கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு
சேசாத்திரி ஸ்ரீதரன்
தனி மனிதர்கள் பலர், ஒன்றுபடச் சேர்ந்ததே சமூகம் எனச் சமூகத்திற்குத் தவறான விளக்கம் தரப்படுகிறது. 1,000 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடினாலும், அவ்வாறே 1,000 துறவிகள் ஒன்று கூடினாலும் அது சமூகம் ஆகாது. ஏனெனில் இந்த ஆயிரம் பேருக்கும் குடும்பப் பொறுப்பு என ஏதும் கிடையாது. என்றால் கூட்டமாகச் சேர்ந்திருப்பது சமூகம் ஆகாது. ஒரு இரயில் நின்றதும் 1,000 பேர் அதில் இருந்து இறங்கி தம் வழியே செல்கின்றனர் இது சமூகம் ஆகாது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பில் தான் குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்தம் குடும்பப் பொறுப்பானது இறக்கும் காலம் வரை 3-4 தலைமுறைக்கு நீள்கிறது. குடும்பத்தவர் தாம் உலகில் நிலைக்கப் பொருளைக் கொடுத்தும் கொண்டும் வாழப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் வெவ்வேறு மாற்றுத் தொழில் செய்வோரிடம் கூட்டுச் சமூகப் பொறுப்பு கட்டமைக்கப்பட்டு சமூகம் என்பது நாம் கண்கூடாகக் காணும் பொருள் போல உண்டாகிறது. தனிமனிதர்களான துறவிகள், பிச்சைக்காரர்கள் கூட்டமாக கூடினாலும் இப்படியான பொறுப்பை கொண்டிராததால் அவர்களை சமூகம் என்று அழைக்க முடியாது. ஆனால் இவர்கள் சமூகத்தைச் சார்ந்து வாழ்பவர்கள். இந்த வெவ்வேறு மாற்று தொழில் செய்யும் குடும்பங்களால் தான் ஊர் என்பதே உண்டாகிறது. ஒரு குடும்பத்திற்கு அடுத்ததாக ஊர் என்பதே பெரிய சமூகம் ஆகும். அதுவே பல ஊர்களை உள்ளடக்கி நாடு என்று விரிகிறது. பல நாடுகள் இணைந்ததே தேசமென்ற பெரும் சமூகக் கட்டமைப்பு ஆகும். குடும்பம் சிதைந்து தனிமனித நலன் மேலோங்கினால் (ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும், திருமணமில்லா இருபாலார் கூட்டு வாழ்க்கை ஆகியவற்றால்) சமூக அமைப்பு, ஊரமைப்பு, நாட்டமைப்பு ஆகியன சிதைந்து விடும். ஊர்ச் சமூகம் நாடாக விரியும் போது நிர்வாகம், பாதுகாப்பு, பணம் போன்ற சமூக முறைமைகள் தேவைப்படுகின்றன. இந்த முறைமை வந்த பின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் தமக்கென தனியே படையைப் பேணி மண உறவால், படை சூழ்ந்த உறவுகளால் படைச்சாதி என்ற படைச் சமூகத்தை உண்டாக்கி இந்த சமூக இயங்கியலை கட்டுப்படுத்தினர். இந்த கட்டுப்பாட்டால் சில சமூகத்தவர் ஏற்றம் பெற்று எல்லா வசதிகளையும் உரிமைகளையும் அனுபவித்தனர். பலர் அதற்கு வெளியே வைக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டதால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு உண்டானது. அது எவ்வாறு கல்வெட்டில் வெளிப்படுகிறது என்று பார்ப்பதே இந்தப் பார்வை.
சேலம் மாவட்டம் சேலம் வட்டம் பேளூருக்குத் தென்கிழக்கில் சின்ன ஏரிக்கரையில் உள்ள இரு கல்வெட்டுகள்
- ஸ்வஸ்திஸ்ரீ
- மிலாடாந
- ஜனனாத வள
- நாட்டுத் துரவி நா
- ட்டு வெளியூர் வண்
- ணாத்தி தாழி வடுகி
- இட்ட தூம்பு
வெளியூர் – இன்றைய பேளூர்; தூம்பு – மதகு; மிலாடு – ஒன்றுகூடும் இடம்; தாழி – பருத்த, குண்டான
விளக்கம் : முதலாம் இராசராசன் சிறப்புப் பெயரான சனநாதன் பெயரில் அமைந்த நாடு என்பதை கொண்டு இதன் காலம் முதற் குலோத்துங்கன் காலம் என்று தீர்மானிக்கப்பட்டது. இராசராசன் வெற்றிக்கு பின் ஒன்றுகூடும் இடம் சனநாதன் வளநாடு என்று பெயரிடப்பட்ட நாட்டில் அமைந்த துரவி நாட்டின் திறந்த வெளியூரில் (பேளுர்) வாழும் வண்ணாத்தி குண்டு வடுகி என்பவள் இந்த ஏரிக்கு மதகு ஒன்று அமைத்துக் கொடுத்தாள். இந்த ஏரியின் நீரில் தான் அவள் நாள்தோறும் ஊரார் துணிகளைத் துவைத்துக் காயவைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தாள். இந்த மதகால் ஏரி நீர் பாசனத்திற்கு அளவோடு வெளியேறும் அல்லாவிடில் முன்பு போல கால்வாய் மூலம் அதிக நீர் வெளியேறி ஏரி நீர் விரைந்து வற்றும் என்பதே காரணம்.
பார்வை நூல்: கொங்கு இதழ் பிப்ரவரி 1974 பக். 39
- ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோ
- ழ தேவற்கு யாண்டு 41 வது
- மிலாடாகிய ஜநநாத வளநாட்டு
- த் துறவிநாட்டு வெளியூரா
- ன ஏரியில் ஏறி
- வீரபட்டணத்து வண்ணான் பி
- ச்சன் சொக்கன்
- இடுவுத்த தூம்பு.
