நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 212-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

வானில் அழகாய் அணிவகுத்துச் செல்லும் ஃபிளமிங்கோக்களை (Flamingos) அருமையாய்ப் படம்பிடித்து வந்திருக்கின்றார் குருசன். இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 212க்கு அளித்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!

சிறகு விரித்துப் பறக்கும் இந்த ஃபிளமிங்கோக்களின் கால்கள் செங்கால் நாரையின் கால்களை ஒத்திருக்கக் காண்கின்றேன். இக்காட்சி, செங்கால் நாரையின் கால்களைப் பிளந்த பனங்கிழங்குக்கு ஒப்பிட்ட சத்திமுத்தப் புலவரின் பாடலை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்…

இனி, இப்படக்கவிதைப் போட்டியில் பங்குபெற வந்திருக்கும் ஒரே கவிஞரான திரு. ஆ. செந்தில் குமாரை, கவிதை படைக்கக் கனிவோடு அழைக்கின்றேன்.

பிளமிங்கோ பறவைகள்…

கால்கள் நீண்டிருக்கும்.. கனத்ததொரு அலகிருக்கும்.. எமக்கு
நெடுந்தூரம் பறப்பதற்கு.. நெஞ்சுரமும் மிகுந்திருக்கும்..!!
சிறகுகள் விரித்திடுவோம்.. சீராகப் பறந்திடுவோம்.. நாங்கள்
சீரான தட்பவெப்பப் பகுதிக்கு விரைந்திடுவோம்..!!

அணிவகுத்து ஆர்ப்பரித்து.. ஆயிரம் மைல் கடந்து.. நாங்கள்
துணிவுடனே சென்றிடுவோம்.. தூரதேசம் அடைந்திடுவோம்..!!
கடவுச் சீட்டின்றி.. இடப்பெயர்ச்சி செய்திடுவோம்.. நாங்கள்
நுழைவாணை ஏதுமின்றி.. கடல் தாண்டிப் பறந்திடுவோம்..!!

அழகாய்க் கூடமைத்து.. சிலகாலம் தங்கிடுவோம்.. உகந்த
சூழல் வந்ததுமே.. சொந்த ஊர் திரும்பிடுவோம்..!!
விடுமுறை எமக்கில்லை.. விருப்ப ஓய்வு ஏதுமில்லை.. நாங்கள்
இருக்கின்ற காலம்வரை.. இரை தேடி அலைந்திடுவோம்..!!

நீர்நிலைகள் நிலவளங்கள்.. நல்லபடி போற்றிடுவீர்.. நாங்கள்
வலசை போவதற்கு.. வாழ்வாங்கு வாழ்வதற்கு..!!
கடல்வளங்கள் காத்திடுவீர்.. புவிவெப்பம் குறைத்திடுவீர்.. எம்
இனமும் தழைத்திடணும்.. பூமியெங்கும் நிலைத்திடணும்..!!

விடுப்பின்றி விருப்போடு உழைத்து, நுழைவாணை ஏதுமின்றி விரிவானைக் கடக்கும் இந்த ஃபிளமிங்கோ பறவைகள், தாம் வலசை போவதற்கும், வாழ்வாங்கு வாழ்வதற்கும் வசதியாக நீர்நிலைகளை, நிலவளங்களைக் காத்திடுங்கள் என்று மாந்தர்க்குக் கூறும் பொருள்பொதிந்த அறிவுரையைக் கவிதையாக்கியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    அகவை பத்து ஆகியிருக்கும் வல்லமைக்கு வாழ்த்துகள். இத்தருணத்தில் இக்கவிதைக்காக என்னையும் அகம் மகிழ்ந்து வாழ்த்திய நடுவர் அவர்கட்கு நன்றி. அன்னைத் தமிழை அகிலமெங்கும் கொண்டு சேர்க்கும் வல்லமையின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க