Author: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 212-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வானில் அழகாய் அணிவகுத்துச் செல்லும் ஃபிளமிங்கோக்களை (Flamingos) அருமையாய்ப் படம்பிடித்து வந்திருக்கின்றார் குருசன். இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 212க்கு அளித்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!

    சிறகு விரித்துப் பறக்கும் இந்த ஃபிளமிங்கோக்களின் கால்கள் செங்கால் நாரையின் கால்களை ஒத்திருக்கக் காண்கின்றேன். இக்காட்சி, செங்கால் நாரையின் கால்களைப் பிளந்த பனங்கிழங்குக்கு ஒப்பிட்ட சத்திமுத்தப் புலவரின் பாடலை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்…

    இனி, இப்படக்கவிதைப் போட்டியில் பங்குபெற வந்திருக்கும் ஒரே கவிஞரான திரு. ஆ. செந்தில் குமாரை, கவிதை படைக்கக் கனிவோடு அழைக்கின்றேன்.

    பிளமிங்கோ பறவைகள்…

    கால்கள் நீண்டிருக்கும்.. கனத்ததொரு அலகிருக்கும்.. எமக்கு
    நெடுந்தூரம் பறப்பதற்கு.. நெஞ்சுரமும் மிகுந்திருக்கும்..!!
    சிறகுகள் விரித்திடுவோம்.. சீராகப் பறந்திடுவோம்.. நாங்கள்
    சீரான தட்பவெப்பப் பகுதிக்கு விரைந்திடுவோம்..!!

    அணிவகுத்து ஆர்ப்பரித்து.. ஆயிரம் மைல் கடந்து.. நாங்கள்
    துணிவுடனே சென்றிடுவோம்.. தூரதேசம் அடைந்திடுவோம்..!!
    கடவுச் சீட்டின்றி.. இடப்பெயர்ச்சி செய்திடுவோம்.. நாங்கள்
    நுழைவாணை ஏதுமின்றி.. கடல் தாண்டிப் பறந்திடுவோம்..!!

    அழகாய்க் கூடமைத்து.. சிலகாலம் தங்கிடுவோம்.. உகந்த
    சூழல் வந்ததுமே.. சொந்த ஊர் திரும்பிடுவோம்..!!
    விடுமுறை எமக்கில்லை.. விருப்ப ஓய்வு ஏதுமில்லை.. நாங்கள்
    இருக்கின்ற காலம்வரை.. இரை தேடி அலைந்திடுவோம்..!!

    நீர்நிலைகள் நிலவளங்கள்.. நல்லபடி போற்றிடுவீர்.. நாங்கள்
    வலசை போவதற்கு.. வாழ்வாங்கு வாழ்வதற்கு..!!
    கடல்வளங்கள் காத்திடுவீர்.. புவிவெப்பம் குறைத்திடுவீர்.. எம்
    இனமும் தழைத்திடணும்.. பூமியெங்கும் நிலைத்திடணும்..!!

    விடுப்பின்றி விருப்போடு உழைத்து, நுழைவாணை ஏதுமின்றி விரிவானைக் கடக்கும் இந்த ஃபிளமிங்கோ பறவைகள், தாம் வலசை போவதற்கும், வாழ்வாங்கு வாழ்வதற்கும் வசதியாக நீர்நிலைகளை, நிலவளங்களைக் காத்திடுங்கள் என்று மாந்தர்க்குக் கூறும் பொருள்பொதிந்த அறிவுரையைக் கவிதையாக்கியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 10

    -மேகலா இராமமூர்த்தி

    இருபத்தோராம் நூற்றாண்டு இணையமற்று, கைப்பேசியற்று வாழ்வதே மாந்தகுலத்துக்கு சாத்தியமற்ற ஒன்று எனும்படியாகச் சமூக சூழலை மாற்றிவிட்டிருக்கின்றது. உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொழில்நுடங்கள் துணைநிற்கின்றன; காசிநகர்ப் பேசும் புலவருரையைக் காஞ்சியில் நேரடியாகவே கேட்பதற்கு விழியங்கள் நிகழ்படங்கள் வழிசெய்துவிட்டன.

    சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாணிகம் களைகட்டுகின்றது. முகநூல் நிறுவனர் திரு. மார்க் சக்கர்பர்க் (Mark E. Zuckerberg) முகநூல் விளம்பரங்கள் வாயிலாகவே கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றார். சாமானிய மக்களுங்கூடத் தங்கள் வாணிகத்தைப் பெருக்க புலனக் குழுமங்களைப் பயன்படுத்திவருகின்றனர்.

    இவ்வாறு வாணிகம், பொழுதுபோக்கு, கருத்துப் பரிமாற்றம், காட்சிப் பரிமாற்றம் என்று பல்வேறு வகைகளில் சமூக வலைத்தளங்கள் மக்களுக்குப் பயனளித்தாலும் இவற்றால் விளையும் ஆபத்துக்களும் நாளுக்குநாள் அதிகரித்தே வருவதைக் காண்கின்றோம். ஆம், தொழில்நுட்ப வசதிகளின் துணையோடு இன்றைய தேதியில் நாம் ஒரு தனிநபரையோ, அரசியல்கட்சித் தலைவரையோ மிக மோசமானவராகவும் சித்திரிக்க முடியும்; உலக உத்தமராகவும் உருமாற்றிக் காட்டவியலும். அரசியல் காழ்ப்பின் காரணமாகக் கட்சிகள் ஒன்றையொன்று இழித்தும் பழித்தும் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான மீம்களும் (memes), வக்கிரப் பதிவுகளும் தேர்தல் காலங்களில் உக்கிரமடைவதைக் காணமுடிகின்றது.

    தலைமைப் பதவிகளுக்குப் போட்டியிடும் அரசியலாளர்கள் சமூக வலைத்தளங்களைத் தம் அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அநாகரிகப் போக்கும் உலகளாவிய ஒன்றாகவே சமீப காலங்களில் மாறிவிட்டது.

    கேம்பிரிட்ஜ் அனலட்டிகா எனும் அரசியல் தரவுச் சேகரிப்பு நிறுவனம் (Cambridge Analytica, a political data firm) முகநூலோடு இணைந்து அமெரிக்க அதிபர் திரம்புக்கு (Donald J. Trump) ஆதரவாகச் செய்த சில திரிபு வேலைகள் அவரை அதிபர் நாற்காலியில் அமரவைக்கப் பேருதவி புரிந்திருக்கின்றன என்பதை அறிகின்றபோது, பொதுமக்களுக்கு நன்முறையில் பயன்படவேண்டிய, நேரிய தகவல்களைத் தரவேண்டிய சமூக வலைத்தளங்கள் எத்துணைத் தவறான வழிகாட்டுதல்களைப் பணத்துக்காகச் செய்கின்றன என்ற வருத்தமே மேலிடுகின்றது.

    முகநூலில் இளம்பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் நண்பர்களாகத் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கின்ற காமுக இளைஞர் கூட்டம் அப்பெண்களைப் போலியான காதல் வலையில் வீழ்த்தி, அவர்களின் ஒழுக்கத்துக்குக் களங்கம் விளைவித்துக் காசு பார்த்துவருவதையும், அதற்கு உடன்பட மறுப்போரை எதுவும் செய்யத் துணிவதையும் சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. இவைபோதாவென்று மார்ஃபிங் (Morphing) முறையில் ஒரு பெண்ணின் உடலையும் மற்றொரு பெண்ணின் தலையையும் இணைத்துச் செய்யும் ஆபாச அக்கிரமங்களுக்கும் அளவேயில்லை. இதனால் எத்தனையோ இளம்பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்கு ஆளாகின்றார்கள். இவற்றையெல்லாம் நோக்குகையில், மனிதர்களின் நிம்மதிக்கும் நல்வாழ்வுக்கும் உலை வைக்கும் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடுகள் தேவையா என்ற வெறுப்பும் ஏற்படவே செய்கின்றது.

    விவரமறியாப் பள்ளி, கல்லூரி மாணவிகள்தாம் இத்தொழில்நுட்பங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் விபரீதங்களை உணர்ந்துகொள்ளாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றார்கள் என்றால் திருமணமாகிக் குழந்தைபெற்ற பொறுப்புள்ள தாய்மார்களும்கூடத் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் தம் அந்தரங்கங்களை முகமறியாத் தறுதலைகளிடம் பகிர்ந்துகொண்டு வம்பை விலைகொடுத்து வாங்குகின்றார்கள்.

    வேறு சில இல்லத்தரசிகளோ இல்லறக் கடமைகளை மறந்து, பிள்ளைகளைப் பேணும் பொறுப்பையும் துறந்து, சமூக வலைத்தளங்கள் (social media), புலனம் (WhatsApp), யூ ட்யூப் (You Tube) முதலியவற்றிலேயே மூழ்கிக் குடும்ப வாழ்வையே குட்டிச்சுவராக்கிக் கொள்கின்றனர்.

    தீபத்தை வைத்துத் திருக்குறளும் படிக்கலாம்; குடியிருப்பையும் எரிக்கலாம் என்பதுபோல் சமூக வலைத்தளங்களும் இருவிதமான வாய்ப்புக்களை மக்களுக்கு வழங்குகின்றன. அவ் வாய்ப்புக்களை நல்லவகையில் பயன்படுத்தி முன்னேறுவதும் தீயவகையில் பயன்படுத்திச் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் அவரவர் கைகளிலேயே உள்ளது.

    ”தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்…”
    என்பார் திருமூலர். ஆகையால் அவரவரும் தம்முடைய இயல்பையும், தமக்கு நன்மை பயப்பது எது, தீமை பயப்பது எது என்பதையும் தெளிவாக உணர்ந்து நன்றின்பால் தம் அறிவைச் செலுத்தினாலே எத்துணையோ ஆபத்துக்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளலாம்.

    இதுவரை இக்கட்டுரைத் தொடரில் பேசப்பட்டவற்றைத் தொகுத்துரைப்பதென்றால்…அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கிய பண்டைத்தமிழ்ப் பெண்கள் சிறிது சிறிதாகத் தம் சுதந்தரத்தையும் அதிகாரத்தையும் இழந்தனர். ஆடவர்க்கு அடிமைகளாய், அவர்தம் மோகம் தீர்க்கும் போகப்பொருளாய் மாற்றப்பட்ட அப்பெண்கள் கல்விக் கண்ணை இழந்து குருடராய்ப் பலகாலம் அறியாமை இருட்டில் தவித்திருந்தனர். இந்த அவலநிலை அகன்று அவர்கள் மீண்டும் கல்வி எனும் கண்ணொளி பெற்றது ஆங்கிலேயர் வருகைக்குப் பின்பே.

    இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் பன்முகத் திறனும் வெளிப்படுவதற்கு அச்சு ஊடகங்களும், வானொலி, தொலைக்காட்சி போன்ற சமூக ஊடகங்களும் வழிவகை செய்தன. அதன்வாயிலாய், கல்விகற்ற பெண்கள் பலர் கதை கட்டுரை கவிதை என்று பல்வேறு வடிவங்களில் தம் எண்ணங்களை எழுத்துக்களாக்கிக் கதாசிரியர்களாய், கவிதாயினிகளாய் முத்திரை பதிக்கத் தொடங்கினார்கள்.

    இணையம் வந்த பின்னரோ யாரும் எழுத்தாளராகலாம்; எவரும் கவிஞராகலாம் என்ற கட்டற்ற சுதந்தரம் கிட்டியுள்ளது. அம்மட்டோ? தேவையானதைப் படிக்கலாம்; காண விரும்புவதைக் காணலாம்; திறன்பேசிச் செயலிகளின் உதவியோடு உரையாற்றலாம்; ஆடலாம், பாடலாம், நடிக்கலாம் என்ற நிலை சாத்தியப்பட்டிருக்கின்றது. நாம் பேசுவதை அப்படியே எழுதிவிடும் மென்பொருள்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவ்வளவு வசதிகளும் நடைமுறைக்கு வந்துவிட்ட 21ஆம் நூற்றாண்டை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் பொற்காலம் என்று கூறினும் மிகையில்லை.

    ஆகவே, நம் மக்கள் குறிப்பாகப் பெண்கள் தம் பன்முக ஆற்றலையும் தொழில்நுட்ப அறிவையும் கவைக்குதவாத வெட்டி விவாதங்களிலும், தேவையற்ற பொழுதுபோக்குகளிலும், அரசியல்வாதிகளின் பொய்யுரைகளைக் கேட்பதிலும் வீணடிக்காது, அறிவார்ந்த வகைகளில் பயன்படுத்தத் தொடங்கினால் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தமுடியும்; உலகுக்கே உதாரண மங்கையராய்த் திகழமுடியும்!

    அத்தோடு, சமூகத்தில் நிகழ்கின்ற அவலங்களையும், பெண்களுக்கு எதிரான பாலியல், குடும்ப வன்முறைகளையும் கண்டிப்பதற்கும் களைவதற்கும் வலைத்தளங்கள், புலனக் குழுக்களைச் சமூக நலத்தில் நாட்டங்கொண்ட பெண்கள் பயன்படுத்தலாம். வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அவர்களுக்குச் சட்டரீதியான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவது போன்றவற்றையும் செய்யலாம். இம்முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பொருட்செலவு ஏதுமில்லை; அருள்மனமும் சமூகப் பொறுப்புணர்ச்சியுமே தேவை!

    தாழ்வுற்றுத் தளைப்பட்டு கிடந்த நம் பெண்கள், பூட்டிய இருப்புக்கூட்டின் கதவுகளைத் திறந்துகொண்டு சிம்புள் பறவைகளாய்ச் சிறகுவிரித்துப் பறக்கத் தொடங்கிவிட்டனர். இனி ஆண்களுக்கு நிகராக… ஏன்… அவர்களையும் மிஞ்சும் வகையில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை நிகழ்த்த வேண்டும்; சரித்திரம் படைக்க வேண்டும்; வறியோரின் தரித்திரம் துடைக்க வேண்டும்!

    பெண்களே! உம் வளர்ச்சியைத் தடைசெய்யும் இடையூறுகள் அனைத்தையும் தன்னம்பிக்கை எனும் உளிகொண்டு தகர்த்தெறியுங்கள்! துணிச்சலெனும் கவசமணிந்து, அறிவின் துணையோடு வாழ்க்கைப் பாதையில் நடைபோடுங்கள்!

    வெற்றி நிச்சயம்!

    [முற்றும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 211-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கல்லில் துணியை அடித்துத் துவைக்கும் பாட்டாளியைப் படமெடுத்து வந்திருப்பவர் காயத்ரி அகல்யா. இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 211க்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    இப்படத்தைப் பார்க்கையில்,

    துணிவெளுக்க மண்ணுண்டு,
    தோல்வெளுக்கச் சாம்பருண்டு
    மணிவெளுக்கச் சாணையுண்டு
    மனம்வெளுக்க வழியில்லையே
    ” என்று முத்துமாரியிடம் மாந்தர் நிலையை முறையிட்டு வருந்திய மகாகவியே என் நினைவுக்கு வருகிறார்.

    இப்படத்தைக் கண்ணுறும் நம் கவிஞர்களின் எண்ணத்தில் ஊறுவது என்ன என்று அறிந்துவருவோம் வாருங்கள்!

    *****

    ”தர்மகர்த்தா வீட்டுத் துணிகளைப் பொழுதோடு தோய்த்துக்கொடுக்கக் கருத்தாய் வேலைசெய்யும் சலவைத் தொழிலாளி இவர்!” என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

    நாளைக்கு ஊர்க் கோயில் குடமுழுக்குன்னு
    தர்மகர்த்தா வீட்டுல எட்டுத் துணி குடுத்தாக…
    பொழுது சாயுறதுக்குள்ள
    கொண்டு சேக்கணும்..
    அவுக கொல்லப் பக்கம் கொஞ்சம் இருட்டாதான் இருக்கும்…!

