(Peer Reviewed) சித்தர் பாடல்கள் – வேதாத்திரி மகரிஷி பாடல்கள்: ஓர் ஒப்பீடு

0
.பரமசிவன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
யோகமும் மனித மாண்பும் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
முனைவர் ரமேஷ்
ஆய்வு நெறியாளர்
விஷன் ஆராய்ச்சி மையம்
ஆழியாறு
பொள்ளாச்சி

முன்னுரை:

தமிழ்நாட்டில் சித்தர் பாடல்கள், மெய்ப்பொருள் நாட்டம் உடையோர்க்கு ஓர் உந்து சக்தியாக விளங்கி வந்துள்ளன. சித்தர் நூல்களில் உள்ள கவிதைகளின் உண்மைப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்துகொண்டுதான் உள்ளது. வள்ளலார் அருளைப் பெற்ற அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், சமீப காலத்தில் வாழ்ந்த மகான். அவர் ஞானக் களஞ்சியம் என்னும் கவிதைத் தொகுப்பினை அளித்துள்ளார்கள். அதில் மிக எளிமையான மெய்விளக்கமளிக்கும் ஞானப் பாடல்கள் உள்ளன. சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களது பாடல்களை ஒப்பாய்வு செய்வதுவே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

அறிவாற்றலால் உயர்ந்த நிலையில் வாழ்ந்த சித்தர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்துள்ளார்கள். அவர்களில் ஒரு பகுதியினரைச் சித்தர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் உள்ளன. அவற்றில் வைத்தியம், ஜோதிடம், மந்திரம், ரசவாதம், கற்பசாதனைகள், மூச்சுப் பயிற்சிகள், இறவாமல் சமாதி நிலை அடைதல் போன்ற பல்வேறு உயர்ந்த விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. பொதுவாகப் பதினெண் சித்தர்கள் என்று குறிப்பிடுவது மரபு ஆயினும் நூல்களில் கூறப்பட்டுள்ளவர்களது பெயர்களை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் சுமார் 40-க்கு மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தெரிகிறது. சித்தர்கள் அனிமா, மகிமா, இலகிமா, சரிமா, பிராப்தி, வசித்துவம், பரகாமியம், ஈசத்துவம் என்றும் அட்டமா சித்திகளை பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அவ்வப்போது மகான்கள் தோன்றி, சித்தர்களது கருத்துகளின் அடிப்படையில் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்துள்ளனர். அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களைத் தொடர்ந்து இன்று தமிழகமெங்கும் மக்கள் கடைப்பிடிக்கும் மனவளக்கலையை வழங்கியவர், வேதாத்திரி மகரிஷி அவர்கள். சென்னைக்கு அருகில் கூடுவாஞ்சேரியில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் 1911-ஆம் ஆண்டு பிறந்தார்கள். ஆன்மீகச் சாதனைகளை, அவர்களுக்கு வைத்தியம் கற்றுத் தந்த கிருஷ்ணராவ் பூபதி அவர்களிடம் ஆரம்பத்தில் கற்று, பின்னர் பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுச் சாதனை புரியும் காலத்தில், வள்ளலார் அவர்களது அருளும் கிட்டியது. திருவள்ளுவர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார் ஆகியோரது பாடல்களை வழிகாட்டுதலாகக் கொண்டு மனவளக்கலை என்னும் பெயரில் இக்கால மக்களுக்கு ஏற்ற வகையில் எளிய உடற்பயிற்சிகள், எளிய
முறை காயகல்ப பயிற்சி, அகத்தவப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள், பிரம்ம ஞான
விளக்கப் பயிற்சி எனக் கல்வியாக, பயிற்சிகளாக வடிவமைத்துள்ளார்கள். இவை அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்ல, உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பினை 1958-ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள் .

சித்தர் பாடல்களும் வேதாத்திரி மகரிஷி பாடல்களும்:

சித்தர்கள் தங்களது உடலை மிகவும் போற்றிப் பாதுகாத்தார்கள். கற்பசாதனைகளை மேற்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள். யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள்; மூலிகைகள், உபரசங்கள், உலோகங்கள், பாசனங்கள் இவற்றால் ஆன மருந்துகள் என்பனவற்றைத் துணையாகக் கொண்டு தாங்கள் விரும்பும் வரை பூமியில் வாழ்ந்த பின் சமாதி என்ற நிலையில் வாழ்வை நிறைவு செய்தார்கள். அவர்களது சமாதிகள் கோயில்களாக உள்ளன.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே                                  – திருமந்திரம் 724

வேதாத்திரி மகரிஷி அவர்களும் உடல் நலம் பேணுதலை முக்கியமாகக் கற்பித்து வந்தார். அவர்களுக்குச் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை தெரியும். தாம் கற்ற மருத்துவ அறிவைக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயைக் குணமாக்க உதவும் விதத்திலும் எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றினை வடிவமைத்தார்கள். அதனைப் பலரும் கற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் நமது உடலில் ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என எழு தாதுக்கள் உள்ளன. ஏழாவது தாதுவாகிய விந்துவே உடலில் உயிர் இருந்து இயங்குவதற்கு அடிப்படை. அதனைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலம் வாழலாம், நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தின் அடிப்படையில் சாதாரண மக்களும் கற்றுப் பயன்படுத்தும் வகையில் எளிய முறையில் காயகல்ப பயிற்சி ஒன்றினை உருவாக்கிக் கற்றுக் கொடுத்துள்ளார்.

