நிகழ்கால ரிஷ்யசிருங்கர் (சிறுகதை)
நிர்மலா ராகவன்
வயது ஏறிக்கொண்டே போனால், பலருக்கும் கவலை வந்துவிடும். நரைக்குச் சாயம் பூசலாம். ஆனால், தொங்கும் கன்னம், உடலின் பாதி எடையைத் தாங்கியிருக்கும் பருத்த வயிறு இவற்றை எப்படி மறைப்பது?
கிட்டு பிறரிடமிருந்து சற்று வித்தியாசமானவர். இருபது வயதிலிருந்தே, தனக்கு எப்போது முதுமை வரும் என்று காத்திருந்த பேர்வழி அவர்.
அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர் வளர்ந்த விதம் அப்படி.
ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடி வீட்டிலிருந்த பூமாவுடன் பாண்டி விளையாடினார். அவள் அவரைவிட இரண்டு வயது சிறியவள். அதனால், ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை.
அதுதான் முதலும் கடைசியுமாக அவர் பெண்களுடன் விளையாடியது.
“இனிமே, பொட்டைமாதிரி, பொண்களோட விளையாடுவியா?” என்று அப்பா கிச்சாமி பிரம்பால் விளாசியது ஜன்மத்தில் மறக்குமா!
கல்லூரியில் படிக்க அனுப்பினால், கண்ட பையன்களுடன் சேர்ந்து மகன் இன்னும் கெட்டுவிடுவான் என்று, தான் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்திருந்த வங்கியில் வேலை கிடைக்கச் செய்தார். சிபாரிசு இருந்ததால், கிட்டுவின் கல்வித் தகுதியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
“வேலைக்குப் போற எடத்திலே பெண்கள் வராளாடா, கொழந்தே?” என்று கவலைப்பட்டாள் பாட்டி.
அங்கு பெண்கள் அதிகமாக வரவில்லை. அப்படியே வந்தாலும், கணவன்மார்களை உரசியபடிதான். தனியாக வந்தவர்களோ, தம் செல்வச்செழிப்பைக் காட்டிக்கொள்ளவென உடலை வளர்த்திருந்தார்கள்.
இந்த விவரத்தையெல்லாம் சற்று குறையுடன் தெரிவித்தார் கிட்டு.
“அதுவும் நல்லதுக்குதான்!” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் பாட்டி. “நீ ரிஷ்யசிருங்கர்மாதிரி!”
எப்போதோ, பாட்டியுடன் கோயிலுக்குப் போனபோது, ராமாயணக் கதாகாலட்சேபத்தில் கேட்ட கதை கிட்டுவின் நினைவில் எழுந்தது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், ஒரு முனிவர் தேவலோக மங்கையான ஊர்வசியால் கவரப்பட்டதால் பிறந்த மகன் ரிஷ்யசிருங்கர்.
மகனும் தன்னைப்போல் சீரழிந்து போகக்கூடாது என்ற `நல்ல’ எண்ணத்துடன், பெண்வாடையே இல்லாது அவனை வளர்த்தார்.
பிரம்மச்சரியம் ரிஷ்யசிருங்கருக்கு அபாரசக்தியைக் கொடுத்தது. மழையே காணாது, வரண்டிருந்த நாட்டுக்குள் அவன் நுழைந்தவுடனேயே மாரி பொழிந்தது.
அக்கதையை நினைவுகூர்ந்த கிட்டுவின் பிரம்மச்சரியமும் அதனால் எழுந்த பெருமையும் நீடிக்கவில்லை.
“கிச்சாமி! பத்தொம்போது வயசிலேயும் ஒனக்கு கல்யாணமாகலியேன்னு நான் வேண்டாத தெய்வமில்லே. அந்த கோயிலில் இருக்கே, பிள்ளையார் விக்கிரகம்! அது நான் வாங்கிக் குடுத்ததுதான் – ஒனக்கு சீக்கிரமே கல்யாணம் நிச்சயமாகணும்னு வேண்டிண்டு!” என்று ஆரம்பித்த கிச்சாமியின் தாய், மகன் பொறுப்பில்லாது இருந்ததை மறைமுகமாகக் கண்டித்தாள். பேரனுக்கு மீசை முளைத்து பத்து வருஷம் ஆகிவிட்டதே, அவனுக்குப் பொருத்தமான எல்லா நல்ல பெண்களுக்கும் சீக்கிரமே கல்யாணம் ஆகிவிடுமே என்று அவள் பயந்தது யாருக்குப் புரியும்!
அத்துடன், மகனுக்கும், பேரனுக்கும் எத்தனை காலம்தான் அவளால் வடித்துக்கொட்ட முடியும்! மருமகள் புண்ணியவதி! இந்தக் கவலையெல்லாம் இல்லாமல், போய் சேர்ந்துவிட்டாள்!
கிச்சாமிக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. முதலிலேயே தனக்கு அந்த யோசனை வராமல் போயிற்றே என்று நொந்துகொண்டார்.
தினமும் சாயங்கால டிபனுக்கு அரிசி உப்புமா செய்யத்தான் வயதான அம்மாவுக்கு சக்தி இருந்தது. கண் சரியாகத் தெரியாமல், உப்பை அள்ளிப் போட்டுவிடுவாள். அவள் மனம் நோகக்கூடாதே என்று அவர் சாப்பிட்டுவைப்பார்.
“ரொம்ப படிச்ச பொண்ணு வேண்டாம்டா. சமையல்னா என்னன்னே தெரியாம வளர்த்திருப்பா. அடக்கமா, வீட்டு வேலை செய்யற பொண்ணா பாரு,” என்று அறிவுரை கூறினாள் தாய்.
முதலில் பார்த்த பெண் பள்ளி இறுதிப் பரீட்சையை மூன்று முறை எழுதியும், பாசாகவில்லை என்ற விவரமே அவளுக்குச் சாதகமாக அமைந்தது.
எலுமிச்சை நிறம், கையில் அடங்காத கூந்தல், விதம் விதமாகக் கோலம் போடுவாள், முக்கியமாக, வீட்டில் அவள் சமையல்தான் என்ற பிற அம்சங்கள் பாட்டிக்கு மிகவும் பிடித்துப்போக, கிட்டு பூரணியை மணந்தார்.
அவளுடன் என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
ஒரு முறை, அவளே வலியக் கேட்டாள்: “நான் நன்னா சமைக்கிறேனா?”
“ம்!” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது.
“ஒங்களுக்கு என் சமையல் பிடிச்சிருக்கோ?”
உத்தியோகத்தில் படிப்படியாக உயர்ந்திருந்த கிட்டுவுக்கு எரிச்சலாக இருந்தது.
அசமஞ்சம்!
பேச விஷயங்களா இல்லை!
சேஷனுக்கு எழுபது வயதாகியபோது, சுதந்திரமாக உணர்ந்தார். அப்பா இல்லை, பாட்டி இல்லை. அவரை மணந்த புண்ணியவதியும் சுமங்கலியாகவே போய்விட்டாள்.
பெண்களுடன் பழக இனி ஒரு தடையுமில்லை!
`விடுதலை! விடுதலை!’ என்று உரக்கப் பாடவேண்டும்போல் இருந்தது.
இளம்பெண்களை அவருக்குப் பிடிப்பதில்லை. `மாமா’, `அங்கிள்,’ என்றெல்லாம் அழைத்து, வயதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள், கழுதைகள்!
நிறைய யோசனைகளுக்குப்பின், முகநூலில் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெரும்பாலும், வயது முதிர்ந்தவர்கள்தாம் அதில் பங்குபெறுவார்களாமே!
`மணமானவன்’ என்றெழுதினால் கௌரவமாக இருக்கும். மனைவி இருக்கிறாளா, இல்லையா என்று யார் ஆராயப்போகிறார்கள்!
வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.
வயது.. அங்கேதான் சற்று தடுக்கியது. 60 என்று எழுதிவிட்டு, ஏதோ யோசித்தவராக, கூட இரண்டைச் சேர்த்தார்.
அடுத்த பிரச்னை: எப்படி சிநேகிதிகளைத் தேடுவது?
அடுத்த சில நாட்களில், எல்லா படைப்புகளையும் படித்தார். நாள் முழுவதும் அதற்காகவே – இனிமையாக — செலவழிந்தது.
ஒரு பெண்மணியின் எழுத்து அவரைக் கவர்ந்தது. பயம் சிறிதுமின்றி, பல விஷயங்களைத் தொட்டு, தன் கருத்துகளை வெளியிட்டாள். முக்கியமாக, சமையல் குறிப்புகளைப் பகிரவில்லை.
தான் தேடிய புத்திசாலிப்பெண் இவள்தான் தனக்குத் தோழியாக இருக்கத் தகுதி உள்ளவள் என்று குதூகலித்தார் கிட்டு.
அவள் எழுதிய ஒரு கட்டுரைக்கு, `லைக்’ போட்டார். பாராட்டாக, ஒருசில வரிகள்.
பதிலுக்கு, அவளும் `நன்றி’ என்று ஒரே வார்த்தையில் தெரிவிக்க, கிட்டுவுக்குத் தலைகால் புரியவில்லை. அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது! தனிமரமாக இருப்பவளாக இருக்கும். அதனால்தான் அவ்வளவு சுதந்திர உணர்வு!
அடுத்தடுத்து, பல முறை இவர் பாராட்ட, அவளும் சளைக்காது, அதே வார்த்தையில் பதிலளித்தாள்.
அடுத்து அவளை நெருங்க நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த கிட்டு, தன் பாராட்டில், `டார்லிங்’ என்று அவளைக் குறிப்பிடலாமா என்று யோசித்தார்.
முதலில் ரஞ்சனி என்ற அவள் பெயரைச் சுருக்கினாலே போதும், போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து, `டியர் ரஞ்சி!’ என்று ஆரம்பித்து, அவளுடைய துணிச்சலும், அறிவும் தன்னை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்று கவிதைபோல் எழுதினார்.
அடுத்தமுறை அவளிடமிருந்து வந்த பதில் எப்போதையும்விட சற்று நீண்டிருந்தது.
`எல்லாப் பெண்களும் மோசம்!’ என்ற முடிவுக்கு கிட்டு வரக் காரணமாக இருந்த அந்த வரி: “முதலில், மரியாதை கற்றுக்கொள்ளுங்கள்!”