பத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

அண்ணாகண்ணன்

உங்கள் நல்லாதரவோடு வல்லமை மின்னிதழ், 2019 மே 16 அன்று பத்தாம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த ஒன்பது ஆண்டுகளில் வல்லமை, 15,650 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,178 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1,400 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம். வல்லமையின் முதுகெலும்பாக நின்று துணை புரியும் ஆமாச்சு, ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு நன்றிகள்.

தமிழில் ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முதல் இதழ் (First Peer Reviewed Research Journal in Tamil) என்ற பெருமையை வல்லமை பெற்றுள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் கூடிய முதல் ஆய்வுக் கட்டுரையை 2019 ஜனவரி 4ஆம் தேதி வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் இது வரை 31 கட்டுரைகள் உள்பட, 254 ஆய்வுக் கட்டுரைகளைக் கடந்த ஓராண்டில் வல்லமை வெளியிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகளிலிருந்து இவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள் (Guidelines), பின்பற்ற வேண்டிய ஆய்வு அறங்கள் (Ethics Policy), மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy), பதிப்பு நெறிகள் (Publication Policy) ஆகியவற்றை அமைத்துள்ளோம். இவை, ஆய்வாளர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டும்.

வல்லமையின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளோம். தகுதியும் தரமும் வாய்ந்த மதிப்பாய்வுக் குழுவினை அமைத்துள்ளோம். ஆற்றல் வாய்ந்த இந்தப் பன்னாட்டுக் குழுவினர், தமிழ் ஆய்வின் மதிப்பினைப் பன்மடங்கு உயர்த்துவார்கள் என நம்புகிறோம்.

இந்த ஆண்டில் வல்லமை மின்னிதழ், பல முறைகள் ஸ்பாம் தாக்குதலுக்கு உள்ளானது. ஓரிரு முறைகள் ஹேக் செய்யப்பட்டது. சில தினங்கள் இதனால் தளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டது. நம் தொழில்நுட்ப நண்பர்களின் உதவியைத் தளத்தை மீட்டெடுத்துள்ளோம். எனினும் வல்லமைக்கு வலுவான சர்வர், தொடர்ச்சியான கண்காணிப்பு, பராமரிப்பு தேவையாக உள்ளது. தமிழ், புத்தாக்கம், கல்வி, ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க, மேலும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு உங்கள் நிதியாதரவை எதிர்நோக்கியுள்ளோம்.

வல்லமை, இலவச மின்னிதழ். படிப்பதற்குக் கட்டணமில்லை. ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு, ஆய்வாளர்களிடமும் நாம் கட்டணம் பெறுவதில்லை. எனவே இதழைத் தொடர்ந்து நடத்திட, உங்கள் நன்கொடைகளை வரவேற்கிறோம்.

வல்லமை குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். வல்லமையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

தகுதிக்கும் திறமைக்கும் மதிப்பு உண்டு என்பதை வல்லமை உறுதி செய்கிறது. பணம் கொடுத்துக் கட்டுரைகளை வெளியிடும் போக்கினை மாற்றும் வகையில், புதுப் பாதை அமைக்கிறது. இந்தப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். புதியதோர் உலகம் செய்வோம்.

7 thoughts on “பத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

 1. மிக அருமையான பணி! உங்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும், படைப்புகள் நல்கி ஆக்கம் தந்த படைப்பாளிகளுக்கும், ஆர்வம்மிகு வாசகர்களுக்கும் பெரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து செழித்து வளர்க, நலம் பெருக்குக!

 2. வல்லமை மின்னிதழ் மென்மேலும் பல சிறந்த படைப்புகள் உருவாக்க வாழ்த்துக்கள்.

 3. பிறந்தநாள் வாழ்த்துகள், வல்லமை! இன்றுபோல் என்றும் செழிப்பாக, பலருக்கும் உகந்தவளாக இருக்க வாழ்த்துகள்.

  நிர்மலா ராகவன்

 4. பத்தாண்டு நிறைவு பெற்ற
  முத்தமிழ் வலை இதழ்
  வல்லமை
  இத்தரணியில் தமிழர் படிக்க
  இலவசமாய் உள்ளது.
  இனியதாய் உள்ளது.
  இயல் இசை, நாடகம்.
  விஞ்ஞானம்
  ஆய்வுக் கட்டுரை
  வெளியாகும்.
  புதுமை வலை இதழ்.
  தமிழ் அன்னைக்குச் சூடும்
  முத்து மணியாரம் .

  சி. ஜெயபாரதன்

 5. ஆய்வாளர்களுக்கும், வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் சிறந்த முறையில் கைகொடுக்கும் வல்லமை மேலும் வளர்ச்சியடைந்து வெற்றி சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்.

 6. வல்லமை தந்திடுவாய் வல்லமையே
  மனமகிழ்ந்து கூறுவேன் என்நன்றியை
  சொல்லுக் குருவேற்றிப் பலவகையாய்
  சுவைததும்பும் விந்தைகள் நீபடைத்தாய்
  நல்லன யாவையுமிங் குகொணர்ந்தாய்
  நல்லறிஞர் கவிஞர்கள் மூலமாக
  வல்லமை பல்லாண்டு வாழவேநான்
  மாதவனை கேசவனை வணங்குகிறேன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க