயலும். வகுப்பறையில் சாதாரணமாக 45 நிமிட வகுப்பறையில் 20 முதல் 25 நிமிட நேரங்கள் மட்டுமே ஒரு மாணவனால் கற்பித்தலை மேற்கொள்ள இயலும். வெளிநாடுகளில் வாரம் 1.30 மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என்பதால் அத்தகைய வகுப்பறையைச் செயல்திட்ட வகுப்பறையாக்கினால் மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழ் கற்பர்.

    பாடத்துடன் இணைந்த செயல்திட்ட விளையாட்டுமுறைக் கல்வியினை ஆசிரியர் உட்புகுத்திக் கற்பித்தால் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். அதற்கான பல படைப்பாற்றல் மிகுந்த செயல்திட்டஏடுகளை ஆசிரியர் முன்னரே தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். வகுப்பறை என்பது மனனம் செய்து வைக்கும் போர்ப்பயிற்சி அளிக்கும் போர்க்களமாக ஒரு மாணவனுக்கு இருக்கக்கூடாது. சமூகத்தில் வாழும் வாழ்க்கையில் அவர்கள் அணுகக்கூடிய அனைத்து விஷயங்களையும் (இளவயது முதல் முதுமைப்பருவம்வரை) அணுகி வெற்றியடையக்கூடிய வகையில் அமைவதுதான் கல்வியின் உண்மையான நோக்கமாக ஆசிரியர்கள் அமைத்துக்காட்டவேண்டும். பணியும்,புகழ்சார்ந்த பணமும் நிறைந்தது மட்டுமே வாழ்க்கையன்று என்பதை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால் வளமையான உலக வாழ்க்கை மாணவர்களுக்கு அமையும். மொழிக்கல்வியின் உண்மையான அடிப்படை நோக்கமே இதுதான் என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    Share
  • “கிங் மேக்கர்” – கர்மவீரர் காமராசர்!

    — எஸ். வசந்தி.

    காமராஜர் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தை பெயர் குமாரசாமி நாடார். தாயார் சிவகாமி அம்மாள் ஆவார். முதலில் காமராஜருக்கு “காமாட்சி” என்று பெயரிட்டார்கள். காமாட்சி என்பது அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயராகும். சிவகாமி அம்மாள் காமராஜரை “ராஜா” என செல்லமாக அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராஜர் என்றே அழைத்தார்கள்.

    1909 ஆம் ஆண்டு காமராஜருக்கு 6 வயது இருக்கும்போதே காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார் காலமாகிவிட்டார். தந்தையை இழந்த காமராஜர், சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார். பின்னர் தனது 12 – வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியது. அதன் பின்னர், ஒரு ஜவுளிக்கடையில் காமராஜர் வேலையைப் பார்த்தார். பின் அவரது தாய் மாமன் மூலம் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.

    1920 ஆம் ஆண்டு, அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார். காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக் கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார். தனது சொந்த ஊரான விருதுபட்டிக்கு மீண்டும் வந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

    1923 ஆம் ஆண்டு நாகபுரி கொடிப்போராட்டத்தில் பங்கு கொண்டார். அதே ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

    1925 ஆம் ஆண்டு கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1926 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்காக சத்தியமூர்த்தி – சீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் பணிபுரிந்தார்.

    1927 ஆம் ஆண்டு சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதிபெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது.

    1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அவர் இரண்டாமாண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    1931 ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் காரணமாக விடுதலைச் செய்யப்பட்டார். இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1933 ஆம் ஆண்டு காமராஜர் மீது விருதுநகர் ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வெடி குண்டு’ வழக்கு பொய்யாக உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் காமராஜர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

    1934 ஆம் ஆண்டு காமராஜரின் உழைப்பால். பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப்பெற்று காங்கிரஸ் வென்றது.

    1936 ஆம ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக இருந்து வெற்றி பெற்றார்.

    1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

    1941 ஆம் ஆண்டு யுத்த நிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகக் காமராஜர் ஈடுபட்டார். இதனாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை.

    1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.

    1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர், “என்னை நகரமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி, எனக்குப்பல முக்கிய பணிகள் இருப்பதால் நான் நகரமன்றத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்”” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    1942 ஆகஸ்ட்டு மாதம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    1945 ஆம் ஆண்டு காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்.

    1946 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டு சென்னை சட்ட மன்றத்திற்கும் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 15 ஆம்நாள் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார்.

    1948 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார்.

    1950 ஆம் ஆண்டு நான்காவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார்.

    1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராஜர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார். இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்திலுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராஜர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள்.

    1963 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, தான் கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். காமராஜரின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு உலகமே பாராட்டியது.

    1964 ஆம் ஆண்டு புவனேஸ்வரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குப் பின்பு காமராஜரை ‘காலாகாந்தி’ (கருப்புக் காந்தி) என்றே அழைத்தார்கள். காந்திஜியின் மறு அவதாரமாக் கருதினார்கள்.

    1965 ஆம் ஆண்டு பிரதமர் பதிவியில் இருக்கும்போதே ஜவஹர்லால் நேரு காலமானார். அவருக்கப் பின் யாரைப் பிரதமராக்குவது என்று பல கேள்விகள் எழுந்தது. தனது அரசியல் ஞானத்தால், போட்டியின்றி பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில் லால்பகதூர் சாஸ்திரியை பாரதப் பிரதமராக தேர்ந்தெடுக்க வழி செய்தார். அதனால் இவரை ராஜதந்திரி என்றே அனைவரும் புகழ்ந்தார்கள். ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்குக் காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர். போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார். இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார். இதனால் பெருந்தலைவர் காமராஜரை “கிங் மேக்கர்” (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.

    1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.

    Share
  • முழுமையான சுதந்திரம்!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    கண்ணாய்த் தலைவர்கள்
    காத்து நமக்களித்த
    சுதந்திரத்தைக் காத்தோமா?
    ஊரெங்கும் கொலை கொள்ளை களவு
    லஞ்சம் வஞ்சம் பகை
    இவைதானே செழித்துக்கிடக்கிறது ?

    நட்ட நிசியில் என்று ஒரு பெண்
    பயமின்றி  நடக்கிறாளோ
    அன்றுதான் உண்மைச்
    சுதந்திரம் என்றார்; இங்கோ
    பட்டப் பகலிலேயே
    மனிதனின் காமம்
    மரணக் குழிவெட்டும் சோகம்
    மலராத மொட்டுகளைக் கூடக்
    கசக்கியெறியும்
    கயவர்கள் கூட்டம்
    இதுவா சுதந்திரம் ?!

    குடிக்கும் குளிர்பானம்
    குளிக்கும் சோப்புகள்
    துலக்கும் பற்பசைகள்
    உண்ணும் உணவுவகைகள் என
    வெளிநாட்டுப் பொருட்களை
    உபயோகிப்பதா சுதந்திரம்?

    அந்நியனை விரட்டியது மட்டுமல்ல
    அவர்களின் பொருளாதார
    ஆதிக்கத்தையும் என்று விரட்டுகிறோமோ
    அன்றுதான் முழுமையான சுதந்திரம்!

    போனது போகட்டும்; இனியாவது
    கலாம் போல், காமராஜர் போல்
    நாட்டு நலனில் அக்கறை எடுப்போம்
    சுதந்திர தினத்தில் மட்டும்
    கொடியைத் தூசிதட்டி ஏற்றி
    இனிப்பு வழங்கி அன்றோடு
    சுதந்திர தினத்தை மறக்காமல்
    கெட்டவைகளைக் களைந்து
    சத்தியம்  தர்மம் நேர்மை
    சட்டம் ஒழுங்கு உண்மை
    இவைகளைக் கடைப்பிடித்து
    இந்தியாவை வல்லரசாக்க
    முழுமூச்சோடு பாடுபடுவோம்!

     

    Share
  • மக்கள் இல்லா மக்கள் சபை

    — க. சிவா.

    Panchayat_India_1இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தத்தின்படி, கிராமசபை மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புக்களின் அடித்தளமாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடித்தட்டிலுள்ள கிராம மக்கள், தங்களைத் தாங்களே நேரடியாக நிர்வகித்துக் கொள்ளவும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மறைமுக மக்களாட்சி நிர்வாக செயல்பாட்டுக்கும் ஒரு வழிகாட்டி. அதனைக் கண்காணிக்கும் ஒரு மேன்மையான அமைப்பாகவும் கிராமசபை உள்ளது. கிராம சபையே மக்களாட்சியின் ஆணிவேராகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயல்பட வேண்டும். இது வெறும் கிராம சபை அல்ல முழுக்க முழுக்க மக்களுக்கான மக்கள் சபை. கிராம சபைதான் பஞ்சாயத்து நிர்வாகம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்ட பொறுப்பான நிர்வாகம் அமைப்பதற்கும் வழிவகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை, இதை மறுப்பதற்கில்லை. ஆனால் மக்களின் பங்களிப்பும், பங்கேற்பும் கிராம பஞ்சாயத்தின் அங்கமான கிராம சபை என்ற மக்கள் சபையில் குறைந்து வருகிறது என்பது தான் இன்றைய எதார்த்த நிலை.

    கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் நடப்பதாக இருந்த கிராம சபை கூட்டத்தை, சில காரணங்களினால் மாவட்ட நிர்வாகம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பிறகு 12-ஆம் தேதி நடக்கவிருந்த கிராம சபை கூட்டத்தில் பங்கு கொள்ளவும், ஒரு பார்வையாளனாகவும் இருப்பதற்காகத் தேனியில் உள்ள ஒரு பஞ்சாயத்திற்குச் சென்றேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே அந்த பஞ்சாயத்திற்குச் செல்ல பேருந்தில் பயணமானேன். பேருந்திலோ கூட்டம் அலைமோத, பெரும் மோதல்களுக்கிடையே சிக்கிக் கொண்டு வியர்வை சொட்ட சொட்டப் பயணத்தை தொடங்கினேன். பேருந்து நடத்துனருடன் வாக்குவாதம் காரணம் சரியான பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது, மற்றும் சரியான சில்லறை கொடுக்க மறந்ததுமே. மக்களின் விழிப்புணர்வு மற்றும் உரிமைக்குக் குரல் கொடுப்பது போன்றவற்றையும் அந்தப்பயணத்தில் காணமுடிந்தது. நான் செல்வதென்னவோ கிராம சபை(எ)மக்கள் சபை கூட்டத்திற்கு, பேருந்தில் நடப்பதென்னவோ மக்கள் கூட்டத்தின் நடுவே ஜனநாயக மக்கள் சபை. மக்கள் தங்களின் உரிமை மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது பஞ்சாயத்தில் மட்டுமல்ல அனைத்துப் பொது இடங்களிலும் என்பது அப்போதுதான் புரிந்தது எனக்கு.

    இந்தச் சம்பவம் ஒரு ஒத்திகையாக இருக்கிறதே என்ற எண்ணம் மனதில் ஓட, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்தப் பயணம் நான் செல்லவிருந்த ஊரை அடைந்தது. பேருந்தை விட்டு இறங்கியதும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டு ஊரை நோக்கி நடந்தேன். எதிரே ஓர் முதியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் பஞ்சாயத்து அலுவலகம் எங்கு உள்ளது என்று கேட்க அவரோ நேராக இந்த ரோட்டுல போய் மேற்கால திரும்புப்பா என்றார். முதியவர் கூறிய திசையை நோக்கி நடந்தேன். பஞ்சாயத்து அலுவலகம் தெரிந்தது, மனதுக்குள் ஒரு சிரு சந்தோசம், அந்தச் சந்தோசம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் பூட்டிய கதவை பார்த்தவுடன். கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கவில்லை என்பது ஒரு பக்கம் மனதில் ஓட, மறுபக்கம் படித்தது நினைவிற்கு வந்தது. கிராம சபை கூட்டத்தைப் பஞ்சாயத்து எல்லைக்குள் ஏதேனும் ஒரு பொது இடத்தில்தான் நடத்த முடியும் என்று எண்ணியவாறே அருகிலிருந்த மளிகைக்கடையில் உங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் எங்கே நடக்கிறது என்றேன். அதற்கு அவர் கிராம சபையா அப்படி என்றால் என்ன என்பது போல பார்த்தார். அவருக்குப் புரியவில்லை என்றெண்ணி பஞ்சாயத்து கூட்டம் என்றேன். அதற்கு அவர் சட்டென்று தெரியவில்லை என்று கூறிக்கொண்டே கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரி,பரவாயில்லை பஞ்சாயத்து அலுவலகம் பூட்டியுள்ளது எனவே பஞ்சாயத்து தலைவரின் தொலைபேசி எண் உங்களிடம் உள்ளதா என்று கேட்க, அவரோ அதோ அந்தப் பலகையில் உள்ளது பாருங்கள் அதுதான் என்று கூறினார். பலகையிலோ தலைவர் என்று எழுதி அதனருகில் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது.

    அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் ஒரு ஆண் குரல். சார், நீங்கள் பஞ்சாயத்து தலைவரா என்று நான் கேட்க, அவரோ ஆம் என்றார். நான் வெளியூல் இருந்து இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தை பார்வை இட வந்ததாகவும், கூறி கிராமசபை கூட்டம் எப்போது, எங்கு நடக்கும் என்று கூறுங்கள் நான் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கிறேன் என்றேன். அவரோ சிறிது நேரம் அலுவலகத்தில் காத்திருங்கள் என்றும் உடனே வந்துவிடுவதாகவும் கூறினார். இதற்கிடையில் அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் பஞ்சாயத்து பற்றியும் அவ்வூரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். பின்பு நேரடியாகக் கிராம சபை கூட்டத்தை பற்றியும் கேட்டேன். அந்தக் கிராம மக்களோ தாங்கள் கூறும் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படுவது இல்லை, அதனால் அதற்குத் தாங்கள் செல்வதும் கிடையாது என்றும்; அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பஞ்சாயத்து தலைவரிடமும், வார்டு உறுப்பினர்களிடமும் தான் கேட்க வேண்டும் என்றனர். மக்கள் இப்படி தங்களின் ஜனநாயக உரிமைகளையும், தங்களுக்கான அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் இருப்பதை அந்த ஊரின் மக்கள் சிலரிடம் பேசியதில் இருந்து எனக்குப் புரிந்தது.