    *****

    ”சூரியன் செய்த சலவையால் ஒளிர்ந்தது நீலவானம்! அதுபோல் சாதியென்றும் மதமென்றும் மாசுபடிந்து நேசம்வடிந்து நிற்கும் நம் மனத்தையும் சீர்திருத்தங்களால் சலவை செய்திட வேண்டும்” என்று நன்மொழி நவில்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    சலவை செய்திட வேண்டும் – மனதை
    இருள் வந்து சூழ்ந்திட
    சூரியன் நீ வந்து சலவை செய்திட
    நீல வானம் ஒளிர்ந்ததே
    எதைக் கொண்டு சலவை செய்தாயோ?
    நுரைகளாய் வெண்பஞ்சு மேகங்கள்!

    பனி வந்து படர்ந்திட
    பூமி உடுத்திய பச்சைவண்ணச் சேலை நனைந்ததே!
    சூரியன் நீ வந்து அடித்த வெயிலில் அது உலர்ந்ததே!
    சலவைக்குச் சிக்கனமாய் நீரை நீ பயன்படுத்தினாயோ?
    பெய்யும் மழைகளும் குறைந்து பூமி வறண்டு போனதே!

    உடுத்தும் உடைகளின் அழுக்கை அகற்றிட
    உழைக்கும் இவனுக்கு
    உடுத்திக்கொள்ள நல்ல உடைகள் இல்லை!
    செய்யும் தொழிலாலே பிரிக்கப்பட்டோம் அன்று!
    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று
    குரல் கொடுத்த பாரதியை மறந்து விட்டோம்!
    இன்றோ ஜாதிகளாலும் கட்சிகளாலும்
    எண்ணற்ற பிளவுகளால்
    எண்ணிக்கையில் நிறைந்து நின்றோம்!

    மாசு படிந்த மனதினைச் சலவை செய்து
    நேசம் நிறைந்த நெஞ்சாய் மாற்றிட
    சீர்திருத்தம் செய்ய வேண்டும்!
    நம் சிந்தனையில்
    சிறிய திருத்தம் செய்யவேண்டும்!
    புதிய சிந்தனை உருவாகி
    வரும் சந்ததியினர்
    அதை வழிமொழிந்திட வேண்டும்
    இருள் சூழ்ந்த இதயம் அன்று தெளிவு பெரும்
    அதில் புதிய பாரதம் வந்து பிறந்திடும்!

    கற்பனையும் கருத்தும் செறிந்த கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    படிப்பினை…

    அழுக்காய்த் துணியைக் கொடுத்தாலும்
    அடித்துத் துவைத்து வெளுத்திடுவார்,
    பழுதாய்ப் பணியதை யெண்ணவேண்டாம்
    படிப்பினை யதுவே தத்துவமாய்,
    அழுக்கு மனமது தூய்மைபெற
    அடிபல பெறுகிறோம் வாழ்வினிலே,
    எழுந்திடு இன்னலில் துவண்டிடாதே
    ஏற்றம் வாழ்வில் கண்டிடவே…!

    துணியில் படித்திருக்கும் அழுக்குகளைத் துவைத்து வெளுக்கும் சலவைத் தொழிலாளிபோல் நம் மனத்திலே நிறைந்திருக்கும் இழுக்குகளாம் அழுக்குகளை இன்னல்கள் எனும் அடியால் வெளுக்கின்றது வாழ்க்கை. எனவே வாழ்வில் நாம் படும் பாடுகளைப் பாடமெனக் கொளல் வேண்டும் என்று பொருளுரை பகரும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 210-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    காய்ந்து கருகிய சருகையும் படமாக்கி நம் கவனத்தைக் கவரமுடியும் என்று தன் நிழற்படத்தின்மூலம் நிரூபித்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன்; பாராட்டும் நன்றியும் அவருக்கு!

    இளமையெனும் வண்ணப் பொலிவிழந்து சல்லடைக் கண்களால் சகத்தினை நோக்கி இச்சருகு பகரும் அனுபவ மொழி என்னவோ?

    கவிஞர் பெருமக்களே! சருகு குறித்த உம் கருத்துக்களைச் சத்தான கவிதைகளாய் மெருகேற்றித் தருக!

    இச்சருகைக் காண்கையில் அப்பா அணிந்து நைந்த முண்டா பனியனும் தேய்ந்த காலணிகளுமே மூளையின் மூலையில் மின்னி மறைகின்றன என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

    இச்சருகின் தோற்றம்!

    ஓசோன் வழி ஊடுருவும் கதிர்களால்
    உருக்குலையும் உலகை உவமித்தாலும்

    மூளையின் ஏதோ ஒரு மூலையில்

    அப்பா அணிந்தே நைந்த முண்டா பனியனும்
    அலைந்தே தேய்ந்த வெள்ளை நீலக் காலணிகளுமே

    மின்னி மறைகிறது…

    *****

    ”மரத்துக்கு அழகுதரும் பச்சை இலைகள் பழுத்துச் சருகாகி உதிர்வதுபோன்றதே மானுட வாழ்க்கை” என்று சருகினை வைத்து வாழ்வியல் உண்மை உரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்வு முடிந்தால்…

    ஆயிரத்தில் ஒன்றாக இருந்தால் கூட
    அழகேதான் மரத்திலுள்ள பச்சை இலைகள்,
    ஆயுளது முடிந்தவைதான் பழுத்து வீழ்ந்தே
    அனல்வெயிலில் காய்ந்தேதான் சருகாய் மாறும்,
    ஓயுதலிலாக் காற்றடித்து மண்ணை விட்டு
    ஒன்றதிலே பறந்துசென்று கோபுர மடையினும்
    மாயமதாய் மதிப்பேதும் வருவ தில்லை
    மாண்டுவிட்ட சருகேதான் வாழ்க்கை இதுவே…!

    *****

    ”காதலில் தோற்ற உள்ளம் சல்லடையாய் மாறிக் கல்லறைக்குச் சென்றபோது அங்கே வந்து விழுந்த சருகிது!” என்று துயர கீதம் இசைக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    நினைவுச் சின்னம்

    பாவை உன்னைக் கண்டு
    நெஞ்சில் காதல் முளைத்ததே!
    நினைவாய் நீ அனுதினம்
    நெஞ்சில் நீர்வார்க்கக் காதல் வளர்ந்ததே

    இல்லை என சொல்லி எனை ஏற்க மறுக்க
    இலையுதிர் காலம்தனில் உதிரும்
    இலை போல் என் இதயம் இடறியதே

    அணு அணுவாய் உருகித் தினம்
    காதல் நோய் வந்து சேர்ந்ததே
    உதிரம் உறைந்து அணுக்கள் அழிந்ததே
    உள்ளம் உடைந்து சல்லடையாய் மாறியதே

    உதிர்ந்த இலையும் சருகாய் மாறி
    உறங்கும் இடம்தேடி வந்து விழுந்ததே
    இடி விழுந்த இதயம் உடைந்து நான் உறங்கும்
    கல்லறையில் வந்து விழுந்ததே
    நினைவுச் சின்னமாய்!

    சருகை வைத்து மனம் உருகும் கவிதைகள் யாத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    இலைச் சருகு…

    இலைகள் காய்ந்தால் சருகாகும்.. இவை
    மண்ணில் புதைந்தால் எருவாகும்..
    கலைக்கண் கொண்டு பார்த்தாலே..
    அதுவும் தனிவித அழகாகும்..!!

    செல்வச் செழிப்பே உயர்வென்று.. எண்ணும்
    மனிதா சருகைப் பார்.. தன்
    நிலையில் தாழ்ந்து வீழ்ந்திடினும்..இத்
    தரணி செழித்திட உரமாகும்..!!

    காற்றில் சருகுகள் பறந்ததெல்லாம்.. இன்று
    பகற் கனவாக ஆயிற்று..
    வேற்று கிரகமோ இதுவென்று.. தோன்றும்
    நிலைக்கு பூமி மாறிற்று..!!

    வாழும் உயிர்கள் அனைத்திற்கும்.. தீங்கின்றி
    நம் வாழ்வைக் கடப்பதுதான்..
    தரணிக்கு நாம்செயும் தொண்டென்று..
    உணர்ந்தால் வாழ்வு வளமாகும்..!!

    சருகான இலைகளும் கலைக்கண் கொண்டு நோக்கிட அழகே!
    காய்ந்தபின்னும் அவை மண்ணுக்கு உரமாகி உதவுவதுபோல் மனிதனும் பிற உயிர்களுக்குத் தீங்கின்றி வாழ்வதே அவன் புவிக்குச் செய்யும் தொண்டாகும் என்று கவி வடித்திருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 209-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பார்கவ் கேசவனின் நிழற்படத்தில் ஆரஞ்சுப் பழமாய் மிளிரும் ஆதவனைக் காண்கின்றோம். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 209க்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணர், திறமையான தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    அகலவா வேண்டாமா என்று யோசனை செய்துகொண்டிருக்கும் பகலவன்; அவன் மறைவதற்குள் நாம் கூட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று சிறகு விரிக்கும் சிறிய பறவைகள்; சுடரொளியோனே! எமைவிட்டுச் செல்லாதே  என்று கிளைக் கரங்களை விரித்துத் தடுக்கும் மரக்கூட்டங்கள் இப்படி இயற்கை நிகழ்த்தும் மாயாசாலம் காணத் தெவிட்டா இனிய கோலம்!

    இவ் இயற்கைக் காட்சிக்கேற்ற எழிற்கவிதைகளைப் படைத்துத் தரக் கவிஞர்களை அழைக்கிறேன் கனிவோடு!

    *****

    ”இரவியே! இரவில் அழிவுப்பணியைத் தொடங்கிவிடும் மானிடனின் இருள் மனத்துக்கு உன் ஒளிக்கிரணங்களால் அறிவுகொளுத்து!” என்று ஆதவனை வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இருளை விரட்டு…

    அந்தியில் அழகுகாட்டும்
    கதிரவனே,
    ஓய்வெடுக்கச் செல்கிறாய் நீ
    இன்றும்
    ஒழுங்காய்ப் பணிமுடித்த நிறைவில்..

    ஓய்வெடுக்கச் செல்கின்றன
    வழக்கம்போல் பறவைகளும்,
    பணிமுடித்து
    இரைதேடிய நிறைவில்..

    இந்த மனிதன் மட்டும்
    ஏன் இப்படி,
    நீ பணிமுடித்தபின்
    இரவின் இருள்வரவில்
    இவன் பணியைத்
    தொடங்கிவிடுகிறானே,
    ஆக்கப் பணியாய் அல்ல-
    அழிவுப் பணியாய்..

    இரவின் இருளை
    இரவியே நீ
    இவன்மனதில் புகுத்திவிட்டாயா..

    இதை விரட்ட
    நீட்டு
    உடனே உன் ஒளிக்கிரணங்களை…!

    *****

    ”அந்தியில் ஓய்வெடுக்க ஆழியில் மூழ்கும் ஆதவ அன்பனே! மாலையில் உனை இரசிக்கும் எனக்குக் காலையில் நீ பகையாவதேன்?” என்று ஆதவனிடம் ஆதங்கப்படுகின்றார் திருமிகு. கி. அனிதா. 

    அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழியில் மூழ்குகிறாய்…
    உன்னுடன் சேர்ந்து இயற்கை அன்னையும் ஓய்வெடுக்கச் சென்றுவிடுகிறாள்!!!
    மாலையிலே உன்னை ரசிக்கும் நண்பனாய் நான் இருக்க…
    காலையிலே ஏன் எனக்கு பகைவனாக மாறுகிறாய்! !!

    *****

    நீலவானம் சிவப்பாய் மாறிய கோலம் அதன் கோபத்தின் வெளிப்பாடோ? இரவில் வரும் ஆடவருக்கு நட்சத்திரப் பூக்களாய் ஒளிரும் அபலைப் பெண்களின் வாழ்க்கை உண்மையான விடியல் காண்பதெப்போது? என்ற தன் வருத்தத்தைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    இரவு பூக்கள்

    கிழக்கும் மேற்கும் பகலெல்லாம்
    ஓடி திரிந்து குறும்புகள் என்ன செய்தாயோ
    நீல வானம்கூட நிறம் மாறியதே
    கோவத்தில் அது நன்கு சிவந்ததே

    இரைதேடி திசை எங்கு பறந்தாலும்
    இருள் வந்து சேரும் முன்னே
    இல்லம் வந்து சேரும்
    இரவில் கூட்டாய் கூட்டில் வாழ்ந்திடவே

    விடியலாய் விடிவெள்ளி நீ வந்து
    விடைபெற்று சென்றதும்
    வெண்ணிலவு வந்து
    விடிகின்றதே இங்கே பலரது வாழ்வு

    ஆசை அடக்கிட
    மோகத்தில் திளைத்திட
    அள்ளி அணைத்திட
    ஆள் தேடும் ஆண்களுக்கு
    ஆனந்தத்தை வெளிச்சமாய் காட்டிடுவாள்
    மெழுகாய் இவள் தினம் உருகி

    இன்றேனும் விடியாதா என்று
    இரவெல்லாம் எதிர்பார்த்து
    நாட்கள் நகர்ந்திட
    அழகாய் பூத்து நின்று
    ஆண்களை கவர்ந்திடவே
    நாள்தோறும் இரவில் மட்டும்
    பூத்து நிற்கும்
    நட்சத்திர பூக்கள் இவர்கள் …….
    விடியலை எதிர்பார்த்து……..

    *****

    சூரியனின் சுடரொளியைச் சுற்றித் தம் கற்பனைகளை அழகாய்ப் பின்னியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    நேற்று நீ மறைந்ததால் தான்
    எங்களுக்கு இன்று கிடைத்தது!
    இன்று நீ மறைந்தால் தான்
    எங்களுக்கு நாளை கிடைக்கும்!
    என்ன மாயம் உன்னிடத்தில்..?
    ஒன்பது கோள்களும் உன்னைச் சுற்ற…
    தங்கமுலாம் பூசப்பட்டதா உனக்கு..?
    பூசி என்ன பயன்?
    பார்ப்பதற்குள் கண்கள் கூசுகிறதே
    மாலைப் பொழுதில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பின்னால் மறைவதென்ன..?
    நீ மறைந்த கர்வத்தில்
    சந்திரன் ஒளிர்கிறது
    கொண்ட கர்வத்தில் தேய்ந்தும் போகிறது!
    நீ உதித்தால்தான் எங்களுக்கு விடியல்
    என்றும் உதித்திடு!
    உன்னை போல் நாங்கள் ஒளிர வாழ்த்திடு!

    ”காய்கதிர்ச் செல்வனே! நீ மறைவதும் உதிப்பதும்தானே புதிய நாட்களைக் கொண்டுவருகின்றது இப்புவிக்கு! எங்கள் கண்களைக் கூசவைக்கும் தங்கமுலாம் பூசியவனே! உன்னைப்போல் எம்மையும் ஒளிரவிடு!” என்று சூரியனுக்குக் கோரிக்கை வைக்கும் இக்கவிதையைப் படைத்திருக்கும் திருமிகு. காந்திமதி கண்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 9

    -மேகலா இராமமூர்த்தி

    1932ஆம் ஆண்டு தோற்றம்பெற்ற  கலைமகள்  மாத இதழுக்கென்று ஓர் தனிச்சிறப்பு உண்டு. தமிழகப் பெண்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்த முதல் இதழ் அதுதான். கலைமகள் பெண் எழுத்தாளர்கள் வரிசை என்ற ஒன்றே அந்நாளில் இருந்திருக்கின்றது. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர். ராஜம்மா போன்றவர்கள் அவ்வரிசையில் வரக்கூடியவர்கள். அவ்விதழில் பரிசுக்குரிய சிறுகதைகளையும் பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே படைத்துள்ளனர் என்பது நாம் நினைந்து மகிழத்தக்கது. ராஜம் கிருஷ்ணனின் ’ஊசியும் உணர்வும்’, ’நூறு ரூபாய் நோட்டு’, ஆர். சூடாமணி எழுதிய ’காவேரி’ போன்றவை கலைமகளில் பரிசுபெற்ற சிறுகதைகளாகும்.

    1947இல், கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில், குறிப்பிடத்தக்க மற்றொரு பெண் எழுத்தாளரான, அநுத்தமாவின் முதல் கதையான ’அங்கயற்கண்ணி’ இரண்டாம் பரிசினைப் பெற்றது. பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை மையமாக வைத்தே அப்போது கதைகள் எழுதினர். ராஜம் கிருஷ்ணன், சூடாமணிபோல் ஓரிருவர் மட்டுமே சமூக நோக்குடைய கதைகளை எழுதி வந்துள்ளதையும் அறியமுடிகின்றது. பெண்ணியச் சிந்தனைகளின் அடித்தளங்களைக் கட்டமைத்த பெருமை இப்பெண் எழுத்தாளர்களையே சாரும்.

    1960களில் தொடங்கி சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றவர்கள் சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தையின்மை போன்றவை கருக்களாக அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி, வாஸந்தி எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகப் பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றைக் கருவாகக் கொண்ட கதைகளை இவர்கள் எழுதத் தொடங்கினர்.

    இதழ்களேயன்றி வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று பல்வேறு வகைகளில் ஊடகத்துறை வளர்ச்சியும் விரிவும் கண்டது இருபதாம் நூற்றாண்டிலேயே. அதனால் எழுத்து மட்டுமல்லாமல், பேச்சு, நடிப்பு என்று பல்துறைகளில் தம் திறமைகளை வெளிப்படுத்தப் பெண்களுக்கு வாய்ப்புகள் கிட்டின.

    தொடக்க காலத் திரைப்படங்களில் நடிகையாக வலம்வந்த எம். எஸ். சுப்புலட்சுமி சிறந்த பின்னணிப் பாடகியாகவும் திகழ்ந்தார். இவரைப் போன்றே கே.பி. சுந்தராம்பாள், எஸ். வரலட்சுமி போன்றோர் நடிப்போடு சொந்தக் குரலில் பாடியும் புகழ்பெற்றனர். பி. பானுமதி, நடிப்பு, பாட்டு இவற்றோடு நில்லாது இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று திரைத்துறையின் பல்வேறு திறன்களும் ஆளுமையும் வாய்க்கப்பெற்ற அரிய பெண்மணியாய்த் திகழ்ந்தார்.

    ஆரம்பத்தில் ஆண் நடிகர்களுக்கு நிகரான கனமான பாத்திரங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெண்களுக்கு(ம்) அளித்துவந்த திரைத்துறை பின்பு அந்த நல்ல போக்கிலிருந்து மெல்ல மாறி, பெண்களை வெறும் கவர்ச்சிப் பதுமைகளாகவும், போகப் பொருளாகவுமே திரைப்படங்களில் காட்சிப்படுத்தத் தொடங்கியது. 60களின் இறுதியில் தொடங்கிய இந்த அவலப்போக்கு இன்றுவரை மாறவில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது.

    தொலைக்காட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பத்தில் அரசாங்கத் தொலைக்காட்சிகள் ஒன்றிரண்டு இருந்தவரையில் செய்தி வாசிப்பது, அறிஞர்களைப் பேட்டியெடுப்பது என்ற அளவில்தான் பெண்களின் பங்களிப்பு இருந்துவந்தது. நாளடைவில், தனியார் தொலைக்காட்சிகள் புற்றீசல்கள்போல் புறப்படத் தொடங்கின. அத்தோடு பெரிய திரைக்குப் போட்டியாக அவையும் தொலைக்காட்சித் தொடர்களைப் படைக்கத் தொடங்கின. பெண்களுக்கு இவற்றில் அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதென்னவோ உண்மைதான். ஆனால் அவை பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இல்லை. அவர்களை இரக்கமே இல்லாத அரக்கிகளாகவும், நடமாடும் நகைக்கடைகளாகவும், எப்போதும் யாரையாவது பழிவாங்கத் துடிக்கும் கொடூர மனம் படைத்தவர்களாகவுமே காட்டிப் பெண்மையைப் பெரிதும் இழிவுபடுத்தி வருகின்றன.

    இவை போதாதென்று விளம்பரத்துறை என்றொரு துறை இருக்கின்றது. அத்துறைக்கு, ஆண்களுக்கான சிகரெட், உள்ளாடை, ஆணுறை விளம்பரங்களுக்குக் கூட அரைகுறை ஆடையணிந்த பெண்களே விளம்பர மாடல்களாகத் தேவைப்படுகிறார்கள்.

    இப்படியாக சின்ன திரை, பெரிய திரை, விளம்பரத்துறை மூன்றுமே பெண்களைப் போட்டி போட்டுக்கொண்டு கேவலப்படுத்துவதைத் தவிரப் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை.

    ஆண்களின் ஆதிக்கத்தில் அகப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்த மற்றொரு துறை மேடைப்பேச்சுத் துறை.  அத்துறையிலும் பெண்கள் மெதுவாய் நுழைந்து அரங்குகளை அணிசெய்யத் தொடங்கினர். புலவர் காந்திமதி, இளம்பிறை மணிமாறன், சாரதா நம்பிஆரூரன், இராம. சௌந்தரவல்லி, சரஸ்வதி இராமநாதன், சௌந்தரா கைலாசம் என்று நீளும் நாவரசிகளின் பட்டியலில் சமீப காலங்களில் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் சுமதி, ஆண்டாள் பிரியதர்சினி, பர்வீன் சுல்தானா, விஜயசுந்தரி, சுமதிஸ்ரீ என்று பல பெண்கள் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசிவருவது பெண்டிர்க்குப் பெருமை தருவதாகும். ஆனால்…கவியரங்கம், பட்டிமண்டபம் போன்றவற்றில் அரங்கத் தலைமைக்கான நாற்காலிகள் இன்றும் ஆடவர்க்கே அதிகம் ஒதுக்கப்படுவது கண்கூடு.

    கல்விகற்ற பெண்கள் இப்போது அரசு மற்றும் தனியார்த்துறைகளில் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். தம் அன்றாடத் தேவைகளுக்கும் ஆண்களையே சார்ந்துநின்ற இழிநிலை மாறி இன்றைய பெண்களில் பலர் தம் சொந்தக் காலில் நிற்பதும், சொந்த உழைப்பில் சோற்றை உண்பதும் பெரிதும் போற்றுதலுக்குரியது. எனினும் பெண்களை வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பை வேண்டியமட்டும் சுரண்டும் அலுவலகங்கள், அவர்களின் தகுதிக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற உயர்பதவிகளை உரிய காலத்தில் வழங்குகின்றனவா என்று வினவினால் ’ஆம்’ என்று அழுத்தமாகச் சொல்லமுடியவில்லை.

    காரணம், ஆண் பெண் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் பெண்டிரை மட்டும் மேலெழும்ப விடாமல் தடுத்துநிற்கும் கண்ணாடிக் கூரைகள் (Glass ceiling). இக்கூரைகளைத் தகர்த்தெறிந்தால் மட்டுமே பெண்கள் தம் தகுதிக்கேற்ற பதவி உயர்வையும் ஊதியத்தையும் பெறமுடியும்.

    அடுத்ததாக நாம் ஆராயவேண்டியது பணியிடங்கள் பெண்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகின்ற வகையில் அமைந்திருக்கின்றனவா என்பது.

    தாம் கற்ற கல்வியால் தமக்குச் செல்வம் வருகின்றது என்பது பெண்டிர்க்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் உடன்பணிபுரியும் ஆடவரால் பெண்களில் பலர் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சுக்கள் போன்றவை அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அலுவலகத்தையே ’விடமென’ வெறுக்க வைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இதனால் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டும் எனும் கொள்கையுடைய பெண்கள் மனத்துக்குப் பிடித்த நல்ல வேலையைக்கூட உதறிவிட்டு ஓடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்!

    இடைக்காலத்தில் பெண்டிர் கல்வி மறுக்கப்பட்டு, சிந்தனை முடக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டு நுகர்பொருளாகவே நோக்கப்பட்டார்கள் என்றால் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்கவும் பணிபுரியவும் அவர்கள் அனுமதிக்கப்படும் இன்றைய நவீன காலகட்டத்திலும்கூடப் பண்டமாகவும் தசைப் பிண்டமாகவுமே பெண்களைப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலும் கழிகாமச் செய்கைகளிலும் மாற்றமில்லை என்பது வெறுப்பையும் வேதனையையும் தருகின்றது. உயர் விழுமியங்களை ஒல்லும் வாயெல்லாம் ஓயாதுரைத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியாகவே இதனை நாம் எண்ண வேண்டியிருக்கின்றது.

    கடந்த இருபது ஆண்டுகளில் கணினித் துறை அசுரவளர்ச்சி கண்டிருக்கின்றது. அதன்பயனாய்த் தோன்றியிருக்கும் தொழில்நுட்பங்கள் நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றான திறன்பேசி (smartphone), நம் உள்ளங்கைக்குள் உலகத்து நிகழ்வுகள் அனைத்தையுமே கொண்டுவந்து தந்துவிடுகின்றது. ஊடகத்துறையின் புதிய அவதாரமாகப் புறப்பட்டிருக்கும் சமூக ஊடகங்கள் (social media), இணையத் தொடர்பு வைத்துள்ள அனைவருமே எழுத்தாளர்களாகவும், புகைப்பட நிபுணர்களாகவும் மாற வழிவகை செய்துவருகின்றது.

    நம் சிந்தனைகளை இணையத்தில் இலவசமாகப் பூக்கவைக்க உதவும் வலைப்பூக்கள் (Blogs), முகமறியாரோடும் முகமன்கூறிப் பழகவைக்கும் முகநூல் (Facebook), எண்ணச் சிறகால் வையமெங்கும் வட்டமடித்துப் பறக்கவைக்கும் சிட்டுரை (Twitter), சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் நெருக்கமான நண்பர்களோடு அலச உதவும் புலனம் (WhatsApp), வண்ணப் புகைப்படங்களைச் சுடச்சுட வெளியிட்டுத் தம் அழகையும் ஆளுமையையும் பறைசாற்றப் பயன்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) என எத்தனை வகைகளில் மனிதர்களின் வாழ்க்கையை இவ்வசதிகள் வனப்புறச்செய்கின்றன!

    எனினும் ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் நம்மை வசீகரிக்கும் இத்தொழில்நுட்பங்களுக்குக் கோரமான இன்னொரு முகமும் இருக்கவே செய்கின்றது.

     [தொடரும்]

    *****

    http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011223-23799

     

    Share
  • படக்கவிதைப் போட்டி  208-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பூமுகத்தில் அழுகை அரும்ப நின்றிருக்கும் மழலையைப் படம்பிடித்து வந்திருப்பவர் நித்தி ஆனந்த். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 208க்கு உகந்ததென்று தெரிந்தெடுத்துத் தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

    நானிலத்தில் உயர்ந்த செல்வம் மாண்புடைய மழலைச் செல்வமே ஆகும். மழலையர் அற்ற மணவாழ்க்கை மணமற்ற வாழ்க்கையாகவும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையாகவும் மாறிப்போய்விடுவதைக் காண்கின்றோம். அதனால்தான் புதிதாகப் பிறந்த குழந்தையை ’மகிழ்ச்சிப் பெட்டகம்’ என்று குறிக்கும் வகையில் ’Bundle of Joy’ என்பர் ஆங்கிலத்தில்.

    இங்கே ஒரு சிறுகுழந்தையின் முக வாட்டத்தையும் அக வருத்தத்தையும் பார்க்கும்போது நம்மையும் அது வேதனையில் வாடச் செய்கிறது; இவ்வாறு வருத்தமுற வைத்தது யார் எனத் தேடச் செய்கிறது.

    இக்குழந்தையின் வருத்தத்துக்குப் பொருத்தமான கவிதை மருந்துதரக் காத்திருக்கும் கவிஞர் குழாத்தை வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    *****

    ”அன்னை தந்தையின் அருந்துணையோடு, திறமையைத் தீயாய் வளர்த்து முன்னேறு!” என்று குழந்தைக்கு அறிவுரை கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    திறமை வளர்த்திடு…

    சின்னப் பெண்ணே அழவேண்டாம்
    சீறிப் பாய்ந்திடு கொடுமைகண்டு,
    அன்னை தந்தை தனைப்போல
    அருந்துணை யாரும் இல்லையம்மா,
    உன்னை நெருங்கும் அனைவரையும்
    ஒன்றா யெண்ணி நம்பிடாதே,
    தன்னைக் காத்துக் கொண்டிடவே
    திறமை வளர்த்திடு தீயெனவே…!

    *****

    என்னருமைப் பெற்றோரே! சிணுங்கும் கைப்பேசியைக் குழந்தையாய் அள்ளி அணைத்தது போதும்! உம் அன்புக்கு ஏங்கி நான் அழும் குரல் காதில் கேட்கவில்லையா? என்று குழந்தைக்குப் பரிந்து குரல்கொடுக்கிறார் திருமிகு. கே. அனிதா.

    என் அழுகுரல் கேட்கவில்லையா? என் பெற்றோர்களே!
    உங்கள் கையில் நான் இருக்கவேண்டும்!
    உங்கள் அன்பு எனக்குக் கிடைக்குமா என அழும் என் அழுகுரல் கேட்கவில்லையா?
    கைப்பேசி உங்கள் குழந்தைபோல கைக்குள் வைத்து மார்பினிலே படுக்கவைத்து அதன் அழுகுரல் கேட்டதும் கைக்குள் அணைத்து வைக்கின்றீர்களே!!!
    என் அழுகுரல் கேட்கவில்லையா???

    *****

    அழுகின்ற பிள்ளைக்குப் பால்கொடுக்கும் அன்னையை(யும்) ஆபாசமாகப் பார்க்கும் காம எண்ணத்தைப் புதைப்போம்! பிஞ்சின் நெஞ்சில் நஞ்சினை விதைக்காமல் நல்லதை விதைப்போம்! என்று காலத்திற்கேற்ற பொருளுரை புகல்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    நம்பிக்கை

    அழுகின்ற பிள்ளைக்கு
    ஆறுதல் சொல்ல நினைத்தது மனம்
    வினாக்கள் எழுந்தன ஓராயிரம்
    வெந்த புண்ணில் வேலாய்ப் பாயும்
    வார்த்தைகளால்

    அழுகின்ற பிள்ளைக்கு
    அன்னை பசியென்று பால் கொடுக்க
    அதையும் ஆபாசமாய் பார்க்கும் கண்கள்

    அழுகின்ற பிள்ளையை
    அள்ளி அணைத்து
    ஆசையோடு கொஞ்சுவதிலும்
    நஞ்சைக் கலந்துவிட்ட நயவஞ்சகர்கள்

    தரணியெங்கும் தலைவிரித்தாடும் வன்கொடுமைகள்
    மீண்டும் மீண்டும் அதையே பேசி
    வடுவாய் மாற்றிடும் வாய்களுக்கு
    போட்டிடு ஒரு பூட்டு

    வினை விதைத்தவன்
    வினை அறுப்பான்!
    விட்டு விடு
    அழுகின்ற பிள்ளைக்கு
    ஆறுதல் சொல்ல
    இளம்பிஞ்சு நெஞ்சில்
    நஞ்சை விதைத்திடாதே!
    நல்லதை நினைத்து விதைத்திடுவோம்
    இவள் மனதில் நம்பிக்கையை!
    தீமைகள் மடிந்து
    புதிய பாரதம் உருவாகும்
    என்ற நம்பிக்கையை
    இவளுக்கு நாம் கொடுப்போம்!

    *****

    மழலையின் அழுகைக்கு மருந்தாய் நல்லுரைகளைக் கவிதைகளில் கலந்து தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    நேரமில்லை…!

    அவசர உலகில் வாழ்வதற்காய் உழைக்கும்
    அன்னை தந்தை இருவருக்கும் நேரமில்லை..!!

    சற்று மூச்சு விடவும் நேரமில்லை..
    சிறிதேனும் பேசிச் சிரிக்கவும் நேரமில்லை..!!

    நான் சொல்வதைக் கேட்க நேரமில்லை..
    நான் வெல்வதைப் பார்க்கவும் நேரமில்லை..!!

    எனக்கு அமுது அளிக்க நேரமில்லை..
    என்னிடம் அன்பு செலுத்தவும் நேரமில்லை.. !!

    எனைக் கொஞ்சி மகிழ நேரமில்லை..
    என்றன் கண்ணீர் துடைக்கவும் நேரமில்லை.. !!

    எனக்குக் கதைகள் சொல்ல நேரமில்லை..
    எனக்குக் கற்றுத் தரவும் நேரமில்லை.. !!

    எனக்கு முத்தம் தந்திட நேரமில்லை..
    என்னை உச்சி மோந்திடவும் நேரமில்லை..!!

    எதிர்காலக் கனவில் வாழும் அவர்கட்கு..
    என்றுமே நிகழ்காலத்தை நினைக்கவும் நேரமில்லை..!!

    ஆதலால்.. அழுகையோ சிரிப்போ.. அனைத்துமே
    ஆயாவின் அரவணைப்பில்.. குழந்தைகள் காப்பகத்தில்..!!

    நிகழ்காலத்தை நினைக்கவும், மகிழ்வோடு மழலையைக் கொஞ்சவும் நேரமின்றிப் பொருள்தேட உழைக்கும் பெற்றோரின் அருளையும் அன்பையும் வேண்டி நிற்கும் மழலையின் மனவுணர்வுகளை மாண்போடு காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 207-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பகலவனும் பனித்துளியும் பார்வையால் பேசிக்கொள்ளும் அழகைத் தன் நிழற்படத்தில் பதிவுசெய்திருப்பவர் திரு. சந்தோஷ்குமார். இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 207க்கு அளித்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், தேர்வாளர் இருவருக்கும் என் நனிநன்றியை நவில்கின்றேன்.

    கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பை வாரி வழங்கும் இயற்கைக் காட்சிகள் காணக் காணத் தெவிட்டாதவை. நேரெதிர் குணங்களைக் கொண்ட குளிர்ந்த பனித்துளியும் கொதிக்கும் சூரியனும் ஒன்றையொன்று சந்திக்கும் இக்காட்சிக்குப் பொருத்தமான கருத்துக்களைத் தம் கவிதையில் பொதிந்துதரக் கவிஞர்களை அழைக்கின்றேன்!

    *****

    உலகுக்கு உதயம் எப்போது? ஆதவன் உதிப்பதிலா, அன்பை விதைப்பதிலா, அகிம்சை நிலைப்பதிலா, பண்பை வளர்ப்பதிலா, பண்பிலாது அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா என்று தன் உள்ளத்தெழுந்த நியாயமான ஐயங்களையெல்லாம் அடுக்கடுக்கான வினாக்களாய்ப் பட்டியலிட்டிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    உலகமே.. உதயம் எதனில்…?

    மனிதனை மனிதன் தாக்கி அழிக்கும் கொடுஞ்செயல் அழிவதிலா..?
    மனிதர்தம் மனதில் மாறாது நிலைத்த வன்மம் தொலைவதிலா..?
    தன்னலம் ஒன்றே பெரிதெனக் கருதும் மனநிலை மடிவதிலா..?
    கண்களைப் போன்று பணத்தினைப் போற்றும் பண்பு ஒழிவதிலா..?

    ஆயுதப் போட்டிகள் அடங்கி உலகு அமைதியை அடைவதிலா..?
    இயற்கையைச் சிதைத்து இன்பம் நுகரும் போக்கு மறைவதிலா..?
    கயவரை யொத்த அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா..?
    இயலாதவர்க்கு இயன்றதைச் செய்து இன்பம் துய்ப்பதிலா..?

    அமைதியை இழந்துத் தவிக்கும் மக்கள் நிம்மதி பெறுவதிலா..?
    சுமைகள் நிறைந்த கல்வியைத் தவிர்த்து பண்பை வளர்ப்பதிலா..?
    இமைய மலையின் அளவினைப் போன்று ஆசை கொள்வதிலா..?
    இமைப் பொழுதேனும் மறைபொருளே உன்னை நினைப்பதிலா..?

    உலகமே உணர்த்திடு உதயம் என்பது ஆதவன் உதிப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது அன்பை விதைப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது அகிம்சை நிலைப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது சத்தியம் தழைப்பதிலா..?

    *****

    இரவென்னும் போர்வை போர்த்தி, பூமித்தாயின் மடியில் கண்ணுறங்கும் பனித்துளிக்கு அண்ணனாய்க் கதிரவனைக் கற்பனைசெய்து, தாயின் அன்புக்கு அண்ணனும் தம்பியும் தம்முள் போட்டியிடும் அழகைக் கவிநயத்தோடு தன் பாட்டில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    அன்னையின் மடியில்…  

    பகலவன் மேற்கில் 
    பதுங்கியதும்
     
    இரவெனும் போர்வை
    இருளாய்
     
    இப்புவியைப் போர்த்தியதோ?

    நடுங்கும் குளிர்தனில்
    இதமாய்க் குளிர்காய
     
    அன்னை மடிதேடி
     
    வெண்பனியாய்
    பூமித்தாய் அவள் மடிமீது
     
    படர்ந்தாயோ?

    அதிகாலைக் கதிரவனாய் 
    மூத்தவன் முதலில்
     
    விழித்துக்கொள்ள
     
    அன்னை மடிமீது
     
    இளம்பனியாய் இளையவன்
     
    உறங்கக் கண்டு
     
    நெருப்பாய்க் கொதித்திட
     
    விலக மனம் இன்றி
     
    உறுகியதோ பனித்துளி?
     

    கதிர்மீது உருகும் பனி
    அழுகின்ற முகமாய்த் தோன்ற
     
    கண்டு கதிரவன் தடுமாற
     
    அன்னையின் அரவணைப்பு
    இன்னும் சற்று அதிகம்
     
    இளம்பனிக்குக் கிடைத்திட
     
    மேகத்திற்குள் ஒளிந்ததோ சூரியன்?
     

    பூத்துக் குலுங்கும் பூமித் தாய் அவள்
    புன்னகைக்குத் துணையாய் கதிரவன் இருக்க
     
    முத்தாய் முகத்தில் பூத்து
    முத்தங்கள் பதித்துச் சென்றதோ பனித்துளி?
     

    ***** 

    சமூக அக்கறையை, சுவைமிகு கற்பனையைக் கவிதைகளாக்கித் தந்திருக்கும் வல்லமைமிகு கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது இனி…

    விடியும் வேளை…

    விடியும்வரை
    வியாபித்திருந்தது
    பனிநீரின் அரசாங்கம்..

    பச்சைப் புல்நுனிமுதல்
    பரந்துயர்ந்த மரங்கள்
    பட்ட மரங்கள்,
    விட்டுவிடவில்லை எதையும்
    எட்டும் தூரம்வரை..

    ஆட்சி மாறுகிறது
    அதிகாலையில்,
    பகலவன் வருகிறான்
    பதவி ஏற்க..

    பதறி ஓடும்
    பழைய ஆட்சியாளர்கள்-
    பனித்துளிகள்…!

    இருட்டிலே அரசாட்சி செய்த பனிநீர், பகலவனின் வெளிச்சம் வந்ததும் அகலுவதை, புதிய ஆட்சியாளர்கள் பதவி ஏற்கையில் பழையவர்கள் பதறி ஓடும் அரசியல் நிகழ்வுக்குச் சுவையாக ஒப்பிட்டிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 206-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கடலோர மண்ணில் கால்பதித்து, கடலலை மேலே கண்பதித்து நிற்கும் நங்கையைத் தன் புகைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் ஷாமினி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 206க்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    பாவை முகம் நம் பார்வைக்குக் கிட்டாததால் அவர் அகத்தைப் படிக்க இயலவில்லை. எனினும் அவர் நின்றிருக்கும் தோற்றம் அலைகளோடு அவர் ஏதோ மானசீகமாக உரையாடிக்கொண்டிருக்கின்றாரோ என்றே எண்ண வைக்கின்றது.

    தம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இந்நங்கையின் மனவுணர்வுகளைக் கவிதையில் நகலெடுக்கக் காத்திருக்கும் கவிஞர்களை அழைக்கின்றேன் இனி!

    *****

    கடல்தாண்டிச் சென்ற காதற் கணவனிடம் கடலலையைத் தூதாக அனுப்பும் வஞ்சியின் நெஞ்சைத் தம் கவிதையில் அழகாய்க் காட்டியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தொடர்கதையாய்…

    வேலைக்காக
    வெளிநாடு சென்றவர்களின் கதைகள்,
    அடுத்தடுத்து வரும்
    அலைகளைவிட அதிகம்தான்..

    ஆனாலும்
    அவளும் சொல்கிறாள் தன்கதையை,
    தூதாகிட வேண்டுமாம்
    கடலலைகள்..

    கேட்டுக்கொண்ட கடலும்
    தலையசைத்தவிட்டு அவளுக்கு,
    திரும்பிச் செல்கிறது
    துயரத்துடன்..

    தொடர்கதையான
    தொடரும் கதைகள்,
    துடைத்துக்கொண்டது கண்ணீரை
    அலைகளில்..

    அதனால்தன்
    ஆனதோ கடல்நீர்-
    உப்பாக…!

    *****

    ”அண்டங்களையும் கண்டங்களையும் விழுங்கி ஏப்பமிட்ட ஆணவக் கடலே, உன்னைப் பாட மாட்டேன்!” என மறுத்து, ”அடுப்பூதிய எம் பெண்டிர் அண்டவெளி அளக்கும் சாதனையை நீ பாடிப் பரப்பு!” என்று கடலுக்குக் கட்டளையிடுகின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ. 

    அலைகடலே எம் புகழ் பரப்பு!

    ஆழி உன்னுடன் பேச
    ஆயிரம் உண்டு எனக்கு
    அசையாமல் நின்று உன்
    அலை விளையாட்டுக் காண
    ஆயிரம் கண்கள் போதுமோ
    அன்றைய கவிகளின் புகழுரையால்
    ஆணவம் கொண்டு நீ
    ஆடிக்களித்ததில் சுனாமி
    அலைகளாய்ப் பெருக்கெடுத்து
    ஆருயிர் மக்களின் வாழ்வழித்தாய்
    ஆதிகவிகளின் காலத்திலோ
    அமுதுசெய்யக் கண்டங்களை விழுங்கி
    ஆறுகளைக் குடித்து நீ
    ஆற்றிக்கொண்டாய் உன் தாகத்தை!
    அலைகடலே இனி என் முடிவைக் கேள்!
    அணுவளவும் புகழேன் உன்னை!
    அற்புதமான எம்இந்தியப் பெண்களின்
    அளப்பில்லாச் சாதனைப் பட்டியலை
    அமைதியாய்க் கேட்டு அலைகளினால்
    அகிலமெல்லாம் பரவிடச் செய்!
    அருமைச் சகோதரிகள்
    அறுவர் தாரிணியெனும் கலம் ஏறி
    ஆறு மாதம் உன்னுடன் உறவாடி
    அவனியை வலம் வந்து புரிந்தார்
    அசைக்கமுடியா உலக சாதனை!
    ஆறாறு மாதங்களுக்குப்பின் மற்றொருத்தி
    அழகான விண்கலம் ககன்யான்மூலம்
    அண்டவெளியை வலம்வருவாள்
    அருமையான வீராங்கனைகளுள் ஒருவராய்
    அன்னையவள் கொடிதாங்கி
    அடுப்பூதிய எம் மகளிர் இன்று
    அனைத்துத் துறைகளிலும்
    அளப்பரிய சாதனைகள் படைத்து
    ஆசிரியராய் விஞ்ஞானியாய்
    ஆகாயவிமானம் ஓட்டுபவராய்
    அணு ஆராய்ச்சி முதல்
    அண்டவெளிப்பயணம் வரை
    அடுத்தடுத்துப் படைத்துவரும் சாதனையை
    அலுக்காமல் பரப்புவதே உன்தொழிலாய்
    அயராது செய்து நீ உள்ளளவும்
    அவளின் புகழை நிலைபெறச்செய்!

    *****

    புகைப்படத்துக்குப் பொருத்தமாய்க் கவிதைகள் படைத்துத் தந்திருக்கும் புலமைசால் கவிஞர்கட்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

    இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

    இவள் யாரோ?
     
    விரிந்து கிடைக்கும் கடல் முன்னே
    வந்து நின்ற வஞ்சி இவள் யாரோ?
     
    துள்ளி எழுந்தாடும் அலை கடல் கண்டும்
    அமைதியாய் நிற்கும் நங்கை இவள் யாரோ?
     
    வாழ்வில் தோற்றவர்கள் பலர் இங்கிருக்க
    தேர்வில் தோற்றதற்காக உன் வாழ்வை
    முடித்துக்குள்ள இங்கு வந்தாயோ?
     
    அன்னையின் அன்பின்றி அனாதைகளாய்ப் பலர் இங்கிருக்க
    காதல் தோல்வியால் உன் உயிரைத்
    துறக்க இங்கு வந்தாயோ?
     
    உடன் வந்த உறவுகள் எல்லாம் விட்டுப்பிரிந்திட
    துயர் வந்து கடலாய் உனை இன்று சூழ்ந்திட
    தனித் தீவாய் ஆனாயோ?
    உன் துயரம் நீங்கிட உயிர்தனைத் துறந்திட
    கடல்தனைத் தேடி வந்தாயோ?
     
    நிலையில்லா வாழ்வில்
    வரும் துயரம் யாவும் நிலைகொள்வதில்லை!
    இதுவும் கடந்து போகும்…
    தொலைவில் தோன்றும் தொடுவானம்கூடப்
    பொய்யாய்ப் போகும் முன்னேறிச் சென்றால்!
    இவள் கதை அறியும் முன்னே
    அலை வந்து அழித்துச் சென்றதே
    இவள் பதித்த காலடித் தடங்களை!
    திரும்பியவள் புதிதாய்த் தடங்களை பதித்திடவோ?!
     
    புதிய பாதை அமைத்துப் புதிய சரித்திரம் படைத்திடு!
    யார் நீ என்று இவ்வுலகுக்கு உணர்த்திடு!
    அதுவரை…
    விடை தெரியா வினாக்களால்  
    காண்பவர் மனதில் கேள்விக்குறியாய்  
    என்றும் நீ இருப்பாய்
    இவள் யாரோ?

    கடலோரம் நின்றிருக்கும் இந்த வஞ்சி யாரோ? கல்வியிலோ, காதலிலோ தோற்றவளோ? வாழ்வில் உடன்வந்த உறவுகளை இழந்து இறக்கத் துணிந்தவளோ? தெரியவில்லை! நிலை எதுவாயினும் ’இதுவும் கடந்து போகும்’ என்ற நெஞ்சத் துணிவோடு வேதனை தந்த பழைய பாதையை மறந்து, சாதனை படைப்பதற்கோர் புதிய பாதையை இவள் தேர்ந்தெடுக்க வேண்டும்! என்றிப் பாவைக்கு ஊக்கமூட்டும் ’பா’வைப் படைத்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

      

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 8  

    -மேகலா இராமமூர்த்தி

    இந்தியப் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியைக் கிட்டச்செய்த இருபதாம் நூற்றாண்டு அவர்களைப் பொறுத்தவரையில் போற்றத்தக்க நூற்றாண்டே. படிப்பறிவும் எழுத்தறிவும் பெண்களின் சிந்தனையைச் செப்பம் செய்தன; ஆதலால் பெண்களும் ஆண்களைப் போலவே அதிக அளவில் படைப்புக்களை உருவாக்கத் தொடங்கினர்.

    மரபுசார் கவிதைகளே கோலோச்சிவந்த நிலைமாறி, கட்டற்ற புதுக்கவிதை (free verse), கட்டுரை, சிறுகதை, புதினம் என்று இலக்கியம் பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்கியதும் இக் காலகட்டத்திலேயே.

    தமிழின் புதின இலக்கிய வரலாற்றைத் தொடங்கிவைத்த பெருமை முன்சீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தைச் சாரும். எழுதுகோல் ஆண்களின் கைகளுக்கு மட்டுந்தான் வயப்படுமா என்ன? எம்மாலும் பழுதற எழுதமுடியும் என்று எழுதுகோல் பிடித்த வை. மு. கோதைநாயகி அம்மையார் புதினம் எழுதி ’முதல் பெண் புதின எழுத்தாளர்’ எனும் பெருமையைத் தமக்கு உரித்தாக்கிக் கொண்டார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த இவ் அம்மையார் முறையாகத் தமிழ்க்கல்வி பயிலவில்லை; எனினும் தமிழில் எழுதத்தெரிந்த தம் தோழி பட்டம்மாள் என்பவரின் உதவியுடன் கதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதிவந்தார். பின்னர், தாமே தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு ஆக்கங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றார்.

    இவரது முதல் நாடக நூலான ‘இந்திர மோகனா’ 1924-இல் வெளிவந்தது. இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட பல பத்திரிகைகள் இந்நூலைப் பாராட்டி விமரிசனம் எழுதின. மேடைகளிலும் இந்நாடகம் அரங்கேறியிருக்கின்றது. முதல் நாடகமே பெருவெற்றி பெற்றதால், மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கம் பிறந்தது கோதைநாயகி அம்மையாருக்கு. தொடர்ந்து, ‘அருணோதயம்’, ‘வத்சகுமார்’, ‘தயாநிதி’ முதலிய நாடகங்களை எழுதினார்.

    முதன்முதலாக ‘வைதேகி’ என்ற நாவலை எழுதினார். பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, கைம்பெண் மறுமணம் முதலியவற்றைத் தம் நாவல்கள் மூலம் அக்காலத்திலேயே வலியுறுத்திய முற்போக்குச் சிந்தனையாளராக வை.மு.கோ. அம்மையார் திகழ்ந்திருக்கின்றார் என்பது இன்றைய பெண்டிரும் அறிந்து பெருமிதம் கொள்ளவேண்டிய ஒன்றாகும். அவ்வமயம் தமிழகத்துக்கு வருகைபுரிந்த அண்ணல் காந்தியாரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற கோதைநாயகி அம்மையார், அதன்பிறகு தம் அணிகலன்களைத் துறந்து கதராடை மட்டுமே அணிந்து எளிமையாய் வாழ்ந்திருக்கின்றார். கர்நாடக இசையிலும் சிறந்து விளங்கிய அம்மையார், பாடுவதில் திறமைமிக்க பிறபெண்களையும் ஊக்குவித்திருக்கின்றார். நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் பல பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவர் வை.மு. கோதைநாயகி அம்மையார்.

    சாவித்திரி அம்மையார், சரஸ்வதி அம்மையார் போன்றோர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த அன்றைய சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றனர். இஃது அவர்களின் பன்மொழிப் புலமைக்குச் சான்று பகர்கின்றது.

    மைசூர் அரண்மனையில் இசையறிஞராக விளங்கிய நடராஜ ஐயர் என்பவரின் அருமை மகளார் விசாலாட்சி அம்மையார். தம் மகளைக் கல்வி கற்க வைத்த நடராஜ ஐயர் அவருக்குத் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பன்மொழிப் புலமையும் கிடைக்கச் செய்தார். அக்கால வழக்கப்படி இள வயதிலேயே மணமுடிக்கப்பட்ட விசாலாட்சி அம்மையார் தீயூழின் விளைவாய் மிக விரைவிலேயே கணவனை இழந்து கைம்பெண்ணானார். அப்போது அவர் வயது வெறும் பதினான்கு மட்டுமே. அந்நிலையில் மீண்டும் தம் படிப்பினைத் தொடர விரும்பிய அவருக்கு வீட்டிலும் உறவினர்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதையும்மீறி அவர் மைசூர் மகாராணிக் கல்லூரியில் சேர்ந்து தம் பட்டப் படிப்பினை முடித்தார். கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தும் அதை மறுத்துவிட்ட அவர், எழுதுவதில் இயல்பாகவே தமக்கிருந்த ஆர்வத்தின் அடிப்படையில் புதினம் ஒன்றை எழுதத் தொடங்க, ’எழுதுவது குடும்பப் பெண்களுக்கு அழகன்று’ என்று அதனைக் கண்டித்திருக்கின்றார் அவர் தந்தையார். அதைப் பொருட்படுத்தாத விசாலாட்சி அம்மையார் ’லலிதாங்கி’ என்ற புதினத்தை எழுதி அப்போது மிகப் பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றிருந்த ‘லோகோபகாரி’ எனுமிதழில் அதனை 1902இல் வெளியிட்டார்.

    விற்பனையில் சாதனை படைத்து ’Best Seller’ஆக இரண்டாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றது அப்புதினம்! அதைத் தொடர்ந்து ‘ஜலஜாட்சி’ என்ற பெயரில் இரண்டாவது புதினத்தையும் எழுதினார் விசாலாட்சி அம்மையார். அப்புதினமும் வெகுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறவே, மகளின் எழுத்தாற்றலைத் தேற்றமாய் உணர்ந்தார் தந்தையார்; அதன்பிறகு மகளின் எழுத்துப்பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏதும் போடவில்லை அவர். அதுமட்டுமல்லாது, தம் மகளின் எழுத்துத்துறை வளர்ச்சிக்கு மைசூரைவிடச் சென்னை உகந்தது என்ற முடிவுக்கு வந்தவராய்ச் சென்னைக்குக் குடும்பத்தோடு குடிபெயர்ந்திருக்கின்றார்.

    தம் புதினங்களை வெளியிட்ட ‘லோகோபகாரி’ இதழிலும் சில காலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கின்றார் விசாலாட்சி அம்மையார். பின்னர் அவரே ’ஹிதகாரணி’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தியமையால், ’முதல் பெண் இதழாசிரியர்’ என்ற பெருமைக்கும் உரியவராகின்றார். இவ்விதழோடு ‘ஞான சந்திரிகா’ என்ற மற்றோர் இதழையும் இவர் நடத்தியிருக்கின்றார். இவருடைய இடையறா இலக்கியச்சேவையைப் பாராட்டிச் சிருங்கேரி மடம் ’பண்டித ரத்னா’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கின்றது.

    அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே கூட்டுப்புழுக்களாய் கைம்பெண்கள் முடக்கப்பட்ட அன்றைய நிலையில், அவ்வாறு முடங்கியிராது துணிச்சலாய் உயர்கல்வி கற்று, ஆண்களின் கட்டுப்பாட்டிலிருந்த எழுத்துத் துறையிலும் கம்பீரமாய்ப் புகுந்து சாதனை படைத்தும், தாமே இதழ்களைத் தொடங்கி நடாத்தியுமிருக்கும் விசாலாட்சி அம்மையாரின் செயல்கள் அசாதாரணமானவை என்று அழுத்திச் சொல்லலாம்.

    பிரபல தமிழ் எழுத்தாளரும், ’சிறுகதை ஆசான்’ என்றழைக்கப்படுபவருமான  கு. ப. ராஜகோபாலனின் சகோதரியான கு. ப. சேது அம்மாளும் அந்நாளில் சிறந்த எழுத்தாளராய் விளங்கினார். இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த கு. ப. ரா. தம் சகோதரியை, ’சாந்தி நிகேதனில்’ தாகூர் நிறுவியிருந்த ’விஸ்வபாரதி’ பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயிலச் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றார்; ஆனால் இவர்களின் தாயார் அதற்கு ஒத்துக்கொள்ளாததால் அந்த ஆசை நிராசையாகிவிட்டிருக்கின்றது.

    சகோதரர் கு. ப. ரா.வின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட சேது அம்மாள், தாமும் எழுதத் தொடங்கியிருக்கின்றார். அவருடைய முதல் சிறுகதையான ‘செவ்வாய் தோஷம்’ 1939-இல் ’காந்தி’ இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றியிருக்கின்றார் என்று அறிகின்றோம். மைதிலி, தனி வழியே, ஓட்டமும் நடையும், குரலும் பதிலும் உள்ளிட்ட 9 புதினங்களையும், தெய்வத்தின் பரிசு, உயிரின் அழைப்பு என 500 சிறுகதைகளையும், சமையற்கலை குறித்து இரு தொகுதிகள் அடங்கிய நூலையும், போதி மாதவன் எனும் பெயரில் புத்தரின் வரலாற்றையும் எழுதியிருக்கின்றார் சேது அம்மாள். 2002ஆம் ஆண்டு இவரது நூல்களைத் தமிழகஅரசு  நாட்டுடைமை ஆக்கியிருக்கின்றது. எழுத்தோடு நில்லாமல் அகில இந்திய வானொலியில் பலதரப்பட்ட தலைப்புக்களில் சொற்பொழிவுகளையும் வழங்கியிருக்கின்றார் பல்துறை வித்தகியான சேது அம்மாள்.

    ’சிறுகதை மன்னன்’ என்ற புகழுக்குச் சொந்தக்காரரான புதுமைப்பித்தனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும்; ஆனால் அவர் மனைவியான கமலா விருத்தாசலமும் (புதுமைப்பித்தனின் இயற்பெயர் விருத்தாசலம் என்பதாகும்) ஒரு நல்ல எழுத்தாளர் என்பதைப் பலரறியார். கிராம ஊழியன்’, `தினமணி’ போன்ற இதழ்களில் அவருடைய கதைகள் வெளிவந்தன. `காசுமாலை’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1971-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

    1931-ஆம் ஆண்டில் புதுமைப்பித்தனை மணந்த கமலா அம்மையார், 1948-ஆம் ஆண்டில் அவர் மறையும்வரையில் அவரோடு சேர்ந்து வாழ்ந்த ஆண்டுகள் பத்துக்குள்தான் இருக்கும். புதுமைப்பித்தன் இடைவிடாமல் கமலாவுக்கு எழுதிய கடிதங்களில்தான் இருவரும் வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தகு துயர வாழ்வுக்கிடையிலும் கதைகள் எழுதித் தம் எழுத்துத் திறமையைப் பறைசாற்றியிருக்கும் கமலா அம்மையார் பாராட்டுக்குரியவரே!

    இத்தகு பெண் எழுத்தாளர்கள் மத்தியில் ’அத்தி பூத்தாற்போல்’ அரிதில் காணக்கிடைக்கின்றார் சித்தி ஜுனைதா பேகம் (ஆச்சிமா) எனும் இசுலாமியப் பெண் படைப்பாளி. காரைக்காலுக்கு அருகிலுள்ள நாகூரில் பிறந்த பேகம் அம்மையாரின் முதல் நாவலானகாதலா கடமையா?’வுக்கு மகாமகோபாத்தியாயரான உ.வே.சா. அவர்கள் முன்னுரை வழங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை, ஹலிமா அல்லது கற்பின் மாண்பு, மலைநாட்டு மன்னன், மகிழம்பு போன்ற பல புதினங்களை எழுதியிருக்கின்றார் இவ் அம்மையார். மிக அதிகமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு விதிக்கும் இசுலாமிய சமயத்தில் பிறந்து மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ஜுனைதா பேகம் அம்மையார், அரும் முயற்சியாலும் பயிற்சியாலும், தேர்ந்த எழுத்தாளராய் மிளிர்ந்தது பெருஞ் சாதனையே!

    [தொடரும்]   

    *****

    http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011223-23799

    http://www.thehindu.com/thehindu/mp/2002/10/10/stories/2002101000900200.htm

    http://web.archive.org/web/20080129164524/http://abedheen.googlepages.com/sithijunaitha.html

     

    Share
  • நற்றமிழ் நாவலர் – சோமசுந்தர பாரதியார்

    -மேகலா இராமமூர்த்தி

    சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட சோமசுந்தர பாரதியார் 1879-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27-ஆம் நாள் எட்டப்பப்பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகவாய் எட்டயபுரத்தில் பிறந்தார்; எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்ரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார்.

    இவர்கள் இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்கள் புனைவதிலும் குழவிப் பருவத்திலேயே பெருவிருப்புக் கொண்டிருந்தனர். அச்சமயம், யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லைக்கு புலவர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு அவர் புலவர்களை வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் இருவரும் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் ’பாரதி’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

    எட்டயபுரத்திலும் அதைத் தொடர்ந்து நெல்லையிலும் கல்விபயின்ற சோமசுந்தர பாரதியார், பின்பு சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்; அதன்பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ஆம் ஆண்டில் இளநிலை சட்டப்படிப்பை (Bachelor of Law) முடித்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தபொழுது தாமே முயன்று பயின்று தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    1905-ஆம் ஆண்டு முதல் 1920-ஆம் ஆண்டுவரை தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார் பாரதியார். விடுதலைப் போராட்டம் எங்கும் வீரியத்தோடு நிகழ்ந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில் விடுதலை வேட்கையால் உந்தப்பட்ட சோமசுந்தர பாரதியும் அவற்றில் பங்கேற்கலானார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905-ஆம் ஆண்டு முதல் 1919-ஆம் ஆண்டு வரை அவரது பெயரை ஐயப்பாட்டுக்குரியோரின் பட்டியலில் வைத்திருந்தது ஆங்கில அரசு.

    வ. உ. சிதம்பரனாரின் அழைப்பை ஏற்று “இந்தியன் நேவிகேஷன்” என்னும் சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளராகச் சேர்ந்தார் சோமசுந்தர பாரதியார்.

    1937-ஆம் ஆண்டில் இராசகோபாலாசாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது, உயர்நிலைப் பள்ளிகளின் முதல் மூன்று படிவங்களுக்கு (6, 7, 8-ஆம் வகுப்புகள்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்துடைய பாரதியார், இந்தி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார். 1937 செப்டம்பர் 5-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25-ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியை கைவிடக் கோரி, முதலமைச்சர் இராசகோபாலாசாரியாருக்குத் திறந்த மடலொன்றை (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar) தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுப் பலருக்கும் அதனை விநியோகித்தார்.

    தமிழகத்தில் ‘ஆரிய-திராவிட’ எதிர்ப்பு அரசியல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டமது. ’கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்’ என்றும், ’கூடாது’ என்றும் சொற்போர் ஒன்று 14.03.1943-இல் சேலத்தில் நடைபெற்றது. ’தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’ என வாதிட்டவர் பேரறிஞர் அண்ணா.  ’கொளுத்தக் கூடாது’ என அண்ணாவின் கருத்தை மறுத்து வாதிட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

    அதற்கு அவர் முன்வைத்த காரணங்களாவன:

    “ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று; அது தமிழ்நெறியன்று. ஆபாசக் கருத்துக்களை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணைநிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போன்ற ஒரு சிறந்த கவியை நான் கண்டதில்லை. மக்களுக்கு அறிவூட்டுங்கள்; ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள்” என்று தமது கருத்தை யார்க்கும் அஞ்சாமல் ஆணித்தரமாக வெளியிட்டார் நாவலர்.

    இளமையிலேயே தமிழிலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். ஆராய்ச்சிகளில் தாம் கண்ட முடிவைத் தம் சொற்பொழிவுகள் வாயிலாகவும் ஆய்வுநூல்கள் வாயிலாகவும் அவர் வெளியிட்டார். 1916 ஆகஸ்டு 16-ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ’தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்னும் தலைப்பில் பாரதியார் ஆற்றிய ஆராய்ச்சிச் சொற்பொழிவு பின்னாளில் அதே தலைப்பில் நூலாக வெளிவந்தது.

    தசரதன் நல்லவன்; அவன் உயிருக்கே உலைவைத்த மாபாதகியான கைகேயியே தீயவள் என்று கூறப்படுவதே நம்மனோரின் பொதுவான வழக்கம்.  இவ்வுண்மையை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டதே ”தசரதன் குறையும் கைகேயி நிறையும்” எனும் ஆய்வு நூல். இதில் தசரதனின் குறைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகின்றார் பாரதியார்:

    1. தசரதன், கைகேயியை மணமுடித்த காலத்து, அவளுக்குக் ’கன்யாசுல்கமாக’ (சீதனம்) அயோத்தி நாட்டை அளித்தவன்; அதனால் நாடு பரதனுக்கே உரியது. ஆனால், தசரதனோ, அவனை வஞ்சித்து, இராமனுக்கு முடிசூட்ட முயன்றான்.
    2. சம்பராசுரப் போரின்போது, தான்கொடுத்த வாக்குறுதியைமீறிக் கைகேயியை வஞ்சிக்கத் துணிந்தான்.
    3. மிதிலை மணவிழா முடிந்தபின், காரணம் காட்டாமலேயே பரதனைக் கேகயநாட்டிற்கு அனுப்பிவிட்டான்.
    4. பரதன் சென்றதும், ஆட்சித் துறையில் இராமனை ஈடுபடுத்தினான்.
    5. பரதன் இல்லாத சமயம் பார்த்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் நடத்த முடிவுசெய்தான்.
    6. பட்டாபிடேக அழைப்பினை அனைவருக்கும் அனுப்பியவன், கேகயனுக்கும் அவனிடத்திருக்கும் பரதனுக்கும் அனுப்பாமல் விட்டுவிட்டான்.
    7. பட்டாபிடேக ஏற்பாடுகளைக் கைகேயினிடத்து மட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்.
    8. ஏதுமறியாப் பரதனைத் ’தன் மகன் அல்லன்’ என்றான்.

    இவ்வாறு தசரதன்பால் அமைந்துள்ள குற்றங்களை வரிசையாக அடுக்கிச் செ(சொ)ல்லும் நாவலர் பாரதியார், கைகேயினிடத்து அமைந்துள்ள நிறைகள் இவையிவை என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

    1. கைகேயி, மக்கள் நால்வரிடத்தும் வேறுபாடு காணாதவள்.
    2. தன் மகன் பரதனைவிட இராமனித்து அளவற்ற அன்புடையவள்.
    3. கொண்டானையன்றிப் பிற தெய்வம் அறியாதவள்.
    4. போர்க்களத்தும் தன் கணவனைப் பிரிய எண்ணாமல், அவன் தேர்ச்சாரதியாய் இருந்து, தன் இன்னுயிரையும் அவனுக்காகப் பலியிடத் துணிந்தவள்.
    5. தசரதனிடத்து அன்பு பூண்டவள்; ஆனால் அவனுக்குப் பழிவந்திடலாகாது என்பதற்காக வரம் கேட்டவள்.
    6. தன் கணவனுக்காகத் தானே பழி சுமந்தவள்.
    7. ‘தெய்வக் கற்பினள்’ எனக் கம்பரால் பாராட்டப் பெற்றவள்.

    இவ்வாறு அதுவரை யாரும் கண்ணுறாத வகையில் தசரதனையும் கைகேயியையும் ஆய்வுக் கண்கொண்டு நோக்கி அரிய உண்மைகளை அறியத் தந்தார் சோமசுந்தர பாரதியார்.

    தம் கெழுதகை நண்பரான சுப்ரமணிய பாரதி, ’பாஞ்சாலி சபதம்’ எழுதிப் பாஞ்சாலியின் பெருமையைப் பாருக்கு உணர்த்தியதுபோல், சோமசுந்தர பாரதி, கைகேயியின் பெருமைகளை விளக்கவே ’தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ கூறினார் எனில் பொருந்தும். அவ்வகையில் தமிழிலக்கிய உலகுக்கும், தமிழாய்வுத்துறைக்கும் இந்நூல் ஒரு முன்னோடி எனலாம்.

    ’திருவள்ளுவர்’ என்னும் தலைப்பில் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல், வள்ளுவர் குறித்துத் தமிழகத்தில் நிலவிவந்த பல்வேறு வெற்றுக்கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாய் அமைந்தது. அதிலிருந்து சில முக்கியமான செய்திகள்:

    திருவள்ளுவர் மயிலையில் பிறந்தவர் அல்லர். மதுரையில் அருந்தமிழ் வேளிர் குடியில் பிறந்தவர். பண்டைப் பாண்டியரிடம் உள்படு கருமத்தலைவராக இருந்தவர்.

    குறளடியால் அறக்கருத்துக்களைப் பாடி உலகுக்களித்தவர்.

    நீதி நூல்களின் தோற்றத்துக்கு அடிப்படை வடமொழி நூல்களே என்றும், வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் எனும் நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு என்று மொழிந்த தமிழறிஞர் மு. இராகவையங்காரின் கருத்தை மறுத்த சோமசுந்தர பாரதியார்,

    ”ஆரிய தரும சாத்திர மரபு வேறு; தமிழற நூன்மரபு வேறு. இரண்டையும் நன்குணர்ந்த வள்ளுவர் தமிழ் மரபு வழுவாது, பொருளின் பகுதிகளான அகப் புறத்துறை அறங்களை  மக்கள் வாழ்க்கைமுறைக் கேற்றவாறு வடித்தெடுத்துத் தந்திருக்கும் அரிய தமிழ்நூல் வள்ளுவம்.

    தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகும் என்பது வெள்ளிடைமலையாம்” என்றார்.

    தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார் நாவலர் பாரதியார். அவ்வுரைநூல் ’தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை’ எனும் தலைப்பில் 1942-ஆம் ஆண்டில் வெளிவந்தது.

    இவையன்றிச் சேரர் தாயமுறை, சேரர் பேரூர் போன்ற ஆராய்ச்சி நூல்களையும் சோமசுந்தர பாரதியார் எழுதியுள்ளார். வடமொழியில் காளிதாசன் எழுதிய ’மேக சந்தேசம்’ எனும் நூலை அடியொற்றித்  தமிழில் அவர் எழுதியதே ’மாரி வாயில்’ எனும் கவிதை நூலாகும். நாவலரின் நற்றமிழ்க் கவிப் புலமைக்குக் கட்டியங்கூறும் இந்நூலில் இடம்பெற்றுள்ள  அழகிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிது!

    ”தமிழினிய தெய்வதமே மொழிகள்குலத் தனிவிளக்கே
    தகவெழில்மெய் சீர்த்த சொல்லின்
    அமிழ்துவிழைந் தடுத்தபல புலவரெலாம் அசையலையைக்
    கடைந்தபொழு தழகி னோங்கும்
    துமியினிடை எழுந்தொளிரும் செல்விஅறி வெனுமலவன்
    துணைவியருள் முதல்வி தூய்மை
    கமழ்கவிதை உலகுபடை கவிஞருளம் களிவிக்கும்
    காதல்வளர் கன்னி வாழி!”

    இளமையிலேயே சமூகச் சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார் சோமசுந்தர பாரதியார். ஆதலால் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தம்மைப் பிணைத்துக்கொண்டார். சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராகவும் செயற்பட்டார். அப்பணியின் உச்சமாக, 1933 மே 13-ஆம் நாள் மதுரைக்கு அருகிலுள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் தொடக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார். அதன் தொடக்க விழாவில் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.

    வழக்கறிஞராய்ப் பல்லாண்டுகள் பணிபுரிந்த பாரதியார்,  1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1938 ஏப்ரல் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார். முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார், வித்வான் க. வெள்ளைவாரணனார், திறனாய்வறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் போன்றோர் இவரிடம் தமிழ்பயின்று பின்னர் நானிலம் போற்றும் நற்றமிழ் அறிஞர்களாய்ச் சிறந்தனர்  என்பது கருதத்தக்கது.

    பெரும்புலமையும் பேரறிவும் நாநலமும் வாய்க்கப்பெற்ற சோமசுந்தர பாரதியாருக்கு ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் 1944ஆம் ஆண்டு நாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

    மதுரை திருவள்ளுவர் கழகத்தார் அவருக்கு 1954-ஆம் ஆண்டில் கணக்காயர் பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் வெள்ளிவிழாவில் அவருக்கு மதிப்புறு முனைவர் (Honorary Doctor) பட்டம் அளிக்கப்பட்டது.

    பேச்சாலும் எழுத்தாலும் மட்டுமன்றிச் செயலாலும் தமிழ்சிறக்கப் பாடுபட்டவர் ’இளசை கிழாரான’ நாவலர் சோமசுந்தர பாரதியார். தாய்த்தமிழுக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அதனை அஞ்சாது எதிர்த்து நின்ற தீரர் அவர். தமிழ்ப் புலவர்களைப் போற்றிக் கொண்டாடி அவர்கட்கு வேண்டுழிப் பொருளுதவி செய்தவர். ஆய்வு நெறிமுறைகள் இவை எனக் காட்டித் தம் மாணாக்கரிடையே ஆய்வு மனப்பான்மையை ஊக்குவித்துத் திறனாய்வுத்துறையை வளர்த்த சான்றோர். ஆரிய மரபு இது, தமிழ் மரபு இது என்று தெள்ளிதின் விளக்கித் தமிழ்மரபு காக்க வலியுறுத்தியவர். இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன்முதலில் எதிர்த்த பெருமைக்குரியவர். தமிழிலக்கியத்துக்கும், தமிழாராய்ச்சிக்கும் புத்தொளி பாய்ச்சிய  வித்தகர். இத்துணைப் பெருமைகட்குச் சொந்தக்காரரான நாவலர் பாரதியார், 1959-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் நாள் தம் எண்பதாம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

    ’தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ? ’என்று பாவலர் சுப்ரமணிய பாரதிக்குப் பாவேந்தர் சூட்டிய புகழாரம் நாவலர் சோமசுந்தர பாரதிக்கும் பொருந்துவதாகும்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. நாவலர் பாரதியார் – நற்றமிழ் ஆய்வுகள் – 1
      தொகுப்பாசிரியர் ச. சாம்பசிவனார், ம. சா. அறிவுடைநம்பி.
    2. https://ta.wikipedia.org/wiki/ சோமசுந்தர_பாரதியார்

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 205-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நித்தி ஆனந்தின் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 205க்கு வழங்கியிருக்கிறார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!

    ”பாலைப் பொழிந்துதரும் பாப்பா – அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா”
    என்று பசுவின் பரந்த மனத்தை, உதார குணத்தை உலகுக்கு உணர்த்தினார் மகாகவி பாரதி.

    பசுவின் பால் மட்டுமல்லாது, அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் மற்றும் நெய்யுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்து `பஞ்சகவ்யம்’ தயாரிக்கப்படுகின்றது. இது கோயில்களில் அபிடேகப் பொருளாகவும், ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும், இயற்கை வேளாண்மையில் நிலத்துக்கு ஊட்டமளிக்கும் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது.

    அந்தக் காலத்தில் நாட்டு மாடுகளே பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்பட்டன. அவை வைக்கோலையும் புல்லையுமே உணவாகத் தின்று வந்தமையால் அவற்றின் உடலில் நோய்த்தொற்று இல்லாதிருந்தது. இன்றோ செயற்கையான முறையில் தயாராகும் தீவனங்களையே மாடுகள் அதிகம் உண்கின்றன. எனவே மருந்துப்பொருள்கள் தயாரிப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் மாட்டின் சிறுநீர், சாணம் முதலியவற்றைப் பயன்படுத்துவதற்குமுன், அவற்றில் கிருமித்தொற்று, நச்சுத்தன்மை போன்றவை இல்லாதிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின் பயன்படுத்துதலே சிறந்தது.

    இனி, பசுவின் சிறப்பைத் தீஞ்சுவைப் பாடலாய்ப் பொழியக் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    ******

    ”ஊரார் பிள்ளைக்குப் பாலூட்டி வளர்க்கும் இரண்டாம் தாய் நீ! மடி நிறையப் பாலும், மனம் நிறைய அன்பும் கொண்ட உன்னைப்போல் மன்னுயிர்கள் இருந்தால் மாநிலம் பயனுறும்” என்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

    இரண்டாம் தாய்

    தாயில்லாப் பிள்ளைக்கு எல்லாம்
    தாயாகிப் பாலூட்டும் இரண்டாம் தாய் நீ
    தன் பிள்ளை தானே வளரும் என்று
    தன் பாலை ஊரார் பயனுறத் தரும் அன்னை நீ

    வாயில்லா ஜீவன் தான் நீ, ஆயினும்
    வாரித் தருவதில் வள்ளல்!
    வறுமையுற்ற ஏழைக்கெல்லாம்
    வாழ்வளிக்கும் நீயே வாழும் குலசாமி
    உணவளிக்கும் உழவருக்கு
    உயிர் கொடுக்கும் தெய்வம்
    உன்னை வளர்ப்பவர் வாழ்வை
    உயர்விக்கும் உன்னத நண்பன் நீ!

    உழவனைத் தொழுகின்றதாகக் கூறும் உலகம் அவன்
    உழைப்பை உறிஞ்சிக் களித்திருக்கும்
    உடல் பொருள் ஆவி அனைத்தும் தரும்
    உன் உழைப்பால் வானுயரும் அவன் மதிப்பு!

    ஈன்ற கன்றுக்கு அன்புடன் பால் சுரந்து
    ஈத்துவக்கும் இன்பம் உடைய பசுவே
    ஈரமுள்ள நெஞ்சு கொண்ட உனை
    ஈகைக் குணத்தில் மிஞ்ச யார் உளார்?

    மடிநிறையப் பால் இருக்கு
    மனம் நிறைய அன்பு இருக்கு
    மன்னுயிர்கள் எல்லாம் உன்னைப் போலானால்
    மாநிலத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும்!

    *****

    பால் விற்போரே! வாலை ஆட்டிவரும் கன்றுக்கும் கொஞ்சம் பால் இருப்பது நன்று! ஆவின் பாலனைத்தையும் நீரே முற்றாய்க் கறந்துவிடவேண்டாம்!” என்று அன்போடு கண்டிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கன்றுக்கும் விட்டுவை

    பாலது கறந்து விற்பவரே
    பாலை முற்றிலும் கறக்கவேண்டாம்,
    வாலதை யாட்டி வரும்கன்று
    வயிறு நிறையக் குடிப்பதற்கே
    பாலது வேண்டும் வைத்திருங்கள்
    பசியில் துடிக்க விடவேண்டாம்,
    போலியாய்ச் செய்த கன்றன்று
    பிழைக்க வைப்பீர் உயிரதையே…!

    *****

    ”பாரில் உள்ள பாதிப் பிள்ளைகளுக்குப் பருகிடத் தாய்ப்பாலாய் இருப்பது உன் பாலே! இருக்கும்வரை பால்தந்து இறந்தபின்னும் தோல்தந்து நிற்கும் நீ எம் குலம் தழைக்கவந்த குலதெய்வம் அன்றோ!” என்று நெகிழ்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    குலதெய்வம்

    அழுகின்ற பிள்ளைக்கு
    அள்ளி அணைத்து
    அன்போடு பால் கொடுக்கும்
    அன்னையைப் பார்த்ததுண்டு

    அடுத்தவர் பிள்ளையாயினும்
    பசி அதனைப் போக்கிட
    பரிவோடு பால் கொடுத்த
    அன்னை பற்றிக் கேட்டதுண்டு

    உன் இளங்கன்றை ஏங்கவைத்து
    ஊருக்கே தினந்தோறும்
    ஊற்றெடுக்கும் பால் அனைத்தும்
    தந்து நிற்கும் உன் உருவில்
    தியாகம் செய்யும் அன்னை மனதைக்
    கண்டு மகிழ்ந்தோம்!

    பாசம் அது பெருகிடவே
    பருகிடும் தாய்ப் பால் அது உதவிடுமே
    பாரில் உள்ள பாதி பிள்ளைகளுக்கு
    பருகிடத் தாய்ப் பாலாய் இருப்பது உன் பாலே!

    கலப்படம் இன்றி நீ கொடுக்கும் பாலில்
    மனதில் ஓடும் ஆசையைப் போல்
    கலந்து வைத்துத் தண்ணீரை
    மதிகெட்டு விற்கும் மாந்தர் கூட்டம் இங்கே!

    கட்டிய வீட்டில் காசு சேர்ந்திடக்
    கட்டி உன்னை அழைத்து வந்து
    பூஜை செய்து போற்றி நிற்கும் மனமது
    உன் பிள்ளை அருந்திட உருவான பால்தனை
    ஊருக்கு அளித்து மகிழ்ந்து இருக்கும்
    உன் தியாகம் தனை என்று உணர்ந்திடும்?

    கல்லையும் புனிதமாக
    மாற்றத்தக்க பாலைத் தந்து
    தரணியில் இருக்கும் அனைவருக்கும்
    பசி தீர்க்கும் பானமாய்
    இருக்கும்வரை பால் தந்து
    இறந்த பின்னும் தோல் தந்து
    எம் குலம் தழைத்திடவே
    கால் நடையாய் வந்த
    குலதெய்வம் நீ!

    *****

    பசுவின் இனிய இயல்பை, கன்று உண்ணாத போதினும் கலம் நிறையப் பால்கொடுத்து மற்றவருக்கு உதவும் அதன் தயாள குணத்தைச் சிறப்பாய்த் தம் பாடல்களில் பதிவுசெய்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    அன்பைப் பெருக்கி அமுதைச் சுரப்பதற்காய்
    தன் கன்றை முத்தமிடும் தாயின் தயவின்றேல்
    உலகினிலே மாந்தருக்கு உணவேது? உயிரேது?

    தாய்ப்பாலிலாது தவிக்கும் குழந்தைகட்கு
    ஆவினங்களன்றோ அனாத ரட்சகர்கள்.

    அஃதை உணர்ந்தேதான் அன்றே எம்முன்னோர்கள்
    பதியின் அடுத்த பசுவென்று ஆன்மாவைத்
    தூய நிலையில் துதிசெய்யச் சொன்னார்கள்

    உதிரத்தைப் பாலாக்கி ஊட்டுகிற அன்னைக்குப்
    பதிலீடாய் என்றும் பசுக்கூட்டம் உள்ளதனால்
    அன்பைப் பொழிகின்ற ஆவினத்தை எப்போதும்
    துன்பமறக்காத்துத் தொழுதிடுதல் எம் கடமை

    தெய்வத் திருமுறையில் திரு மூலர் சொன்னபடி
    பதிக்கொரு பச்சிலையும் பசுவுக்கோர் வாயுறையும்
    என்றுங் கொடுத்து எமைக்காக்கும் ஆவினத்தை
    நன்று பராமரிப்போம் நாளும்!

    ”உதிரத்தைப் பாலாக்கி ஊட்டுகின்ற அன்னைக்கோர் பதிலீடாய்த் திகழும் ஆவினத்தைத் தொழுவோம். ”யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை” என்று உரைத்துச்சென்ற சித்தர் திருமூலரின் வாக்குக்கிணங்க, பார் புரக்கப் பால் சுரக்கும் பசுவினத்தைப் பாங்காய்ப் பராமரிப்போம் நாளும்!” என்று நற்சொல் நவின்றிருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 204-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பிரேமின் இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 204க்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தெரிவாளர் இருவருக்கும் என் நன்றி!

    கைகளை அகல விரித்துத் தன் அகலா மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்தப் பெண்ணைப் பார்க்கும்போது, சிட்டுக்குருவியாகக் கட்டுக்களின்றி மாந்தரை வாழப் பணித்த மாக்கவி பாரதியின்,

    “விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே

    எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
    ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
    மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
    வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு”
    எனும் சிந்தனை என் மனவானில் சிறகடிக்கின்றது.

    தளைநீங்கி விடுதலையொடு வாழ விழைபவையே மண்ணில் வாழும் உயிர்கள் அனைத்தும்!

    இதோ…இவ்வாரப் புகைப்படத்துக்குப் பொருத்தமாய்க் கவி தீட்ட கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். வரவேற்போம் அவர்களை!

    *****

    எல்லார்க்கும் எல்லாமாகப் பெண்கள் இருந்தபோதிலும் இன்னல்கள் வெந்தணலாய் வாட்டுவதென்னவோ அவர்களைத்தான்! வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்; வலைகள் வசீகரமாய்த் திறன்பேசிகளில் விரிக்கப்படும்; பொல்(ள்)லா(ளா)ட்சிக் கசப்புகள் நமக்கு புத்தி புகட்டுமா? என்று தன் வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

    பொல்(ள்)லா(ளா)ட்சி கசப்புகள்!

    மானுடம் உயிர்த்திட மண்ணுலகம் நிலைத்திட மடிதந்த
    மாதவ மங்கையர்க்கு மனம்நிறை மகிழ்வான தலைவணக்கம்
    மாசில்லாப் பெண்மையின் மாண்புகள் காப்போம்
    மதியுடை மாதர்கள் மானம் காப்போம்

    அன்பு காட்டும் தாயாய்
    அறிவுரை சொல்லும் அமைச்சராய்த் தாரம்
    அள்ளிக்கொஞ்சும் மழலையாய் மகள்கள்
    ஆறுதல்தரும் ஆதரவாய் அக்கா தங்கைகள்

    இயன்றவரை எல்லார்க்கும் எல்லாம் தரும்
    இறையாய் மங்கையர் இருந்தும்
    இன்னல்கள் எல்லாம் வெந்தணலாய் வருவது
    இந்தத் தேவதைகளுக்குத்தான்!

    மேலை நாட்டின் பண்பாடு
    ஏழை நாட்டுக்கு ஏன் வேண்டும்?
    வாழும் முறையில் மாற்றம் வேண்டும்தான்
    வழுக்கி விழுவது சேறாக இருத்தல்தான் வேண்டுமா?

    வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்
    வலைகள் விரிக்கப்படும் திறன்பேசிகளில் வசீகரமாய்
    பொல்(ள்)லா(ளா)ட்சிக் கசப்புகள் புத்தி புகட்டுமா நமக்கு?
    வழக்குகள் வலுவிழக்கப்படும் வாதாட நேரமின்றியே!

    துள்ளல் நடைக்கும் உடலொட்டி உடைகளுக்கும் விடையளிப்போம்
    நிலை தடுமாறாமல் இருக்க மீசை பாரதியின்
    நிமிர்நேர் பார்வை பெறுவோம்!
    பொல்லாச் சுவர்ணத்தின் தேவதைகளாக வேண்டாம்
    பொல்லாங்கில்லா நல்லாட்சிப் புவியின் பூ மகள்களாவோம்!

    *****

    ”தற்காத்துக்கொள்ளாத பெண்மையும், பெண்மையின் பெருமை காக்க உதவா ஆண்மையும் அர்த்தமற்றவையே” என்று அழுத்தமாய் உரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டம்…

    எல்லை தாண்டிடும் ஆட்டங்கள்
    வாழ்வில்
    எடுத்துத் தருவது வாட்டம்தான்..

    ஆணோ பெண்ணோ
    ஆட்டம் அதிகமானால்
    ஆபத்து அருகினில்தான்,
    ஆனாலும்
    பாதிப்பு அதிகம்
    பெண்ணுக்குத்தானே..!

    காலம் காலமாய்க்
    காண்பதும் இதுதானே..!

    தன்னைக் கட்டுப்படுத்தித்
    தற்காத்துக்கொள்ளாத
    பெண்மையும்,
    பெண்ணின் பெருமைக்குத்
    துணை நில்லா
    ஆண்மையும்,
    அகில வாழ்வில்
    அர்த்தமற்றவைதான்…!

    *****

    இணைய யுகத்துக்கேற்ற அறிவுரைகளைச் சிறப்பாய் வழங்கியிருக்கும் பாவலர்களைப் பாராட்டுகின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து… 

    பெண் சுதந்திரம்!

    பெண் என்று அறிந்து 
    கலைக்கப்படும் கருவில் தப்பி
    இனிதாய்த் துவங்கியது உனது வெற்றி பயணம்!
    கள்ளிப்பால் கொலையில் தப்பி 
    வெற்றிப்பாதையின் முதல் படியில்
    பள்ளி சென்று பட்டம் படித்து
    வெளிச்சத்திற்கு வந்த வாழ்க்கைப் படிகள் 
    வாசல்வரை வந்து வழியனுப்பிக் 
    காத்திருந்த காலம்போய்
    காற்றைக் கிழித்து செல்லும் 
    விமான ஓட்டியாய் வளர்ந்து நின்றாய்! 
    மூலையில் முடங்கிக் கிடந்த காலம்போய் 
    முன்னேற்றப் பாதையில் முந்திச் சென்றாய்! 
    பின்தொடர்ந்து சென்றதெல்லாம் போதும் என்று
    உன் நிழல்கூட முன்னேற்றப் பாதையில்
    முன்னே விழுந்ததோ?!
    காந்தி கண்ட கனவு சுதந்திரம்
    வந்ததோ என்று வியந்தது 
    பல விழிகள் உன்னைக் கண்டு! 
    வரைபடம்கூட உயிர்த்தெழுந்ததே
    தேவதை உன்னைக் கண்டு
    சொர்க்கம் என்று எண்ணி! 
    சுதந்திரம் என்பது பார்க்கும் விழிகளில் இல்லை
    உரிமைக்காகப் போராடும் பாவை உன் மனதில் இருக்கும்! 
    முடிந்தவரை போராடி முன்னேறு
    வெற்றி உன்னைத் தொடர்ந்துவரும் பின்னோடு! 

    ”கள்ளிப்பால் கொலையில் தப்பி, பள்ளிசென்று படித்து, விமானத்தில் வானை அளக்கும் வனிதையே! வரைபடம்கூட உன்னைக்கண்டு உயிர்த்தெழுகின்றது உற்சாகத்தால்! முன்னேற்றத்தையே நாடும் உன் மனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உன்நிழல்கூட முன்னால் விழுகின்றதே!” என்று படத்தில் காணும் பாவையைப் போற்றிப் பாடியிருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

     

     

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 7    

    -மேகலா இராமமூர்த்தி

    ஆண்களுக்கு நிகரான பெண் புலமையாளர்களை – கல்வியாளர்களை, சங்க காலத்துக்குப் பிறகு, தேடி அடையாளப்படுத்துதற்குப் பெரும் பிரயத்தனமும் முயற்சியும் தேவைப்படுகின்றது. அப்படிக் கண்டடைந்த பெண்டிரின் சிந்தனைகளும் அவர்கள் வாழ்ந்தகாலச் சமூகப் போக்கினை ஓட்டியே அவர்தம் படைப்புக்களில் பிரதிபலிக்கக் காண்கின்றோம்! அஃது இயற்கையும்கூட!     

    அவ் அடிப்படையில்தான் கிபி 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பெண்புலவோரின் சிந்தனைகள் மானுடக் காதலைப் பேசுவதாய் அமைந்திருக்க, அதற்குப் பிந்தைய பக்தி இயக்ககாலப் பெண்புலவோரின் சிந்தனைகள் இறையோடு ஒன்றறக் கலக்கும் தெய்விகக் காதலை விதந்தோதுகின்றன.

    இப்படி ஒவ்வொரு காலகட்டமாகக் கடந்து வருகையில் பெண்பாலாரின் படைப்புக்கள் குறைந்துகொண்டே வருவது பெண்கல்வியும் காலப்போக்கில் குறைந்து போயிருக்கின்றது என்பதையே  உணர்த்துகின்றது. இத்தகு பெண்கல்வித் தடைக்கோர் முடிவுவந்து மீண்டும் அவர்களின் கல்வி வானம் விடிவுகண்டது மேலைநாட்டாரின் வருகைக்குப் பின்னரே என்பதை மறுப்பதற்கில்லை.

    ஆங்கிலேயர், இந்தியாவில் தம் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியரை அடிமைப்படுத்தியதால் நாம் நம் சுதந்தரத்தை இழந்தோம்; மேற்கத்தியரின் ஆங்கிலக் கல்விமுறைக்கு மாற்றப்பட்டோம் என்பவை வருந்தத்தக்கனவே எனினும், அவர்கள் காலத்தில்தான் சாதி மத பேதங் கடந்த அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வித் திட்டத்தை நாடு கண்டது என்ற வகையில் அது போற்றத்தக்கத்தே!

    ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, அறியாமை யிருளில் அகப்பட்டுக் கிடந்த பெண்களின் வாழ்வில் ஆங்கிலேயர் பரவலாக்கிய கல்விமுறை மீண்டும் அறிவொளி ஊட்டியது.

    பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டித்த இந்தியச் சமூகச் சீர்திருத்தவாதிகளின் எண்ணிக்கையும் இக்காலகட்டத்தில் அதிகரித்தது கண்கூடு. அவர்களில் முதன்மையானவர் ராஜா ராம்மோகன் ராய்.

    18-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் பிறந்த ராம்மோகன் ராய், சமூகத்தில் ஊறிக்கிடந்த மூடநம்பிக்கைகளுக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும் தீமூட்ட முதலில் தீக்குச்சி கொளுத்தியவர். பழமைவாதத்தில் பிடிமானம் கொண்ட பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்திருந்தும் அறிவுக்கும் மனிதத்தன்மைக்கும் பொருந்தாத மதச்சடங்குகளையெல்லாம் அவர் துணிந்து எதிர்த்தார். இறந்த கணவனோடு உயிருள்ள மனைவியை எரிக்கும் சமூகச் ’சதி’யை முடிவுகட்டப் பாடுபட்டு அதற்கு எதிரான சட்டத்தை அப்போதைய வங்காள ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு (Lord William Bentinck) அமல்படுத்த ராம்மோகன் ராய் வழிகோலினார்.

    இவரைப் போலவே ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஜோதிபாய் ஃபூலே, டாக்டர் அம்பேத்கர் என்று சீர்திருத்தச் சிந்தனை கொண்ட ஆடவர் பலர் பெண்களுக்கெதிரான ’சதி’யையும், சமூகத்தின் சாதி வேறுபாடுகளையும் கடுமையாய் எதிர்த்தனர். பெண் கல்வியின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.

    ஆண்களேயன்றிப் பெண்களும் பெண்கல்விக்கு ஆதரவாகவும், பெண்கள்மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பாடுபட்டிருக்கின்றனர். அவ்வகையில், ஜோதிபாய் ஃபூலேயின் துணைவியாரான சாவித்ரிபாய் ஃபூலே சிறந்த கவிஞராகவும், பெண்களுக்கான முதல் பள்ளியை பூனேயில் நிறுவிய சாதனையாளராகவும் திகழ்கின்றார்.

    நவீன இந்தியாவின் முதல் பெண்ணியவாதியாகக் கருதப்படுபவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மராத்தியரான, தாராபாய் ஷிண்டே (Tarabai Shinde) எனும் பெண்மணி. அவர் தம்முடைய ’Stripurush Tulana’ (A Comparison Between Women and Men) எனும் நூலில் அன்றைய சமூகத்தில் நிலவிவந்த சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை, ஆணாதிக்கம், சாதி வேறுபாடின்றி எங்கும் நிலவிவந்த பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றை மிகத் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கின்றார். சமூகத்தின் வரவேற்பை இந்நூல் அப்போது பெறாவிடினும், மற்றொரு சீர்திருத்தப் பெண் சிந்தனையாளரான, சாவித்ரிபாய் ஃபூலே இந்நூலைப் பெரிதும் பாராட்டியிருக்கின்றார் என்றறிகின்றோம்.

    நம் தமிழகத்திலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு உரத்துக் குரலெழுப்பிய போராளிகள் பலர் 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றினர். தந்தை பெரியார், திரு.வி.க., புரட்சிக் கவிஞர்களான பாரதி, பாரதிதாசன் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
    என்று பெண்ணடிமைக்கும் பெண்கல்விக்கும் எதிரானவர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகின்றார் பாரதியார்.

    ”கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம்
    அங்கே புல்விளையலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”
    என்றார் பாரதிதாசன் உறுதிபட.

    ”ஆண்களால் பெண்களுக்கு விடுதலையோ சம உரிமையோ கிடைக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த பெரியார், ”பெண் விடுதலைக்கு ஆண்களைவிடப் பெண்களே இப்போது பெரிதும் தடையாக இருக்கின்றார்கள்; ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாம் முழு விடுதலைக்குரியவர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை; இயற்கையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகத்தான் படைத்திருக்கின்றது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்” என்று 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த நம் பெண்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டியதோடு, அந்த அடிமை மனநிலையைக் கண்டிக்கவும் செய்தார்.

    அன்றைய பெண்களில் பலர் பெரியாரின் கூற்றுக்கிணங்க ஆடவர்க்கு அஞ்சியும் அடங்கியுமே நடந்தனர் எனினும் அவர்களினின்று(ம்) மாறுபட்டு, பெண் விடுதலைக்கும், பெண்ணுரிமைக்கும் குரலெழுப்பிய பெண்டிரும் தமிழகத்தில் இருக்கவே செய்தார்கள்.

    அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் மூவலூர் இராமாமிருதத்தம்மையார். பெண்களைச் சிறுமைப்படுத்தும் ’தேவதாசி’ முறையை ஒழிக்கக் கடுமையாகப் பாடுபட்டச் சமூகச் சீர்திருத்தவாதி அவர். திராவிட இயக்கச் சார்பாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய அவர், ’தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை 1936-இல் எழுதினார்.

    தலைப்பு, தாசிகளின் ஒழுக்கத்தை இழித்துரைக்கும் நாவலோ என்றோர் ஐயத்தை நமக்கு ஏற்படுத்தினாலும் நாவலின் பேசுபொருள் அதற்கு நேர்மாறானது. தாசிகளை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக அமைப்பையும், அதன் பழமைவாதத்தை ஆதரித்தபடியே ஒழுக்கநெறி பேசுவோரின் போலித்தனத்தையும் தாசிகளைக்கொண்டே இந்நாவலில் கடுமையாய்ச் சாடியிருக்கின்றார் இராமாமிருதத்தம்மையார். தாசி குலத்தவரும் ஏனைய பெண்களைப் போலவே சமமான உரிமையுடன் திருமணம் செய்துகொண்டு சுய மரியாதையுடன் வாழ்வதற்கு அறைகூவல் விடுக்கின்றார் அவர். தாசிகளின் மோசவலை பற்றிப் பேசுபவர்கள் குடும்பப் பெண்களை தெய்வநிலைக்கு உயர்த்துவார்கள். நீ பரத்தமை ஒழுக்கமுடைய ஆண்மகன் எனில் பெண்ணின் கற்பைப் பற்றிப் பேச உனக்கென்ன தகுதி இருக்கின்றது என்று காட்டமாக வினா எழுப்புகின்றது இந்நாவல்.

    பெண் போராளிகளில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார். மருத்துவராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த அவர், 1926-இல் சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணைமேயர் (The deputy chairperson of the legislative council) என்ற சிறப்பும் அவருக்குண்டு. அகில இந்தியப் பெண்கள் அமைப்பின் தலைவராக (President of All India Women’s Conference – AIWC) 1931-இல் தேர்வானார்.

    தேவதாசி முறை ஒழிப்பு, இருதாரத் தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய மணங்களைத் தடைசெய்யும் சட்டம் போன்றவற்றை அரசு நடைமுறைப்படுத்தியதில் முத்துலட்சுமி அம்மையாரின் பங்கு முக்கியமானது.

    பெற்றோரால் கைவிடப்பட்ட அநாதைக்குழந்தைகளின் பாதுகாப்புக்கும், அவர்தம் வளமான எதிர்காலத்துக்கும் உதவும் வகையில் முத்துலட்சுமி அம்மையாரால் உருவாக்கப்பட்டதே சென்னை அடையாற்றிலுள்ள அவ்வை இல்லம். முத்துலட்சுமி அம்மையாரின் சேவைகளைப் பாராட்டி மத்திய அரசு 1956-இல் ’பத்ம பூஷண்’ விருது வழங்கி அவரைக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

    [தொடரும்]

    *****

    https://www.indiacelebrating.com/general-awareness/social-reformers-of-india/

    https://en.wikipedia.org/wiki/Savitribai_Phule

    https://en.wikipedia.org/wiki/Tarabai_Shinde

    https://en.wikipedia.org/wiki/Moovalur_Ramamirtham

    https://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddi

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 203-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தன் கலைத்திறனை வீண் செய்யாது பிரவீண் நேர்த்தியாக எடுத்திருக்கும் இந்தக் கறுப்புவெள்ளைப் புகைப்படத்தை படக்கவிதைப் போட்டி 203க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    முதுகுச் சுமையோடு பவ்யமாய்க் கண்மூடிநிற்கும் இவ் இளைஞனின் நெற்றியைப் பற்றி வெற்றித் திலகமிடும் வளைக்கரங்கள் யாருடையவை எனும் சிந்தனை நம் மனத்தில் வட்டமடிக்கின்றது. வழக்கம்போலவே விடைதேடும் வேலையை வித்தகக் கவிகளிடம் விட்டுவிட்டு நாம் விலகி நிற்போம்!

    *****

    ”கனவிலும் நனவிலும் சுலபமாய்ப் பணக்காரன் ஆவதெப்படி என்பதையே மனித மனம் சிந்தித்திருப்பதையும் அதற்கு உதவ இறைக்கே முறையற்ற வகையில் கையூட்டளிக்கப் பேரம் பேசுவதையும் அறிந்த ஆண்டவனோ கோயிலைவிட்டே வெளிநடப்புச் செய்கின்றான்” என்ற நற்சிந்தனையைத் தன் கவிதையில் பதிவு செய்திருக்கின்றார் நாங்குநேரி வாசஸ்ரீ. 

    கடவுளின் வெளிநடப்பு

    எங்கு வந்தாய் மகனே
    எதனைத் தொலைத்தாய்
    வாழ்க்கைத் தத்துவத்தை உணராது
    விழுந்துவிழுந்து தொழுகின்றாய்
    விடியலில் குளித்து
    விரும்பி உண்ணா நோன்பிருந்து
    நூலைக் கையில் கட்டிக்கொண்டு
    நூறுரூபாய் காணிக்கையிட்டு
    எளிதாய் பணக்காரனாகும் வழியை
    என்னிடமே கேட்கின்றாயே
    அடுத்தவனை ஏமாற்றாது
    அகன்ற இவ்வுலகில் முன்னேற
    ஒருமுறை உழைத்துப்பார்
    ஓராயிரம் கதவுகள் திறக்கும்
    கனவுகலைந்து எழுந்த மனிதன்
    காய்கறிக்கடை திறக்கத் தீர்மானித்தான்
    காலையில் குளித்துக் கிளம்பி
    இதோ கடவுளைக் காண
    இங்கே மீண்டும் வந்துள்ளான்
    அப்படியே செய்கிறேன் நீ சொன்னபடி
    அதிகவருமானம் கிடைக்கச்செய்தால்
    அதில் பத்துசதவிகிதம் உனக்கு
    கண் திறந்தது பார்த்த போது
    கடவுள் நின்றிருந்த இடத்தில்
    அவருக்குப் பதில் வாசகம்
    திருந்தாத மாந்தர் நீர்
    தீர்வுசொன்ன எனக்கே கையூட்டா
    வேதனை மிகுதியால் நான்
    வெளிநடப்பு செய்கின்றேன்.

    *****

    ”இறைவா! உனை வேண்டிநின்ற வேளையில் எனக்காக மந்திரம் சொல்லி நெற்றியில் பொட்டிட்டு வாழ்த்திநின்ற உருவத்தில் உன்னைக் கண்டேனே! அன்பே சிவமென்று உணர்ந்து கொண்டேனே” என்று நெகிழும் இளைஞனை நமக்குக் காட்டுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    நம்பிக்கை

    கணனி சுமந்து வந்தேன்
    உன் சன்னதிக்கு,
    கடவுள் உன்னை
    நெஞ்சில் சுமந்து வந்தேன்
    நித்தம் என்னைக்
    காத்து நிற்பாய் என்ற
    நம்பிக்கையுடன்!

    வேலைக்குச் செல்லும் முன்னே
    இந்நாள் நன்னாளாய் அமையக்
    கண்மூடி வேண்டி நின்றேன்
    பிறருக்குத் தீங்கு நினைக்காது
    உன் சுமையை நீயே சுமந்து
    முயற்சி செய்து முன்னேறு
    எந்நாளும் நன்னாளாய் மாறிடுமே
    என்று நீ சொல்ல உணர்ந்தேன்

    கையேந்தி நின்றேன்
    உன் வாசல் முன்னே
    விழிகள் மூடி
    வழிகாட்டிட வேண்டி நின்றேன்
    நெற்றிப்பொட்டில் போட்டு வைத்து
    வேண்டி நின்ற அத்தனையும்
    உனக்குக் கிடைக்கட்டும் என்று
    வாழ்த்தி நின்ற உருவம் கண்டேன்

    வயதில் மூத்த மனிதராய்
    எனக்காக மந்திரம் சொல்லி
    நான் நினைத்ததெல்லாம்
    கிடைக்க வேண்டி
    வாழ்த்தி நின்ற அவர்
    கண்களில் கண்டேன்
    அன்பே சிவம் என்று!

    கல்லாய் நீ இருந்தாலும்
    கடவுள் என்று நம்பி
    கண் மூடி நின்றேன்
    என் மனக்கண்ணைத் திறந்தாயே
    காணும் சக மனிதன் உருவில்
    கடவுளைக் காணும்
    அருள் எனக்குத் தந்தாயே!

    *****

    ”கல்லைக் கடவுளாய்க் காண்பதும், அர்ச்சகர் சொல்லை ஆசியாய் ஏற்பதும் நம் நம்பிக்கையே!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நம்பிக்கை…

    கல்லைக் கடவுள் சிலையாக்கி
    கோவில் கட்டினோம் நிலையாக்க,
    எல்லை யில்லா அருள்பெறவே
    எடுத்துக் கருவறை வைத்ததையே
    எல்லா நாளும் பூசைசெய்ய
    ஏற்க வைத்தோம் அர்ச்சகரை,
    கல்லில் கடவுள் நம்பிக்கைதான்
    கோவில் அர்ச்சகர் ஆசியுமே…!

    *****

    ”இலக்கினை எட்டுதற்கு இறையிடம் தஞ்சமாகு; தீய எண்ணங்களைக் களையெடுத்து நல்லனவற்றை முளைக்கவைத்தால் முன்னேற்றம் தடைப்படாது” என்ற நல்ல கருத்தைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    திலமிட்ட நெற்றியில் திரளான சிந்தனைகள்..!

    உலகாளும் இறையி டத்தில்
    ……………ஓர்வரமா வேண்டு கின்றீர்.?
    பலவரத்தை வேண்டி னாலும்
    ……………பகவானும் கொடுத்த ருள்வான்.!
    திலகமிட்ட நெற்றிக் குள்ளே
    ……………திரண்டுவரும் சிந்தை கொண்டு..
    சிலகாலம் பொறுத்தி ருந்தால்
    ……………சிலவரலாம் நல்ல தாக.!

    அலவுகின்ற மனக்கு ழப்பம்
    ……………அமைதியாகும் ஆல யத்தில்.!
    கலங்குகின்ற மனதை என்றும்
    ……………கடவுளுமே தெளிய வைப்பான்.!
    இலக்கினைநீ எட்டு தற்கு
    ……………இறைவனிடம் தஞ்ச மாகு.!
    உலகத்தில் நல்ல வற்றை
    ……………ஒருபோதும் ஒதுக்க வேண்டாம்.!

    களையெடுக்கும் தீய வற்றைக்
    ……………கடமையென்று கொண்டு விட்டால்.!
    முளைகொண்டு எழுநல் எண்ணம்
    ……………முன்னேறும் தடைப்ப டாது.!
    விளைநிலமாம் வளரும் சிந்தை.!
    ……………விதைக்கவேண்டும் நல்ல தையே.!
    இளைஞராக இருக்கும் போதே
    ……………இவையெல்லாம் தேவை அன்றோ.!

    *****

    ”விரிவானில் இலத்திரனியல் பொறிகளுடன் நடக்கும் மரண விளையாட்டான போரினை நேர்த்தியாய் விவரித்து, வென்றால் வெற்றிப் புகழ்மாலை; (மேலுலகம்) சென்றால் புகழொடு பூமாலை” என்று தன் சுந்தரக் கவிச் சொற்களால் சிந்தை கவர்கின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

    வெற்றித் திலகம் நெற்றியில் இட்டு
    வென்று வா மகனே சென்று என்று
    வெஞ்சமர்களம் காண வழி அனுப்பும்
    நெஞ்சுரம் கெண்டவீரத்தாயவள் வாழி வாழி

    ஈன்ற தாய் அவள் இட்ட கட்டளைக்கு
    இம்மியளவும் மறுப்பு இல்லை
    இனி பொறுப்பதற்கு நேரமில்லை
    இப்போதே எடு வாளை என்று புறப்பட்ட வீரன் வாழி வாழி

    சமர்க்களம் என்ன சாப்பாட்டுப் பந்தியா
    சம்மணம் இட்டு அமர்ந்து உண்டு களிக்க?
    சாவு ஈவு இரக்கமின்றி விளையாடும்
    சதிராட்டத் திடல் சற்றே அயர்ந்தால் பறந்திடுமுயிர்

    ஈட்டி முனை முன் மார்பு காட்டும் போர்முனை அல்ல இது
    இலத்திரனியல் பொறிகளுடன் ஒரு மரண விளையாட்டு
    எறிகணைகள் சீறிச் சிரித்திடும்
    ஏவுகணைகள் மாறி மாறி மறித்திடும்

    விரி வானில் திரிகின்ற வான்கலங்கள்
    வெறிகொண்டு திரிகொளுத்தி வீசி எறிந்த
    வெடிகுண்டால் விண் அதிரும் மண் நடுங்கும்
    வெடித்துச் சிதறியது குண்டுகள் மட்டும் அல்ல அமைதியும் தான்!

    வென்றால் வெற்றிப் புகழ்மாலை
    வீழ்ந்தால் புகழொடு பூமாலை
    வென்றாலும் சென்றாலும் வீரனுக்கு
    ஈன்ற தாய்நாடு காப்பதே முதல் வேலை

    பைந்தமிழ்ச் சொல்லெடுத்து நல்ல பாமாலை தொடுத்திருக்கும் கவி வலவர்களுக்கு என் பாராட்டு!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்ந்தெடுத்திருப்பது…

    தாய் மனம்!

    பெற்றவள் விட்டுச்சென்ற
    முதல் வருடத் திதி!

    பிண்டங்கள் கரைத்து
    பிறவியும் வெறுத்து
    சாத்திரங்கள் முடித்து
    கண்ணீரும் துடைத்துக்
    கோயிலினுள் சென்றேன்

    கண்கள் மூடி
    மௌன மொழியினில்
    கதறி அழுகையில்

    தெய்வத்தின் திசையிலிருந்து
    திலகம் அணிவித்தாள்
    எவளோ ஒருத்தி…!

    அக்கணமே
    உணர்ந்தேன் நான்….
    கருவறை கொண்டவை
    எல்லாம் கோயில்கள்தான்!!

    ”மறைந்த அன்னைக்குத் திதி முடித்துக் கோயில் கருவறையில் அன்னையின் நினைவோடு நின்றவேளையில் திலகமணிவித்த மாதொருத்தி எனக்கு உணர்த்தினாள்…கருவறை கொண்டவை அனைத்துமே கோயில்கள்தாம்!” எனத் தெளிவுறும் இளைஞனை கண்முன் நிறுத்தி நம் அகங் குழைத்திருக்கும் திருமிகு. காந்திமதி கண்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

     

    Share