சுக்கிலத்தை மேலேற்றி மனதை வைத்துத்
துரிய நிலை நின்று தவம் ஆற்றும் யோகம்
சுக்கிலத்துத் தவம் குதத்துப் பயிற்சி கூட்டி
தூக்கம், போகம், உணவு முன்னம் செய்ய
சுக்கிலமே கெட்டியாம் ஆண்மை ஓங்கும்
தொல்லை தரும் நோய் வகைபோம் இளமை காக்கும்
சுக்கிலத் தோடுயிர் சிவ காந்தம் மிக்கும்
சூட்சுமமாம் இக்கலையே காயகல்பம்                                 -ஞானக் களஞ்சியம் 518

மேற்கண்ட பயிற்சி இன்று உலகம் முழுவதும் மனவளக்கலை மன்றங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இலட்சக்கணக்கானோர் கற்றுப் பயன்பெற்று வருகின்றனர்.

சித்தர்களின் வழி, அறிவுப் பூர்வமானது. அவர்கள் காலத்தில் நிலவிய பல்வேறு அடிப்படையற்ற மூட நம்பிக்கைகளை அவர்கள் சாடியுள்ளதை அவர்கள் பாடலில் காணலாம். குறிப்பாக, அறிவுக்குப் பொருந்தாத இறை வழிபாட்டினை அவர்கள் மாற்ற விரும்பியதைச் சிவவாக்கியரின் பிரபலமான பாடல்கள் உணர்த்தும்.

என்னிலே இருந்ததொன்றை நானறிந்ததில்லையே
என்னிலே இருந்ததொன்றை நானறிந்து கண்ட பின்
என்னிலே இருந்ததொன்றை யாவர் காண வல்லீரோ
என்னிலே இருந்து யானுணர்ந்து கொண்டேனே                         – ஞானக் கோவை

என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாடியுள்ளார்.

எங்கும் நிறைவாக இருக்கின்றார் கடவுளென்பீர்
இங்கு நம் உடல் உள்ளத்துறைந்தும் இருப்பாரன்றோ
அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக
தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்                -ஞானக் களஞ்சியம் 1168

என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார் .

சித்தர்கள் மனத்திற்கே மிகவும் முக்கியத்துவம் அளித்தார்கள். மனிதனின் உயர்வு
அவரின் மனத்தின் உயர்வைப் பொறுத்தது தான் என்று உறுதியிட்டுக் கூறினார்கள்.

மனமது செம்மையானால் மந்திரஞ்செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை யுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே

                                                                                  – அகஸ்தியர் ஞானம்-2 ஞானக் கோவை

வேதாத்திரி மகரிஷி அவர்கள், தாம் வகுத்துள்ள பயிற்சிக்கு மனவளக்கலை என்றே
பெயர் வைத்து உள்ளார்கள். அவர்கள் தமது பாடலில்

மனம் புலன் உணர்வினில் மயங்கிட மாயை ஆம்
மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட
மனம் விரிந்தறிவெறும் மாபதம் எய்திடும்
மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே                              ஞானமும் வாழ்வும் 301-303

என மனத்தை உயர்த்துவதன் மூலமே மனிதன் தெய்வ நிலைக்கு உயர முடியும் என்று
கூறியுள்ளார்.

முடிவுரை:

மேற்கண்ட கவிதைகள், ஓரளவு நேரடியாகப் பொருள் விளங்குபவையே. இவற்றைக் காணும்போது சித்தர்கள் பாடல்களில் கூறியுள்ள கருத்துகள் இக்காலத்திற்கு ஏற்ப வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களிலும் உள்ளது எனத் தெளிவு பெறலாம்.

துணை நூல்கள்:

1. சித்தர் பெரிய ஞானக் கோவையென விளங்கும் சித்தர் பாடல்கள் – பிரேமா பிரசுரம்
-2014
2. வேதாத்திரி மகரிஷி , ஞானமும் வாழ்வும் – வேதாத்திரி பதிப்பகம், 2004
3. வேதாத்திரி மகரிஷி , ஞானக்களஞ்சியம் I & II வேதாத்திரி பதிப்பகம், 2000

==================================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களை ஒப்பிட்டு எழுதப்பட்ட இக் கட்டுரை, சித்தர்கள் கூறிய உடல், மனம் ஆகிய சிந்தனைகளோடு வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் எவ்வாறு பொருந்திச் செல்கின்றன என்பதை எடுத்துரைப்பதாக அமைகிறது. விரிவாகப் பலநிலைகளில் ஆராயப்பட வேண்டிய கருத்துகளை இக்கட்டுரை உள்ளடக்கி இருந்தாலும் பக்க வரையறைக்காக சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இருவேறு காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் சிந்தனைகள் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை எடுத்துரைக்கும் விதமாக எழுதப்பட்ட இக்கட்டுரை, ஆய்வுக் கட்டுரையாக விரியும் நிலையில் பயனுள்ளதாக அமையும். முடிவுரையில் ஆய்வின் முடிவுகள்  தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *