நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

42. கேள்வி

குறள் 411:

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை

காதால கேட்டுப்பெறுத நல்ல விசயங்களே சிறப்பான சொத்து. அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

குறள் 412:

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

காதுக்கு மகிழ்ச்சி தருத விசயங்கள் ங்குத உணவு கெடைக்காம போவுதப்போ தான் வயித்துக்கும் கொஞ்சூண்டு சாப்பாடு கொடுக்கப்படும்.

குறள் 413:

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

கேள்வி ஞானம் ங்குத செவி உணவு கெடச்சவங்க பூமி ல வாழ்ந்தாலும் யாகத் தீ லேந்து பெறுத நெய்யயும் மத்ததயும் சாப்பிடுத தேவ மக்களுக்கு சமம் தான்.

குறள் 414:

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை

நூல்களப் படிக்கலேன்னாலும் படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிடணும். அது நெருக்கடி வருதப்போ அவனுக்கு ஊணிக்கிட்டு நடக்க ஒதவுத கொம்பு கணக்கா தொணயா நிக்கும்.

குறள் 415:

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

வழுக்குத நெலத்துல நடக்க ஒதவுத ஊணிக்கம்பு கணக்கா ஒழுக்கம் ஒடையவுகளோட புத்திமதி சமயத்துல வாழ்க்கையில ஒதவும்.

குறள் 416:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

நல்லத எந்த அளவு கேட்டுக்கிடுதோமோ அந்த அளவு அது பெருமயக் கொடுக்கும்

குறள் 417:

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

எதையும் நுணுக்கமா சோதிச்சு அறிஞ்ச அறிவாளிங்க சிலதப் பத்தி தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டிருந்தாலும் அப்பமும் கூறுகெட்டவன் கணக்கா பேச மாட்டாக.

குறள் 418:

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

கேக்குத தன்ம இருந்தாலும் நல்லவங்க பேச்ச கேக்காதவனோட காது செவிட்டுக் காது தான்.

குறள் 419:

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது

கேள்வி ஞானம் இல்லாதவுக அடக்க ஒடுக்கமா பேசுதவங்களா இருக்கது சிரமந்தான்.

குறள் 420:

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்

கேட்டுப் பெறுத சுவைய ஒணந்துக்கிடாம வாயால சாப்பிடுதப்போ கெடைக்க சுவைய மட்டும் ஒணருதவங்க இருந்தா என்ன. செத்தா என்ன.

(அடுத்தாப்லயும் வரும்……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *