இந்த வார வல்லமையாளர் – 304
–விவேக்பாரதி
மாறிக்கொண்டே வரும் இந்த துரித உணவுக் கலாச்சாராத்தில் உணவு என்பதும் நம் வாழ்க்கையில் ஆடம்பரப் பொருள்களுள் ஒன்று என்று ஆகிவிட்டது. பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் என நம்பப் படுகின்ற துரித உணவுகள், சமைக்கும் முறைகளில் நவீனமான கருவிகள் தேவைப்படும் எனப் பலர் கருதும் உணவுகளை ஒரு கிராமத்துச் சூழலில் சமைத்து வருகிறார் ஒருவர். அனைத்து வகையான உணவுகளையும் சிறிதளவு என்றில்லாமல் குறைந்தபட்சன் 50 நபர்கள் சாப்பிடும் அளவு சமைத்து குழந்தைகளுக்கான விடுதிகளிலும், கோவில்களிலும் ஆதரவற்றோருக்கு அளித்து வருகிறார்.
இதிலே வியக்கத்தக்க செய்தி என்னவென்றால் அவர் சமைக்கும் முறைகளைக் காணொலிகளாக்கி யூடியூபில் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் அவர் டிரெண்டிங் ஆகி வருவது தான். “வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட் ரி” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் யூடியூப் பக்கம் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களையும் 200 க்கும் மேற்பட்ட காணொலிகளையும் கொண்டுள்ளது. அதிகப்படியான தகவல்க, ஆராவாரமான பேச்சுகள் என்பதெல்லாம் இல்லாமல் சிறிய எளிய முறையில் 8 முதல் 10 நிமிடங்களில் முடிந்துவிடும் காணொலிகளின் மூலமாக இத்தனை பெரிய ரசிக வட்டத்தை வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட ரி பிடித்திருக்கிறது எனலாம்.
இதில், சமையல் செய்து வழிநடத்திச் செல்பவர் திரு. ஆறுமுகம் அவர்கள். பெரிய அளவில் உணவு சமைத்து ஆதரவற்றோருக்கு வழங்கும் அடிப்படையில் பிரம்மிக்க வைக்கும் நிறைய சாதனைகளை இவர் நிகழ்த்தியிருக்கிறார். அதில் சென்ற வாரம் இவர் செய்த நுங்கு சர்பத்தும் ஒரு உதாரணம்.
சுமார் 1500 நுங்குகளைக் கொண்டு தன் ஊர் மக்களுக்கு அவர் செய்துன்கொடுத்த, நமக்குச் செய்து காட்டிய நுங்கு சர்பத் பார்க்கும்போதே கண்கள் வழியே மனத்துக்குக் குளிர்ச்சியைப் பரப்பியது. இதோ காணொலிக்கான சுட்டி,
நம் பாரம்பரிய வகை உணவுகளையும் துரித உணவுகளுடன் சேர்த்துச் சமைத்துக் காட்டி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து, வாட்ஸாப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலமாகி இருக்கும் வில்லேஜ் ஃபுட் பேக்டரியைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். அவர்களது இந்தப் பணி தொடரவும் வல்லமை மின்னிதழ் குழுமம் வாழ்த்துகளை இங்கே பதிவு செய்கின்றது.