நல்லையல்லை!
-மேகலா இராமமூர்த்தி
நிலவைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. இன்பம் தருகின்ற அதன் தண்மையும், உடலை வருத்தாத நல்லொளியும் மக்கள் அனைவரும் விரும்பக்கூடியவை; அதனால் அல்லவோ ”நிலா நிலா ஓடி வா; நில்லாமல் ஓடி வா!” என்றும், ”அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?” என்றும் அந்த அம்புலியை ஆசையோடு அழைத்தனர் மக்கள்.
அதுமட்டுமா? நிலவுதரும் இன்பத்தை, பயனைத் துய்ப்பதற்கென்றே அந்நாளில் நிலாமுற்றங்களை அமைத்தனர்.
”நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து” – (நெடுநல்வாடை – 95)
”நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து” – (சிலப் – அந்திமாலைச் சிறப்புச்செய் காதை – 31) என நிலாமுற்றம் குறித்துப் பேசுகின்றன பண்டைத் தமிழிலக்கிய நூல்கள். நிலாமுற்றத்துக்கு ’வேயாமாடம்’ என்ற பெயருமுண்டு.
இன்பம் தருகின்ற ஒருபொருளே சில நேரங்களில் துன்பம் தருகின்ற ஒன்றாகவும் அமைந்துவிடுவது உண்டு. நிலவு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அவ்வகையில் நிலா தொல்லையாக உலாவிய சூழலை விவரித்து அதனைச் சாடுகின்றது இந்தக் குறுந்தொகைப் பாடல்.
இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்கும் ஆவலில், கல்லும் முள்ளும் காடும் மேடும் தாண்டித் தலைவியின் வீடுநோக்கி வந்துகொண்டிருந்தான் தலைவன் ஒருவன். இவ்வாறு இரவுநேரத்தில் நிகழும் தலைவன் தலைவி சந்திப்புக்கு ’இரவுக்குறி’ என்று பெயர்சூட்டியது சங்க இலக்கியம்.
அவ்வேளையில் வானில் காட்சியளித்த முழுமதி, சூரியனைத் தோற்கடிக்கும் வகையில் தன் ஒளிக்கதிர்களை வாரியிறைத்து வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. அதனைத் தலைவியின் வீட்டுவாயிலில் நின்றவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தாள் தலைவன் தலைவியின் காதலுக்கு உற்றதுணையாகத் திகழ்ந்த தலைவியின் தோழி.
காதலர் சந்திப்பைப் பிறருக்குக் காட்டிக்கொடுத்து அவர்களுக்கு ஏதம் விளைவிக்கும் வகையில் பளீரென்று வானில் ஒளிவிட்ட நிலாவின்மீது சுளீரென்று கோபம் வந்தது அவளுக்கு. எனவே, நிலவை எரித்துவிடுபவள்போல் சினத்தோடு நோக்கியவள்,
”நெடுநேரம் எறிக்கும் வெண்ணிலவே! கரிய அடிப்பகுதியினையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்துகிடக்கும் பெரிய பாறையானது, வேங்கைப் புலியின் குருளையைப்போல் (குட்டி) தோன்றும் காட்டுவழியில் தலைவியோடு களவுக்காதல் வளர்க்க வரும் தலைவனுக்கு நீ நன்மை தருவாய் அல்லை!” என்றாள் கடுமையாக.
”கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.” (குறுந்: 47 – நெடுவெண்ணிலவினார்)
அப்போது தலைவியின் வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்த தலைவனின் காதுகளில் தோழி நிலவோடு நடத்திய சூடான உரையாடல் விழவே செய்தது. அவன் காதுகளில் விழவேண்டும் என்பதுதானே அவள் நோக்கமும்!
நிலவு தனக்குரிய இரவுநேரத்தில் மட்டுமே எறிக்கும் இயல்புடையதாயினும், அது விரைவில் மறையவேண்டும் எனும் தோழியின் எண்ணமே அது நெடுநேரம் எறிப்பதாய் ஒரு மாயத்தோற்றத்தை அவளுள் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால்தான், ’நெடுவெண்ணிலவே’ என்று அதனை விளித்தாள்.
இரவுநேரத்தில் வானில் தோன்றும் முழுநிலா பகல்போல் ஒளியை விரித்துக் காதலர்க்கு இகலாகும் (பகை) எனும் செய்தியை,
”பகல்உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே” (அகம்: 122 – பரணர்) எனும் அகநானூற்றுப் பாடலும் பேசுகின்றது.
பொன்போலும் நிறங்கொண்ட வேங்கை மலர்கள் பாறைகளில் குவிந்துகிடப்பது அப்பாறையை வேங்கைப்புலியின் குருளையைப்போல் உருமாற்றி, அவ்வழி வருவோரை ஆங்கே ஒரு புலி படுத்துக்கிடக்கின்றதோ என்று கிலிகொள்ள வைக்கும் தன்மையுடையது.
ஆதலால், தலைவன் இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வருதலும் ஆபத்தானதே; தவிர்த்தலுக்குரியதே; எனவே, இவ்வாறு உடலுக்கும் உயிருக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களை விடுத்துத் தலைவியை விரைவில் மணந்துகொண்டு நிலாவின் இன்பத்தைத் தலைவன் நிம்மதியாய்த் துய்க்கலாமே என்பதை அவனுக்குணர்த்தும் உள்ளுறை குறிப்பு தோழியின் கூற்றில் ஒளிந்துகிடக்கின்றது.
இப்பாடலைப் பாடிய புலவர்பெருந்தகையின் பெயர் இன்னதென்று தெரியாத காரணத்தால் பாடலில் பயின்றுவரும் சிறந்த தொடரான ’நெடுவெண்ணிலவு’ என்பதை வைத்துப் புலவருக்கு ‘நெடுவெண்ணிலவினார்’ என்று பெயர் சூட்டிவிட்டனர் தமிழ்ச்சான்றோர்!
இதில் இடம்பெற்றிருக்கும் ’நல்லையல்லை’ எனும் சொல்லானது பிற்காலக் கவிஞர்களையும் பெரிதும் ஈர்த்திருக்கின்றது; அதற்கான சான்று, கம்பராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.
இராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் எனும் செய்தியை அறிந்த கைகேயியின் பணிப்பெண்ணும் தந்திரத்தில் வல்லவளுமான மந்தரை (கூனி) கடுஞ்சினம் கொள்கின்றாள். எப்படியாவது கைகேயியின் மனத்தை மாற்றி அவள் மகன் பரதனை நாடாளச்செய்யவேண்டும்; இராமனைக் காடேகச் செய்யவேண்டும் எனும் கொடுமனத்தோடு கைகேயியின் அரண்மனைக்குள் விரைவாக நுழைகின்றாள்.
பால்போல் தெளிந்த மனமும், மைந்தன் இராமனிடம் அளவற்ற தாயன்பும் கொண்ட கைகேயியிடம் இந்தச் செய்தியைச் சொல்கிறாள். அதைக் கேட்டதுதான் தாமதம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கேகயன் குலக்கொடி, சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இரத்தினமாலை ஒன்றை மந்தரைக்குப் பரிசாய்த் தருகின்றாள். சீற்றத்தோடு அம்மாலையை வாங்கிய மந்தரை, தரை குழிவிழும் அளவுக்கு அதனை விட்டெறிந்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்திவிட்டுக் கைகேயியிடம் இராமனுக்கு எதிராகத் தன் துர்ப்போதனையைத் தொடங்குகின்றாள்.
ஆரம்பத்தில் அதற்குச் சற்றும் செவிசாய்க்காத கைகேயி கூனியைப் பார்த்து, ”நீ எனக்கு நல்லவளுமில்லை; என் மகன் பரதனுக்கு நல்லவளுமில்லை; அவ்வளவு ஏன்… தருமத்தோடு சிந்தித்துப்பார்த்தால் நீ உனக்கே நல்லவளில்லை; விதியின் வேலையிது! அதனால்தான் உன் மனத்துக்கு இதமென்று படுவதைச் சொல்கிறாய் அறிவற்றவளே!” என்று வெகுள்கிறாள்.
”எனக்கு நல்லையும் அல்லை நீ
என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை அத்
தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை
வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை
மதி இலா மனத்தோய்.” (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1470)
இப்பாடலில் ”நல்லையும் அல்லை” என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதைக் காண்கின்றோம். சங்கப் புலவரான நெடுவெண்ணிலவினாரின் ’நல்லயல்லை’ எனும் சொல்லாட்சியையே கம்பர் இங்கே பயன்படுத்தியிருக்கின்றார் என்பது கண்கூடு.
”நல்லையல்லை” என்ற மந்திரச்சொல் கம்பரோடு நின்றதா எனில் இல்லை; 2017ஆம் ஆண்டு வெளியான “காற்று வெளியிடை” எனும் தமிழ்த் திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்தின் வரிகளில் உருவான ”நல்லை யல்லை நன்னிலவே நீ நல்லை யல்லை” என்ற பாடலிலும் இடம்பிடித்துக் ”காலத்தை வென்றவன் நான்” என்று மார்தட்டி நிற்கின்றது.
*****
கட்டுரைக்கு உதவியவை:
- குறுந்தொகை மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.
- அகநானூறு – நாவலர் திரு ந.மு வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பட்ட பதவுரை விளக்கவுரையுடன் பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது.
- கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.