படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

1

முனைவர் ச. சுப்பிரமணியன்

நூல் மதிப்பீடு

முன்னுரை

‘நீ நொண்டி சிந்து எழுதினாய் தமிழ் எழுந்து நடந்தது’ என்று எழுதினான் ஒரு கவிஞன். நொண்டி சிந்து எழுதியவன் பாரதி! அவனைப் பாராட்டி எழுதிய கவிஞன் பெயர் தெரியவில்லை. யார் எழுதினால் என்ன? உண்மையை யார் சொன்னால்தான் என்ன? கவனிப்பதற்கு ஒன்று உண்டு.  எழுந்து நடந்தது என்று பாராட்டுகிறானே கவிஞன், அது எங்கே விழுந்து கிடந்தது? எங்கே முடங்கிக் கிடந்தது? இடைக்கால மன்னர் அரண்மனைகளின் அந்தப்புரங்களிலிருந்து எட்டையபுரத்து இளைக்காத சமஸ்தானம் வரை தமிழ் உள்ளூரிலேயே அடிமைப்பட்டுக் கிடந்தது. தமிழைப் பிணித்திருந்த அந்த அடிமைச் சங்கிலியை நொறுக்கி எளிய பதங்கள், மக்களுக்கு ஏற்ற மெட்டு எனப் புதியன பெய்து தமிழுக்குப் புதுமுகம் காட்டிய புலவன் பாரதி! அதனாலே என்ன ஆனது? தமிழ் புலவர்களுக்கானது அன்று நமக்கானது! நம் தாய்மொழி தமிழ்’ என்னும் புரிதல் தமிழர்களுக்கு வந்தது. இதுதான் பாரதி செய்த வித்தை! பாரதி பிறந்திருக்காவிட்டாலும் நாடு விடுதலையடைந்திருக்கும்! ஆனால் அவன் பிறந்திருக்காவிட்டால் இந்தக் கட்டுரை இந்த நேரத்தில் வல்லமையில் வெளிவந்திருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் பாட்டுக் கட்டும் உரிமை மக்களுக்குச் சென்றது. புலவர்களின் தனியுடைமை நிராகரிக்கப்பட்டது. மக்களைப் பற்றிப் பாடியவர்கள் மக்கள் கவிஞர்கள் என அழைக்கப்பட்டனர். மக்களே கவிஞரும் ஆனார்கள். மக்களால் மக்களுக்காக மக்களைப் பற்றி எழுதப்படும் கவிதையே தமிழ்க்கவிதை என்னும் புதிய வரைவிலக்கணப் பரிமாணத்தை வரையறை செய்தனர். தமிழை முறையாகப் படித்தவர்கள்தாம் எழுத வேண்டும் என்ற நிலை மெல்ல மெல்ல ஆனால் நிலையாக உறுதியாக மாறியது, உட்கார்ந்து தமிழைப் படிக்காதவர்கள் ஓராயிரம் நூல்களைப் படைத்தார்கள். ஆர்வத்தால் யாப்பிலக்கணம் கற்றார்கள். அதன் கடுமையை உணர்ந்தார்கள். இருப்பதைக் கொண்டு எழுதிப் பார்ப்போமே என்று எழுதினார்கள். தங்கள் வாழ்க்கையில் தாங்கள் பட்ட இன்னலை எழுதினார்கள். எல்லார்க்கும் பாடமாக்கினார்கள். யாப்பிலக்கணத்தோடும் எழுதினார்கள். யாப்பு இல்லாமலும் எழுதினார்கள். யாப்பு இருந்தால்தான் அது கவிதை என்னும் மரபையும் உடைத்தெறிந்தார்கள். கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பத்தைக் கண்டறிவதுபோலத் தங்கள் திறமையைத் தாங்களே அறிந்து கொண்டார்கள். அவ்வாறு அறிந்து கொண்டவர்களில் ஒருவர்தான் குளித்தலை அன்பர் தண்டபாணி. தொழிற்சாலைகளின் கணக்கு வழக்குகளின் தணிக்கையாளர் அவர். கணிதத்தைத் தணிக்கை செய்யலாம். அவர் கவிதையைத் தணிக்கை செய்ய இயலுமா? இதயத்தை மூளையால் அளப்பது எப்படி? அவர் எழுதிய ‘கவிதை ஊருணி’ என்னும் அளவில் சிறிய கவிதை நூல் என் பார்வைக்கு வந்தது! படித்தேன்! சுவைத்தேன்! சுவைத்ததைச் சுருக்கமாக இங்கே பகிர்கிறேன்! பந்தி வைக்கிறேன். இது ஏழைவீட்டுப் பந்தி! பலகாரங்களின் எண்ணிக்கை குறையலாம். சுவை குறையாது!

புரியாதவன் இன்னும் தேடுகிறான்

கண்ணப்ப நாயனார் புராணத்தில் பெரும்பாலோர் திண்ணனின் ஆழமான பக்தியைச் சிலாகித்துப் பேசுவார்கள். பெரியபுராணத்தை நோக்குவார்க்கு ஒன்று நன்கு புரியும். அறுபத்து மூன்று தனியடியார்களும் தொண்டினால் உயர்ந்தவர்கள். சிவபதம் பெற்றவர்கள்! ‘தொண்டு’ என்பது மனித நேயத்தின் பழைய வழக்கு. காளத்திநாதரைச் சிவகோசரியார் சிலையாகத்தான் எண்ணினார். கடவுளாக எண்ணி வழிபட்டார். ஆனால் கண்ணப்பன் தன் தந்தையாகக் கருதினான்! ‘அத்தனார்க்கு அடுத்த தென்னோ?’  கடவுளுக்குக் கேடு வருமா? என்பது பகுத்தறிவாகக் கருதுவர். தந்தைக்குக் கேடு வரலாம் அல்லவா? தாய் மட்டுமன்று தந்தையும் பசித்திருக்கக் கூடாது என்பதுதான் மனித நேயம்!

கையில் சூலம் கொண்டோ
சங்குச் சக்கரம் கொண்டோ
ஒளியின் திருவாய் மலர்ந்தோ
இறைவன் நம்மிடம் வருவதில்லை!”

வீழும்போது தூக்கி விடுவோரும்
தாழும் போது தோள் கொடுப்போரும்
நற்செயலை நாளும் செய்வோரும்
நான் காணும் கடவுளின் வடிவங்கள்

புரிந்தவன் கடவுளைக் காணுகிறான்
புரியாதவன் இன்னும் தேடுகிறான்

தனக்குப் பல நூற்றாண்டுக் காலம் முன்னே தோன்றிய திருமூலர் சொன்ன அறச் சிந்தனைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வள்ளலாருக்கு வந்தது.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே

என்னும் திருமந்திரத்தைப் பசிப்பிணி என்னும் கொடுநோய் போக்கி வள்ளலார் நடைமுறைப்படுத்தினார். பொதுவாகக் கவிதை எழுதுபவர்கள் இன்றும் ஆறு, குளம், குட்டை, ஏரி, மேகம், வான் என்று புவியியல் தலைப்புக்களாகவே சிந்திப்பார்கள். கேட்டால் இயற்கையைப் பாடுகிறேன் என்பார்கள். அவர்கள் பார்வையில் மனிதன் செயற்கைபோலும்! மனிதனுடைய வாழ்வியல் சிக்கல்கள் செயற்கை போலும்! ஆனால் விதிவழியே எல்லாம் நடக்கும் என்றும் சொல்வார்கள்! ஆனால் அல்துறைக் கவிஞர் தண்டபாணி சமுதாயத்தையே தனது கன்னிப்படைப்பின் கருப்பொருளாக்கியிருக்கிறார்!

பெரு வியப்பின் நுண் இருப்பு

எதனையாவது யாருக்காவது எப்பொழுதாவது எப்படியாயினும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்னும் உள்ளத் துடிப்பு எல்லார்க்கும் இயல்பு. கவிஞர்களுக்கு அல்லது கவியுள்ளம் படைத்தவர்களுக்கு வெகு இயல்பு. நேர்மையாக வாழ வேண்டும் என்ற தேவை கூட இல்லை. இனியாவது நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலடி எடுத்து வைக்கிறபோதே அதற்கு எதிர்மறையானதொரு சமுதாயக் கட்டமைப்பை ஒருவன் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.  அங்கிங்கு எனாதபடி ஒரு போலித்தனத்தையே போர்வையாகப் போர்த்திக் கொண்டு நிற்கும் இரங்கத்தக்க நிலை நீக்கமற நிறைந்திருக்கிறது. மனம், மொழி, மெய்களால் சத்தியம் காக்க வேண்டும் என்ற உயரிய நெறிக்குப் பதிலாக மானுடத்தைச் சீரழிக்கும் சிந்தனைகள்!, வெளிப்பாடுகள்!, செயல்பாடுகள்!.

ஒப்பனை செய்த சிரிப்பு
ஒத்திகை பார்த்த அழுகை
கடன்
கொடுத்தவனிடம் கனிவு
கொடுத்த கடன்
கேட்பவனிடம் கோபம்

வாழ்பவனைக் கண்டு வயிற்றெரிச்சல்
வழுக்கி
வீழ்ந்தவனைக் கண்டால் எகத்தாளம்!
காசு பணம் தேவைக்காக நட்பு!
நம்பிக்கைக்காகக் கொஞ்சம் நடிப்பு!
எளியவனைக் கண்டால் அகங்காரம்
வலியவனைக் கண்டால்
காலில் விழும் கலாச்சாரம்

மேலே கவிஞர் சொல்லியிருக்கிற அல்லது வெளிப்படுத்தியிருக்கிற வரிகளால் அவர் குடும்பத்திற்கு என்ன நன்மை? ஒரு நன்மையும் இல்லை என்பது அவருக்கும் தெரியும். நமக்கும் தெரியும். பிறகு ஏன் எழுதுகிறார்? ஆற்றாமை! சமுதாயத்தின் எதிர்மறை போக்குக் கண்டு தாங்க முடியாத ஓர் இதயத்தின் இளகிய வெளிப்பாடு! மனிதனாக வாழ்வது எப்படி என்று நீதிநூல்கள் கற்பிக்கின்றன!. அதனைப் படித்துணர்ந்து செப்பம் செய்து கொள்ள வேண்டிய சமுதாயம் அதற்கு நேர் எதிர்த்திசையில்! வாழ்வியல் உண்மைகளையும் சமுதாயப் போக்குகளையும் நூலறிவு மற்றும் பட்டறிவு கொண்டு அறிந்து கொண்ட சாதாரண மனிதன் ‘ஊருக்கு வந்தது தனக்கு’ என்று எண்ணிச் சமாதானமடைகிறான். ஆனால் சமுதாய அக்கறையும் பிறரை மதித்து நேசிக்கும் ஒரு வேறுபட்ட படைப்பாளனால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

தேடிப்பார்க்கிறேன்!
இருக்கும் மனிதர்களில் பெரும்பாலும்
மனிதனவன்
எவரும்
மனிதனாக இல்லை!”

என்று எழுதுகிறார் தண்டபாணி. மனிதர்களாயிருந்தால் வாழ்வார்கள். அல்லது வாழ்பவர்கள்தாம் மனிதர்கள்! ‘இருப்பவர்கள்’ மனிதர்கள் அல்லர். ‘LIVING’  என்பது வேறு. ‘EXISTING’ என்பது வேறு. ‘எப்படி இருக்குறீங்க?’ என்றுதான் நலம் விசாரிப்போம்! ‘ஏதோ இருக்குறேன்!’ என்றுதான் விடையளிப்பார்கள்! இங்கே பிறப்பார்கள்!. இருப்பார்கள்! இறப்பார்கள்! முடிந்தது வாழ்வு! இந்த வாழ்வு வாழப்படாதா? என்று ஏங்குகிறார் தண்டபாணி! மானுடம் தன் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளாதா? ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று வேண்டிப் பெற்ற வாழ்வு வீணாகிவிடுமோ என்று வேதனைப்படுகிறவர் பலர். அப்படிப் பாடியவர்களில் வேதனைப் பட்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி!

கவிதைகளில் எல்லாச் சொற்களும் நினைக்கப்படா. நிலைக்கவும் செய்யா. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்பன போன்ற தொடர்கள் ஊழிக்காலத்திற்கும் உலாவரும். தண்டபாணி எழுதியுள்ள,

சிறந்த மனிதம்
தன் பெருமை தானறியாத்
தத்துவத்தின் சிறுகுறிப்பு
தவிர்க்கவே முடியாத
பெருவியப்பின் நுண் இருப்பு!”

இந்த வரிகளில் உள்ள ‘பெருவியப்பின் நுண்ணிருப்பு’ என்னும் தொடர் மிகவும் ஆழமான தத்துவார்த்த சித்திரிப்பாகவே அமைந்துள்ளது. இது  போன்ற தொடர்கள் இவருக்கேகூட எல்லாப் பாடல்களிலும் அமைவதில்லை.  மனிதன் தன்னை உணரவேண்டும். சிறந்த மனிதன் தன்னை உணர்ந்தே ஆகவேண்டும் ஆனால் இந்தப் பிறவியின் மகத்துவம் உணராது, தன்னுடைய பெருமையைத் தானே உணராத மானுடத்தை எண்ணி மருகுகிறார். அரக்கனை அழிக்க இறைவன் எடுத்த வடிவம் மானுடம். இறைவன் வருந்தி எடுத்த பிறவியை எளிதாகப் பெற்றதனால் இப்பிறப்பின் அருமையை உணரவில்லையோ என எண்ணி வருந்துகிறார். ‘விசித்திர நாடகங்கள்’ என்னுந் தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் இந்த வரிகளை மகாகவி பாரதியின்,

தேடிச்சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரைக்
கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ

என்னும் வரிகளோடு ஒப்பிடலாம். மகாகவி எந்தச் சமுதாயத்தைப் பற்றி என்றைக்குப் பாடினானோ அந்தச் சமுதாயம் அன்றைக்கு எப்படி இருந்ததோ அப்படியே தான் செக்கு மாடுபோல் ஒரே இடத்தைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தண்டபாணியின் வரிகள் தெளிவாகப் படம் பிடிக்கின்றன. படைப்பாளர்கள் படத்திறப்பு விழாவுக்கும் படைப்புக்கள் பட்டிமன்றத்தில் சிலர் காசு சேர்ப்பதற்குமே பயன்படுகிறது. கம்பன் பிறந்தும் இங்குக் காவியம் செழிக்கவில்லை! திருவள்ளுவன் எழுதியும் இங்கு நீதி தழைக்கவில்லை! வள்ளலார் தோன்றியும் இங்குப் பசி போகவில்லை! வேலு நாச்சியார் வாழ்ந்தும் இங்கு வீரம் சிறக்கவில்லை! மொத்தத்தில் மானுடம் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை!

எங்கே தேடுவேன்?

ஒரு கவிதை இப்படித் தொடங்குகிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயராலும் நவீனத்துவம் என்ற பெயராலும் நகர்ப்புற மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் வெட்டப்படுகின்றன. மாறாகக் கட்டடங்கள் விதைக்கப்படுகின்றன. பசுமை நிறப்பெயராகவே அறியப்படுகிறது.

நான்கு வழிச்சாலையில்
வெப்பத்தை உள்வாங்கி
நெருப்பை உமிழ்ந்து
கொண்டே தேடுகிறேன்

தான்தோன்றி மலைகளைத் தேடுகிறார். காட்டுக் குயிலினங்கள் கானம் ஒலித்த கருவேலங்காடுகளைத் தேடுகிறார். ஆர்ப்பரித்துச் சென்ற ஆற்றுப் படுகைகளைத் தேடுகிறார். ஏரிகளைச், சாலைகளை என்று எல்லா இடங்களிலும் தேடுகிறார் இயற்கையை! எப்படி நிறைவு செய்கிறார் தெரியுமா?

என் இளமையைத் தாலாட்டிய
இயற்கையே!
பேராசைப் பேய்களின்
பெருத்த வயிற்றுக்குள்
இரையாகிப் போன
உன்னை
எங்கே தேடுவேன்!”

மனிதனைத் தேடி ஏமாந்தவர் இப்போது இந்தப் பாட்டில் இயற்கையைத் தேடி ஏமாந்து நிற்கிறார்!

கவிதை குடியிருக்கும் காட்டாறு

எவ்வகைப் பயனையும் எதிர்பாராது ஒரு தனிமனிதன் பொருட்செலவைப் பொருட்படுத்தாது ஒரு நூலை எழுதி வெளியிடுகிறான் என்றால் அதன் காரண நுண்ணியம் கருதத்தக்கது. எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் செலவழித்து வெளியிடுகிறான் என்றால் அவன் உள்ளம் ஏதோ ஒன்றினைச் சொல்ல வேண்டும் என்று தவிப்பதாகத்தான் கொள்ள வேண்டியதிருக்கிறது. ‘தண்டபாணியின் கவித்துவம் இந்த நூலின் எல்லாப் பக்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது’ என்பது உயர்வு நவிற்சி! இன்னும் துணிந்துத் தெளிவாகச் சொன்னால் போலிப் புகழ்ச்சி! நூலெல்லாம் சமூக ஆர்வலராக, ஒரு படைப்பாளியாகத் தோன்றும் அரிமா தண்டபாணி.

காட்டு வெள்ளம் வந்து போகும்
காட்டாறு ஓடைகள்

என்னும் இரண்டு வரிகளில் கவிஞர் தண்டபாணியாக அவதாரம் எடுக்கிறார். மேற்கில் தோன்றிக் கிழக்கில் கலப்பது இந்திய நதிகளின் இயற்கை. காட்டாறு என்பது மழைவந்தால் வரும். மழை போனால் ஆறும் போய்விடும். என்ன ஒரு கவித்துவம் பாருங்கள்? ஆற்றினை விருந்தாளியாக்கிப் பார்க்கிறார். வந்து போகும் ஆறாம்! கவிதையைத் தொழிலாகச் செய்பவனுக்கும் அவ்வளவு எளிதாக வர இயலாத கற்பனை இது! ஆலயங்களில் பக்தர்கள் வந்து போவார்கள்! வழித்தடங்களில் பேருந்துகள் வந்து போகும்! ஆறு என்பதன் இலக்கணமே ஒரு இடத்தில் தோன்றி வேறொரு இடத்தில் இன்னொரு ஆற்றில் கலக்கும் அல்லது பெரும்பாலும் கடலில் கலக்கும். இதுதான் ஆறு. ஆற்றுக்கு ஒருமுகப் பயணம்தான்! காட்டாற்றுக்கும் இது பொருந்தும். ஆனால் காட்டாறு தோன்றுவதும் மறைவதும் அதாவது வருவதும் போவதும் மழையைப் பொருத்ததேயன்றி ஊற்றினைப் பொருத்ததன்று தலைக்காவிரி போல!

எது தவறு?

வாழ்க்கை ஒரு சக்கரம்! சுழல்வது அதன் இயல்பு! அது சுற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறவன் தனக்கான வாய்ப்பு வரும்போது தக்கவைத்துக் கொள்கிறான். விழித்துக் கொண்டே தூங்குகிறவன் ஏமாந்து போகிறான். சிரிப்பு அழுகையில் முடிவதும் அழுகை சிரிப்பாக மாறுவதும் உலகியற்கை!

அழுவது தவறில்லை
விழுவதும் தவறில்லை!
ஆனால்
அழுதபின்பு சிரிக்காமல் இருப்பதும்
வீழ்ந்த பின்பு எழாமல் இருப்பதுமே தவறு

அறியாமை குற்றமன்று. அறியாமல் போனோமே என்று வருந்தாமல் இருப்பது தவறு. அதனைத் தொடர்ந்து அதனை அறிந்து கொள்ள முயலாமை பெருந்தவறு. எனவே ஒரு சிக்கலில் எது தவறு என்பதை அறிவதற்கும் ஞானம் தேவைப்படுகிறது. ‘வாழ்க்கைச்சிக்கல்’ ஒரு நூற்கண்டு என்று உருவகித்தால் அதன் நுனியைக் காணும் திறன் வேண்டும். அத்திறன் வாய்க்கப் பெற்றால் அழுகை சிரிப்பாகும்! வீழ்ச்சி உயர்ச்சியாகும்! வெற்றி தொடர்ச்சியாகும்! கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே! அதற்காக ‘எழுந்திருப்பதெல்லாம் விழுவதற்காகவே’ என்று எண்ணினால் வாழ்க்கையின் நோக்கம் திசைமாறும்! ஏக்கம் எக்காளமிடும்!

அந்தாதி அறிவுரை

‘தலை உள்ளவன் எல்லாம் தலைவனாக முடியாது. தலையில் உள்ளவன்தான் தலைவனாக முடியும்” என்பது உலகியல். எதனையும் யாரையும் தன் இயல்பால், தன் அறிவால், தன் ஆற்றலால் தன்வசப்படுத்திக்  கொள்பவன் வாழ்க்கையில் நிற்கிறான்., நிலைக்கிறான். சூழ்நிலையின் கைதியாகும் எவனும் அல்லது அதில் கரைந்து போகிற எவனும் வாழ்க்கைப் போராட்டக் களத்தில் எதிர் நீச்சல் போட இயலாது. தண்டபாணி எழுதுகிறார்,

சூழ்நிலைக்குள் கரைந்து போகிறவன்
சாதாரணத் தலைவன்!
சூழ்நிலையைத் தகர்த்து எழுபவனே
சாதனைத் தலைவன்!
எண்ணுபவர் விழிப்பர்!
விழிப்பவர் உழைப்பர்!
உழைப்பவர் உயர்வர்!
உயர்வாருக்கே இவ்வுலகம்!”

தொடை விகற்பம் என்பது யாப்பு வல்லார்க்கானது. தணிக்கையாளரும் இந்த விகற்பத்தைத் தம் கவிதையில் கையாண்டுள்ளார். எதிலும் ஆர்வம் இருந்தால் எதுவும் கைகூடும் என்பதற்கு இந்த ‘அந்தாதித் தொடை அறிவுரை’ அழிக்க முடியாத ஒரு சான்றாகத் திகழ்கிறது.

நிறைவுரை

குளிர்பதன அறையில் வசதியான திண்டில் சாய்ந்து கொண்டு ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே?’ மனிதனைத் தேடாமலேயே காணோம் என்று சொல்லிக் காசு பார்ப்பவர் ஒருபுறம். பணி ஓய்வு பெற்றுப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய நேரத்தில் அக்கறையோடு புலம்புகிறவர்கள் மற்றொரு புறம். முன்னவன் பணத்திற்காக எழுதுகிறான். இவர் பாசத்தோடு எழுதுகிறார். அவன் தத்துவம் சொல்வதாகக் கருதிக் கொண்டு சம்பாதிக்கிறான். இவர் சம்பாதித்த காசைப் பொருட்படுத்தாது தான் வாழுகிற சமுதாயத்தின் மீது தான் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார். தொழிலாளர் நலன் சார்ந்தும் நிறுவனங்கள் சார்ந்தும் அமைந்த தணிக்கைத் துறை அலுவலர் பணி ஓய்வு பெற்ற பின்பு எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது! தன்னைச் சுற்றிய சமுதாயத்தைப் பற்றித் தானே சிந்தித்ததைத் தனக்குத் தெரிந்த மொழியில் தானே பதிவிட்டிருக்கும் இந்த எழுபது வயது இளைஞருடைய கவிதைகளை இந்த எண்பது வயது முதியவன் படித்தேன்! சுவைத்தேன்! அதனால் பகிர்ந்தேன்! நீங்களும் சுவைக்க வேண்டுமென்பதற்காக!

தணிக்கையாளர் அரிமா .தண்டபாணி M.A.,M.L.M.,M.B.A.,

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

  1. வளரும் படைப்பாளர்களுக்கு உங்கள் வாழ்த்து வழிகாட்டும்
    நன்றியுடன்
    குளித்தலை முகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *