தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 42
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
உவமத் திருவாசகம் – 1
முன்னுரை
‘படைப்பு’ என்ற அளவில் திருவாசகம் ஒரு பக்தி இலக்கியம் எனக் கருதப்படலாம். ஆனால் தமிழில் இலக்கியத்தின் பாடுபொருளாக அகம், புறம் என்னும் மரபு பின்பற்றப்பட்டு வந்த காலத்தில் அவற்றினும் மாறுபட்டு அதன் பாடுபொருள் இறைவனாக அமைந்திருப்பதை உணர்தல் வேண்டும். பாடுபொருள் பரம்பொருளாக அமைந்துவிட்ட காரணத்தால் பொதுவான இலக்கிய உத்திகளோ, உவமப் பகுதிகளோ, யாப்பியல் மரபுகளோ இலக்கிய மரபுசார்ந்து அமையும் என்று எதிர்பார்க்க இயலாது. உணர்ச்சியும் அகவுணர்ச்சியாகிய காதல், புறவுணர்ச்சியாகிய வீரம் என்பனவற்றினின்றும் சற்று விலகி உரிமையும் ஆதங்கமும் ஏக்கமும் இரத்தலும் கலந்த ஓர் புதுவகை உணர்ச்சியை இவ்வகை இலக்கியங்கள் கொண்டிலங்கும். விழைதலும் வேண்டுதலும் ஆகிய நிகழ்வில் பயன்படுத்தப்படும் உவமங்களும் பொதுவான இலக்கிய உவமங்களாக அமையாமல் அமைதி, பாசம், இழிவு, நம்பிக்கை முதலிய உணர்வுகளை எதிரொளிப்பதாக அமையும். மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்த அத்தகைய உவமங்கள் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.
திருவாசகத்தில் இருகை யானை
புறநானூற்றில் வரும் ஓரேர் உழவன் என்னுந் தொடர் அக்கால வேளாண் பெருங்குடி மக்களின் வறுமை நிலையை உணர்த்தியது. ‘ஒரு கை யானை’ என்பது யானைக்குச் சிறப்பு கையுடைய விலங்கு அதுவேயாதலின். ஆனால் மணிவாசகப் பெருமான் தன்னை ‘இருகையானை’ என்று உருவகப்படுத்திக் கொள்கிறார். யானை, தனக்குத்தானே சங்கிலியைத் தானே எடுத்துப் பாகன் கையில் தந்து தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். யானைக்குத் தனக்கு மேல் பாகன் என்று ஒருவன் அமர்ந்து இருக்கிறான் என்றும் தெரியாது. மணிவாசகரின் இருகை யானை உவமத்தில் நுண்ணியங்கள் பல உள்ளன என்பதை அறியலாம். தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்வதும் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதும் தனக்கு மேலே இருப்பவன் பாகன் என்பதை அறியாததும் அதன் பலவீனங்கள். காமம், வெகுளி, மயக்கம் இவற்றுள் கிடந்து உழல்வதும், தனக்கான துன்பத்தைத்தானே வரவழைத்துக் கொள்வதும் தன்னை வினைப்படுத்தும் இறைவனை மறப்பதும் மானுடர்க்கு இயல்பு.
“இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே” (திருச்சதகம்)
இங்கு அடிகளார் தம்மை யானையோடு உவமித்தது ஒரு நுண்மையான உட்கருத்தைக் கொண்டதாகும். ஒரு கை யானைக்கே இரண்டு கெட்ட குணங்கள் உண்டு. ஒன்று – நன்றி மறப்பது; இரண்டு – குளித்துவிட்டுத் தூய்மையாக வரும்பொழுதே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக் கொள்வது. மாபெரும் உபகாரம் செய்த குருவிற்குத் தாம் நன்றி பாராட்டவில்லை ஆதலால் நன்றி கொல்லும் யானையோடு உவமம் செய்தார். வழியோடு சென்ற தம்மை வலிய அழைத்து இறையனுபவத்தைக் குருநாதர் நெஞ்சில் நிறைவித்தார். பழைய, பசுகரணங்களைப் போக்கிப் பதிகரணங்களாக மாற்றி அருளினார். ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பதும் அது. இதற்குக் குளித்துவிட்டு வரும் யானை உவமம். இத்தகைய பெரிய நலங்களை விட்டுவிட்டுப் பொறிகளின் இன்ப நுகர்ச்சியில் மறுபடியும் தம் மனம் செல்வது குளித்துவரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும். அதனாலேயே ‘இருகை யானையை ஒத்திருந்து’ என்று பாடுகின்றார்.
“என்னால் அறியாப் பதம் தந்தாய்
யானறி யாதே கெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை”
என யானையின் செயல்களை ஒத்திருக்கும் தனது செயல்களை விளக்கியிருப்பது காண்க.
இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு
‘இருதலை’ என்பது மூங்கிலின் இரண்டு பக்கத்தின் நுனிப்பகுதியைக் குறிக்கும். ‘கொள்ளி’ என்பது அவ்விரு பக்கமும் வைக்கப்பட்ட தீயைக் குறிக்கும். ஒரு நுனியில் பற்றவைத்து அதனைப் பந்தமாகப் பயன்படுத்துவதும் உண்டு. இருபக்கமும் நெருப்பு என்பது பெரும்பாலும் வித்தை காட்டுவோர் செயலாகக் கருதப்படலாம். சிலம்பு விளையாட்டில் இதனைக் காணலாம். அச்செயல் இங்கு முக்கியமன்று. மூங்கில் குழாயின் உள்ளே எறும்பு சென்றதை அறியாது பற்றவைத்த இருமுனைக் கொள்ளிக்கு நடுவே அவ்வெறும்புபடும் வேதனையே உவமமாகக் கொள்ளப்படுகிறது. இந்த உவமத்தைச் சங்கச்சான்றோர்கள் அகத்திணைப் பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை,
“ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமந் தட்பக்
கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய
இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோளே!”
முதலிய பாடல்களினால் அறியமுடிகிறது.
“தாளாண்மை அறிந்தவென்தன் தளர்வில்லா நெஞ்சத்தைப்
பேராண்மை முன்னிழுக்க, பெருங்காமம் பின்னிழுக்க
இருகணுக்கள் தழல்தாங்கும் எரிகொள்ளி உள்சிக்கி
இருபக்கம் ஓடுமொரு எறும்பென்றே நானானேன்”
என அந்த அகநானூற்றுப் பாடலுக்குக் கொச்சகக் கலியால் உரையெழுதியவரும் இருந்திருக்கிறார்கள். இந்த இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பைத்தான் மணிவாசகப் பெருமான் தன் நிலையை விளக்க உவமமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
“இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து
நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய்
வியன் மூஉலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
பொருது அலை மூஇலை வேல் வலன்
ஏந்திப் பொலிபவனே!”
‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பதே முதுமொழி ஆகும். ஆனாலும் இதில் ஒரு குறை இருப்பதாக மணிவாசகர் உணர்கிறார். ஒரு குச்சியின் இரண்டு பக்கங்களிலும் நெருப்புப் பற்றியிருப்பதால் (குச்சியின் மேலே உள்ள) எறும்பு இரண்டு பக்கங்களாலும் வெளியேற முடியாது. ஆனால், இரு பக்கங்களிலும் நெருப்பு நெருங்கி வரவர வெப்பம் தாங்காத எறும்பு துடிப்பதால் கீழே விழுந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பழமொழியில் உள்ள இக்குறையைப் போக்க, அடிகளார் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்கிறார். இருதலைக் கொள்ளி எறும்பு என்பது மூங்கிலின் மேல்பக்கம் திரிவது. இருதலைக் கொள்ளி உள்ளெறும்பு என்பது இருபக்க அழலுக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டது. இருதலைக் கொள்ளி எறும்பு என்பதே இருதலைக்கொள்ளிக்கு நடுவே அகப்பட்ட எறும்புதான் என்று கூறுவார் ‘உள்’ என்னும் சொல்லாட்சிக்கான அமைதியைக் கூறுதல் வேண்டும் கடப்பாடு உள்ளது.
