பழகத் தெரிய வேணும் – 94

நிர்மலா ராகவன்

வாழ்க்கையும் பள்ளிதான்

ஒரு சிறுமி தாயிடம் வம்பு வளர்த்தாள்: “எனக்குப் பிடிக்காததை எல்லாம் உடம்புக்கு நல்லதுங்கிறே!”

இருபது வயதானபின்பும், சாப்பிடுவதும், விளையாடுவதும்தான் சிலருக்குப் பிடித்த விஷயங்கள்.

அவர்களுடன் இணைந்து விளையாடியவர்களுக்குத் தனியாகக் குடும்பம் அமைந்துவிட்டால், பிறருக்காக நேரம் ஒதுக்குவார்களா என்பதை யோசிப்பதில்லை. தனித்துப்போவார்கள்.

சிறு வயதில் நட்பு

குழந்தைகளுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு தெரியாது. யாராவது அவர்களைப் பாராட்டினால், அவர்களைப் பிடித்துப்போய்விடும்.

பதினெட்டு வயதுவரை, குழந்தைகளைப் பாதுகாக்கக் கூறவேண்டிய அறிவுரை:

  1. யாராவது புகழ்ந்தால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே! `நன்றி’ என்று சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு. தலைக்கனம் வந்தால், வாழ்க்கை சறுக்கிவிடும்.
  2. உன்னைவிட ஓரிரு வயது மூத்தவர்களுடன் மட்டுமே பழகுவது நல்லது. ஏனெனில், உன்னைவிட வயதில் பெரியவர்கள், “நீ எவ்வளவு புத்திசாலி! அழகு!” என்று புகழ்ந்தால், அது அனேகமாக சுயநலத்திற்காக இருக்கும். உன்னைத் தவறான முறையில் நடக்கத் தூண்ட அவர்களுக்குத் தெரிந்த வழி அது.

பாடம் படிக்கப் பிடிக்காது!

அநேகமாக, பாலர் பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் சொல்லிவருவதுதான் இது. உரக்கச் சொல்லாவிட்டாலும், கல்லூரி மாணவர்களுக்குக்கூட கல்வி பயில்வதே கசப்பாக இருக்கும். கல்வி பயின்றால்தான் அறிவு வளரும், பிறர் மதிக்க வாழலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

`படிக்காத மேதை’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம். அவர்களுடைய அறிவை வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருப்பார்கள்.

வேறு சிலர், காலம் கடந்து, தாம் செய்த தவறுகளால் ஓயாது வருந்துவார்கள். அதனால் அவர்களுடைய சுயமதிப்பு குன்றியிருக்கக்கூடும். அதை மறைக்க, பிறருக்கு ஆலோசனை அளிப்பார்கள்.

கதை

“நான்தான் குடித்துக் குடித்து, சீரழிந்துபோய்விட்டேன். நீங்களாவது அந்த விஷத்தைத் தொடாதீர்கள்!” என்று தன் மூன்று மகன்களிடம் முடிந்தபோதெல்லாம் கூறுவார் அந்த தந்தை. கூடியவரை, அவர்களைக் கட்டுப்படுத்தினார்.

தந்தையைப் பார்த்துதான் ஆண்குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. அவருடைய அறிவுரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

அத்துடன், கட்டுப்பாடு பொறுக்கமுடியாது போகும்போது, அதை மீறி நடக்கத்தானே தோன்றும்?

ஒரு மகனுக்குமட்டும் தான் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் எழுந்துகொண்டே இருந்தது.

நண்பர்களுடன் பேசிச் சிரித்தபடி ஓய்வு நேரத்தையெல்லாம் கழிப்பது உயர்ந்ததா, அல்லது தன் குடும்பத்தினருடன் சுமுகமாக இருப்பது பயனுள்ளதா என்று யோசித்தான். தான் மூப்படைந்ததும், எந்த நண்பனும் உறுதுணையாக இருக்கமாட்டான் என்று தந்தையின் வாழ்க்கை அளித்த பாடம் புரிந்தது.

போதையில், அப்பா அம்மாவை அடிப்பதுபோல் தானும் அருமை மனைவியிடம் நடந்துகொண்டுவிடுவோமோ என்ற பயம்வேறு.

மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, `ஏனோ இப்படிச் செய்கிறேன்! ஐ லவ் யூ!’ என்று சொல்வதில் உண்மை இருக்கமுடியுமா? (இந்த பசப்பல் பேச்சை நம்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்).

எல்லாரையும், எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று தெளிவடைந்தான். பிறருடைய ஆமோதிப்புக்காக நடிக்கவேண்டுமா என்று சிந்தித்தபோது, தன்னைக் கட்டுப்படுத்தும் நண்பர்களை விட்டொழித்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியது.

யோசனை பலத்தது. எந்தப் பயனும் கிடையாது என்று உறுதியாகத் தெரிந்தபின், ஒரு செயலை விட்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்! இல்லாவிட்டால், அதையே பலமுறை செய்வோம். நேரம்தான் வீணாகும்.

பெருமுயற்சி எடுத்து அப்பழக்கத்தை விட்டொழித்தான்.

அதற்குப் பிறகும், உடனே நிம்மதி கிட்டவில்லை.

`நீங்கள் செய்வது சரியில்லை!’ என்று இவன் புத்திகூறுவதுபோல் எண்ணி நண்பர்கள் ஆத்திரப்பட்டார்கள். அவர்களின் கேலி, கோபம் இவற்றைச் சமாளிக்க நேர்ந்தது.

பொது இடங்களில் அவனைப் பார்க்கும்போது, “நீ குடியை நிறுத்திவிட்டதால், இன்று வழக்கத்தைவிட பாதிதான் வாங்கியிருக்கிறார்கள்!” என்று, கண்டபடி கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

குடும்பத்தினரின் அன்பால் அவர்களது போக்கை அலட்சியப்படுத்தப்படுத்த முடிந்தது.