    இதற்கிடையில் பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தார். அவருடன்பேசிய போது கிராமசபை கூட்டத்தை நான் பார்வையிடவந்துள்ளதாகக் கூற, அவரோ சற்று தயங்கிய குரலில் சார் … என்று இழுத்தார். ஒரு வேளைக் கிராம சபைக்கூட்டம் முடிந்துவிட்டதோ என்று எண்ணியவாறே கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 10.30 தான் ஆனது. இதைக் கவனித்த பஞ்சாயத்துத் தலைவர் எங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் என்று எதுவும் நடக்காது. அப்படி கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை என்றார். அப்படி என்றால் கிராம மக்கள் தங்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கிராம சபையில் எடுத்துக் கூற மாட்டார்களா, அவர்களின் பங்கேற்பு இல்லாத பட்சத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியலை எப்படித் தயாரிப்பீர்கள், பஞ்சாயத்து அமைப்பின் ஆண்டறிக்கை மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களை பற்றியெல்லாம் எப்படி மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன்.

    பஞ்சாயத்துத் தலைவரோ கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை அதனால் நாங்களாகவே வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, கிராம சபை நடந்ததற்கான வருக்கைப்பதிவேட்டில் பொதுமக்கள் பங்கேற்பு இருப்பதைப் போன்றும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் மற்றும் தீர்மான போன்றவற்றைத் தயாரிக்க வார்டு உறுப்பினர்களே உதவுவதாகவும் கூறினார். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னதில் உண்மை கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் கூறிய எதார்த்தத்தில் உள்ள உண்மை இரண்டு காரணங்களால் நிகழலாம். ஒன்று மக்களிடையே எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பது, மற்றொன்று மக்கள் பஞ்சாயத்து தலைவரின் மீதும் வார்டு உறுப்பினர்களின் மீதும் நம்பிக்கையில்லா நிலை மற்றும் மக்கள் கிராம சபை (எ) மக்கள் சபையின் மீது விழிப்புணர்வு இல்லாததுமே தான் காரணங்களாக இருக்கக்கூடும்.

    வருடத்தில் நான்கு முறை நடக்கும் கிராம சபை கூட்டத்திற்கு கிராமசபை கூட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் யாரும் வருவதில்லையா என்றக்கேள்விக்கு; அதிகாரிகள் வருவார்கள் என்றும் அவர்கள் வருவதற்கு முன்பு போன் செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்றார். அதிகாரிகள் வரும்போது அவர்கள் கையொப்பமிட வேண்டிய ஆவணங்களைத் தயார்படுத்தி வைத்துக் கொள்வோம். வந்தவுடன் கையொப்பமிட்டுவிட்டு உடனடியாகச் சென்றுவிடுவார்கள் என்று கூறிய பஞ்சாயத்துத் தலைவரின் பதிலின் மூலம், அதிகாரிகளின் அலட்சியப்போக்கும் மற்றும் அக்கறையின்மையையும் தெரிகிறது. கிராமசபை கூட்டத்தை கண்காணிக்கும் அதிகாரிகளே கடமையை சரியாகச் செய்யாததினாலும், தவறுக்குத் துணைபோவதினாலும் மக்கள் இல்லா கிராம சபை (எ) மக்கள் சபை நடத்தப்பட்டு உருவாக்கப்படும் போலியான ஆவணங்கள் கூட உண்மையான கிராம சபை நடத்தப்பட்டு மக்கள் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் போல ஆகிவிடுகின்றது.

    அதுமட்டுமின்றி வார்டு உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் போலியானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகமக்களுக்கு மட்டும் சாதகமாகவும் உள்ளது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்களை எதிர் நோக்கிக் காத்திருக்கும் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. சில சமயங்களில் உண்மையான பயனாளிகளுமே லஞ்சம் கொடுத்துத்தான் வளர்ச்சி திட்டத்தின் பயனை அடையவேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலைதான் அந்தப் பஞ்சாயத்தின் நிலையாக இருக்கக் கூடும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகப் பஞ்சாயத்து தலைவர் கூறுவதில் இருந்து அறிய முடிந்தது.

    73- வது இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கூறும் பஞ்சாயத்து அமைப்புகளின் அடித்தளமே கிராம சபை (எ) மக்கள் சபைதான். இதன் மூலமே மக்களின் நேரடி ஜனநாயகத்தை உருவாக்க முடியும், அந்த அமைப்பு தான் மக்களை அதிகாரப்படுத்தும் என்று கூறும் பஞ்சாயத்துச் சட்டங்கள் எழுதப்பட்டிருந்தாலும் கூட அது அதன் செயல் பாட்டில் பல குறைபாடுகளுடன் தான் உள்ளது. இதைச் சரிய செய்ய வேண்டிய அதிகாரிகளின் அலட்சியப் போக்குமே மக்கள், மக்கள் ஜனநாயகத்தையும், அவர்களின் அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. ஒருவேளை மக்களின் பங்கேற்பு மக்கள் சபையில் இல்லை என்றாலும் அதை விழிப்புணர்வு என்ற கோணத்திலாவது அதிகாரிகள் கிராம சபை (எ) மக்கள் சபையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற முற்பட்டிருக்க வேண்டுமே தவிர கிராம சபை என்ற பார்வையில் நடத்தப்படும் அதிகார சபைக்கு துணை நிற்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

    கிராம சபை (எ) மக்கள் சபையின் மூலம் பாமரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நலிந்தோர், எளியோர் மற்றும் பெண்கள் என அணைத்து தரப்பினரையும் வேறுபாடின்றி நேரடியாக அடித்தள நிர்வாகத்தில் பங்குபெற முடியும். அவர்களே அவர்களின் முன்னேற்றத்திற்கு நேரடியாகவே திட்டமிடுதலும் திட்டச் செயலாக்கத்திலும் பங்கு கொள்ள வழிவகுக்கிறது. கிராம சபை (எ) மக்கள் சபை. எனவே, மக்கள் இல்லாத மக்கள் சபையை ஆதரிப்பதை விடுத்து உண்மையான மக்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை (எ) மக்கள் சபையை முறையாகக் கட்டமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதிகாரங்களும் மக்களும் தங்களின் முழுமையான பங்கேற்பையும் கொடுக்க முற்பட்டாலொழிய மக்கள் இல்லா மக்கள் சபை பல பஞ்சாயத்துகளிலும் தொடரும் என்பது தான் எதார்த்தமான உண்மை.

    க. சிவா,
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    அரசியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறை,
    காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராம்–624302.

    படம் உதவி: விக்கிபீடியா

    Share
  • மனதெல்லாம் வாசனை!

    -எம்ரிஎம். யூனுஸ்

    தொல்லைகள் கொள்ளையாகப்
    பார்மீதில் மாறிப் போச்சு!

    நல்லவராய் முகம்காட்டி
    நயவஞ்சகத்தை மனதினிலே
    பதுக்கி வைத்து விட்டுச்
    சந்தர்ப்பம் எட்டும் போது
    எட்டி நின்று உதைக்கின்றார்!

    நாதியற்று அவன் அலைய…
    பட்டி தொட்டியெல்லாம்
    பாசாங்கு அவன் காட்ட
    பித்தனாக இவன் மாற…

    ஊமை வலியோடே
    நாளெல்லாம் நடைபயில…
    பந்த பாசமெல்லாம்
    விலகி நின்றே
    வேடிக்கை பார்க்கின்றார்!

    நீதியெல்லாம் நிலைமாற
    அநீதிக்குள் அலைபாய்ந்து…
    அநாதரவாகத் திரிகின்றான்
    இல்லறம் ஏதுமின்றி!

    தின்று தீர்த்த
    பலாப்பழ வாசனையாகவே
    வாழ்வெல்லாம் முடங்கி கிடக்க…

    மறுபடியும் வாழ்வின்
    வாசனையை நுகர்ந்து விடத்
    தெருவெல்லாம் சுற்றுகிறான்
    வேலை தேடித்தேடியே!!

     

    Share
  • தமிழா… நீ!!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    விழிப்பதற்கே உறக்கம்
    மது குடித்துத் குடித்து உறங்கியே கிடக்கிறாயே..?

    வெல்வதற்கே தோல்வி
    மது மயக்கத்தில் இருந்தால் தோல்வியே நிலைத்துவிடாதா..?

    எழுவதற்கே வீழ்ச்சி
    நடைபாதையிலே விழுந்து எழுந்து வீழ்ச்சியே விருப்பமென்றாயே..?

    மது உறக்கத்தினை உதறி…
    மயக்கத் தோல்விதனைத் துரத்தி…
    விழும் வீழ்ச்சிதனை விரட்டி…
    விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!
    விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!

    உன் வாக்கால் வென்றது பல கட்சி
    ஆனால்…
    உனது வீட்டிலோ துடித்து அழுகிறாளே தமிழச்சி!
    மதுவிலக்கு மது-விலக்கு
    உன் வீட்டில் இருப்பாள் அழகாய் உன் குலவிளக்கு!

     

    Share
  • வெளிச்சக்கடன் கேட்கும் வெள்ளிநிலா!

    -மெய்யன் நடராஜ்

    முக்கனியின் இரண்டாங்கனி முகமெடுத்த போதிலுமே
    –முள்போன்று குத்தாத முகமலர்ச்சி கொண்டிருந்தே
    அக்கனியின் உள்ளிருக்கும் அமுதச்சுளை போலிருக்கும்
    –அகம்படைத்த குலமகளாய் அன்புஎனும் மேகத்தினால்
    சர்க்கரைபோல் இனிக்குமொரு சாரல்மழை பொழிந்திட்டால்
    –சாக்கடைபோல் கிடப்பவனும் சந்தனமாய் உருமாறும்
    அக்கறையும் கொண்டெழுந்து அடியெடுத்துக் கால்நடக்க
    –அமைகின்ற தாரமவன் அரண்மனைக்கு அஸ்திவாரம்!

    இல்லையெனும் பாடலினை எந்நாளும் பாடாமல்
    –இருப்பதனை கொண்டவளும் பொறுப்புடனே நடந்திட்டால்
    தொல்லைதரும் வாழ்வினிலே தொடர்கதையாய் வருகின்ற
    –துன்பங்கள் துயரங்கள் தூரத்தில் போய்மறையும்
    எல்லையில்லா ஆனந்தம் இல்லறத்தில் பூப்பூக்கும்
    –எதிர்கால நிறைவுக்கு எதிர்பார்ப்பை குறைத்தேதான்
    நல்லவழி காட்டுகின்ற நாயகியாய்த் திகழ்ந்தென்றும்
    –நாயகனுக் கொத்தாசை புரிவதுவே நல்லொழுக்கம்!

     தாய்வீட்டுப் புராணங்கள் தலைக்கேற்றி எந்நாளும்
    –தற்பெருமை பேசுகின்ற தப்பிதங்கள் என்கின்றப்
    பேய்விட்டு ஓடுதற்கு பெரும்பாலும் பாடுபட்டுப்
    –பேசுகின்ற வார்த்தைகளில் பேதைமைகள் என்கின்ற
    நோய்தொற்று வாராமல் நுணுக்கமாகக் காப்பாற்றி
    –நூறாண்டு இல்வாழ்க்கை நூதனமாய் நிலைத்திருக்க
    காய்க்கின்ற மரமாகிக் கல்லடிகள் தனைதாங்கிக்
    –கனிந்துவிடும் போதினிலே காதல்கனிச் சுவையாகும்!

    பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பிறவிகளாய் மட்டுமன்றி
    –பெண்குலத்தின் பெருமைக்குப் புகழ்சேர்க்கும் வகையினிலும்
    உள்ளதெல்லாம் வாரிவாரி இறைக்காமல் கொஞ்சத்தை
    –ஊருக்கும் பகிர்ந்தளிக்கும் உயர்குணத்தில் சிறந்தவளாய்க்
    கள்ளமில்லா மனத்துடனே கணவனவன் வியர்வைத்துளி
    –கரையாமல் காப்பாற்றிக் கரையேறும் போதினிலே
    வெள்ளிநிலா விடியும்வரை வாசலிலே காத்திருந்து
    –விடிவெள்ளி உன்வெளிச்ச விலாசத்தைக் கடன்கேட்கும்!

     

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கணினி இடர், தரவுகள் மீட்பு முதலுதவி சேவைகள்

    – எஸ். நித்யலக்ஷ்மி.

    தரவுகள் மீட்பு: அழித்த ஃபைல்களை மீட்கப் பலவழிகள் உண்டு. அது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இதோ சில பயனுள்ள இணையதளங்கள் …

    1. Hard Disk’ ல் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஃபைல்களை எப்படி மீட்பது:
    திடீரென நம்மை அறியாமலேயே தவறுதலாக கணினியில் இருந்து ஃபைல்களை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும். எந்த ஒரு ஃபைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் கணினியை ரீஸ்டோர் செய்தால் டாக்குமெண்ட் கிடைக்கும் என்று, இருப்பினும் ஒருசில சூழ்நிலைகளில் டாக்குமெண்ட் கிடைக்காது. இதுபோன்ற நிலையில் இழந்த ஃபைலினை எப்படியாவது மீட்டெடுக்க நினைத்து இணையத்தில் உதவி கேட்போம். ஆனால் அந்த நேரத்தில் சரியான வழிமுறைகள் எதுவும் கிடைக்காது. அதுபோன்ற நிலையில் நம்முடைய ஃபைல்களை இழக்க நேரிடும் அவ்வாறு இல்லாமல் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க அருமையான மென்பொருள் ஒன்றுள்ளது.

    நீங்கள் எந்த ட்ரைவில் இருந்து ஃபைலினை டெலிட் செய்தீர்களோ அதனை தேர்வு செய்து Scan என்னும் பட்டியை தேர்வு செய்யவும். நீங்கள் டெலிட் செய்யப்பட்ட ஃபைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய கோப்பினை தேர்வு செய்து Undelete என்னும் பட்டியை அழுத்தவும் இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஃபைலானது ரீஸ்டோர் செய்யப்பட்டிருக்கும். இழந்த ஃபைலானது மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. இவ்வாறு நாம் இழந்த ஃபைல்களை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     
     

    www.officerecovery.com

     
     

    2. கணினியில் வைரஸினால் பழுதான ஃபைல்களை எப்படி ரிப்பேர் செய்வது:

    கணினியில் சில நேரங்களில் நம்முடைய ஃபைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த ஃபைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த ஃபைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கவும் நேரிடும். நம்முடைய ஃபைல்கள் பழுதாக சில காரணங்கள் நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான ஃபைல்களை அழித்து விடுவது, எதிர்பாராத மின் வெட்டுப் பிரச்சினை, தொழில் நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களால்தான் நாம்
    பெரும்பாலும் நம் முக்கியமான ஃபைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளைத் தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

    மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் ஃபைல் ஃபார்மட்கள்:
    ◆ Word documents (.doc, .docx, .docm, .rtf)
    ◆ Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
    ◆ Zip or RAR archives (.zip, .rar)
    ◆ Videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
    ◆ Images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
    ◆ PDF documents (.pdf)
    ◆ Access databases (.mdb, .mde, .accdb, .accde)
    ◆ PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
    ◆ Music (.mp3, .wav)
    இப்படி பல வகையான ஃபைல்களை மீண்டும் ரிப்பேர் செய்து உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

    உபயோகிக்கும் முறை:
    ◆ முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
    ◆ பின்பு அந்த மென்பொருளை ஓப்பன் செய்து அதில் கீழே குறிப்பிட்டு இருக்கும் பட்டனை அழுத்தி உங்களின் பழுதான ஃபைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
    ◆ பழுதான ஃபைலை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள ‘Start Repair’ என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய ஃபைல் ரிப்பேர் ஆகத் தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய ஃபைல் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.

    இந்த மென்பொருளால் குறிப்பிட்ட ஃபைல்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான ஃபைலை அனுப்பினால் அவர்கள் அந்த ஃபைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தித் தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.


    www.filerepair1.com 

     

    3. பென் டிரைவில் அழிந்த ஃபைல்களை எப்படி மீட்பது:
    பென் ட்ரைவ் மற்றும் ‘எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்’ ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்) அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

    recover discஇவற்றை எப்படி மீட்டெடுப்பது:
    இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் ஃபைல்களை மீட்கப்பட்டன. பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.

    டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் ஃபைலை தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    4. cd யில் உள்ள ஃபைல்கள் crash ஆயிடுச்சா? கவலையை விடுங்க ? இதோ உங்களுக்காகவே வந்திருக்கு இந்த மென்பொருள்

    www.recoverdisc.com

     
     
     

    எஸ். நித்யலக்ஷ்மி
    தஞ்சை மாவட்டம்

    Share
  • வண்ணமகளைக் கவரவந்த வேளை

    – மீரா, ஜெர்மனி

    செவ்விதழில் குறுநகை தவழச்
    செந்தாமரைப் பூப்போல் மலர்ந்த வதனத்துடன்
    செந்தமிழ் மொழி பேசும் இளம் பெண்ணவள்
    செருக்குடன் வழிமேல் விழிபார்த்துக் காத்திருக்கிறாள்  meera's poem

    வேங்கையவன் வரும்நேரம்தான் காரணமோ ?
    வேல்கொண்ட வீர மறவனும் அவனே தானோ ?
    வேங்கைமர நிழலில் கயல்விழியைத் தேடும்
    வேந்தன் மைந்தன் அவன் சிங்காரச் சீலன்!

    வண்ணமயில் விழி வீச்சு இதயத்தை ஊடுருவும்
    வகிடெடுத்து வாரிப் பின்னலிட்ட அவள் ஓர் ஓவியம்
    வசப்படுத்தும் அவள் அழகு ஐயகோ ஒரு நூதனம்
    வசீகரத்தில் மயங்குபவர் மாநிலத்தில் பல்லாயிரம்!

    கார்த்திகைத் திங்கள் நன்னாள் பெருநாளாம்
    காந்தர்வத் திருமணம் செய்ய அதுவே நல்ல நாளாம்
    கன்னியைச் சுயம்கொள்ள வந்த இந்த வேளை,
    கனவுக் கன்னி இவளைத் தேரில் கவர்ந்து செல்ல உகந்த வேளை!

     

    Share
  • அக்கம் பக்கம்

    ஸ்ரீதரன்

     

    காலை நேரத்தில் ரயில் வண்டி செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. ராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் வண்டி அது. ஒரு இளைஞன் ரயிலில் ஏறி எஸ் 7 கம்பார்ட்மெண்டில் அமர்ந்தான். அவன் முகம் குழப்பமாக இருந்தது. அவனுக்கு எதிரே ஒரு வயதான தம்பதியர் அமர்ந்திருந்தனர்.

    அப்போது அலைபேசி ஒலித்த்து. அவன் எதிரே இருந்த பெண்மணி அதை எடுத்துப் பேசத் தொடங்கினாள்.

    “ ஹலோ, வித்யாவா ? நான் அம்மா பேசறேன். திருச்சியில் சந்துரு மாமா பேத்தி கல்யாணத்திக்குப் போய்விட்டு ரயில் நானும் அப்பாவும் வந்து கொண்டிருக்கோம். கல்யாணத்தில் எல்லோரும் உன்னை விசாரித்தார்கள். ஆமாம் உன் புருஷன் விச்சு ஊருக்குப் போய்விட்டானா? குழந்தை ராது சமுத்தா இருக்காளா? “

    “……………………….”

    ” என்ன? விச்சு  பெங்களுரு போய் வேலையிலேச் சேர்ந்து விட்டானா ? நீ எப்போ பெங்களுரு போகப் போறாய்? “

    “………………………..”

    “ நீ இப்போ காஞ்சிபுரத்தில் உன் மாமியார் வீட்லே இருக்கியா? அங்கிருந்தே பெங்களுரு  போகப்  போறயா? உன் சாமான்களையெல்லாம் எப்படி அனுப்புவே?

    “……………………….”

    “ சாமான்களையெல்லாம் உன் வீட்லே கட்டி வச்சிருக்கியா ? பெங்களூரு அட்ரெஸ் அட்டை பெட்டி மேலே எழுதியிருக்கியா ? நான் அப்பாகிட்டே சொல்லி லாரியில் அங்கு  அனுப்பி வைக்கிறேன். உன் நகையை லாக்கரில் வைச்சுட்டயா?”

    “…………………”

    “ உன் நகையெல்லாம் பத்திரமாய் எவர்சில்வர் சம்படத்தில் வைச்சிருக்கியா? நான் எடுத்து லாக்கரில் வைச்சுடறேன்.

    “……………….”

    ” உன் வீட்டு அட்ரெஸ்தானே? முதல் மாடி, 22, நடுதெரு , நங்க நல்லூர் என்க்கு நல்லா தெரியுமே. ஆமாம் சாவி  யார் கிட்டே இருக்கு ? “

    “………………….”

    எதிர் பிளாட்டிலே இருக்கிற பட்டாபி சார் வீட்டிலே இருக்கா. வித்யா சாவியை வாங்கிக்கச் சொன்னான்னு சொன்னா சாவியைக் கொடுப்பாரா . ரொம்ப சரி.”

    “……………………”

    “ நீ எதுக்கும் கவலைப்படாதே. வீட்டுக்குப் போனதும் அப்பா குளிச்சி , சாப்பிட்டு விட்டு ஒரு லாரியை ஏற்பாடு செய்துண்டு உன் வீட்டுக்குப் போவார். இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே சாமானை எல்லாம் பெங்களுரு அனுப்பி விடுவார்.”

    “………………………”

    “ தாம்பரம் வந்தாச்சு. பேசினது போதும். அலைபேசியைக் கொடு” என்றார் அந்தப் பெண்மணியின் கணவர்.

    ” நான் சமத்தா எல்லா விவரமும் கேட்டுத் தெரிஞ்சுண்டேன் பார்த்தேளா” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

    எதிரே அந்தப்  பெண்மணி பேசியதை எல்லாம் தன் மனத்தில் பதிவு செய்து கொண்ட அந்த இளைஞன் அப்போதுதான் செங்கல்பட்டு சிறைச்சாலையிலிருந்து விடுதலை ஆகி வந்தவன். பிழைப்புக்கு என்ன வழி ? என்று யோசித்துக் கொண்டிருந்தான். ” நேராக போய்  லாரியை வாடகைக்கு எடுக்க வேண்டும் ” என முடிவு செய்து கொண்டு  தாம்பரம் ரயில் நிலையத்தில் மகிழ்ச்சியோடு இறங்கினான்.

