Author: நிர்மலா ராகவன்

  • தந்தை யாரோ (சிறுகதை)

    தந்தை யாரோ (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “என்னங்க! டாக்டர் என்னமோ சொன்னாரே…?” என்று இழுத்தாள் இந்திரா.

    அவளது கேள்வியில் அச்சமிருந்தாலும் அதில் அடங்கியிருந்த ஆர்வமும் எனக்குப் புலப்படாமல் இல்லை.  எனக்குள் ஆத்திரம் பொங்கி எழுந்தது. அப்படியென்ன பிள்ளை ஆசை வேண்டிக்கிடக்கிறது! படித்தவளாம், படித்தவள்!

    எல்லாம்தான் இருக்கிறதே வாழ்வில். பிள்ளைச்செல்வம் மட்டும் இல்லாவிட்டால் குறைந்தாவிட்டது!

    மணமாகி ஐந்து பிறந்த நாட்கள் வந்து போயும், தான் பூக்காத மரமாகவே இருக்கிறோமே என்றவளின் கவலை எனக்கு முதலில் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது.

    கிளினிக்கின் முதற்படி ஏறுமுன், அதுதான் என் அமைதியான வாழ்வின் இறுதிப்படி என்பதை நான் உணராமல் போனேன்.

    “ஸாரி, ஸார்,” என்று ஆரம்பித்து, டாக்டர் விவரமாகச் சொன்ன விஷயத்தைக் கேட்ட நொடியிலேயே நான் இறந்துவிட்டேன். உலகின்முன் எப்படி நடிப்பது என்ற பெருங்கவலை என்னைச் சூழ்ந்துகொண்டது.

    `இவளுடைய வற்புறுத்தலுக்கு ஏன்தான் இணங்கினோமோ!’ என்று நான் என்னையே கடிந்துகொள்ளாத நாளில்லை. இல்லாவிட்டால், குறை என் உடலில்தான் என்று டாக்டர் தீர்மானமாகச் சொல்லியிருந்திருப்பாரா?

    என் உணர்ச்சிகளைப் புரிந்தவளாக இதமாக நடந்துகொண்ட மனைவியால் என் ஆத்திரத்தை இன்னும் அதிகரிக்கத்தான் முடிந்தது.

    எனக்காகப் பரிதாபப்படுகிறாள்!

    காதலித்து மணந்தவர் ஆண்மையற்றவர் என்று அறிந்து. தன் துர்பாக்கியத்தை உள்ளுக்குள் சபித்துக்கொண்டாலும், வெளியில் பசப்புகிறாள்! இப்படி ஒரு குரூரமான எண்ணம்.

    சே! அந்த உத்தமியைப்பற்றி இப்படியெல்லாம் நினைப்பதே பாவம். இன்னொருத்தியாக இருந்தால், சட்டபூர்வமாக விலகிவிடுவாள். இல்லை, இல்லை, என்னை விலக்கி வைத்துவிடுவாள். இது அவளை நன்கறிந்த எதிர்க்குரல்.

    இந்திரா காரியவாதி. எங்களைப்போன்றோர் பிள்ளை பெற்றுக்கொள்ள ஏதேனும் வழி உண்டா என்று தேடி அலைந்தாள்.

    “இதிலே ஒண்ணும் தப்பே இல்லீங்க!” பல முறை அவள் மன்றாடியபோது, ஒருவாறாக இணங்கினேன்.

    “டாக்டர்கிட்டே முழு விவரத்தையும் கேட்டுக்கலாம்,” என்று சமாதானப்படுத்தினேன். அப்போதைக்கு அதுவே நல்ல அறிகுறிதான் என்ற மலர்ச்சி அவள் முகத்தில்.

    “இது மேல்நாட்டிலே அமோக வரவேற்பு பெற்ற முறை, ஸார். தத்து எடுத்துக்கிட்டா, அதை முழுமனசோட ஏத்துக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க, சொல்லுங்க!” டாக்டர் சவால் விட்டார்.  “தன்னோட வயத்திலே வளர்ந்த குழந்தையைப் பாத்தா தாய்ப்பாசம் பொங்கும். ஒங்க குழப்பம் இவங்க சந்தோஷத்திலே கரைஞ்சுபோயிடாதா!”

    இந்த மனிதரும் என் மனைவியுடன் சேர்ந்துகொண்டு, என் மனதைக் கலைக்க ஏதோ சூழ்ச்சி செய்கிறார்!

    என்னிடம் இயற்கையும் வளர்ச்சியும் அளிக்கத் தவறிவிட்ட ஒன்றை எவனோ ஒரு இளைஞன் தானமாக அளிக்கப்போகிறான்!

    சீச்சீ! எதைத்தான் தானம் கொடுப்பது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது இப்போது.

    “பெத்தவங்க சாயலே இல்லாம குழந்தைங்க பிறக்கிறதில்லையா!” டாக்டர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். அப்போதைக்கு அவரிடமிருந்து தப்பினால் போதும் என்ற, யோசித்து வருவதாகச் சொல்லி நழுவினேன்.

    தன் ஏமாற்றத்தைச் சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டாள் இந்திரா. நானோ, அந்த நினைப்பையே அப்புறப்படுத்த முயன்றுகொண்டிருந்தேன். நடக்கிற காரியமா!

    தானே கனிந்துவருவேன் என்ற நம்பிக்கை சரிய, `டாக்டர் என்னவோ சொன்னாரே!’ என்று சுற்றி வளைக்கிறாள்!

    அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் கேட்பதெல்லாம் ஒரு குழந்தை. சாதாரணமாக எந்தப் பெண்ணுக்கும் எழும் ஆசைதான். இதைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், நான் எதில் சேர்த்தி?

    மனத்தளவில் நான்தான் மடிந்துவிட்டேன். அவளாவது வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.

    இப்போது இந்திராவின் மனதிலிருந்த பூரிப்பு உடலிலும் வெளிப்படையாகவே தெரிந்தது.

    ஊர்பேர் தெரியாத எவனுடைய விந்துவோ என் மனைவியின் உடலுக்குள் நுழைக்கப்பட்டு, அது கருவாக வளர்வதைப் பொறாமையுடன் பார்த்தேன்.

    இதே காரியத்திற்கு, `கட்டியவனுக்கு துரோகம்’ என்றொரு பெயருண்டு, வேறு சில சந்தர்ப்பங்களில். ஆனால், நாங்களே தெரிந்து செய்ததை என்னவென்பது! இந்த மன உளைச்சலை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியவில்லை.

    இந்திராவின் உடல் எடைக்கு ஏற்ப என் மனச்சுமையும் கூடியது. பயங்கர மிருகமானேன். கொண்டவளைப் படாத பாடு படுத்தினேன். `உரிமை’ என்ற போர்வையில் என் வேதனை – மனதின் வெறுமையே – வெறியாக மாறுகிறது என்று புரிந்துகொண்டாற்போல், அவ்வளவுக்கும் ஈடுகொடுத்தாள்.

    எதிர்ப்பில்லாத சண்டையும் ஒரு சண்டையா!

    நான் அடங்கிப்போனேன்.

    நான் இரவு பகலாக நினைக்க மறுத்து, அஞ்சிக்கொண்டிருந்த அந்நாள் இறுதியில் வந்தேவிட்டது.

    `உங்களைச் சும்மா விட்டுவிடுவோமா? விருந்து எங்கே?” என்று மிரட்டிய நண்பர்களுடன் எனக்கு `வாரிசு’ பிறந்திருப்பதை கொண்டாடினேன். போலிச்சிரிப்புடன்.

    மருத்துவமனைக்கும் சென்றேன் – பிறர் முன்னிலையில் மனைவியைத் தலைகுனிய வைக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு.

    “என்னங்க! குழந்தை ரொம்ப அழகா இருக்கு இல்லே?” உவகையுடன் வந்த அவள் குரல் எனக்கு நாராசமாகக்  கேட்டது.

    “ஏன், இந்தச் சனியனோட அப்பாபோல இருக்குதோ?” குரோதத்துடன் வெளிப்பட்ட என் எதிர்க்கேள்வியின் உக்கிரத்தைத் தாங்கமுடியாது அவளுடைய பச்சை உடம்பு நடுங்கியது.

    சே! என்ன மனிதன் நான்! எவ்வளவோ யோசித்து அக்காரியத்தைச் செய்யத் துணிந்தும், மனம் ஒருநிலைப் படவில்லையே! எனக்கே என்மேல் வெறுப்பு ஏற்பட்டது.

    “ஸாரிம்மா. ஒனக்குச் சந்தோஷமா இருந்தா சரிதான்!” ஒப்பிப்பதுபோல் பேசிவிட்டு, அவள் முகத்தைப் பார்க்கவும் துணிவின்றி வெளியே நடந்தேன்.

    முன்யோசனை இல்லாமல் செய்த காரியத்தின் விளைவு. எங்களிடையே பாலமாக இருக்கும் என்று அவள் நம்பிப் பெற்ற குழந்தையே எங்கள் நெருக்கத்தைத் துண்டித்துவிடும் என்று அப்போதே நான் உணர்ந்துவிட்டேன்.

    என் மனைவியின் குழந்தை பாபு, ஆமாம், அவன் என் மகனென்று உலகை ஏமாற்றியதுபோல் என்னையே நான் ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

    அதன் அழுகைச் சத்தம் கேட்டாலே, “பிசாசு கத்துகிறதே! யாராவது ஏதாவது பண்ணித் தொலைக்கக்கூடாது?” என்று அலறுவேன்.

    கண்ணீரைத் தடுக்க கீழுதட்டைப் பல்லால் கடித்தபடி அவனுடன் உள்ளே விரைவாள் பெற்றவள்.

    கூடியவரை, தந்தையின் பராமுகத்தை அவன் அறியாதபடி அவன்மேல் பாசத்தைக் கொட்டினாள் இந்திரா. நானோ, அவனையும் எங்களுடன் வெளியே அழைத்துப்போய் புழுங்குவானேன் என்று எங்கும் தனியே செல்ல ஆரம்பித்தேன்.

    பள்ளிக்குப் போக ஆரம்பித்ததும், “ஏம்மா அப்பா என்னோட பேசறதே இல்லே?  என் ப்ரெண்ட்ஸோட அப்பா எல்லாம் வெளியே கூட்டிட்டுப் போறாங்க, சேர்ந்து விளையாடறாங்களே!” ஏக்கத்துடன் வந்த குரலை ஒரு நாள் கேட்க நேர்ந்தது.

    `அப்படி ஒரு எண்ணம் வேறு இருக்கிறதாடா பயலே உனக்கு?’ என்று கொக்கரித்தேன். ` எனக்கும் என் இந்திராவுக்கும் இடையே புல்லுருவிபோல வந்தாயே!  என் அன்புக்காக ஏங்கி, ஏங்கி வாடிப்போ!’

    அடுத்த நாள், “நம்ப பாபுவுக்கு மலாய்ப்பாடம் கஷ்டமாயிருக்காம். அதனால..,” என்று இழுத்தாள் இந்திரா. பயத்தில் கண்களைச் சுருக்கினாள்.

    பதிலுக்கு, “அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றே? முட்டாள்தனத்துக்கு எவனைக் கொண்டதோ!” என்று சீறினேன்.

    அதை லட்சியம் செய்யாது, “இந்த மூணாங்கிளாஸ் படிப்பு ஒங்களுக்கு ஒண்ணும் கஷ்டமா இருக்காது. நீங்க கொஞ்சம் கவனிச்சுக்கிட்டா..!”

    ஓ! எனக்கும் பாபுவுக்கும் இடையே இருக்கும் அகழியை அடைக்கும் முயற்சியா?

    “வேற வேலை இல்லே. டியூஷன் வெச்சுக்க ஒன் மக்குப்பிள்ளைக்கு”.

    எவ்வளவோ நம்பிக்கையுடன் வந்தவள் அதிர்ந்துபோனாள். நான் மனதுக்குள் சிரிக்கிறேன்.

    புண்பட்ட மனம் பிறரைப் புண்படுத்துவதில்தான் இன்பம் காணுமோ?

    `அவசரம்! உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு வரவும். வார்டு எண்…!’

    அலவலகத்தில் செய்தி கிடைத்தபோது, மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை. பதட்டத்துடன் விரைந்தேன்.

    என் இந்திரா! அவளுக்கு என்ன ஆயிற்றோ!

    ஒரு வேளை, தற்கொலை முயற்சியோ?

    நீ இல்லாவிட்டால், அனாதைகளாகிவிட்ட நானும் பாபுவும் ஒருவர்க்கொருவர் பற்றுக்கோடாக மாறமுடியும் என்று யோசித்தாயா, இந்திரா?

    உயிருடன் இருந்து சாதிக்க முடியாததை என் இறப்பு சாதித்துவிடும் என்றுதான் அவள் அந்த முடிவுக்கு வந்திருக்கவேண்டும்.

    புதிய வேதனையின் விஸ்வரூபத்தில் பழைய வேதனை சுருங்கிப்போயிற்று.

    பிறருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று புரிந்துகொள்ளாத முட்டாளாக இருந்துவிட்டேனே!

    `இந்திரா! இனிமேல் உன் மனதைப் புண்படுத்தவே மாட்டேன். என்னை விட்டுப் போய்விடாதே!’ மானசீகமாகக் கெஞ்சினேன். எதையும் இழக்கும் தறுவாயில்தான் அதன் அருமை புரிகிறது.

    எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சி.

    என் வரவை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றிருந்தவள் படபடப்புடன் எதையோ கூறியதைக் கேட்கும் நிலையில் நான். அங்கேயே அவளை ஆரத் தழுவ வேண்டும்போல இருந்தது.

    அவளுடைய வேதனையில் பங்கேற்கத் தோன்றவில்லை. நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்பட்டது.

    அப்பாடா! அபாயம் பாபுவுக்குத்தானா?

    ஏதோ விபத்தாம். உயிருக்கே அபாயமாம். எனக்குள் ஒரு சிலிர்ப்பு. என் ஆருயிர் மனைவிக்கும் எனக்குமிடைய வந்த கோடரி சக்தியிழந்து, நிரந்தரமாகக் கீழே விழப்போகிறது!

    எனக்கு அவள், அவளுக்கு நான். நான்-இந்திரா. வேறு அர்த்தமற்ற உறவுகளுக்கே அங்கே இடமில்லை.

    என் இன்பக் கனவுகளிலிருந்து என்னை உலுக்கியது அந்த அழுகுரல்: “நான் சொல்லச் சொல்ல அப்படியே நிக்கறீங்களே! அப்படிப் பாக்காதீங்க. (என் எண்ண ஓட்டம் அவளுக்கு எப்படிப் புரிந்தது?) ஒண்ணை மட்டும் நினைவு வெச்சுக்குங்க. அவன் இல்லாட்டி நானும் இல்லே. நான் கொண்டுவந்த உயிர் ஒங்களால போனா..,”  மேலே கூறமுடியாது விம்மினாள். மிரட்டலாக இல்லாது, அழுகுரலாக அவள் சொன்னதைப் பரீட்சித்துப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

    நான் ரத்த தானம் அளித்து, எத்தனையோ பேரை பிழைக்க வைத்திருக்கிறேன். இந்திராவுக்காக இதுகூடச் செய்யமாட்டேனா இப்போது!

    சிறிது பொறுத்து, “நம்ப பாபுவைச் சீக்கிரமே வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிடணும். பாடமெல்லாம் வீணாகிடும். நான் கத்துக்குடுக்க வேண்டியது எத்தனையோ இருக்கு,” என்று உளறிக்கொட்டினேன்.

    அவன் பிறப்பின் பின்னாலிருந்த நிழலைத்தான் என் ரத்தத்தால் துரத்திவிட்டேனே!

    இந்திரா என்னைக் காதலுடன் பார்த்தாள்.

    Share
  • ஒரே ஒரு இட்லி (சிறுகதை)

    ஒரே ஒரு இட்லி (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “அம்மா! எனக்கு இன்னும் ஒரு இட்லி!” சமையலறைக்கு வெளியே இருந்த இடத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாது கத்தினான்.

    ஓயாத பசி ஏன் என்று யோசித்ததில் இன்னும் அதிகமாகப் பசித்தது. அந்த பதினைந்து வயதுப் பையனுக்கு உடலை வளர்க்க வேறு வழி கிடையாது என்பது புரியவில்லை.

    ஒரே மகனை அகாலத்தில் பறிகொடுத்த துக்கம் ஆறாது, சற்றுத் தொலைவில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு ஆத்திரம் பொங்கியது. “அதான் இந்த வயசிலேயே அப்பனை முழுங்கிட்டியே! போதாதா? இன்னும் இட்லியை வேற முழுங்கணுமா?” என்று பதிலுக்குக் கத்தினாள்.

    அவ்வளவுதான். தட்டை ஒரு பெரிய ஓசையுடன் தள்ளிவிட்டு, கையைக்கூடக் கழுவாது வாசலை நோக்கி நடந்தான் பையன்.

    அவன் கேட்டபடி இட்லியை எடுத்துக்கொண்டு வந்தவள், “இட்லி கொண்டுவான்னு என்னைக் கேட்டுட்டு, எங்கே போறான்?” என்றாள் முணுமுணுப்பாக.

    “சுப்பு போனதிலிருந்தே இவனுக்கு மூளை சரியில்லை!” என்று அனுமானித்தாள் பாட்டி. “எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார் தாத்தா!” என்று என்றோ இறந்துபோன கணவரை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

    `கட்டுப்பாடு,’ `ஒழுக்கம்’ என்று நினைத்து, கையில் பிரம்புடன் அவன் பின்னாலேயே நடந்தவர் அந்தத் தாத்தா.

    “ரெண்டு வயசுக் குழந்தையை ஏம்பா ஓயாம திட்டறீங்க? அதுக்கு என்ன தெரியும்?” என்று கெஞ்சலாகக் கேட்ட மகனை அலட்சியமாகப் பார்த்தார் கிழவர்.

    “ஆண்பிள்ளையை அடிச்சு, மிரட்டி வளர்க்கணும். அப்போதான் கெட்டுப்போக மாட்டான். கடைசிக் காலத்திலே நமக்கு ஆதரவா இருப்பான்,” என்று உபதேசித்தார். “இப்போ நீ இல்லியா?”

    தந்தை கையால் தான் வாங்கிய அடிகள் நினைவிலெழ, அதன்பின் மகன் வாயைத் திறக்கவில்லை. தன் சிறு வயதில் தான் அடைந்த ஆத்திரம், ஆனால் அப்பாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத கையாலாகாத்தனம், அதுவே தன்னையும் எளிதில் உணர்ச்சிவசப்படுத்துகிறவனாக மாற்றியது – எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.

    அதன்பின் தந்தையைப் பிடிக்காது போக, `வயதில் மூத்தவர்களே இப்படித்தான்!’ என்றெழுந்த கசப்பு ஆசிரியர்களையும்கூட வெறுக்க வைத்தது.

    அரைகுறையாகப் படிப்பு நின்றுபோனது நிம்மதியாக இருந்தது. `படி, படி’ என்று அப்பா இனி உயிரை வாங்கமாட்டார்.

    தனக்கென ஒரு குடும்பம் அமைந்த பின்னர்தான் தோன்றியது சுப்புவுக்கு, அப்பாவை எதிர்ப்பதாக நினைத்து, படிப்பை நிறுத்தியது சரியில்லையோ என்று. எதுவும் மாறவில்லை — அப்பாவிற்குப் பதில் மேலதிகாரி, ஓயாது அவனிடம் குற்றம் கண்டுபிடிக்கத், தன் மனப்பொருமலை மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் தணித்துக்கொள்ளப் பார்த்தான். ஆனால் நிம்மதி என்னவோ கிடைக்கவில்லை. `இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்புதான் மிஞ்சியது.

    `இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்பு எழ, வேகமாக நடந்த மாதுவுக்கு ரயில் நிலையத்தைப் பார்த்ததும் ஒரு வழி தோன்றியது.

    முதலிலேயே தண்டவாளத்தின்மேல் படுத்துக்கொண்டால், யாராவது பார்த்து, எழுப்பி விடுவார்கள் என்று யோசித்து, பிளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றுகொண்டான்.

    ஒரு கை அவனைப் பிடித்து இழுத்தது. “தம்பி! விழுந்துடப் போறே!”

    “விடுங்க,” என்று திமிறினான். “நான் சாகணும்”.

    அந்த மனிதருக்கு அறுபது வயதிருக்கும். “ஏம்பா? பெயிலாயிட்டியா?” குரலில் கனிவு.

    “ஊகும்”.

    “பின்னே?”

    “அப்பா செத்துப் போயிட்டாரு!”

    “அடப்பாவமே! துக்கம் தாங்காமதான் இந்த முடிவுக்கு வந்தியா?” தனக்குள் கேட்டுக்கொள்வதுபோல் பேசியவர், “வா! காண்டீனில் சாப்பிட்டபடியே பேசலாம்,” என்று, அவனை எதுவும் பேசவிடாது அழைத்தார். பிடித்த கை இன்னும் இறுகியிருந்தது.

    “காலையில ஏதாச்சும் சாப்பிட்டியா?” அவன் சாப்பிட்ட வேகம் அப்படிக் கேட்கவைத்தது.

    “ஒரே ஒரு இட்லி!” சுயபரிதாபத்துடன் வந்தது குரல். “இன்னொண்ணு கேட்டப்போ எங்க பாட்டி `அதான் அப்பனை முழுங்கிட்டியே’! ன்னு..,” குரல் விக்கியது.

    “அப்பாவோட அம்மாவா?”

    “ம்!”

    “பாவம்! அவங்க துக்கத்தை ஒம்மேல ஆத்திரமா காட்டி இருக்காங்க. நீ செத்துப்போனா, ஒங்கம்மாவும் பிள்ளையைப் பறிகொடுத்த வருத்தத்திலே இப்படித்தானே ஆகிடுவாங்க?”

    வாயருகே போன கை நின்றது. தன் உணர்ச்சிகளிலேயே ஆழ்ந்துபோன தனக்கு ஏன் அம்மாவைப் பற்றியும் நினைக்கத் தோன்றவில்லை?

    அம்மா!

    வாயில்லாப்பூச்சி!

    வீட்டுக்கு வெளியில் தன்னைப் பிறர் நடத்தியதுபோல் மனைவியிடம் அதிகாரம் செலுத்திய கணவன், மகனை மிஞ்சிய மாமியார்.

    தானும் போய்விட்டால், அந்த அப்பாவி அம்மாவின் கதி?

    அவனையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அவனுடைய மனநிலை புரிந்திருக்க வேண்டும். “சீக்கிரமா சாப்பிடு. அடுத்த ரயில் வரப்போ, தண்டவாளத்திலே குதிக்கத் தெம்பு வேணாம்?” என்றார் கேலியாக.

    அவருடைய சிரிப்பில் அவனும் கலந்துகொண்டான்.

    Share
  • ரெண்டுங்கெட்டான் (சிறுகதை)

    ரெண்டுங்கெட்டான் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தனக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் என்று தாயிடம் புகார் செய்தபோது அவளுக்கு ஏழு வயது.

    அது ஏன் அம்மா சுகந்தி, என்றும் அப்பா `மலரு’ என்றும்,  பள்ளித்தோழிகள் சுகி என்றும் அழைக்கிறார்கள்?

    “எனக்கு ஏம்மா இவ்வளவு நீளமான பெயர் வெச்சீங்க?” என்று சிணுங்கினாள்.

    “அதவா கண்ணு? எனக்கு சுகந்திங்கிற பேரு பிடிச்சுது. அப்பாவோ, மலருன்னுதான் வைக்கணும்னு பிடிவாதம் பிடிச்சாரு!”

    புன்னகையால் விரிந்த இதழ்களை மூடிக்கொண்டாள் மகள்.

    “நாங்க ரெண்டு பேரும் விட்டுக்குடுக்கல. கடைசியில, `இதுக்கு என்ன சண்டை?’ன்னு சுகந்த மலர்னு வெச்சோம். அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? வாசனையுள்ள மலர்!”

    சமாதானம் மட்டுமல்ல, பெருமையும் ஏற்பட்டது சுகந்தாவிற்கு. தோட்டத்திலிருந்த மல்லிகையையும் ரோஜாவையும் விரும்பிச் சூடிக்கொண்டாள்.

    மலர் என்ற தான் எப்படி மாலாவாகிப்போனோம் என்று சற்றுப் பெரியவளானதும் புரிந்துகொண்டாள்.

    சீனர்களுக்கு ‘ர’ என்கிற எழுத்து தகராறு. அவர்கள் மொழியில் அது கிடையாதாம். சிலர் அதற்குப் பதில் லகரத்தைப் பயன்படுத்துவார்கள் — ராகவன் என்ற அவளுடைய மாமாவின் பெயர் `லகாவான்’ என்று மாறுபட்டுவிட்டதுபோல். சீன ஆசிரியைகளுக்கு அவள் மாலா.

    அடுத்த சில ஆண்டுகள் எவ்விதக் குழப்பமுமின்றி நகர்ந்தன.

    பன்னிரண்டு வயதில் அடையாளக்கார்டு எடுக்கவேண்டும்.

    “நீ எடுத்த பிள்ளையா? என்னடா, அப்பா அம்மா ரெண்டுபேர் சாயலும் இல்லியேன்னு பாத்தேன்!” என்று ஆசிரியை கூற, சுகந்தாவுக்கு எதுவும் புரியவில்லை.

    வீடு திரும்பியதும், “எடுத்த பிள்ளைன்னா என்னம்மா?” என்று கேட்டாள். அப்போது அவளுக்குத் தெரியவில்லை, தாயின் பதிலால் தன் வாழ்க்கையின் தடம் மாறிப்போகுமென்று.

    தாய் முதலில் பயந்தாள். பிறகு, `இதெல்லாம் மறைக்கக்கூடிய சமாசாரமா என்று உண்மையைச் சொன்னாள்: “மத்தவங்க குழந்தையை தன்னோட குழந்தையா வளக்கறது!”

    “ஏன் அப்படிச் செய்யணும்?”

    “பெத்தவங்களுக்கு ஏதோ அசௌகரியம்”.  வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன் கூறினாள்.

    “ஏழையா இருந்திருப்பாங்களா?”

    “அப்படியும் இருக்கலாம். ஏனோ அவங்களால குழந்தையை வளக்க முடியல. தத்து எடுக்கிறவங்களுக்குப் பிள்ளை பெறமுடியாம ஏதோ கோளாறு. இதனால இப்போ ரெண்டு பக்கத்திலேயும் நிம்மதி”.

    நிம்மதிதானா? மகிழ்ச்சி கிடையாதா?

    அதற்குமேல் எதுவும் கேட்காது, முகம் வாட அப்பால் நகர்ந்தாள் பெண்.

    `அம்மா’ என்று உயிரையே வைத்திருந்தோமே! அந்த அம்மா, மீனாம்பாள், தன்னைக் குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கியிருக்கிறாள் — சாமான் போட்டு வரும் பிளாஸ்டிக் பையைக்கூட ஒருமுறை உபயோகப்படுத்திவிட்டு, வேறு எதற்காவது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுத்தப்படுத்தி வைப்பதுபோல!

    இந்தக் குடும்பத்தில் தானும் ஒரு குப்பை. என்றைக்காவது எதற்காகவாவது பயன்படும் என்று சோறு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

    அழுகை ஆத்திரமாக மாறியது. தனக்குச் சொந்தமில்லாதவளை எதற்காக `அம்மா’ என்று அழைப்பது?

    அப்போதிலிருந்து சுகந்தாவின் குணமே மாறிப்போயிற்று. பள்ளிக்கூடத்தில் அவளைப் போன்ற சில பெண்கள் தோழிகளாக அவளை ஏற்றுக்கொண்டபோது, `வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை!’ என்று தோன்றிப்போயிற்று.

    “நாம்ப சந்தோஷமா இருக்க கூடாதுன்னுதான் சாமி அம்மான்னு ஒருத்தரைப் படைச்சிருக்கிறாரு,” என்றாள் உமா. இத்தனைக்கும், அவளைச் சுமந்து பெற்ற தாய்!  இரவு நேரங்களில் மகள் தனியாகச் சற்றே பெரிய பையன்களுடன் ஊர்சுற்றுவதைக் கண்டித்ததால் எழுந்த கோபம் வெறுப்பாக மாறி இருந்தது.

    “சரியாச் சொன்னே, உமா,” என்று பாராட்டினாள் கமலி. “எங்கம்மாவை அவங்க வீட்டில அதிகம் படிக்கவைக்கல. அதனால, என்னை எப்பவும் `படி, படி’ன்னு பிராணனை வாங்கறாங்க,” என்று பொருமினாள். “போன பரீட்சையில நல்லா செய்யலேன்னு ரூமில போட்டுப் பூட்டிட்டாங்க. மூணு நாள்! அம்மாவாம் அம்மா!”

    தன்னையுமறியாது, அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டாள் சுகந்தா. இப்படியெல்லாம் செய்து தன்னைத் துன்புறுத்தவில்லை அம்மா என்று தான் நம்பிய மீனாம்பாள்.

    இருந்தாலும், `இனிமே என்னை அம்மான்னு கூப்பிடவேமாட்டியா?’ என்ற ஏக்கம் பெருக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் குடிகொண்டிருப்பதைப் பார்த்து ஒரு குரூர திருப்தி எழுந்தது சுகந்தாவுக்கு. வளர்ப்புத்தாயை இன்னும் எப்படியெல்லாம் நோகடிக்கலாம் என்பதுபோல் நடந்துகொண்டாள், தன்னையுமறியாது.

    உமாவின் பிறந்தநாள் விழா என்று போனவள், அங்கு முன்பின் தெரியாத ஒருவனுடன் நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பும்போது நள்ளிரவு. அவன் அவளைவிட மூத்தவனாக இருந்தபோதும் அவளை மதித்துப் பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை. அவளுடைய அறிவையும் அழகையும் எப்படிப் புகழ்ந்தான்!

    வழக்கத்துக்கு விரோதமாக முன்ஹாலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அமைதியான முகத்துடன் மீனாம்பாள் உட்கார்ந்திருந்தாள்.

    அவளைக் கவனியாததுபோல உள்ளே செல்ல முற்பட்டாள் சுகந்தா.

    “இப்படி வந்து ஒக்காரு. ஒங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.” வழக்கத்துக்கு விரோதமாக அவள் குரலில் இருந்த கண்டிப்பு சுகந்தாவைப் பணியவைத்தது.

    “நான் நல்லவிதமா வளத்தா, ஒன் பிறப்பை மாத்திடலாம்னு நினைச்சேன். அது தப்புன்னு இப்போ தோணுது”.

    சுகந்தா விழித்தாள். என்ன சொல்ல வருகிறாள்?

    “ஒனக்கு இப்போ ரெண்டுங்கெட்டான் வயசு. நீ குழந்தையுமில்லே, வளந்த பெரியவளும் இல்லே. ஒனக்கு இன்னும் ஒலகம் புரியல. அதான் ஒன்னைப் பெத்தவ செஞ்ச தப்பையே நீயும் பண்ணறே!”

    சுகந்தா நிமிர்ந்து உட்கார்ந்தாள். தான் கேட்க நினைத்ததைத் தானே சொல்கிறாள்.

    “அவளுக்கும் அப்போ பதினஞ்சு வயசுதான். கூடப் படிக்கிற பையனோட கண்ட கண்ட படங்களை ஒண்ணாப் பாத்துட்டு…! சுதந்திரம்னு நினைச்சு மனம்போனபடி நடந்துக்கிட்டா. அவ வயத்திலே நீ! படிப்பு பாதியில நின்னுபோச்சு.” பழைய சம்பவத்தில் மனம் நிலைக்க, சற்றே நிறுத்தினாள்.

    “மைனர் பொண்ணைக் கற்பழிச்ச குத்தத்துக்காக அந்தப் பையனைப் போலீஸ் பிடிச்சுக்கிட்டுப்போச்சு”.

    பிறக்குமுன்பே தாய் தந்தை இருவர் வாழ்க்கையையும் நாசமாக்கியிருக்கிறேன்!  சுகந்தா மெல்ல விசும்பினாள்.

    “அந்த அம்மா செஞ்ச தப்பை நீயும் செய்யக்கூடாது, சுகந்தி. அப்புறம் ஒனக்குப் பிறக்கப்போற குழந்தையும் நிம்மதி இல்லாமத் திண்டாடும்”.

    சுகந்தாவின் மனத்தில் பல கேள்விகள் எழுந்தன.

    அப்புறம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று?

    சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியேறியதும் பையனுடைய வாழ்க்கை சீரடைந்ததா?

    அதெல்லாம் தெரிந்து இப்போது என்ன ஆகப்போகிறது!

    `யார் எப்படிப் போனால் எனக்கென்ன!’ என்று அவற்றை ஒதுக்கித் தள்ளியபோது, தானும் அப்படி ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோமே என்ற நிம்மதி பிறந்தது.

    ஓடி வந்து, “அம்மா!” என்று விம்மியபடி மீனாம்பாளை இறுக அணைத்துக்கொண்டாள் சுகந்தா.

    Share
  • பாலிவுட் டான்ஸ் (சிறுகதை)

    பாலிவுட் டான்ஸ் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தான் தினமும் ஆபீஸ், வேலை என்று உயிரை விட, கிடைத்த நேரத்திலெல்லாம் மனைவி ஹாயாக சோபாவில் படுத்தபடி புத்தகங்கள் படிக்கிறாளே என்ற எரிச்சல்  பிறந்தது சிவாவிற்கு.

    “எதுக்கு எப்ப பாத்தாலும் துப்பறியும் நாவலே படிச்சுக்கிட்டிருக்கே?” முகத்தைச் சுளிக்காது கேட்டாலும், குரலும் தொனியும் அவளை மட்டம் தட்டுவது போலிருந்தது.

    தனக்குப் பிடித்ததைச் செய்ய ஏன் இவ்வளவு தடை?

    முகம் மாறாது, “நாலு பக்கத்துக்கு ஒரு கொலை! யார் குத்தவாளின்னு யோசிக்கிறப்போ சுவாரசியமா இருக்கு. அதோட, நாம்ப அப்படியெல்லாம் கஷ்டப்படலியேன்னு ஒரு நிம்மதி!” என்று அடுக்கினாள் அலமேலு.

    அவளுடைய விளக்கம் அவனிடம் எடுபடவில்லை. “உருப்படியா எதையாவது படி. படிக்க விஷயமா இல்லே?” என்றபடி நகர்ந்தான்.

    அன்று வேலை முடிந்து வீடுதிரும்பும்போது, சிவாவின் கையில் ஒரு பை. “இந்தா, அலமு! ஒனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். ஒனக்குத்தான் படிக்கப் பிடிக்குமே!” என்று குத்தலாகக் கூறியபடி, ஒரு பையை மனைவியிடம் நீட்டியவன், “அதுக்காக வீட்டையும் குழந்தையையும் கவனிக்காம இருந்துடாதே!” என்று கேலிவேறு செய்தான்.

    பையைப் பிடுங்காத குறையாக வாங்கினாள் அலமேலு. உள்ளே பார்த்தவள் முகம் சுருங்கியது. அறுபது வயதுக்குமேல் ஆன கிழடுகள், `போகிற வழிக்குப் புண்ணியம் தேடலாமே!’ என்ற நப்பாசையுடன் படிக்கும் புத்தகங்கள்!

    அவளுடைய தாத்தாதான் இதையெல்லாம் படிப்பார்.

    அவளோ, `பெரியவங்க கதையெல்லாம் நீ படிக்கக்கூடாது!’ என்று அம்மா ஓயாது கண்டித்ததால், `அப்படி அதில் என்னதான் இருக்கிறது?” என்ற ஆர்வத்துடன் எட்டு வயதிலிருந்தே காதல் நவீனங்களையும், பத்திரிகைகளையும் படித்தவள். படித்தது எல்லாம் புரியாவிட்டாலும், ஏதோ ரகசியக்குற்றத்தில் ஈடுபட்டதுபோன்ற த்ரில் ஏற்பட்டது.

    ஒரு வழியாகப் பதின்ம வயதை அடைந்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. `அம்மா பார்த்துவிடுவார்களோ!’ என்று பயந்து, பயந்து இனி படிக்கவேண்டாம்.

    ஒரு தலைமுறைக்குமுன், `நான் டான்ஸ் கத்துக்கட்டுமாம்மா?’ என்று தாயிடம் கேட்டதும், அவளுடைய பதிலும் மறக்குமா!

    `அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ எப்படி ஆடினாலும், எல்லா ஆம்பளையும் ஒன்னோட ஒடம்பைத்தான் உத்து உத்துப் பாப்பான்!’

    அன்று அம்மா. இன்று கட்டியவரா!

    அப்போதுதான் இனிமேல் பிறர் சொல்வது எதையும் கேட்டு நடக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

    *                                               *                                                    *

    “ரேகாவை டான்ஸ் கிளாசில சேர்க்கப்போறேன்”. உத்தரவு கேட்டாற்போல் இல்லை. தகவல் தெரிவிக்க நினைத்தாள். அவ்வளவுதான்.

    “ம்!” தூக்கக்கலக்கத்தில் பதில் வந்தது.

    மறுநாள், “கிளாசில கொண்டுவிடுன்னு என்னை இதுக்கெல்லாம் இழுக்காதே!” என்று அவன் கறாராகச் சொன்னபோது, அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

    “சேச்சே!” தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை மகளுக்கு அளிக்கப்போகும் பெருமையுடன் மறுத்தாள்.

    எந்த நாட்டிய வகுப்பில் சேர்ப்பது என்று ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த குழப்பம் கணவன் வாங்கிவந்த ஆன்மிகப் புத்தகத்தில் ஒன்றைப் புரட்டியபோது அகன்றது.

    பரமசிவனுக்கும் பார்வதிக்கும் போட்டி நடந்தது என்று ஆரம்பித்தது கதை.

    `ஆணுக்கும் பெண்ணுக்கும் நாட்டியப்போட்டியா! பலே!’ சுவாரசியம் மேலிட, மேலே படித்தாள்.

    முடிவு அவளுக்குப் பிடிக்கவில்லை. `ஊர்த்துவத் தாண்டவம்’ என்று, சிவன் காலைத் தலைக்குமேல் தூக்க, சக்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டாளாம்.

    சிவகாமி நாணினாள், களிப்புடன் சிரித்தாள், அதிர்ந்தாள் என்றெல்லாம் விதவிதமாக விமரிசனங்கள் எழுந்திருந்தாலும், கடவுள் செய்ததை முன்னுதாரணமாகக் கொண்டுவிட்டார்கள்.

    ஒரு பெண் தன் காலைக் கண்டபடி தூக்கக்கூடாது — இது ஆண்கள் விதித்த விதி.

    `எங்களுக்கு மட்டும் என்ன, காலிலே பலம் கிடையாதா? எத்தனை பாலிவுட் சினிமாவிலேயும், தொலைகாட்சியிலேயும் பார்க்கிறோம்!’ அலமேலுவுக்கு ஆத்திரம் பொங்கியது. `இப்படி எதையாவது சொல்லிச் சொல்லியே பெண்களை அடக்கி வைக்கிறது நம் சமுதாயம்!’

    பரதநாட்டியம் வேண்டாம் என்று முடிவெடுத்தாள். பெண்கள் இடுப்பை ஆட்டக்கூடாது, காலைத் தலைக்குமேல் தூக்கக்கூடாது என்று காலத்துக்கு ஒவ்வாத எதையெதையோ கடைப்பிடிக்கச் சொல்வார்கள்.

    *                                               *                                                    *

    அந்த நடன நிகழ்ச்சிக்கு இரு மாதங்கள் இருந்தன.

    வகுப்பில் சேர்ந்த ஒரு வருடத்துக்குள் மகள் மேடையில் ஆடப்போகிறாள்! அலமேலுவுக்குத் தலைகால் புரியவில்லை.

    “இதிலே பைஜாமா காஸ்ட்யூம் தைக்கணும். உடம்போட ஒட்டினாப்போல இருக்கணும்”. என்று தான் கையோடு கொண்டுவந்திருந்த புடவையைக் காட்டினாள். “மயில்கழுத்து கலர்! கிழிச்சுத் தைச்சா அழகா இருக்கும்”.

    “கொஞ்சம் பழசு போல இருக்கே!” என்று தயங்கினார் தையற்காரர்.

    “நான் சொல்றபடி செய்யுங்க. புடவையை அப்படியே, மடிப்பு கலையாம, புதுசாவே வெச்சிருக்கேன்,” லேசான அதட்டலும் பெருமிதமாகவும் வந்தது குரல்.

    அவளுடைய கல்யாணத்திற்கு அம்மா அதை வாங்கி வந்தபோது, `என்னைக் கேட்காமலேயே, எனக்குப் பிடிக்காத பச்சை கலரிலே ஒரு புடவை வாங்கிட்டு வரணுமா!’ என்று ஏற்பட்ட கொந்தளிப்பில், ஒருமுறைக்குப்பின் அதை உடுத்தவேயில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அந்தப் புடவைக்கு விமோசனம்.

    ஒரு சிறு தயக்கமும் ஏற்பட்டது. “அதெல்லாம் தெச்சுடலாம்மா. ஆனா லூசா தைக்கலாமே! சின்னப்பிள்ளை! ஒரே வருஷத்திலே போட்டுக்க முடியாம போயிடும்”.

    “தொளதொன்னு வேண்டாம். காலைப் பிடிக்கப் பிடிக்க இருக்கட்டும்”.

    இவளுடன் பேசிப் பயனில்லை என்று மேலே எதுவும் பேசாது அதை வாங்கிக்கொண்டார். வரும் வியாபாரத்தை விடுவதாவது!

    அருமை மகளுடைய உணவில் சில மாற்றங்களைச் செய்தாள் அலமேலு. ஆடத் தெம்பு வேண்டாமா!  தினமும் உருளைக்கிழங்கு, வெண்ணைபோன்ற `சத்துணவு’ வகையறா.

    எதிர்பார்த்திருந்த அந்த முக்கியமான தினம் ஒருவழியாக வந்தது.

    “எவ்வளவு அழகா இருக்கு, பாரு!” மயில் கழுத்து வண்ண பைஜாமாவைத் தடவிக்கொடுத்தாள் தாய். “போட்டுக்கோ, வா!”

    “ரொம்ப டைட்டா இருக்கும்மா!” என்று சிணுங்கினாள் பதின்மூன்று வயது மகள் ரேகா. அம்மாவின் போஷாக்கில் அந்தச் சில மாதங்களிலேயே உடலளவு மாறிப்போயிருந்தது.

    “இதுதான் இப்போ ஸ்டைல்! திருஷ்டி படறமாதிரி அழகா இருக்கேடி. ஹிந்தி சினிமா டைரக்டர் எவனாவது ஒன்னைப் பாத்தா, அப்படியே கொத்திட்டுப் போயிடுவான்!”

    சினிமா நடிகைமாதிரி இருக்கிறோமாமே? கர்வத்துடன் மேடை ஏறி, வளைந்து, நெளிந்து ஆடினாள் சிறுமி.

    அம்மா சொல்லியிருந்த சிவன்-பார்வதி கதை அப்பெண்ணின் நினைவிலேயே நிலைத்திருந்தது. `நான் அந்தக்காலத்துப் பெண்ணில்லை,’ என்று சற்றே கோபத்துடன் காலைத் தலைமேல் தூக்க, `டர்’ என்ற ஓசையுடன் தொடையருகே ஆடை கிழிந்தது. காற்றே படாது, உள்ளேயே அமுக்கி வைத்திருந்ததால் புடவை நைந்து போயிருந்ததால் வந்த வினை! உள்ளாடை எட்டிப்பார்த்தது.

    கண்களில் நீர் வழிய, பாதி நடனத்திலேயே அவசரமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, உள்ளே ஓடினாள் நடனமணி.

    முதல் வரிசையில் அமர்ந்து, `என் பொண்ணு!’ என்று பக்கத்திலிருந்தவர்களிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்த அலமேலு அதிர்ச்சியில் திறந்த வாயை இரு கரங்களாலும் பொத்தினாள். உடல் பின்னோக்கிச் சரிந்தது.

    ஈராண்டுகளாக வெளியில் எங்கும் போகமுடியாது வீட்டிலேயே அடைந்து கிடந்து அலுத்த மக்கள், `நாட்டியத்தை ரசிக்க முடிகிறதோ, இல்லையோ, நாலுபேரைப் பார்த்துப் பேசலாமே!’ என்று திரளாக வந்திருந்தார்கள்.

    “பாவம்!” என்ற சில குரல்கள் அவளுக்கும் கேட்டன.

    Share
  • தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு.

    பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, `கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா!

    ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை.

    செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில் தங்க ஒத்துக்கொண்டார்.

    தொற்றுநோய் அவருடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது.

    ஏதோ ஊசியாம், குத்திக்கொண்டால் நோய் அண்டாதாம் என்று பலருடன் உட்கார்ந்து, ஊசி போட்டுக்கொண்டார்.

    அன்று இரவெல்லாம் தலைவலியும், காய்ச்சலும் அவரைப் படுத்த, `சாமி குத்தம்! இதோ இருக்கு பத்துமலை! ஆனா, போக முடியல்லியே!’ என்று காரணம் கற்பித்துக்கொண்டார்.

    இந்தப் புது வருடத்தில், `பக்தர்கள் போகலாம்!’ என்று அரசாங்கமே அனுமதித்தது.

    சின்னசாமியின் குதூகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை.

    “ரெண்டுவாட்டி ஊசி குத்திக்கிட்டவங்கதான் போக முடியும்பா,” என்று செல்வம் விளக்கினான், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    இரண்டாவது வாய்ப்பு வந்தபோது, “நல்லா இருக்கிறபோதே ஊசி குத்தினா, திரும்பவும் காய்ச்சலும், தலைவலியும் வந்து தொலைக்கும். எதுக்குடா வீண் வம்பு!” என்று போக மறுத்துவிட்டார்.

    அவரைப்போல் வயதானவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மகனும் வற்புறுத்தவில்லை.

    ஆனால், கடந்த இரு வாரங்களாக, எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்ட தந்தையைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

    காலமெல்லாம் ஓடாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டவர்! அவருடைய இந்த சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், தான் என்ன மகன்!

    “வா, செல்வம்! ஒடம்புக்கு என்ன?” என்று வரவேற்றான் மணிவண்ணன்.

    “நல்லாத்தான் இருக்கேன். அப்பா தைப்பூசத்துக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்படறாருடா,” என்று இழுத்தான் செல்வம்.

    “கூட்டிட்டுப் போறது!” என்றான் பால்ய நண்பன்.

    “அதுக்குத்தான் ஒன்னைப் பாக்க வந்தேன்”.

    “பத்துமலைக்கு எப்பவும் லட்சக்கணக்கானபேர் வருவாங்க. இந்த வருசம், ஒரே சமயத்திலே ஆறாயிரம் பேர்தான் உள்ளே போகலாமாம். எனக்கோ கும்பலே ஆகாது. ஒனக்குத் தெரியாதா!” என்று கழன்றுகொள்ளப்பார்த்தான் மணி.

    “அதில்லேடா..,” என்று இழுத்த செல்வம், “நீ டாக்டர்தானே! இரண்டாவது ஊசியும் போட்டாச்சு அப்படின்னு ஒரு சர்டிபிகேட் குடுத்தா..!”

    முதலில் அதிர்ந்த நண்பன், ஒரு புண்ணிய காரியத்துக்காகத்தானே செய்யப்போகிறோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான்.

    “எத்தனை?” என்று செல்வம் கேட்டபோது, “சரிதான் போடா,” என்று செல்லமாக விரட்டினாலும், `காசு பாக்க இது சின்னாங்கான (சுலபமான) வழியா இருக்கே!’ என்ற எண்ணமும் எழாமலில்லை.

    ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிடலாமே!

    குறுக்கு வழியில் போக மனிதர்களுக்கா பஞ்சம்!

    ஆளுக்கு நானூறோ, ஐநூறோ விதித்தால், ஒரே மாதத்தில்.. என்று அவன் மூளை கணக்குப்போட ஆரம்பித்தது.

    தைப்பூசத்திற்கு முதல் நாள்.

    எல்லா தினசரிகளின் முதல் பக்கத்திலும், `டாக்டரின் மோசடி’ என்ற பெரிய தலைப்பு. முகத்தைச் சட்டையால் மூடியபடி டாக்டர் மணிவண்ணன். இருபுறமும் காவல்துறை அதிகாரிகள்.

    முருகனைத் தரிசித்துவிட்ட பெருமகிழ்ச்சியிலிருந்தார் சின்னசாமி.

    “என்னப்பா? இப்படி தொண்டைக்கட்டும், இருமலுமா இருக்கீங்களே! டாக்டர்கிட்ட கூட்டிப்போறேன், வாங்க,” என்ற மகனிடம், “எனக்கு ஒண்ணுமில்லேடா,” என்று மறுத்தார்.

    அப்போது அவருக்குத் தெரியவில்லை, தான் யாரிடமிருந்தோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட நோயைத் தானும் பரப்பிவிட்டோம் என்கின்ற உண்மை.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 100

    பழகத் தெரிய வேணும் – 100

    நிர்மலா ராகவன்

    எல்லாரும் முட்டாள்கள் – என்னைத் தவிர

    நமக்குப் பலரைத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் நம்மைப் புரிந்துகொள்கிறார்கள்?

    நாம்தான் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறோமா?

    அனேகமாக எல்லா மனிதர்களும் தம்மை ஒத்தவர்களை மட்டும்தான் ஏற்பார்கள். மற்றவர்களெல்லாம் முட்டாள், அல்லது அசடு என்று நம்புவார்கள்.

    மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி, முந்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

    சில நிமிடங்களோ, வாரங்களோ மட்டுமே ஒருவருடன் பழகினால் அவரைப் புரிந்துகொள்ள முடியுமா?

    புரிந்துகொள்ள முடியாததால்தான் ஏளனம்.

    கதை

    என் சக ஆசிரியை ரொஜிதா (ROZITA) பதின்ம வயது மாணவர்களை, `இந்தக் குரங்குகள்’ என்றுதான் குறிப்பிடுவாள்.

    பொறுக்க முடியாது, ஒருமுறை, “உன் குழந்தைகளை `குரங்கு’ என்று சொல்வாயோ?” என்று கேட்டுவிட்டேன்.

    “சேச்சே!” என்றாள், சிரித்தபடி.

    அவளைப்போல், `நான்’, `எனது’ என்றே யோசித்தால், `நம்’ என்பது புரியாமல் போய்விடும்.

    பிறர் நிலையில் நம்மைப் பொருத்திக்கொள்வது

    பிறரைக் குறை கூறுவதற்கு முன், நமக்கு வாய்த்த நல்வாழ்க்கை அவர்களுக்கும் அமைந்திருக்குமா என்று சற்று யோசித்தால் அவர்களது நடத்தைக்குக் காரணம் புரியும்.

    பதின்ம வயதிற்கே உரிய குணம் எல்லாவற்றிற்கும் சிரிப்பது.

    வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள், வீட்டில் அன்பு கிடைக்காதபோது, தம்மையொத்த பிற மாணவர்களுடன் பழக நேர்ந்தால் அவர்களுக்குக் கூடுதலான மகிழ்ச்சி.

    ரொஜிதாவுக்கு அது புரியவில்லை.

    கதை

    ஒரு மாணவன் எதற்கும் அடங்கவில்லை.

    அவன் தாயைச் சந்தித்தபோது, “கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் பேசுகிறான்,” என்று புகார் செய்தேன்.

    அவள் பெருமூச்சுடன், “வீட்டிலும் அப்படித்தான்!” என்றாள்.

    எங்கு, எப்போது தவறு நேர்ந்திருக்கும்?

    இத்தகைய பெற்றொர், சிறு குழந்தைகளைத் திட்டக் கூடாது, அவர்கள் மனம் நோக எதையும் செய்யவும் கூடாது, அவமானம் அடைந்துவிடுவார்கள் என்று நம்பி வளர்க்கிறார்கள்.

    நினைவு தெரிந்த நாளிலிருந்து தான்தோன்றித்தனமாக எதையும் செய்து பழகியவன், திடீரென்று பதின்ம வயதில் கண்டிப்பை ஏற்பானா?

    இன்னொரு கதை

    வகுப்பில் கீழ்ப்படியாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாது இருந்த மாணவர்களுள் ஆதாமும் ஒருவன்.  ஆனால் பரீட்சையில் பௌதிகப் பாடத்திலிருந்த, கஷ்டமான கணக்குகளைச் சரியாகப் போட்டிருந்தான்.

    எனக்குச் சந்தேகம் வந்தது. “என்னெதிரில் இப்போது போட்டுக் காண்பி!” என்றேன்.

    சற்றும் யோசியாது, சில வினாடிகளிலேயே முடித்தான்.

    மகா புத்திசாலி. ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது.

    வகுப்பு முடிந்ததும் என்னுடைய அறையில், சில நண்பர்களுடன் வந்து, என்னைச் சந்திக்குமாறு ஆதாமிடம் கூறினேன்.

    எடுத்த எடுப்பிலேயே, “உன் அப்பா உங்களுடன் இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

    “அப்பப்போ,” என்றான், அடக்கிய குரலில்.

    “உன் நண்பர்கள் எதிரில் இதைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்டுக்கொண்டேன்.

    `அதனால் என்ன! நாங்கள் பார்க்காததா!’ என்பதுபோல் அவர்கள் கையை மேலும் கீழும் ஆட்டினார்கள், அலட்சியமாக.

    தந்தை வேறு பெண் துணைகளுடன் இருக்கும்போது ஆண்குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    தாயின் தனிமையை, வருத்தத்தை நம்மால் போக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி வேறு.

    இவனைப்போல் எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பேன்!

    அவர்களிடம், “உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே இருக்கும் பிரச்னை இது. நீ வீணாகக் குழம்பாமல், உன் எதிர்காலத்தைப் பற்றி யோசி,” என்று பலவாறாக எடுத்துக் கூறுவேன்.

    அதற்குப் பின், நான் `எள்’ என்றால் எண்ணெய்தான்!

    ஆசிரியர்களும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும்

    பயிற்சிக் காலத்தில், ஆசிரியர்கள் உளவியல், சமூக இயல் ஆகியவற்றையும் கற்கிறார்கள்.

    உதாரணம்: வசதி நிறைந்த குடும்பத்திலிருந்து வந்த மாணவன், சுய முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு, நல்ல விதமாக நடப்பான்.

    படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வியில் நாட்டம் பிறக்கும்? அதற்காக, அவர்களைத் துச்சமாக நினைத்துவிடலாமா?

    பரீட்சையில் தேர்ச்சி பெறும் அளவுக்கு இவை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மை பெரும்பாலான, எதிர்கால ஆசிரியர்களுக்கு. ஆகையால், செயலில் கொண்டுவர முனைவதில்லை. அவர்களுடைய பின்னணி, கல்விக்கூடங்கள் ஆகியவையும் குறுக்கே வர, கற்றது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகப் போய்விடுகிறது.

    அப்படியிருக்க, மாணவர்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

    தத்தம் கண்ணோட்டத்திலிருந்து பிறரை எடைபோடுவது அநேகமாக தவறான முடிவாகத்தான் இருக்கும்.

    கதை

    “அந்தப் பெண்ணை விரும்பி மணந்தானா! அவன் எவ்வளவு புத்திசாலி! அவளோ, மக்காக இருக்கிறாளே!”

    கல்வித் திறனிலும், உத்தியோகத்திலும் உயர்ந்தவன் அவன்.

    `நான் நிறையப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்து, சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்!’ என்ற கொள்கை கொண்ட பெண்கள் தனக்குச் சரிப்படாது என்று அவனுக்குத் தோன்றியது. அவர்களால் தனது பெரிய குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வி எழ, குடும்பப் பாங்கான பெண்ணை மணந்தான்.

    மணவாழ்க்கையும் சுமுகமாக இருந்தது.

    அவனுக்குத் தன் மனம் புரிந்திருந்தது. அதனால் பிறரையும் புரிந்துகொள்ள முடிந்தது.

    ஏன் சிலரைப் பிடித்துப் போகிறது?

    `அவர் என்னைப் புரிந்துகொள்கிறார்!’ என்ற உணர்வு எழும்போது நிறைவாக இருக்கும்.

    அப்படிப்பட்டவர் குறைகளே இல்லாதவர் என்று அர்த்தமில்லை. ஆனால், குறைநிறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்டவர். அதனால், பிறருடைய குறைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும் முதிர்ச்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களைப்போல் அல்லாதவர்கள் அவர்கள் மனத்தை நோகடித்தாலும், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று புரியும். `பழிக்குப் பழி’ என்று வீம்பு இருக்காது.

    எப்படிப் புரிந்துகொள்வது?

    பொதுவாக, பிறர் பேசும்போது, தான் எங்கு, எப்படி குறுக்கிடலாம் என்று காத்திருப்பதுதான் பலருக்கு வழக்கம். இது இயற்கை.

    அப்படியின்றி, ஒருவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால், ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சிலரது புன்னகைக்குப் பின்னால் வருத்தம் இருக்கலாம். அன்பு கோபமாக வெளிப்படலாம்.

    பலபேர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் மட்டும் மற்றவரது முகபாவம், பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றை மௌனமாகக் கவனித்துக்கொண்டிருப்பார். இவர் பிறரைப் புரிந்துகொள்ளும் அறிவாளி.

    அது புரியாது, `கர்வி,’ அல்லது, `பழகத் தெரியாதவன்’ என்று பட்டம் சூட்டிவிடுவார்கள்.

    தம்பதியருக்கு ஒரே மனமா?

    புதிதாக மணமானவர்கள் முதலில் பேசிக்கொள்வது: `நமக்குள் ரகசியமே இருக்கக் கூடாது. அப்போதுதான் நாம் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்”.

    இரண்டுமே தவறான எதிர்பார்ப்புகள்.

    `நான் திருமணத்திற்கு முன்பே பலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்!’ என்று அவர்களுள் ஒருவர் கூறினாலும், மற்றவரின் பொறாமையையும், `இப்போது மட்டும் ஒழுக்கமாக இருந்துவிடுவாயோ?’ என்ற சந்தேகத்தையும்தான் தூண்டிவிடுகிறார்.

    நம்மைப் பற்றி நாமே எவ்வளவுதான் விளக்கினாலும், பிறர் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது.

    பிறர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று யோசித்தே நடப்பதால், பலரும் உண்மையாக நடப்பதுமில்லை.

    கதை

    நீண்ட காலம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்த முதியவர்களைக் கண்டு, அதிசயப்பட்டுக் கேட்டார்கள்: “உங்களுக்குள் சண்டையே வந்தது கிடையாதா? அப்படி ஒரு புரிந்துணர்வா!”

    அதற்கான பதில்: “என்னிடம் மட்டும் குறையே கிடையாதா, என்ன! கணவருடைய (மனைவியின்) குறைகளைப் பெரிதுபடுத்துவானேன்! ஏதாவது கெட்டுப் போயிருந்தால், அதைச் சரிசெய்து, பயன்படுத்தும் தலைமுறை எங்களுடையது!”

    (நிறைவு)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 99

    பழகத் தெரிய வேணும் – 99

    நிர்மலா ராகவன்

    தானே வராது வாய்ப்பு

    “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!” பலரும் முனகுவார்கள்.

    நாம்தான் அதைத் தேடிப் போகவேண்டும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

    அதிர்ஷ்டம் எப்படிக் கிடைக்கும்?

    முதலில் உழைப்பு. அதன்பின், உழைப்பைப் பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை நழுவ விடாதிருப்பது.

    கதை

    இசைத் துறையில் பட்டம் பெற்ற இளைஞர் குருசாமி.

    திரையுலகில் சேர்ந்தால், புகழுடன் நிறைய பணமும் கிடைக்குமே என்ற பேரவா அவருக்கு.

    தான் மெட்டமைத்த பாடல்களைப் பதிவு செய்து, ஓர் இயக்குநருக்கு அனுப்பினார்.

    “உடனே வாருங்கள்,” என்ற அழைப்பு வந்தது.

    இப்போது குருசாமிக்குத் தயக்கம் ஏற்பட்டது. திரையுலகைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்களே! அங்கு போய், தான் மாறிவிட்டால்?

    “நான் அங்கு சென்றால், எப்போதும்போல் நல்லவனாகவே இருக்க முடியுமோ என்ற பயம் வந்துவிட்டது,” என்று என்னிடம் தெரிவித்தார்.

    இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டாமா?

    போதாக்குறைக்கு, `கல்யாணமானா, நிச்சயம் குழந்தை இருக்கணும்,’ என்று எவளோ கூறியிருக்கிறாள். அப்படித் தன் மனத்தைக் கலைத்தது அவள் தவறு என்பதுபோல், அதையே பலமுறை ஆத்திரத்துடன் கூறினார்.

    ஆரம்பிக்கும் முன்னரே அச்சமும் தயக்கமும் அடைந்தால் வாய்ப்பு நழுவிவிடாதா!

    எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளுமுன், அதனால் நன்மையும், நீடித்த மகிழ்ச்சியும் கிடைக்குமா என்று யோசிக்க வேண்டுவது அவசியம். அதற்கு ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பின், குருசாமி போயிருக்க வேண்டிய இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு, பெரும் புகழை அடைந்தார்.

    கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை உரிய காலத்தில் பற்றிக்கொள்ளாத வருத்தம்தான் குருசாமிக்கு நிலைத்தது.

    இலக்கு சரியாக இருந்து, அதற்கான ஆராய்ச்சியைச் செய்து, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் தோல்வி வராது.

    ஊக்கமளிக்கும் உறவினர்களும், ஓரிரண்டு நண்பர்களும் இருந்தால் கூடுதல் நன்மை.

    ஏன் தோல்விக்கு மேல் தோல்வி?

    “நான் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்விதான்!” என்று புலம்புகிறவர் தன்னால் என்ன முடியும் என்பதை உணராதவர். தன் மனத்தின் குரலைவிடப் பிறருடையதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். நம் முன்னேற்றத்தில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை?

    சவால்கள், அவமதிப்பு போன்றவற்றைப் பொறுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தினால்தான் முன்னேற முடியும்.

    எந்த வாய்ப்பும் பிரச்னையாகத்தான் ஆரம்பிக்கும்.

    கதை

    எங்கள் பள்ளியில், கேள்வித்தாள்களை ஆசிரியர்களே கணினியில் தட்டச்சு செய்துவிடவேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டுவந்தனர்.

    உணர்ச்சிவசப்பட்டு, `எப்போதும் நான் என் கைப்படத்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதம் பிடித்தால் புதியனவற்றைக் கற்று முன்னேறும் வாய்ப்பு கிடைக்குமா?

    ஒரு கணினி வாங்கிப் பழகத் தொடங்கினேன். நாற்பது வயதுக்குமேல் எதையும் கற்பது எளிதல்ல. எரிச்சலாக இருந்தது.

    அதை மாற்றி, உற்சாகம் அளித்துக்கொள்ளும் வகையில், தினசரியின் முதல் பக்கத்திலிருந்த செய்திகளிலிருந்து முதலிரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைத்து ஒரு வாக்கியம் அமைத்தேன்.

    அது இப்படி இருக்கும்: மந்திரி – மரண தண்டனை – கற்பழிப்பு, கொலைக் குற்றத்திற்காக …

    எனக்கே சிரிப்பு வர, அலுப்பு மறைந்தது.

    சுமாராகத் தட்டச்சு செய்ய வந்தபின், உட்கார்ந்திருந்த போதெல்லாம் விரல்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும், மனக்கண்ணால் இசைப்பலகையை இயக்குவது போல்.

    “டீச்சர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியுமா?” என்று ஒரு மாணவன் அதிசயப்பட்டுக் கேட்க, பெருமையாகிவிட்டது.

    முதலில் ஆங்கிலம், அதன்பின், தமிழ்.

    கட்டாயம் என்பதால் கற்றது இப்போது பல வகைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

    கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எப்போதும் அலசுவது சரிதானா?

    கோலாலம்பூரில் பெருவெள்ளம்

    கடற்கரைப் பகுதியில் இல்லாத தீபகற்ப மலேசியத் தலைநகரில் நூறு வருடங்களாக வெள்ளம் கிடையாது.

    இப்போதோ, பாதுகாப்பு வேண்டி, மக்கள் கூரைமேல் ஏறினார்கள்.

    ஒருவர் தாம் வைத்திருந்த படகால் அவர்களுக்கு உதவி செய்யலாமே என்று தோன்ற, காரின்மேல் படகுடன் சென்றார் – பலமுறை.

    நல்லது செய்தாலும், சந்தேகப்படவென்று சிலர் இருப்பார்களே!

    குருத்வாரா

    சீக்கியர்கள் ஒன்றுகூடவும் வழிபடவும் அமைக்கப்பட்ட இடங்கள், குருத்வாரா.

    சேவை மனப்பான்மை கொண்ட பிற இனத்தவரும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினர்.

    “சீக்கியர்கள் தயாரிக்கும் உணவை நாம் சாப்பிடலாமா? ஹலாலாக (halal) இருக்குமா?” என்ற கேள்விகள் எழுந்தன, மலாய்க்காரர்களிடமிருந்து.

    அது என்ன, ஹலால்?

    ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இஸ்லாமியரே பூசை செய்தபின் கொல்வதாம். இதற்கு விலக்கு மீன், முட்டை.

    “மத, இன வித்தியாசம் பாராது, பிறருடைய கொள்கைகளை மதித்து, தன்னலமின்றி சேவை செய்பவர்களை அவமதிப்பதா?” என்று ஒரு மலாய்ப் பெண்மணி காரசாரமாக இணையத்தில் கேட்டிருந்தார்.

    சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும், குடிநீர்ப் பற்றாக்குறை.

    உணவு மட்டுமின்றி, ஆடை, குடிநீர், சிசுக்களுக்கான டயாபர் போன்றவற்றையும் பொதுமக்கள் அளித்தனர். பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.

    `இதனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிக்க அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். `பிறரது துன்பத்தில் பங்குபெற முடிந்ததே!’ என்ற நிறைவு போதும் அவர்களுக்கு. அவர்களே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டும் இருக்கலாம். அந்த அனுபவத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

    `நம்மால் இவ்வளவு செய்ய முடியுமா!’ என்ற அதிசயம் எழ, அதனால் நிறைவும் ஏற்பட்டிருக்கும்.

    கதை

    குமரன், பத்து வயதுப் பையன். பொருளாதார வசதி குறைந்த விதவைத் தாய் மறுமணம் செய்துகொண்டதும், எங்கள் உறவினர் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தான். படிப்பைத் தொடர்ந்தாலும், தேர்ச்சி பெற முடியவில்லை.

    வீட்டு வேலை முடிந்ததும், ஓயாது தொலைக்காட்சிதான் துணை.

    “நேரத்தை இப்படி வீணடிக்கிறாயே!” என்று அவனைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்த்துவிட்டார்கள்.

    அலுவலகம் ஒன்றில் உத்தியோகம் கிடைத்தபோதும், தொடர்ந்து உழைத்தான். பிறருக்கு உதவும் மனப்பான்மை வலுத்தது.

    ஆனால், அதைப் பெருமையாகக் கருதவில்லை.

    தீயணைக்கும்போதோ, வெள்ளம் பெருகியபோதோ தான் அடைந்த அனுபவங்களை ரசித்துக் கூறுவான்.

    அந்த வேலைகளெல்லாம் எளிதாக இருந்திருக்குமா? உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாமே!

    எதையும் எதிர்பார்த்துக் குமரன் பிறருக்கு உதவவில்லை. ஆனாலும், சவால்களை `வாய்ப்பு’ என்று எடுத்துக்கொண்டதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டியது குமரனுக்கு.

    “Smooth seas do not make skilful sailors” (கடலில் கொந்தளிப்பு இல்லாவிட்டால், தேர்ந்த மாலுமிகளாக ஆக முடியாது (ஆப்பிரிக்கப் பழமொழி).

    “எனக்குச் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை!” என்று மூக்கால் அழுபவர்கள் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள், அவை கஷ்டம் என்று.

    `கஷ்டமாக இருந்தால் என்ன!’ என்று துணிகிறவர்களே அந்த சந்தர்ப்பத்தையே நல்ல வாய்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

    யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை?

    அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 98

    பழகத் தெரிய வேணும் – 98

    நிர்மலா ராகவன்

    உணர்வும் முதிர்ச்சியும்

    “இதை நான் செய்யவில்லை. அவள்தான் இப்படிச் செய்யச்சொன்னாள்”.

    “அவள் குறுக்கிட்டதால்தான் நான் செய்ய ஆரம்பித்த காரியத்தில் தவறு நேர்ந்துவிட்டது”.

    இப்படிக் கூறுகிறவர்கள் சிறுவயதினர் மட்டுமில்லை. வயது ஏறியிருந்தாலும், உணர்ச்சிபூர்வமாக முதிர்ச்சி அடையாதவர்கள் பலர் உண்டு.

    கதை

    யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ஆசிரியை கமலம். அவளைப் பிறர் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமோ?

    தான் எப்போது குறுக்கிடலாம் என்றே காத்திருப்பாள், தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ள.

    `நீ எப்போது காரோட்டப் பழகினாய்?’

    `நீ எப்போது தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டாய்?’

    கமலத்தை நோக்கிக் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இப்படித்தான் ஆரம்பிக்கும் :“நான் பம்பாயில் M.SC பண்ணிக்கொண்டிருந்தபோது..!”

    இப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு முறையால் வதைக்கப்பட்டிருக்கலாம். தாழ்வு மனப்பான்மையை மறைத்துக்கொள்ள பிறரைச் சாடுவார்கள். அப்போதுதானே தாம் உயர்ந்துவிட்டதைப்போல் தோன்றிவிடும்!

    (ஆங்கிலமோ, மலாயோ, கமலத்தின் உச்சரிப்பு வேற்றுமொழியின் வாடையுடன், வித்தியாசமாக இருக்கும். `அவள் பேசுவது யாருக்குப் புரிகிறது!’ என்று பிறர் கேலி செய்வது அவளுக்குத் தெரியாமல் போயிருக்குமா!)

    அவளைப்போல், உடல் வளர்ந்திருந்தாலும், முதிர்ச்சி இல்லாதவர்களுக்குப் புதியனவற்றை அறியும் ஆர்வம் இருக்காது. அது பிறரைப் பற்றிய வம்பாக இருந்தால் மட்டும் சுவாரசியமாகப் பங்கெடுப்பார்கள்!

    கதை

    என் பள்ளித் தலைமை ஆசிரியை தன்கீழ் இருப்பவர்களைப் பாடாய்ப்படுத்தினாள். பள்ளி முழுவதும் கேட்கும்படி எந்த ஆசிரியர் பெயரையாவது சொல்லி, அவர் செய்த தவற்றையும் பிரகடனப்படுத்துவாள்.

    இதுபோன்ற செய்யக்கூடாத பலவற்றைச் செய்தாள்.

    பொறுக்கமுடியாது, நான் அவள் செய்த அட்டூழியங்களையெல்லாம் பட்டியலிட்டு, தினசரிக்கு அனுப்பினேன். (அவள் பெயரைப் போடவில்லை. ஆசிரியருக்கு மட்டும் எந்தப் பள்ளி என்று குறிப்பு அனுப்பியிருந்தேன்).

    அது வெளியானதும், நானடைந்த பிரபலத்தைப் பொறுக்கமுடியாது, “இதனால் உனக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்று தெரியுமா?” என்றாள் கமலம், சவாலாக.

    “எழுதி அனுப்புமுன்னரே எல்லாவற்றையும் யோசித்துவிட்டேன்,” என்றேன் அலட்சியமாக.

    என்னை அதிர்ச்சி அடையச் செய்யவேண்டும் என்று அவள் கேட்டிருப்பாள். நான் அடையாத அதிர்ச்சி அவளிடமே திரும்பியது.

    உணர்ச்சி முதிர்ச்சி கொண்டவர்கள்

    ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராது, எல்லோரையும் ஒரேமாதிரி நடத்துவதால், மதிக்கப்படுகிறார்கள்.

    ஆனால், அவர்களை துச்சமாக நடத்துகிறவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவார்கள்.

    கதை

    செடிகளை விற்பனை செய்யும் நர்சரி அது.

    வேறு நாட்டைச் சேர்ந்த இளம் தொழிலாளி செடிகளை விற்றுக்கொண்டிருந்தான், தன் முதலாளியின் சார்பில்.

    “ஏய்! இது என்ன விலை?” என்று அதிகாரமாகக் கேட்டாள் ஒரு பெண்மணி. பெரிய காரில் வந்திருந்தாள். `இவனையெல்லாம் மதிப்பதாவது!’ என்ற அகம்பாவம் அவள் கேள்வியில் தொனித்தது.

    தான் தாழ்த்தப்படுவதை யாரால்தான் பொறுக்கமுடியும்!

    நான் வாங்கியதைப்போல் இரு மடங்கு விலையைச் சொல்லிவிட்டு, அந்த இளைஞன் என்னைப் பார்த்து, ரகசியமாகச் சிரித்தான்.

    தாம்பத்தியத்தில் உணர்ச்சி வேறுபாடு

    கதை

    ராமனுக்கும் சீதாவுக்கும் பெயரில் மட்டும்தான் பொருத்தம்.

    இருவரும் காரில் போகும்போது ஏதாவது தவறு செய்துவிட்டால், “உன்னோடு பேசியதால்தான் இப்படி!” என்று மனைவிமேல் பாய்வான் ராமன்.

    பேசியது அவன். தவறு செய்ததும் அவன். ஆனால், நடந்தது அவள் குற்றம்.

    தன் துணையாகவே இருந்தாலும், மனைவி வெற்றி அடையும்போது சிறுமையாக உணர்வார்கள் சில ஆண்கள். அதை மறைக்க, சமயம் கிட்டியபோதெல்லாம் அவளை மட்டம் தட்டுவார்கள் – பொது இடங்களில்கூட.

    அவர்களது குழப்பம் புரிந்து, அவ்வப்போது புகழ்ந்து, `எனக்கு நீங்களும் முக்கியம்தான்!’ என்பதுபோல் ஆதரவாக நடந்துகொண்டால், நாளடைவில் சற்றே மாறும் சாத்தியக்கூறு உண்டு.

    கதை

    திருமணத்திற்குப்பின் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தாள் மூர்னி. அவள் படிப்பை ஒட்டி, பெண்ணியத்தைப்பற்றி என்னைப் பேட்டி காண வந்திருந்தாள்.

    மலாய், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த தேர்ச்சி இருந்ததால், பிரபலமானவர்கள் சிலரைப் பேட்டி கண்டு, தினசரிகளுக்கு அனுப்பியிருந்தாள்.

    ஆங்கிலத்தில் சிலமுறை வெளியானதும், `இவள் தன்னை மிஞ்சிவிடுவாள் போலிருக்கிறதே!’ என்ற பயம் ஏற்பட்டது அவள் கணவனுக்கு.

    “அதன்பின், மூன்று நாட்கள் என்னுடன் பேசவேயில்லை,” என்று என்னிடம் தெரிவித்தாள். “நீங்கள் கூறிய கருத்துகளை எழுதி அனுப்ப தயக்கமாக இருக்கிறது. என் கணவர் மீண்டும் கோபித்தால் என்ன செய்வது?” என்று குழம்பினாள்.

    பல பெண்கள் திருமணத்திற்குமுன் கதை, கட்டுரை என்றெழுதி, பத்திரிகைகளில் அவை பிரசுரமும் ஆகியிருக்கும்.

    கல்யாணத்திற்குப்பிறகு அவர்களில் பெரும்பாலோர் காணாமல் போய்விடுகிறார்களே, ஏன்?

    `வீட்டு வேலை, குழந்தைகள்,’ என்று ஏதேதோ காரணம் காட்டினாலும், கணவரது பொறாமையைத் தூண்டிவிடுவானேன், இல்லறத்தில் குழப்பம் ஏற்படச் செய்வானேன் என்றுதான் யோசித்திருப்பார்கள்.

    `முன்பெல்லாம் நிறைய எழுவாயே! இப்போது ஏன் விட்டுவிட்டாய்?’ என்று அப்படியொரு மனைவியைக் கேட்கும் கணவன் தன் சொல்லும் செயலும் பிறரைப் பாதிக்கக்கூடும் என்பதை உணராதவன்.

    பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கக்கூடும் என்பது அப்படிப்பட்டவர்களுக்குப் புரிவதில்லை. தம் உணர்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதால், தாக்கப்படும்போது குறுகிவிடுவார்கள்.

    தொடர்ந்து எழுதும் பெண்கள்?

    இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன.

    ஒன்று, கணவர் ஊக்குவிக்கிறார், இல்லையேல், மனைவி எழுதுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

    (பிறரை ஊக்குவிப்பவர்கள் உணர்வு முதிர்ச்சி கொண்டவர்கள். எவ்விதத்திலும் பிறரைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். அதேபோல், பிறர் தம்மைக் கட்டுப்படுத்துவதையும் விரும்பாதவர்கள்).

    இரண்டு, எந்த எதிர்ப்பையும் லட்சியம் செய்யாது, எழுத்தே உயிர்மூச்சு என்றிருக்கும் பெண்கள்.

    எத்துறையில் பீடுநடை போடும் பெண்களுக்கும் இவை பொருந்தும்.

    அவர்களது ஆர்வத்தைத் தடைபோடுவதுடன் நில்லாது, கண்டபடி பழிக்கும் கணவன்மார்களைப் பொறுக்க முடியாததால்தான் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள் நடிகைகள்.

    பழி என்னவோ, பெண்களுக்கு.

    குடும்பத்தில் பாரபட்சம்

    ஒரே குடும்பத்தில் குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டால், தாழ்த்தப்பட்ட குழந்தையின் ஆத்திரம் பிறரையும் துன்புறுத்தவேண்டும் என்ற ஆத்திரமாக மாறலாம். அல்லது மன இறுக்கத்தில் கொண்டுவிடும்.

    பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் பழகும்போது, உயர்ந்தவர்களாக உணர்வோம். மேலான நிலையில் இருப்பவர்களுடன் பழக நேரும்போதோ, அவர்களுக்குச் சமமாக நடிக்க வேண்டியிருக்கும்.

    இப்பழக்கத்தால், சந்திப்பவர்கள் எல்லாரையும் மதிப்பும் மரியாதையுமாக நடத்தத் தவறிவிடுவோமே!

    குறையை நமக்குள் வைத்துக்கொண்டு, “ஏனோ, யாருமே என்னை மரியாதையாக நடத்துவதில்லை!” என்று வருந்துவதால் என்ன பயன்?

    கதை

    ஆசிரிய மேற்பயிற்சியின்போது, எங்கள் வகுப்பில் ஒருவர் கூறியது: “நான் என்ன செய்தாலும் என் தந்தையின் அன்பைப் பெற முடியவில்லை. என்னிடம் குறை கண்டுகொண்டே இருக்கிறார்!”

    அவர் முகத்தில் தாங்கமுடியாத வருத்தம். தங்கையிடம் மட்டும் அன்பைப் பொழிகிறாரே என்ற குழப்பம்.

    அவருக்குச் சித்திரம் வரைவதில்தான் ஆர்வம் என்று பிறகு கேட்டறிந்தேன். தந்தையோ, `விஞ்ஞானத்தில் பட்டம் வாங்கு,’ என்ற வற்புறுத்தியிருந்தார்.

    பிடிக்காத துறையில் அரைமனதுடன் ஈடுபட்டவர் அதில் சிறக்கவில்லையென்று, தந்தை ஓயாது தம் வார்த்தைகளாலேயே அவரை வதைத்தார் – பிறர் எதிரிலேயே.

    தந்தை அதிகம் படிக்காதவர். நிறைவேறாதுபோன கனவை மகன்மூலம் நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.

    மகனுக்கு என்ன பிடிக்கும், எது உகந்தது என்று புரிந்துகொள்ள விரும்பாது, தன் அதிகாரத்தை அவன்மேல் செலுத்த ஆரம்பித்தார். நாளடைவில், அதிகாரமே போதையாக ஏறியது. அதற்குப் பலி மகன்.

    நம்மை வருத்துகிறவர்கள் தம்மைத்தாமே ஏற்க முடியாதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்கள்மீது கோபம் வராது. பரிதாபம்தான் எழும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 97

    பழகத் தெரிய வேணும் – 97

    நிர்மலா ராகவன்

    குருட்டுத்தனம் வேண்டாமே!

    கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (BATU CAVES) தைப்பூசத் திருவிழா.

    “எங்கேடா போறோம்?”

    “யாருக்குத் தெரியும்?”

    லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுமாக கும்பல் திரண்டிருந்தது. பலவிதமான ஒலிகளுக்குமேல் அங்கு கேட்ட ஓர் உரையாடல் அது.

    தவிர்க்க முடியாத கும்பலில் சரி. ஆனால், எப்போதும் பிறரைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?

    `தடம் பதித்தவர்கள்’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம்.

    நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து, அதே தடத்தில் நடந்தால், நமக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமே என்ற நப்பாசை பலருக்கு. ஆனால், அவர்கள் காலடி எப்படிப் பிறர் கண்களில் படும்? திருப்திதான் கிட்டுமா?

    அரசாங்க ரீதியில் இப்படிச் செய்யும்போது, ஒரு நாட்டு மக்கள் ஆட்டுமந்தைகளாக அதிகார வர்க்கத்தினரைப் பின்தொடர்கிறார்கள்.

    வாலறுந்த நரி ஒன்று பிற நரிகளைக் கேலி செய்து, அவையும் தம் வாலை வெட்டிக்கொள்ளச் செய்ததாம். தன்னை வித்தியாசமாகக் கருதிவிடப்போகிறார்களே என்ற பயம் அதற்கு.

    சமீபத்தில் மலேசியாவில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான சமாசாரம் இது.

    மாஜி பிரதமர் ஒருவர், “சீனர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள். இன்னமும் தங்கள் வழக்கப்படி, உணவு உட்கொள்ள CHOP STICKS (குச்சிகள்) பயன்படுத்துகிறார்கள்! நம்மைப்போல் கையைப் பயன்படுத்துவதில்லை,” என்று பேசியிருந்தார்.

    எல்லா இனத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    `சீனர்கள் தம் உணவை மிகுந்த சூடாக உட்கொள்வார்கள். (குளிர்நாட்டுப் பழக்கம் அது). அத்தனை சூட்டில் கை வைக்கமுடியாது,’ என்று ஒருவர் விளக்க, நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்ற பழி கிட்டியது.

    தமக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்று பலரும் யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

    நம்மில் ஒவ்வொருவருக்கும் மூளை என்ற ஒன்று ஏன் தனித்தனியாக அமைந்திருக்கிறது?

    அதிகாரத்தை விரும்பும் சில அற்பர்கள் பயமுறுத்தியும், கேலி பேசியும் பிறரைப் பணியவைக்க முயல்வார்கள். அவர்கள் தைரியசாலிகளாக இருக்கமாட்டார்கள். அதை மறைக்கத்தான் முரட்டுத்தனம்.

    எல்லாரும் தம்மைப்போலவே நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் எதிர்த்திசையில் நடப்பவனுக்கு `கர்வி,’ `ஒற்றுமையாக இருக்காதவன்’ என்று பெயர் சூட்டிவிடுவார்கள்.

    “நீ ஓயாமல் தமிழ் புத்தகங்களைப் படிக்கிறாயே! நன்றாகவா இருக்கும்?” ஒரு மலாய் ஆசிரியை என்னைக் கேட்டாள், முகத்தைக் கோணியபடி.

    அவளுக்குப் புரியாத மொழியில் நான் படித்ததால் அவளுக்கு அச்சமோ?

    “எனக்குப் பிடிக்கும்!” என்றேன் அவள் முகத்தில் அடித்தாற்போல்.

    பழக்கவழக்கங்கள் புரியாது..

    பிற மனிதர்களை மட்டுமின்றி, பண்டைக்கால பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதும் ஒரு விதத்தில், அறியாமைதான்.

    தீபாவளியன்று எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்த ஒரு சீனர், “எதற்காக முன்வாசலில் தோரணம் கட்டுகிறீர்கள் என்று நான் பலரைக் கேட்டபோது, எல்லாரும், TRADITION (பாரம்பரிய வழக்கம்) என்றார்கள்,” என்றார், சற்று ஏமாற்றத்துடன். அறிவுப்பசி அவருக்கு.

    நல்லவேளை, நான் அதைப்பற்றிப் படித்திருந்தேன். “பலரும் நம் வீட்டுக்கு வரும்போது, அவர்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளியாகும் கரியமல வாயுவை பச்சை மாவிலைகள் உள்வாங்கிக்கொள்கின்றன. இது சுகாதார அடிப்படையில் உண்டான பழக்கம்,” என்று என் `அறிவாற்றலை’ வெளிப்படுத்திக்கொண்டேன்.

    இன்று பலரும் கட்டுவது பச்சை இலைகளால் அல்ல. பிளாஸ்டிக்காலான `மாவிலைத்’ தோரணம்!

    அரிசி மாவானான கோலத்தைப் போடுவது எறும்புபோன்ற சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு ஆகாரமாக. அழகுக்காக அல்ல.

    இதைப் பலரும் மறந்துவிட்டதால், பிளாஸ்டிக்கின்மேல் போடப்பட்ட வண்ணக்கோலம் அமோகமாக விற்பனையாகிறது.

    பெண்களைக் கிண்டல் செய்வது நகைச்சுவையா?

    பட்டிமன்றங்களில் பெண்களைப்பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார் ஆண் ஒருவர். `நகைச்சுவை’ என்று ஆண்கள் சிரிக்க, `நாமும் ஒத்துப்போய்விடலாமே!’ என்று பெண்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

    அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று எவரும் யோசிப்பதில்லை.

    கதை

    என் கல்லூரி நாட்களில், பிரபலமான ஒருவர் கோயிலில் கதாகாலட்சேபம் செய்ய வருவார். அவருடைய புகழும் வருமானமும் அதிகரிக்க, தான் எது பேசினாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் பிறந்தது அவருக்கு.

    இந்துப் புராணக்கதைகளின் நடுவே, தற்காலப் பெண்களைப்பற்றி இழிவாகப் பேச ஆரம்பித்தார். `சுவாரசியமாக இருக்கட்டுமே!’ என்று நினைத்திருப்பார். எல்லாரையும் சிரிக்கவைக்கலாம் என்ற அவர் நம்பிக்கை வீண்போகவில்லை.

    அதன்பின், நான் அவருடைய நிகழ்ச்சிக்குப் போக மறுத்துவிட்டேன்.

    “நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை!” என்று என்மேல் தாயாருக்குக் கோபம்.

    நான் மசியவில்லை.

    சில ஆண்டுகளுக்குப்பின், அம்மாவும் போவதை நிறுத்திவிட்டார், “பொண்களைக் கேவலமா பேசறார்!” என்று முகத்தைச் சுளித்தபடி.

    கூட்டத்தில் ஒருவர் சிரித்தால், சற்றும் யோசியாது, எல்லாரும் அவரைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்வரை பெண்களை இழிவுபடுத்தும் பேச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். `கும்பலோடு கோவிந்தா!’ என்பது இப்படிப்பட்ட நடத்தைக்குத்தானா!

    பெண்கள் ஆண்களிடம் தாம் காணும் குறைகளைப்பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ, ஆண்கள் கொதித்தெழுவார்கள்.

    எந்த உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் வேண்டும். ஆனால், அதைவிடப் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எளிதாயிற்றே!

    திரைப்படங்களைக் காப்பியடிப்பது

    திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், ஆண் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அறையலாம், மனம்போனபடி கேலி செய்யலாம் என்று காட்டுகிறார்கள்.

    முட்டாள்களைப் பின்பற்றி நடப்பவனும் முட்டாளாகிறானே! அதையெல்லாம் பார்த்துவிட்டு, அதேபோல் நடக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    இயக்குனர் ஒருவர், சிறிதும் மாற்றமின்றி, தான் சொல்லிக்கொடுப்பதுபோலவேதான் நடிகர்களும் பேசி, நடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். அப்படிச் செய்யாவிட்டால் தண்டனை என்று அவர்கீழ் வேலை பார்த்தவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

    நடிக்க வந்தவர்களின் மனோதர்மத்துக்கு இடங்கொடுக்காவிட்டால், எல்லாரும் ஒரேமாதிரிதான் நடிப்பார்கள். அதில் இயக்குனரின் கைவரிசை தெரியும். புதுமையோ, சுவாரசியமோ இருக்குமா?

    மதத்தின் பெயரால்

    “மத குரு” என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு, பெயரும் புகழுமாக இருக்கிறார்களே சிலர், எப்படி?

    கலை, தர்மம் இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்போல் எதையாவது ஆரம்பித்தால், நல்லவர்கள் பலர் அவருக்கு உதவியாக நடக்க முன்வருவார்கள். இது உலக நியதி.

    பல காலம் கழிந்தபின்னர்தான் அவர் செய்துவந்தது சமூக சேவை இல்லை, சுயநலம் என்பது வெளியாகும்.

    நான் அப்படி ஒருவரைச் சந்தித்திருக்கிறேன் – கலை நிகழ்ச்சிகளில்.

    அவர் நடக்கும்போதே சில பக்தைகள் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். மரியாதை என்பது ஒருபுறமிருக்க, ஒருவர் அப்படிக் கும்பிட்டால், அவர் செய்த பாபம் வணங்கப்பட்டவருக்குப் போய்விடுமாம்.

    சில ஆண்டுகளிலேயே, நடக்கக்கூட முடியாது அவர் தள்ளாடியதைக் கண்டு, “அவருக்கு என்ன, கான்சரா?” என்று அவருடைய மருத்துவரைக் கேட்டேன்.

    “அது மட்டும்தான் இல்லை. மற்ற எல்லா வியாதிகளும் இருக்கின்றன,” என்ற பதில் கிடைத்தது.

    பிறர் தன்னைப் பின்பற்றுகிறார்களே என்ற பெருமிதம் அப்போதாவது மறைந்திருக்குமா?

    ஏனென்று கேள்!

    குழந்தைகள் இயற்கையாகவே எதையும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களது அறிவுப்பசிக்குத் தீனி போடாது, `சும்மா தொணதொணக்காதே!’ என்று விரட்டிவிட்டால், அடங்கிவிடுவார்கள்.

    பதின்ம வயதில், `இப்படி நட!’ என்று அதிகாரம் செய்தால் கேட்பார்களா?

    `ஏன்? ஏன்?’ என்று கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் பிறர் கூறுவதையோ, செய்வதையோ பின்பற்றமாட்டார்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள். அவர்களைப் பார்த்துப் பிறர் அச்சமடையும் அபாயம் உண்டு!

    ஒரு மருத்துவர் கூறினார்: “தொண்டையில் வலி இருந்தால், கடையில் வாங்கும் மருந்துகளைவிட உப்பு கரைத்த வெந்நீரால் கொப்புளிப்பது சிறந்தது”.

    நான் அதை அப்படியே ஏற்கவில்லை. “ஏன், டாக்டர்?” என்று அவரை மடக்கினேன்.

    என் கேள்வியை எதிர்பாராத அவர் சற்று அயர்ந்துவிட்டார். அவரிடம் வேறு யாரும் அப்படி `எதிர்த்து’ப் பேசியதில்லை போலிருக்கிறது!

    “கூடுதலாக இன்னும் சில மணி நேரம் உப்பின் குணமாக்கும் தன்மை நீடித்திருக்கும்,” என்றார், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு.

    `டாக்டர் சொன்னால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்குத் தெரியாததா!’ என்பவர்களுக்கு: `அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியாதே!’

    Share
  • பழகத் தெரிய வேணும் – 96

    பழகத் தெரிய வேணும் – 96

    நிர்மலா ராகவன்

    தோல்வியா? அப்படியென்றால்?

    பதினேழு முறை இந்தியாவின்மீது படையெடுத்தார் முகம்மது என்ற பெயர்கொண்ட அரசர். அவருடைய நாட்டின் பெயர் கஜினி. ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதி.

    `முயற்சி திருவினையாக்கும்!’ என்று புரியவைக்கவோ, என்னவோ, கஜினி முகம்மதுவைப்பற்றி சரித்திர பாடத்தில் நுழைத்திருந்தார்கள். ஒரே முறை முயன்றுவிட்டு, பின் அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால், ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் அவர் பெயர் நிலைத்திருக்காது.

    ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அனைவருமே வெற்றி பெறுகிறார்களா? இடையில் நின்றுவிடாது, இறுதிவரை போனாலே வெற்றிதான் — முயலை வென்ற ஆமையைப்போல்.

    எந்தக் காரியத்தில் வெற்றி பெற்றவர்களை எடுத்துக்கொண்டாலும், முதல்முறையே வெற்றி கண்டிருக்கமாட்டார்கள். இருப்பினும், தோல்வி என்பதே அவர்கள் வாழ்வில் கிடையாது என்றுதான் கூறுவார்கள்.

    அவர்களைப் பொறுத்தவரை, வெற்றிக்கு எதிர்ப்பதம் அனுபவம். ஏனெனில், அதுதான் இன்னொரு முறை எப்படிச் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும்.

    கடினமான காரியத்தில் இறங்கினால், பல முறை தவறுகள் நிகழலாம். நீண்டகாலம் பிடிக்கும். அதில் வெற்றி பெற முக்கியமான தன்மை: பொறுமை.

    கதை

    நான் ஒரு குறும்படத்தில் நடித்தேன்.

    மகள் நாட்டியத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ஏழை விதவைத்தாய், தன் வருத்தத்தை வெளிக்காட்டத் தெரியாது, அவளை ஓயாது திட்டி, நல்வழிப்படுத்துகிறாள். இதுதான் கதை.

    தாயாக நான் நடித்தேன். நான் பேசவேண்டிய வசனத்தை என்னிடம் விட்டுவிட்டாள் இயக்குனர்.

    மொழி தமிழ். கரு: பரதநாட்டியம். இயக்குனரோ, மிஸ் ஆங் என்ற சீனப்பெண். மொழி, கரு இரண்டுமே அவளுக்குத் தெரியாது. ஆனால், கதை இப்படித்தான் செல்லவேண்டும் என்று கணித்திருந்தாள்.

    சில காட்சிகளில், அவளுடைய எதிர்பார்ப்பைக் கூறுவாள். முகபாவத்திலும், தலையசைவிலும் காட்ட முயற்சித்தேன்.

    ஒவ்வொரு முறையும், “Again!” (திரும்பவும்) என்பாள்.

    இப்படியே, ஒரு காட்சியில் பன்னிரண்டு முறை, அவளுக்குத் திருப்தி ஏற்படும்வரை மாற்றி மாற்றிக் காட்டினேன்.

    அந்தப் பாத்திரம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கும் என்று புரிந்துகொண்டு வெளியே கொண்டுவர அவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

    படம் முடிந்ததும், ஒளிப்பதிவாளர், “உங்கள் பர்சனாலிடிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, மிக வித்தியாசமான பாத்திரம் அது! நீங்கள் எந்த கல்லூரியில் நடிப்பு பயின்றீர்கள்?” என்று கேட்டார், மிக மரியாதையுடன்!

    நான் என்ன செய்தேன்! அதில் இயக்குனரின் விடாமுயற்சி, என்னால் முடியும் என்ற அவளது நம்பிக்கை இரண்டும் கலந்திருந்தன.

    “நான் இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறேன் என்று சொன்னதும், எல்லாரும் கேலியாகச் சிரித்தார்கள்!” என்று திரும்பத் திரும்பக் கூறி மகிழ்ந்தாள்.

    ஆரம்ப சூரத்தனம்!

    கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே?

    சிலர் ஒரு காரியத்தை உற்சாகமாக ஆரம்பித்துவிட்டு, விரைவில் ஆர்வம் குறைய, அதை அரைகுறையாகச் செய்வார்கள். அல்லது, கைவிட்டுவிடுவார்கள்.

    கதை

    தொடர்கதை எழுதும் எண்ணத்துடன் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஒரு கதையை ஆரம்பித்தார். ஒவ்வொரு பாகமும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஓரிரு வரிகளில் குறிப்பும் எழுதி வைத்துக்கொண்டார்.

    ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்க, பல வாசகர்கள் புகழ்ந்து எழுதினர். சீக்கிரமே கதையில் தொய்வு ஏற்பட்டது. `போரடிக்கிறது!’ என்ற ரீதியில் விமரிசனங்கள் வந்தன.

    என்னை ஒரு தொடர்கதை எழுதும்படி வேறொரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.

    `ஆகட்டும், பார்க்கலாம்,’ என்று தப்பித்துக்கொள்ளும் ரகமில்லை நான். நேரமின்மையைக் காரணம் காட்டி மறுத்தேன்.

    (தோல்வி கண்டுவிடுவோமோ என்ற அச்சத்தாலோ, அல்லது சோம்பல் ஏற்பட்டதாலோ, `நாளை பண்ணப்போகிறேன்!’ என்கிறார்களே! அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

    `நீங்கள் கூறுவதைப் பண்ணும் உத்தேசம் எனக்கில்லை!’ என்பதுதான்!)

    அவரோ, விடாக்கண்டன். “ப்ளாட் (PLOT) போட்டு வெச்சுக்குங்க,” என்று வற்புறுத்தினார்.

    எனக்கு அம்முறை சிறந்ததாகப் படவில்லை.

    கதாபாத்திரங்கள் நம் மனதில் சுழன்றுகொண்டிருக்கும்போதே கதையை எழுதிவிட வேண்டும். இது புரிந்து, ஒரே மூச்சில் எழுதினேன். வேறு எதிலும் மனதைச் செலுத்தவில்லை.

    ஓயாத உழைப்பால், கண்பார்வைதான் சற்று மங்கலாகப்போயிற்று!

    தன்னிரக்கம்

    ஒரு காரியத்தில் இறங்கிவிட்டபோது, நம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்று பார்வையை ஓடவிடலாமா? கவனம் சிதறிவிடுமே!

    கதை

    அரசாங்க முழுப்பரீட்சை என் மாணவன் ஒருவனுக்கு.

    திடீரென்று ஒருவர் வெளியிலிருந்து, “ஷூக்ரி!” என்று அவன் பெயரைக் கூவி, “தாத்தா இறந்துவிட்டார்!” என்று கத்தினார்.

    அவ்வளவுதான்! கையிலிருந்தவற்றை நழுவவிட்டு, பையன் பதட்டத்துடன் எழுந்தான்.

    நான் அவசரமாக வெளியே சென்று, தந்தையிடம், “பாதிப்பரீட்சையில் வெளியில் போனால், தேர்ச்சி எப்படிப் பெறமுடியும்?” என்று பலவாறாக விளக்கினேன். அவர் அரைமனதுடன் திரும்பிச் சென்றார்.

    “நீ பரீட்சைத்தாளில் கவனம் செலுத்து!” என்றபோதும், பையனால் முடியவில்லை.

    அதன்பின், ஷூக்ரி மிகவும் வருந்தினான் — தாத்தாவுக்காக அல்ல. “இந்த வருடம் நான் ஃபெயில்தான்!” என்று.

    தாத்தாவோ இறந்துவிட்டார். அவரைப் பார்க்க பேரன் போனால், என்ன செய்திருக்கமுடியும்?

    அதைவிட அவனுடைய எதிர்காலம் முக்கியமில்லையா?

    அவனுடைய தந்தை இதையெல்லாம் யோசிக்கவில்லை.

    அப்படிப் போடு பழியை!

    “என்னை யாருமே ஊக்குவிப்பதில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை,” என்று கூறி, தம் கையாலாகாத்தனத்திற்குப் பிறர்மீது பழிபோடுவார்கள்.

    ஊக்கம் என்பது நமக்குள்ளிருந்து வருவது. பிறரை எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    அறிவு, திறமை, கல்வி போன்ற குணங்கள் அமையப் பெற்றிருந்தாலும், பலர் வெற்றி பெற முடிவதில்லையே!

    அவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். அது மட்டும் போதுமா?

    நமக்குத் திறமை இருக்கிறது, நிறைய சாதிக்கவேண்டும் என்று துடிப்பாக இருப்பவரிடம், “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!” என்று அறிவுரை கூறுவார்கள் உற்றவர்கள்.

    “இதெல்லாம் உன்னைப்போன்றவர்களால் முடியாத காரியம்!” என்று தன்னம்பிக்கையைத் தகர்ப்பார்கள்.

    சொல்கிறவர்கள் எப்போதும் பாதுகாப்பை நாடுகிறவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பவர்கள் சாதிக்கமுடியாது.

    `என் குடும்பத்தினருக்கு நான் செய்வது பிடிக்கவில்லை!’ என்று விட்டுக்கொடுக்கும் ஒருவர் பிறகு வருந்த நேரிடும்.

    ஆர்வத்துடன் நாம் ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, நம் திறமையில் நமக்கே சந்தேகம் எழச்செய்கிறவர்களை அலட்சியம் செய்யவேண்டும்.

    நம் செய்கையால் அவர்கள் ஆத்திரப்படலாம் – தம்மை மதிக்கவில்லையே என்று. பிறருடைய உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

    செய்வதற்குமுன், எந்தப் புதிய காரியமும் கடினமாகத்தான் தென்படும். உழைக்க அஞ்சினால் எப்படி! அதையே சவாலாக எடுத்துக்கொண்டால், உற்சாகமாக இருக்கும்.

    “என்ன செய்வது? அதை எப்படிச் செய்வது?” என்று, நம்முடன் ஒத்துழைக்கும் ஒத்த மனத்தினரை நாடினால் வெற்றி பெறலாம். மனநிறைவு கிட்டும்.

    முன்னுக்கு வந்திருப்பவர்கள் நம்மைவிட எத்தனையோ கஷ்டங்களை, எதிர்ப்புகளை, கேலியைச் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால், தைரியம் எழும்.

    வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்

    மொழி, கலாசாரம், பொருளாதாரப் பிரச்னை போன்ற பல இன்னல்களையும் கடந்து, தாய்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் சில சமயம், உள்நாட்டவர்களைவிட அதிகமாக எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

    “என்ன ஆனாலும், மனம் தளராதே. விடாமுயற்சியுடன் போராடு!” என்று அவர்களது தாயோ, தந்தையோ அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்களாம்.

    விடாமுயற்சி உடையவர்களைத் தோற்கடிப்பது கடினம்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 95

    பழகத் தெரிய வேணும் – 95

    நிர்மலா ராகவன்

    சிந்தனையின் விந்தை

    ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் கடுமையான வேலையைக் கொடுத்தால், “என்னால் முடியாதே!” என்று தயங்கலாம். தன் ஆற்றல் எவ்வளவு என்று புரிந்ததால் வந்த பதில் அது.

    ஆனால், வயதும் திறமையும் கூடி இருந்தபோதும், அவ்வாறே கூறுவது எதிர்மறைச் சிந்தனை செய்யும் விபரீதம். ஒருவருக்குத் தன் திறமையில் நம்பிக்கை இல்லையென்று காட்டிவிடும்.

    அப்படித் தோன்றும்போது, அதை எதிர்க்க ஓர் உத்தி: `என்னால் முடியும். கண்டிப்பாகச் செய்து முடிப்பேன்!’’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொள்ளலாம்.

    எச்சரிக்கை: இதையே உரக்கக் கூறினால், கர்வம் என்ற பழிக்கு ஆளாக நேரிடும்! தன்னம்பிக்கையை வேறு எப்படித்தான் வளர்த்துக்கொள்வது!

    `முடியாது!’ என்று நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்துவிட்டால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி.

    ஒரே நிகழ்வை வெவ்வேறு நபர்கள் பார்க்கும்போது, அவர்களது கணிப்பும் மாறுபட்டிருக்கும்.

    கதை

    அன்று ஒரு பெண்ணிற்குக் கல்யாணம். அவளுக்கும், அவளைப் பெற்றவர்களுக்கும் பெருமகிழ்ச்சி. ஆனால், உறவினர்கள் அந்த சம்பந்தத்தில் எங்கே குறை என்று தேடினார்கள்.

    “வரதட்சணையே வேண்டாம் என்கிறார்களே! மாப்பிள்ளைப் பையனுக்கு ஏதோ கோளாறு இருக்கவேண்டும்!”

    “அவசர அவசரமாகக் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்றார்களே! ஏன் அப்படி?”

    பெண்ணின் தாய் இதற்குப் பதிலளித்தாள். “மாப்பிள்ளைக்கு லீவு முடிந்து, உடனே வெளிநாடு திரும்பவேண்டுமாம். விசாவும் காலாவதி ஆகிவிடுகிறது”.

    `இன்னும் எங்கு கோளாறு?’ என்று துடித்தார் ஒரு முதியவர். அவர் ஐந்து பெண்களைப் பெற்றுக்கொண்டு, திண்டாடுபவர். “அந்தப் பையன், அம்மாவுக்குப் பயப்படுகிறான். அவனைப் பேசவிடாமல், அந்த அம்மாவே பேசுகிறாள்!”

    பெண்ணின் தாய்க்குச் சந்தேகம் வந்தது. மணப்பெண்ணிடமே போனாள். “என்னென்னவோ சொல்கிறார்களே!” என்றாள் கவலையுடன்.

    மணப்பெண் சிரித்தாள். “நான் சந்தோஷமா இருந்தா, இவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியா இருக்குமான்னு ஒன்னையே கேட்டுக்கோ!”

    அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது.

    பிரச்னைகள் எதுவும் எழாத திருமணத்தைக் கண்டால் பொறாமைப்படுகிறவர்கள்தாம் அதிகம். `குற்றம் எங்கே?’ என்று தேடிப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.

    ஏன் சிலர் இப்படி நடக்கிறார்கள்?

    எப்போதோ தவறு நிகழ்ந்துவிட்டால், எத்தனை காலமானாலும் அதை மறக்க முடியாது, அதைப் பற்றியே எண்ணிக் குமைந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள்.

    செய்ய ஆரம்பித்த எல்லாக் காரியங்களிலும் வெற்றி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, ஏமாந்தவர்கள்.

    கார்டிஸால் (CORTISOL) என்கின்ற வேதியப் பொருள் மூளையில் இருக்கிறதே, அதுதான் அவர்களை அப்படி ஆட்டி வைக்கிறது.

    அதற்கு நேர் எதிரிடை, டோப்அமீன் (DOPAMINE) என்கிற பொருள்.

    நம்மை யாராவது புகழ்ந்தாலோ, நற்செய்தி கிடைத்தாலோ ஏற்படும் இனிய உணர்வு டோப்அமீன் சுரப்பதால் வருவது. போதைபோல் இருக்கும்.

    ஓர் அறுவை சிகிச்சைக்கு முன்னால், மார்ஃபின் என்ற போதைப்பொருளை என் மூக்கில் வைத்தார்கள். அது குறிப்பிட்ட அளவில் மருத்துவர்கள் பயன்படுத்துவது.

    சில வினாடிகளிலேயே, உடலை விட்டுப் பறப்பதுபோன்ற சுகமான உணர்வு ஏற்பட்டது. மயக்க நிலைக்குப் போய்விட்டேன்.

    இதனால்தான், “வாழ்க்கை பொறுக்க முடியாததாக இருக்கிறது!” என்று புலம்புகிறவர்கள் ஏதாவதொரு போதையை நாடுகிறார்கள்.

    துணுக்கு

    “நீ அதிகமாகக் குடித்தால், உன் மனைவி சண்டைபிடிக்க மாட்டாளா?”

    “எனக்குக் கல்யாணமே ஆகவில்லை!”

    “பின் ஏன் குடிக்கிறாய்?”

    தமக்கு ஏன் எதிர்மறைச் சிந்தனைகளே ஓயாமல் எழுந்து வருத்தத்தில் ஆழ்ந்து கிடக்கச் செய்கின்றன என்று புரியாது, பழியை வேறு இடத்தில் போடுகிறவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

    எதிர்மறைச் சிந்தனை தரும் வேதனையை எப்படி ஒழிப்பது?

    1. அதிகாலையில், முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, நாக்கை வெளியில் நீட்டி, சிரிப்பதுபோல் செய்யலாம். புன்னகைத்தால், உதிரமும் பிராண வாயுவும் முகத்திற்கு அனுப்பப்படுவதால் உற்சாகம் எழும்.

    2. எந்தச் சூழ்நிலையிலும் வேடிக்கையான அம்சம் ஏதாவது இருக்குமே!

    கதை

    “இந்த விரிவுரையாளர் இன்னிக்குச் சரியான சிடுமூஞ்சி!” பெண்கள் கல்லூரி மாணவிகள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

    ஒரு பெண் கூறினாள், “இன்று காலை, மனைவியுடன் சண்டை போட்டிருப்பார்!”

    அவள் தோழி, “அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!” என, முதலாமவள் விடாது, “சவரம் பண்ணிக்கொள்ளும்போது கன்னத்தைக் கீறிக்கொண்டிருப்பார். அந்த எரிச்சலை நம்மிடம் காட்டுகிறார்!”

    எல்லாரும் சிரித்தார்கள்.

    நமக்கு எழும் எதிர்மறை எண்ணங்களையும், அவற்றால் விளையும் ஆத்திரம் அல்லது வருத்தத்தையும் வேடிக்கையான கண்ணோட்டத்துடன் பார்த்தால், சிரிப்பு என்றும் மறையாது.

    3. நம் பிரச்னைகள் நம்மோடு இருக்கட்டும். அவை திரும்பத் திரும்ப மேலே எழுகையில், வருத்தமும் நிலைத்துவிடும்.

    “உனக்கு வேலை போய்விட்டதாமே?”

    “உன் மனைவி உன்னைவிட்டுப் போய்விட்டாளாமே?”

    நாம் மறக்க நினைப்பதைத் தூண்டித் துருவி விசாரிப்பவர்களுக்கு, எதற்காகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பது?

    இவ்வாறு வீண் வம்புக்கு அலையாது, நம் மனநிலையைப் புரிந்து நடக்க ஓரிருவராவது கிடைக்கமாட்டார்களா?

    4. ஒரே சமயத்தில், இயந்திர கதியில் பல வேலைகளைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அது மன உளைச்சலில்தான் கொண்டுவிடும்.

    ஓயாது, ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தால் ஏற்படும் சலிப்பு, மன இறுக்கத்தில் கொண்டுவிடும். இயன்றவரை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

    இதைத்தான் பாரதியார் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்: `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..” என்று.

    எங்கள் வீட்டருகே காலையும் மாலையும் இளைஞர்களும் முதியவர்களும் மூன்று மூன்று பேராக சைக்கிளில் போவார்கள், கலகலவென்று பேசிக்கொண்டு.

    நோய்த்தொற்றால் வெளியே அதிகம் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையில், வருந்தி வீட்டிலேயே உட்கார்ந்து விடுவதில்லை இவர்கள். நண்பர்களுடன் – அவ்வப்போது — பொழுதைக் கழிக்கையில், மனமும் உல்லாசமாக ஆகிவிடும்.

    எதையாவது கழற்றி, பழுது பார்ப்பதும் நல்லதொரு பொழுதுபோக்கு.

    எது செய்யவும் தெம்பில்லையா?

    இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி!

    இப்போதெல்லாம் பொழுதைப் போக்க, தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கவென NETFLIX, AMAZON போன்றவற்றிற்குப் பலரும் சந்தா கட்டுவது அதிகரித்துவிட்டதாம்

    5. `முடியாது!’, `கஷ்டம்’ போன்ற வார்த்தைகளை உபயோகித்தால், பிறர் நம்மை மட்டம் தட்ட நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுகிறோம்.

    எதிர்மறை எண்ணங்களால்தான் மன இறுக்கம் எழும் என்பது புரியாது, அதற்குரிய தீர்வோ, சிகிச்சையோ பெறாதிருக்கிறார்கள் பலர்.

    இவர்கள் தம் ஆற்றாமையை மனைவியை அடிப்பதன் மூலம் வெளிப்படுத்திக்கொள்வதால், வன்முறையும் விவாகரத்துகளும் பெருகிவிட்டன.

    உதவிபுரியும் எதிர்மறை எண்ணங்கள்

    பலத்த மழையால் மழைத்தண்ணீர் வீட்டுக்குள் புக, புகலிடம் தேடிக் கூரைமேல் உட்காரப்போவது வேண்டாத விளைவுகளை எதிர்நோக்குவதால்தான். அந்த எண்ணம் எதிர்மறையாக இருந்தாலும், பாதுகாப்பை விளைவிக்கிறது.

    இன்னொரு உதாரணம்.

    தெருவைக் கடக்க ஆயத்தமாகிறோம். அப்போது, விரைந்து வரும் வாகனத்தைக் கண்டு, `அபாயம்!’ என்று மூளை எச்சரிக்க, நம்மையும் அறியாது, கால்கள் நம்மைப் பின்னால் இழுக்கின்றன.

    மூன்று வயதுக் குழந்தைக்கு இத்திறமை கிடையாது. எது அபாயம் என்று புரிவதில்லை. ஏதாவது `மாலில்’ (MALL) பார்த்தால், தன் கையைப் பிடித்திருந்த தாயின் கையை உதறிவிட்டு, லிஃப்டில் ஏற ஓடுவான்.

    அப்படிச் செய்த ஒரு சிறுவனை அவன் தாய் கண்டபடி திட்டினாள். அடிக்கப் போனாள்.

    நான் குறுக்கிட்டு, “என் பேரனும் அந்த வயதில் அப்படித்தான் செய்தான்,” என்றேன் புன்முறுவலுடன்.

    “எப்படிச் சமாளித்தீர்கள்?” என்றாள், தன் அலுப்பை மறைக்காது.

    “நான் ஒரு பக்கம், அவன் தாய் ஒரு பக்கம் என்று, அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொள்வோம், அதன் கதவு திறக்குமுன்”.

    ஒரு முறை எங்களை முந்திக்கொண்டு அவன் ஏற, அந்த இயந்திரம் அவனை மட்டும் ஏற்றிக்கொண்டு மேலே போய்விட்டது. சில நிமிடங்கள் கழித்துத் தனியே திரும்புகையில், அளப்பரிய அச்சம் அவன் முகத்தில். ஆனாலும், அந்த அனுபவத்தால் அவன் பாடம் கற்கவில்லை. வயதுக் கோளாறு!

    குழந்தைகளின் இம்மாதிரியான விஷமம்கூட சில ஆண்டுகளுக்குப்பின் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 94

    பழகத் தெரிய வேணும் – 94

    நிர்மலா ராகவன்

    வாழ்க்கையும் பள்ளிதான்

    ஒரு சிறுமி தாயிடம் வம்பு வளர்த்தாள்: “எனக்குப் பிடிக்காததை எல்லாம் உடம்புக்கு நல்லதுங்கிறே!”

    இருபது வயதானபின்பும், சாப்பிடுவதும், விளையாடுவதும்தான் சிலருக்குப் பிடித்த விஷயங்கள்.

    அவர்களுடன் இணைந்து விளையாடியவர்களுக்குத் தனியாகக் குடும்பம் அமைந்துவிட்டால், பிறருக்காக நேரம் ஒதுக்குவார்களா என்பதை யோசிப்பதில்லை. தனித்துப்போவார்கள்.

    சிறு வயதில் நட்பு

    குழந்தைகளுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு தெரியாது. யாராவது அவர்களைப் பாராட்டினால், அவர்களைப் பிடித்துப்போய்விடும்.

    பதினெட்டு வயதுவரை, குழந்தைகளைப் பாதுகாக்கக் கூறவேண்டிய அறிவுரை:

    1. யாராவது புகழ்ந்தால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே! `நன்றி’ என்று சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு. தலைக்கனம் வந்தால், வாழ்க்கை சறுக்கிவிடும்.
    2. உன்னைவிட ஓரிரு வயது மூத்தவர்களுடன் மட்டுமே பழகுவது நல்லது. ஏனெனில், உன்னைவிட வயதில் பெரியவர்கள், “நீ எவ்வளவு புத்திசாலி! அழகு!” என்று புகழ்ந்தால், அது அனேகமாக சுயநலத்திற்காக இருக்கும். உன்னைத் தவறான முறையில் நடக்கத் தூண்ட அவர்களுக்குத் தெரிந்த வழி அது.

    பாடம் படிக்கப் பிடிக்காது!

    அநேகமாக, பாலர் பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் சொல்லிவருவதுதான் இது. உரக்கச் சொல்லாவிட்டாலும், கல்லூரி மாணவர்களுக்குக்கூட கல்வி பயில்வதே கசப்பாக இருக்கும். கல்வி பயின்றால்தான் அறிவு வளரும், பிறர் மதிக்க வாழலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

    `படிக்காத மேதை’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம். அவர்களுடைய அறிவை வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருப்பார்கள்.

    வேறு சிலர், காலம் கடந்து, தாம் செய்த தவறுகளால் ஓயாது வருந்துவார்கள். அதனால் அவர்களுடைய சுயமதிப்பு குன்றியிருக்கக்கூடும். அதை மறைக்க, பிறருக்கு ஆலோசனை அளிப்பார்கள்.

    கதை

    “நான்தான் குடித்துக் குடித்து, சீரழிந்துபோய்விட்டேன். நீங்களாவது அந்த விஷத்தைத் தொடாதீர்கள்!” என்று தன் மூன்று மகன்களிடம் முடிந்தபோதெல்லாம் கூறுவார் அந்த தந்தை. கூடியவரை, அவர்களைக் கட்டுப்படுத்தினார்.

    தந்தையைப் பார்த்துதான் ஆண்குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. அவருடைய அறிவுரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

    அத்துடன், கட்டுப்பாடு பொறுக்கமுடியாது போகும்போது, அதை மீறி நடக்கத்தானே தோன்றும்?

    ஒரு மகனுக்குமட்டும் தான் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் எழுந்துகொண்டே இருந்தது.

    நண்பர்களுடன் பேசிச் சிரித்தபடி ஓய்வு நேரத்தையெல்லாம் கழிப்பது உயர்ந்ததா, அல்லது தன் குடும்பத்தினருடன் சுமுகமாக இருப்பது பயனுள்ளதா என்று யோசித்தான். தான் மூப்படைந்ததும், எந்த நண்பனும் உறுதுணையாக இருக்கமாட்டான் என்று தந்தையின் வாழ்க்கை அளித்த பாடம் புரிந்தது.

    போதையில், அப்பா அம்மாவை அடிப்பதுபோல் தானும் அருமை மனைவியிடம் நடந்துகொண்டுவிடுவோமோ என்ற பயம்வேறு.

    மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, `ஏனோ இப்படிச் செய்கிறேன்! ஐ லவ் யூ!’ என்று சொல்வதில் உண்மை இருக்கமுடியுமா? (இந்த பசப்பல் பேச்சை நம்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்).

    எல்லாரையும், எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று தெளிவடைந்தான். பிறருடைய ஆமோதிப்புக்காக நடிக்கவேண்டுமா என்று சிந்தித்தபோது, தன்னைக் கட்டுப்படுத்தும் நண்பர்களை விட்டொழித்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியது.

    யோசனை பலத்தது. எந்தப் பயனும் கிடையாது என்று உறுதியாகத் தெரிந்தபின், ஒரு செயலை விட்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்! இல்லாவிட்டால், அதையே பலமுறை செய்வோம். நேரம்தான் வீணாகும்.

    பெருமுயற்சி எடுத்து அப்பழக்கத்தை விட்டொழித்தான்.

    அதற்குப் பிறகும், உடனே நிம்மதி கிட்டவில்லை.

    `நீங்கள் செய்வது சரியில்லை!’ என்று இவன் புத்திகூறுவதுபோல் எண்ணி நண்பர்கள் ஆத்திரப்பட்டார்கள். அவர்களின் கேலி, கோபம் இவற்றைச் சமாளிக்க நேர்ந்தது.

    பொது இடங்களில் அவனைப் பார்க்கும்போது, “நீ குடியை நிறுத்திவிட்டதால், இன்று வழக்கத்தைவிட பாதிதான் வாங்கியிருக்கிறார்கள்!” என்று, கண்டபடி கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

    குடும்பத்தினரின் அன்பால் அவர்களது போக்கை அலட்சியப்படுத்தப்படுத்த முடிந்தது.

    நாளடைவில், அவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அவர்களை நாடியதில் தன் தவறும் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டான். ஆனால், அப்போது கற்ற பாடத்தை மறக்கவில்லை.

    வாழ்க்கையில் மாறுதல்கள் நிகழத்தான் செய்யும், மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை என்று உணர்ந்து அமைதியாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.

    குற்ற உணர்வு, வஞ்சகம் செய்தவர்களின்மேல் கோபம் போன்ற எதிர்மறைக் குணங்கள் நீடித்தால் யாருக்கு நஷ்டம்? `அப்படிப்பட்டவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோமே!’ என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    நமக்குப் பிடிக்காதவர்கள் மட்டுமில்லை, நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் மட்டமாக நினைக்காதிருக்க, `நல்லவேளை, நானும் அவர்களைப்போல இல்லையே!’ என்று எண்ண ஆரம்பித்தால், வித்தியாசமாக இருப்பவர்களையும் ஏற்கமுடியும்.

    நம்மால் இயன்றதை, நமக்குப் பிடித்ததைச் செய்துவந்தால், அமைதி நம்மைவிட்டு விலகாது. நம்மைப்போன்ற பிறர் தாமே நம்மிடம் வருவார்கள். அதைவிட்டு, பிறருடன், துரத்தி அடிக்காத குறையாக, தொடர்புகொள்ளத் துடிப்பது ஏன்?

    யாருக்கு உதவலாம்?

    பிறருக்கு நன்மை செய்தால் புண்ணியம் என்று நம்மை நம்பவைத்திருக்கிறார்கள்.

    இதிலும் ஒரு சிக்கல். ஒருவருடைய தாராள மனப்பான்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நிறைய போலி மனிதர்கள் முளைப்பார்கள்.

    கதை

    மலேசிய தினசரிகளில் வெளியான அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே எவர் மனமும் உருகிவிடும்.

    ஆரோக்கியம் மிகக் குன்றிய நிலையில் ஒரு நாய். அதை அணைத்தபடி ஒருவர். அவரைப்பற்றி அவரே அளித்த தகவல்:

    நான் ஒரு மிருக வைத்தியன். யாராலும் கவனிக்கப்படாது, தெருக்களில் நடமாடும் நாய்களை எனக்குச் சொந்தமான ஓரிடத்தில் வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தேன். இப்போது அதைப்போல் மூன்று இடங்கள். என் மனைவியும் எனக்கு ஆதரவாக உதவிபுரிகிறார். இந்த நாய்களுக்கான உணவு, மருந்து, கருத்தடைச் சிகிச்சை என்று நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. யாராவது பண உதவி செய்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

    `இவ்வளவு நல்லவர்கள்கூட உலகில் இருப்பார்களா!’ என்று பிரமிக்கவைக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை.

    பல பத்திரிகைகளில் இம்மாதிரியான தகவலை அளித்து, லட்சக்கணக்கில் கொள்ளையடித்தபின் பிடிபட்டார். அவர் வைத்தியருமில்லை, அவருக்கு மனைவியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.

    நாய்கள்?

    அவருடைய கற்பனையில்.

    சிலர் நம்மிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பார்கள். `எனக்காக அதைச் செய்துவிட்டீர்களா?’ என்று விடாக்கண்டனாக நம்மைத் துளைப்பார்கள். ஆனால், பிரதி உபகாரம் என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு எதற்காக உதவி புரிவது?

    உங்களுக்கு BP இருக்கா?

    இப்போதெல்லாம், ரத்த அழுத்தம் என்பது நாற்பது வயதாகிவிட்டாலே ஒருவர் எதிர்பார்க்கும் ஒன்றாகிவிட்டது.

    குடும்பத்தில், உத்தியோகம் பார்க்கும் இடத்தில், கடைகண்ணிகளில் – இப்படிப் பல இடங்களிலும் தாம் நினைத்தபடியே எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஆகிற காரியமா? அப்படி நடக்காவிட்டால், ஆத்திரம் எழுகிறது. ஒருவர் ஆத்திரப்படுவதால், பிறர் மாறிவிடப்போகிறார்களா, என்ன! அவர் உடல்நிலைதான் கெடும்.

    என் தோழி அவளது கணவரைப்பற்றி ஆயாசத்துடன் கூறியது: “அரசியல்வாதிகள் மற்றும் கடைக்காரர்கள் செய்யும் ஊழல்களைத் தினசரியில் படித்துவிட்டுக் குமுறுவார். ரத்தக்கொதிப்பு ஏறிவிடும். இப்போது, பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரைக் கவனிப்பதற்குள் என் பிராணன் போகிறது!”

    சுய பரிதாபத்துடன் பிறரிடம் நம்மைப்பற்றிக் கூறிக்கொள்வது வீண்முயற்சி.

    “சிலருக்குத்தான் வாழ்க்கை இப்படி அமைகிறது!” என்று ஏக்கப் பெருமூச்சுடன், தம் குறைகளைப் பிறரிடம் கூறி ஆறுதல்பெற முயற்சிப்பவரின் புலம்பலைப் பலர் மரியாதை நிமித்தம் கேட்டுவைப்பார்கள். ஒரு சிலர் உள்ளூர மகிழ்வார்கள் – தமக்கு இப்படியெல்லாம் நேரவில்லையே என்று!

    வாழ்க்கை என்பது நாம் அமைத்துக்கொள்வதுதான்.

    பிறருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பதுதான் நல்ல குணம் என்றிருந்தால், தன் தேவைகள் என்ன, எது மகிழ்ச்சியைத் தரும் என்பதே ஒருவருக்குப் புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

    Share
  • நிகழ்கால ரிஷ்யசிருங்கர் (சிறுகதை)

    நிகழ்கால ரிஷ்யசிருங்கர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    வயது ஏறிக்கொண்டே போனால், பலருக்கும் கவலை வந்துவிடும். நரைக்குச் சாயம் பூசலாம். ஆனால், தொங்கும் கன்னம், உடலின் பாதி எடையைத் தாங்கியிருக்கும் பருத்த வயிறு இவற்றை எப்படி மறைப்பது?

    கிட்டு பிறரிடமிருந்து சற்று வித்தியாசமானவர். இருபது வயதிலிருந்தே, தனக்கு எப்போது முதுமை வரும் என்று காத்திருந்த பேர்வழி அவர்.

    அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர் வளர்ந்த விதம் அப்படி.

    ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடி வீட்டிலிருந்த பூமாவுடன் பாண்டி விளையாடினார். அவள் அவரைவிட இரண்டு வயது சிறியவள். அதனால், ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை.

    அதுதான் முதலும் கடைசியுமாக அவர் பெண்களுடன் விளையாடியது.

    “இனிமே, பொட்டைமாதிரி, பொண்களோட விளையாடுவியா?” என்று அப்பா கிச்சாமி பிரம்பால் விளாசியது ஜன்மத்தில் மறக்குமா!

    கல்லூரியில் படிக்க அனுப்பினால், கண்ட பையன்களுடன் சேர்ந்து மகன் இன்னும் கெட்டுவிடுவான் என்று, தான் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்திருந்த வங்கியில் வேலை கிடைக்கச் செய்தார். சிபாரிசு இருந்ததால், கிட்டுவின் கல்வித் தகுதியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    “வேலைக்குப் போற எடத்திலே பெண்கள் வராளாடா, கொழந்தே?” என்று கவலைப்பட்டாள் பாட்டி.

    அங்கு பெண்கள் அதிகமாக வரவில்லை. அப்படியே வந்தாலும், கணவன்மார்களை உரசியபடிதான். தனியாக வந்தவர்களோ, தம் செல்வச்செழிப்பைக் காட்டிக்கொள்ளவென உடலை வளர்த்திருந்தார்கள்.

    இந்த விவரத்தையெல்லாம் சற்று குறையுடன் தெரிவித்தார் கிட்டு.

    “அதுவும் நல்லதுக்குதான்!” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் பாட்டி. “நீ ரிஷ்யசிருங்கர்மாதிரி!”

    எப்போதோ, பாட்டியுடன் கோயிலுக்குப் போனபோது, ராமாயணக் கதாகாலட்சேபத்தில் கேட்ட கதை கிட்டுவின் நினைவில் எழுந்தது.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், ஒரு முனிவர் தேவலோக மங்கையான ஊர்வசியால் கவரப்பட்டதால் பிறந்த மகன் ரிஷ்யசிருங்கர்.

    மகனும் தன்னைப்போல் சீரழிந்து போகக்கூடாது என்ற `நல்ல’ எண்ணத்துடன், பெண்வாடையே இல்லாது அவனை வளர்த்தார்.

    பிரம்மச்சரியம் ரிஷ்யசிருங்கருக்கு அபாரசக்தியைக் கொடுத்தது. மழையே காணாது, வரண்டிருந்த நாட்டுக்குள் அவன் நுழைந்தவுடனேயே மாரி பொழிந்தது.

    அக்கதையை நினைவுகூர்ந்த கிட்டுவின் பிரம்மச்சரியமும் அதனால் எழுந்த பெருமையும் நீடிக்கவில்லை.

    “கிச்சாமி! பத்தொம்போது வயசிலேயும் ஒனக்கு கல்யாணமாகலியேன்னு நான் வேண்டாத தெய்வமில்லே. அந்த கோயிலில் இருக்கே, பிள்ளையார் விக்கிரகம்! அது நான் வாங்கிக் குடுத்ததுதான் – ஒனக்கு சீக்கிரமே கல்யாணம் நிச்சயமாகணும்னு வேண்டிண்டு!” என்று ஆரம்பித்த கிச்சாமியின் தாய், மகன் பொறுப்பில்லாது இருந்ததை மறைமுகமாகக் கண்டித்தாள். பேரனுக்கு மீசை முளைத்து பத்து வருஷம் ஆகிவிட்டதே, அவனுக்குப் பொருத்தமான எல்லா நல்ல பெண்களுக்கும் சீக்கிரமே கல்யாணம் ஆகிவிடுமே என்று அவள் பயந்தது யாருக்குப் புரியும்!

    அத்துடன், மகனுக்கும், பேரனுக்கும் எத்தனை காலம்தான் அவளால் வடித்துக்கொட்ட முடியும்! மருமகள் புண்ணியவதி! இந்தக் கவலையெல்லாம் இல்லாமல், போய் சேர்ந்துவிட்டாள்!

    கிச்சாமிக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. முதலிலேயே தனக்கு அந்த யோசனை வராமல் போயிற்றே என்று நொந்துகொண்டார்.

    தினமும் சாயங்கால டிபனுக்கு அரிசி உப்புமா செய்யத்தான் வயதான அம்மாவுக்கு சக்தி இருந்தது. கண் சரியாகத் தெரியாமல், உப்பை அள்ளிப் போட்டுவிடுவாள். அவள் மனம் நோகக்கூடாதே என்று அவர் சாப்பிட்டுவைப்பார்.

    “ரொம்ப படிச்ச பொண்ணு வேண்டாம்டா. சமையல்னா என்னன்னே தெரியாம வளர்த்திருப்பா. அடக்கமா, வீட்டு வேலை செய்யற பொண்ணா பாரு,” என்று அறிவுரை கூறினாள் தாய்.

    முதலில் பார்த்த பெண் பள்ளி இறுதிப் பரீட்சையை மூன்று முறை எழுதியும், பாசாகவில்லை என்ற விவரமே அவளுக்குச் சாதகமாக அமைந்தது.

    எலுமிச்சை நிறம், கையில் அடங்காத கூந்தல், விதம் விதமாகக் கோலம் போடுவாள், முக்கியமாக, வீட்டில் அவள் சமையல்தான் என்ற பிற அம்சங்கள் பாட்டிக்கு மிகவும் பிடித்துப்போக, கிட்டு பூரணியை மணந்தார்.

    அவளுடன் என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.

    ஒரு முறை, அவளே வலியக் கேட்டாள்: “நான் நன்னா சமைக்கிறேனா?”

    “ம்!” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது.

    “ஒங்களுக்கு என் சமையல் பிடிச்சிருக்கோ?”

    உத்தியோகத்தில் படிப்படியாக உயர்ந்திருந்த கிட்டுவுக்கு எரிச்சலாக இருந்தது.

    அசமஞ்சம்!

    பேச விஷயங்களா இல்லை!

    சேஷனுக்கு எழுபது வயதாகியபோது, சுதந்திரமாக உணர்ந்தார். அப்பா இல்லை, பாட்டி இல்லை. அவரை மணந்த புண்ணியவதியும் சுமங்கலியாகவே போய்விட்டாள்.

    பெண்களுடன் பழக இனி ஒரு தடையுமில்லை!

    `விடுதலை! விடுதலை!’ என்று உரக்கப் பாடவேண்டும்போல் இருந்தது.

    இளம்பெண்களை அவருக்குப் பிடிப்பதில்லை. `மாமா’, `அங்கிள்,’ என்றெல்லாம் அழைத்து, வயதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள், கழுதைகள்!

    நிறைய யோசனைகளுக்குப்பின், முகநூலில் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெரும்பாலும், வயது முதிர்ந்தவர்கள்தாம் அதில் பங்குபெறுவார்களாமே!

    `மணமானவன்’ என்றெழுதினால் கௌரவமாக இருக்கும். மனைவி இருக்கிறாளா, இல்லையா என்று யார் ஆராயப்போகிறார்கள்!

    வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

    வயது.. அங்கேதான் சற்று தடுக்கியது. 60 என்று எழுதிவிட்டு, ஏதோ யோசித்தவராக, கூட இரண்டைச் சேர்த்தார்.

    அடுத்த பிரச்னை: எப்படி சிநேகிதிகளைத் தேடுவது?

    அடுத்த சில நாட்களில், எல்லா படைப்புகளையும் படித்தார். நாள் முழுவதும் அதற்காகவே – இனிமையாக — செலவழிந்தது.

    ஒரு பெண்மணியின் எழுத்து அவரைக் கவர்ந்தது. பயம் சிறிதுமின்றி, பல விஷயங்களைத் தொட்டு, தன் கருத்துகளை வெளியிட்டாள். முக்கியமாக, சமையல் குறிப்புகளைப் பகிரவில்லை.

    தான் தேடிய புத்திசாலிப்பெண் இவள்தான் தனக்குத் தோழியாக இருக்கத் தகுதி உள்ளவள் என்று குதூகலித்தார் கிட்டு.

    அவள் எழுதிய ஒரு கட்டுரைக்கு, `லைக்’ போட்டார். பாராட்டாக, ஒருசில வரிகள்.

    பதிலுக்கு, அவளும் `நன்றி’ என்று ஒரே வார்த்தையில் தெரிவிக்க, கிட்டுவுக்குத் தலைகால் புரியவில்லை. அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது! தனிமரமாக இருப்பவளாக இருக்கும். அதனால்தான் அவ்வளவு சுதந்திர உணர்வு!

    அடுத்தடுத்து, பல முறை இவர் பாராட்ட, அவளும் சளைக்காது, அதே வார்த்தையில் பதிலளித்தாள்.

    அடுத்து அவளை நெருங்க நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த கிட்டு, தன் பாராட்டில், `டார்லிங்’ என்று அவளைக் குறிப்பிடலாமா என்று யோசித்தார்.

    முதலில் ரஞ்சனி என்ற அவள் பெயரைச் சுருக்கினாலே போதும், போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து, `டியர் ரஞ்சி!’ என்று ஆரம்பித்து, அவளுடைய துணிச்சலும், அறிவும் தன்னை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்று கவிதைபோல் எழுதினார்.

    அடுத்தமுறை அவளிடமிருந்து வந்த பதில் எப்போதையும்விட சற்று நீண்டிருந்தது.

    `எல்லாப் பெண்களும் மோசம்!’ என்ற முடிவுக்கு கிட்டு வரக் காரணமாக இருந்த அந்த வரி: “முதலில், மரியாதை கற்றுக்கொள்ளுங்கள்!”

    Share
  • பழகத் தெரிய வேணும் – 93

    பழகத் தெரிய வேணும் – 93

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி என்பது மாயையா?

    ஒரு நடிகர், “நீங்கள் எத்தனை சிறப்பாக நாட்டியம் ஆடுகிறீர்கள்! நானும்தான் ஆடுகிறேன். ஆனால், உங்களைப்போல் ஆடமாட்டோமா என்றிருக்கிறது!” என்றாராம் ஏக்கத்துடன். அந்த நடன ஆசிரியர் என்னிடம் சொல்லிச் சிரித்தார்.

    நடிகர் மிகப் பிரபலமானவர். பல துறைகளில் முத்திரை பதித்தவர். தன் நிறைகளை எண்ணி மகிழாது, குறைகளையே பெரிதுபண்ணினால் மகிழ்ச்சி எவ்வாறு கிட்டும்?

    ஒப்பீடும் பொறாமையும்

    `இது என்ன வாழ்க்கை! மகிழ்ச்சியே கிடையாது!’ என்று பலரும் புலம்புகிறார்களே! அவ்வாறு அலுத்துக்கொண்டாற்போல் நிலைமையை மாற்றிவிடமுடியுமா?

    பெரும்பாலாரான பெற்றோர்கள் தம் குழந்தைகளை ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவார்கள். இதுவே குழந்தைகளுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படக் காரணமாகிறது.

    அதனால், தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதும் பழக்கமாகிவிடுகிறது: `அவள் என்னைவிட அழகி, பணக்காரி, புத்திசாலி!’ என்ற வயிற்றெரிச்சல் ஏன்? இதனால் சிறந்துவிடவா போகிறார்கள்?

    கதை

    “முப்பது வயதில் இந்த இசைக் கலைஞர்கள் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள்! என் வாழ்க்கை வீண்!” என்று ஒருவர் அங்கலாய்த்துக்கொண்டார்.

    அவர்களுடைய சாதனை மட்டும்தான் பிறர் கண்ணுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் சிறு வயதிலிருந்தே எத்தனை உழைத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்ப்பதில்லை.

    மற்ற சிறுவர்களைப்போல் விளையாடி இருக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்து, சிலரது ஓய்வு நேரத்திலும்கூட இசைப்பயிற்சிதான். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுக்கூட இருக்கலாம்.

    பள்ளி நாட்களில் அனுதினமும், தபேலா கலைஞரான ஜாகிர் ஹூசேனை இரவு இரண்டு மணிக்கு எழுப்பி சாதகம் செய்யச்சொல்வாராம் அவருடைய தந்தை. அதற்குமுன், காலை ஆறு மணியிலிருந்து!

    எத்தனைபேர் இப்படி உழைப்பார்கள், சிறு வயதிலிருந்தே?

    எங்கே மகிழ்ச்சி?

    மகிழ்ச்சி என்பது எங்கேயோ வெளியில் கிடைப்பதில்லை. நமக்குள்ளேயேதான் இருக்கிறது. நம் செய்கைகளால் விளைவது அது. பேராசை அதை அழித்துவிடும்.

    கதை

    அரசியலில் ஈடுபட்டிருந்த ஒருவருக்குப் பெரிய பதவிகள் கிடைக்கவேண்டுமென்ற ஆசை. அப்போதுதான் பிறர் முன்னிலையில் தன் மதிப்பு கூடும் என்ற எண்ணம் அவருக்கு.

    `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று யோசித்தே வாழ்வைக் கடத்தினால், மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?

    குடும்பத்தைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை. வீட்டில் கண்டிப்பு இல்லாததால், அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரும் மனம் போனபடி நடக்கத் துவங்கியிருந்தனர்.

    அவர் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததைக் கண்டும் காணாததுபோல் இருக்கவேண்டிய நிலை. மகனோ போதைப்பித்தன். மகளுக்கு நிறைய காதலர்கள்.

    உயர்பதவி கிடைத்ததோ என்னவோ, மகிழ்ச்சி அவரைவிட்டுப் போய்விட்டது.

    “உங்களைப்போல் என்னால் இருக்க முடியவில்லையே! எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்!” என்று பொருமுவார், தன்னைவிடச் சற்றே தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைக் கண்டு. இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தி அடைய அவருக்குத் தெரியாததுதான் வருத்தம் எழக் காரணம்.

    இருப்பினும், `நிறைய ஆசைகள் கூடாது!’ என்று புத்தர் வழிகாட்டியபடி இளம்வயதில் இருக்க வேண்டியதில்லை. தன்னால் என்னென்ன முடியும் என்று அறிந்துகொள்ளும் பருவம் அது.

    அப்போது ஆசைகளை அடக்கிக்கொண்டிருந்துவிட்டு, காலம் கடந்தபின், “நான் என்னென்னவோ செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தேன்!” என்ற ஏக்கப் பெருமூச்சு எதற்கு?

    எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒத்திருந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும்.

    கடந்ததை எண்ணி வருந்தினாலோ, அல்லது எதிர்காலத்தில் என்ன வருமோ என்று அஞ்சினாலோ நேரம்தான் விரயமாகும். இரண்டுமே நம் கையில் இல்லை.

    89 வயதான ஒருவர் முனைவர் பட்டம் பெற்றார் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அந்தப் படிப்பால் பெரிய உத்தியோகம், அதற்கேற்ற ஊதியம் என்று அவர் கணக்குப் போட்டிருக்கமாட்டார். என்றோ செய்ய நினைத்து, முடியாமல் போனதற்காக ஏங்குவதைவிட அதைச் செய்து முடிக்கலாம் என்ற விவேகம் அவருக்கு இருந்தது.

    தன்னைவிடப் பிறர் உயர்ந்திருக்கிறார்களே என்ற ஆற்றாமைக்கோ, சுயவெறுப்புக்கோ அவர் இடம் கொடுக்கவில்லை.

    பகிர்ந்துகொள்!

    வேண்டாத நினைவுகளிலிருந்து நம்மை விடுவித்துகொள்ளும் முயற்சிதான் நாம் நமக்கே அளித்துக்கொள்ளும் கருணை. அப்போதுதான் நம் நிலையிலிருக்கும் பிறருக்கும் உதவி செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம்.

    ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒன்றுசேர்ந்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அனைவருமே தம் பலம் பெருகிவிட்டதுபோல் உணர்வர்.

    நடந்ததை மறைக்காது, `நானும் அவதிப்பட்டிருக்கிறேன்!’ என்று ஒத்துக்கொள்ளும்போது, `இதுவும் ஒருநாள் கடந்துபோகும்!’ என்று அவர்கள் உணர்ந்து, ஆறுதல் அடைவார்கள். வாழ்க்கை பொறுக்கமுடியாததாக இருக்காது.

    நடப்பதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தானாம். நம்மால் ஏற்க முடியாதது ஏன் நடந்தது என்று நெடுநாட்கள் கழித்துப் புரியும். நாம் துயருற்று, பின் அதிலிருந்து மீண்டால், நம்மைப்போன்ற பிறருக்கு உதவி செய்ய முடியும். அதிலேயே நிறைவு காணலாம்.

    நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதும் மனதை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழி. அவருக்கும் அதேபோன்ற துன்பமோ, துயரோ வந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நம் நிலையில் பொருத்திக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தாலே போதும்.

    கதை

    எல்லா வயதினருக்கும் துன்பங்கள் உண்டு.

    பள்ளிக்கூடத்தில் சேர்ந்தவுடனேயே இது தெளிவாகிறது. வீட்டில் அன்பும் பாதுகாப்பும் அளித்த பெற்றோருடன் இருந்துவிட்டு, புதிய சூழ்நிலைக்குப் போகும்போது சில பேருக்குப் பொறுக்கமுடியாததாக ஆகிவிடும்.

    “நீ குண்டு! ரொம்ப பயந்தவள்!”

    “உன் தலைமயிர் ஏன் நீளமாக இருக்கிறது, தெரியுமா? நிறைய பேன்! அதனால்தான்!”

    பொறாமை கொண்ட சிறுமிகள் தம்மைப்போன்று இல்லாத வகுப்புத்தோழிகளைப் பார்த்துப் பலவாறாகப் பழிப்பார்கள்.

    “கோபம் வந்தால், இவள் மூக்கு எப்படித் துடிக்கிறது, பாரேன்!”

    தாய் ஆதரவுடன் நடந்துகொண்டால், தாம் படும்பாட்டை அவளுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

    பத்து வயதிலிருந்து என்னை ஓயாமல் கேலி செய்தாள் ஒரு பெண். நான் சண்டைபிடிக்க மாட்டேன்.

    பள்ளிக்கூடத்திலிருந்து நான் திரும்பியதுமே, முதல் வேலையாக அம்மாவிடம் போய், என்னை ஓயாது கேலிசெய்தவளைப் பற்றிக் கூறுவேன்.

    “சூரியனைப் பாத்து நாய் குலைக்கிறதுன்னு விட்டுடு!” என் தாய் தினமுமே எனக்கு ஆதரவாகக் கூறியது.

    அப்பெண்ணைப் பதினேழு வயதில் பார்த்தபோது, அவள் ஏன் என்னை அப்படி நடத்தினாள் என்று புரிந்தது. அன்போ, செல்வமோ இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவள் அவள்.

    இதைப்போன்ற பல சம்பவங்களிலிருந்து நான் கற்ற பாடம்: நம்மைக் கஷ்டப்படுத்த நினைப்பவர்கள் பொறாமைபிடித்தவர்கள். அவர்கள் சொல்லையும் செய்கையையும் அலட்சியப்படுத்தவேண்டும். ஏனெனில், அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

    குடித்தால் பிரச்னைகள் தீருமா?

    பிரச்னைகளைச் சமாளிக்க ஒரு வழிதான் என்று திரைப்படங்களில் காட்டுகிறார்கள்.

    “ஏதோ ஒரு பிரச்னை இருப்பதால் ஒருவன் குடிக்க ஆரம்பிக்கிறான்.  குடிப்பதால் மேலும் பல பிரச்னைகள் வருகின்றன,” என்ற வாக்கியம் என் பாட புத்தகத்தில் இருந்தது இன்னும் மறக்கவில்லை.

    பிரச்னைகளைத் தாற்காலிகமாக மறப்பதால் அவை குடிப்பவரைவிட்டு விலகப்போவதில்லை. உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய இரண்டும் பாதிப்படையுமுன் அவை ஏன் நிகழ்ந்தன என்று யோசிப்பது மேல். குடிபோதையில், `ஏனோ, எனக்கு மகிழ்ச்சி கிடைக்க மாட்டேன் என்கிறது!’ என்று புலம்புவானேன்!

    நாம் பட்ட கஷ்டங்கள் நடந்தபோது, நம்மை வெகுவாகப் பாதித்து இருக்கலாம். அவற்றை மறப்பது கடினம்தான்.

    ஆனால், ஓயாது அவற்றையே நினைத்துக்கொண்டிருந்தால், அவை நம்மைக் கட்டுப்படுத்த விடுகிறோம். இது புரிந்து, நம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

    நல்ல வழிகளா இல்லை!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 92

    பழகத் தெரிய வேணும் – 92

    நிர்மலா ராகவன்

    புகழ் என்னும் போதை

    இணையம் புழக்கத்திற்கு வருமுன், ஒரு சினிமா பத்திரிகையில் பிரபல நடிகைகளின் பேட்டி எடுக்கப்பட்டது.

    கேள்வி: உங்களுக்குப் பிடித்தது எவை?

    சொல்லிவைத்தாற்போல், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்.

    அது என்ன தெரியுமா?

    “பணம், புகழ்!”

    இரண்டுமே நிலைப்பது மிகக் கடினம். அப்படியே கிடைத்தாலும், ஒருவர் வாழ்வில் வெற்றிபெற்றுவிட்டதாக ஆகிவிடாது. மிகச் சிலர்தான் பிறரது பாராட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள்.

    புகழ் வரும்போதே, வேண்டாத விமரிசனங்கள் – ஒருவரது படைப்பைப் பற்றியோ, குணாதிசயங்களைப் பற்றியோ, சொந்த வாழ்க்கையைப் பற்றியோ – எழுவதைத் தவிர்க்க முடியாது.

    கதை

    ஒரு தமிழ் எழுத்தாளரின் புதிய பாணியிலான நடை, கரு இரண்டும் வாசகர்களை ஈர்க்க, குறுகிய காலத்திலேயே மிகுந்த புகழை அடைந்தார்.

    சிலர் புகழ, பலர் அவரைக் கேட்டார்கள் முகத்திற்கு நேராகவே: “ஏன் ஆபாசமாகவே எழுதுகிறீர்கள்?”

    தடுமாற்றத்தைச் சமாளிக்க தலையைத் தடவியபடி, “எதை ஆபாசம் என்கிறீர்கள்?” என்று கேட்டாராம் அந்த எழுத்தாளர்.

    `உன் கையை உடைத்துவிடுவேன்!’ என்ற மிரட்டல்கூட அவருக்கு வந்திருக்கிறது.

    புகழ் பெற்றவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் விமரிசனத்துக்கு ஆளாகிவிடுகிறது.

    அவற்றில் எல்லாமே உண்மை என்பதில்லை. இருந்தாலும், அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க நேரிடுகிறது.

    இது புரிந்து, பிறர் சொல்வதை அலட்சியம் செய்தால்தான் ஒருவர் தான் தேர்ந்தெடுத்த துறையில் தொடரமுடியும்.

    நடிகர்களைக் காப்பியடிப்பது

    பிரபலமடைந்த நடிக, நடிகையரைப்போல் தமக்கும் திறமையோ, அதிர்ஷ்டமோ இருக்கிறதா என்று எவரும் யோசித்துப்பார்ப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் செய்வதைப் பின்பற்றுகிறார்கள்.

    வேஷ்டி தயாரிப்பாளர்கள் முன்னணி கதாநாயகர் ஒருவரிடம், `படம் முழுவதிலும் வேட்டி அணிந்தபடி காட்சி கொடுங்கள். எங்களுக்கு அமோகமான விற்பனை ஆகும்,’ என்று வேண்ட, அவரும் இணைந்தார்.  படம் வெளியானதும், ரசிகர்கள் அவர் `விரும்பிய’ ஆடையைத் தாமும் அணிந்து மகிழ்ந்தார்களாம்.

    தாம் என்ன செய்தாலும், அதைப் பின்பற்ற பலர் காத்திருக்கிறார்கள் என்ற நடப்பு புகழைப் பெற்றவர்களுக்கு முதலில் பெருமையாக இருக்கும். பக்கவிளைவாக, இன்னும் சிறக்கவேண்டும் என்று அவர்களுடைய பிரயாசை அதிகரித்துக்கொண்டேபோகும். அந்த முயற்சி மன இறுக்கத்தில்தான் கொண்டுவிடும்.

    திறமை என்பது கடவுள் அளிப்பது. புகழ் – மனிதன் கொடுப்பது. கர்வமோ தனக்குத்தானே அளித்துக்கொள்வது என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் ஓர் அனுபவசாலி.

    ராமாவதாரமா?!

    ராமாயணக் கதாநாயகன் ஸ்ரீராமசந்திரமூர்த்தியாக ஒரு படத்தில் நடித்து, பெரும்புகழ் பெற்றவர் அந்த ஆந்திர நடிகர். மக்கள் அவரைக் கடவுளாகவே பாவித்தனர்.

    தினமும், குறிப்பிட்ட வேளையில், அயோத்தி ராமரைப்போன்ற ஆடையணிகள் பூண்டு, தன் வீட்டு மாடி பால்கனியிலிருந்து `தரிசனம்’ கொடுப்பாராம். அதைப் பார்க்க, பல ஊர்களிலிருந்து வந்த மக்கள் கூடுவார்களாம்!

    ஒருவர் தன்னைக் கடவுளாகவே பாவித்துக்கொண்டால், மற்ற அனைவரும் தனக்குக் கீழே இருப்பவர்கள்தாம் என்ற கர்வம் வந்துவிடாதா! நாளடைவில், தான் யார் என்பதே புரியாது போய்விடும்.  இதுவும் ஒருவித மனநோய்தான்.

    பிறருக்கு என்ன பிடிக்கும், அதனால் தன் புகழ் கூடுமே என்று யோசித்தபடி இருந்தால், தனக்கென்று சிறிது நேரத்தையாவது ஒதுக்க முடியுமா? பின், நிம்மதி எப்படிக் கிட்டும்?

    புகழையே துரத்திப் போகும்போது, உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள ஏது நேரம்!

    உண்மையான நண்பர்களும், உறவினர்களும் இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருக்குமா?

    புகழுடன் பணமும் சேர்ந்தாலும், ஏன் மகிழ்ச்சி கிட்டாததாக இருக்கிறது என்று புகழ் போதை கொண்டவர்களுக்குப் புரிவதில்லை. திறமை வாய்ந்தவர்கள் குறுகிய காலத்திலேயே காணாமல் போய்விடுவது இதனால்தான்.

    வினா: புகழை ஏன் போதை என்கிறார்கள்?

    விடை: எவ்வளவு கிடைத்தாலும், நிறைவு கிட்டாது.

    சமயம் பார்த்து, இவர்களைத் தீய வழிகளில் ஈடுபடுத்த முன்வருவார்கள் பல `நண்பர்கள்’. அந்நிலையில், பணத்துடன் புகழும் கரைந்துபோகும். மிஞ்சுவது கசப்பும், ஆரோக்கியக்குறைவும்தான்.

    பணம், புகழ், திறமைக்காக அளிக்கப்படும் பட்டங்கள் ஆகிய எதையுமே பெரிதாகக் கருதாது, எடுத்த காரியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு, திருப்தி அடைகிறவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

    “வெற்றி நிலைக்க பணிவு முக்கியம். பணம், புகழ் ஆகியவை தலைக்குமேல் ஏறக்கூடாது”. இப்படிக் கூறியிருப்பவர் A.R. ரஹ்மான்.

    `இன்னும் என்னதான் வாங்கமுடியும்!’ என்ற அலுப்பை ஏற்படுத்திவிடுகிறதாம் அளவுகடந்த செல்வம்.

    சிலர் இது புரிந்து, பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். மிகச் சிலர்தான்!

    புகழின் உச்சியைத் தொட்ட குழந்தைகள்

    ஒரு குழந்தை வயதுக்குமீறி பேசினால், அது சுட்டித்தனம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.

    தமிழ் திரைப்படங்களிலோ, அல்லது முகநூலிலோ, குழந்தைகளைக் கண்டபடி பேசவைக்கிறார்கள். அப்பாவையும் தாத்தாவையும், `டேய்!’ என்றழைக்கும் குழந்தை புத்திசாலியாம்!

    இயக்குனர் அல்லது பெற்றோர் கூறுவதுபோல் செய்து காட்டுகிறார்கள் குழந்தைகளும், தாம் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே. பிறர் புகழ, எப்போதும் அப்படியே நடக்கத் தலைப்படுகிறார்கள்.

    பல மணி நேரம் நடிக்க வேண்டியிருப்பதால், பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாட முடியாது. வயதுக்குரிய கல்வியையும் பெறுகிறார்களா என்பதும் சந்தேகம்தான்.

    தம் வயதுக்குரிய அப்பாவித்தனத்தை இழந்து, வளர்ச்சிக்கு எது ஏற்றது என்று புரியாது வளர்வதால், மனஇறுக்கத்தைத் தவிர்க்க முடிவதில்லை. அதைப் போக்க, மது, போதைப்பொருட்களை நாடுவது பெரும்பாலரது பழக்கமாகிவிடுகிறது.

    மைக்கல் ஜாக்சன்

    இசைத்துறையில் உலகிலேயே அதிகமான விருதுகள் பெற்றவர், ஓராண்டில் மிக அதிகமான வருமானம் பெற்றவர் என்றெல்லாம் பெரும்புகழ்பெற்ற மைக்கல் ஜாக்சனுக்கு போதை மருந்து இல்லாவிட்டால் உறங்கமுடியாது என்ற நிலை ஏற்பட, ஒரு மருத்துவரை கூடவே வைத்துக்கொண்டார்.

    அளவுக்கு அதிகமாகிப்போன அப்பழக்கமே அவருக்கு யமனாக அமைந்தது.

    எந்தத் துறையானாலும், புகழ் போதை பிற போதை வழிகளில் கொண்டுவிடுகிறது.

    பிரபல HARRY POTTER ஆங்கில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த டானியல் (Daniel Radcliffe) கூறுகிறார்: “நான் நடிக்கப் போகும்போது, ஒவ்வொரு முறையும் கண்மண் தெரியாது குடித்துவிட்டுத்தான் போவேன். எப்போதும், இனிமையாக நடந்துகொள்ளவேண்டுமே! சிறந்த நடிகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது”.

    குழந்தை நட்சத்திரங்களாகப் புகழ் பெற்றவர்கள் இருபது வயது ஆனபோது புகழின் பாதிப்பை உணர்கிறார்கள். தம் வயதையொத்த பிறரது எதிர்பார்ப்பையும் தாளமுடியாது போய்விடுகிறது.

    மது அருந்திவிட்டுக் காரோட்டியது, திருடுவது போன்ற சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு, சிறைத்தண்டனை அனுபவித்த இளம் நடிகர்களும் உண்டு. இவர்களால் மது, போதைப்பழக்கம் இரண்டையும் விடமுடியாது போக, வாழ்க்கையின் அடிமட்டத்திற்கே போய்விட்டார்கள்.

    கதை

    டெமி லோவாடோ (Demi Lovato) சிறுவயதிலேயே புகழ்பெற்ற பாடகியாகவும், நடிகையாகவும் விளங்கினாள்.

    `ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும்’ என்று அறிவுரை வழங்கப்பட்டதில், அவளுக்குப் பிடித்ததுபோல் பாட முடியவில்லை. மன இறுக்கம் வந்தது.

    தந்தையைப்போல் தானும் குடித்தால் நிம்மதி அடையலாம் என்று ஆரம்பித்த பழக்கம் மிக மோசமாகி, பல வருடங்கள் மறுவாழ்வு மையம் ஒன்றில் கழிக்க நேர்ந்தது.

    பத்து வயதிற்குள் கிட்டவேண்டும் என்று தாம் அடைய ஆசைப்பட்ட புகழ் தம் பிள்ளைகளுக்காகவாவது கிடைக்கவேண்டும் என்று பல பெற்றோர் விரும்புகின்றனர். மகனும் ஒரு தனிப்பிறவி, அவனுக்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் என்று யோசிப்பதில்லை.

    கதை

    Home Alone என்ற தொடர் திரைப்படங்களின் கதாநாயகன் மெக்காலே (Macaulay Culkin) என்ற சிறுவன்.

    அவனுக்குக் கிடைத்த புகழும் அத்துடன் வந்த பணமும் நிலைக்க, தந்தை அவனைப் பலவிதமாகக் கொடுமை செய்தாராம்.

    தாளமுடியாது, அவன் பெற்றோரின்மேல் வழக்குப் போட்டு, அவர்களிடமிருந்து `ரத்து’ வாங்கினான். அவனுடைய கோடிக்கணக்கான சொத்தை அவர்களால் தீண்டவும் முடியாதுபோயிற்று.

    தான் அழிவுப்பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே புரிந்து, தப்பித்தவறிக்கூட மது அருந்துவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறான்.

    தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புகழ்வாய்ந்தவர்களின் வாழ்க்கை பிரமிப்பை உண்டுபண்ணும். `எவ்வளவு பெரிய வீடு! வண்ணவண்ணமாக எத்தனை ஆடைகள்! எத்தனை கோடி ரசிகர்கள்! நினைத்ததை எல்லாம் வாங்க முடியும்!’ என்று, தமக்கும் அப்படி ஓர் அதிர்ஷ்டம் இல்லையே என்று ஏங்கலாம்.

    அவர்களுக்குப் புரிவதில்லை, மிகக் கவனமாக இல்லாவிட்டால், புகழ் சறுக்கி, மகிழ்ச்சியை அறவே பறித்துவிடும் என்பது.

    Share