நாளடைவில், அவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அவர்களை நாடியதில் தன் தவறும் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டான். ஆனால், அப்போது கற்ற பாடத்தை மறக்கவில்லை.

வாழ்க்கையில் மாறுதல்கள் நிகழத்தான் செய்யும், மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை என்று உணர்ந்து அமைதியாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.

குற்ற உணர்வு, வஞ்சகம் செய்தவர்களின்மேல் கோபம் போன்ற எதிர்மறைக் குணங்கள் நீடித்தால் யாருக்கு நஷ்டம்? `அப்படிப்பட்டவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோமே!’ என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

நமக்குப் பிடிக்காதவர்கள் மட்டுமில்லை, நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் மட்டமாக நினைக்காதிருக்க, `நல்லவேளை, நானும் அவர்களைப்போல இல்லையே!’ என்று எண்ண ஆரம்பித்தால், வித்தியாசமாக இருப்பவர்களையும் ஏற்கமுடியும்.

நம்மால் இயன்றதை, நமக்குப் பிடித்ததைச் செய்துவந்தால், அமைதி நம்மைவிட்டு விலகாது. நம்மைப்போன்ற பிறர் தாமே நம்மிடம் வருவார்கள். அதைவிட்டு, பிறருடன், துரத்தி அடிக்காத குறையாக, தொடர்புகொள்ளத் துடிப்பது ஏன்?

யாருக்கு உதவலாம்?

பிறருக்கு நன்மை செய்தால் புண்ணியம் என்று நம்மை நம்பவைத்திருக்கிறார்கள்.

இதிலும் ஒரு சிக்கல். ஒருவருடைய தாராள மனப்பான்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நிறைய போலி மனிதர்கள் முளைப்பார்கள்.

கதை

மலேசிய தினசரிகளில் வெளியான அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே எவர் மனமும் உருகிவிடும்.

ஆரோக்கியம் மிகக் குன்றிய நிலையில் ஒரு நாய். அதை அணைத்தபடி ஒருவர். அவரைப்பற்றி அவரே அளித்த தகவல்:

நான் ஒரு மிருக வைத்தியன். யாராலும் கவனிக்கப்படாது, தெருக்களில் நடமாடும் நாய்களை எனக்குச் சொந்தமான ஓரிடத்தில் வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தேன். இப்போது அதைப்போல் மூன்று இடங்கள். என் மனைவியும் எனக்கு ஆதரவாக உதவிபுரிகிறார். இந்த நாய்களுக்கான உணவு, மருந்து, கருத்தடைச் சிகிச்சை என்று நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. யாராவது பண உதவி செய்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

`இவ்வளவு நல்லவர்கள்கூட உலகில் இருப்பார்களா!’ என்று பிரமிக்கவைக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை.

பல பத்திரிகைகளில் இம்மாதிரியான தகவலை அளித்து, லட்சக்கணக்கில் கொள்ளையடித்தபின் பிடிபட்டார். அவர் வைத்தியருமில்லை, அவருக்கு மனைவியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.

நாய்கள்?

அவருடைய கற்பனையில்.

சிலர் நம்மிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பார்கள். `எனக்காக அதைச் செய்துவிட்டீர்களா?’ என்று விடாக்கண்டனாக நம்மைத் துளைப்பார்கள். ஆனால், பிரதி உபகாரம் என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு எதற்காக உதவி புரிவது?

உங்களுக்கு BP இருக்கா?

இப்போதெல்லாம், ரத்த அழுத்தம் என்பது நாற்பது வயதாகிவிட்டாலே ஒருவர் எதிர்பார்க்கும் ஒன்றாகிவிட்டது.

குடும்பத்தில், உத்தியோகம் பார்க்கும் இடத்தில், கடைகண்ணிகளில் – இப்படிப் பல இடங்களிலும் தாம் நினைத்தபடியே எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஆகிற காரியமா? அப்படி நடக்காவிட்டால், ஆத்திரம் எழுகிறது. ஒருவர் ஆத்திரப்படுவதால், பிறர் மாறிவிடப்போகிறார்களா, என்ன! அவர் உடல்நிலைதான் கெடும்.

என் தோழி அவளது கணவரைப்பற்றி ஆயாசத்துடன் கூறியது: “அரசியல்வாதிகள் மற்றும் கடைக்காரர்கள் செய்யும் ஊழல்களைத் தினசரியில் படித்துவிட்டுக் குமுறுவார். ரத்தக்கொதிப்பு ஏறிவிடும். இப்போது, பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரைக் கவனிப்பதற்குள் என் பிராணன் போகிறது!”

சுய பரிதாபத்துடன் பிறரிடம் நம்மைப்பற்றிக் கூறிக்கொள்வது வீண்முயற்சி.

“சிலருக்குத்தான் வாழ்க்கை இப்படி அமைகிறது!” என்று ஏக்கப் பெருமூச்சுடன், தம் குறைகளைப் பிறரிடம் கூறி ஆறுதல்பெற முயற்சிப்பவரின் புலம்பலைப் பலர் மரியாதை நிமித்தம் கேட்டுவைப்பார்கள். ஒரு சிலர் உள்ளூர மகிழ்வார்கள் – தமக்கு இப்படியெல்லாம் நேரவில்லையே என்று!

வாழ்க்கை என்பது நாம் அமைத்துக்கொள்வதுதான்.

பிறருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பதுதான் நல்ல குணம் என்றிருந்தால், தன் தேவைகள் என்ன, எது மகிழ்ச்சியைத் தரும் என்பதே ஒருவருக்குப் புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.