“கிங் மேக்கர்” – கர்மவீரர் காமராசர்!

— எஸ். வசந்தி.

காமராஜர் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தை பெயர் குமாரசாமி நாடார். தாயார் சிவகாமி அம்மாள் ஆவார். முதலில் காமராஜருக்கு “காமாட்சி” என்று பெயரிட்டார்கள். காமாட்சி என்பது அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயராகும். சிவகாமி அம்மாள் காமராஜரை “ராஜா” என செல்லமாக அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராஜர் என்றே அழைத்தார்கள்.

1909 ஆம் ஆண்டு காமராஜருக்கு 6 வயது இருக்கும்போதே காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார் காலமாகிவிட்டார். தந்தையை இழந்த காமராஜர், சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார். பின்னர் தனது 12 – வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியது. அதன் பின்னர், ஒரு ஜவுளிக்கடையில் காமராஜர் வேலையைப் பார்த்தார். பின் அவரது தாய் மாமன் மூலம் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.

1920 ஆம் ஆண்டு, அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார். காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக் கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார். தனது சொந்த ஊரான விருதுபட்டிக்கு மீண்டும் வந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

1923 ஆம் ஆண்டு நாகபுரி கொடிப்போராட்டத்தில் பங்கு கொண்டார். அதே ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

1925 ஆம் ஆண்டு கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1926 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்காக சத்தியமூர்த்தி – சீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் பணிபுரிந்தார்.

1927 ஆம் ஆண்டு சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதிபெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது.

1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அவர் இரண்டாமாண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1931 ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் காரணமாக விடுதலைச் செய்யப்பட்டார். இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1933 ஆம் ஆண்டு காமராஜர் மீது விருதுநகர் ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வெடி குண்டு’ வழக்கு பொய்யாக உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் காமராஜர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

1934 ஆம் ஆண்டு காமராஜரின் உழைப்பால். பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப்பெற்று காங்கிரஸ் வென்றது.

1936 ஆம ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக இருந்து வெற்றி பெற்றார்.

1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

1941 ஆம் ஆண்டு யுத்த நிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகக் காமராஜர் ஈடுபட்டார். இதனாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை.

1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.

1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர், “என்னை நகரமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி, எனக்குப்பல முக்கிய பணிகள் இருப்பதால் நான் நகரமன்றத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்”” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1942 ஆகஸ்ட்டு மாதம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

1945 ஆம் ஆண்டு காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்.

1946 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டு சென்னை சட்ட மன்றத்திற்கும் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 15 ஆம்நாள் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார்.

1948 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார்.

1950 ஆம் ஆண்டு நான்காவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார்.

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராஜர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார். இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்திலுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராஜர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள்.

1963 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, தான் கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். காமராஜரின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு உலகமே பாராட்டியது.

1964 ஆம் ஆண்டு புவனேஸ்வரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குப் பின்பு காமராஜரை ‘காலாகாந்தி’ (கருப்புக் காந்தி) என்றே அழைத்தார்கள். காந்திஜியின் மறு அவதாரமாக் கருதினார்கள்.

1965 ஆம் ஆண்டு பிரதமர் பதிவியில் இருக்கும்போதே ஜவஹர்லால் நேரு காலமானார். அவருக்கப் பின் யாரைப் பிரதமராக்குவது என்று பல கேள்விகள் எழுந்தது. தனது அரசியல் ஞானத்தால், போட்டியின்றி பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில் லால்பகதூர் சாஸ்திரியை பாரதப் பிரதமராக தேர்ந்தெடுக்க வழி செய்தார். அதனால் இவரை ராஜதந்திரி என்றே அனைவரும் புகழ்ந்தார்கள். ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்குக் காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர். போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார். இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார். இதனால் பெருந்தலைவர் காமராஜரை “கிங் மேக்கர்” (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.