நிர்மலா ராகவன்

உணர்வும் முதிர்ச்சியும்

“இதை நான் செய்யவில்லை. அவள்தான் இப்படிச் செய்யச்சொன்னாள்”.

“அவள் குறுக்கிட்டதால்தான் நான் செய்ய ஆரம்பித்த காரியத்தில் தவறு நேர்ந்துவிட்டது”.

இப்படிக் கூறுகிறவர்கள் சிறுவயதினர் மட்டுமில்லை. வயது ஏறியிருந்தாலும், உணர்ச்சிபூர்வமாக முதிர்ச்சி அடையாதவர்கள் பலர் உண்டு.

கதை

யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ஆசிரியை கமலம். அவளைப் பிறர் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமோ?

தான் எப்போது குறுக்கிடலாம் என்றே காத்திருப்பாள், தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ள.

`நீ எப்போது காரோட்டப் பழகினாய்?’

`நீ எப்போது தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டாய்?’

கமலத்தை நோக்கிக் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இப்படித்தான் ஆரம்பிக்கும் :“நான் பம்பாயில் M.SC பண்ணிக்கொண்டிருந்தபோது..!”

இப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு முறையால் வதைக்கப்பட்டிருக்கலாம். தாழ்வு மனப்பான்மையை மறைத்துக்கொள்ள பிறரைச் சாடுவார்கள். அப்போதுதானே தாம் உயர்ந்துவிட்டதைப்போல் தோன்றிவிடும்!

(ஆங்கிலமோ, மலாயோ, கமலத்தின் உச்சரிப்பு வேற்றுமொழியின் வாடையுடன், வித்தியாசமாக இருக்கும். `அவள் பேசுவது யாருக்குப் புரிகிறது!’ என்று பிறர் கேலி செய்வது அவளுக்குத் தெரியாமல் போயிருக்குமா!)

அவளைப்போல், உடல் வளர்ந்திருந்தாலும், முதிர்ச்சி இல்லாதவர்களுக்குப் புதியனவற்றை அறியும் ஆர்வம் இருக்காது. அது பிறரைப் பற்றிய வம்பாக இருந்தால் மட்டும் சுவாரசியமாகப் பங்கெடுப்பார்கள்!

கதை

என் பள்ளித் தலைமை ஆசிரியை தன்கீழ் இருப்பவர்களைப் பாடாய்ப்படுத்தினாள். பள்ளி முழுவதும் கேட்கும்படி எந்த ஆசிரியர் பெயரையாவது சொல்லி, அவர் செய்த தவற்றையும் பிரகடனப்படுத்துவாள்.

இதுபோன்ற செய்யக்கூடாத பலவற்றைச் செய்தாள்.

பொறுக்கமுடியாது, நான் அவள் செய்த அட்டூழியங்களையெல்லாம் பட்டியலிட்டு, தினசரிக்கு அனுப்பினேன். (அவள் பெயரைப் போடவில்லை. ஆசிரியருக்கு மட்டும் எந்தப் பள்ளி என்று குறிப்பு அனுப்பியிருந்தேன்).

அது வெளியானதும், நானடைந்த பிரபலத்தைப் பொறுக்கமுடியாது, “இதனால் உனக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்று தெரியுமா?” என்றாள் கமலம், சவாலாக.

“எழுதி அனுப்புமுன்னரே எல்லாவற்றையும் யோசித்துவிட்டேன்,” என்றேன் அலட்சியமாக.

என்னை அதிர்ச்சி அடையச் செய்யவேண்டும் என்று அவள் கேட்டிருப்பாள். நான் அடையாத அதிர்ச்சி அவளிடமே திரும்பியது.

உணர்ச்சி முதிர்ச்சி கொண்டவர்கள்

ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராது, எல்லோரையும் ஒரேமாதிரி நடத்துவதால், மதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், அவர்களை துச்சமாக நடத்துகிறவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவார்கள்.

கதை

செடிகளை விற்பனை செய்யும் நர்சரி அது.

வேறு நாட்டைச் சேர்ந்த இளம் தொழிலாளி செடிகளை விற்றுக்கொண்டிருந்தான், தன் முதலாளியின் சார்பில்.