                      ********  நிறைவு  ******************

    Share
  • என்னை நீ மறப்பாய் எனில்

    கவிதை மூலம்: பாப்லோ நெருடா
    மொழி பெயர்ப்பு: ந. சந்திரக்குமார்

    என்னை நீ மறப்பாய் எனில்
    கவிதை மூலம்: பாப்லோ நெருடா
    மொழி பெயர்ப்பு: ந. சந்திரக்குமார்

    நீ ஒன்றைத் தெரிந்து
    கொள்ள வேண்டுகிறேன்.

    நீ அறிந்திருக்கலாம்,
    இது இப்படித்தானென்று:

    பளிங்கு நிலவையோ
    இலையுதிர் காலத்தின் நிதானத்தில்
    சிவப்பு மரக்கிளையையோ
    என் ஜன்னல் வழியே
    நான் பார்ப்பதும்
    தீயில் எரியும் மரக்கட்டையின்
    தொட்டுணர முடியாத சாம்பலை
    அல்லது உருமாறிய அதன் தண்டை
    நெருப்பினருகில்
    நான் தொடுவதும்
    என எல்லாச் செயல்களுமே
    என்னை உன்னிடம் கொண்டுசேர்க்கும்….
    நறுமணம், ஒளி, இயந்திரம் என
    இங்கு இருக்கும் யாவும்
    சிறு படகுகளாய்
    எனக்கெனக் காத்திருக்கும்
    உன் தீவுகளைத் தேடிப் பயணிப்பது போல!

    ஆனாலும்,
    என்னை நேசிப்பதை
    கொஞ்சம் கொஞ்சமாய்
    நீ கைவிடும்போது,
    உன் மேலான என் காதலும் போய்விடும்
    கொஞ்சம் கொஞ்சமாய்!

    எளிதில்
    என்னை நீ மறப்பாய் எனில்
    என்னைத் தேட வேண்டாம்,
    ஏனென்றால்
    நானும் உன்னை ஏற்கனேவே மறந்திருப்பேன்!

    திரைச்சீலைகள் வீசும் காற்று
    என் வாழ்வைக் கடந்து செல்வதை
    தீர்க்கமாய், ஆவேசத்துடன் ஆராய்ந்த பின்னும்
    வேர்கள் ஊன்றிய என் இதயத்தின் தீரத்தில்,
    என்னைத் துறந்து நீ செல்வாய் எனில்
    அதே நாள்
    அதே நேரம்
    உன்னை நான் விட்டொழிந்திருப்பேன்,
    புது மண் தேடி
    என் வேர்கள் நீளும் என்பதையும்
    நினைவில் கொள்!

    ஆனால்,
    நீ எனக்கெனத் தீர்க்கப்பட்டவள் என்று
    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு மணிநேரமும்
    மாறாக் கனிவுடன்
    நீ உணரும் போதும்
    ஒவ்வொரு நாளும்
    உன் இதழ்கள் வரை உயர்ந்து
    என்னை நாடி
    மலரொன்று பூக்கும் போதும்
    ஓ .. என் அன்பே! என்னவளே!
    ஓய்ந்தத் தீக்கனல்
    மீண்டும் பற்றியெரியும் என்னுள்!
    அழிந்திடாமல், மறந்திடாமல்
    அனைத்தும் காக்கப்படும் என்னுள்!
    உன் காதலினால் உயிர்வாழும்
    உனக்கான என் பிரியம்
    நீ வாழும் நாளென்றும் நிலைத்திருக்கும்
    உன் கரங்களுக்குள்,
    என்னை விட்டகலாமல்!

    —– &&& ——-

    Sourced Poem in English

    If You Forget Me

    – Pablo Neruda

    neruda_2470415h

    I want you to know
    one thing.

    You know how this is:
    if I look
    at the crystal moon, at the red branch
    of the slow autumn at my window,
    if I touch
    near the fire
    the impalpable ash
    or the wrinkled body of the log,
    everything carries me to you,
    as if everything that exists,
    aromas, light, metals,
    were little boats
    that sail
    toward those isles of yours that wait for me.

    Well, now,
    if little by little you stop loving me
    I shall stop loving you little by little.

    If suddenly
    you forget me
    do not look for me,
    for I shall already have forgotten you.

    If you think it long and mad,
    the wind of banners
    that passes through my life,
    and you decide
    to leave me at the shore
    of the heart where I have roots,
    remember
    that on that day,
    at that hour,
    I shall lift my arms
    and my roots will set off
    to seek another land.

    But
    if each day,
    each hour,
    you feel that you are destined for me
    with implacable sweetness,
    if each day a flower
    climbs up to your lips to seek me,
    ah my love, ah my own,
    in me all that fire is repeated,
    in me nothing is extinguished or forgotten,
    my love feeds on your love, beloved,
    and as long as you live it will be in your arms
    without leaving mine.
    — &&& —-

    ~Chandrakumar

    Share
  • என் ஆசான்

    -பாஸ்கர்  சேஷாத்ரி 

    சுமார் நாற்பது வருஷங்கள் இருக்கும்.

    அவர் பீ. எஸ். ராமச்சந்திர அய்யர். எனக்கு பள்ளியில் ஆங்கில வாத்தியார். அச்சுப் போலக் கையெழுத்து; நடுத்தரமான உசரம். வெள்ளைக் கதர் ஜிப்பா,வேட்டி. அதனைத் துவைத்தால் காய்வதற்கே ரெண்டு நாளாகும். கொஞ்சநாள் தாச்சி அருணாசலம் தெருவில் இருந்தார். ’ரொட்டிக்காரன் தெரு’ என்றால் பழைய மயிலாப்பூர்வாசிகளுக்குத் தெரியும்.

    சமயத்தில் வகுப்புக்குப் பிரம்புக்குச்சி கொண்டுவருவார். அவ்வப்போது மாறும் என்றால் அது எத்தனை கையைப் பதம் பார்த்திருக்கும்! அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயம் வரும். அந்த அடிக்காக அல்ல! அவர் கண்கள் கொஞ்சம் பெரிசு. அதைப் பார்த்தால் தப்பு செய்யாதவன் கூட மன்னிப்பு கேட்பான். கொஞ்சம் அவ்வப்போது கண்களில் நீர் கசியும்.

    மகா கோபக்காரர்! என்னைப்போல மக்கு எல்லாம் நாலாவது வரிசை. என் நேரம் அந்த வரிசைக்குத்தான் அவர் கண்கள் போகும். சரியாகச் சிக்குவேன். நோட்டில் எழுதாமல் ஏதோ வரைந்ததைப் பார்த்து என் காதைப்பிடித்து அடிக்கடித் திருகுவது விசேஷம். எனக்கு தொன்னைக் காது. எந்த குட்டிக் கைக்கும் என் காது லாவகம்; அதுவும் அவர் திருகும்போது நானே பிள்ளையார் மாதிரி சுற்றுவேன். அந்தச்சுற்று சுற்றினால்தான் வலி கொஞ்சம் குறையும். ஆனால் அப்போது அந்தத் திருகு புரியாது. மூன்று மணி நேரம் கழித்து வலிக்கும்.

    அவர் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். எனக்குத் தெரிந்த தாடிக் கண்ணனைப் பிடித்து விலாசம் வாங்கி இதோ அவர் முன்னே…”சார்… நான் உங்க பழைய மாணவன்” – அவர் காதில் விழவில்லை.
    மெல்ல அவர் பக்கம் உரக்க சொன்னேன்…”ஐ அம் யுவர் ஓல்ட் ஸ்டுடென்ட்!”

    கட்டிலில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் தெம்பு இருந்தால் வகுப்பு எடுக்கத் தயாராகி விடுவார்!

    கொஞ்சம் சிரித்தார். அவர் கைகளை ஆதரவாய்ப் பற்றினேன்.

    மொத்த எலும்புகளும் நரம்புகளும் தெறித்துக்கொண்டு வெளிவரத் துடிக்கும் கனிந்த வாழ்க்கை.

    ”யு டுக் இங்கிலீஷ்..” என் ஆங்கிலம் சரியா? கொஞ்சம் பயமாக இருந்தது. திரும்பவும் காதைப்பிடித்துக் கிள்ளுவாரோ ?

    ”யு வேர் மை இங்கிலீஷ் டீச்சர் டூ…ஸாரி…அய் வாஸ் யுவர் இங்கிலீஷ் ஸ்டுடென்ட்!”

    மெல்ல அவர் பாதங்களைப் பிடித்து அமுக்கிவிட்டேன். எப்படி உலகில் அன்பைச் சொல்லுவது ?

    அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருக்கும் என்னைப்போல நெகிழ்ச்சி இருந்திருக்குமோ எனத் தெரியவில்லை.

    எத்தனை காதுத் திருகல்கள்? எவ்வளவு பிரம்படி இந்தக் கரங்களால்…?
    எத்தனை சாக்பீஸ் எழுத்துக்கள் அந்தக் கருப்புத் திரையில் ?

    கொஞ்சம் இறுக்கமான அந்த வீடு திடீரென மங்களமாய் ஆனது.

    ”நான் உங்களையெல்லாம் கொஞ்சம் ஸ்ரமப்படுத்திட்டேன்; என் மன்னிப்பு.”

    ”அதெல்லாம் ஒண்ணுமில்லை.”

    ”தாத்தாவைப் பார்க்க வந்ததில் எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம்….ரெண்டு மாசத்தில் அவர் திருநக்ஷத்திரம் வரது. அவசியம் சொல்றேன்; நீங்க வாங்கோ.”

    ”சாருக்கு இப்ப என்ன வயசு?”

    ”நவம்பர் தாண்டினா நூத்தி மூணு…”

    நான் பள்ளியில் படிக்காது போனது, கிளாஸ் கட் செய்தது, மக்காய் இருந்த நாட்கள் எல்லாம் அவரைப் பார்த்தபின் தப்பாகப் படவில்லை!

    அவர் எனக்கு மந்தவெளிப் பாபநாசம்!

    Share
  • ஏனோ மனசு அழுகிறது!

    -ஷகி, இலங்கை

    ஏனோ மனசு
    அழுகிறது
    எதையும் சொல்ல
    மறுக்கிறது!

    தேற்றித் தேற்றிப்
    பார்த்து விட்டேன்
    அழுது
    தீர்க்கட்டும் என்றே
    விட்டு விட்டேன்!

    நானாய் எதையும்
    நாடவில்லை
    தானாய் அதுவே
    நடக்கிறது!

    வீணாய் எதையோ
    நினைக்கிறது
    தரையில்
    மீனாய்க் கிடந்து
    துடிக்கிறது!

    வலிகள் அதற்குப்
    புதிதுமில்லை
    வஞ்சிக்கப் பட்டதும்
    புதிதுமில்லை!

    ஏக்கங்கள்  அதற்குப்
    புதிதுமில்லை
    தாக்கங்கள் அதற்குப்
    புதிதுமில்லை!

    இழப்புக்கள் அதற்குப்
    புதிதுமில்லை
    ஏமாற்றங்கள் ஒன்றும்
    புதிதுமில்லை!

    புறக்கணிப்புக்கள்
    புதிதுமில்லை
    அவமதிப்புக்கள் அதற்குப்
    புதிதுமில்லை!

    தோல்வியலே
    வாழ்வியலாய்க் கண்ட
    உள்ளம்தான்

    ஏனோ இன்று
    அழுகிறது
    எதையோ புதிதாய்
    நினைக்கிறது
    மொழிகள் இன்றித்
    தவிக்கிறது
    வழிகள் இன்றி
    வலிக்கிறது!

     

     

    Share
  • “கர்மவீரர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

    — சரஸ்வதி ராசேந்திரன்.

     

     

    கர்மவீரர் காமராஜர்

    kamarajarவிருதுநகரிலே குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மாளுக்கும் பிறந்த மகன் காமராஜர். ஏழைக்குடும்பத்திலே பிறந்தாலும் தமது அயராத உழைப்பால், தூய்மையான தொண்டால், உண்மைத் தொண்டால் உயரமுடியும் என்ற உண்மையை இந்த உலகுக்கு நிரூபித்துக்காட்டிய உத்தமர் அவர். நாட்டு நலனே தமது நலனெனக் கருதி காந்திய வழியிலே நின்று அரும்பாடு பட்டவர் காமராஜர். பதவியைத் துச்சமென எண்ணி துண்டை உதறித் தோளிலே போட்டுக்கொண்டு மக்களுக்குச் சேவை செய்தவர்.

    கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருளாய் மேன்மை மிக்கதாய் விளங்குவது கல்வியே. அந்தக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது அவரது தந்தையின் சாவு. அதிலும் நாட்டுப்பற்று வீற்றிருக்கும் மனதில் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டாலும் அவர் மனது எப்படி கல்வியில் நாட்டம் கொள்ளும்? தலைவர்களின் உணர்ச்சி மிக்க சொற்பொழிவுகளை கேட்கக் கேட்க அவர் நெஞ்சில் நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில் காமராஜர் மிகுந்த அக்கறை செலுத்தினார். கட்சியை வளர்ப்பதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்று உண்டியல் குலுக்கினார்கள் அவர் நண்பர்கள். அன்றும் காங்கிரஸ் கட்சியில் இருவகைக் கருத்துடையவர்கள் இருந்தார்கள் அதனால் இரண்டாக உடைந்தது காங்கிரஸ். இதில் முதல் பிரிவுக்குத் தலைவர் சத்தியமூர்த்தி. இரண்டாவது பிரிவுக்குத் தலைவர் ராஜாஜி. அதில் காமராஜர் சத்திய மூர்த்தியின் தலைமையை ஏற்றார். காமராஜர் எப்போதும் அளவோடு பேசுபவர். செயல் புரிவதில் அவர் வல்லவர். மற்றவர்கள் பேசட்டும் நான் பணி புரிகிறேன் என்று பணிவுடன் கூறுவார். அதனால்தான் பிற்காலத்தில் கர்மவீரர் காமராஜர் என்று அழைக்கப்பட்டார்.

    காமராஜர் கலந்து கொள்ளாத போராட்டமே இல்லை எனச்சொல்லலாம். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு முதன் முறையாகச் சிறை சென்றார் அவர். உண்மையான தூய்மையான தொண்டுக்கு என்றும் மதிப்பு உண்டு. அதேபோல் உண்மையாக உழைப்பவர்கள் யாராயினும் அவர்களைத்தேடி பதவி ஓடிவரும். அவரது அயராத உழைப்பின் காரணமாக காமராஜர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுய நலம் இல்லாதவர்களை உலகம் மதிக்கிறது, அவர்கள் சொல்லுக்கு மதிப்பளிக்கிறது. காமராஜரும் நேர்மையாகவும் நெறி தவறாமலும் நடந்து ஒப்பற்றத் தலைவராக விளங்கினார். காமராஜர் கொள்கை பிடிப்பு மிக்கவர். நாளுக்கு நாள் அவர் நெஞ்சில் தேசப்பற்று தழைத்து வளர்ந்தது.

    சிறையில் இருந்தபோது கூட அவர் நிரம்பப் படித்தார். அத்துடன் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். இயற்கையாகவே அவரிடம் அமைந்திருந்த நுண்ணறிவுடன் நூலறிவும் சேரவே அவர் சிறந்த அரசியலறிஞரானார். பதவியை விரும்பாதவர்களைத் தேடி பதவி தானே வரும் . சுய நலம் இல்லாத காமராஜரைத் தேடி முதலமைச்சர் பதவி வந்தது. அவர் விரும்பியிருந்தால் முதலமைச்சராகியிருக்கலாம். ஆனால் தமக்கு விரோதமாக இருந்த ராஜாஜியை முதலமைச்சராக்கி அவருக்குத் தனது ஒத்துழைப்பை நல்கினார் . இன்றைய அரசியலில் அவையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. காமராஜர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் விரும்பியிருந்தால் மேல் சபை உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கலாம். அவர்தாம் பதவி ஆசை இல்லாதவராயிற்றே. சிறந்த ஜனநாயக வாதியாகவும் இருந்ததால் சட்டசபை உறுப்பினராவதற்கே விரும்பினார். அவர் முதலமைச்சர் ஆனபோதுகூட புதிய மாளிகையில் குடியேறவில்லை. அவர்தான் எளிமையானவர் ஆயிற்றே. தி நாகரில் 8ம் நம்பர் வீட்டில் குடியேறினார்.

    அவர் எப்போதும் கட்சிக்காக உழைத்த நண்பர்களையும், தியாகிகளையும் மறக்கவில்லை. எதைச்செய்தாலும் அது பொது மக்கள் நன்மைக்காகவே செய்தார். எந்த நேரத்திலும் தான் ஒரு ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன் என்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை எதிரியாகா நினைக்கக்கூடாது, அவர்களை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவர். குஜராத் பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி இந்தியாவிலேயே எந்த மா நில அரசும் நினைத்துப்பாராத அளவில் கல்வித்துறையில் செயற்கரிய சாதனைகள் செய்தமைக்காக இவருக்கு டாக்டர் பட்டம் தரத் தீர்மானமானது. டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இதை முடிவெடுத்தீங்க? விஞ்ஞானிகள் மேதாவிகள் இருக்காங்க. அவர்களைத்தேடிப் பிடித்து இந்தப் பட்டத்தை கொடுங்கள். என்று சொன்னவர் அவர். இன்றைய அரசியல் அப்படியிருக்கிறதா?

    முதலமைச்சராக இருந்தகாலத்திலும் கூட மக்களிடம் நேரடியாகச்சென்று குறைகள் கேட்டார். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டதால் இலவசக்கல்வி இலவசச்சீருடை வழங்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கான நலனிலும் அக்கறை கொண்டதால் நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுகால ஊதியம், ஆயுள் காப்பீடு ஆகியவை ஆசியா கண்டத்திலேயே காமராஜர் ஆட்சியில்தான் ஆசிரியர் சமுதாயத்திற்கு என இத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. ஓய்வு பெறும் வயது 55-58 ஆக உயர்த்தப்பட்டது.

    இருக்கும் வரை நாட்டுக்காகவே உழைத்த நல்லவர், ஏழைப்பங்காளர், கர்மவீரர், படிக்காதமேதை அவருடைய அரிய பண்புகளுக்காக அவர் செய்த தியாகங்களுக்காக மக்கள் அவரை நேசித்தார்கள். இந்திய மக்களின் இதய வானிலே என்றும் நின்று ஒளிசிந்தும் துருவ நட்சத்திரமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் கர்மவீரர் காமராஜர்.

    சரஸ்வதி ராசேந்திரன்
    மன்னார்குடி-614001

     

    Share
  • மலடி

    -ஷகி, இலங்கை

    குப்பைத் தொட்டில்களும்
    ஈனுதொரு பிள்ளை – என்
    கர்ப்பத் தொட்டிலுக்கோ
    அந்த வரமில்லை
    பத்துத் திங்கள் சுமக்கத்தான் நாதியில்லை
    தசாப்தமாய் சுமக்கின்றேன்
    கற்பனையில் ஓர் பிள்ளை!

    பெற்றவளுக்குப் பிரசவ வலி ஒரு நாள்தான்
    பெறாதவளுக்கோ பிறர்
    தரும் வலி
    தினம் தினம்தான்
    முகம் பார்த்து முறுவலிப்பார்,
    முன் நகர எள்ளி நகைப்பார்
    மூதேவி இவள் மலடி என்றேதான்!

    பணத்துக்கும் என்னிடம்
    பஞ்சமில்லை
    கணவன் பாசத்துக்கும்
    என்றும் குறைவில்லை
    கர்ப்பப் பைக்குள் முட்டைகள் முற்றவில்லை
    கண்களில் முட்டும் கண்ணீரும் வற்றவில்லை

    முன் வீட்டு முனிராவுக்கு
    மூன்று பிள்ளை
    பக்கத்து வீட்டு பவானியும்
    முப்பது நாள் முழுகவில்லை
    பின் வீட்டுக் குடிசைக்குள்ளும் சிணுங்குகிறாள் மழலை
    பிச்சைக்காரி கைகளிலும்
    அழுக்குப்பிள்ளை
    குடிகாரப்பாவிகளுக்கும்
    இதில் குறைச்சலில்லை
    என் வீட்டிலேனோ குலவிளக்கின்னும் பிறக்கவில்லை!

    முற்றத்து முருங்கையும்
    பூவும் பிஞ்சுமா நெறஞ்சிருக்கு
    கிணற்றடிக்  கதலியும்
    பெரிய குலை தள்ளியிருக்கு
    தோட்டத்துத் தென்னையிலும் பாளை வெடிச்சிருக்கு
    நா வளர்த்த பூனையும்
    பிள்ளைத்தாய்ச்சியா இருக்கு
    என் நெஞ்சு மட்டும் பாலையாய்க் கொதிச்சிருக்கு!

    மாமியார் என்னை வெறுத்தாச்சி
    மதினியின் நாவிலும் குத்தல் பேச்சு
    மாமனார் முகம் பார்த்து
    நாளாச்சு
    மச்சினனும் மதிக்க
    மறந்தாச்சு
    பரிகாரம் பார்த்தே
    பணமும் கரைஞ்சாச்சு
    வைத்தியர் மொழிவதோ
    சாட்டுப்பேச்சு!

    என் கொழுனன்
    கொண்டபின்னே உறக்கம்
    தலையணையிடம்
    புலம்புவதே வழக்கம்
    பிள்ளைக்காய் அவருக்குள்ளே ஏக்கம்
    சொல்லாட்டியும்
    இல்லாமலா இருக்கும்?

    யாரை நொந்து என்ன
    இலாபம்
    இறைவா இவள்
    உன் சன்னிதானம்
    பாம்புக்கும் தாய்ப்பாசம்
    வைத்தவன் நீ
    பாறைக்குள்ளிருக்கும்
    தேரைக்கும்
    இரை அளிப்பவன் நீ
    நிகரற்ற கிருபையாளன் நீ!

    சிரம்தாழ்த்தித் தொழுகின்றேன்
    கரம் ஏந்தி வேண்டுகிறேன்
    என் வயிற்றில் ஓா்
    உயிரை வளா்த்திடுவாய்…
    பெண்மையினை
    அன்னையாகப்
    பரிணமிப்பாய்!
     

    Share