நாவலர் பெருமான், காலத்தின் குரலாய் நிற்கின்றார்

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆஸ்திரேலியா

பக்தி இயக்கத்தின் முதற்குரலாய் தமிழ் உலகில் ஒலித்த குரல், ஒரு பெண்மணியின் குரல். அவர்தான் காரைக்கால் தந்த பெருமாட்டிதவப் புதல்வி காரைக்கால் அம்மையார் ஆவர்.

இவர் சைவ பக்தி இயக்கத்தின் எழுஞாயிறாய் – பின்னர் வந்த அடியார்கள் அனைவருக்குமே ஆதாரமான குரலாய் விளங்குகிறார் எனலாம். சைவத் திருமுறைகளின் தோற்றத்தின் குரலாயும் நிற்கின்றார். இவர் சைவத்தைக் காத்திடக் கையில் எடுத்தது அமிர்தமாம் தமிழ் மொழியை. தமிழ் மொழியில் – அற்புதத் திருவந்தாதிதிரவிரட்டை மணிமாலை,திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகியவற்றை அளித்து ஆன்மீகக் குரலாய் ஒலித்து நிற்கிறார். இவரின் பின்னர் வந்த அடியார்கள் பலரும்அம்மையாரைப் பின்பற்றி இறைபுகழ் பரப்புவதில் தங்களின் குரலை ஒலித்து நிற்கிறார்கள்.

ஆழ்வார்கள் வந்தார்கள். ஆளுடைய பிள்ளையார் வந்தார். அப்பர் வந்தார். ஆலால சுந்தரர் வந்தார். வாதவூர் வண்டும் வந்ததது. இவர்கள் அனைவரின் குரல்களும் தமி ழில் சைவத்தை நிலை நாட்டிட ஓங்கி ஒலித்து நின்றன எனலாம். இந்தக் குரல்கள் ஒலித்த காலம் வேறு. அந்தக்காலச் சூழலும் வேறு. அவர்களின் குரலில் காணப்பட்ட தத்துவங்களும் வேறு என்றுதான் கருதிட வேண்டும். அவர்கள் அனைவருமே அந்தக் கால தமிழ் இலக்கியத்தின் போக்கினை மனமிருத்தி பாடல்களை ஊடகமாக கொண்டே  தமது குரலை வெளிப்படுத்தும் கட்டாயம் காணப்பட்டது. ஏனெனில் தமிழ் இலக்கியத்தை ஆட்கொண்டு இருந்த வடிவம் பாட்டு அல்லது செய்யுள் வடிவமே யாகும்.

காலம் மாறுகிறது. கோலமும் மாறுகிறது.சமூகத்தின் சிந்தனையும் மாறுகிறது. ஆனால் ஆன்மீகம் என்பது மட்டும் என்றுமே மாறிவிட மாட்டது. காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப கருத்து மோதல்களும்பிற மோதல்களும் பெருகுவது மட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே அமைந்துவிடும். அத்தகைய வேளையில் சமயம் தளரும். சமய தத்துவங்கள் கேள்விக்குறி யாக்கப்படும். அன்னிய சக்திகளால் – மொழியும் சமயமுமே கேலிக்கு உரியதாக ஆகும் நிலையும் ஏற்பட்டு விடலாம். அப்படியான நிலை தோன்றும் வேளை – அந்த அந்தகார இருளில் சிக்கித்தவிக்கும் மக்களைசமுதாயத்தைக் காப்பாற்ற ஒரு குரல் கட்டாயம் தேவைப்படுகிறது. அப்படியான ஒரு தைரியம் வாய்ந்த தகுதியான குரலை ஓங்கி ஒலிக்க வைப்பதற்கு ஒருவரை ஆண்டவன் கட்டாயம் அனுப்பியே வைப்பான், அப்படி அனுப்பி வைக்கப்படு பவர் காலத்தின் குரலாய் வரலாற்றில் இடம் பிடித்தே நிற்பார். அப்படி “காலத்தின் குரலாய்” ஆகி நிற்பவர்தான் நல்லை நகர் தந்த நாவலர் பெருமான் ஆவர்.

அன்னியரான ஆங்கிலேயர் ஆதிக்கம்.அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களின் ஆதரவுடன் அன்னிய மதமான கிறித்தவம் பரப்பப்படுகிறது. மதத்தைப் பரப்புவதற்கு அரசாங்கமே பக்கத்துணையாய்பணமும் கொடுக்கிறது. பாதுகாப்பும் கொடுக்கிறது. சலுகைகளைக் காட்டி, கிறித்தவ சபையினரும் அதன் மதபோதகர்களும் சைவர்களை மதமாற்றம் செய்வதில் தீவிரமாய் ஈடுபடுகின்றனர். சலுகைகளைக் கண்டவர்கள் சலனப்படுகிறார்கள். சொந்தச் சொத்தான சைவத்தை மறக்கிறார்கள். கிடைத்த அற்பச் சலுகைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள். என்றாலும் அவர்கள் மனத்தில் தங்களின் சமயம் ஒட்டிக்கொண்டிருப்பதை அகற்றிடவே முடியவில்லை. அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் திரிசங்கு நிலையிலை பலர் இருந்தார்கள் என்பதை பல செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

நாவலர் பெருமான் பாரம்பரியமிக்க சைவக்குடும்பத்தில் சைவச் சூழலில் பிறந்தவர். அவர் பிறந்த இடமே கோவில் அருகில் இருக்கும் இடமாகும். திருநீறு பூசி சிவனைத் தியானிக்கும் குடும்பந்தான் நாவரின் குடும்பம். நமச்சிவாய என்னும் நாமமே நம்மை என்றும் காத்திடும் என்னும் அசையா நம்பிக்கை கொண்ட குடும்பந்தான் நாவலர் குடும்பம். ஆசார அனுட்டாங்களை அனுட்டித்து சைவத்தை உயிராக எண்ணிய குடும் பந்தான் நாவலர் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததால் நாவலரின் உணர் வெல் லாம் சிவனும்சைவமுமே நிறைந்து காணப்பட்டது. அதனால் அவர் சைவத் தைக் காத்திடும் குரலாய் அந்தக் காலத்தில் விளங்கும் கட்டாயம் ஏற்பட்டது.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழை முறையாகக் கற்றார். இலக்கியம் கற்றார். இலக்கணம் கற்றார். புராண இதிகாசங்களை எல்லாம் ஐயந்திரிபறக் கற்றார். அந்தக்கால சூழலுக்கு அமையபெற்றவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆங்கிலக் கல்வியைப் படிக்க பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆங்கிலக் கல்வியைக் கற்றால்த்தான் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்னும் நிலை மேலோங்கிக் காணப்பட்ட காலம் அது. தங்கள் பிள்ளை படித்து பெரிய பதவியில் அமரவேண்டும் என்று நாவலர் பெற்றாரும் எண்ணங் கொண்டிருந்தனர், ஆனால் இறைவன் திருவுள்ளமே வேறாக, மாறாகஅமைந்தது. இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியாய் விளங்கும் கல்லூரி யில்தான் நாவவர் ஆங்கிலக் கல்வியை மேற்கொண்டார்.

சைவமும் சிவமும் உள்ளத்தில் நிறைந்திருக்க, கிறித்தவப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிலை நாவலருக்கு ஏற்பட்டது. ஆங்கிலத்தை நன்றாகவே கற்றார். பள்ளியில் இருந்த பார்சிவல் பாதிரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டார். நாவலரின் தமிழ் மொழி ஆற்றலைக் கண்டு வியந்தார். அத்துடன் தங்களின் மொழியான ஆங்கிலத்தின் ஆற்றல் கண்டும் நாவலர்மீது தனிப்பட்ட பற்றும் பாசமும் கொண்டார் பார்சிவல் பாதிரியார் அவர்கள்.. அந்த பற்றினால் விவிலியத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பாரிய பொறுப்பினை வழங்கினார். நாவலரும் அப்பணியினை யாவரும் பாராட்டும் வகையில் செய்து முடித்தார். சைவத்தை மனம் நிறைத்த நாவலர் விவிலியத்தை எப்படி மொழி பெயர்க்க ஒப்புக்கொண்டார் என்பது ஒரு பெரும் புதிராகவே இருக்கிறதல்லவா! வேதங்களை வகைப்படுத்தி அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மாக்ஸ் முல்லர் என்னும் ஆங்கிலேய கிறித்தவராவர். திருவாசகத்தைக் கையிலெ டுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண, ஜி.யூ, போப் அவர்கள். இவர் தன்னை போப்பையர் என்று அழைத்ததாக அறிகின்றோம். ஆனால் அவர்கள் எவருமே தங்கள் மதத்தை விட்டு மற்றய மதத்துக்கு மாறவில்லை என்பது நோக்கத்தக்கது. அந்த வழியில்த்தான் நாவலர் பெருமானும் தன்னுடைய குருவின் சொற்களுக்கு மதிப்புக் கொடுக்கவே விவிலிய மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் அல்லவா ! மொழி பெயர்த்த நிலையில் நின்றுவிடுகிறார். சைவம்தான் அவரின் உணர்வுள் ஊறி இருந்தது.

விவிலியத்தை மொழி பெயர்த்தபடியால் கிறித்தவம் பற்றிய நுட்பங்களை நாவலர் நன்கு தெளிவாகவே அறியும் வாய்ப்புக் கிட்டியது. இதனால் எதிர் வாதமிட வந்த அன்னிய மத போதகர்கள் வாய் பேசாது மெள்னியாய் ஆக்கிடும் வகையில் அவரின் குரல் ஓங்கி ஒலிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சைவத் தையும் நன்கறிந்திருந்தார். கிறித்தவத்வத்தையும் உள்நுழைந்து அறிந்திருந்தார். இதனால் நாவலர் பெருமானின் குரல் அக்காலத்தில் வலிமைமிக்க குரலாய், மாற்று மதத்தினருக்குச் சிம்மக்குரலாய் அமைந்தது என்பதை மறுத்துரைத்துவிட முடியாது எனலாம்.

நல்லவை எங்கிருந்தாலும் அதனை நாவலர் உள்வாங்கினார். அன்னிய மத போதகர்கள் தங்கள் மதத்தைப் பற்றி நல்ல அறிவு பெற்றிருந்தனர். தங்களின் மத த்தைப் பரப்புவதற்கு தேவாலயங்களைப் பயன்படுத்தி – தங்கள் மதம் தொடர்பான விளக்கங்களைத் தெளிவாகப் பிரசங்கம் மூலம் செய்தார்கள். இந்த நடை முறை நாவ லர் உள்ளத்துள் பதிந்து விட்டது. அன்னிய மதத்தார் இப்படிச் செய்வதால் பாமரமக்கள் அவர்கள் பக்கம் பார்ப்பதை அவர் உற்றுக் கவனித்தார். சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் மத்தியில் காணப்பட்ட நிலைமைகள் நாவலருக்கு ஒவ்வாததாய் அமைந்தது.

கிறித்தவ பாதிரிமாரிடம் நிறைந்து காணபட்ட கல்வி அறிவு – சைவசமயக் குரு மாரிடம் காணப்படாமையினைப் பொறுக்க இயலா நிலையில்  நாவலரின் குரல் ஓங்கி ஒலித்துக் கண்டித்தே நின்றது. சைவத்துக்குப் புறம்பான நிகழ்வுகள் கோவில் களில் நிகழும் பொழுது நாவலரின் குரல் கோபத்துடன் எழுந்தே ஒலித்தது. சைவ ஆசாரங்கள் நிலை தளரும் பொழுது அவரின் குரல் ஆணி அடித்தாற் போலவே எங்கும் ஒலித்து நின்றது. கோவில்களில் பூசை செய்து நின்ற அந்தணக் குருமாரையும் அவரின் குரல் விட்டு வைக்கவே இல்லை எனலாம். “யாழ்ப்பாணச் சமயநிலை” என்னும் நூல் நாவலரின் அக்காலக் குரலாய் அமைந்தது என்பது நோக்கத்தக்க தேயாகும்.

சைவத்தின் கருவூலங்களான புராணங்களை, திருமுறைகளை யாவரும் அறிய வேண்டும். அத்துடன் யாவர் உள்ளத்திலும் அமர வேண்டும் என்னும் எண்ணம் நாவலரிடம் நிறைந்தே காணப்பட்டது. ஆனால் அக்காலச் சூழலில் பாமரமக்கள் பலர் இவைகளை அறியாதவர்களாகவும், விளங்காதவர்களாகவுமே காணப்பட்டார்கள். இந்த நிலையில் இருந்தவர்களிடையே – தம்முடைய பிரசங்கங்களால் அன்னியர்கள் மதமாற்ற முயற்சியை மேற்கொள்ளுவது இலகுவாய் அமைந்ததை நாவலர் கண்ணுற்றார். கண்ணுற்றவர் உள்ளம் கலங்கியது. இப்படியே விட்டால் சைவம் என்னும் பெயரே இல்லாமற் போனாலும் போய்விடுமோ என்று கவலைப்பட்டார். கவலைப்பட்ட நாவலர் கவலைப்பட்டுக் கொண்டு இருந்துவிடாமல் – படிப்பறியாத பாமர்களை மனங்கொண்டும், பேதலித்து நிற்பாரை மனங்கொண்டும் – வண்ணார் பண்ணைச் சிவன் கோவிலை மையமாக்கி தன்னுடைய உள்ளத்துணர்வுகளைச் சைவப்பிரசங்கமாய் தொடங்கினார். இங்கு புராணங்கள். இதிகாசங்கள். திருமுறைகள், சைவ நடை முறைகள் அத்தனையும் நாட்கள் தோறும், வாரந் தோறும், மாதந்தோறும் காலத்தின் குரலாய் நாவலர் பெருமானிடம் இருந்து வெளிப்பட்டு நின்றது.

கந்தபுராண கலாசாரம் என்னும் கருத்தே நாவலரின் உள்ளத்தின் உன்னதமான குரலாகும். நாவலர் என்னும் பெருமகன் மட்டும் அந்தக்காலத்தில் பிறந்திராவிட்டால் – அவரின் குரல் சைவமாய், தமிழாய், நல்லொழுக்கமாய், ஓங்கி ஒலித்திருக்கா விட்டால் அக்காலச் சூழலினால் அத்தனையும் எங்கேயோ ஓடி மறைந்திருக்கும். ஆனால் நாவலரின் குரலோ  “காலத்தின் குரலாய்” ஓங்கி ஒலித்தே நின்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். அதனை வலியுறுத்திட நல்ல தொரு சான்றாக வந்து அமைந்ததுதான் இப்பாடல்.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை

சைவத்தைக் காத்திட, தமிழைக் காத்திட, சமூக ஒழுக்கத்தைக் காத்திட – நாவலர் இல்லறத்தையே ஒதிக்கி சமூக ஞானியாய், சமய ஞானியாய், மொழியில் தத்துவ த்தில் ஞானியாய் ஆகிநின்றார். கல்வியில் கால் பதித்தார்.கடமையில் கால் பதித்தார். கண்ணியத்தில் கால்பதித்தார். கடவுள் கொள்கையில் கால் பதித்தார். தர்மத்தில் கால் பதிந்தார். சன்மார்க்க வழி நடந்தார். எந்தத்துறையினை எடுத்தாலும் அங்கெல்லாம் நாவலரின் பொறுப்பான குரலே ஓங்கி ஒலித்து நின்றது. அவரின் குரல் ஒலித்த இடமெல்லாம் குறைகள் என்னும் இருள் ஓடியே ஒழிந்தது. நாட்டின் தேசியப் பெருமக னாய் நாவலர் பெருமான் கொண்டாடிப் போற்றப்பட்டார். அப்படி அவர் போற்றப்படுகிறார் என்றால் அவரின் குரல் “காலத்தின் குரல்” ஆகியே இருக்கிறது என்பதுதானே உண்மை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *