வேலைக்காக (சிறுகதை)
முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் – 613 010.
கைபேசி: 6381629365
சென்னை செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர். மாநகரின் பரபரப்பு அதிகம் இல்லை. அருகருகே இரண்டு தனியார் பள்ளிக் கூடங்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். சில வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தனவே தவிர வேறு பரபரப்பு எதுவும் தென்படவில்லை.
மாநகரப் பேருந்தில் இருந்து இறங்கி கையில் ஃபைல்லோடு நடந்து வந்த பெண் ஒரு பள்ளியினுள் நுழைந்தாள். காவலர் கேட்டார், “என்ன விசயம்”?
“டீச்சர் வேலைக்காக… வாய்ப்பு இருக்குமானு கேட்க…”
“அதோ அந்த ரூம்தான் கரஸ்பான்டன்ட் ரூம் போய் பாருங்க”
குளிரூட்டப்பட்ட நாகரீக அறையின் முன் சென்று நின்றாள். அங்கிருந்த தாளாளரின் உதவியாளரிடம் தகவல் சொன்னாள். அவன் அமரச் சொன்னான். சிறிது நேரத்தில் தாளாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.
மெதுவாக உள்நுழைந்த அவளை உற்றுப்பார்த்தப்படி அமர்ந்திருந்தார் தாளாளர்.
“குட்மாணிங்சார். மே ஐ கம் இன் சார்..”
“வாம்மா… உட்காரு”
அமர்ந்த அவள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் “சார் என்னுடைய பயோடேட்டா” என்று தன்விவரக் குறிப்பை நீட்டினாள். பொறுமையாகப் பார்த்த அவர் சான்றிதழ்களைக் கேட்டார். ஃபைலோடு கொடுத்தாள். பார்த்துவிட்டு தாளாளர், “அம்மா எம்.ஏ., பி.எட்., நல்ல கிரேடுல பாஸ் பண்ணிருக்கீங்க… அனுபவமும் இருக்கு, உங்க தகுதிக்கு… அதிகமா சம்பளம் தரலாம். ஆனா எங்களால மாதம் ஏழாயிரம் ரூபாய்தான் தரமுடியும். ஓகேனா அடுத்த வாரம் மண்டே ஜாய்ன் பண்ணலாம். மற்ற ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் ஃபிரின்ஸ்பால் சொல்வாங்க” என்றார்.
“சார் ஹவுஸ் ரென்ட் மட்டுமே செவன் தவுசன்ட் …”
“எங்களுக்கும் கூடுதலாதர ஆசைதான். உங்க நாலட்ஜ்க்கும், ஃபெர்சனாலிட்டிக்கும் கண்டிப்பா கூடுதலா தரலாம். ஆனா இப்ப வாய்ப்பில்லமா… ஆமா பயோ டேட்டா பார்க்கும் போது ஆறு மாசமா வேலையில்லாம இருந்தது தெரியுது எப்படி சமாளிச்சீங்க…”
“வீட்ல நான் மட்டும்தான் ஏனிங் பெர்சன் சார். ஹவுஸ் ஓனர் ரெண்ட்ட அட்வான்ஸ்ல கழிச்சிகிட்டுவரார். பக்கத்துல உள்ள பிள்ளைங்களுக்கு டியூசன் எடுக்கிறதுல கொஞ்சம் கிடைக்கும். ரேசன்ல அரிசியும், உப்பும் ஃப்ரியா கிடைக்குது… சமாளிக்கிறோம் சார்..”
“ஏழாயிரம் ரூபாய்தான் முடியும்மா” அவரின் கண்டிப்பான பதிலால் அவளின் சோகம்கூட ஒரு நொடி விலகி மீண்டும் ஒட்டியது,
“சர்டிபிக்கேட் ஃபைலைக் கொடுங்க சார் வீட்டுக்குப் போயிட்டு பதில் சொல்றேன்…”
ஃபைலை வாங்கியபடி வெளியே வந்த அவளின் துக்கம் அவளுக்கே அவமானமாக இருந்தது. சாப்பாட்டுகே போராடும் நிலை என்றாவது மாறுமா? அவள் உள்ளம் பதைத்துக் கொண்டிருந்தது.
சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
“பார்க்க டீசன்டா இருக்கிற… கவனமா பிளாட்ஃபாம்ல போம்மா” என்று பைக்கில் சென்றவர் சொல்லும் போதுதான் இயல்பாகி பக்கத்துப் பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளையும் மீறி கண்ணில் திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்த பள்ளியின் தாளாளர் அறையை அடைந்தாள். அங்கிருந்த உதவியாளரிடம் தன் விவரக் குறிப்பைக் கொடுத்தனுப்பினாள். வரச்சொன்னார். வலியும், சோகமும் அவள் அழகைக் கொன்று கொண்டிருந்தாலும் அவள் நடையின் கம்பீரத்தையும், நாகரீகத்தையும் வைத்து எடைபோட்ட தாளாளர் ஏதேதோ கேள்விகள் கேட்டார். பழகிய கேள்விகளுக்கு அவள் உதடுகள் யதார்த்தமாய் பதிலளித்தன. கடைசியாக விசயத்துக்கு வந்தார்.
“அம்மா மாசம் நான்காயிரம் ரூபாய்தான் சம்பளம்… சரி வேறு எங்கெல்லாம் பயோ டேட்டா குடுத்து இருக்கீங்க?”
“சார் உங்க ஸ்கூல வாய்ப்பு கேட்டுதான் வந்திருக்கேன். இந்த சேலரி போதாது சார்” என்றபடி ஏனோ வேகமாக எழுந்தாள். நீட்டிய அவள் கைகளுள் ஃபைலை திணித்தார் தாளாளர். வெளியேறிய அவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் மனதில் பயமும் சோகமும் படர ஆரம்பித்தது,
திடீரென திரும்பி முதலில் சென்ற பள்ளியை நோக்கி நடந்தாள். தாளாளர் அவர் அறையின் வெளியே நின்றுகொண்டு இருந்தார்.
“குட்மாணிங் சார்… ஜாய்ன் பண்ணலாம்னு…”
“ஓகே.. ஓகே.. வாழ்த்துகள். பியூன் இவங்கள ஃபிரின்ஸ்பால்கிட்ட கூட்டிக்கிட்டுபோ”
அழுதுவிடகூடாது என்பதில் உறுதியாக இருந்த அவள் முதல்வர் அறையை நோக்கி நடந்தாள்.