குறளின் கதிர்களாய்…(378)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(378)
அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
– திருக்குறள் – 755(பொருள் செயல்வகை)
புதுக் கவிதையில்…
குடிகள் தம்மோடு
கொற்றவன்
கொள்ளும் அருளோடும்,
குடிமக்கள் கொற்றவன்பால்
காட்டும் அன்பாலுமின்றி
ஈட்டப்படும் செல்வத்தை
அனுபவித்து மகிழாமல்
அழிவுதரும் தீயதென
விலக்கிட வேண்டும்…!
குறும்பாவில்…
ஆள்பவரின் அருளோடும் மக்களின்
அன்புடனுமின்றி ஈட்டிடும் செல்வத்தை அனுபவிக்காமல்
அகற்றிட வேண்டும் தீயதெனவே…!
மரபுக் கவிதையில்…
நாட்டை யாளும் மன்னவனின்
நல்ல குணமாம் கருணையிலும்
நாட்டு மக்கள் அவன்தனையே
நம்பிக் காட்டும் அன்புமின்றி
ஈட்டும் செல்வம் பெரிதென்றே
இன்பம் துய்க்கத் தொடங்காதே,
கேட்டைத் தருமே அதுவென்றே
கெட்ட தாகத் தவிர்ப்பாயே…!
லிமரைக்கூ…
அருளுடன் ஆள்வான் நாட்டை,
அன்புடன் மக்கள், இவையின்றி யீட்டும்பொருள்
அகற்றிடு தருவதால் கேட்டை…!
கிராமிய பாணியில்…
சேக்கணும் சேக்கணும்
செல்வம் சேக்கணும்,
நல்ல வழியில மட்டுமே
செல்வம் சேக்கணும்..
நாட்ட ஆளுற ராசாவோட
நல்ல கொணத்தாலயும்
நாட்டு மக்களெல்லாம் அவங்கிட்ட
காட்டுற அன்புலயும் சம்பாதிக்காம
வேற வழியில செல்வம் சேத்தா,
கெடுதலத்தான் அது தருவதால
அதக் கைவிடத்தான் வேணும்..
அதால
சேக்கணும் சேக்கணும்
செல்வம் சேக்கணும்,
நல்ல வழியில மட்டுமே
செல்வம் சேக்கணும்…!