எறிவீரபட்டணம் – வணிகர் படை ஊர்; இடுவித்த – கட்டி நிறுத்திய
விளக்கம் : முதலாம் குலோத்துங்க சோழனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கிபி.1111 இல் சனநாத வளநாட்டில் அடங்கிய துறவிநாட்டில் உள்ள திறந்த வெளியூரில் (பேளூர்), வணிகர் தம் எறிவீரபட்டணத்தில் வாழும் வண்ணான் பிச்சன் சொக்கன் என்பவன் ஏரிக்கு மதகு கட்டினான்.
மேல் உள்ள முதல் கல்வெட்டு போல் அல்லாமல் இதில் வேந்தனின் ஆண்டுக் குறிப்பும் பெயரும் உள்ளது. இதைக் கொண்டு அந்த மதகும் கல்வெட்டும் இதே ஆண்டினது எனக் கொள்ளலாம். வண்ணாத்தி தாழி வடுகியும் வண்ணான் பிச்சன் சொக்கணும் உறவினர் ஆதல் வேண்டும். மிக அரிதாக வண்ணார் செய்த சமூகப் பங்களிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்படுகிறது.
பார்வை நூல்: கொங்கு இதழ் மார்ச்சு 1974 பக். 68
அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.
- கோற்சடை பன்மர் திருபுவனச் சக்கர
- வத்திகள் ஸ்ரீ பராக்கிரம பாண்டி
- ய தேவர்க்கு யாண்டு 9 ஆவது ஆனி மாதம் 10 தில்
- நாலாயிர நாடாழ்வானேன் என்
- மனையான அஞ்சாந் தெருவில்
- மேற் சிறகில் தெற்
- கொரு மனை விட்டு உ
- ள்ளில் மனை ஒன்று
- காரிமகன் சிவநாய
- னுக்கு விற்றேன்.
- இப்படிக்கு ஊரக
- ம் கற்பகத்து அறிவேந்
சிறகில் – குறுக்கு தெரு, cross street; உள்ளில் – உள் வீடு; ஊரகம் – ஊர் அதிகாரி; கல் பகத்து – பகுத்து விலை கூறல், கல்பெயர்த்து வை
விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 9 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1324 ஆனி மாதம் 10 ஆம் நாளில் நாலாயிர நாடாழ்வானான நான் இவ்வூரில் ஐந்தாம் தெருவில் மேற்கே உள்ள குறுக்கு தெருவின் தெற்கே ஒரு வீடு தள்ளி உள் இருந்த மனை ஒன்றை காரியின் மகன் சிவனாயனுக்கு விற்றுவிட்டேன்”. இப்படி விற்ற வீட்டை கல் பெயர்த்து நாட்டியதை அறிவேன் என்று ஊர் அதிகாரி கையொப்பம் இட்டார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் நாலாயிர நாடாழ்வான், காரி மகன் சிவனாயன் ஆகிய பெயர்களை உற்று நோக்குங்கள் இவர் இருவரும் அரச குடும்ப வழி மணம் புரிந்த படைத்தளபதி சாதியர் என்று தெளிவாகிறது. ஐந்தாம் தெரு வடக்கு தெற்காக நீண்டிருந்தால் தான் அதன் மேற்கில் குறுக்கு தெரு அமைய முடியும். அதில் இரண்டாம் வீடு நீண்டு தென்புற புழைக்கடையில் இன்னொரு வீட்டை கொண்டு இருந்துள்ளது. கோவிலுக்கு சற்றும் தொடர்பில்லாத இரண்டு தனி ஆள்களின் கொடுக்கல் வாங்கல் செய்தி ஏன்? எப்படி? இந்த கோவிலில் பதியப்பட்டு ஆவணமானது என்பது ஒரு கேள்வி.
பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 122 ஆசிரியர்: இல. தியாகராஜன்
அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.
- கோற்சடை பன்மரான திருபுவன
- ச் சக்கரவத்திகள் ஸ்ரீ பராக்கிறம பாண்
- டிய தேவற்கு யாண்டு 10 ஆவது ஆனி
- மாதம் 22ந் தியதி நான்று தென் பத்தரா
- யனேன் யென் மனையான இரண்டான் தெரு
- வின் மேல் சிறகில் தலைமனையில் மனை
- ச பணியிருக்கும் அண்ணாமலைய் மகன் நாழி
- ப் பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இவை
- அறிவோ
- ம்
ஞான்று – போது; தியதி – நாள்; மனை எச்ச – வீட்டு வேலை; தலைமனை – வளமனை, bungalow
விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1325 ஆனி மாதம் 22 ஆம் நாளின் போது தென் பத்தராயனான நான் என்னுடைய வீடான இரண்டாம் தெருவிற்கு மேற்கு வரிசையில் உள்ள பெரிய வீட்டில் வேலை செய்யும் அண்ணாமலை என்பவர் மகன் நாழிப்பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இந்த விவரத்தை அறிவோம் என்று கையெழுத்து இட்டுள்ளனர். இதில் எதை, எந்த வீட்டை விற்றார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை. பத்தராயன் தன் இன்னொரு வீட்டை விற்றார் என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏனெனில் பெரிய வீட்டை வாங்கும் அளவிற்கு பணியாளுக்கு பணம் இருந்திருக்குமா? பத்தராயன் பெயர் அவரை அரச குடும்பத்தவர் என்று காட்டுகிறது. எனவே தான் அவருக்கு வளமனை இருந்துள்ளது.
பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 123 ஆசிரியர்: இல. தியாகராஜன்
தென் ஆர்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீசுவரர் கோயில் 9 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவற்திகள் ஸ்ரீ இராச தேவற்கு யாண்டு 11 வது உத்தம (நீ)திய்யா
- பெருங் கீத்தி முத்தமிழாலையாமும் மையு நிறைந்தோர் எழுபத்தொன்பது நாட்டு மில
- டாகிய ஜனநாதவள நாட்டு மேலாராற்றூர் கூற்றத்து திருவலஞ்சுரத்தில் இருங்கோ
- ளப்பாடி நாட்டோமுங் குந்றக் கூற்ற நாட்டோமும் துண்ட நட்டோமுந் திருமுனைப்பாடி
- நாட்டோமுஞ் செங்குந்ற நாட்டோமும் வாணகப்பாடி நாட்டோமும் ஆண்டய் நாட்டோ
- மும் பங்கள நாட்டோமும் மேல்கரை நட்டோமும் கங்கப்பாடி நட்டோமும் பரணூற்(று) நா
- ட்டோமும் எம்மிலிசைந்து உடையார் திருவலஞ்சர உடையநார் கோயில் கல்வெட்டியதாவது இந்
- நாட்டு மலையமார்களும் நத்த மக்களும் இடங்கைத்திலே பாவாடை ஏறினோம். இடங்கைக்கு
- கண்ணுங் கையுமாய் புல்லும் பூமியுள்ளவு நிற்க கடவோம். இதில் பிழங்கில் மாறுசாதிக்கு தாழ்வு
- செய்தோமானோம்.
இசைந்து – விரும்பி; மலையமார் நத்த மக்கள் – பார்க்கவ குல சாதியில் நயினார், உடையார் பட்டம் உள்ளவர்; பாவாடை – இறைவன் திருமேனி முன் உறுதி கொள்; பிழங்கில் – தவறினால்; மிலாடாகிய – ஒன்று கூடும் இடம், assembling point; மில் – சேர்க்கை, நெருங்குதற் கருத்து. இந்தியில் இன்றும் சந்திப்பு என்பது மிலா எனப்படுகிறது
விளக்கம் : இரண்டாம் இராசராசன் 11 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1161இல் உடையார்களின் மெய்கீர்த்தியை கூறித் தொடங்கும் இக்கல்வெட்டு ” 79 நாட்டவர் ஒன்றுகூடும் ஜனநாத வளநாட்டின் மேலாராற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சுரத்தில் இருங்கோளப்பாடி நாட்டு (விருத்தாச்சலம் பெண்ணாடம்), குன்றக் கூற்ற நாட்டு (பெரும்பழுவூர்), துண்ட நாட்டு (பெரம்பலூர்), திருமுனைப்பாடி நாட்டு (சேந்தமங்கலம்), செங்குன்ற நாட்டு , வாணகப்பாடி நாட்டு (விழுப்புரம் சங்கராபுரம்), ஆண்டை நாட்டு, பங்களநாட்டு (வேலூர் – திருப்பத்தூர்), மேல்கரைநாட்டு (ஈரோடு), கங்கப்பாடி நாட்டு (தருமபுரி), பரணூற்று நாட்டு என 11 நாட்டின் பார்கவ குலத்தவர் நாமே விரும்பி திருவலஞ்சுர ஈசன் கோவிலில் கல்வெட்டுவித்தது யாதெனில், இந்த நாடுகள் அனைத்தின் மலையமார், நத்த மக்கள் ஆகியோர் இடங்கைப் பிரிவிலே சேர்ந்தோம். இனி இடங்கைப் பிரிவிற்கு கண்ணும் கையுமாய் புல்லும் பூமியும் உள்ளளவும் இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். இதில் தவறினால் வேற்று சாதியை தாழ்வாக நடத்திவிட்டோம் என்றாகும்”.
இக்கல்வெட்டு மூலம் பண்டு தமிழகத்தில் 79 நாடுகளுக்கு மேல் இருந்துள்ளன என்று அறிந்து கொள்ளலாம். காலம் எப்போதும் போல மாறாமல் இருந்தால் இந்த உறுதிமொழியை அப்படியே காப்பாற்ற முடியும். ஆனால் 50 ஆண்டுகள் கழித்து காலம் மாறியது பிற சாதிகளுக்கு காணி விற்க கூடாது என்று முடிவுகொண்டு இவர்களே இந்த உறுதிமொழியை தகர்ப்பதை கீழ் உள்ள கல்வெட்டுகளை படித்து விளங்கிக் கொண்டால் புரியும்.
பார்வை நூல்: ஆவணம் 11, 2000 பக். 32
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் கரட்டாம்பட்டி நடுகல்
ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப் பரகேசரி பர்மருக்கி யாண்டு 35 ஆவது. இவ்வாண்டு மியமானாட்டு வள்ளுவப்பாடி, விரியூர் ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ் சுருனிமான்கள் நிரை கொண்டு போக நிரைப் பின்பு சென்று ஆடு ஈடு கொண்டு பட்ட நாகன் வீரன் மகளுக்கு ஓர் (ரோ)ரால் இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்
சுருனி > சுருதி – கேட்டல்; நிரை – மந்தை; ஈடு – இழந்தவற்றுக்கு மாற்றாக; ஓர் ஓர் – ஒரே நினைப்பாக, இரண்டாம் கருத்து இல்லாமல், no second thought; இறையிலி – அரசனுக்கு வரி செலுத்த வேண்டாத நிலம்
விளக்கம் : மதுரையை கைப்பற்றி ஆண்ட முதற் பராந்தகனின் 35 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி 942 நிகழ்ச்சி. இந்த ஆண்டில் மியமாநாட்டில் அடங்கிய வள்ளுவப்பாடி, விரியூர் ஆகிய ஊர்களின் ஆடுகளை ஊற்றத்தூர் நாட்டின் பாடாவூ(லூ)ரைச் சேர்ந்த மூப்பனார் மறவர்களான ஐந்து நாட்டு சுருதிமான்கள் மந்தையாக கொள்ளை கொண்டு போயினர். கொள்ளை கொண்ட ஆட்டு மந்தையின் பின்னே தொடர்ந்து சென்று இழந்த ஆடுகளுக்கு மாற்று ஆடுடன் மீண்டு திரும்பிய பின் வீரசாவடைந்தான் நாகன் என்பவன். அந்த வீரன் மகளுக்கு இரண்டாவது மாற்று கருத்து ஏதும் இல்லாமல் அனைவரும் ஒரே சிந்தனையுடன் முடிவெடுத்து இறையிலி நிலக்கொடை கொடுத்தோம் விரியூர் ஊராரோம் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஐந்து நாடு என்பது ஊட்டத்தூர், திருப்பிடவூர், பாச்சில், திருவெள்ளறை, சென்னிவலக் கூற்றம் என்னும் ஐந்து நாடுகள் கொடுக்கப்பட்டு குடியேறியதால் ஐந்து நாட்டு சுருதிமான்கள், அஞ்சுநாட்டார் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய பார்கவ குல சுருதிமான் அல்லது மூப்பனார் குல மக்கள் ஆவர்.
பார்வை நூல்: வரலாற்று குழு வலைத்தளப் பக்கம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் பெரிய குறுக்கை அகரம் இலட்சுமி நாராயண பெருமாள் சிதிலமடைந்த கோவிலில் கண்டெடுத்த 12 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்தி ஸ்ரீ
- குறுக்கைத்
- திருச்சிற்றம்ப
- லச் சதுர்வே
- தி மங்கலத்
- துத் திருமுற்ற
- ங்களும் இந்
- த அகரமும் ஐ
- ஞ்சு நாட்டு
- ச் சுருதிமா
- ந்கள் கா
- வல்
முற்றம் – ஊரின் வெளியிடம், அகரம் – பிராமணர் குடியிருப்பு; சுருதிமான் – மூப்பனார் சாதி படை மறவர்.
விளக்கம் : இவ்வூரின் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் மூன்றாம் இராசராசனின் 24 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி. 1240) கல்வெட்டு இவ்வூரை “குறுக்கை திருச்சிற்றம்பலத்து சதுர்வேதி மங்கலம்” என்கிறது. சுருதிமான்கள் இடங்கைப்பிரிவினர். உழு தொழில் செய்பவர் என்கிறது ஊற்றத்தூர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. இந்த ஊரின் கோவில்களைச் சுற்றியுள்ள வெளியிடங்களும் பிராமணர் அக்கிரகாரமும் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களின் காவலுக்கு உட்பட்டவை என்கிறது இக்கல்வெட்டு. இதில் இருந்து மூப்பனார் போர் புரிபவர் குடியினர் என்று உணர முடிகிறது. போர்க்குடி என்றால் அரச குடியுடன் மணஉறவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த வகையில் சுருதி மான்கள் படைத் தலைவர்களாக அரையர்களாக கிழார்களாக இருந்துள்ளனர்.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 17, பக். 8-9, த நா தொ து வெளியீடு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் ஊர்த்தெருவில் நடப்பட்ட கற்பலகையில் பொறித்த 67 வரிக் கல்வெட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ / கொலோத்துங்க சோழ / தேவற்கு யாண்டு 10 ஆவது / வடகரை கரிகாலகந்ந வள / (நா)ட்டு வந்நாட்டு பிரிதிசூர சது / (ப்)பேதி மங்கலமாந பிரம / தேசத்தை எங்களய்யந் ராஜரா / ஜ வந்நாடுடையார் இவூரை / வல்லுவந் புலியநாந இருப / த்து நால்ப் பேரரையந் உ / ள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி / செய்து குடுத்தார். ஸ்ரீ ரா / ஜராஜ தேவற்கு யாண்டு 6 / ஆவது திருவையாறுடையா / ந் கரிகால சோழநான சனநாத / வந்நாடுடையாநும் நந்தம / ரில் நாந _ _ _ வந்நாடுடை / யாநும் இவ்வனைவோமும் பி / ரமதேசமுடைய பள்ளிகள் / நாட்டரையநுக்கும் புலியந் / மாதநாந மகதை நாட்டு / பேரையநுக்கும் புலியந் / பெரியாநாந வந்நாட்டு நா / டாழ்வாநுக் / கும் புலியந் / நாந திக்கும் சா / த்தந் பெரியா / நுக்கும் சோ / மந் புலிய நு / க்கும் இவர்கள் / வங்குசத்துக் / கல்லது மற் / று பிராமண / ர் வெள்ளாளருள் /ளிட்டாருக்கும் / பள்ளிக்கும் வி / ற்க கடவதல் / லவாகவும் / சந்திராத்த / வல் முள்ளத / னையும் எங்க / ள் வங்குசம் / __ _ / _ _ _ / _ _ _ / _ _ _ / _ _ வாலிகண்டபுரத்து _ டின் முக்கூட்டு மொக்க எழு / கும் தென்பாற்கெல்லை / க்கு வடக்கும் மேற்பாற் கெல் / லை அனுக்கூர் எல்லைக்கு கிழக் / கும் வடபாற்கெல்லை சிறுவி / சலூர் எல்லைக்கு தெற்கும் இந்த நாலெல்லைக்குப் / பட்ட நிலம் இவர்கள் இ _ _ _ / க்கு வேண்டுவநவு / ஞ் செய்து சோப்பை _ – / த்து கொடு இருந்தமை _ _ _ ம / கதை நாட்டு பேரையந் / புலியந் பெரியாநாந வந்நாட்டு நாடாழ்வாநும் / _ _ _ _ / ணநாத வந்நாடுடையாநும் / இராசராச வந் நாடுடையா / னும் விருபேரமுப் / _ _ _ _ / ன் வல்லவரையன் சத்தி / யம்
ஐயன் – தந்தை; பேரையன் – படைத்தலைவன்; நந்தமர் – உடையார் சாதி; வங்குசம் – வம்சம்; பள்ளிகள் – வன்னியரில் ஒரு பிரிவினர், மொக்க – முழுவதுமாக; எழுகும் – பரவும், தோன்றும்; சொப்ப – செப்பமாக, neatly; கொடு – தீங்கு
விளக்கம் : சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1188), வடகரை கரிகாலக்கன்ன வளநாட்டு வந்நாட்டின் ஊரான பிரிதிசூர சதுர்வேதி மங்கலமான பிரம்மதேசத்தை எங்கள் தந்தை ராஜராஜ வந்நாடு உடையார் என்னும் அரசர் அல்லது கிழார் வள்ளுவன் புலியனான இருபத்தினால் பேரரையன் உள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி (உரிமை நிலம்) செய்து கொடுத்தார் என்று வல்லவரையன் கூறுகிறான். இந்த வல்லவரையன் தூண்டுதலில் 34ஆண்டுகள் கழித்து இப்போது சோழ வேந்தன் மூன்றாம் இராசராசனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1222) திருவையாறுடையான், கரிகாலச் சோழனான ஜனநாத வந்நாடுடையான், உடையார் சாதி நந்தமரில் நாந_ _ _ வந்நாடுடையான் ஆகியோர் வல்லவரையனுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவு யாதெனில், “பிரம்மதேசத்தினுடைய பள்ளிகளான நாட்டரையனுக்கும், புலியன் மாதனான மகதை நாட்டு படைத் தலைவனுக்கும், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வானுக்கும், புலியானான திக்கும் சாத்தன் பெரியானுக்கும், சோமன் புலியனுக்கும் ஆகிய இவர்கள் ஐந்து வம்சத்தை சேர்ந்த பள்ளிகள் தவிர்த்து வேறு எந்த பிராமணருக்கோ, வெள்ளாளருக்கோ அல்லது பள்ளிகளுக்கோ விளை நிலத்தை விற்ககூடாது. இதை சந்திரனும் ஞாயிறும் உள்ள வரை எங்கள் வம்சத்தார் கடைபிடிக்க வேண்டும். இந்நிலம் வாலிகண்டபுரத்தின் _ _ _ டின் முக்கூட்டு இருந்து முழுவதும் பரவியுள்ள தென்பகுதி எல்லைக்கு வடக்கிலும் மேற்குப்பகுதி எல்லை அனுக்கூர் எல்லைக்கு கிழக்கும் வடபகுதி எல்லையில் சிறுவிசலூர் எல்லைக்கு தெற்கும் ஆக இந்த நான்கு எல்லைக்கும் உட்பட்ட நிலம் ஆகும்” என்று எல்லை சுட்டப்பட்டுள்ளது. இது நிறைவேற இவர்கள் வேண்டிய நடவடிக்கை எடுத்து செப்பமாக (fully, neatly) அதில் தீங்கில்லாமல் இருக்க வேண்டும். மகதை நாட்டு பேரையன், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வான், _ _ ஜனநாத வந்நாட்டுடையான், இராசராச வந்நாடுடையான், விருபேரமுப்_ _ _ ஆகியோர் ஐவரும் இவ்வாறு நடப்பதாக வல்லவரையனுக்கு சத்தியம் செய்து கொடுத்தனர்.
வல்லவரையன் ஒரு குறுநில அரசன் அல்லது கிழான் என்று தெரிகிறது. இவன் தூண்டுதலால் 1222 இல் இந்த காணி விற்பனைத் தடை நடவடிக்கையை நந்தமரோடு (உடையார் சாதி) சேர்ந்து கொண்டு மேற்கொள்ளக் காரணம் எதுவாக இருக்கும் என்று எண்ணுங்கால் இது சமூக பாதுகாப்பு நடவடிக்கை அல்ல என்று மட்டும் புரிகிறது. ஏனெனில் பிராமணரோ பிள்ளைமாரோ பள்ளிகளோ இவர்களுக்கு அச்சமூட்டுபவர் அல்லர். எனவே இதை ஒரு ஒடுக்குமுறையின், அடக்குமுறையின் முதல்படியாக கொள்ள வேண்டி உள்ளது. இவர்களுக்கு தமது உழு நிலத்தை விற்றால் இவர்கள் அந்த ஊரில் வந்து குடியேறுவர். அத்தோடு நில்லாமல் இந்த அரசகுடி மண உறவுடைய படைச் சாதியார் போலவே தாமும் எல்லா உரிமைகளையும் பெற உரிமை கோருவர். அப்படி உரிமை கொடுத்தால் இந்த படைச் சாதிக்கும் புதிதாக உரிமை பெற்ற சாதியாருக்கும் வேறுபாடு இல்லாமல் போகும். முன்பு இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு தம் முன் குனிந்து கைகட்டி நின்றவர் இனி அச்சமின்றி நிமிர்ந்து செல்வர். தமக்கு எந்த மதிப்பும் இனி இருக்காது என்ற அச்ச எண்ணமே இதற்கு காரணமாக எனலாம். இதே காலகட்டத்தில் தான் கொங்கு நாட்டில் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் ஆட்சியில் அதற்கு முன் இல்லாத சில உரிமைகள் கோவில் பணி மக்களான கம்மாளர், சிவப்பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோர் தம் வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டலாம், வீட்டுச் சுவருக்கு சுண்ணாம்புப் பூசலாம், வாயிலுக்கு இரட்டை கதவு வைக்கலாம், காலுக்கு செருப்பு அணியலாம், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் உரிமைகள் தரப்பட்டன என்பதை அங்கத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே இந்த வல்லவரையனின் கல்வெட்டின் மூலம் உண்மையாகவே இந்த சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை இந்த படைச் சாதியார் தான் அதிகாரத்தில் இருந்து கொண்டு நடப்பித்தனர் என்று உறுதியாகிறது. இந்த படைச் சாதியர் தான் இன்று தமிழகம் முழுவதும் நிலவுடைமை சாதிகளாக உள்ளனர். இவர்களில் வெள்ளைத் தோல் ஆரியர் அதிகம் உண்டு என்பது அரசகுடிக் கலப்பால் அது ஏற்பட்டது என்பதை உணர்க. இதாவது, அரசகுடிக்கு பெண் கொடுத்து அரசகுடிப் பெண்ணைக் கொண்டதால் இப்படி நேர்ந்தது எனலாம். அதனால் தான் பார் ஆண்டவர், மண் ஆண்டவர், அடக்கி ஆண்டவர், ஆண்ட பரம்பரை என்று இவர்கள் மார்த் தட்டுகின்றனர். இந்த கல்வெட்டின் மூலம் இக்கல்வெட்டு கூறும் உண்மைக்கு எதிர்மாறாக தான் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளையர் முதற்கொண்டு தலித்தியர், திராவிடவியலர், கம்யூனித்துகள் போன்றோர் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத் தாழ்வையும் இந்து மதம் தான், சனாதன தர்மம் தான், பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்ற பேச்செல்லாம் பொய்ப் புனைவுகள் என்றாகிவிட்டன அன்றோ !! தமிழ்நாட்டின் 60,000 தமிழ்க் கல்வெட்டுகளும் முழுவதுமாக படிக்கப்பட்டு அச்சேறினால் வரலாற்றில் நடந்த உண்மைகள் அத்தனையும் ஆய்வின் வெளிச்சத்திற்கு வரும். பொய்கள் தகரும்.
பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டுக்கள் செப்பேடுகள் பக். 154-156 ஆசிரியர்: இல. தியாகராஜன் & ஆவணம் 23, பக்.58 – 59
அரியலூர் மாவட்டம் வாரணவாசி மருதமுத்துக் கவுண்டர் கொல்லையில் நடப்பட்டுள்ள 44 வரிக் கற்பலகைக் கல்வெட்டு
திருபுவனச் சக்க / ரவத்திகள் இராச / ராச தேவற்க்கு / யாண்டு 21 வதின் எதிராமா / ண்டு உடையார் திருவாலந்து / றை நாயனார் / தேவதாந / ங் கீழ்ச் சார் / ஆந வாரணவாசி / யில் காணி இ / வாரணவாசி / உடையாந் / வந்தவர் வி / ற்றல் ஒற்றி வை / க்குதல் / செய்வார் தந் சா / தியாற்கு / விற்பது த / ன் சாதி த / விர விற்றார் / உண்டாகி / ல் நாயிலு(ம்) / பந்றியிலு(ம்) / கடையா / க குத்தி நூ / ர கடவதாக / வும் கீழ்ச்சா / ர் ஆந ஐஞ் / சு நாட்டுக லூற்கு / விலங் / கல் உண்டாகில் நா /ங்கள் / ளே ஏறட்டு / கொண்டு தீ / த்துக் குடுப் / போம் ஆக க / ல் வெட்டி நா / ட்டி குடுத்தோ / ம் அஞ்சு / நாட்டோம்.
எதிர் – அடுத்த , successive; காணி – விளை நிலம்; வந்தவர் – புதிதாக குடியேறியவர்; ஒற்றி – அடமானம்; கடையாக – கீழாக; நூர – அழிய; விலங்கல் – குறுக்காக, இடைஞ்சலாக; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; தீத்து – கழித்து, இல்லாதாதல், விலக்கு, முடித்தல்; அஞ்சு நாட்டோம் – சுருதிமான்கள் என்னும் மூப்பனார்கள்
விளக்கம் : மூன்றாம் இராசராச சோழனின் 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1238) திருவாலந்துறை இறைவனுக்கு தேவதானமாக கொடுக்கப்பட்ட கீழ்சாரான வாரணவாசியில் உள்ள விளை நிலத்தை இந்த வாரணவாசியில் வாழ்பவர் புதிதாக வருபவருக்கு விற்றாலோ அடமானம் வைத்தாலோ அது தன் சாதியாருக்கு மட்டுமே விற்பதாகவே இருக்க வேண்டும். தன் சாதியார் தவிர மாற்று சாதியாருக்கு விற்பாரானால் அவரை நாயை விட, பன்றியை விட கேவலமாகக் கருதி குத்திக் கொல்லுக. கீழ்ச்சாரான ஐந்து நாட்டு ஊர்களுக்கு இடைஞ்சலாக ஏதேனும் நடக்குமானால் நாங்களே முன்வந்து அச்சிக்கலை முடித்து வைப்போம் என்று கல்வெட்டி புதைத்து நிறுத்தினோம் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களோம் என்று மூப்பனார்கள் ஆணை வெளியிட்டுள்ளனர்.
இந்த கல்வெட்டு மூலம் பிற சாதியார் தம் ஊர்களில் குடியேறுவதை தடுக்கும் ஒரு உத்தியாகவே இந்த நடவடிக்கையை படைச் சாதியாரான மூப்பனார்கள் மேற்கொள்கின்றனர் என்பது தெளிவு. இது ஏனெனில் உழு நிலம் வாங்குபவர் இந்த ஊரில் வந்து நிரந்தரமாக குடியேறுவார். பின் இந்த படைச்சாதி மூப்பனார்களைப் போல தாமும் எல்லா உரிமைகளையும் பெற கோரிக்கை வைப்பர். அதனால் அரசகுலத்துடன் மணவுறவு உள்ள படைச் சாதியாரான தமது கௌரவம் கெடும் என்ற அச்சம் தான் காரணம். இதே காலகட்டத்தில் கொங்கு நாட்டில் வீரராசேந்திரனின் ஆட்சியில் கம்மாளர், சிவ பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோருக்கு முன்பு இல்லாத உரிமைகளான வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டல், வீட்டிற்கு சுண்ணாம்பு பூசல், இரட்டைக் கதவு வைத்தல், காலுக்கு செருப்பு அணிதல், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் தரப்பட்டன. அப்படி ஒரு உரிமைக் கொடுப்பு ஏதும் இவர்களது ஊரில் நிகழக் கூடாது என்ற கருத்தே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்பது மேலுள்ள சில கல்வெட்டுகளால் வெளிப்படுகிறது.
பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 267 – 269 ஆசிரியர்: இல. தியாகராஜன்
திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டம் ஏறகுடி 20 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்தி ஸ்ரீ கொர்சடைய பன்மர் திருபுவனச் ச
- க்ரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டி தேவ
- ற்க்கு யாண்டு 25 வது ஆவணி மாதம் 5 தி
- நாள் பழுவூர்பற்று திரணி நாட்டவரும் கண்
- டராதித்தன் பிடாகைத் திரணி நாட்டவரும் இ
- றைக் குடியில் பெரியநாடான ஆலடியில்
- (டியில்) நிறைவற நிறைந்து குறைவறக் கூ
- டி எங்களில் இசைந்து ஒருமைப் பிடிபா
- டு பண்ணின பரிசாவது பழுவூர் பற்றினா
- லும் கண்டராதித்தன் பிடாகையிலும் பல பற்றி
- லும் நாங்கள் கொண்டுடை வோமாய் நா
- ங்கள் ஆண்டு போதுகிற நிலக் காணிகளும்
- நத்தக் காவல் காணிகளும் காப்புக் காணி
- களும் மற்றும் எப்பேற்பட்ட உரிமைகளும்
- எங்கள் ஆண் மக்களே இந்தக் காணி ஆள
- _ _ வும். இப்படி இசைந்து ஒரு
- மைப் பிடிபாடு பண்ணினோம் பழுவூர்ப்பற்று ஐ
- ஞ்சு நாட்டவரும் கண்டராதித்தன் பிடாகை ஐ
- ஞ்சு நாட்டவரும் இவ்வானைவரோம்.
- இப்படிக்கு இவை சொக்கனார் எழுத்து.
பிடாகை – உட்கிடையூர்; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; பரிசாவது – ஏற்பாடாவது; பற்று – ஒதுக்கிய நிலம்; ஆண்டு – கட்டுப்பாட்டில் அனுபவி; நத்தக் காவல் – வீட்டு மனைப் பிரிவு காவலர்; காப்புக் காணி – காவலுக்கு உட்பட விளை நிலம்
விளக்கம் : ஜடாவர்ம வீரபாண்டியனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி.1278) ஆவணி மாதம் 5 ஆம் நாள் பழுவூர் பற்று திரணி நாட்டாரும் கண்டராதித்தன் உட்கிடையூர் திரணி நாட்டாரும் இறைக் குடியில் பெரிய நாடான ஆலடியில் பெருங் கூட்டமாகக் கூடி எங்களுக்கு நாங்களாகவே விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்து மேற்கொண்ட ஏற்பாடு யாதெனில், பழுவூர் பற்றிலும் கண்டராதித்தன் உட்கிடையூரிலும் இன்னும் பல பற்றிலும் நாங்கள் உரிமை கொண்டுள்ள நாங்கள் கட்டுப்படுத்தி அனுபவிக்கின்ற உரிமை நிலங்களும், வீட்டுமனைக் காவலர் நிலங்களும் காவலுக்கு உட்பட்ட நிலங்களும் வேறு எந்த வகைத் தான உரிமைகளும் எமது ஆண் பிள்ளைகளே, அவர் வழியினரே இந்த உரிமை நிலங்களை ஆண்டு அனுபவிக்க வேண்டும். இப்படியாக விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்தோம் பழுவூர் பற்றில் வாழும் மூப்பனார் சாதி ஐந்து நாட்டவரும் கண்டராதித்தன் பிடாகை மூப்பனார் சாதி ஐந்து நாட்டவருமான இந்த அனைவரும். இப்படியாக இவை எல்லாம் சொக்கனார் எழுத்து.
மேல் கல்வெட்டில் சொன்னபடியே என்ன தான் கடுமையாகப் பிற சாதிமாருக்கு நிலங்களை விற்க கூடாது என்று முடிவெடுத்து நடைமுறைப் படுத்தினாலும் பெண் வழியாகப் பிரித்துக் கொடுத்த நிலங்களை மாப்பிள்ளைகளும் பெண் வழிப் பேரர்களும் பிற சாதிமாருக்கு விற்பதால் தமது சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் மாப்பிள்ளை, பேரர்களுக்கு அவரது ஊர்களிலேயே தந்தை வழி நிலம் உள்ளதால் பெண் வீட்டார் நிலம் தேவைப்படாது. இந்த அனுபவத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்ற முறையே சரியானது அப்போது தான் மாப்பிள்ளைகள் சொத்தை பிராமணருக்கோ பிள்ளைமாருக்கோ பள்ளிகளுக்கோ விற்கமுடியாது என்று கருதி பெண்ணுக்கு சொத்துரிமை ஏதும் இல்லை என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினர். இக்கல்வெட்டு மூலம் பெண்ணுக்கு சொத்துரிமை இந்துமதத்தால், மனுநெரியால், பிராமணர்களால் தடை செய்யப்படவில்லை அதை படைச் சாதியினர் தான் தடை செய்தனர் என்று தெளிவாகிறது அன்றோ!!
பார்வை நூல்: ஆவணம் 6, 1995, பக். 33
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் சமணர் கோயில் கற்பலகை 13 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ
- சகலலோகச்
- சக்கரவத்தி
- இராசநாராயணன்
- மனுநெறி தப்பாத
- மல்லிநாதன். பெருந்தேவ
- ந் செட்டித் தெருவில்
- வேற்று மனிதர் இருக்க
- கடவதல்ல வென்றும்,
- பரிசாம் விடுவரல்ல
- வென்றும் சொ
- ன்னோம். இப்ப
- டி செய்க.
பரிசாம் – காசு, வாடகை
விளக்கம் : இரண்டாம் இராசநாராயண சம்புவராயனான மல்லிநாதன் ஆட்சியில் வெட்டப்பட்ட ஆண்டுக்குறிப்பு ஏதும் இல்லாத கல்வெட்டு இது. இவனை மனுநெறி தப்பாதவன் என்று கூறி,” இவ்வூர் பெருந்தேவன் செட்டித் தெருவில் சமணர் அல்லாத வேற்று சாதியார், மதத்தார் எவரும் குடியிருக்கக் கூடாது என்றும், சமணர் எவரும் வேற்றாருக்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்றும் ஆணையிட்டான். அவ்வாறே நடந்து கொள்க” என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.
கல்வெட்டில் குறிக்கப்படும் செட்டித் தெருவில் வாழும் சமணர் தொழிலால் வணிகர், உணவால் சைவர் என்பதால் அவர்களாகவே வேந்தனிடம் கோரிக்கை வைத்து இந்த ஆணையை பெற்று வந்துள்ளனர். மேலும் வர்ண கோட்பாடு என்பது சிவ, விண்ணவ மதத்திற்கு மட்டும் என்று இல்லாமல் சமண, புத்த மதத்தவரையும் சேர்த்து சமூக முறைமையாகவே கட்டுப்படுத்தியுள்ளது அல்லது மதம் கடந்து அனைவரையும் உள்ளடக்கியது என்று தெரிகின்றது. வாடகை என்ற சொல் அப்போது இல்லை என்பதால் பரிசாம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. வேந்தனும், சமணரும் கூட சாதி ஆதரவாளராகவே இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு பெரும் சான்று ஆகிறது.
பார்வை நூல்: ஆவணம் இதழ் 17, பக். 132 ஆண்டு: 2006
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவில் தென் சுவர் 4 வரிக் கல்வெட்டு
- ஸ்ரீமத் பூமிதேவி புத்ரஸ்ய சாதுர்வண்ண குலோத்பவம் சர்வலோகஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய
- சாஸனம். திரிபுவனச் சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது நாடும் நகரமும் கூடி
- இருந்து காஞ்சிமாநகரில் செப்பேட்டுப்படி செக்கார் செய்யக் கடவ முறைமை எண்ணையு _ _ _
- வையிலே கூறி விற்க கடவந். இவனுக்கு உகச்சும் பறையும் கொட்டக் கடவதல்லன். ஒரு துறையில் நீருண்ணக் கடவனல்லன். தந் மனையில் சேந்த வடக்கு திருவாசலுக்குப் புறம்பே _ _ _ துக்கு குடுக்ககடவ _ _ _ தல்லந். _ _ _ ல்லா தெற்றஞ் செய்யக் கடவதல்லந். வாஸ்துவுக்கும் _ _ _ ம்பி _ _ _ ம வெற்றிலையும் _ _ _ ந்து விற்கக் கடவன். எண்ணை, விறகு மல்லாதும் _ _ _ கடவந்.
சித்ரமேள – சித்திரமேழி நாட்டார் வணிகக் குழு சபை; சாசனம் – சட்ட ஆவணம்; செக்கார் – எண்ணை வணிகர்; உ(வ)கச்சு – மத்தளம், தவில்; தெற்றம் – தவறு, பிழை; ஸ்ரீமத் – எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்
விளக்கம் : எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால் பூமியின் மைந்தர்களின், நால்வர்ணக் குலத்தில் பிறந்த, உலகமனைத்தின் நன்மைக்கும் பொருட் தேவைக்கும் வாழும் சித்திரமேழிநாட்டு வணிகக் குழுவின் சட்ட வரைவு என்று கல்வெட்டு சித்திரமேழியாரின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. மூன்றாம் இராசராசனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு 1219 இல் நாட்டுச் செட்டிகளும் நகரத்துச் செட்டிகளும் ஒன்று கூடி இருந்து காஞ்சிமாநகரில் உள்ள செப்பேட்டின்படி செக்கில் எண்ணை பிழிவோர் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை என்று அறிவித்தது யாதெனில், “எண்ணையை _ _ விலை கூறி விற்க வேண்டும். (எப்படி விலை கூற வேண்டும் என்ற வரி சிதைந்து விட்டது). செக்கருக்கு வீட்டு நன்மை தீமைகளில் மத்தளமும் பறையும் கொட்ட உரிமை இல்லை. ஒரே நீர்த்துறையில் மேல் சாதியாரோடு நீர் மொண்டு, பருகக் கூடாது. தன் வீட்டு வடக்கு திருவாயிலுக்கு வெளியே _ _ _ கொடுக்கக் கூடாது. (எதை கொடுக்க என்ற வரி சிதைந்து விட்டது). _ _ பிழையாக செய்யக்கூடாது. (எதை என்பது சிதைந்து விட்டது). வாஸ்துவுக்கும் _ _ _ வெற்றிலை _ _ _ விற்கலாம். (இன்னொரு பொருள் எது என்பது சிதைந்து விட்டது. எண்ணை, விறகு அல்லாதது தவிர்த்து இவற்றை மட்டும் விற்கலாம் என்று வரையறை சொல்கிறது.
படைப்பற்றுப் பள்ளருக்கும் பறையருக்கும் தமது உரிமை குறித்து பிணக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டை பார்த்து வந்ததில் ‘பள்ளருக்கு தவிலும் சேமக்கலமும் முழங்கலாம், ஐந்து பந்தர்கால் நடலாம்’ என்றும் பறையருக்கு ‘கொட்டு மேளதாளம்,12 பந்தர் கால் உரிமை உள்ளதையும்’ உறுதி செய்தனர் என்பதை புதுக்கோட்டை ஆலங்குடி கல்வெட்டு (ஆவணம் இதழ் 15, பக். 32) தெரிவிக்கிறது. இவர்களுக்கு கொடுத்த உரிமை கூட எண்ணை வணிகருக்கு, செக்கருக்குக் கொடுக்கவில்லை என்பது கேள்விக்கு உரியதாக உள்ளது. இந்த வணிக சபையோர் தான் இதை அறிவிப்பதால் அவர்களையே இதற்கு முழு பொறுப்பு ஆக்குவதா அல்லது பின்னிருந்து இயக்கிய ஆட்சியாளர்களை காரணகர் ஆக்குவதா என்று தெரியவில்லை. ஆனால் இதே கால கட்டத்தில் தான் கோவில் பணி மக்களுக்கும் படைப்பற்று சாதிமாருக்கு சில உரிமைகள் கூடுதலாக தரப்பட்டதை வைத்து பார்க்கும் போது இந்த செக்கர்களும் தமக்கும் அது போல உரிமையை எதிர்பார்த்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அந்த கோரிக்கையில் எண்ணை மட்டும் இன்றி சில கூடுதல் பொருள்களை காட்டாக வெற்றிலை, விறகு விற்பது ஆகிய உரிமைகள் தரப்பட்டு பழைய அதே சமூகக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. கல்வெட்டில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் செப்பேடு கிடைத்தால் அது யார் ஆட்சியில் எழுதப்பட்டது, நால் வர்ணத்தை எப்படி சாதியாகப் பிரித்தார்கள். இதனால் படைச் சாதி அடைந்த பயன் என்ன? அத்தனையும் தெரிந்து விடும். ஆனால் திரு. நாகசாமி இது இந்த கோவிலுக்கு அமர்த்தப்பட்ட செக்கருக்கு மட்டுமான விதி என்கிறார். பின் ஏன் சித்திரமேழி சபை இதை அறிவிக்க வேண்டும்? கோவில் நிர்வாகத்தர் அல்லவா அறிவிக்க வேண்டும்?
பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் மடல் 7 எண்: 865 & கல்வெட்டு காலாண்டு இதழ் 8 பக். 23 த நா தொ து வெளியீடு.