நிர்மலா ராகவன்

தோல்வியா? அப்படியென்றால்?

பதினேழு முறை இந்தியாவின்மீது படையெடுத்தார் முகம்மது என்ற பெயர்கொண்ட அரசர். அவருடைய நாட்டின் பெயர் கஜினி. ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதி.

`முயற்சி திருவினையாக்கும்!’ என்று புரியவைக்கவோ, என்னவோ, கஜினி முகம்மதுவைப்பற்றி சரித்திர பாடத்தில் நுழைத்திருந்தார்கள். ஒரே முறை முயன்றுவிட்டு, பின் அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால், ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் அவர் பெயர் நிலைத்திருக்காது.

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அனைவருமே வெற்றி பெறுகிறார்களா? இடையில் நின்றுவிடாது, இறுதிவரை போனாலே வெற்றிதான் — முயலை வென்ற ஆமையைப்போல்.

எந்தக் காரியத்தில் வெற்றி பெற்றவர்களை எடுத்துக்கொண்டாலும், முதல்முறையே வெற்றி கண்டிருக்கமாட்டார்கள். இருப்பினும், தோல்வி என்பதே அவர்கள் வாழ்வில் கிடையாது என்றுதான் கூறுவார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, வெற்றிக்கு எதிர்ப்பதம் அனுபவம். ஏனெனில், அதுதான் இன்னொரு முறை எப்படிச் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும்.

கடினமான காரியத்தில் இறங்கினால், பல முறை தவறுகள் நிகழலாம். நீண்டகாலம் பிடிக்கும். அதில் வெற்றி பெற முக்கியமான தன்மை: பொறுமை.

கதை

நான் ஒரு குறும்படத்தில் நடித்தேன்.

மகள் நாட்டியத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ஏழை விதவைத்தாய், தன் வருத்தத்தை வெளிக்காட்டத் தெரியாது, அவளை ஓயாது திட்டி, நல்வழிப்படுத்துகிறாள். இதுதான் கதை.

தாயாக நான் நடித்தேன். நான் பேசவேண்டிய வசனத்தை என்னிடம் விட்டுவிட்டாள் இயக்குனர்.

மொழி தமிழ். கரு: பரதநாட்டியம். இயக்குனரோ, மிஸ் ஆங் என்ற சீனப்பெண். மொழி, கரு இரண்டுமே அவளுக்குத் தெரியாது. ஆனால், கதை இப்படித்தான் செல்லவேண்டும் என்று கணித்திருந்தாள்.

சில காட்சிகளில், அவளுடைய எதிர்பார்ப்பைக் கூறுவாள். முகபாவத்திலும், தலையசைவிலும் காட்ட முயற்சித்தேன்.

ஒவ்வொரு முறையும், “Again!” (திரும்பவும்) என்பாள்.

இப்படியே, ஒரு காட்சியில் பன்னிரண்டு முறை, அவளுக்குத் திருப்தி ஏற்படும்வரை மாற்றி மாற்றிக் காட்டினேன்.

அந்தப் பாத்திரம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கும் என்று புரிந்துகொண்டு வெளியே கொண்டுவர அவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

படம் முடிந்ததும், ஒளிப்பதிவாளர், “உங்கள் பர்சனாலிடிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, மிக வித்தியாசமான பாத்திரம் அது! நீங்கள் எந்த கல்லூரியில் நடிப்பு பயின்றீர்கள்?” என்று கேட்டார், மிக மரியாதையுடன்!

நான் என்ன செய்தேன்! அதில் இயக்குனரின் விடாமுயற்சி, என்னால் முடியும் என்ற அவளது நம்பிக்கை இரண்டும் கலந்திருந்தன.

“நான் இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறேன் என்று சொன்னதும், எல்லாரும் கேலியாகச் சிரித்தார்கள்!” என்று திரும்பத் திரும்பக் கூறி மகிழ்ந்தாள்.

ஆரம்ப சூரத்தனம்!

கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே?

சிலர் ஒரு காரியத்தை உற்சாகமாக ஆரம்பித்துவிட்டு, விரைவில் ஆர்வம் குறைய, அதை அரைகுறையாகச் செய்வார்கள். அல்லது, கைவிட்டுவிடுவார்கள்.

கதை

தொடர்கதை எழுதும் எண்ணத்துடன் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஒரு கதையை ஆரம்பித்தார். ஒவ்வொரு பாகமும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஓரிரு வரிகளில் குறிப்பும் எழுதி வைத்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்க, பல வாசகர்கள் புகழ்ந்து எழுதினர். சீக்கிரமே கதையில் தொய்வு ஏற்பட்டது. `போரடிக்கிறது!’ என்ற ரீதியில் விமரிசனங்கள் வந்தன.

என்னை ஒரு தொடர்கதை எழுதும்படி வேறொரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.

`ஆகட்டும், பார்க்கலாம்,’ என்று தப்பித்துக்கொள்ளும் ரகமில்லை நான். நேரமின்மையைக் காரணம் காட்டி மறுத்தேன்.

(தோல்வி கண்டுவிடுவோமோ என்ற அச்சத்தாலோ, அல்லது சோம்பல் ஏற்பட்டதாலோ, `நாளை பண்ணப்போகிறேன்!’ என்கிறார்களே! அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

`நீங்கள் கூறுவதைப் பண்ணும் உத்தேசம் எனக்கில்லை!’ என்பதுதான்!)

அவரோ, விடாக்கண்டன். “ப்ளாட் (PLOT) போட்டு வெச்சுக்குங்க,” என்று வற்புறுத்தினார்.

எனக்கு அம்முறை சிறந்ததாகப் படவில்லை.

கதாபாத்திரங்கள் நம் மனதில் சுழன்றுகொண்டிருக்கும்போதே கதையை எழுதிவிட வேண்டும். இது புரிந்து, ஒரே மூச்சில் எழுதினேன். வேறு எதிலும் மனதைச் செலுத்தவில்லை.

ஓயாத உழைப்பால், கண்பார்வைதான் சற்று மங்கலாகப்போயிற்று!

தன்னிரக்கம்

ஒரு காரியத்தில் இறங்கிவிட்டபோது, நம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்று பார்வையை ஓடவிடலாமா? கவனம் சிதறிவிடுமே!

கதை

அரசாங்க முழுப்பரீட்சை என் மாணவன் ஒருவனுக்கு.

திடீரென்று ஒருவர் வெளியிலிருந்து, “ஷூக்ரி!” என்று அவன் பெயரைக் கூவி, “தாத்தா இறந்துவிட்டார்!” என்று கத்தினார்.

அவ்வளவுதான்! கையிலிருந்தவற்றை நழுவவிட்டு, பையன் பதட்டத்துடன் எழுந்தான்.

நான் அவசரமாக வெளியே சென்று, தந்தையிடம், “பாதிப்பரீட்சையில் வெளியில் போனால், தேர்ச்சி எப்படிப் பெறமுடியும்?” என்று பலவாறாக விளக்கினேன். அவர் அரைமனதுடன் திரும்பிச் சென்றார்.

“நீ பரீட்சைத்தாளில் கவனம் செலுத்து!” என்றபோதும், பையனால் முடியவில்லை.

அதன்பின், ஷூக்ரி மிகவும் வருந்தினான் — தாத்தாவுக்காக அல்ல. “இந்த வருடம் நான் ஃபெயில்தான்!” என்று.

தாத்தாவோ இறந்துவிட்டார். அவரைப் பார்க்க பேரன் போனால், என்ன செய்திருக்கமுடியும்?

அதைவிட அவனுடைய எதிர்காலம் முக்கியமில்லையா?

அவனுடைய தந்தை இதையெல்லாம் யோசிக்கவில்லை.

அப்படிப் போடு பழியை!

“என்னை யாருமே ஊக்குவிப்பதில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை,” என்று கூறி, தம் கையாலாகாத்தனத்திற்குப் பிறர்மீது பழிபோடுவார்கள்.

ஊக்கம் என்பது நமக்குள்ளிருந்து வருவது. பிறரை எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

அறிவு, திறமை, கல்வி போன்ற குணங்கள் அமையப் பெற்றிருந்தாலும், பலர் வெற்றி பெற முடிவதில்லையே!

அவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். அது மட்டும் போதுமா?

நமக்குத் திறமை இருக்கிறது, நிறைய சாதிக்கவேண்டும் என்று துடிப்பாக இருப்பவரிடம், “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!” என்று அறிவுரை கூறுவார்கள் உற்றவர்கள்.

“இதெல்லாம் உன்னைப்போன்றவர்களால் முடியாத காரியம்!” என்று தன்னம்பிக்கையைத் தகர்ப்பார்கள்.

சொல்கிறவர்கள் எப்போதும் பாதுகாப்பை நாடுகிறவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பவர்கள் சாதிக்கமுடியாது.

`என் குடும்பத்தினருக்கு நான் செய்வது பிடிக்கவில்லை!’ என்று விட்டுக்கொடுக்கும் ஒருவர் பிறகு வருந்த நேரிடும்.

ஆர்வத்துடன் நாம் ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, நம் திறமையில் நமக்கே சந்தேகம் எழச்செய்கிறவர்களை அலட்சியம் செய்யவேண்டும்.

நம் செய்கையால் அவர்கள் ஆத்திரப்படலாம் – தம்மை மதிக்கவில்லையே என்று. பிறருடைய உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

செய்வதற்குமுன், எந்தப் புதிய காரியமும் கடினமாகத்தான் தென்படும். உழைக்க அஞ்சினால் எப்படி! அதையே சவாலாக எடுத்துக்கொண்டால், உற்சாகமாக இருக்கும்.

“என்ன செய்வது? அதை எப்படிச் செய்வது?” என்று, நம்முடன் ஒத்துழைக்கும் ஒத்த மனத்தினரை நாடினால் வெற்றி பெறலாம். மனநிறைவு கிட்டும்.

முன்னுக்கு வந்திருப்பவர்கள் நம்மைவிட எத்தனையோ கஷ்டங்களை, எதிர்ப்புகளை, கேலியைச் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால், தைரியம் எழும்.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்

மொழி, கலாசாரம், பொருளாதாரப் பிரச்னை போன்ற பல இன்னல்களையும் கடந்து, தாய்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் சில சமயம், உள்நாட்டவர்களைவிட அதிகமாக எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

“என்ன ஆனாலும், மனம் தளராதே. விடாமுயற்சியுடன் போராடு!” என்று அவர்களது தாயோ, தந்தையோ அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்களாம்.

விடாமுயற்சி உடையவர்களைத் தோற்கடிப்பது கடினம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *