கிழக்கு கோதாவரி பீமேசுவரர் கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்
-சேஷாத்ரி ஸ்ரீதரன்
ஆந்திர மாநிலம் கோதாவரியின் கிழக்குக் கரையில் அமைந்த திரக்ஷாரமம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காகிநாடாவிற்கு 28 கி.மீ. தொலைவில்அமைந்துள்ளது. இங்குள்ள பீமேசுவரர் கோயிலில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தே சிங்கள மன்னர் நல்கிய கொடை பற்றிய இரு தமிழ்க் கல்வெட்டுகள் இங்கு விளக்கப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் தென்சுவரில் 4 & 5 தூண்களுக்கு இடையே கீழிருந்து இடமாக 2 ஆம் கற்பலகையில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை(S.I.I. IV ல் எண் 1246) உள்ளன. இக்கோவிலில் 400 மேற்பட்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இக்கால் இக்கோவில் நடுவண் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்காரணமாக உள்ளே புல்தரையும் தோட்டமும் அமைந்து நல்ல முறையில் பேணப்பட்டு வருகின்றது.
கல்வெட்டுப் பாடம்:
- ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 43 _ _ _ _
- க தேவர் பொன் கொண்டருளி சிங்களப்பிடாரர்க்கு வலிச _ _ _ _
- பரிசாவது இது இறையிலி தவிர்வதாகவும் அந்தராயம் உட்பட்ட இறை த(விர்)
- வ(தா)கவும் மஹேஸ்வர மடத்திலே முப்பது கலம் உண்பதாகவும் தம்முடை
- ய திருக்கையாலே எழுத்திட்டுத் தந்தது. இதுக்குப் (பதினைம்ப
- தப்) பதினைம் பலத்தால் பதினைஞ்சு கலமும் பத்துப் பசுவும்
- இரண்டு அடிமையும் சத்தராயவர்கம் நிற்கக் கடவதாக. இத்தன்ம
- ம் அழிவு பண்ணுவான் தங்கள் அம்மைய்க்கு த் தானே மின்னாளன். இத்த
- மம் நட(ப்பி)த்தான் ஸ்ரீபாதம் இரண்டும் சிங்களப்பிடாரனேன் த
- லை மேலன லிகிதம். தாகரேமிசுராசாரி அயன வீரராஜேந்த்ர சோழ ஆ
- சார்ய:
சொற்பொருள்:
இறையிலி தவிர்வதாக – வரிச்சலுகை நீங்கியதாக; இறை தவிர்வதாக – வரி நீங்குவதாக; நிற்க –இருக்க; மின்னாளன்- பாலுறவில் துணைவன்; அயன – ஆயினவர், ஆனவர், ஆகியவர்; தெலுங்கில் அய்ன.
கல்வெட்டு விளக்கம்:
முதற் குலோத்துங்க சோழனின் 43 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1113) போது நிலதானம் செய்து (கல்வெட்டு சிதைந்துள்ளதால் தெளிவாக பொருள் கொள்ள இயலவில்லை) சிங்களப்பிடாரர் இறையிலி நீங்குவதாகவும் அந்தராயமான உள்நாட்டு வரி தவிர்வதாகவும் சொல்லியதோடு மகேசுவர மடத்தில் உண்பதற்கு முப்பது கலம் அளவிற்கு நெல்லை அளிக்கத் தம் கையாலே கையொப்பமிட்டுத் தந்தார். பதினைம்பலத்தால் அளந்து பதினைந்து கலம் நெல்லும் 10 பசுவும் 2 அடிமையும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக விட்டார். இந்தக் கொடையை அழிப்பவன் தன் அன்னைக்குத் தானே கலவித்துணைவன் ஆகுவன். இந்தக் கொடையைத் தடையின்றி நடப்பிப்பான் கால் இரண்டும் சிங்களப்பிடாரன் தலைமேல் எனக் கூறி மடல் எழுதினான். இதை கல்வெட்டாய் பொறித்தவன் அயன வீர்ராஜேந்திர சோழ ஆசாரி எனபவன்.
பொதுவாக இறையிலி தருவார்கள் ஆனால் இங்கு அது நீங்கப்பட்டு இறை தண்டப்படவேண்டும் என்பது போல் இருப்பது குழப்பம் அளிக்கின்றது. தவறான சொல்லாட்சியாகத் தெரிகின்றது. எழுத்து சிதையாமல் இருந்திருந்தால் தெளிவான விடை கிட்டிருக்கும். இதில் 2 அடிமையும், 10 பசுவும் தரப்பட்டது விளக்கு எரிப்பதற்காகவா? கல்வெட்டில் செய்தி முழுமையாக, சரியாக, தெளிவாக இல்லாமல் உள்ளது.
