-மேகலா இராமமூர்த்தி

சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட சோமசுந்தர பாரதியார் 1879-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27-ஆம் நாள் எட்டப்பப்பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகவாய் எட்டயபுரத்தில் பிறந்தார்; எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்ரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார்.

இவர்கள் இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்கள் புனைவதிலும் குழவிப் பருவத்திலேயே பெருவிருப்புக் கொண்டிருந்தனர். அச்சமயம், யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லைக்கு புலவர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு அவர் புலவர்களை வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் இருவரும் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் ’பாரதி’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

எட்டயபுரத்திலும் அதைத் தொடர்ந்து நெல்லையிலும் கல்விபயின்ற சோமசுந்தர பாரதியார், பின்பு சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்; அதன்பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ஆம் ஆண்டில் இளநிலை சட்டப்படிப்பை (Bachelor of Law) முடித்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தபொழுது தாமே முயன்று பயின்று தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1905-ஆம் ஆண்டு முதல் 1920-ஆம் ஆண்டுவரை தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார் பாரதியார். விடுதலைப் போராட்டம் எங்கும் வீரியத்தோடு நிகழ்ந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில் விடுதலை வேட்கையால் உந்தப்பட்ட சோமசுந்தர பாரதியும் அவற்றில் பங்கேற்கலானார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905-ஆம் ஆண்டு முதல் 1919-ஆம் ஆண்டு வரை அவரது பெயரை ஐயப்பாட்டுக்குரியோரின் பட்டியலில் வைத்திருந்தது ஆங்கில அரசு.

வ. உ. சிதம்பரனாரின் அழைப்பை ஏற்று “இந்தியன் நேவிகேஷன்” என்னும் சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளராகச் சேர்ந்தார் சோமசுந்தர பாரதியார்.

1937-ஆம் ஆண்டில் இராசகோபாலாசாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது, உயர்நிலைப் பள்ளிகளின் முதல் மூன்று படிவங்களுக்கு (6, 7, 8-ஆம் வகுப்புகள்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்துடைய பாரதியார், இந்தி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார். 1937 செப்டம்பர் 5-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25-ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியை கைவிடக் கோரி, முதலமைச்சர் இராசகோபாலாசாரியாருக்குத் திறந்த மடலொன்றை (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar) தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுப் பலருக்கும் அதனை விநியோகித்தார்.

தமிழகத்தில் ‘ஆரிய-திராவிட’ எதிர்ப்பு அரசியல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டமது. ’கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்’ என்றும், ’கூடாது’ என்றும் சொற்போர் ஒன்று 14.03.1943-இல் சேலத்தில் நடைபெற்றது. ’தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’ என வாதிட்டவர் பேரறிஞர் அண்ணா.  ’கொளுத்தக் கூடாது’ என அண்ணாவின் கருத்தை மறுத்து வாதிட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

அதற்கு அவர் முன்வைத்த காரணங்களாவன:

“ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று; அது தமிழ்நெறியன்று. ஆபாசக் கருத்துக்களை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணைநிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போன்ற ஒரு சிறந்த கவியை நான் கண்டதில்லை. மக்களுக்கு அறிவூட்டுங்கள்; ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள்” என்று தமது கருத்தை யார்க்கும் அஞ்சாமல் ஆணித்தரமாக வெளியிட்டார் நாவலர்.

இளமையிலேயே தமிழிலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். ஆராய்ச்சிகளில் தாம் கண்ட முடிவைத் தம் சொற்பொழிவுகள் வாயிலாகவும் ஆய்வுநூல்கள் வாயிலாகவும் அவர் வெளியிட்டார். 1916 ஆகஸ்டு 16-ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ’தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்னும் தலைப்பில் பாரதியார் ஆற்றிய ஆராய்ச்சிச் சொற்பொழிவு பின்னாளில் அதே தலைப்பில் நூலாக வெளிவந்தது.

தசரதன் நல்லவன்; அவன் உயிருக்கே உலைவைத்த மாபாதகியான கைகேயியே தீயவள் என்று கூறப்படுவதே நம்மனோரின் பொதுவான வழக்கம்.  இவ்வுண்மையை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டதே ”தசரதன் குறையும் கைகேயி நிறையும்” எனும் ஆய்வு நூல். இதில் தசரதனின் குறைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகின்றார் பாரதியார்:

  1. தசரதன், கைகேயியை மணமுடித்த காலத்து, அவளுக்குக் ’கன்யாசுல்கமாக’ (சீதனம்) அயோத்தி நாட்டை அளித்தவன்; அதனால் நாடு பரதனுக்கே உரியது. ஆனால், தசரதனோ, அவனை வஞ்சித்து, இராமனுக்கு முடிசூட்ட முயன்றான்.
  2. சம்பராசுரப் போரின்போது, தான்கொடுத்த வாக்குறுதியைமீறிக் கைகேயியை வஞ்சிக்கத் துணிந்தான்.
  3. மிதிலை மணவிழா முடிந்தபின், காரணம் காட்டாமலேயே பரதனைக் கேகயநாட்டிற்கு அனுப்பிவிட்டான்.
  4. பரதன் சென்றதும், ஆட்சித் துறையில் இராமனை ஈடுபடுத்தினான்.
  5. பரதன் இல்லாத சமயம் பார்த்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் நடத்த முடிவுசெய்தான்.
  6. பட்டாபிடேக அழைப்பினை அனைவருக்கும் அனுப்பியவன், கேகயனுக்கும் அவனிடத்திருக்கும் பரதனுக்கும் அனுப்பாமல் விட்டுவிட்டான்.
  7. பட்டாபிடேக ஏற்பாடுகளைக் கைகேயினிடத்து மட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்.
  8. ஏதுமறியாப் பரதனைத் ’தன் மகன் அல்லன்’ என்றான்.

இவ்வாறு தசரதன்பால் அமைந்துள்ள குற்றங்களை வரிசையாக அடுக்கிச் செ(சொ)ல்லும் நாவலர் பாரதியார், கைகேயினிடத்து அமைந்துள்ள நிறைகள் இவையிவை என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

  1. கைகேயி, மக்கள் நால்வரிடத்தும் வேறுபாடு காணாதவள்.
  2. தன் மகன் பரதனைவிட இராமனித்து அளவற்ற அன்புடையவள்.
  3. கொண்டானையன்றிப் பிற தெய்வம் அறியாதவள்.
  4. போர்க்களத்தும் தன் கணவனைப் பிரிய எண்ணாமல், அவன் தேர்ச்சாரதியாய் இருந்து, தன் இன்னுயிரையும் அவனுக்காகப் பலியிடத் துணிந்தவள்.
  5. தசரதனிடத்து அன்பு பூண்டவள்; ஆனால் அவனுக்குப் பழிவந்திடலாகாது என்பதற்காக வரம் கேட்டவள்.
  6. தன் கணவனுக்காகத் தானே பழி சுமந்தவள்.
  7. ‘தெய்வக் கற்பினள்’ எனக் கம்பரால் பாராட்டப் பெற்றவள்.

இவ்வாறு அதுவரை யாரும் கண்ணுறாத வகையில் தசரதனையும் கைகேயியையும் ஆய்வுக் கண்கொண்டு நோக்கி அரிய உண்மைகளை அறியத் தந்தார் சோமசுந்தர பாரதியார்.

தம் கெழுதகை நண்பரான சுப்ரமணிய பாரதி, ’பாஞ்சாலி சபதம்’ எழுதிப் பாஞ்சாலியின் பெருமையைப் பாருக்கு உணர்த்தியதுபோல், சோமசுந்தர பாரதி, கைகேயியின் பெருமைகளை விளக்கவே ’தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ கூறினார் எனில் பொருந்தும். அவ்வகையில் தமிழிலக்கிய உலகுக்கும், தமிழாய்வுத்துறைக்கும் இந்நூல் ஒரு முன்னோடி எனலாம்.

’திருவள்ளுவர்’ என்னும் தலைப்பில் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல், வள்ளுவர் குறித்துத் தமிழகத்தில் நிலவிவந்த பல்வேறு வெற்றுக்கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாய் அமைந்தது. அதிலிருந்து சில முக்கியமான செய்திகள்:

திருவள்ளுவர் மயிலையில் பிறந்தவர் அல்லர். மதுரையில் அருந்தமிழ் வேளிர் குடியில் பிறந்தவர். பண்டைப் பாண்டியரிடம் உள்படு கருமத்தலைவராக இருந்தவர்.

குறளடியால் அறக்கருத்துக்களைப் பாடி உலகுக்களித்தவர்.

நீதி நூல்களின் தோற்றத்துக்கு அடிப்படை வடமொழி நூல்களே என்றும், வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் எனும் நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு என்று மொழிந்த தமிழறிஞர் மு. இராகவையங்காரின் கருத்தை மறுத்த சோமசுந்தர பாரதியார்,

”ஆரிய தரும சாத்திர மரபு வேறு; தமிழற நூன்மரபு வேறு. இரண்டையும் நன்குணர்ந்த வள்ளுவர் தமிழ் மரபு வழுவாது, பொருளின் பகுதிகளான அகப் புறத்துறை அறங்களை  மக்கள் வாழ்க்கைமுறைக் கேற்றவாறு வடித்தெடுத்துத் தந்திருக்கும் அரிய தமிழ்நூல் வள்ளுவம்.

தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகும் என்பது வெள்ளிடைமலையாம்” என்றார்.

தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார் நாவலர் பாரதியார். அவ்வுரைநூல் ’தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை’ எனும் தலைப்பில் 1942-ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இவையன்றிச் சேரர் தாயமுறை, சேரர் பேரூர் போன்ற ஆராய்ச்சி நூல்களையும் சோமசுந்தர பாரதியார் எழுதியுள்ளார். வடமொழியில் காளிதாசன் எழுதிய ’மேக சந்தேசம்’ எனும் நூலை அடியொற்றித்  தமிழில் அவர் எழுதியதே ’மாரி வாயில்’ எனும் கவிதை நூலாகும். நாவலரின் நற்றமிழ்க் கவிப் புலமைக்குக் கட்டியங்கூறும் இந்நூலில் இடம்பெற்றுள்ள  அழகிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிது!

”தமிழினிய தெய்வதமே மொழிகள்குலத் தனிவிளக்கே
தகவெழில்மெய் சீர்த்த சொல்லின்
அமிழ்துவிழைந் தடுத்தபல புலவரெலாம் அசையலையைக்
கடைந்தபொழு தழகி னோங்கும்
துமியினிடை எழுந்தொளிரும் செல்விஅறி வெனுமலவன்
துணைவியருள் முதல்வி தூய்மை
கமழ்கவிதை உலகுபடை கவிஞருளம் களிவிக்கும்
காதல்வளர் கன்னி வாழி!”

இளமையிலேயே சமூகச் சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார் சோமசுந்தர பாரதியார். ஆதலால் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தம்மைப் பிணைத்துக்கொண்டார். சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராகவும் செயற்பட்டார். அப்பணியின் உச்சமாக, 1933 மே 13-ஆம் நாள் மதுரைக்கு அருகிலுள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் தொடக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார். அதன் தொடக்க விழாவில் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.

வழக்கறிஞராய்ப் பல்லாண்டுகள் பணிபுரிந்த பாரதியார்,  1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1938 ஏப்ரல் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார். முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார், வித்வான் க. வெள்ளைவாரணனார், திறனாய்வறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் போன்றோர் இவரிடம் தமிழ்பயின்று பின்னர் நானிலம் போற்றும் நற்றமிழ் அறிஞர்களாய்ச் சிறந்தனர்  என்பது கருதத்தக்கது.

பெரும்புலமையும் பேரறிவும் நாநலமும் வாய்க்கப்பெற்ற சோமசுந்தர பாரதியாருக்கு ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் 1944ஆம் ஆண்டு நாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

மதுரை திருவள்ளுவர் கழகத்தார் அவருக்கு 1954-ஆம் ஆண்டில் கணக்காயர் பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் வெள்ளிவிழாவில் அவருக்கு மதிப்புறு முனைவர் (Honorary Doctor) பட்டம் அளிக்கப்பட்டது.

பேச்சாலும் எழுத்தாலும் மட்டுமன்றிச் செயலாலும் தமிழ்சிறக்கப் பாடுபட்டவர் ’இளசை கிழாரான’ நாவலர் சோமசுந்தர பாரதியார். தாய்த்தமிழுக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அதனை அஞ்சாது எதிர்த்து நின்ற தீரர் அவர். தமிழ்ப் புலவர்களைப் போற்றிக் கொண்டாடி அவர்கட்கு வேண்டுழிப் பொருளுதவி செய்தவர். ஆய்வு நெறிமுறைகள் இவை எனக் காட்டித் தம் மாணாக்கரிடையே ஆய்வு மனப்பான்மையை ஊக்குவித்துத் திறனாய்வுத்துறையை வளர்த்த சான்றோர். ஆரிய மரபு இது, தமிழ் மரபு இது என்று தெள்ளிதின் விளக்கித் தமிழ்மரபு காக்க வலியுறுத்தியவர். இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன்முதலில் எதிர்த்த பெருமைக்குரியவர். தமிழிலக்கியத்துக்கும், தமிழாராய்ச்சிக்கும் புத்தொளி பாய்ச்சிய  வித்தகர். இத்துணைப் பெருமைகட்குச் சொந்தக்காரரான நாவலர் பாரதியார், 1959-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் நாள் தம் எண்பதாம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

’தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ? ’என்று பாவலர் சுப்ரமணிய பாரதிக்குப் பாவேந்தர் சூட்டிய புகழாரம் நாவலர் சோமசுந்தர பாரதிக்கும் பொருந்துவதாகும்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. நாவலர் பாரதியார் – நற்றமிழ் ஆய்வுகள் – 1
    தொகுப்பாசிரியர் ச. சாம்பசிவனார், ம. சா. அறிவுடைநம்பி.
  2. https://ta.wikipedia.org/wiki/ சோமசுந்தர_பாரதியார்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.