காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 8
-மேகலா இராமமூர்த்தி
இந்தியப் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியைக் கிட்டச்செய்த இருபதாம் நூற்றாண்டு அவர்களைப் பொறுத்தவரையில் போற்றத்தக்க நூற்றாண்டே. படிப்பறிவும் எழுத்தறிவும் பெண்களின் சிந்தனையைச் செப்பம் செய்தன; ஆதலால் பெண்களும் ஆண்களைப் போலவே அதிக அளவில் படைப்புக்களை உருவாக்கத் தொடங்கினர்.
மரபுசார் கவிதைகளே கோலோச்சிவந்த நிலைமாறி, கட்டற்ற புதுக்கவிதை (free verse), கட்டுரை, சிறுகதை, புதினம் என்று இலக்கியம் பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்கியதும் இக் காலகட்டத்திலேயே.
தமிழின் புதின இலக்கிய வரலாற்றைத் தொடங்கிவைத்த பெருமை முன்சீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தைச் சாரும். எழுதுகோல் ஆண்களின் கைகளுக்கு மட்டுந்தான் வயப்படுமா என்ன? எம்மாலும் பழுதற எழுதமுடியும் என்று எழுதுகோல் பிடித்த வை. மு. கோதைநாயகி அம்மையார் புதினம் எழுதி ’முதல் பெண் புதின எழுத்தாளர்’ எனும் பெருமையைத் தமக்கு உரித்தாக்கிக் கொண்டார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த இவ் அம்மையார் முறையாகத் தமிழ்க்கல்வி பயிலவில்லை; எனினும் தமிழில் எழுதத்தெரிந்த தம் தோழி பட்டம்மாள் என்பவரின் உதவியுடன் கதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதிவந்தார். பின்னர், தாமே தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு ஆக்கங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றார்.
இவரது முதல் நாடக நூலான ‘இந்திர மோகனா’ 1924-இல் வெளிவந்தது. இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட பல பத்திரிகைகள் இந்நூலைப் பாராட்டி விமரிசனம் எழுதின. மேடைகளிலும் இந்நாடகம் அரங்கேறியிருக்கின்றது. முதல் நாடகமே பெருவெற்றி பெற்றதால், மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கம் பிறந்தது கோதைநாயகி அம்மையாருக்கு. தொடர்ந்து, ‘அருணோதயம்’, ‘வத்சகுமார்’, ‘தயாநிதி’ முதலிய நாடகங்களை எழுதினார்.
முதன்முதலாக ‘வைதேகி’ என்ற நாவலை எழுதினார். பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, கைம்பெண் மறுமணம் முதலியவற்றைத் தம் நாவல்கள் மூலம் அக்காலத்திலேயே வலியுறுத்திய முற்போக்குச் சிந்தனையாளராக வை.மு.கோ. அம்மையார் திகழ்ந்திருக்கின்றார் என்பது இன்றைய பெண்டிரும் அறிந்து பெருமிதம் கொள்ளவேண்டிய ஒன்றாகும். அவ்வமயம் தமிழகத்துக்கு வருகைபுரிந்த அண்ணல் காந்தியாரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற கோதைநாயகி அம்மையார், அதன்பிறகு தம் அணிகலன்களைத் துறந்து கதராடை மட்டுமே அணிந்து எளிமையாய் வாழ்ந்திருக்கின்றார். கர்நாடக இசையிலும் சிறந்து விளங்கிய அம்மையார், பாடுவதில் திறமைமிக்க பிறபெண்களையும் ஊக்குவித்திருக்கின்றார். நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் பல பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவர் வை.மு. கோதைநாயகி அம்மையார்.
சாவித்திரி அம்மையார், சரஸ்வதி அம்மையார் போன்றோர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த அன்றைய சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றனர். இஃது அவர்களின் பன்மொழிப் புலமைக்குச் சான்று பகர்கின்றது.
மைசூர் அரண்மனையில் இசையறிஞராக விளங்கிய நடராஜ ஐயர் என்பவரின் அருமை மகளார் விசாலாட்சி அம்மையார். தம் மகளைக் கல்வி கற்க வைத்த நடராஜ ஐயர் அவருக்குத் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பன்மொழிப் புலமையும் கிடைக்கச் செய்தார். அக்கால வழக்கப்படி இள வயதிலேயே மணமுடிக்கப்பட்ட விசாலாட்சி அம்மையார் தீயூழின் விளைவாய் மிக விரைவிலேயே கணவனை இழந்து கைம்பெண்ணானார். அப்போது அவர் வயது வெறும் பதினான்கு மட்டுமே. அந்நிலையில் மீண்டும் தம் படிப்பினைத் தொடர விரும்பிய அவருக்கு வீட்டிலும் உறவினர்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதையும்மீறி அவர் மைசூர் மகாராணிக் கல்லூரியில் சேர்ந்து தம் பட்டப் படிப்பினை முடித்தார். கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தும் அதை மறுத்துவிட்ட அவர், எழுதுவதில் இயல்பாகவே தமக்கிருந்த ஆர்வத்தின் அடிப்படையில் புதினம் ஒன்றை எழுதத் தொடங்க, ’எழுதுவது குடும்பப் பெண்களுக்கு அழகன்று’ என்று அதனைக் கண்டித்திருக்கின்றார் அவர் தந்தையார். அதைப் பொருட்படுத்தாத விசாலாட்சி அம்மையார் ’லலிதாங்கி’ என்ற புதினத்தை எழுதி அப்போது மிகப் பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றிருந்த ‘லோகோபகாரி’ எனுமிதழில் அதனை 1902இல் வெளியிட்டார்.
விற்பனையில் சாதனை படைத்து ’Best Seller’ஆக இரண்டாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றது அப்புதினம்! அதைத் தொடர்ந்து ‘ஜலஜாட்சி’ என்ற பெயரில் இரண்டாவது புதினத்தையும் எழுதினார் விசாலாட்சி அம்மையார். அப்புதினமும் வெகுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறவே, மகளின் எழுத்தாற்றலைத் தேற்றமாய் உணர்ந்தார் தந்தையார்; அதன்பிறகு மகளின் எழுத்துப்பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏதும் போடவில்லை அவர். அதுமட்டுமல்லாது, தம் மகளின் எழுத்துத்துறை வளர்ச்சிக்கு மைசூரைவிடச் சென்னை உகந்தது என்ற முடிவுக்கு வந்தவராய்ச் சென்னைக்குக் குடும்பத்தோடு குடிபெயர்ந்திருக்கின்றார்.
தம் புதினங்களை வெளியிட்ட ‘லோகோபகாரி’ இதழிலும் சில காலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கின்றார் விசாலாட்சி அம்மையார். பின்னர் அவரே ’ஹிதகாரணி’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தியமையால், ’முதல் பெண் இதழாசிரியர்’ என்ற பெருமைக்கும் உரியவராகின்றார். இவ்விதழோடு ‘ஞான சந்திரிகா’ என்ற மற்றோர் இதழையும் இவர் நடத்தியிருக்கின்றார். இவருடைய இடையறா இலக்கியச்சேவையைப் பாராட்டிச் சிருங்கேரி மடம் ’பண்டித ரத்னா’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கின்றது.
அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே கூட்டுப்புழுக்களாய் கைம்பெண்கள் முடக்கப்பட்ட அன்றைய நிலையில், அவ்வாறு முடங்கியிராது துணிச்சலாய் உயர்கல்வி கற்று, ஆண்களின் கட்டுப்பாட்டிலிருந்த எழுத்துத் துறையிலும் கம்பீரமாய்ப் புகுந்து சாதனை படைத்தும், தாமே இதழ்களைத் தொடங்கி நடாத்தியுமிருக்கும் விசாலாட்சி அம்மையாரின் செயல்கள் அசாதாரணமானவை என்று அழுத்திச் சொல்லலாம்.
பிரபல தமிழ் எழுத்தாளரும், ’சிறுகதை ஆசான்’ என்றழைக்கப்படுபவருமான கு. ப. ராஜகோபாலனின் சகோதரியான கு. ப. சேது அம்மாளும் அந்நாளில் சிறந்த எழுத்தாளராய் விளங்கினார். இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த கு. ப. ரா. தம் சகோதரியை, ’சாந்தி நிகேதனில்’ தாகூர் நிறுவியிருந்த ’விஸ்வபாரதி’ பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயிலச் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றார்; ஆனால் இவர்களின் தாயார் அதற்கு ஒத்துக்கொள்ளாததால் அந்த ஆசை நிராசையாகிவிட்டிருக்கின்றது.
சகோதரர் கு. ப. ரா.வின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட சேது அம்மாள், தாமும் எழுதத் தொடங்கியிருக்கின்றார். அவருடைய முதல் சிறுகதையான ‘செவ்வாய் தோஷம்’ 1939-இல் ’காந்தி’ இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றியிருக்கின்றார் என்று அறிகின்றோம். மைதிலி, தனி வழியே, ஓட்டமும் நடையும், குரலும் பதிலும் உள்ளிட்ட 9 புதினங்களையும், தெய்வத்தின் பரிசு, உயிரின் அழைப்பு என 500 சிறுகதைகளையும், சமையற்கலை குறித்து இரு தொகுதிகள் அடங்கிய நூலையும், போதி மாதவன் எனும் பெயரில் புத்தரின் வரலாற்றையும் எழுதியிருக்கின்றார் சேது அம்மாள். 2002ஆம் ஆண்டு இவரது நூல்களைத் தமிழகஅரசு நாட்டுடைமை ஆக்கியிருக்கின்றது. எழுத்தோடு நில்லாமல் அகில இந்திய வானொலியில் பலதரப்பட்ட தலைப்புக்களில் சொற்பொழிவுகளையும் வழங்கியிருக்கின்றார் பல்துறை வித்தகியான சேது அம்மாள்.
’சிறுகதை மன்னன்’ என்ற புகழுக்குச் சொந்தக்காரரான புதுமைப்பித்தனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும்; ஆனால் அவர் மனைவியான கமலா விருத்தாசலமும் (புதுமைப்பித்தனின் இயற்பெயர் விருத்தாசலம் என்பதாகும்) ஒரு நல்ல எழுத்தாளர் என்பதைப் பலரறியார். கிராம ஊழியன்’, `தினமணி’ போன்ற இதழ்களில் அவருடைய கதைகள் வெளிவந்தன. `காசுமாலை’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1971-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.
1931-ஆம் ஆண்டில் புதுமைப்பித்தனை மணந்த கமலா அம்மையார், 1948-ஆம் ஆண்டில் அவர் மறையும்வரையில் அவரோடு சேர்ந்து வாழ்ந்த ஆண்டுகள் பத்துக்குள்தான் இருக்கும். புதுமைப்பித்தன் இடைவிடாமல் கமலாவுக்கு எழுதிய கடிதங்களில்தான் இருவரும் வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தகு துயர வாழ்வுக்கிடையிலும் கதைகள் எழுதித் தம் எழுத்துத் திறமையைப் பறைசாற்றியிருக்கும் கமலா அம்மையார் பாராட்டுக்குரியவரே!
இத்தகு பெண் எழுத்தாளர்கள் மத்தியில் ’அத்தி பூத்தாற்போல்’ அரிதில் காணக்கிடைக்கின்றார் சித்தி ஜுனைதா பேகம் (ஆச்சிமா) எனும் இசுலாமியப் பெண் படைப்பாளி. காரைக்காலுக்கு அருகிலுள்ள நாகூரில் பிறந்த பேகம் அம்மையாரின் முதல் நாவலான ’காதலா கடமையா?’வுக்கு மகாமகோபாத்தியாயரான உ.வே.சா. அவர்கள் முன்னுரை வழங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை, ஹலிமா அல்லது கற்பின் மாண்பு, மலைநாட்டு மன்னன், மகிழம்பு போன்ற பல புதினங்களை எழுதியிருக்கின்றார் இவ் அம்மையார். மிக அதிகமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு விதிக்கும் இசுலாமிய சமயத்தில் பிறந்து மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ஜுனைதா பேகம் அம்மையார், அரும் முயற்சியாலும் பயிற்சியாலும், தேர்ந்த எழுத்தாளராய் மிளிர்ந்தது பெருஞ் சாதனையே!
[தொடரும்]
*****
http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011223-23799
http://www.thehindu.com/thehindu/mp/2002/10/10/stories/2002101000900200.htm
http://web.archive.org/web/20080129164524/http://abedheen.googlepages.com/sithijunaitha.html