தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

0

நிர்மலா ராகவன்

போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு.

பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, `கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா!

ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை.

செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில் தங்க ஒத்துக்கொண்டார்.

தொற்றுநோய் அவருடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது.

ஏதோ ஊசியாம், குத்திக்கொண்டால் நோய் அண்டாதாம் என்று பலருடன் உட்கார்ந்து, ஊசி போட்டுக்கொண்டார்.

அன்று இரவெல்லாம் தலைவலியும், காய்ச்சலும் அவரைப் படுத்த, `சாமி குத்தம்! இதோ இருக்கு பத்துமலை! ஆனா, போக முடியல்லியே!’ என்று காரணம் கற்பித்துக்கொண்டார்.

இந்தப் புது வருடத்தில், `பக்தர்கள் போகலாம்!’ என்று அரசாங்கமே அனுமதித்தது.

சின்னசாமியின் குதூகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை.

“ரெண்டுவாட்டி ஊசி குத்திக்கிட்டவங்கதான் போக முடியும்பா,” என்று செல்வம் விளக்கினான், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

இரண்டாவது வாய்ப்பு வந்தபோது, “நல்லா இருக்கிறபோதே ஊசி குத்தினா, திரும்பவும் காய்ச்சலும், தலைவலியும் வந்து தொலைக்கும். எதுக்குடா வீண் வம்பு!” என்று போக மறுத்துவிட்டார்.

அவரைப்போல் வயதானவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மகனும் வற்புறுத்தவில்லை.

ஆனால், கடந்த இரு வாரங்களாக, எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்ட தந்தையைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

காலமெல்லாம் ஓடாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டவர்! அவருடைய இந்த சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், தான் என்ன மகன்!

“வா, செல்வம்! ஒடம்புக்கு என்ன?” என்று வரவேற்றான் மணிவண்ணன்.

“நல்லாத்தான் இருக்கேன். அப்பா தைப்பூசத்துக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்படறாருடா,” என்று இழுத்தான் செல்வம்.

“கூட்டிட்டுப் போறது!” என்றான் பால்ய நண்பன்.

“அதுக்குத்தான் ஒன்னைப் பாக்க வந்தேன்”.

“பத்துமலைக்கு எப்பவும் லட்சக்கணக்கானபேர் வருவாங்க. இந்த வருசம், ஒரே சமயத்திலே ஆறாயிரம் பேர்தான் உள்ளே போகலாமாம். எனக்கோ கும்பலே ஆகாது. ஒனக்குத் தெரியாதா!” என்று கழன்றுகொள்ளப்பார்த்தான் மணி.

“அதில்லேடா..,” என்று இழுத்த செல்வம், “நீ டாக்டர்தானே! இரண்டாவது ஊசியும் போட்டாச்சு அப்படின்னு ஒரு சர்டிபிகேட் குடுத்தா..!”

முதலில் அதிர்ந்த நண்பன், ஒரு புண்ணிய காரியத்துக்காகத்தானே செய்யப்போகிறோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான்.

“எத்தனை?” என்று செல்வம் கேட்டபோது, “சரிதான் போடா,” என்று செல்லமாக விரட்டினாலும், `காசு பாக்க இது சின்னாங்கான (சுலபமான) வழியா இருக்கே!’ என்ற எண்ணமும் எழாமலில்லை.

ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிடலாமே!

குறுக்கு வழியில் போக மனிதர்களுக்கா பஞ்சம்!

ஆளுக்கு நானூறோ, ஐநூறோ விதித்தால், ஒரே மாதத்தில்.. என்று அவன் மூளை கணக்குப்போட ஆரம்பித்தது.

தைப்பூசத்திற்கு முதல் நாள்.

எல்லா தினசரிகளின் முதல் பக்கத்திலும், `டாக்டரின் மோசடி’ என்ற பெரிய தலைப்பு. முகத்தைச் சட்டையால் மூடியபடி டாக்டர் மணிவண்ணன். இருபுறமும் காவல்துறை அதிகாரிகள்.

முருகனைத் தரிசித்துவிட்ட பெருமகிழ்ச்சியிலிருந்தார் சின்னசாமி.

“என்னப்பா? இப்படி தொண்டைக்கட்டும், இருமலுமா இருக்கீங்களே! டாக்டர்கிட்ட கூட்டிப்போறேன், வாங்க,” என்ற மகனிடம், “எனக்கு ஒண்ணுமில்லேடா,” என்று மறுத்தார்.

அப்போது அவருக்குத் தெரியவில்லை, தான் யாரிடமிருந்தோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட நோயைத் தானும் பரப்பிவிட்டோம் என்கின்ற உண்மை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.