கல்வெட்டுப் பாடம்:
- (ஸ்வஸ்திஸ்ரீ) கொலோத்துங்க சோழ (தேவர்)கு யாண்டு 4(9 ஆவ)
- து நாள் 70 கங்கைகொண்ட சோழ வளநாட்டு குட்டவாடி நாட்டுப் பெரிய
- தாக்கரம்பை பீமீஸ்வரம் உடைய ம(ஹாதேவர்க்கு சூர்)(ய்)ய கிராண நிமி(ர்)த்தத்து வீ
- ழத்து விக்கிரம (பாஹு)க்கள் பிரதானி உய்யவந்தான் திருவண்ணாமலையன் வி
- ஜயபாஹு மாசாத்து
- நாயன் _ _ _ _ கோதாவிரிக் கீழ்கரைக் கொண்டிகரு
- டு தாக்கரம்பை ந(ரே)ந்த்ர ஈசுரம் உடைய மஹாதேவர் கோயில் சமீபம் தீர்
- த்தக் கரையில் மேற்படியான் பிரதிஷ்டித்த பன் மாஹேஸ்வரன் மடத்தில் உ
- ண்ணக் கடவ தபஸ்யர் பதினை(ய்)வரும் இவர்களுக்கு அமுது செய்யக் க
- லம் பதினைஞ்சும் சட்டுவம் ஒன்றும் ஆக உருப்பதினாரினால் நிறை நூ
- ற்று முப்பத்தேழு பல வரையும் பெண்ணாடினம் ஒன்றும் குட்டாவாடி நா
- ட்டு ஊருள்இடப்பள்ளி அளம் வளையிற் சுற்று முப்பது வட்டி நிலமும் நகர
- மும் _ _ _ _ தோட்டமும் _ _ _ _ _ த செல்கையுட்பட அந்தராயமும்
- _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
பகுதி 2
- ப் பத்தரத்தத்தம் சந்தித்தவர் செய்யவும் உண்ணவு
- ம் மடம் அழிவு செய்யும் திருக்காளத்தி உடையான் ஆன பலவிளக்குப்
- பரிசாரர் வசம் இட்டோம்// ஸ _ _ _ அ ஸம் நை பஹுபிர் வஸுதா
- தத்தா ப
சொற்பொருள்:
தாக்கரம்பை – இடப்பெயரான திரக்ஷாரமம் தமிழில் இப்படி குறிக்கப்பட்டுகின்றது; பிரதானி – முதன்மை அரசலுவலர்; தபஸ்யர் – சிவயோகியர்; சட்டுவம் – கரண்டி; பெண்ணாடினம் – பெண் ஆடு; அளம் – உப்பளம்; வளை – சூழ்ந்த இடம்; பத்திரதத்தம் – ஓலைஆவணம் தருதல்; சந்தித்தவர் – சந்திராதித்தவர் வரை
கல்வெட்டு விளக்கம்:
முதற் குலோத்துங்க சோழனின் 49 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1119) போது கிழக்கு கோதாவரியான கங்கைகொண்ட சோழவளநாட்டில் குட்டவாடி நாட்டில் உள்ள பெரிய தாக்கரம்பை ஊரில் கோயில் கொண்ட பீமேசுவரர்க்கு சூரியகிரகணம் காரணமாக ஈழத்து விக்கிரமபாகுவின் முதன்மை அரசலுவலர் உய்யவந்தான் திருவண்ணாமலையான் விஜயபாகு மாசாத்து நாயன் என்பான் கோதாவரியன் கிழக்குக்கரையில் கொண்டிக்கருடு தாக்கரம்பை நரேந்திரேசுவரம் இறைவர்க்கு அண்மையில் ஆற்றங்கரையில் மேற்படியானவர் நிறுத்திய பன்மாகேசுவரர் மடத்தில் பதினைந்து சிவயோகிகள் உண்பதற்கு பதினைந்து கலம் நெல்லும் கரண்டி ஒன்றும் ஆக பதினாறு பேருக்கு 137 பலம் வரையும், பெண் ஆடு ஒன்றும், குட்டவாடியில் இடப்பள்ளியில் உப்பளம் சூழ்ந்த இடத்தில் சுற்றியுள்ள 30 வடி நிலமும், நகரமும், தோட்டமும் எல்லா வரியும்நீக்கிக் கொடுத்தார். இந்த தருமம் சந்திராதித்தவர் வரை செல்க எனவும் இவற்றையும் மடத்தையும் அழிப்பவன் பாவத்திற்கு உட்படுவான் என்றும் குறிக்கவருவதை புரிந்து கொள்ள முடிகின்றது. பலவிளக்கு பரிசாரகர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 13 ஆம் வரிக்கு பின் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதனால் பொருளை சரியாக விளக்க முடியவில்லை. பகுதி இரண்டு வேறு ஒரு கல்வெட்டு செய்தி ஆகலாம். பகுதி 2 முழுமையாக செய்திகளைக் கொண்டிருக்கவில்லை. அது வேறு ஒரு கல்வெட்டுச் செய்தி ஆகலாம்.
விக்கிரமபாகு ஈழத்தில் பொலன்நறுவையை கி.பி. 1111 – 11132 வரை ஆண்ட சிங்கள மன்னன். இவனது முதன்மை அலுவலர் வழங்கிய கொடைகளைப் பார்க்கும் போது இவன் சார்பாகவே அவன் வழங்கியது என்று தெரிகின்றது. பீமேசுவரமும் நரேந்திரீசுரமும் ஒரே ஊரில் அமைந்த இரு வேறு கோவில்கள் போலும். மேல் இரண்டு கல்வெட்டும் சிங்கள ஆட்சியாளர் தொடர்புடையது என்பது தெளிவு. ஒரு கோவிலுக்கு யார் விரும்பினாலும் பொருளாக எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்யலாம் ஆனால் வேறு ஆட்சியாளர் ஆளும் நிலவரம்பில் சென்று இன்னொரு ஆட்சியாளர் அந்தராயம் உள்ளிட்ட வரிவிலக்கு தரமுடியுமா? அந்த அதிகாரம் எப்படி வந்தது? என்பதே எனது விளங்காப் புதிராக உள்ளது.
பார்வை நூல்: Ephigraphica Andhrica Vol I
https://eastgodavari.nic.in/tourism/temples/lord-bhimeswara-swami-temple-draksharama/
மேலும் படிக்க https://groups.google.com/d/msg/vallamai/tzcufKVU9Fg/bYzPhsQTBgAJ