இலக்கியங்களில் நாய்
பொதுவாக நன்றியுணர்ச்சியின் குறியீடாகவே நாய் பயன்படுத்தப்படுகிறது. ‘தன்னைப் பலகாலம் பேணிக்காத்தவன் என்றறிந்தும் கொல்லும் யானைபோல, நண்பரையே அழிக்கும் தீயவர் உறவு கூடாது. வேல் உடலிலே தைத்திருக்கவும் வால் குழைத்து நிற்கும் நாய்போலத் துன்பம் தாமே இழைத்த காலத்தும் நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது நட்பே கொள்ளத்தக்கதாகும் என்னும் கருத்தினை,
“யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா, வால்குழைக்கும் நாய்”. (நாலடியார் – 213)
என்னும் நாலடியார் பாடல் கூறுகிறது. இனி அங்கதப் புலவர் காளமேகம் தமது தனித்தன்மையான சிலேடை வெளிப்பாட்டிற்கு நாயைப் பயன்படுத்தியிருக்கிறார்.
“ஓடு மிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு”
நாய்க்கும் தேங்காய் மூடிக்கும் பாடிய சிலேடை இப்படி அமைந்திருக்கிறது என்றால் பத்துப்பாட்டு இலக்கியங்களில் பாடிணியின் பாதத்து அழகிற்கு நாயின் நாக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
“வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி” (பொரு. 42)
“உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின்” (சிறு. 17)
“மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி” (மலை.42)
என்றெல்லாம் சங்க கால இலக்கியங்களில் நாயின் நாக்கு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம்.
திருவாசகத்தில் நாய்
மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் நாய் என்னும் விலங்கு உவம வகையானும் உருவகத்தாலும் பாடப்பெற்றிருக்கிறது. மணிவாசகர் தன்னை நாயாக உருவகம் செய்து கொள்ளுகிறார். வேறு சில இடங்களில் ‘நாயைப்போல’ என நாயின் வினைகளைத் தனக்கான வினையுவமமாக்கிக் கொள்கிறார். இந்தவகையில் திருவாசகத்தில் அறுபத்தேழு இடங்களில் நாய் பற்றிய குறிப்பு காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மணிவாசகப் பெருமான் தன்னை நாயோடு ஒப்பிடுவதற்கான காரணம் என்ன? ஜீவ ராசிகளை விட நாயை மட்டும் சொல்வதனால் நாயின் அத்தகைய பண்புகள்தாம் என்ன? தன்னைப் ‘பொல்லாவினையேன், புழுத்தலைப் புலையனேன்’, ‘ஊற்றையேன்’ என்று கீழ்நிலைப்படுத்திக் கொண்டும் அமைதியடையாத நிலையில் ‘நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன்’ என்று திரும்பத் திரும்பத் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார். நாய் தன் தலைவனை அறியும் தன்மை உடையது. மேலும் தன் தலைவன் மேல் விசுவாசம் மிக்கது. சேக்கிழார் பெருமான் கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேட்டை நாய்களைப் பற்றி சொல்லும் போது ஒன்றுக்கு ஒன்று நேர் படாமல் செல்லும் என்கிறார். அதாவது வரிசையாக செல்லாமல் மாறி மாறி செல்லும் தன்மையது. தனக்குப் பிடிக்காது ஒதுக்கும் ஒன்றை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வது நாயின் இயல்பு. தன் வாயினால் கக்கியதைத் தானே திரும்பத் தின்னும் இயல்புடையது. இதன் பொருள் வெறுத்த ஒன்றையே திரும்ப விரும்பும் என்பதாம். ஐந்தறிவு நாய்க்கு அது இயல்பு. ஆனால் ஆறறிவு உடைய மனிதனுக்கும் தான் வெறுத்ததையே மீண்டும் மீண்டும் விரும்புகின்ற குணமுண்டு ஆக ஐந்தறிவு உள்ள நாயின் குணத்தை உயர்த்தித் தான் அதனைவிடக் கீழானவன் என எண்ணும் எண்ணமாகவும் இருக்கலாம். அல்லது கீழ்த்தரமான நாயை விட நான் கீழானவன் என்னும் பொருளிலும் கூறியிருக்கலாம். ஆன்மாவானது பிறவி, பந்தம், பற்று, பாசம் போன்ற இயல்புகள் மனிதனைத் திரும்பத் திரும்ப வந்து ஆட்டி வைப்பதையும் பிறவித்தளையில் இருந்து விடுபட முயல்வதையும் இறைவனின் திருவடியைச் சேர தடையாய் இருப்பதையும் கருத்தில் கொண்டே அவர் நாயேன் என்று நாயின் பண்பை வைத்துக் கூறியிருக்க வேண்டும்.
“நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” (சிவபுராணம்)
“நாயினேனை நலம் மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென” (கீர்த்தித் திருஅகவல் )
“சொல்லுவது அறியேன் வாழிமுறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது”
“குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்து நிரம்பிய”
(திருவண்டப் பகுதி)
“கனவிலும் தேவர்க்கு அறியாய் போற்றி
நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி “
“பஞ்சுஏர் அடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி”
(போற்றித் திருஅகவல்)
சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி”
“நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை”
“நாசனே நான் யாதுமொன்று அல்லாப் பொல்லா நாயான”“
“நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்”
“ ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
“ஆடும் நின் கலழ் போது நாயினேன்”
(திருச்சதகம்)
“பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே”
(நீத்தல் விண்ணப்பம்)
“கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை”
“நாயான நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை”
(திரு அம்மானை)
“கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட”
(திருப்பொற்சுண்ணம் )
“நாயுற்றசெல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்”
“நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை”
(திருக்கோத்தும்பி)
“நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
(திருச்சாழல்)
“தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை”
(திருப்பூவல்லி)
“நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து”
“நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு”
(திருப்பொன்னூசல்)
“கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவி
(திருத்தசாங்கம்)
“நாளுமணு காவண்ணம் நாயெனை ஆளுடையான்”
(கோயில் மூத்த திருப்பதிகம்)
“தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே”
(செத்திலாப் பத்து)
“நாயி னேன் உனை நினையவும் மாட்டேன்”
“எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க
கில்லேன் இல்வாழ்க்கை”
(ஆசைப் பத்து)
“நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணைகாணேன்”
(புணர்ச்சிப் பத்து)
“தாதாய் மூவேழு லகுக்கும் தாயே நாயேன் தனை ஆண்ட”
(வாழாப் பத்து)
“கல்லாத புல்ல றிவிற் கடைப்பட்ட நாயேனை”
“ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு”
(கண்டப் பத்து)
“பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை”
“புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் உடையானே”
( பிரார்த்தனைப் பத்து)
“இடரே பெருக்கி ஏசற்றிங்கு இருத்தல் அழகோ அடி நாயேன்”
“ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை”
“நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்”
(குழைத்த பத்து)
“அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே”
(உயிருண்ணிப் பத்து)
“நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசி ட்டிங்கு”
(திருவேசறவு)
“பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே”
(அற்புதப் பத்து)
“பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்
புழுத்தலை நாய் போல” (எண்ணப் பதிகம்)
“தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா
கருணையினால்” (யாத்திரைப் பத்து)
“ நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட”
“நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே”
(ஆனந்த மாலை)
“நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ”
“நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த”
(அச்சோப்பதிகம்)
என்றெல்லாம் தம்மை நாயாக உருவகப்படுத்தியும் நாயின் இழிந்த செயல்களைத் தன் செயல்களுக்கு உவமமாக்கியும் கூறுவதைக் காணமுடிகிறது. பொதுவாகத் தமிழ்க் கவிதைகளில் அல்லது நீதி நூல்களில் நாய் நன்றியுணர்ச்சியாகிய நேர்முகப் பார்வைக்கு உவமமாக்கப்பட்டிருந்தாலும் பக்தி இலக்கியங்களில் நாயின் இழிவான பழக்க வழக்கங்களாகிய எதிர்மறைப் பண்புகளே கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பது சிந்திக்கத்தக்கது.
கண்ணப்பனே அன்பான கதை
திருக்குறளில் ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகச் செயல்படுத்திக் காட்டுவார் திருவள்ளுவர். அதாவது பண்பு செயல்படாது. பண்பை உடைய மனிதன்தான் செயல்படுவான். அந்தப் பண்புக்குப் பெருமையையோ இழிவையோ செய்வான். அன்பு என்னும் பண்பு இயேசு வழியாகச் செயல்படும். துரோகம் என்னும் பண்பு யூதாசு வழியாகச் செயல்படும். ஆனால் திருவள்ளுவர் பண்பே செயல்படுவதாகக் கூறி அந்தப் பண்பின் கொடுமையைச் சித்திரித்துள்ளார்.
“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்துவிடும்”
என்பது அந்தக் குறட்பா. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. பாவமே பாவியாகிவிடாது. ‘அழுக்காறு’ என்பது பண்பு. அழுக்கர்ற்றினைப் பாவி என்றது பண்பினைப் பண்பியாக்கிய நுட்பம். இந்த நுண்ணியம் எதனைக் குறித்தது எனின் ‘அழுக்காறு’ என்னும் பண்பே செயல்படும். செயல்பட்டு அதனை ஆக்கினானை இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் அவனுக்குப் பேரழிவைத் தரும்.
“பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை இருமையும் கெடுத்தல் கொடுமைப்பற்றி அழுக்காற்றினைப் பாவி என்றார்”
என்னும் அழகர் உரை இதனை இன்னும் தெளிவாக்கும். திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் என்றால் மணிவாசகர் இதனை மாற்றுகிறார். இவர் பண்பியைப் பண்பாக்குகிறார்.
“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய்க் கோத்தும்பீ!”
என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனிடத்துப் பேரன்பு காட்டியவருள் கண்ணப்பன் முன்களத் தளபதியாகவே திகழ்கிறார். அவருடைய வேடர்குலப் பின்புலமும் அதற்கு முரணான அளப்பறிய பேரன்பும் தன்னல மறுப்பும் உண்மையான இறையுணர்வும் சிலையையும் தெய்வம் என்று, தந்தையென்று எண்ணும் பக்குவமும் அவருக்கு இந்தப் பெருமையினைப் பெற்றுத்தந்தது எனலாம். அதுபோன்ற அன்பு தனக்கு இல்லையென்பதையும் அத்தகைய தூய அன்பைத் தான் பெருமானிடத்துக் காட்டாதபோதே, காட்ட இயலாதபோதே தனக்குப் பேரருள் புரிந்த திருப்பெருந்துறை சிவபெருமானை வழிபடுகிறார் மணிவாசகப்பெருமான். இங்கே அவர் ஒப்பிடுவது கண்ணப்பன் காளத்தியப்பரிடம் காட்டிய அன்பை. ஆனால் பாட்டில் கண்ணப்பன் அன்பு ஒப்பதோர் என்னாமல் கண்ணப்பன் ஒப்பதோர் என்றே எழுதியிருக்கிறார். அதாவது ‘கண்ணப்பன் வேறு, அன்பு வேறு’ என நோக்காது கண்ணப்பனையே அன்பு வடிவமாக நோக்கியிருக்கிறார். பண்பைப் பண்பியாகச் சொன்னார் வள்ளுவர். பண்பியைப் பண்பாகக் காண்கிறார் மணிவாசகர்!. கண்டு உவமமாக்கியிருக்கிறார்.
நிறைவுரை
அக இலக்கியங்களிலும் புற இலக்கியங்களிலும் பயின்றுவரும் உவமங்களைச் சுவைப்பதற்கும், பக்தி இலக்கியங்களில் வரும் உவமங்களை உணர்வதற்கும் தனித்தனி புலமையும் மனநிலையும் தேவைப்படுகின்றன. புலவனுடைய அறிவையும் நோக்குத் திறனையும் அழகியலையும் முன்னிறுத்தி முன்னவற்றிற்கு உவமங்கள் அமைக்கப்படுகின்றன. பக்தி இலக்கியங்கள் நிலையாமை நோக்கிய வாழ்வியல் அனுபவங்களில் வெளிப்படுவதால் அழகியலைவிட உணர்வுகளும் உணர்ச்சிகளுமே தூக்கலாகத் தெரிகின்றன. இதனை இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் உவமங்களால் ஓரளவு உணரலாம். சைவமானாலும் வைணவமானாலும் ஆண்டவன் அடியார் என்னும் நிலையில் பாடப்படுகின்ற பாடல்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் பரம்பொருளை நோக்கிய மனத்தைப் பக்குவப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன. சிவபதத்தை அடையும் முழுத்தகுதி பெற்ற மணிவாசகர் முதலிய அடியவர்களும் தங்களைத் தாழ்த்திக் கொண்டு பாடும் முறையும் பயன்படுத்தும் உவமங்களும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நன்னெறிப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. இலக்கியத்தை அழகுபடுத்தும் உவமங்களே வாழ்வியலை நெறிப்படுத்துகின்றன. இதனையே திருவாசகம் முதலிய பக்தி இலககியங்கள் தமது உவமக் கோட்பாடாகவும் கொண்டிருக்கின்றன எனவும் கருதலாம்.
(தொடரும்…)