திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு:

மூர்த்தி நாயனாரை அடக்கியாண்ட வடுக மன்னன் சிவச்சார்பு இல்லாமையால்  விரைவில் மாண்டு நரகம் புக்கான். மக்கள் அவனுக்கு இறுதிக்கடன்  செய்தனர். அவனுக்கு வாரிசு இல்லாமையால், மன்னன்  இல்லா அரசு உயிரற்ற உடல்போன்றதாகும்.  என்றனர். ஆதலால் யானை ஒன்றைக்  கண்கட்டி அனுப்பினால், அவ்வேழம் கைக்கொண்டமனிதன் அரசாட்சி கொள்வான் என்று, பூசனைசெய்து, ‘’உரிய அரசனைக் கொணர்க’’  என்று ஏவினர். அந்த யானை எங்கும்  திரிந்து , ஆலவாய்  அண்ணல் கோயிலை அடைந்தது.

முன்னாள்  இரவில் மூர்த்தியார்  கனவில்  இறைவன்  அருள் வாக்கு கூறியதைக் கேட்ட  அடியார் ‘’இறைவன் அருளியவாறே  அரசுரிமை பெறுவேன்’’ என்று  திருக்கோயில் வாயிலுக்கு வந்தார்.   அரசயானை அங்கே வந்து உலகம் உய்யும் பொருட்டு, அடியாரை எடுத்து தன்  பிடரிமேல் தாங்கிச் சென்றது. மக்கள் பணிந்து   செய்த  ஆரவாரத்தின் இடையே அரசனின் ஆட்சி மன்றத்தில் இருந்த  அரியாசனத்தில்  அடியாரை ஏற்றி  வணங்கியது.

மக்கள் அனைவரும் அடியாராகிய அரசனைப் போற்றி, அரசாபிடேகம் செய்ய விரும்பினார். மக்கள் வேண்டியதால்  சடாமுடியே அரசமுடி, திருநீறே  அபிடேகம்  சிவனுடைய  மாலைகளையே அணிகலன்கள்  எனக் கொண்டு  தவராச  யோகியாக  அரியணை ஏறினார்.  அறிவார்ந்த  அமைச்சர்களும் அதற்கேற்ற சடங்குகள் செய்தனர். அவ்வாறே அரசேற்ற அடியார்  அரச வீதியில் யானைமேலேறிச் சென்று , சிங்காதனம் ஏறினார்.

சமணர் நெறி நீக்கிச்  சிவநெறி  மேற்கொண்டு அக்கமணிமாலை தாங்கி  மூர்த்தியார், அரசாட்சி  செய்யத்  தொடங்கினார்.  பெண்களின் பால் காமம் நீக்கி,  ஐம்புலன்களையும் அடக்கி, உலக உயிர்களுக்கு இடர் வராமல் காத்து, அவர் ஆண்ட  இறைவனடி  சேர்ந்த  சிறப்பைச்  சேக்கிழார் பாடுகிறார்,

பாடல்:

பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு, தொண்டின்
பேதம் புரியா அருள் பேர் அரசுஆளப் பெற்று
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே.

இதன்பொருள்: தமது பாதங்களைவேற்றரசர்கள் சூழ்ந்து பணிந்துபோற்றக், கெடுதிகள் பீடிக்காதவகையால் இவ்வுலகினை அரசாண்டு திருத்தொண்டினின்றும் விலகாத அருட்பேரரசும் ஆளப்பெற்று, இறைவனாரது கழலணிந்த திருவடிகளைப் பெருமையுடைய மூர்த்தியார் அடைந்தனர்.

விளக்கம்:

பரமன்னவர் – வேற்றரசர். வென்றனர் என்பது முன்னரே  கூறினாராதலின், அவ்வாறு வெல்லப்பட்ட பரமன்னரும், வெல்லப்படாமல் தாமே இவரது நீதியும் ஆணை வலிமையும் கண்டு வந்து சாரும் மன்னரும் வந்து பாதம் பணிந்து போற்றினர் என்க.

திருவாதவூரடிகளது அமைச்சுத்திறத்தினை நயந்து பலதேய மன்னர்களும் தாமே வந்து பணிந்து நட்புரிமை கொண்டு நடந்தனர் என்ற செய்தியை இங்கே நினைவுகூர்க.

ஏதம் பிணியா  வகை  இவ்வுலகு ஆண்டு  என்பதற்கு,  புறப்பகையால் வரும் ஏதம்

பிணியாவகையிலும், அகப்பகையால் வரும் ஏதம் பிணியாவகையிலும் உலகாண்டனர் என்க.

தொண்டின் பேதம் புரியா – சிவத்தொண்டினின்றும் பிரியாத – சிறிதும் திறம்பாத. அருட்பேரரசு – சிவனதருளின் கீழதாகிய பெரும்பாக்கியம். உலகாளும் அரசினும் அரனது திருத்தொண்டாகிய அரசே பெரிது என்று காட்டுவார்  அருட்பேரரசு எனச் சிறப்பு அடைமொழி தந்து விதந்து எடுத்துக் கூறினார். உலகுயிர்மேல் வைத்த சீவகாருண்ணியத்தினும் சிவனருட் பெருமையே பெரிதெனக் கொண்டனர் மூர்த்தியார் என்பது காண்க. (உலகு) ஆண்டு என்றமைந்த ஆசிரியர், (பேரரசு) ஆளப்பெற்று என்று சிறப்பித்துக் கூறிய திறனும் இக் கருத்தே பற்றியது. மேல்வரும் பாட்டில் களிற்றன்பர் என்றதும் காண்க.

முடிமன்னர்களாகிய தமிழ் மூவேந்தர்களில் ஒருவராய், “மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் றமிழ்முதலாம், பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா” ராகிய ஐயடிகள் காடவர்கோ னாயனார் இக் கருத்துப்பற்றியே (உலக)

“அரசாட்சி இன்னல் என  இகழ்ந்து  அதனை யெழிற்குமரன் மேல் இழிச்சி,

நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்”

என்ற சரிதம் கேட்கின்றோம். அவரது திருவுள்ளநிலை இக்கருத்தே பற்றிய தென்பது

“படிமுழுதும்  வெண்குடைக்கீழ்ப்    பாரெலா   மாண்ட,
முடியரசர்   செல்வத்து  மும்மை  – கடியிலங்கு,
தோடேந்து  கொன்றையந்தார்ச்   சோதிக்குத்   தொண்டுபட்டு
ஓடேந்தி   யுண்பது  உறும்”

என்று அவர் அருளிய க்ஷேத்திரத் திருவெண்பாவினால்  அறியப்படும். இதனையே வியந்து எடுத்துப் பாராட்டி

“முடியரசாம்   அத்திற்கு   மும்மைநன் றால்  அரற்கா
ஐயம்  ஏற்றலென்னும், பத்திக்கட லையடிகள்”

என்று துதித்தருளினர் நம்பியாண்டார்நம்பிகள் .

“போகம்வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்”

என்ற திருவாசகம்  முதலியவை காண்க.

“கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்;
மேலை யிந்திர னரசினைக் கனவினும் வெஃகேன்;
மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்;
சால நின்பதத் தன்பையே வேண்டுவன் றமியேன்”

என்று  கந்தபுராணத்தில்  வீரவாகுதேவர் கேட்ட வரத்தின் உள்ளுறையும் கருதுக.

அண்ணலார்  என்ற சொல்,  பெருமையுடையவரைட் குறித்தது.  பெரும்பேறாகிய

சிவனடிப் பேறு பெற்ற இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

இப்பாடலால், ‘’அரசாட்சி  ஏற்பவர்  துறவியாக  இருக்க வேண்டும்’’  என்ற உலகியல்  மொழியைப்  பெரிய புராணம்  கூறுவதை  உணரலாம்.  இறையருளையே  வேண்டுபவர்  செய்யும் அரசாட்சி  இறையருளாட்சியாகவே  இருக்கும் என்பதை  இப்பாடல் குறிக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *