கவியரசரும் ஆன்மீகப் அறிவியலும் . . . (10)

0

சக்தி சக்திதாசன்
லண்டன்

சிறிய இடைவேளையின் பின்னர் மீண்டும் கவியரசரின் பாடல்களில் புதைந்துள்ள ஆன்மீக அறிவியலின் அலசலுடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

சமூகப்படப் பாடலுக்குள் ஆன்மீகத்தைப் புகுத்தலாமா ? முடியும் என்று எமது கவியரசர் சொல்லாமல் விட்டு விடுவாரா ?

அவள் ஒரு தொடர்கதை எனும் படம். அண்ணன் தங்கையைத் திட்டுவதாௐௐக ஒரு பாடல் அமைக்கும்படி கே.பி கவியரசரிடம் கேட்கிறார். ஆனால் தங்கையைச் சாடும் பாடல் ஒரு சித்தர் பாடும் வரிகளைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் கே.பி.

வழமை போல எம்.எஸ்.வி சந்தம் கொடுக்க கவியரசர் சித்தர் வரிகளைச் சிந்திக்க எம்.எஸ்.வி தாமதமாவதால் வீடு நோக்கிச் செல்கிறார்.

வெளியே மழை பொழிகிறது இடையே தாயாரிப்பாளருடன் நடந்த ஒரு சம்பாஷணையின் விளைவாக கவியரசர் ” எனக்கென்ன எனக்கு தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ” என்று சொல்லிவிட்டு தனக்கேயுரிய பாணியில் இதுதான் பல்லவி என்றாராம். அவரைப் பொறுத்தவரையில் அது அவருக்கு தெய்வம் தந்த வரிகள் என்று எண்ணினார் போலும்.

அதைத்தொடர்ந்து எம்.எஸ்,வி வந்ததும் சந்தங்களை எடுத்து அள்ளி வீசியுள்ளார். அவற்றில் எதை எடுப்பது எதை விடுவது என்று பாலச்சந்தர் ஐயாவே திக்குமுக்காடினாராம்.

இப்போ நான் எந்தப் பாடலை எடுக்கப் போகிறேன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நான் மேலே கூறிய சம்பவம் நான் படித்து அறிந்தவற்றில் இருந்து எடுத்து இயம்பியவை.

ஒரு சமூகத் திரைப்படத்தில் சாதாரண உறவுகளுக்கிடையில் ஏற்படும் மனமுறிவுகளுக்குள் அன்றா௶ட வாழ்க்கை நிகழ்வுகளை ஆன்மீகத்தோடு அழகுற விளக்கும் வரிகளை யாப்பதில் கவியரசருக்கு நிகர் அவரே தான்.

சரி இனி பாடல் வரிகளுக்குள் போவோமா ?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன ? சொந்த வீடென்ன ? ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதையென்ன ?

அண்ணன் பொறுப்பில்லாமல் குடித்து விட்டு அலைகிறான். தங்கை குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கிறாள் . வலி தாங்காமல் அண்ணனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாள்.

தங்கையின் செய்கையால் மனம் வருந்திய அண்ணன் போதையில் அவளைப் பார்த்துப் பாடுவதான காட்சி.

ஒரு குடிகாரன் தன்னை நியாயப்படுத்துவதற்காக பாடுவது போலல்லாமல் எத்தனை அருமையாக ஒரு முற்றும் துறந்த முனிவர் பாடுவது போல வரிகளை யாத்திருக்கிறார் கவியரசர். இதைவிட வாழ்வின் நிலையற்ற ஆன்மீகத்தை எவரால் அழகாக விளக்கிட முடியும் ?

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா ?
இல்லை எனைக்கேட்டு என் பிள்ளை பிறந்தானா ?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதிலே நான் என்ன ? அடியே நீ என்ன ? ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதையென்ன ?

ஆமாம் இந்த உலகின் பிறப்பும், இறப்பும் எமது கைகளில் இல்லை எனும் உண்மையை , ஆன்மீகம் அறியாத சாதாரண மானிடர் அறிந்தது எனும் உண்மையை ஒரு சித்தர் கூறுவது போல் கூறி அதிலே அந்தக் காட்சியை நிலைநிறுத்துவதற்காக தங்கச்சி எனும் உறவு முறையை புகுத்திய விதமே அலாதிதான்.

ஒரு உயிரைக் கொன்று தின்பது பாவம் என்பது ஜீவகாருண்ய தத்துவம். ஆன்மீக மகான்களின் போதனைகள் அதுவேதான் அதையும் கூறி தான் ஒரு சாதாரண மனிதன் ஆன்மீகத் தத்துவங்களை உள்வாங்கிக் கொள்வதில்லை என்பதனை அந்த அண்ணன் கூறுவது போல அழகாய் வரிகளுக்குள் வளைத்துப் போட்டிருக்கிறார் கவியரசர்.

அனைவரின் ஆரம்பமும், முடிவும் ஒன்றுதானே , அனைவரும் ஆன்மாக்களே எனும் உண்மையைக் கூறுகிறாரோ ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

இத்தகைய நிலையற்ற வாழ்வினிலே இருவருக்குள்ளும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறார்.

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன ? கொடுப்பதென்ன ?
இதில் தாய் என்ன ? மணந்த தாரமென்ன ? ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருளென்ன ? நீ வந்த கதையென்ன ?

கோவிலுக்குள் இறைவனே இல்லை பின்பு அங்கு அபிஷேகம் என்னும் ஒர் நிகழ்வு எதற்காக ? சமூகத்தில் , சமுதாயத்தில் உள்ளோன்று வைத்து புறமொன்று பேசுவோர்கள் பலர். இதையே அழகாக மனதில் தெருக்கூத்தோடு பகல்வேஷம் போடுகிறார்கள் என்று அற்புதமாக வாழ்வின் யதார்த்தத்தை விளக்குகிறார்.

இந்த உலகத்திலே நாம் கையிலே கொண்டு வருவது எதுவுமில்லையே ? அப்படியே அடுத்தவருக்குக் கொடுப்பது என்பது கூட நாம் செய்வதில்லையே எமக்கூடாக பிரபஞ்சம் செய்விக்கிறது எனும் உண்மையை சித்தர்கள் கூட இத்தனை எளிமையாக விளக்கியிருப்பார்களா ? என்பது சந்தேகமே .

தாயென்றும், தாரமென்றும் பற்றுக்களில் மூழ்கிச் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கும் மானிடரின் இக்கட்டுகளை அழகாக விளக்குகிறார்.

தாயானாலும், தாரமானாலும் இப்பூவுலகில் நிலைத்திருப்பது சொற்ப காலமே , காலம் முடியும் போது அது தாயென்றோ அன்றித் தாரமென்றோ பார்ப்பது இல்லை என்பதை தத்ரூபமாகச் சொல்கிறார் எம் கவிச்சித்தர் கண்ணதாசன்.

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
இதிலே தேன் என்ன ? கடிக்கும் தேள் என்ன ? ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருளென்ன ? நீ வந்த கதையென்ன ?

சித்தாந்தம், வேதாந்தம் என்பனவற்றின் விளக்கத்தை இரு வரிகளுக்குள் புதைக்கும் ஆற்றல் கவியரசரின் தனித்தன்மையைக் காட்டுகிறது,

இருவரிகளுக்குள் பெரும் கருத்தைப் புதைக்கும் வள்ளுவரின் பின் இத்தனை அழகாக கவியரசர் படைத்திருக்கிறார்.

வேதம் என்பது லெளகீக வாழ்க்கையை விட்டகன்று துறவு பூண்டவர்களினாலேயே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் ஆகமங்கள் சாதரண பக்கதர்களினாலும் புரிந்து கொள்ளக்கூடியது என்பதை அற்புதமாக விளக்குகிறார்.

நம்மை நாமே அறிந்து கொளக்கூடிய தியானம் போன்ற இலகுவான வழிகள் பல இருக்க வெளியே எதைத் தேடுகிறோம் ? என்பதற்கு உதாரணமாக மண்ணைத் தோண்டி ஏன் தண்ணீர் தேட வேண்டும் எனும் வரிகளின் மூலம் புரியவைக்க முயற்சித்திருக்கிறார் எம் கவியரசர் என்பது எனது கோணப்பார்வை.

உலகின் கணக்கிலே ஒரு நீர்க்குமிழி போன்றதே எமது வாழ்க்கை. இத்தகிய வாழ்விலே நாம் சுவைப்பது தேன் என்றாலும் எம்மைக் கொட்டுவது தேளாக இருப்பினும் இரண்டும் ஒன்றெனக் கொள்ள வேண்டும் என்கிறாரோ ?

இன்பத்தையும், துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சித்தர்களை விட எளிமையாகக் கூறி விட்டாரே

கவியரசர் ஆன்மீக அறிவியலை எத்தனை லாவகமாக தமது பாடல் வரிகளுக்குள் புகுத்துகிறார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது அவருக்கிருந்த சரஸ்வதி கடாட்சம் துல்லியமாகத் தெரிகிறது.

மற்றொரு முத்துடன் சந்திக்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.