வல்லமையின் மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy)

முனைவர் அண்ணாகண்ணன்

வல்லமைக்கு வரும் ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பாய்வு செய்திட, சில நடைமுறைகளை வகுத்துள்ளோம். இவை, மதிப்பாய்வு செய்யும் ஆய்வறிஞர்களுக்கு உரியவை என்றாலும், இவற்றைப் பொதுப் பார்வைக்கு வைக்கிறோம்.

வல்லமையின் மதிப்பாய்வு நெறிமுறைகள்

 • ஆய்வு நெறிமுறைகளின்படி கட்டுரை முழுமையாக அமைந்துள்ளதா என மதிப்பிட்டு, சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
 • ஆய்வாளரின் கல்வி, பணி, அனுபவம், வயது, விருதுகள் போன்றவற்றைக் கருதாமல், ஆய்வுக் கட்டுரையின் தரத்தை மட்டுமே நோக்குதல் வேண்டும்.
 • ஆய்வாளர் நம் நண்பர் அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவர், இன்னார், இனியார் எனப் பாராது, ஆய்வின் தர மதிப்பீட்டை எந்தச் சாய்வுக்கும் இடமின்றி, நடுநிலையாக அளித்தல் வேண்டும்.
 • ஆய்வு குறித்த உங்கள் மதிப்பீட்டை ஆய்வாளர் மனம் கோணுவாரோ, வருந்துவாரோ என்று தயங்காமல், துணிவுடன் எடுத்து வைக்க வேண்டும்.
 • ஆய்வுக் கட்டுரையில் உள்ள பிழைகளைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்ட வேண்டும்.
 • நிறையப் பிழைகள் இருக்கும் பட்சத்தில், இன்னின்ன வகைப் பிழைகளைத் திருத்தி அனுப்பக் கோருமாறு ஆசிரியருக்கு எழுத வேண்டும்.
 • எந்தக் காரணம் கொண்டும் ஆய்வாளரை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டாம். இன்னாருடைய ஆய்வுக் கட்டுரை உங்கள் மதிப்பீட்டுக்கு வந்துள்ளது என்று யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது.
 • ஆய்வின் தலைப்புக்கும் கருப்பொருளுக்கும் கட்டுரைக்கும் உரிய தொடர்பு உள்ளதா எனக் கவனிக்க வேண்டும்.
 • ஆய்வு முடிவுகள் புதியனவாகவும் வலுவானதாகவும் இருக்கின்றனவா எனப் பார்த்தல் வேண்டும். கட்டுரையில் அவற்றுக்கு உரிய சான்றுகள் உள்ளனவா என்றும் சரிபார்க்க வேண்டும்.
 • வளவளவென்று நீர்த்துப் போன நடையில், போதிய சான்றுகள் இன்றி, கருத்துகளாக, தரவுகளாக உள்ள கட்டுரைகளைத் தயவு பாராமல் நிராகரியுங்கள்.
 • தரவுத் தொகுப்போ, தகவல் தொகுப்போ ஆய்வு ஆகாது. அந்தத் தகவல்களை ஆராய்ந்து, புதியன காணும் முனைப்பு, ஆய்வாளரிடம் இருத்தல் வேண்டும். இதற்கு மாறாக உள்ள கட்டுரைகளை ஏற்க வேண்டாம்.
 • ஆய்வுக் கட்டுரைகள், பிற ஆய்வுகளைத் தழுவியோ, அப்படியே படியெடுத்தோ, மொழிபெயர்த்தோ அமையாத வண்ணம், அந்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, கருப்பொருள், ஆசிரியர் பெயர் ஆகியவற்றை இணைத்தில் தேடிப் பாருங்கள். ஐயத்திற்கு இடமளிக்கும் கட்டுரைகளின் மீது பொறுமையாக முடிவு எடுங்கள். அவசரம் வேண்டாம்.
 • ஆய்வுக் கட்டுரையில் இதே போன்ற தலைப்பில் முன்னர் வெளியான கட்டுரைகளை வேறு யாரும் எழுதியுள்ளனரா, அவ்வாறு எழுதியிருந்தால், அவற்றைப் பற்றிய பின்விவரம், தொடர்ச்சி ஆகியன கட்டுரையில் சுட்டப்பெற்றுள்ளதா என்றும் பாருங்கள்.
 • ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலித்து, கீழ்க்கண்ட மூன்று முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியருக்குத் தெரிவியுங்கள்.
*வெளியீட்டுக்கு ஏற்புடையது,
*கேள்விகளுக்குப் பதில் / சான்றுகள் / திருத்தங்கள் தேவை,
*வெளியீட்டுக்குத் தகுதி பெறவில்லை
image.png
 • இந்த மூன்று முடிவுகளில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கு உங்கள் மதிப்பீட்டுக் குறிப்பினை ஓரிரு பத்திகளில் சுருக்கமாக எழுதுங்கள். தேர்வு பெற்ற கட்டுரை எனில், உங்கள் மதிப்பீட்டுக் குறிப்பு, ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review) என்ற தலைப்பில் (ஆய்வறிஞர் பெயர் இல்லாமல்), கட்டுரையுடன் இணைத்து வல்லமையில் வெளியாகும். இதற்கென உருவாக்கியுள்ள படிவத்தைப் பயன்படுத்துங்கள்.
 • குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைக்குப் புறநிலை ஆய்வறிஞரின் கருத்தினைப் பெறலாம் என விரும்பினால், யாரை அணுகலாம் எனத் தொடர்பு விவரங்களை ஆசிரியருக்கு அனுப்புங்கள்.
 • உங்களுக்கு அனுப்பும் ஆய்வுக் கட்டுரை, உங்களுக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத துறையில் அமைந்திருந்தால், அதனை ஆசிரியருக்குத் தெரிவித்து, வேறு ஒருவருக்கு அனுப்புமாறு கூறலாம்.
 • பணி நெருக்கடி காரணமாகவோ, பயணங்களின் காரணமாகவோ உங்களால் ஏதேனும் சில தினங்கள் பங்காற்ற இயலாது எனில், அதனை ஆசிரியருக்குத் தெரிவியுங்கள்.
 • மதிப்பாய்வுக்கு வரும் கட்டுரைகளைப் பரிசீலித்து, மூன்று நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் முதல் கட்ட மதிப்பாய்வு முடிவினைத் தெரிவிக்க வேண்டுகிறோம். கட்டுரையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், உங்கள் ஆய்வறிஞர் கருத்துரையை மேலும் ஏழு நாட்களுக்குள் அனுப்பலாம்.
 • குறிப்பிட்ட மதிப்பாய்வுகளுக்கு அப்பால், பொதுவாக ஆய்வுக் கட்டுரைகளின் உள்ளடக்கம், போக்கு, தரம் குறித்த உங்கள் கருத்துகளை அவ்வப்போது கட்டுரைகளாக எழுதலாம்.
 • மதிப்பீட்டாளர் தமது ஆய்வுக் கட்டுரையை வல்லமையில் வெளியிட விரும்பினால், அதனை ஆசிரியரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர் தேவைப்பட்டால், வேறு மதிப்பீட்டாளருக்கோ, புறநிலை அறிஞருக்கோ அனுப்பிக் கருத்துக் கேட்டு முடிவினை அறிப்பார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *