நிர்மலா ராகவன்

தானே வராது வாய்ப்பு

“எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!” பலரும் முனகுவார்கள்.

நாம்தான் அதைத் தேடிப் போகவேண்டும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

அதிர்ஷ்டம் எப்படிக் கிடைக்கும்?

முதலில் உழைப்பு. அதன்பின், உழைப்பைப் பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை நழுவ விடாதிருப்பது.

கதை

இசைத் துறையில் பட்டம் பெற்ற இளைஞர் குருசாமி.

திரையுலகில் சேர்ந்தால், புகழுடன் நிறைய பணமும் கிடைக்குமே என்ற பேரவா அவருக்கு.

தான் மெட்டமைத்த பாடல்களைப் பதிவு செய்து, ஓர் இயக்குநருக்கு அனுப்பினார்.

“உடனே வாருங்கள்,” என்ற அழைப்பு வந்தது.

இப்போது குருசாமிக்குத் தயக்கம் ஏற்பட்டது. திரையுலகைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்களே! அங்கு போய், தான் மாறிவிட்டால்?

“நான் அங்கு சென்றால், எப்போதும்போல் நல்லவனாகவே இருக்க முடியுமோ என்ற பயம் வந்துவிட்டது,” என்று என்னிடம் தெரிவித்தார்.

இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டாமா?

போதாக்குறைக்கு, `கல்யாணமானா, நிச்சயம் குழந்தை இருக்கணும்,’ என்று எவளோ கூறியிருக்கிறாள். அப்படித் தன் மனத்தைக் கலைத்தது அவள் தவறு என்பதுபோல், அதையே பலமுறை ஆத்திரத்துடன் கூறினார்.

ஆரம்பிக்கும் முன்னரே அச்சமும் தயக்கமும் அடைந்தால் வாய்ப்பு நழுவிவிடாதா!

எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளுமுன், அதனால் நன்மையும், நீடித்த மகிழ்ச்சியும் கிடைக்குமா என்று யோசிக்க வேண்டுவது அவசியம். அதற்கு ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின், குருசாமி போயிருக்க வேண்டிய இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு, பெரும் புகழை அடைந்தார்.

கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை உரிய காலத்தில் பற்றிக்கொள்ளாத வருத்தம்தான் குருசாமிக்கு நிலைத்தது.

இலக்கு சரியாக இருந்து, அதற்கான ஆராய்ச்சியைச் செய்து, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் தோல்வி வராது.

ஊக்கமளிக்கும் உறவினர்களும், ஓரிரண்டு நண்பர்களும் இருந்தால் கூடுதல் நன்மை.

ஏன் தோல்விக்கு மேல் தோல்வி?

“நான் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்விதான்!” என்று புலம்புகிறவர் தன்னால் என்ன முடியும் என்பதை உணராதவர். தன் மனத்தின் குரலைவிடப் பிறருடையதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். நம் முன்னேற்றத்தில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை?

சவால்கள், அவமதிப்பு போன்றவற்றைப் பொறுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தினால்தான் முன்னேற முடியும்.

எந்த வாய்ப்பும் பிரச்னையாகத்தான் ஆரம்பிக்கும்.

கதை

எங்கள் பள்ளியில், கேள்வித்தாள்களை ஆசிரியர்களே கணினியில் தட்டச்சு செய்துவிடவேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டுவந்தனர்.

உணர்ச்சிவசப்பட்டு, `எப்போதும் நான் என் கைப்படத்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதம் பிடித்தால் புதியனவற்றைக் கற்று முன்னேறும் வாய்ப்பு கிடைக்குமா?

ஒரு கணினி வாங்கிப் பழகத் தொடங்கினேன். நாற்பது வயதுக்குமேல் எதையும் கற்பது எளிதல்ல. எரிச்சலாக இருந்தது.

அதை மாற்றி, உற்சாகம் அளித்துக்கொள்ளும் வகையில், தினசரியின் முதல் பக்கத்திலிருந்த செய்திகளிலிருந்து முதலிரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைத்து ஒரு வாக்கியம் அமைத்தேன்.

அது இப்படி இருக்கும்: மந்திரி – மரண தண்டனை – கற்பழிப்பு, கொலைக் குற்றத்திற்காக …

எனக்கே சிரிப்பு வர, அலுப்பு மறைந்தது.

சுமாராகத் தட்டச்சு செய்ய வந்தபின், உட்கார்ந்திருந்த போதெல்லாம் விரல்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும், மனக்கண்ணால் இசைப்பலகையை இயக்குவது போல்.

“டீச்சர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியுமா?” என்று ஒரு மாணவன் அதிசயப்பட்டுக் கேட்க, பெருமையாகிவிட்டது.

முதலில் ஆங்கிலம், அதன்பின், தமிழ்.

கட்டாயம் என்பதால் கற்றது இப்போது பல வகைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எப்போதும் அலசுவது சரிதானா?

கோலாலம்பூரில் பெருவெள்ளம்

கடற்கரைப் பகுதியில் இல்லாத தீபகற்ப மலேசியத் தலைநகரில் நூறு வருடங்களாக வெள்ளம் கிடையாது.

இப்போதோ, பாதுகாப்பு வேண்டி, மக்கள் கூரைமேல் ஏறினார்கள்.

ஒருவர் தாம் வைத்திருந்த படகால் அவர்களுக்கு உதவி செய்யலாமே என்று தோன்ற, காரின்மேல் படகுடன் சென்றார் – பலமுறை.

நல்லது செய்தாலும், சந்தேகப்படவென்று சிலர் இருப்பார்களே!

குருத்வாரா

சீக்கியர்கள் ஒன்றுகூடவும் வழிபடவும் அமைக்கப்பட்ட இடங்கள், குருத்வாரா.

சேவை மனப்பான்மை கொண்ட பிற இனத்தவரும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினர்.

“சீக்கியர்கள் தயாரிக்கும் உணவை நாம் சாப்பிடலாமா? ஹலாலாக (halal) இருக்குமா?” என்ற கேள்விகள் எழுந்தன, மலாய்க்காரர்களிடமிருந்து.

அது என்ன, ஹலால்?

ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இஸ்லாமியரே பூசை செய்தபின் கொல்வதாம். இதற்கு விலக்கு மீன், முட்டை.

“மத, இன வித்தியாசம் பாராது, பிறருடைய கொள்கைகளை மதித்து, தன்னலமின்றி சேவை செய்பவர்களை அவமதிப்பதா?” என்று ஒரு மலாய்ப் பெண்மணி காரசாரமாக இணையத்தில் கேட்டிருந்தார்.

சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும், குடிநீர்ப் பற்றாக்குறை.

உணவு மட்டுமின்றி, ஆடை, குடிநீர், சிசுக்களுக்கான டயாபர் போன்றவற்றையும் பொதுமக்கள் அளித்தனர். பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.

`இதனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிக்க அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். `பிறரது துன்பத்தில் பங்குபெற முடிந்ததே!’ என்ற நிறைவு போதும் அவர்களுக்கு. அவர்களே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டும் இருக்கலாம். அந்த அனுபவத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

`நம்மால் இவ்வளவு செய்ய முடியுமா!’ என்ற அதிசயம் எழ, அதனால் நிறைவும் ஏற்பட்டிருக்கும்.

கதை

குமரன், பத்து வயதுப் பையன். பொருளாதார வசதி குறைந்த விதவைத் தாய் மறுமணம் செய்துகொண்டதும், எங்கள் உறவினர் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தான். படிப்பைத் தொடர்ந்தாலும், தேர்ச்சி பெற முடியவில்லை.

வீட்டு வேலை முடிந்ததும், ஓயாது தொலைக்காட்சிதான் துணை.

“நேரத்தை இப்படி வீணடிக்கிறாயே!” என்று அவனைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்த்துவிட்டார்கள்.

அலுவலகம் ஒன்றில் உத்தியோகம் கிடைத்தபோதும், தொடர்ந்து உழைத்தான். பிறருக்கு உதவும் மனப்பான்மை வலுத்தது.

ஆனால், அதைப் பெருமையாகக் கருதவில்லை.

தீயணைக்கும்போதோ, வெள்ளம் பெருகியபோதோ தான் அடைந்த அனுபவங்களை ரசித்துக் கூறுவான்.

அந்த வேலைகளெல்லாம் எளிதாக இருந்திருக்குமா? உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாமே!

எதையும் எதிர்பார்த்துக் குமரன் பிறருக்கு உதவவில்லை. ஆனாலும், சவால்களை `வாய்ப்பு’ என்று எடுத்துக்கொண்டதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டியது குமரனுக்கு.

“Smooth seas do not make skilful sailors” (கடலில் கொந்தளிப்பு இல்லாவிட்டால், தேர்ந்த மாலுமிகளாக ஆக முடியாது (ஆப்பிரிக்கப் பழமொழி).

“எனக்குச் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை!” என்று மூக்கால் அழுபவர்கள் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள், அவை கஷ்டம் என்று.

`கஷ்டமாக இருந்தால் என்ன!’ என்று துணிகிறவர்களே அந்த சந்தர்ப்பத்தையே நல்ல வாய்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை?

அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *