இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (292)

-சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே

அன்பான வணக்கங்கள். இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் இந்நாள் ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் முட்டாள்கள் தினம் அல்லது ஏப்பிரல் பூல்ஸ் டே என்று அழைக்கப்படும் தினம். முட்டாள்களைக் கொண்டாடுவதா? என்ன இது மடமைத்தனம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது அல்லவா? இதில் பெரிய ஆச்சரியமென்று ஒன்றுமில்லை ஒரு வகையில் பார்த்தால் நாம் அனைவருமே சில நேரங்களில் ,சில வேளைகளில் முட்டாள்களாக நடந்திருக்கிறோம் அல்லது முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறோம் இல்லையா?எம்மை யார் முட்டாள்கள் ஆக்கியதாக எண்ணுகிறார்களோ அவர்களும் எதோ ஒரு வகையில் எப்போதாவது முட்டாளாக இருந்திருப்பார்கள் எனும் உண்மையை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தத்தினத்தின் விசேடம் என்ன என்கிறீர்களா?எமக்காக எம்மால் கொண்டாடப்படும் ஒரு தினம். இந்தத்தினத்திலே வாழ்வில் நாம் எமது செய்கைகளை அசைபோட்டு அவற்றில் எவை முட்டாள்தனமானவை என்பதை வடிகட்டித் தெரிந்து கொள்ள உதவும் ஒரு தினமே !

தேர்தல் வருகிறது அரசியல்வாதிகள் மேடையிலே ஏறி பீரங்கி குண்டுமழையைப் பொழிவது போல பிரசாரப் பேச்சை முழக்கித் தள்ளுகிறார்கள். வாக்குறுதிகளை அடுக்கடுக்காய் அள்ளி வீசுகிறார்கள்.அவ்வாக்குறுதிகளின் மயக்கத்திலே அவர்களுக்கு வாக்களித்து விட்டு பின்பு அவர்கள் அரசுக் கட்டிலேறியதும் அவ்வாக்குறுதிகளை மறந்து தூக்கத்திலாழ்ந்து விடுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படியானால் அவ்வாக்குறுதிகளை நம்பி வக்குகளை அள்ளிக் கொடுத்த எமக்குப் பெயர் ? முட்டாள்கள் தானே ! வேறுசில தேர்தல்களில் அரசியல்வாதிகளில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்கும்போது நாம் அதிமேதாவிகள் என்று எண்ணிக்கொள்கிறோம். ஆனால் அதே அரசியல்வாதிகள் எம்மைப் பார்த்து பாவம் முட்டாள்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவ்வுலகில் இரண்டே இரண்டுவகை மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.ஒன்று ஏமாற்றுபவர்கள் அடுத்தது ஏமாற்றப்படுபவர்கள்.. ஏமாற்றப்படுபவர்களின் முட்டாள்தனம் ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாய் அதேநேரம் ஏமாற்றுபவர்கள் தாமும் ஒரு நாள் ஏமாற்றப்படுவோம் என்பதை மறந்து போவதும் முட்டாள்தனமே ! அனைத்தையும் அறிந்து விட்டோம் எமக்குத் தெரியாத விடயம் எதுவுமேயில்லை என்னும் எண்ணத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் தாம் அறியாத விடயத்தை அறிந்ததாகக் காட்டிக்கொண்டு வாதம் செய்ய முற்படுவதில் உள்ள முட்டாள்தனம் அவருக்கு புலப்படாது ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குப் புலப்படும்.

இன்று இங்கிலாந்து அரசியல்களத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த ப்ரெக்ஸிட்எனும் விடயத்தை எடுத்துக் கொண்டால், ப்ரெக்ஸிட்டை ஆதரிப்போர் தமது எண்ணம் ஈடேறாமல் போகும் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த தம்மை அரசு முட்டாளாக்கத் தலைப்படுகிறது என்று ஆத்திரப்படுகிறார்கள். அதேநேரம் இந்த ப்ரெக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்தோர் இதற்கான பிரசாரத்தின் போது ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக பிராசாரம் செய்தோர் பல பொய்களின் அடிப்படையில் பிரசாரம் செய்தது தம்மை முட்டாளாக்கிய செயல் என்று ஆத்திரப்படுகிறார்கள். இங்கிலாந்தின் பிரதமரோ தன்னுடைய கட்சியைச் சார்ந்தவர்கள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டு மக்களுடைய ஆணையை தான் நிறைவேற்ற முடியாமல் செய்து தன்னை முட்டாளாக்குகிறார்கள் என்று வெகுண்டெழுகிறார்.

இவையனைத்துக்கும் மத்தியில் எந்தவிதமான சமரசத்துக்கும் இணங்காமல் வேற்றுமைகளை ஒதுக்கி தமக்கிடையில் இருக்கும் ஒற்றுமைகளின் அடிப்படையில் இணக்கம் காணத் தவறி கொள்ககளை மட்டும் குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் சிக்குண்டு பொதுமக்களின் பொருளாதார வாழ்வு முட்டாளாகி நிற்கிறது.

உலகமயமாக்கல் எனும் பொருளாதார வழிமுறையில் நடைபோட்டு தமது பொருளாதார வளத்தை பெருக்கிக்கொண்ட மேலைத்தேச வர்த்தக உலகத்தின் வெற்றியால் பலவித அனுகூலங்களை பெற்றுக்கொண்ட சாதாரண மக்கள், அதன் ஒரு பக்க விளைவாக வெளிநாட்டு , அதாவது வளர்ந்துவரும் நாடுகளில் இருந்து வரும் குடியேற்றவாசிகளின் வரவினைக் கண்டு அதனை எதிர்க்கிறோம் எனும் போர்வையில் மீண்டும் தேசியவாதம் எனும் கோஷத்தினுள் தம்மைப் புதைத்துக் கொள்கிறார்கள். இங்கே அனைத்து மக்களும் ஒரே இனம், அனைத்து மதங்களும் சமமானவையே எனும் பொதுவுடமைக் கருத்துகள் முட்டாளாக்கப்பட்டு புத்தகங்களுக்குள் புதைக்கப்படுகின்றன.

ஏனின்று ஜனநாயக அரசியல் என்று பேசப்படும் அரசியல் இனவெறியை தமது அடிப்படையாகக் கொண்டு அதற்கு தேசியவாதம் எனும் முலாம் பூசி தம்மை நாகரீக அரசியல்வாதிகளாக்கிக் கொள்பவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஆங்கிலத்தில்far right எனும் தீவிர வலதுசார்பு கொண்ட இனவாத தீவிரவாத அமைப்புகள் அரசியல் மேடையில் இன்றைய மேலைநாடுகளில் வேரூன்றிக் கொண்டு வருகின்றன என்பதை நன்கு அறியக்கூடியதாக உள்ளது.

நாமும் வாழ வேண்டும் அதேபோல அடுத்தவருக்கும் வாழும் உரிமை இருக்கிறது எனும் உண்மை அப்பட்டமாகத் தெரிந்திருந்தும் தீவிரவாதக் கொள்கைகளினால் அதனை மறுத்துப் பேதலிக்கும் மனப்பான்மை இன்றைய மேலைநாடுகளில் மட்டுமில்லை எமது பின்புல நாடுகளிலும் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவது சுலபம் அப்படித் தூண்டிவிடப்பட்ட உணர்வுகள் பூதாகரமாகத் தலைவிரித்தாடும்போது அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது இயலாத காரியம் எனும் உண்மையை சாதாரணக் குடிமகன் முதல் அரசியல்வாதிகள் வரை உணர்ந்து கொள்ளாததினாலேயே இன்றைய உலகம் நிலைகுலைந்து கொண்டிருக்கிறது.

அரசியலை விட்டு விடுவோம் சாதரணக் குடும்பங்களையே எடுத்துக் கொள்ளுவோமே !காதலைத் திரைப்படங்களில் பார்த்து கைதட்டி மகிழ்வோர் அது தமது குடும்பத்தினுள் நிகழும்போது அத்தனை ரசனையோடு ஏற்றுக் கொள்வார்களா ? என்ன. “புரிந்துணர்வுஎன்பதை முற்றாக இழந்து கொண்டு போகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.இன்றைய சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் காழ்ப்புணர்ச்சியுடனோ அன்றி விரசத்துடனோ அன்றி இனவாதவெறியுடனோ பகிரப்படும் விடயங்களைப் பார்க்கும் போது மனித மனங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் வெறுப்புணர்ச்சியை உணரக்கூடியதாக உள்ளது.அதேநேரம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட , விதிவிலக்கான பலர் இருக்கிறார்கள் என்பது உண்மையே ! அவர்கள் சிலர் அரசியலிலும் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே ! ஆனால் அத்தகையோர் எண்ணிக்கையில் பெரும்பான்மையாவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

இவற்றை எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய மனிதாபிமானமிக்க , பொது அறிவு அடிப்படை கொண்ட தன்னலமில்லாத தலைவர்களை , சமுதாய முன்னோடிகளை உருவாக்க வேண்டிய கடமை யார் கைகளில் உள்ளது ?

முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும்

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

லண்டன் 01.04.2019

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க