“ஏய்! இது என்ன விலை?” என்று அதிகாரமாகக் கேட்டாள் ஒரு பெண்மணி. பெரிய காரில் வந்திருந்தாள். `இவனையெல்லாம் மதிப்பதாவது!’ என்ற அகம்பாவம் அவள் கேள்வியில் தொனித்தது.

தான் தாழ்த்தப்படுவதை யாரால்தான் பொறுக்கமுடியும்!

நான் வாங்கியதைப்போல் இரு மடங்கு விலையைச் சொல்லிவிட்டு, அந்த இளைஞன் என்னைப் பார்த்து, ரகசியமாகச் சிரித்தான்.

தாம்பத்தியத்தில் உணர்ச்சி வேறுபாடு

கதை

ராமனுக்கும் சீதாவுக்கும் பெயரில் மட்டும்தான் பொருத்தம்.

இருவரும் காரில் போகும்போது ஏதாவது தவறு செய்துவிட்டால், “உன்னோடு பேசியதால்தான் இப்படி!” என்று மனைவிமேல் பாய்வான் ராமன்.

பேசியது அவன். தவறு செய்ததும் அவன். ஆனால், நடந்தது அவள் குற்றம்.

தன் துணையாகவே இருந்தாலும், மனைவி வெற்றி அடையும்போது சிறுமையாக உணர்வார்கள் சில ஆண்கள். அதை மறைக்க, சமயம் கிட்டியபோதெல்லாம் அவளை மட்டம் தட்டுவார்கள் – பொது இடங்களில்கூட.

அவர்களது குழப்பம் புரிந்து, அவ்வப்போது புகழ்ந்து, `எனக்கு நீங்களும் முக்கியம்தான்!’ என்பதுபோல் ஆதரவாக நடந்துகொண்டால், நாளடைவில் சற்றே மாறும் சாத்தியக்கூறு உண்டு.

கதை

திருமணத்திற்குப்பின் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தாள் மூர்னி. அவள் படிப்பை ஒட்டி, பெண்ணியத்தைப்பற்றி என்னைப் பேட்டி காண வந்திருந்தாள்.

மலாய், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த தேர்ச்சி இருந்ததால், பிரபலமானவர்கள் சிலரைப் பேட்டி கண்டு, தினசரிகளுக்கு அனுப்பியிருந்தாள்.

ஆங்கிலத்தில் சிலமுறை வெளியானதும், `இவள் தன்னை மிஞ்சிவிடுவாள் போலிருக்கிறதே!’ என்ற பயம் ஏற்பட்டது அவள் கணவனுக்கு.

“அதன்பின், மூன்று நாட்கள் என்னுடன் பேசவேயில்லை,” என்று என்னிடம் தெரிவித்தாள். “நீங்கள் கூறிய கருத்துகளை எழுதி அனுப்ப தயக்கமாக இருக்கிறது. என் கணவர் மீண்டும் கோபித்தால் என்ன செய்வது?” என்று குழம்பினாள்.

பல பெண்கள் திருமணத்திற்குமுன் கதை, கட்டுரை என்றெழுதி, பத்திரிகைகளில் அவை பிரசுரமும் ஆகியிருக்கும்.

கல்யாணத்திற்குப்பிறகு அவர்களில் பெரும்பாலோர் காணாமல் போய்விடுகிறார்களே, ஏன்?

`வீட்டு வேலை, குழந்தைகள்,’ என்று ஏதேதோ காரணம் காட்டினாலும், கணவரது பொறாமையைத் தூண்டிவிடுவானேன், இல்லறத்தில் குழப்பம் ஏற்படச் செய்வானேன் என்றுதான் யோசித்திருப்பார்கள்.

`முன்பெல்லாம் நிறைய எழுவாயே! இப்போது ஏன் விட்டுவிட்டாய்?’ என்று அப்படியொரு மனைவியைக் கேட்கும் கணவன் தன் சொல்லும் செயலும் பிறரைப் பாதிக்கக்கூடும் என்பதை உணராதவன்.

பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கக்கூடும் என்பது அப்படிப்பட்டவர்களுக்குப் புரிவதில்லை. தம் உணர்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதால், தாக்கப்படும்போது குறுகிவிடுவார்கள்.

தொடர்ந்து எழுதும் பெண்கள்?

இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன.

ஒன்று, கணவர் ஊக்குவிக்கிறார், இல்லையேல், மனைவி எழுதுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

(பிறரை ஊக்குவிப்பவர்கள் உணர்வு முதிர்ச்சி கொண்டவர்கள். எவ்விதத்திலும் பிறரைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். அதேபோல், பிறர் தம்மைக் கட்டுப்படுத்துவதையும் விரும்பாதவர்கள்).

இரண்டு, எந்த எதிர்ப்பையும் லட்சியம் செய்யாது, எழுத்தே உயிர்மூச்சு என்றிருக்கும் பெண்கள்.

எத்துறையில் பீடுநடை போடும் பெண்களுக்கும் இவை பொருந்தும்.

அவர்களது ஆர்வத்தைத் தடைபோடுவதுடன் நில்லாது, கண்டபடி பழிக்கும் கணவன்மார்களைப் பொறுக்க முடியாததால்தான் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள் நடிகைகள்.

பழி என்னவோ, பெண்களுக்கு.

குடும்பத்தில் பாரபட்சம்

ஒரே குடும்பத்தில் குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டால், தாழ்த்தப்பட்ட குழந்தையின் ஆத்திரம் பிறரையும் துன்புறுத்தவேண்டும் என்ற ஆத்திரமாக மாறலாம். அல்லது மன இறுக்கத்தில் கொண்டுவிடும்.

பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் பழகும்போது, உயர்ந்தவர்களாக உணர்வோம். மேலான நிலையில் இருப்பவர்களுடன் பழக நேரும்போதோ, அவர்களுக்குச் சமமாக நடிக்க வேண்டியிருக்கும்.

இப்பழக்கத்தால், சந்திப்பவர்கள் எல்லாரையும் மதிப்பும் மரியாதையுமாக நடத்தத் தவறிவிடுவோமே!

குறையை நமக்குள் வைத்துக்கொண்டு, “ஏனோ, யாருமே என்னை மரியாதையாக நடத்துவதில்லை!” என்று வருந்துவதால் என்ன பயன்?

கதை

ஆசிரிய மேற்பயிற்சியின்போது, எங்கள் வகுப்பில் ஒருவர் கூறியது: “நான் என்ன செய்தாலும் என் தந்தையின் அன்பைப் பெற முடியவில்லை. என்னிடம் குறை கண்டுகொண்டே இருக்கிறார்!”

அவர் முகத்தில் தாங்கமுடியாத வருத்தம். தங்கையிடம் மட்டும் அன்பைப் பொழிகிறாரே என்ற குழப்பம்.

அவருக்குச் சித்திரம் வரைவதில்தான் ஆர்வம் என்று பிறகு கேட்டறிந்தேன். தந்தையோ, `விஞ்ஞானத்தில் பட்டம் வாங்கு,’ என்ற வற்புறுத்தியிருந்தார்.

பிடிக்காத துறையில் அரைமனதுடன் ஈடுபட்டவர் அதில் சிறக்கவில்லையென்று, தந்தை ஓயாது தம் வார்த்தைகளாலேயே அவரை வதைத்தார் – பிறர் எதிரிலேயே.

தந்தை அதிகம் படிக்காதவர். நிறைவேறாதுபோன கனவை மகன்மூலம் நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.

மகனுக்கு என்ன பிடிக்கும், எது உகந்தது என்று புரிந்துகொள்ள விரும்பாது, தன் அதிகாரத்தை அவன்மேல் செலுத்த ஆரம்பித்தார். நாளடைவில், அதிகாரமே போதையாக ஏறியது. அதற்குப் பலி மகன்.

நம்மை வருத்துகிறவர்கள் தம்மைத்தாமே ஏற்க முடியாதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்கள்மீது கோபம் வராது. பரிதாபம்தான் எழும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *