குறளின் கதிர்களாய்…(384)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(384)

அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

– திருக்குறள் – 441 (பெரியாரைத் துணைக்கோடல்)

புதுக் கவிதையில்

அறமதின் நுட்பத்தை
ஆராய்ந்து அறிந்து
அகவையில் தன்னிலும் மூத்த
அறிவுடையோரின் நட்பை
அரசன்
அதன் சிறப்பை யுணர்ந்து
அவர் மகிழும்
வகையறிந்து
வைத்துக்கொள்ள வேண்டும்…!

குறும்பாவில்

அறமுணர்ந்த தன்னிலும் மூத்த
அறிவுடையோர் நட்பை அதன் சிறப்பறிந்து
அரசன் கொள்ள வேண்டும்…!

மரபுக் கவிதையில்

அறத்தின் நுட்ப மதறிந்தே
அகவை தன்னில் தன்னைவிடச்
சிறப்பாய் மூத்த அறிஞருடன்
செயலில் கொள்ளும் நட்பதனைப்
பெறவே யதனின் சிறப்புடனே
பெருமை யெல்லாம் சேர்த்தறிந்த
பிறகே யதனைப் புவிமன்னன்
பிடிப்பாய்க் கொள்ள வேண்டுமாமே…!

லிமரைக்கூ

அறமதனை உணர்ந்த நல்லார்
அறிவுடைய அகவையில் மூத்தோரே அரசன்
அறிந்து நட்புகொள்ள வல்லார்…!

கிராமிய பாணியில்

கொள்ளணும் கொள்ளணும்
நட்பு கொள்ளணும்,
நம்மவிடப் பெரியவங்கள
நல்லவங்களப் பாத்து
நட்பு கொள்ளணும்..

அறத்தோட நுட்பமறிஞ்ச
வயசுல மூத்த
அறிவு நெறஞ்ச பெரியவங்களோட
நட்பில
அதனோட பெரும தெரிஞ்சி
அரசன்
நட்பு கொள்ளணும்..

தெரிஞ்சிக்கோ
கொள்ளணும் கொள்ளணும்
நட்பு கொள்ளணும்,
நம்மவிடப் பெரியவங்கள
நல்லவங்களப் பாத்து
நட்பு கொள்ளணும்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க