Author: நிர்மலா ராகவன்

  • உன்னையறிந்தால் …. (16)

    நிர்மலா ராகவன்

    ஆரம்பம் எப்போது?

     

    உனையறிந்தால்1-11111

    கேள்வி: `என் பிள்ளைகளுக்கு அம்மாதான் எல்லாம்!’ என்று சில தந்தைமார்கள், நாற்பது வயதுக்குமேல், குறைப்படுவது ஏன்?

    விளக்கம்:
    தாயை, அவளுடைய இருதயத்துடிப்பை, எண்ணங்கள், உணர்ச்சிகள், குரல் எல்லாவற்றையும் ஒன்பது மாதங்கள் அதிகமாக அறிந்திருக்கிறார்களே!

    1970-லிருந்து கருவின் உளவியல் (FOETAL PSYCHOLOGY) கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதன்படி, மனைவி வயிற்றிலிருக்கும் (ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட) கருவிடம் தந்தை பேசியோ, பாடியோ செய்தால், அவருடைய குரல் பழகிவிடும் பிறக்கப்போகும் குழந்தைக்கு.

    இம்மாதிரிச் செய்த ஒரு தந்தையின் பரவசத்தைக் கேட்போமா?

    “என் மகள் பிறந்ததும் நான் ஏதோ பேசினேன். அந்தக் குழந்தை உடனே தலையைத் திருப்பி, என் கண்களை உற்றுப் பார்த்துச் சிரித்தது, `ஓ, நீதானா நான் அடிக்கடி கேட்ட குரல்!’ என்பதுபோல்!”

    அப்பா என்பவர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பவர், அல்லது `ஒழுக்கம்’ என்ற பெயரில் மகன்களைக் காரணமின்றித் தண்டித்து தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்பவர் என்று பிள்ளைகள் மனதில் படியும்படி நடந்துகொள்வது பழங்கால வளர்ப்புமுறை. `நான் கண்டிப்புடன் பிள்ளைகளை வளர்க்கிறேன்!’ என்ற பெருமையுடன் இப்படிச் செய்தால், இருபாலரிடையேயும் அன்பு எப்படி வளரும்? இதனாலேயே கடைசி காலத்தில் பெற்றோரைச் சுமையாகக் கருதுகிறார்கள் பிள்ளைகள். (ஒரு தந்தை இப்படி வளர்த்ததில், மூன்று மகன்களுக்கும் புத்தி பேதலித்துவிட்டது என்று படித்திருக்கிறேன்).

    காரணமின்றி அடியும், உதையும் வாங்கி வளர்ந்தவர்கள் தாமே தந்தையாகும்போது, மென்மையான உணர்வுகளை வெளிக்காட்டுவது ஆண்மைக்கு இழுக்கு என்பதுபோல் நடந்துகொள்வர். அவர்கள் வளர்ந்ததுபோலவேதான் மகன்களையும் வளர்ப்பார்கள். (அனேகமாக, பெண் குழந்தைகள் அடி, உதை வாங்குவதில்லை).

    தாம் சிறுவயதில் பட்ட துன்பங்களைப் பிள்ளைகளும் படக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்வது வெகு சிலரே. அதற்காக, மகன்கள் என்ன செய்தாலும் தண்டிக்காமல் (திட்டாமல்) விட்டால், அப்படியும் அவர்கள் உருப்படப் போவதில்லை. குழந்தையின் பரிபூரணமான வளர்ச்சிக்கு சரி எது, தவறு எது என்று உணர்த்தத் தவறுவது எப்படி அன்பாகும்?

    ஓயாத தண்டனை பெற்று, அல்லது `எது செய்தாலும் சரிதான்! என்று இவ்வாறு வளர்க்கப்படுபவர்கள் இருவருமே தம்மிடம் ஏதோ குறை இருப்பதாக உணர்வார்கள். உலகில் போட்டி, பொறாமை, அமைதியின்மை எல்லாம் நிலவக் காரணமே பெரும்பான்மையான மனிதர்கள் தங்களைக் குறைவாக எடை போட்டுக்கொண்டு, பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பதால்தான்.

    அன்பு என்பதைப் பரிபூரணமாகப் பெறாவிட்டால், நம்முள் மறைந்துகிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர முடியாது போய்விடுகிறது.

    போதாத குறைக்கு, `ஆத்மாவின் நினைவுகள்’ (SOUL MEMORY) என்று, கருவாக இருக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழமாகப் பதிந்துபோன உணர்ச்சிபூர்வமான அனுபவங்கள் வேறு!

    தாயின் ஓர் அங்கமாக விளங்கும் கரு ஆரம்பித்திலிருந்தே அவளுடைய நினைவோட்டத்தையும், அவ்வப்போது ஏற்படும் அனுபவங்களையும், அதனால் விளையும் உணர்ச்சிகளையும் தனதாக்கிக் கொள்கிறது. இவை ஆயுள் முழுவதும் ஒருவனுடன் இருக்கும், அவனே அறியாமல்.

    ஹிப்னாடிச முறையில், ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளவைத்து, ஒருவர் கருவாக இருந்தபோது பெற்ற அனுபவங்களை மீண்டும் பெறச் செய்யலாம். உதாரணமாக, விமானத்தில் பறக்கவோ, அடுக்குமாடி வீட்டு மேல்தளத்துக்குப் போகவோ அதீதமான பயம் கொண்ட ஒருவர் கருவாக இருந்தபோது தாய் மாடியிலிருந்து உருண்டு விழுந்திருக்கலாம். அல்லது, `உன்னைப் பிடித்துத் தள்ளுகிறேன், பார்!’ என்று எவராவது தாயை மிரட்டி, அப்படி நடந்திருக்காவிட்டாலும், அப்போது தாய் அடைந்த பயத்தைக் கருவும் அனுபவித்து, தனதாக்கிக் கொள்கிறது. இதைத்தான் காரணமற்ற பயம் (PHOBIA) என்கிறார்கள். ஆனால், காரணம் என்னவோ இருக்கிறது.

    சில பெண்கள் கர்ப்பமடைந்திருக்கும்போது, `இது பெண்ணாக இருந்துவிடக் கூடாது,’ என்று யாராவது சொல்வதைச் செவிமடுத்த கருவினுள் தான் எவருக்கும் வேண்டாதவள் என்ற எண்ணம் பதிந்து விடுகிறது. இம்மாதிரியானவர்கள்தாம் தற்கொலையை நாடுகிறார்களாம்.

    ஆகவே, தாம் பெற்றிருக்கிற குழந்தைகளையே காப்பாற்ற முடியாதவர்கள் அன்பையும், பாதுகாப்பையும் பெற முடியாத பிள்ளைகளை உலகிற்குக் கொண்டுவருவதைக் காட்டிலும் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது உகந்தது.

    ஒரு கர்ப்பிணி நிறைமாதமாக இருக்கையில், கனமான பொருள் அவள் வயிற்றில் விழுந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் கருவிற்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டாலும், அவளடைந்த அச்சம் அதைப் பற்றிக்கொள்ளுமே! `இதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை!’ என்று எண்ணங்கள் அல்லது வார்த்தைகள்வழி கருவிடம் ஆதரவாகத் தெரிவித்தால், பின்விளைவுகள் இருக்காது.

    உருவான போதிலிருந்தே தகுந்த அன்புடன், வதைபடாது வளர்க்கப்படும் குழந்தைகள் அன்பு, அறிவு, ஒழுக்கம் ஆகிய தன்மைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

    `அறிவு’ என்பது புத்தகங்களிலிருந்து கிடைப்பது மட்டுமல்ல. நல்ல இசை மற்றும் நுண்கலைகளும் அறிவை வளர்க்கும். இனிய பேச்சும், இசையும் கேட்டு வளர்ந்தவர்கள் தாம் பெற்ற அன்பையும், அறிவையும் பரப்புவார்கள்.

    இம்மாதிரியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க உலகில் கொடுமைகள் குறைந்து, சமரசம் நிலவும். ஆரம்ப காலத்தில் உலகம் அப்படித்தான் இருந்ததாம்.

    குறையோ, மனவருத்தமோ இல்லாது, ஒவ்வொருவரும் தமது ஆற்றல்களை அஞ்சாது வெளிப்படுத்தும் சூழ்நிலையை எண்ணிப்பாருங்கள். கற்பனை செய்யும்போதே ஆனந்தமாக இல்லை?

    கடந்து போனவைகளை நீங்களேகூட ஆத்திரப்படாது, யாருக்கோ நடந்ததுபோல, பலமுறை நினைத்துப் பார்த்தால், தெளிவு பிறக்கும். தடைகள் விலக, உங்கள் திறமைகள் வெளிப்படும்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் ….. (15)

    நிர்மலா ராகவன்

    மரியாதை

    உனையறிந்தால்1-1111
    கேள்வி: குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிப்பது சரிதானா?

    விளக்கம்: `என் குழந்தைகள் என்னைப்போல இல்லை. ரொம்ப தைரியசாலிகள்!’
    பணிவு, அடக்கம், மரியாதை என்ற பெயர்களில் தாம் அளவுக்கு மீறி ஒடுக்கப்பட்டு விட்டோம் என்ற மனக்குறை உடையவர்கள் பெருமையாகப் பேசுவது இது. பழையகால வளர்ப்பு முறை தவறு என்பது அவர்கள் வாதம்.

    சமயம் கிடைத்த போதெல்லாம் மேலதிகாரிகளுக்கு அடிவருடிகளாக, தம் புகழை ஒன்றுக்குப் பத்தாக தாமே பாடிக்கொண்டு, எதிரி என்று தோன்றுபவர்களை எல்லாம் மிரட்டலும், அவதூறும் பிரயோகித்து அவர்கள் தம் நிகராகவோ, அல்லது தம்மை மிஞ்சாதிருக்கவோ செய்து — இன்னும் என்னென்னமோ செய்தால்தானே பிள்ளைகள் முன்னுக்கு வர முடியும் என்றுதான் தற்காலத்தில் பலரின் சிந்தனையும் செல்கிறது.

    அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற அறிவாற்றலும், நேர்மையும் இருந்தால் மட்டும் பிழைக்க முடியுமா? தில்லுமுல்லு செய்யக்கூட அளவில்லாத துணிச்சல் வேண்டும்தானே?

    ஆனால், சுய லாபத்துக்காகப் பிறரிடம் போலி மரியாதையுடன் நடந்துகொள்பவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். அவனிடமும் அப்படியே பொய்யாக நடப்பவர்களிடம் ஏமாந்துவிடுகிறான். நாளடைவில், இது புரிய. விரக்திதான் மிஞ்சும்.

    கதை 1: என் மலாய் மாணவி நோர்லேலா (14) சற்றும் மரியாதை இல்லாமல், எதிர்த்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பொறுக்க முடியாமல் போய், ஒரு சக ஆசிரியையிடம் அவளைப்பற்றிக் கேட்டேன். `மலாய்க்காரர்களுக்கு மரியாதை ரொம்ப முக்கியமாயிற்றே! இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள்?’

    நோர்லேலா எங்களுடன் வேலை பார்க்கும் ஒரு வயது முதிர்ந்த ஆசிரியையின் மகள் என்று அவள் கூற, ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறருக்கு நற்குணம் போதிக்க வேண்டிய ஓர் ஆசிரியை அதெப்படி தன் மகளை இப்படிப் பழக்கி இருப்பாள்?

    பெண்ணின் தாய் சற்று வருத்தத்துடன் என்னிடம் சொன்னாள்: `பெரியவர்கள்முன் வாயே திறக்கக்கூடாது என்பதுபோல் என்னை வளர்த்தார்கள். அதனால், நான் பெரியவர்கள்முன் வாயடைத்துப் போய்விடுவேன். என் மகளும் அப்படிப் போய்விடக்கூடாது என்றுதான் அவளுக்கு அளவற்ற பேச்சு சுதந்திரம் கொடுத்தேன். இப்போது எல்லா ஆசிரியைகளும் அவளைக் குறை கூறுகிறார்கள். வீட்டிலும் அப்பா, அம்மா, உடன்பிறந்தோர் எல்லாரையும் மரியாதை இல்லாது பேசுகிறாள். என்ன செய்வது என்றே புரியவில்லை!’

    நாகரீக யுகத்தின் குழப்பம் இது.

    அதிகம் படிக்காத தாய், `என் மகன் பேசறதும், கேக்கறதும் எனக்கே புரியலே!’ என்று பிறரிடம் பெருமையாகச் சொல்கையில், தன்னையுமறியாது, மகன் அவளை மட்டமாக எடைபோட வழிவகுக்கிறாள்.

    தான் பெற்று வளர்த்த பிள்ளை புத்திசாலி என்ற மிதமிஞ்சிய பெருமையுடன், அவன் வயதினரான பிறரை மட்டம் தட்டிப் பேசினால்கூட மகனுக்கும் அந்தப் போக்குதான் வரும். பெரியவன் ஆனதும், அவனைவிடத் தாழ்ந்தவர்கள் எல்லாரையும் –பெற்றோர் உட்பட — அலட்சியம் செய்வான்.

    ஒருவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தால்தான் என்ன? அவனைப்போன்ற கல்வியறிவோ, செல்வமோ இல்லாததால் மட்டுமே பெற்றோர் அவனைவிடத் தாழ்ந்தவர்கள் ஆகி விடுவார்களா, என்ன?

    கதை 2: `உங்களுக்கு எது வேணுமோ, வாங்கிக்குங்கம்மா!’ என்று அன்பும், மரியாதையுமாகச் சொல்லிவிட்டு, ஒரு நகைக்கடை வாசலில் நின்றுகொண்ட ஓர் இளைஞனைப் பார்த்தேன். படித்து, நல்ல உத்தியோகம் பார்ப்பவனாகத் தெரிந்தான்.

    அவனுக்கு நேர்மாறான தோற்றத்தில் தாய். ஏழ்மையிலேயே காலமெல்லாம் உழன்றிருப்பவளாகத் தெரிந்தாள். தனது இல்லாமையிலும் மகனைப் பரிவுடன் நடத்தி, அவனுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பண்புகளைப் போதித்திருக்க வேண்டும்..

    தான் முன்னுக்கு வந்தது தன் சுய முயற்சியால் மட்டுமல்ல, தன் பெற்றோருக்கும் அதில் முக்கியப் பங்குண்டு என்று ஒத்துக் கொண்டிருக்கிறான் மகன். தன் நன்றியை இப்படி வெளிக்காட்டுகிறான். இச்சம்பவத்தை நான் கண்டு பல வருடங்களாகியும், இப்போது நினைத்தாலும், பூரிப்பாக இருக்கிறது.

    இன்னொரு தாய், `இவர்களால் எனக்கு என்ன லாபம்?’ என்ற வியாபார நோக்கில்தான் குழந்தைகளைப் பார்க்கிறாள்.
    தான் பெற்ற பிள்ளைகளிடம், நீ நிறையப் படித்து, பெரிய வேலை கிடைத்ததும், நான் உனக்குச் செய்ததை எல்லாம் மறக்காதே!’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். இதில் அன்பு எங்கே இருக்கிறது?

    முதலில் பெற்றோரிடமிருந்து அன்பைப் பெறாததால், வளர்ந்தபின்னர் அவர்கள் அளிக்காத அந்த அன்பைத் திருப்பி அளிக்க முடிவதில்லை அப்பிள்ளைகளால். தன்னைச் சம்பாதித்துப்போடும் ஒரு கருவியாகத்தான் அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்ற எண்ணம் கசப்பைத்தான் விதைக்கும். இத்தகையவர்களால் போலி அன்பைத்தான் காட்ட முடியும்.
    வாழ்க்கை எவ்வளவுதான் நாகரீகம் அடைந்தாலும், இரக்க குணம், அன்பு, பிறரிடம் மரியாதையாக நடத்தல் போன்ற பண்புகளுக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. மனிதர்களிடம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவை இவை.

    உலகில் 8% மனிதர்கள்தான் அடுத்த வேளை உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் எப்படிக் கிடைக்கப்போகிறது என்று பரிதவிக்காமல் இருக்கிறார்களாம்.

    இது புரிந்து, `இப்படி ஒரு வளமான, அன்பான குடும்பத்தில் பிறக்க நீ எவ்வளவோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். அதற்கு ஈடாக, பிறருக்கு உதவி தேவைப்படும்போது, வலியப்போய் செய்!’ என்று அறிவுரை சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் சுயநலமின்றி வளர்வார்கள். ஆனால், சோம்பேறிகளுக்கோ, ஏமாற்றுக்காரர்களுக்கோ உதவி செய்வது அநாவசியம்.

    `பிறரிடம் மரியாதையாகப் பழகு,’ என்று ஒரு சிறுவனிடம் சொல்வதைவிட, அதை நம் போக்கில் காட்டினால், அவனும் அப்படியே நடப்பான். இங்கும் ஓர் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

    வயதானவர்கள் தாறுமாறாக (உ-ம்: பாலியல் வதைக்கு உட்படுத்துவதுபோல்) நடந்து கொண்டால், அதைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை; தாராளமாக எதிர்க்கலாம், ஏனெனில், அவர்கள் மரியாதைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

    இப்படிச் செய்தால், அநீதியைத் தட்டிக் கேட்கும் தைரியம் என்றென்றும் குன்றாது நிலைக்கும்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …..! (14)

    நிர்மலா ராகவன்

    கண்கண்ட தெய்வமா?

    உனையறிந்தால்1-111

    கேள்வி: கணவன் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும், இந்தக் காலத்திலும் சில பெண்கள் பொறுத்துப்போவது ஏன்?

    பிறருக்கு அன்பையும், தனது சேவையையும் ஓயாது அளிப்பதே நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்ற போதனை சமீப காலம்வரை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
    தமிழ் இலக்கியத்திலும் கணவனுக்குப் பணிவிடை செய்யும் பெண் கல்லையும் வேக வைப்பாள், அவள் `பெய்யெனப் பெய்யும் மழை’ என்றெல்லாம் (ஆண்கள்?) சொல்லி வைத்திருக்கிறார்களே!
    இதையெல்லாம் கேட்டும், படித்துமுள்ள அம்மா, அத்தை, பெரியம்மா போன்றோர் தாம் அதைக் கடைப்பிடித்து, இளையவர்களையும் அப்படியே பழக்குகிறார்கள். சிறுமிகள் எதையும் ஆராயும் திறனின்றி, மூத்தவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறார்கள்.

    காலங்கடந்து, கொடுமைக்காரரான கணவனால் புழுவுக்கும் கேவலமாக நடத்தப்படும்போது, இவர்களால் தம்மை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

    ஒரு நீண்ட கதை:

    `என் கணவரைக் கொன்றுவிடலாமா என்று பார்க்கிறேன்!’
    `என் கணவர்மேல் எனக்கு ஒரே காதல்! என்ன ஆனாலும், அவரை விவாகரத்து செய்ய மாட்டேன். கல்யாணம் என்பது எவ்வளவு புனிதமான ஒன்று!’

    முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறாள் சாருமதி (உண்மைப் பெயரல்ல). படித்து, உத்தியோகம் வகித்த இப்பெண்மணி, தமிழும், ஆங்கிலமும் சரளமாகப் பேசுகிறாள். இவளுடைய ஆரோக்கியமான மனநிலை திருமணத்திற்குப்பின் கணவரது வதையால் சீர்குலைந்தது. ஓயாத அழுகை, ஆத்திரம், பயம் என்ற எதிர்மறை உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டதன் விளைவாக, சிகிச்சைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.

    `உங்கள் கதை பிற பெண்களுக்குப் பாடமாக இருக்கும்,’ என்று தனது கவுன்சிலர் (COUNSELLOR) கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, தானே என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

    `எங்க பெற்றோருடையது பெயர் வாய்ந்த குடும்பம்!’ என்று அடிக்கடி கூறிக்கொண்டாள், தனது புதிரான செய்கைக்கு நியாயம் கற்பிப்பதுபோல்.

    சாருமதியின் பிரச்னைதான் என்ன?

    தனக்கென ஒரு குடும்பம், குழந்தைகள் என்று பலகாலம் ஏங்கி நின்று, தனது நாற்பத்து நாலாவது வயதில் வருங்காலக் கணவரைச் சந்தித்து இருக்கிறாள்.

    கதிர்வேலு முதல் மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டவர். பத்து வயதில் ஒரு மகள்.
    `ஏன் உங்களை விட்டுப் போய்விட்டாள் அந்த மனைவி?’ என்ற சாருமதியின் கேள்விக்கு அவர் பதில்கூறாது மழுப்பினாலும், அவள் மேற்படிப்பு படிக்க விரும்பியதை ஒப்பாது, அடித்துப் புரட்டியதாக அறிந்தாள். அதனால் அவள் மனம் தளரவில்லை.`கல்யாணம் என்று ஒன்று ஆனால் போதும்,’ என்ற நிலைக்கு வந்திருந்தாள் சாருமதி.

    `நான் ஆதர்ச மனைவியாக, அவருக்கு விட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தால், எங்களுக்குள் ஏன் பூசல் வரப்போகிறது?’ என்ற அசட்டு நம்பிக்கையுடன் கதிர்வேலுவின் கரம்பிடித்தாள்.

    ஐந்து வருடங்களுக்குப் பிறகு, `கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற என் ஆர்வத்தை அவ்வளவு வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாதோ?’ என்ற சந்தேகம் எழுந்தது.

    ஏன் தெரியுமா?

    அன்பும், கனிவுமாக இருந்த காதலர் கணவனானதும் மாறிப்போனார். திருமணமாகி ஒரே வாரத்தில் தன் குரூர விளையாட்டுக்களை ஆரம்பித்தார். எடுத்ததற்கெல்லாம் அடி, உதை. கண்ட கண்ட படங்களைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு இரவும் கட்டாய உடலுறவு. முடிந்தவுடனே மனைவியைப் படுக்கையின் கீழே தள்ளி, அடித்து உதைப்பாரென்று சாருமதி விவரித்துக்கொண்டே போக, எனக்கு மூச்சு நின்றுவிடும் போலிருந்தது.

    ஒரு நல்ல மனைவிக்கு அடையாளம் கணவனுக்குக் கீழ்ப்படிதல் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை சாருமதிக்கு. ஆனால், மனைவியின் மிரட்சியில் இன்பம் காணும் கணவரை `கண்கண்ட தெய்வம்’ என்று ஏற்றுக்கொள்வதில் புத்திசாலித்தனமோ, நற்பண்போ எங்கே இருக்கிறது?

    `நீங்கள் என்ன செய்தாலும், உங்களை விட்டுப்போக மாட்டேன்!’ என்பாளாம் கணவனிடம். அனுதினமும் கணவன் தன்னை நாடுவதில் பெருமை வேறு! அணைப்பவர் அடிப்பதால் என்ன மோசம் என்று எண்ணினாலும், உடலும், மனமும் ஒருங்கே சோர்ந்தன.

    முதல் தாரம் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாளே என்று எல்லாப் பெண்களின்மேலும் ஆத்திரமாக இருந்திருக்க வேண்டும் கதிர்வேலுவுக்கு. ஒரே மகளும் தாயுடன் தங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதில், எல்லா ஆத்திரமும் அப்பாவியான சாருமதியின்மேல் திரும்பியது.

    மகளும் தந்தைபோலவே இருந்தாள். தந்தையின் வீட்டுக்கு வந்து தங்கியபோது, மாற்றாந்தாய் தன்னை மாடியிலிருந்து உருட்டி விட்டுவிட்டாள் என்று அபாண்டமாகக் கூறினாள். எதற்கும் வன்முறையையே கையாண்ட கதிர்வேலுவுக்கு இப்படி ஒரு நல்ல சாக்கு கிடைத்தால் விடுவாரா? மனைவியை மேலும் துன்புறுத்தினார்.

    அவளோ, `கடவுளே, என்னை விதவையாக்கி, நிம்மதி கொடேன் என்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். இல்லாவிட்டால், நான் சாக வேண்டும்,’ என்கிறாள் விரக்தியின் உச்சத்தில். உடனே, `கடவுள் இருக்கிறார்! எல்லாருக்கும் நியாயம் வழங்குவார்!’ என்று தத்துவம் பேசி, தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்கிறாள்.

    விவாகரத்து?

    `அப்படிச் செய்தால், பெற்றோருக்குத் தலைகுனிவாகிவிடும், ஆகவே கூடாது,’ என்கிறாள். அவளுடைய உறவினர்கள், `முட்டாள்’ என்று பழிக்கிறார்களாம், அவளுடைய இயலாமையை எள்ளி நகைத்து. நியாயம்தானே?

    நடந்ததில் கணவர் மட்டுமா பொறுப்பு? என்ன அக்கிரமம் இழைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வளைந்து கொடுத்த சாருமதிக்கும் பங்கு கிடையாதா. என்ன!

    தான் வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லாருடனும் கலகலப்பாகப் பேசி, அனுசரித்து நடந்துகொள்பவள் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டவளின்மேல் எனக்குப் பரிதாபம் எழவில்லை.

    `நீங்கள் முதலிலேயே எதிர்த்திருந்தால், இப்படி வருடக்கணக்கில் வதையைத் தாங்கிக்கொள்ள நேர்ந்திருக்குமா?’ என்று கேட்டேன்.

    `நான் எதிர்த்துக் கேட்டால், இன்னும் மூர்க்கமாக ஆகிவிடுகிறாரே!’ என்று பதிலளித்தாள், அச்சத்துடன்.
    ஆகாத காரியமாகப் பேசுகிறாள்: `யாராவது மூன்றாம் மனிதர் எங்களிருவருடன் உட்கார்ந்து பேசி, நியாயத்தைப் போதித்தால், நான் எவ்வளவு நல்ல மனைவி என்று என் கணவர் உணர்வாரோ!’

    சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாள். ஆனால், தன் வாழ்வில் ஒரு நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் துணிவில்லை. நடந்ததில் தனது தப்பும் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் சாருமதியின் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.

    படித்திருந்து என்ன பயன், தன் வாழ்வில் உள்ள சீர்கேட்டை முனைந்து சீர்படுத்திக்கொள்ளாவிட்டால்?
    சமூகம் என்ன சொல்லும், பெண்ணின் குணநலன் என்றெல்லாம் சாக்குபோக்குச் சொல்லி எந்த இன்னலையும் பெருமையுடன் தாங்குபவளிடம் என்ன சொல்வது!

    `உங்களைப்போன்ற பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது,’ என்றேன் மனம் வெறுத்துப்போய்..
    தானும் ஒரு மனிதப்பிறவி, நிம்மதியும், அமைதியும் நிறைந்த வாழ்வை நாட தனக்கும் உரிமை இருக்கிறது என்று ஒவ்வொரு பெண்ணும் நம்பி, அதன்படி நடந்துகொண்டாலே ஒழிய, கதிர்வேலுக்களை ஒழிக்க முடியாது.

    தொடருவோம்

    Share
  • என் பெயர் காதல் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    என் பெயர் காதல்

    அம்மா பெயர் மங்களம். அதை முதன்முதலில் தெரிந்து கொண்டபோது, “எப்படிம்மா இந்தப் பேரு வெச்சாங்க?” என்று கேட்டேன்.

    “என் பாட்டி பேரு,” என்றாள்.

    “என் பேருமட்டும் ஏன் பிரேமா?” பாட்டியின் பெயர் பிரேமா இல்லை.

    “ஒன் கேள்விக்கெல்லாம் யாரால பதில் சொல்ல முடியும்?” என்று அம்மா அலுத்துக்கொண்டாள். இருந்தாலும் சொன்னாள், “இந்தப் பேரு அழகா, நாகரீகமா இருக்குன்னு அப்பாதான் வெச்சார்!”

    பெயர்களும் பொருளுள்ள வார்த்தைகள்தாம் என்று பிறகு தெரிந்தது. பத்து வயதில் நான் அகராதி பார்க்கக் கற்றுக்கொண்டதும் தேடிய முதல் வார்த்தையின் பொருள் — காதல். ஆம், என் பெயரின் அர்த்தம்தான். நேரே அம்மாவிடம் போய், “காதல்னா என்னம்மா?” என்று கேட்டேன்.

    அவள் முகம் போன போக்கைப் பார்த்து, கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. “என்னமாதிரி புஸ்தகம் எல்லாம் படிக்கிறே நீ?” என்று இரைந்தாள்.

    அன்றையிலிருந்து இன்றுவரை — அதாவது, எனக்குத் திருமணம் ஆகும்வரை — என் பெயரின் பொருளைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

    “ஏண்டி பிரேமா! ஒன்னைப் பாத்தா ஒரு கல்யாணப்பொண்ணுமாதிரியா இருக்கு? ஒரு சிரிப்பு, ஒரு வெக்கம், அலங்காரம் ஒண்ணையும் காணோமே!” என்று அரற்றிய அம்மா, நான் வழக்கம்போல் காதில் வாங்காமல் இருந்ததைப் பார்த்து, “ஏ பிரேமா! ஒன்னைத்தான்!” என்று உரக்கக் கத்தினாள்.

    நான் புத்தகத்திலிருந்து கண்ணைச் சிரமப்பட்டு விலக்கி, எதிரே நின்றிருந்த அம்மாவிடம் பதித்தேன். பெயருக்கு ஏற்ப, மங்களகரமாக — நெற்றி நிறைய குங்குமமும், காதோரம் இழைத்த மஞ்சள் பூச்சுமாய் நின்றிருந்தாள்.

    “என்ன புதுசாப் பாக்கறே?” அம்மாவின் குரலில் எரிச்சலுடன் சிறிது பெருமையும்கூட.

    அது என்னவோ, நான் சும்மா பார்த்தால்கூட உற்றுப் பார்ப்பதுபோல்தான் எல்லாருக்கும் தோன்றுகிறது. இப்படிப் பார்க்கிறேனே தவிர, ஒருவருடைய முகத்தையும், என்னுள் பதித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை. அத்தை மூக்குத்தி போட்டிருக்கிறாளா, இல்லையா, சித்தப்பா கண்ணாடி அணிவாரா — இந்தமாதிரி கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், பிறருடைய வெளிப்புறத்தையும் மீறி, அந்தரங்கத்தில் உள்ள எதிலேயோ என் மனம் பதிந்துவிடும், என்னையும் அறியாமல்.

    இன்னது பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. செடியிலிருந்து ரோஜாப்பூவைப் பறிக்கப்போய், ‘உன்னைக் கிள்ளினால் உனக்கு வலிக்காதா?’ என்று அந்த சிவந்த மலர் என்னைக் கெஞ்சி அழுவதுபோல் தோன்ற, அதன் பயத்தில், துக்கத்தில், நானும் பங்கு கொண்டவளாய், கண்ணீர் சிந்தியிருக்கிறேன் பலமுறை.

    தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவரின் உதடு எப்படி ஊதா நிறமாகத் தெரிகிறது என்ற யோசனை வரும். அவர் ஓயாமல் புகைபிடிப்பவராக இருக்க வேண்டும், கறுத்த உதடுகள் அதிப்பிரகாசமான மின்வெளிச்சத்தில் நிறம் மாறித் தெரிகின்றன என்று கண்டுபிடிப்பேன்.

    “பிரேமா!” அம்மாவின் குரல் கெஞ்சலாக ஒலிப்பது வெகுதூரத்திலிருந்து வருவதுபோல் ஒலித்தது. “இப்படி எங்கேயோ போயிடாதே. இத்தனை வருஷமும் பரவாயில்ல. இப்ப புருஷன் வீட்டுக்குப் போகப்போற பொண்ணு நீ! அங்கேயாவது ஒன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு கவனமா இருடி. இப்படி இருந்தியானா, ‘சித்தப்பிரமை’ன்னு நெனைச்சுப்பாங்க!”

    அம்மாவின் அறியாமையைக் கண்டு எனக்குப் பாவமாக இருந்தது.

    ‘எல்லாரையும்போல இருடி!’ எனக்கு ஓயாமல் வழங்கப்பட்ட அறிவுரை.

    நானும் முயன்றுதான் பார்த்தேன். ஆனால், மற்ற பெண்கள் விரும்பிப் பேசும் எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எவள் எந்தப் புடவை கட்டினால் என்ன, வீட்டு வேலைகளை அவரவர் செய்யும் நேர்த்தியைப்பற்றி அப்படி ஓயாமல் பேசாவிட்டால்தான் என்ன! அவர்களுடைய அறிவும், ஆர்வமும் ஏதோ வேண்டாத இலக்கை நோக்கிப் பாய்வதுபோல் இருந்தது எனக்கு.

    முதலில் என்னையும் தங்களைப்போல் மாற்ற முயன்று, அடுத்து நான் இப்படி ஒருவருடனும் ஒட்டாமலிருப்பதன் காரணகாரியங்களை — சிறிது வம்பையும் கூடவே கலந்து — ஆராய்ந்து, இறுதியில் என்னால் அவர்களுக்கு ஒரு தொல்லையும் வராது என்று புரிந்தவுடன், என்னை என் வழிக்கே விட்டுவிட்டார்கள் என்னுடன் பழக நேரிட்டவர்கள். நானும் சௌகரியமாக என் எண்ணங்களிலேயே மூழ்கிப்போனேன்.

    இப்போது விஞ்ஞானம் படித்து, அதில் இரண்டு பட்டங்களும் வாங்கியதும்தான் தெரிகிறது நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று.

    மனித மூளையில் இரு பகுதிகள், வலம், இடம் என்று. என்னைப் போன்றவர்களுக்கு வலப்புறத்தின் ஆதிக்கம் அதிகம். ஓயாத எண்ணங்களும், கற்பனையும் இதன் வேலை. அம்மாமட்டும் அவ்வப்போது என்னை உசுப்பி இருக்காவிட்டால், யோசித்து, யோசித்தே ஞானியாக ஆகியிருப்பேனோ, என்னவோ!

    சாதாரணமாக, சிறு குழந்தைகள் மட்டும்தான் இப்படி இருப்பார்கள். உலகத்தை ஒட்டி அவர்களை வாழவைக்கும் முயற்சியில் பெரியவர்கள்தாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் அந்த இன்பத்தை அபகரித்து விடுகிறார்கள்.

    என் போக்கைப் பார்த்துப் பயந்துகொண்டிருந்த அம்மா என் திருமணப்பேச்சை எடுக்கத்தான் எவ்வளவு பயந்தாள்!

    “ஒரு பொண்ணு கொடிமாதிரி. அதைப் படரவிடுகிற கொழுகொம்புதான் புருஷன்,” என்று ஏதேதோ அளந்தாள்.

    அம்மா இவ்வளவு சிரமப்பட்டிருக்கவே வேண்டாம். ‘காதல்’ என்ற வார்த்தை அகராதியிலும், கதைப்புத்தகங்களிலும்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிற அளவுக்கு எனக்குள் ஆயாசம் பிறந்திருந்தது. இல்லாத ஒன்றைத் தேடுவதைவிட, எல்லாரும் காட்டும் வழியில் போய்த்தான் பார்ப்போமே என்ற விரக்தியுடன், எதிர்ப்பே தெரிவிக்காது இருந்துவிட்டேன்.

    அம்மாவுக்குக் கொள்ளை சந்தோஷம். “இவ்வளவு படிச்ச பொண்ணு! மத்த அறைகுறைங்களைப்போல காதல், கீதல்னு கண்டவனை இழுத்துக்கிட்டு ஓடாம, எவ்வளவு அமரிக்கையா பெரியவங்க பேச்சைக் கேக்குது!” என்று அத்தையிடம் பீற்றிக்கொண்டாள்.

    முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் ஒரேநாள் மணவிழாவால் இணைக்கப்பட்டு, ஆயுள்பூராவும் இணைந்திருக்கவேண்டிய நிலை என்னைப் பொறுத்தவரை கஷ்டமாக இல்லை.

    நல்லவேளை, என் கணவரும் பெரிதாக எதிர்பார்ப்புகளை ஏந்தியிருந்து, என்னால் ஏமாந்து போகவில்லை. அவசியம் வந்தால் கொஞ்சம் பேசினோம். நான் எப்போதும்போலவே புத்தகங்களில் ஆழ்ந்துவிடுகையில், நிம்மதி அடைந்தவராக, அவர் வெளியே சென்று, நண்பர்களுடன் பொழுதைக் கழித்தார். அம்மா சொன்னதுபோல், அவரைக் கொழுகொம்பாகப் பாவித்து நான் அவர்மேல் கொடியாகப் படரவெல்லாம் இல்லை. எப்போதும்போல்தான் இருந்தேன். எங்களிருவரின் உடல்களும் அருகருகே இருந்தபோதும், அவர் கரம் — சமூக அங்கீகாரத்துடன் தான் பெற்ற உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் — என்மீது படர்ந்தபோதும்கூட என் மனம் எங்கோ தொலைதூரத்தில்தான் இருந்தது.

    வாயில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பதைப்போல ஓர் ஆணும், பெண்ணும் அந்தரங்கமான உறவு கொள்ளும்போது சிலிர்த்துப்போவது உடற்கூற்றினால்தான் என்று அறிவுபூர்வமாக என் மனம் விவாதித்தது. உடலுக்குள் எத்தனை எத்தனை சுரப்பிகள் இருக்கின்றன என்பது நான் அறியாததா, என்ன! இதில் காதல் எங்கிருந்து வந்தது? என்னமோ எல்லாரும் சேர்ந்து என்னை வஞ்சித்துவிட்டமாதிரி இருந்தது. எனக்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருக்கலாம்.

    பிறந்தகத்தைவிட்டுப் போன சீக்கிரத்திலேயே நான் திரும்ப வந்துவிட்டேன், நிரந்தரமாக. இப்போதெல்லாம் அம்மா என்னிடம் ஆத்திரப்படுவதில்லை. தான் மங்களகரமாக பூவும், பொட்டுமாக இருக்கையில், மகள் அந்த உரிமையை இழந்துவிட்டாளே என்ற குற்ற உணர்வோ?

    நான் எப்போதும்போல்தான் இருந்தேன். ஆனால், கொழுகொம்பை இழந்ததில் ரொம்பத் துக்கப்பட்டுவிட்டேன் என்று எல்லாரும் எனக்காகப் பரிதாபப்பட்டார்கள். இப்படியே இருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடுமாம்! இந்தச் சாக்கில்தான் ஆசிரியர் பயிற்சி பெற என்னை அனுப்பினார்கள். காலமெல்லாம் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள ஏதாவது வழி வேண்டாமா? ஆனால், இதை யாரும் வாய்திறந்து சொல்லவில்லை.

    ஓயாமல் படித்ததற்காகத் திட்டுவாங்கியே பழக்கப்பட்டிருந்த எனக்கு, ‘படித்துத்தான் ஆகவேண்டும்’ என்ற நிர்ப்பந்தம் வரவேற்கக் கூடியதாகத்தான் இருந்தது. நான் உண்டு, கல்லூரி வாசகசாலை உண்டு என்று அமைதியாக காலத்தைத் தள்ளிக்கொண்டிருந்தேன்.

    அங்கேதான் அவரைப் பார்த்தேன்.

    டாக்டர் கோசல்ராம் என்ன இனத்தவர் என்றே கண்டுகொள்ள முடியாதபடி உருவத்தில் தனித்திருந்தார். ஒட்டுச்செடியைப்போல, பற்பல இனக்கலவைகள் சேர்ந்து, வித்தியாசமாக இருந்தார். நாடி பிடித்து, காய்ச்சலுக்கு மருந்து அளிக்கும் டாக்டர் அல்ல அவர். மனத்தின் வக்கிரங்கள் அவரது சிறப்புப்பாடம்.

    மனோதத்துவத்தின் ஒரு பிரிவான ‘கவுன்செலிங்’பற்றிப் பாடம் நடத்தியபோது, ஒவ்வொரு வரியிலுமே நகைச்சுவை இழையோட, தன் வேலையைப் பெரிதும் நேசித்து, ரசித்து, அவர் சிரித்தபோது, வகுப்பு முழுவதுமே குலுங்கிச் சிரித்தது.

    ‘அடேயப்பா! இந்த இளம் வயதிலேயே இந்த மனிதருக்குத்தான் என்ன மூளை!’ சம்பந்தமில்லாது எனக்குப் பெருமிதம் தோன்றியது.

    ‘இவருக்கு என்ன, முப்பத்தி ஐந்து, நாற்பது வயது இருக்குமா?’ என்று எண்ணமிட்டுவிட்டு, என்னையே கடிந்துகொண்டேன். அந்நிய ஆணைப்பற்றி இது என்னவேண்டாத யோசனை! அவர் உருவத்தைவிட்டு, அவர் போதித்ததில் கவனம் செலுத்த முயன்றேன்.

    ‘கவுன்செலிங்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் ‘ஆலோசனை கூறுதல்’ என்கிறது அகராதி. உண்மையில், அதைமட்டும் ஒரு கவுன்சிலர் — நம் கவலையை நாம் விவரிக்கும்போது அதைப் பொறுமையாகக் கேட்பவர் — செய்துவிடக்கூடாது என்றார் டாக்டர் கோசல்ராம். ‘சாதாரணமாக, ஒருவர் நம்மிடம் வந்து தன் பிரச்னைகளைக் கூறிக்கொள்ளும்போது, ‘நான் அவரைவிட உயர்ந்தவன்’ என்ற கர்வம் அடைவது மனித இயல்பு. ஆனாலும், உண்மையான ஆலோசகர்களோ, ‘நானும், நீயும் சமம்தான், நமக்குள் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும்!’ என்ற நம்பிக்கையை அளிப்பவர்கள். இந்தப் பக்குவம் அடைய, பிறர் நம்மிடம் வந்து என்ன பேசினாலும், பேசுபவரின் மனநிலையோடு தானும் ஒன்றிவிடும் திறனை முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்’.

    அவர் பேசப்பேச, என்னுள் ஏதோ அசைந்தது. வாய்வார்த்தையாக இல்லாமல், எப்படி மனப்பூர்வமாக, அனுபவித்துப் பேசுகிறார்! எனக்குமட்டும் ஏன் இவ்வளவு கலகலப்பாக இருக்க முடிவதில்லை?

    வாசகசாலையிலிருந்த அலமாரியின் அருகே சென்று, ஒவ்வொரு புத்தகமாகத் தள்ளித் தள்ளி, எனக்கு வேண்டியதை நான் தேடுகையில், அடுத்த அலமாரியின் அருகே நின்றிருந்த நெடிய உருவம் கண்ணில் பட்டது. அவர் பக்கத்தில் போய் வணக்கம் தெரிவித்துவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

    பதில் வணக்கம் தெரிவித்தபோது, அவர் விறைப்பாக இருந்ததுபோல் தோன்றியது. அவரைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டிருந்தார். என் மனக்கண்ணுக்கு அந்த வட்டம் புலப்பட்டது.

    “டாக்டர் கோசல்ராம்! உங்களிடம் பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

    ஒப்புதலுக்கு அடையாளமாக அவர் தலையசைத்தார்.

    வகுப்பில் வாய் ஓயாமல் பேசவேண்டியிருந்தாலும், பொதுவாக அவர் அதிகம் பேசுவதில்லை, விதவிதமான தலையசைவுதான் அவருடைய மொழி என்று போகப் போகத் தெரிந்துகொண்டேன்.

    “ஒரு ஆலோசகர் தன்னிடம் மனக்கவலையை சொல்லிக்கொள்ள வருபவரின் மனநிலையில் தன்னைப் பொருத்திக் கொள்ளவேண்டும், இதுதான் பாதிக்கப்பட்டவரைப் புரிந்துகொள்ளும் வழி என்றீர்களே, வகுப்பில்?”

    இன்னமும் கேட்க ஊக்கம் அளிக்கும் வகையில், மேலும், கீழுமான தலையசைப்பு.

    “இவர்கள் ஆணும், பெண்ணுமாக இருந்தால்? இருவரது உள்ளங்களும் நெருங்கி விடும் அபாயம் இருக்கிறதே?”

    தலையைச் சாய்த்து, யோசிக்கும் பாவனையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பின் நிதானமாகப் பேசினார் அவர். ‘வார்த்தைகள் என்றால் இவருக்கு அப்படி ஒர் நேசமோ!’ என்று பிரமிக்கத் தூண்டும் வகையில், ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்து, தனித்தனியே, தெளிவாக உச்சரித்தார்: “பேசி முடிந்தபிறகு, அவர்களுக்குள் நடந்த உரையாடலை எழுத்தில் வடித்து, தேதியும் குறித்துக்கொள்ளவேண்டும் ஆலோசகர். இப்படிச் செய்தால், அவர் நினைவிலிருந்து மற்றவரை விலக்க முடியும்”.

    இது நடக்கிற காரியமா!

    என் அவநம்பிக்கையைப் புரிந்துகொண்டதன் அடையாளமாக அவர் கண்ணில் ஒரு மென்மை. “இதையும் மீறி அவர்களுக்கிடையே கவர்ச்சி தோன்றும் பட்சத்தில், அந்தத் தொடர்பை முறித்துக்கொண்டு, வேறு ஆலோசகரிடம் அவரை அனுப்பிவிடவேண்டும்”.

    “நான் கேட்கவந்தது இதுதான்!” என் வாக்கியம் முடிவதற்குள் அவர் அப்பால் நகர்ந்தார்.

    அடேயப்பா! என்ன உயரம்! ஆறடி இருப்பாரா?

    அவர் நடந்துபோவதைக் கவனித்துப் பார்த்தேன். மென்மையான, ஆனால் கம்பீரமான நடை — குரலைப்போலவே. பூமிக்கு வலிக்குமோ என்று அஞ்சுவதுபோல்.

    அவருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டது காலங்கடந்து நினைவுக்கு வர, “தாங்க்ஸ், டாக்டர் ராம்!” என்று கத்தினேன். வாசகசாலையின் நிசப்தமான சூழ்நிலையில் அது நாராசமாக ஒலித்தது.

    சில நாட்களுக்குப் பிறகு, ஒரு வகுப்பறையிலிருந்து இன்னொன்றுக்குப் போகையில், அவரைப் பார்த்தேன். இல்லை, அவரே என்னை முதலில் பார்த்துவிட்டு, “குட் மார்னிங், மிஸ் பிரேமா! எப்படி இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார்.

    எனக்குப் பெருமையாக இருந்தது. என்னை நினைவு வைத்துக்கொண்டிருக்கிறாரே! நான் சட்டென்று நின்றேன். அவரும் நின்றார். மரியாதையைக் கருதி, நாலு வார்த்தை பேசிப் பிரிந்தோம்.

    அதன்பின், அவரை வாரத்தில் ஓரிரு முறை சந்திப்பேன் — வகுப்புக்குப் போகும் வழியில், வகுப்புக்கு வெளியே, இப்படி. வணக்கம் தெரிவித்துக்கொண்டபிறகு, உடனே எந்த விஷயத்தைப்பற்றியாவது மும்முரமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம்.

    யோசித்துப் பார்த்ததில், நான் பேசியதுதான் அதிகம் என்று தோன்றுகிறது. நான் கூறியது எனக்கே தெளிவாக இல்லாதபோது, அதையே அடுத்த கேள்வியாகக் கேட்டு, மேலும் அதைப்பற்றிப் பேச மறைமுகமாகத் தூண்டுவார். ‘இவருக்கு எப்படி நான் எதைப்பற்றிப் பேசத் துடிக்கிறேன் என்று தெரிகிறது!’ என்று நான் வியந்ததுண்டு.

    ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போது, அதனால் எனக்குள் உண்டான ஆழ்ந்த பாதிப்பை என் முகபாவத்திலிருந்து இனம் கண்டுகொண்டிருப்பாரோ? என்னையும் அறியாது, நான் உடலை வளைத்தோ, அல்லது விறைத்தோ நின்று, அதீதமான கையசைவுகளுடன் பேசியதை அவர் மிகமிக உன்னிப்பாகக் கவனித்ததை அறிவேன். அந்த ஒருமுனையான கவனம்தானே என்னை அப்படிப் பேசத் தூண்டியது!

    ‘என்னை இதுவரை யாருமே புரிந்துகொள்ளவில்லையே!’ என்ற ஏக்கம் எனக்கே தெரியாமல் என்னுள் இருந்திருக்கவேண்டும். என்னையே மறந்து, இன்னதுதான் பேசுகிறோம், இதைத்தான் பேசலாம் என்ற வரம்பு இல்லாமல், தோன்றியதை எல்லாம் அவருடன் பேசினேன். (‘ஏன் மனிதர்கள் இப்படிச் சுயநலமிகளாக, பொறாமைக்காரர்களாக இருக்கிறார்கள்?’

    ‘அன்பு எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அது ஏன் பெரும்பாலோர் அதிகாரத்திலும், ஆத்திரத்திலும் திளைத்து, அதிலேயே சுகம் காண்கிறார்கள்?’)

    இப்படி என் எண்ணங்கள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்துகொண்டேன். அத்தருணங்களில், எங்களைச் சுற்றி ஒரு உலகம் இருந்ததை மறந்தேவிட்டோம். கருத்துப் பரிமாறலே முக்கியமாகப்பட்ட நிலையில், எங்கள் குரல் ஒருவருக்கொருவர் கேட்கும் தொலைவில், (நான்கிலிருந்து பத்தடிவரை) நின்றபடி உரையாடினோம். உடல் நெருக்கம் முக்கியமாகப் படவில்லை.

    விடுமுறைக்கு வீடு திரும்பியபோது உற்சாகமாக இருந்தேன். அம்மாவிடம் டாக்டர் கோசல்ராமைப்பற்றிக் கதைகதையாகச் சொன்னேன். அம்மா கவனித்தாளா, இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை.

    “என்ன வயசிருக்கும் அந்த ஆளுக்கு?” என்னைச் சந்தேகமாகப் பார்த்தாள். “பார்க்க அழகா இருப்பானோ?”

    நான் யோசித்தேன். அவர் மீசை வைத்திருந்தாரோ? எவ்வளவு முயன்றும் என் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைமுடி — சுருட்டையா, அடர்த்தியா, இல்லை, வழுக்கையா? அதுவும் தெரியவில்லை.

    எனக்கே என்னைப் பார்த்து வேடிக்கையாக இருந்தது. இவ்வளவுதூரம் பேசி இருக்கிறேனே, பின் என்னதான் என் மனதில் பதிந்தது?

    இரு தீர்க்கமான கண்கள் தோன்றி மறைந்தன.

    என் பயிற்சிக்காலம் முடிவடையும் தறுவாயிலிருந்தது. விடுமுறை கழிந்து, மீண்டும் கல்லூரிக்குப் போனேன்.

    அவரைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. சிரித்தபடி அருகில் ஓடி, “டாக்டர் ராம்! நான் வந்துவிட்டேன்!” என்றேன்.

    அவர் தலையசைத்தார் ஒரு முறை. மெல்ல. மேலும் கீழுமாக. “இன்னும் இரண்டே வாரங்கள்!” அவர் குரலில் புதிதாக ஏதோ கேட்டது. எனக்குப் புரியவில்லை.

    வழக்கம்போல், முதல் வாரம் நான் நிறையப் பேசினேன். அதன்பிறகுதான் எங்கள் நிலை மாறிப்போயிற்று.

    ஒரு நாள், எனக்குப் பேசவே இடைவெளி கொடுக்காது, அரைமணி நேரத்துக்குக் குறையாது, அவரே பேசினார். எப்போதும்போல் தாழ்ந்த குரலில்.

    ஆனால் ஒரு மாற்றம்.

    என் பிரச்னைகளை நான் எந்தவிதமாகத் தவிர்க்கலாம் என்று நயமாக எடுத்துக் கூறும்போது, அவரே நானாகி, அதாவது கோசல்ராம் பிரேமாவாகி, துயரப்படுவதுபோல் பட்டது.

    ஒருவரின் குரல் தென்றலைப்போல் இதமாக மேனியை வருடுவது நடக்கிற காரியமா என்ற பிரமிப்பு தோன்றியது எனக்குள்.

    ஏனோ அம்முறை என்னால் அவருடைய கண்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அடிக்கடி என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். சில சமயம் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டேன். எல்லையில்லா கருணையில் தோய்ந்த அவரது வார்த்தைகளை ஏற்பது அவ்வளவு கடினமாக இருந்தது.

    ஏனென்று தெரியவில்லை, அதன்பின் என்னைச் சந்திப்பதையே அவர் தவிர்ப்பதுபோல் பட்டது.

    ஏதேதோ எண்ணினேன். நான் அவருடைய மணவாழ்க்கையில் குறுக்கிடுவேன் என்று பயந்திருப்பாரோ? நினைக்கவே கூசியது.

    அவருடன் உரக்கப் பேசுவது நான் எனக்குள்ளேயே பேசிக் கொள்வதைப்போல தங்குதடையின்றி இருந்ததே! எந்தப் பெண்ணும் சாதாரணமாகச் சொல்லத் தயங்குவதைக்கூட ஏதோ ஒரு உரிமையில் அவருடன் பகிர்ந்துகொண்டேனே! எப்போதுமே உணர்ச்சிகளைக் காட்டாத அவரது முகம் அப்போதும் நிச்சலனமாக இருந்தாலும், அந்தக் கண்கள் சிரிக்கவில்லை?

    யோசித்துப் பார்த்தேன். நான் என்றுமே அவரிடம் வலியப்போய் பேசியதில்லை. யதேச்சையாக நாங்கள் சந்தித்துக்கொள்ள நேரிட்டபோது, நான் முதலில் வணக்கம் தெரிவிப்பேன். அவரும் தன் கேள்விக்கணைகளை ஆரம்பிப்பார், விட்ட இடத்திலிருந்து.

    இப்போதோ என் வணக்கத்துக்குப் பதிலாக ஒரு லேசான தலையசைப்பைமட்டும் தந்துவிட்டு, நகர்ந்துவிடுபவரிடம் எப்படிப்போய் பேசுவது என்று புரியவில்லை.

    குழம்பிய நிலையில் அவ்வாரத்தை ஓட்டினேன்.

    மறுநாள்தான் கடைசி.

    சூரியன் அஸ்தமனமாகும் வேளையில், தோட்டத்தில் எனக்குப் பரிச்சயமான ஒவ்வொரு மரம், செடி, பூவிடமும் விடைபெற்றுக்கொள்வதுபோல், ஆழ்ந்த கவனத்துடன், நிதானமாக நடந்துகொண்டிருந்தேன்.

    “குட் ஈவினிங், மிஸ் பிரேமா!” பழக்கமான குரல். அந்த நெடிய உருவத்தின் ஆழத்திலிருந்து வந்ததுபோலிருந்தது.

    அதிர்வுடன் திரும்பினேன்.

    அவர்தான்!

    என் கண்கள் அவருடைய கண்களுடன் கலக்க, ஏக்கமோ, வேறு எதுவோ அந்த இரு ஜோடி கண்களிலிருந்தும் வெளியானதை உணர்ந்தேன்.

    எங்கள் நிலை மறந்து, அப்படியே — கண்களின் சங்கமத்தைக் கலைக்க விரும்பாது — நின்றிருந்தோம். இமைக்கவும் துணியவில்லை. நீண்ட நேரம் என்றுதான் தோன்றுகிறது.

    மீண்டும், என் முகத்தை மிகமிக மெதுவாக நான் திருப்பிக் கொள்கையில், என் ரத்த நாளங்களுக்குள் வெம்மையாக ஏதோ ஓடிற்று. மூச்சு வேகமாக வந்து வியர்த்தது. முதன்முறையாக என் வாய் அடைத்துப் போயிற்று.

    அதுதான் எங்கள் கடைசி சந்திப்பு. நான் அப்போது பேசவே இல்லை. ஆனால், அவரைச் சுற்றி இருந்த வட்டம் பெரிதாகி, அதில் நாங்களிருவரும் இருந்தோம்.

    இப்போதெல்லாம் என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று நான் குழம்புவதில்லை.

    ‘காதல்’ என்பது இனம், வயது, மொழி போன்ற எல்லாவிதமான பாகுபாட்டையும் கடந்து, அடிப்படை எண்ண ஒற்றுமையால் பிறப்பது என்று புரிந்தது. எங்கோ வாயு மண்டலத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒலியலையானது இணைக்கும் கம்பிகூட இல்லாது, வீட்டுக்குள் இருக்கும் வானொலிப்பெட்டிவழி கேட்பதில்லையா? அதுபோலத்தான். ஒருவரது மனத்தினடியிலிருந்து எழும் எண்ணங்கள் உடனுக்குடனே அதே அலைவரிசையில் இயங்கும் இன்னொருவரைப் போய்ச் சேர்ந்துவிடமுடியும்.

    ஆனால், அவ்வுணர்வு எங்கோ அபூர்வமாகத்தான் பிறக்கும் என்பது புரிந்துபோயிற்று. அகாலமாகவும்தான்.

    இதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவே வேண்டாமோ! இப்போது கொஞ்சநஞ்சமிருந்த அமைதியும் போய்விட்டது. என் பெயர் எனக்கு விளங்கக் காரணமாக இருந்தவரைச் சந்திக்க வேண்டும் என்று துடித்த மனத்தை அடக்க வழி தெரியவில்லை எனக்கு. நிம்மதி பெற வேறு மார்க்கம் புலப்படாது, கடவுள் படத்தின்முன் அமர்ந்துகொண்டு, கண்ணீர் பெருக்கி விம்முவேன்.

    கோசல்ராம் இருக்குமிடம் தெரிந்தாலும்கூட, அவரை நானாகப் போய் பார்ப்பது சரிதானா?

    ‘இந்த ஆண்பிள்ளையை எனக்குப் பிடிக்காது!’ என்று பெண்ணொருத்தி சொல்லலாம். அதை உலகம் ஏற்கும். அதுவே, ‘இவரைப் பிடித்திருக்கிறது!’ என்று சொன்னால்மட்டும் அதில் என்ன கேவலம்? எனக்குப் புரியத்தான் இல்லை.

    ஓயாது எழும் கேள்விகளுக்கு இடையிடையே நாங்கள் சந்தித்துப் பேசிய ஒவ்வொரு வினாடியும் மனத்தடியிலிருந்து எழுந்து, மேலே வந்து, போயிற்று. திரும்பத் திரும்ப.

    வேடிக்கைதான். அவை நிகழ்ந்தபோது, ‘எவ்வளவு இன்பகரமான உணர்வுகள்!’ என்று ஏன் நான் உணரவில்லை?

    சட்டென ஏதோ தட்டுப்பட்டது.

    தன் உள்ளுணர்வை அவர் எனக்கு முன்பே அறிந்திருக்கவேண்டும். அதுதான் விலகிப் போயிருக்கிறார்!

    இந்த மனம்தான் எப்படி எல்லாம் ஓடுகிறது! அவர் என்னை நினைவில் வைத்திருப்பார் என்பதே என்ன நிச்சயம்?

    அந்த எண்ணமே அதிர்ச்சி தந்தது. ‘மறந்திருக்கக் கூடாதே!’ என்ற பதைப்பு உண்டாகியது. நான்மட்டும் இப்படிப் பைத்தியக்காரியாக உருகுகிறேன், அவர் எப்படி என்னை மறந்திருக்க முடியும் என்று அடித்துக் கேட்டது எதுவோ. அவரும் என்னை நினைத்து நினைத்து ஏங்குவதைக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன்.

    என் சுயநலத்தை எண்ணுகையில், ஒரு சிறு கோபம் தோன்றும். சே, பாவம்! சுறுசுறுப்பாக, பிறர் அமைதிக்காக தன் நேரத்தைச் செலவழிக்கத் தயாராக இருந்த உத்தமர்! அவராவது நிம்மதியோடு, எப்போதும்போலத் தம் வேலையில் ஒன்றி, தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கட்டும்.

    எண்ண ஓட்டத்தில் ஒரு திடீர் தேக்கம். அந்தப் ‘பிறரில்’ என்னைப்போன்ற இளம்பெண் இருந்து, அவளும் அவரது கம்பீரத்திலும், மனிதாபிமானத்திலும் மனதைப் பறிகொடுத்து…!

    என்னையும் அறியாது நான் சிரித்தேன். அன்பு வந்தாலே ஆதிக்கமும் எப்படி வந்துவிடுகிறது! அவர் எந்தப் பெண்ணுடன் எப்படிப் பேசிப் பழகினால் எனக்கென்ன? அவரைக் கட்டுப்படுத்த நான் யார்?

    ‘ஒவ்வொருவருடைய எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் பிரத்தியேகமான காரணங்கள் இருக்கலாம். பிறரை எடைபோடவோ, குறை சொல்லவோ, கட்டுப்படுத்தவோ நாம் யார்?’ என்று ஒரு முறை அவர் என்னுடன் விவாதித்தது ஞாபகம் வந்தது.

    அவருடைய முகம் நினைவில் பதியவில்லையே தவிர, குணங்கள் எனக்கு அத்துப்படியாகி இருந்தன.

    எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் என்னை உள்ளாக்காது, ‘நீ இதைத்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும்’ என்றெல்லாம் கட்டாயப்படுத்தாது, எனக்கும் தனியானதொரு மனம் இருக்கிறது என்பதை மதித்து நடத்தி, என்னையே நான் விரும்பும்படி செய்த முதல் நபர். ஆனால், எனக்கு என்னைவிட அவரைப் பிடிக்கும்.

    ‘இத்தகைய மனிதருடன் பழகவாவது கொடுத்துவைத்ததே!’ என்ற புல்லரிப்பு உண்டாகியது.

    இன்னும் சில நாட்கள் இந்த நிறைவு நிலைத்திருக்கும். மனப் பாதாளத்திலிருந்து நினைவுகள் மீண்டும் மேலெழுந்து என்னை உலுக்கும்வரை.

    Share
  • பழி

    நிர்மலா ராகவன்

    மோகன் ஸார்மேல் எல்லா மாணவிகளுக்குமே ஒரு `இது’.

    விளையாட்டு வீரரானதால், கட்டுமஸ்தான உடல். எல்லாவற்றையுமே விளையாட்டாக எடுத்துக்  கொள்வதுபோன்ற சிரித்த முகம், அன்பு கலந்த கண்டிப்பு, அசாதாரணமான கனிவு… இவை போதாதா ஒருவர்மீது காதல் கொள்ள!

    விளையாட்டுப் பயிற்சிகளால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பிரபாவைத் தேடி வந்தது. அதனால் அத்தனை பேருடைய பொறாமைக்கும் ஆளாகியிருந்ததுபற்றி அவளுக்குக் கொள்ளைப் பெருமை. `நீதான் மாஸ்டரோட செல்லம்!’ என்று அவர்கள் கேலி செய்ததை நம்பி, இரவெல்லாம் கண்விழித்து, ஒரு காதல் கடிதம் எழுதினாளே!

    பதிலுக்கு, அவளிடமே அதைக் கொடுத்து, `இதை நான் பெரிசு படுத்தப் போறதில்லே. இன்னும் ரெண்டு வருஷம் போனா, நீ இப்ப செய்திருக்கிற காரியம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதுன்னு ஒனக்கே புரியும்!’ என்று அமைதி குன்றாது அவர் கூறியபோது, அவள் அடைந்த அவமானம் மறக்குமா! அவமானம் ஆத்திரமாக மாறியது.

    ஆனால், இப்போது, பழி தீர்த்துக்கொள்ள தாய் ஒரு வழி வகுத்தபோது என்னவோ, அவளுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது.  பொய் சொல்லலாமோ?

    `நல்லொழுக்கம்’ என்று பள்ளியில் சொல்லிக் கொடுப்பது பரீட்சைகளில் தேர்ச்சி பெற மட்டும்தானா?

    தன் பக்கத்தில் அமர்ந்து, கவனமாகப் பரிமாறிய தாயை மெல்ல ஏறிட்டாள் பிரபா.

    ஒப்பனையற்ற முகம். பருத்திப் புடவை. `நானும் இருக்கிறேன்,’ என்பதுபோல், கண்ணுக்குத் தெரியாத அளவில் ஒரு பொட்டு.

    “அம்மா..!” பிரபாவின் குரலில் தயக்கம்.

    திருமணமாகாமலே பிறந்த மகள். உண்மை தெரிந்தும், `எப்பவோ நடந்ததைப்பத்தி இப்போ என்ன!’என்று பெரிய மனது காட்டுவதுபோல நடித்து, மணந்தபின், அதையே குத்திக்காட்டி, ஓயாது சந்தேகப்பட்டு வாழ்க்கையை நரகமாக்கிய கணவன். இரு ஆண்டுகளுக்குள்ளேயே திருமண முறிவு.

    `பாவம், அம்மா!’  என்று பரிதாபப்பட்டாள் பிரபா. தான் பிறந்ததால்தானே இப்படி ஒரு அவல வாழ்க்கை! அதற்கு ஈடு செய்ய, அம்மா சொற்படி நடந்தால்தான் என்ன?

    கடந்த ஐந்தாறு வருடங்களாகவே தனக்குக் கண்ணாமூச்சி காட்டியிருந்த பதவி உயர்வு அந்த ஆண்டு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பியிருந்தாள் சீதா. அதற்கேற்ப, கட்டொழுங்கு ஆசிரியையாகவும் ஆக்கப்பட்டிருந்தாள். பள்ளியே அவள் பொறுப்பில்தான் இருந்தது.

    அந்தச் சமயம் பார்த்துத்தானா மோகன் அங்கு மாற்றலாகி வரவேண்டும்! தலைமை ஆசிரியை அவன்பக்கம் சாய்ந்தாள்.

    புதிய மலேசிய சம்பளத் திட்டத்தின்கீழ், பதவி உயர்வு கிடைப்பது தலைமை ஆசிரியையின் சான்றிதழால்தான் என்று பிரபாவுக்குத் தெரியும். அம்மாவின் இந்தக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயம், மோகன் ஸாரால் இப்போது வந்திருக்கிறது. `

    அம்மாவை ஏமாற்றிய இரு ஆண்களினால், பிரபாவுக்கும் அந்த வர்க்கத்தின் மேலேயே துவேஷம் இருந்தது சீதாவுக்குச் சாதகமாகப் போயிற்று. என்ன பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.

    பந்தயத்தில் ஓடியபோது தான் கீழே விழுந்துவிட, மோகன் ஸார் சுளுக்கெடுத்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்த்தது.

    தலைமை ஆசிரியை மிஸ். ராஜசிங்கம் தன்னை அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பது எதற்காக இருக்கும் என்று குழம்பியவனாக அவளுடைய அறையில் நுழைந்த மோகன், தன்னைக் கண்டதும் அவளுடைய முகத்தில் வழக்கமாகக் காணப்படும் புன்னகைக்குப் பதில் கடுமை படர்ந்திருப்பது கண்டு திகைத்தான்.

    “பள்ளி சார்பிலே ஓட்டப் பந்தயத்துக்காக நேத்து மத்தியானம் மூணு பேரை கோலாலம்பூருக்கு — இங்கேயிருந்து ஐம்பது கிலோமீட்டர்– கூட்டிட்டுப் போனீங்க, சரி. மத்த ரெண்டு பெண்களையும் இறக்கி விட்டப்புறம், கார் ரிப்பேருங்கிற சாக்கிலே, நீங்க தகாத முறையிலே நடக்க முயற்சித்ததா பிரபா புகார் பண்ணியிருக்கா”. கோபத்தை உள்ளடக்கிய அந்தக் குற்றச்சாட்டு அவன் முகத்தில், `இது என்ன விந்தை!’ என்ற பாவத்தைத் தோற்றுவித்தது.

    ஏதோ சொல்ல வாயெடுத்தவனை ஒரு கையை உயர்த்தி நிறுத்தினாள் மேலதிகாரி. “அப்படி ஏதும் நடக்கலேன்னு சொல்லப்போறீங்க. அதானே? சாயந்திரம் ஆறுமணிக்கு எல்லாப் போட்டியும் முடிஞ்சிருக்கு. இவளை வீட்டுக்குக் கொண்டு விடறப்போ, மணி பத்துக்குமேல ஆயிடுச்சுன்னு இவங்கம்மா, சீதா டீச்சர், புகார் குடுத்திருக்காங்க. விளையாட்டில தோத்துப்போனதுக்கு ஆறுதல் சொல்றமாதிரி, தோளைச் சுத்தி கை போட்டிருக்கீங்க. ராத்திரி வேளையிலே எங்கெங்கேயோ சுத்திட்டு, தொடையைத் தடவ ஆரம்பிச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நல்லவேளை, அந்த சின்னப் பொண்ணுக்கு ஒங்களைத் தடுக்கற பலமும், தைரியமும் இருந்திருக்கு!”

    மிஸ். ராஜசிங்கத்தின் பக்கத்திலேயே குனிந்த தலையோடு நின்றிருந்த பிரபாவை அதிர்ச்சியுடன் நோக்கினான் மோகன். விழுந்தவுடனேயே தான் கொடுத்த அவசரச் சிகிச்சைக்கு இந்தத் தண்டனையா!

    தற்செயலாக நடந்தவைகளுக்கு வேறுவிதமான பூச்சு கொடுத்து அசிங்கப்படுத்த இவளுக்கு எப்படித் தோன்றியது?

    காரைப் பழுது பார்த்தபின், அவள் வீட்டில் கொண்டுவிடும்போது ஒன்பது மணிக்குள்தானே இருக்கும்!

    “இப்படி ஏதாவது நடக்கக்கூடாதுன்னுதான் எங்க ஸ்கூலிலே ஆண்களையே வேலைக்கு வைக்கக்கூடாதுன்னு இத்தனை வருஷம் கண்டிப்பா இருந்தேன்”. ஐம்பது வயதை எட்டியிருந்தவளுக்கு, அவனைவிட அதிர்ச்சியும், ஆத்திரமும் எழுந்தன. “சே! ஒங்க சிரிப்பையும், போலிப் பணிவையும் பாத்து, நான்கூட இல்லே ஏமாந்துட்டேன்!”

    அந்தக் குளிர்சாதன அறையிலும் வியர்க்க, கரங்கள் தன்னிச்சையாக கழுத்தை இறுக்கியிருந்த டையைத் தளர்த்தப் போயின. இப்போது தான் எது சொன்னாலும் எடுபடப் போவதில்லை என்று புரிந்து, மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டான் மோகன்.

    “நல்லவேளை, சீதா டீச்சருக்கு நம்ப பள்ளிக்கூடத்தோட பேர் கெட்டுடக் கூடாதுங்கிற அக்கறை இருக்கு. அதான் எங்கிட்ட வந்து சொல்லியிருக்காங்க. அவங்க போலீஸ், கோர்ட்டுன்னு போயிருந்தா..? நெனைக்கவே கூசுது. கூடிய சீக்கிரமே ஒங்களை வேற..”.

    “அதுக்கு அவசியம் இருக்காது, மிஸ். ராஜசிங்கம். நாளையோட நானே நின்னுக்கறேன்”. எவரையும் பாராது, அலாதியான அமைதியுடன் அவன் வெளியே நடந்தான்.

    “தப்புப் பண்ணறதுக்கு முந்தி யோசிச்சு இருக்கணும். இப்ப ரோஷப்பட்டு என்ன புண்ணியம்?” என்று முணுமுணுத்து, அந்த இறுக்கமான சூழ்நிலையைச் சமாளிக்கப் பார்த்தாள் மிஸ். ராஜசிங்கம்.

    அதற்குப்பின், பிரபாவுக்கு எதிலும் அக்கறையும், கவனமும் இல்லாமல் போயிற்று. `என்றாவது இவள் சிரித்திருப்பாளா?’ என்று காண்பவரைச் சிந்திக்க வைப்பதுபோல் ஒரு கடுமை அவள் முகத்தில் குடியேறியது. `ஒரு நல்ல மனிதர்மேல் அபாண்டமாகப் பழி சுமத்தி, அவருடைய எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டேனே!’ என்று ஓயாது குமைந்தாள்.

    “ஒனக்கும் பதினெட்டு வயசு ஆகிடுச்சு. நிறைய பேர் கேக்கறாங்க,” என்று தாய் அவளுடைய கல்யாணப்பேச்சை எடுத்தபோது, பிரபாவுக்கு அலற வேண்டும்போல இருந்தது.

    “ஏம்மா? மோகன் ஸார்தான் என்னை ஏற்கெனவே கெடுத்துட்டாரே! மனசறிஞ்சு, இன்னொரு ஆம்பளையோட நான் எப்படிக் குடித்தனம் நடத்த முடியும்?” என்று தெளிவாகக் கேட்டு, அவள் வாயை அடைத்தாள்.

    பதவி உயர்வுக்குப் பதில் சீதாவுக்குக் கிடைத்ததெல்லாம் குறைந்த ஓய்வூதியம்தான்.

    `கெட்டதைப் போதிக்க நாவை உபயோகித்தாயே! இப்போது அவசியமானால்கூடப் பேச முடியவில்லை, பார்!’ என்று, பக்கவாதம் கண்ட தாயைக் குத்திக்காட்ட பிரபாவுக்குத் துடிக்கும்.

    ஆனால், தாயைப் பார்க்கும்போதெல்லாம், `மிஸ்டர் மோகன் ஒன்னைக் கெடுக்கப் பாத்தாருன்னு சொல்லிடு!” என்ற போதனை இப்போதுதான் அவள் சொல்வதுபோல் ஒலிக்க, தன்னையே மன்னிக்க முடியாது, அவளருகே போவதையே தவிர்த்தாள்.

    `வாழ்க்கையில் எதிர்பார்க்க இனி எந்த சுகமும் கிடையாது. இதே இயந்திர கதிதான்!’ என்ற நிதரிசனம் கனத்துப்போகும்போது மனத்தில் வெறுமை சூழும். தையல் இயந்திரத்தோடு இயந்திரமாக இயங்கி வயிற்றுப்பாட்டைக் கவனித்துக்கொண்டதாலோ, என்னவோ, முதுகு வளைந்திருந்தது.

    அன்று கடையில் தைத்துக் கொண்டிருந்தபோது, தெரிந்த குரல் ஒன்று ஒலிக்க, நிமிர்ந்தாள் பிரபா.

    “நீ.. பிரபா இல்லே?” அருகில் வந்தவரைக் கண்டதும் அவளுக்கு வியர்த்துப் போயிற்று.

    ஐயோ! தானிருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடித்தார்?

    பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தன்னை நியாயம் கேட்க வந்திருக்கிறாரா?

    “நான்.. மோகன்!” இயல்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வந்தவர். “இப்போ ஆஸ்திரேலியாவிலே இருக்கேன். அசிஸ்டண்ட் புரொபசர். அப்பவே அங்கே போயிட்டேன், மேல்படிப்புக்கு,” என்று பேசிக்கொண்டே போனவர், “ஆமா? நீ நல்லாப் படிச்சிட்டு இருந்தியே! மேலே படிக்கலே?” என்று கேட்டபோது, அந்தக் கனிவைத் தாங்க முடியாது, பிரபாவின் உதடுகள் துடித்தன.

    அப்போது, “நீ இங்கேயா இருக்கே? ஒன்னை எங்கெல்லாம் தேடறது!” என்று செல்லக் கோபத்துடன் வந்தான் ஒரு வெள்ளைக்காரன்.  உரிமையுடன் மோகனது இடுப்பில் தன் கரத்தைப் படரவிட்டான்.

    “ஓ.கே, பாக்கலாம்,” என்றபடி, அவனுடன் நடந்துபோனார் மோகன் ஸார்.

    அதிர்ந்து போனவளாக, அவர்கள் சென்ற திக்கையே விறைத்தாள் பிரபா. தான் ஒவ்வொரு கணமும் எண்ணிக் கலங்கியதுபோல, அவருடைய வாழ்வு அழிந்து போகவில்லை! தன்னாலோ, ஏன், வேறு எந்தப் பெண்ணாலுமே அவரை மயக்க முடியாது!

    இது புரியாமல், அவரைப் பழி வாங்கவென்று பொய் சொல்லி, அம்மாவை அடியோடு வெறுத்து, இன்னும்..படிப்பை அரைகுறையாக விட்டு..!

    தன் முன்னிருந்த இயந்திரத்தின் மேலேயே தலையைக் கவிழ்த்தபடி, குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் பிரபா, தனது நீண்டகால இழப்புகளை ஈடுகட்ட முடியாதவளாக.

    Share
  • உன்னையறிந்தால் …..! (13)

    நிர்மலா ராகவன்

    அறிவுத்திறன் வளர

    உனையறிந்தால்1-11
    கேள்வி: அரைகுறையான கல்வித்திறனுள்ள குடும்பத்தினர் குழந்தைகளின் அறிவுத்திறன் வளர பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதுமா?

    விளக்கம்: மனிதனின் மூளை கருவிலிருக்கும்போதே வளர ஆரம்பிக்கிறது. நான்கு வயதுக்குள் 80% வளர்ந்துவிடுகிறது.

    கருவிலிருக்கும் குழந்தை எப்படி, எல்லாவிதத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை ஆராய, ஒரு விஞ்ஞானப்பகுதியே இருக்கிறது, FETOLOGY என்ற பெயரில்.

    கருவிற்கு நன்கு அறிமுகமான ஒரு ஒலி தாயின் இருதயத் துடிப்பு. ஆகவே, பயம், அதிர்ச்சி, கோபம் முதலிய எதிர்மறை உணர்ச்சிகளுக்குத் தாய் ஆளாகும்போது, அவளது நாடித் துடிப்பு அதிகரிக்க, கருவும் அதே நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவ்வளவு ஏன், தந்தை தாயுடன் உடலுறவு கொள்ளும்போது வன்முறையைப் பிரயோகித்தால், கருவுக்குள் உண்டாகும் அதிர்ச்சி ஆயுள் பூராவும் அதன் குணத்தைப் பாதிக்கும்.

    வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் இம்மாதிரி, பிறக்குமுன்னரே அதைத் தாயின்வழி தாமும் அனுபவித்திருப்பார்களாம்.

    கதை: அனாதை ஆசிரமத்தில் இருந்த ஒரு குழந்தையை எவ்வளவோ அன்புடன் ஓர் ஏழைத் தாய் வளர்த்தும், குண்டர் கும்பலில் சேர்ந்து, `நான் பிறரைக் கொல்லுமுன் அவர்கள் கண்ணில் தோன்றும் பயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பது!’ என்று என்னிடம் கூற அதிர்ந்தேன். அவன் தாய் அவனை அடித்ததே கிடையாது என்றான். அவனுக்குள் பின் எப்படி இவ்வளவு குரூரமான புத்தி வந்தது என்று யோசித்தேன். `கருவே கதையானால்’ என்ற சிறுகதை பிறந்தது.

    ஒரு குழந்தையின் மூளையும் பிற பாகங்களும் கருவிலேயே வளர ஆரம்பித்து விடுகின்றன. அதாவது, எதையும் புரிந்து கொள்ளக்கூடிய திறன், உணர்வுகள் யாவும் குழந்தை தனி உருப்பெற்று பிறக்குமுன்னரே அதற்கு உண்டு.

    கேட்கும் திறன் இருப்பதால், ஒரு கர்ப்பிணி நிறையப் புத்தகங்கள் படிக்கும்போது, புத்தகத்தின் பக்கங்கள் திருப்பப்படும் ஓசை கருவிற்கும் பழகிப்போவதால் அது விரும்பத்தக்க ஒலியாக ஆகிவிடும்.

    சிறுவருக்கான கதையை தாய் திரும்பத் திரும்ப உரக்கப் படித்தால், அது கருவின் மனதில் படியும். பிறந்தபின், அதே கதை திரும்பப் படிக்கப்படும்போது, குழந்தை அதை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப பால் குடிப்பதை உணர முடியும் என்கிறார் டேவிட் சேம்பர்லின் (1994) என்கிற கரு மனோதத்துவ நிபுணர். வேறு புதிய கதைகளில் இக்குழந்தை ஆர்வம் காட்டுவதில்லையாம்.

    ஆறு மாதங்களாவது தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும். வியாதிகளும் எளிதில் அண்டாது. (பால் அதிகம் சுரக்க, கர்ப்பிணிப்பெண்கள் பூண்டை வதக்கிச் சாப்பிடலாம். அந்த வாசனை பிடிக்காதவர்கள் பாதம்பருப்பை ஊற வைத்து, தோலை நீக்கிச் சாப்பிடலாம்).

    மூளைக்குப் போதிய உந்துதல் கிடைக்காதபோது சிறு குழந்தைகள் அழுதபடி இருப்பார்கள். இது தாயின் கவனத்தைக் கவர, அல்லது பொழுதுபோக. `ஏன் இந்த அசட்டு அழுகை?’ என்று அவர்களைத் திட்டி என்ன பயன்?
    எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதை அவர்களுக்கு விளக்கலாம்.

    கதைகள்: என் பேரனுக்கு இரண்டு மாதங்களாக இருந்தபோது, ஒரு பேரங்காடியில் தள்ளு வண்டியுடன் லிஃப்டுக்காகக் காத்திருந்தேன். புதிய அனுபவம் எவருக்குமே சற்று அச்சத்தை விளைவிக்கும், இல்லையா? அதனால், `இப்போ உள்ளே போகப்போறோம். கொஞ்சம் குலுங்கும். பயப்படாதே!’ என்று கண்ணை மூடிக்கொண்டிருந்த குழந்தையிடம் சொன்னேன்.

    நான் தானே பேசிக்கொள்வதாக நினைத்து ஒருவர் என்னைப் பார்த்தார். பிறகு குழந்தையைப் பார்த்தார். `இதனுடன் என்ன பேசுகிறாய்? பைத்தியமோ?’ என்று என்னை மீண்டும் அருவருப்புடன் கூடிய பார்வை! நான் லட்சியமே செய்யவில்லை.

    வேறொரு முறை நாங்கள் வெளியூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். என் மாப்பிள்ளை தன் எட்டு மாத மகனைத் தூக்கிக்கொண்டிருந்தார். நான் குழந்தையிடம், `நிறைய பேர் அங்கேயே தங்கப்போறா. அதுக்காகத்தான் படுக்கை, பெட்டியெல்லாம் தூக்கிண்டு போறா, பாரு!’ என்று விளக்கினேன். அப்பாவின் கையிலிருந்து என்னிடம் தாவினான் பேரன்.

    குழந்தைக்குப் புரியுமா என்ற சந்தேகமே இருக்கவில்லை. என் குழந்தைகளுடன் அப்படித்தான் பேசினேன். உடனுக்குடனே பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், மூன்று வருடங்கள் கழித்து, பேசும் திறன் வந்ததும், `அன்னிக்கு நீலப்புடவை கட்டிண்டு இருக்கறச்சே சொன்னியே..?’ என்று ஏதாவது சந்தேகம் கேட்பார்கள்.

    எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டிலுள்ளவர்களே அறிவைப் போதிக்க முடியும்? தம் வயதையொத்த பிற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும்போது எளிதில் புரியும், சுவாரசியமாகவம் இருக்கும்.

    ஆணோ, பெண்ணோ, படித்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும், மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் வரும், ஏமாற்றத்தினால் விளையும் அதிருப்தி மற்றும் குற்றங்களைத் தவிர்க்கலாம் என்றெல்லாம் அனேகமாக எல்லா நாடுகளும் இப்போது புரிந்து கொண்டிருக்கின்றன.

    வட அமெரிக்காவில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகள் படிப்பிலும், சமூகத்திலும் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள் என்று இவர்களை முன்னுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஒரு மாநிலம் தாய்மார்களுக்கு ஆங்கிலப் புத்தகங்களை இலவசமாக வழங்கியது.

    எட்டு மாதங்களுக்குப்பின், குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு, தாய்மார்கள் அப்புத்தகங்களைப் புரட்டுவார்கள். (அவர்களுக்கு ஆங்கில மொழி தெரியாது).

    வீட்டிலுள்ள பிறர் என்ன செய்தாலும், அதை அப்படியே பிடித்துக்கொள்ளும் குழந்தை தானும் புத்தகத்தைத் தொடுகிறது. வாயிலும் வைத்துக்கொள்கிறது, அது தின்னத் தகுந்ததுதானா என்று. எதையும் வாயில் போட்டுப்பார்ப்பது குழந்தைகளின் பிறவிக் குணம்! ஓரிரு மாதங்களில் தானே புத்தகத்தைக் கையில் எடுத்து, ஏதாவது ஒரு படத்தையே உற்றுப் பார்க்கிறது.

    இதற்காக, அமெரிக்காவில் `தலையணைப் புத்தகம்’ என்று பருமனாக, துணியால் புத்தகங்கள் செய்கிறார்கள். காகிதத்தைப்போல் எளிதில் கிழியாது. அழுக்கானால் துவைக்கலாம். பூ, பழவகைகள், மிருகக் காட்சிசாலை, குட்டி மிருகங்கள் என்று, குழந்தைகளுக்குப் பிடித்த படங்கள் பெரிய அளவில். அவற்றின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

    படிக்காத பெண்களின் குழந்தைகள்கூட புத்திசாலிகளாக வளர வழிகள் இருக்கையில், படித்த நாமும் ஒவ்வொரு குழந்தையின் திறன்களையும் முழுமையாக வளர்க்க வேண்டாமா?

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் . .. (12)

    நிர்மலா ராகவன்

    மல்லிகையும், தாம்பத்தியமும்

    உனையறிந்தால்1-11

    குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களானாலும் பிரச்னைகள் எழாமல் இருப்பதில்லை. அப்படி ஒன்று இதோ!

    கேள்வி: எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. தினமும் வேலை முடிந்து வருகையில் நான் மல்லிகைச் சரம் வாங்கி வரவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். மல்லிகைப் பூவிற்கும், தாம்பத்தியத்துக்கும் அப்படி என்ன உறவு?

    விளக்கம்: தந்தையோ, தாயோ வேலை நிமித்தம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் போகிறார்கள். திரும்பி வரும்போது, அவர்கள் தின்பண்டமோ, விளையாட்டுச் சாமானோ வாங்கிக்கொண்டு வந்தால் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தான் அருகில் இல்லாதபோதும், தன்னைப்பற்றிய நினைவு வைத்திருக்கிறார்களே!

    இதேபோல்தான் ஒரு பெண்ணும். கணவன் அலுவலகத்தில் பல பெண்களுடன் பழகக்கூடும். இருந்தாலும், தன் நினைவாகவே இருந்திருக்கிறார் என்ற அற்ப ஆறுதல்.

    இத்தகைய பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் என்றே தோன்றுகிறது. கணவன்மேல் ஒருவித ஆக்கிரமிப்பு.

    என் உறவினர் பெண் வேறு மாதிரி சொன்னாள். எப்பொழுதாவது கணவர் மல்லிகைச் சரம் வாங்கி வந்தால், அன்று அவளை நாடுகிறார் என்று அர்த்தமாம். வாய்விட்டுச் சொல்ல முடியாததை குறிப்பால் உணர்த்துகிறாராம்!

    இந்திப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும், நடனப் பெண்கள் இருக்குமிடத்தில் உட்கார்ந்திருக்கும் வில்லன் தன் கரத்தில் மல்லிகைச் சரம் சுற்றியிருப்பான். அடிக்கடி அதை முகர்ந்து பார்த்துக்கொள்வான். ஒரு இயந்திரியத்தைத் தன் வசப்படுத்தினால், மற்றவைகளும் நன்கு செயல்படும் என்று காட்ட எண்ணினார்களோ பட இயக்குனர்கள்?! (சிலருக்கோ, மல்லிகையின் நறுமணம் தலைவலி உண்டாக்குகிறதே?)

    தாம்பத்தியமே சிக்கல்தான்.

    கதை 1; ஒரு நண்பர், `உங்களிடம் ஒரு விஷயம் கேக்கணுமே!’ என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்.
    அவருடைய நண்பர் ஒருவர் வருத்தமாக இருந்தாராம். நண்பர்கள் சிலர் என்ன ஆயிற்று என்று கேட்க, மனைவிக்கு தாம்பத்திய சுகத்தில் விருப்பம் போய்விட்டது என்றார்.

    நான்: `உங்கள் நண்பருக்கு என்ன வயது? `நாற்பத்து ஐந்து!’
    நண்பர்களெல்லாம் தமக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்று அஞ்சியவர்களாய், ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, `கொஞ்சம் அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கிப்போ!’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

    மகிழ்ச்சியுடன் போனவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிட்டார், முகத்தைத் தொங்கப் போட்டபடி.
    `ஏங்க பொண்ணுங்க இப்படி, புரிஞ்சுக்க முடியாதபடி, இருக்காங்க?’ என்று என் நண்பர் என்னைக் கேட்டார்.

    எல்லாப் பெண்களையும் புகழ்ச்சியாலோ, பரிசுப்பொருட்களாலோ வழிக்குக்கொண்டுவர (வீழ்த்திவிட?) முடியாது.

    நாற்பதுக்கு மேல் ஆன பெண்ணிற்கு உடல் உபாதைகள் இருக்கலாம். பெண் மருத்துவரைப் பார்த்தால் விளங்கும். இல்லை, கணவன்மேல் ஏதாவது மனத்தாங்கலாக இருக்கலாம்.

    கதை 2: கணவன் தமிழ்ப்படங்களில் `கவர்ச்சி நடனம்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளில் பெண்கள், ஆண்கள் மனத்தைத் தூண்டவேபோல் இடுப்பையும், மார்பையும் ஆட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டுத் தன் அருகில் வருகிறார். அது தனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று வலிய வந்து என்னிடம் சொன்னார் ஒரு மாது. `விரதம்,’ என்ற சாக்கில், தனியே பாயில் உறங்குவாராம்.

    கணவன் மனைவிக்குள் எந்த காரணத்திலாவது இடைவெளி ஏற்பட்டால், வெளிப்படையாகப் பேசுவதுதான் ஒரே வழி. நிறைய கத்தலும், அழுகையும் தவிர்க்க முடியாதது. ஆனால், பலன் கிடைக்கும்.

    கதை 3: கணவன் தன்னை நெருங்குவதைத் தவிர்த்தாள் அந்த இளம்பெண். ஓயாமல் குற்றம் கண்டுபிடிப்பவன் தன்மேல் இன்னும் அதிகமாகக் குற்றம் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம்தான் அவளுக்கு.

    `இரவு எட்டு மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிடுகிறாள்!’ என்று அக்கணவன் என்னிடம் குறைபட்டுக்கொண்டான். `ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்று அடிக்கடி மனைவியை மிரட்டுவதாகவும் சொன்னான்.

    இருவருக்குமே நிம்மதி இல்லை. இத்தனைக்கும், காதல் திருமணம்!
    அப்பெண் பாலியல் வதைக்கு ஆளானவள். ஆண்கள் என்றாலே ஒருவித மிரட்சி. இதைக் கணவரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள்.

    கணவனும் அடிக்கடி, அவளை `முட்டாள்,’ என்று பழிப்பதைக் கண்டேன், அவர்கள் இல்லத்தில் சில தினங்கள் தங்கியிருந்தபோது.

    ஏற்கெனவே தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று உள்ளுக்குள் புழுங்குகிறவள்! அவளை இன்னும் மட்டம் தட்டினால்?

    பழியை அவன்மீது திருப்பினேன். வேண்டுமென்றே அவளுக்குப் புரியாத விதத்தில், பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்து ஆங்கிலம் பேசுவது, பழிப்பது எல்லாவற்றையும் சுட்டிக் காட்டினேன்.
    அவனுக்கு என்மேல் காட்டம். தான் ரொம்ப உயர்ந்தவன் என்பதுபோல் மனைவியை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவன், அல்லவா?

    ஆனாலும் அவன் தன்னை மாற்றிக்கொண்டான். அடுத்த ஆண்டே, தனக்குக் குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தாள் அப்பெண்.

    அவன் மல்லிகைப்பூ வாங்கி வந்து அவளை மயக்கினானா என்று தெரியவில்லை. எது எப்படியோ, தளர்நடை போட்டுக்கொண்டிருந்த தாம்பத்தியம் வலுவாயிற்று.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …… 11

    நிர்மலா ராகவன்

    காதுகொடுத்துக் கேளுங்கள்

    உனையறிந்தால்1-1

     

    கேள்வி: : இடைநிலைப் பள்ளியில் பயிலும் சிலரை வீட்டிலோ, பள்ளியிலோ அடக்கவே முடிவதில்லை, ஏன்?

    விளக்கம்: வீட்டில் புரிந்துணர்வு இல்லாது, தண்டனை மட்டுமிருந்தால், எழும் ஆத்திரத்தை ஆசிரியர்களிடம் காட்டுவார்கள். அல்லது, சுந்திரம்’ என்ற பெயரில், சிறுவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துப்போவது.

    பொதுவாக மத்திம வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலேயே மரியாதை, ஒழுக்கம் என்று தகுந்த குணங்களைப் பழக்கி இருப்பார்கள். பெற்றோரிடம் அன்பு செலுத்தும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களிடமும் அதேபோல் அன்பைச் செலுத்த முடியும்.அதனால் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது எளிது. ஆசிரியர்களுக்கும் அவர்களைப் பிடித்துப்போகும்.

    மாணவர்களும், ஆசிரியர்களும் வெவ்வேறு சமூக நிலைகளிலிருந்து வந்தவர்களாக இருந்தால், பிரச்னைகள் முளைக்கும். பல்லின நாடாக இருந்தால், பிறரின் கலாசாரம் புரியாது போகலாம். தன் கோணத்திலேயே ஒரு ஆசிரியர் அவர்களைக் கணித்தால், அவர்களது போக்கு எப்படிப் புரியும்? எரிச்சலும், ஆத்திரமும்தான் எழும்.

    கதை 1:

    நான் வேலை பார்த்த பள்ளியில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இந்திய (தமிழ்) மாணவர்களே இருந்தார்கள். `கவுன்செலிங்’ என்ற பெயரில் அவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் வேலை ஒரு மலாய் ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

    வயதில் மூத்தவர்கள் ஏதாவது கேட்டால், அவர்கள் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தமிழ் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. இது புரியாது, எதற்காவது தான் திட்டும்போது அவர்கள் தன்னையே பார்த்தால், `என்ன முறைக்கிறே?’ என்று அவர்களை மூன்று நாட்கள் பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் (சஸ்பெண்ட்) செய்துவிடுவார்.
    தமிழர்கள்தாம் மிக அதிகமாக தண்டிக்கப்படுகிறார்கள் என்றறிந்து, நான் அவடம் நியாயம் கேட்டேன்.

    `எனக்கு அவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, CIKGU (செகூ. மலாய் மொழியில் ஆசிரியை). இனி நீங்களே அவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள்!’ என்று பொறுப்பைத் தட்டிக்கழித்தார்.

    அடுத்த நாளே நான்கு பேர் என்னிடம் அனுப்பப்பட்டனர்.

    `கவுன்செலிங்கா?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள், தயக்கத்துடன். மணிக்கணக்காக குற்றம் சாட்டி, புத்தி சொன்னால் யாரால்தான் தாங்க முடியும்! அந்த பயம்தான் அவர்களுக்கு!

    கவுன்செலிங்குக்கு வரும் எந்த மாணவரும் தானே விரும்பி வருவதில்லை. பள்ளி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய `குற்றம்’ செய்துவிட்டால், கவுன்செலிங் ஆசிரியரிடம் அனுப்புவார்கள்.

    அவரோ, அவர்களது இனம், மதம், கலாசாரம் என்று எல்லாவற்றையும் அலசி, அவர்களைச் சிறுமைப்படுத்துவார். எந்த மதம், எந்த இனம் என்றெல்லாம் கணக்கில்லை. எல்லாவற்றிற்கும் இவைகளிலிருந்து மேற்கோள் காட்டுவார்.

    அதிகாரம் செலுத்துவதே இன்பமானதாக, சுயபலத்தைக் கூட்டுவதாக இருக்க, `ஆலோசனை’ என்ற பெயரில் தான் சொல்வதால் மாணவர்கள் பயனடைவார்களா என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது.

    `அவர்களை அழ வைக்கவேண்டும். அதன்பின், நமக்குத்தான் வெற்றி!’ என்று உதவித் தலைமை ஆசிரியை என்னிடம் சொல்ல, அதிர்ந்து போனேன். (இரு காதணிகள் அணிந்து இருந்ததால், ஒரு பெண்ணைப் பலர் சூழ்ந்துகொண்டு, `இது நமது மதத்திற்கு விரோதம்!’ என்று ஒரு மணிக்குமேல் திரும்பத் திரும்பக் கூற, தாக்குப்பிடிக்க முடியாது கதறினாள்).
    என்னிடம் வந்த மாணவர்கள் தயங்கியதில் என்ன ஆச்சரியம்!

    ஒரு காலி அறையில் எங்கள் உரையாடல் நடந்தது. தமிழில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் முகங்கள் சற்றே தெளிந்தன. `நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்கள் பேசுங்கள். நான் கேட்கிறேன்,’ என்றேன்.

    மெள்ள மெள்ள, அவர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நடுவில் ஒருவன், `அக்கா,’ என்று அழைத்துவிட்டு, மன்னிப்புக் கேட்டான்! அவர்கள் பிரச்னையைக் கேட்டு நான் சிரிக்காத குறை! ஆனால், அவர்கள் வயதில் அது பெரிது.

    பள்ளி வாசலிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தானாம். அதைப் பார்த்த இன்னொருவன், `GIRL FRIEND-ஆ ?’ என்று கேலியாகக் கேட்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிவிட்டது: `ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாமா, இல்லே, கூட ஆள் சேர்த்துக்கிட்டு வர்றியா?’
    நாள் குறிக்கப்பட்டது.

    இவர்கள் கட்சியை பலப்படுத்த, வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களும் கைச்சண்டையில் சேர்ந்துகொண்டனர்.
    நான் தலையில் கைவைத்துக்கொண்டேன். `உங்களுக்கெல்லாம் என்னப்பா, தமிழ்ப்பட ஹீரோன்னு நினைப்பா?’
    பெருமையுடன் புன்னகைத்தார்கள்.

    `ஹீரோ சண்டை போட்டா, எட்டு இலக்கத்தில பணம் சம்பாதிக்க முடியும். நீங்க அவங்களைமாதிரி நடந்தா, மாட்டிப்பீங்க!’
    அதன்பின், பொதுப்படையாகப் பேசினேன் — கல்வியின் முக்கியத்துவம், சமூக, பொருளாதார நிலையைக் கல்வியால் எப்படி உயர்த்த முடியும் என்று. `ஒங்க இளமையை ஏன் இப்படி வீணாக்கிறீங்க!’ என்று நான் அயர்ந்தபோது, என் முகத்திலிருந்த சோகம் அவர்களிடமும் பிரதிபலித்தது.

    அதன்பின், பிற ஆசிரியர்கள் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதைப்பற்றி, வகுப்பில் எது காணாமல் போனாலும், அவர்கள் புத்தகப்பைகளைச் சோதனை போடுவது என்று பல தகவல்களை நான் கேளாமலே என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

    அவர்களது பெற்றோர் பள்ளியில் தம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், படிப்பின் முக்கியத்துவம் எதுபற்றியும் கலந்து பேசுவதில்லை என்றும் கேட்டறிந்தேன்.

    விடைபெற்றபோது, அவர்கள் முகத்தில் நிம்மதி கலந்த சிரிப்பு. நான் திட்டவில்லை, உபதேசம் செய்யவுமில்லை. அவர்களைப் பாதித்த விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டேன். அவ்வளவுதான்.

    அதன்பின், அவர்களின் நடத்தையில் நல்ல மாறுதல் தெரிந்தது. நான் எங்காவது போய்க்கொண்டிருந்தால், ஓடி வந்து வணக்கம் தெரிவிப்பார்கள். சில சமயம் நான் முதலில் வணக்கம் தெரிவித்து, அவர்களுடைய ஆச்சரியத்துக்கு அடிகோலி இருக்கிறேன்.

    `நல்லாப் படிக்கிறீங்களா? பள்ளி இறுதியாண்டு பரீட்சையில என்ன வாங்குவீங்க?’ என்று நான் சிரிப்புடன் கேட்டபோது, ஒரு மாணவன் செல்லமாக முறைத்தான்.` ஃபர்ஸ்ட் கிளாஸ்தான்!’
    கதை 2 : இன்னொரு பள்ளி, மாணவ மாணவிகள் தாமே ஓர் ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தம் மனக்குறைகளை வெளியிடலாம் என்று அறிவித்தது.

    ஒரு மாணவி தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதால் குடும்பம் படும் கஷ்டங்களைக் கூறினாள். (முதலில் தாயின் அனுமதி பெற்றிருந்தாள் இந்த மலாய் மாணவி).

    எல்லா வகுப்புகளிலும் அடங்காத வேற்றின மாணவன் ஒருவன் தானே வலிய வந்து, அதே போன்ற கதையைச் சொன்னான். அதற்குள் எனக்கு அக்கலாசாரம் பழகிவிட்டிருந்தது.

    `அப்பா இன்னொரு பொண்ணோட உறவு வெச்சுக்கிட்டிருந்தா, அது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே இருக்கிற பிரச்னை. நீ உருப்படற வழியைப் பாரு!’ என்றேன். `நாளைக்கே கல்யாணமானா, எப்படியோ குழந்தை பிறக்கும். (பதின்ம வயது மாணவர்களுக்கு மிகவும் பிடித்த வாக்கியம் இது!) மனைவியோட சினிமாவுக்குப் போக, டாக்டருக்குப் போக, எல்லாத்துக்கும் பணம் வேண்டாம்? படிச்சாதானே நிறைய காசு சம்பாதிக்கலாம்?’

    இந்த மாணவன் அடிக்கடி என்னுடன் வந்து பேசிவிட்டுப் போனான். என் பாடமாகிய பௌதிகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற முடியவில்லையே என்று வருந்தி அழுதான். (`விடு! நானே நல்ல விதமாக பாசாகி இருக்க மாட்டேன்!’ என நான் ஆறுதல் அளிக்க, அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது).

    அந்த ஆண்டின் இறுதியில், `என்னை மரியாதையுடன் நடத்திய ஒரே நபர் நீங்கள்தான்!’ என்ன்று சொல்லிவிட்டுப் போனான்.

    பல மாணவ மாணவிகள் தயங்காது என்னிடம் வந்ததற்குக் காரணம் நான் என்னை அவர்கள் நிலையில் பொருத்திப் பார்த்ததால்தான் (EMPATHY) என்று நினைக்கிறேன்.

    `அந்த இந்திய ஆசிரியைகிட்ட என்ன ஓயாம பேச்சு? எதுவாக இருந்தாலும், என்கிட்ட வந்து சொல்லேன்!’ என்று ஓர் ஆசிரியை அழைத்ததாகச் சொல்லி, `அவங்ககிட்ட யார் போவாங்க! ஏதாவது சொன்னா, பள்ளிக்கூடம் பூராவும் டமாரம் அடிச்சுடுவாங்க!’ என்று கசப்புடன் தெரிவித்தாள் இன்னொரு மலாய்ப் பெண். நான் வேற்றினமாக இருந்தது அவளைப் பாதிக்கவில்லை. தான் அந்தரங்கமாகச் சொல்வது ரகசியமாகவே வைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

    நாம் ஒரு நாட்டுக்குப் போவதற்குமுன், அவர்களுடைய கலாசாரத்தைப்பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும். இல்லையா? அதே போல், ஆசிரியர்கள் தம் பொறுப்பில் இருக்கும் மாணவர்களின் பின்னணிபற்றியும் தெரிந்திருக்க வேண்டுவது அவசியம்.

    ஆசிரியப் பயிற்சியின்போது சொல்லிக் கொடுப்பது பரீட்சை எழுத மட்டுமில்ல. அதை நடைமுறையிலும் கடைப்பிடித்தால்தான் ஆசிரியர், மாணவர் இரு சாராருக்குமே நிறைவு, நீண்டகால நன்மை.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் … (10)

    நிர்மலா ராகவன்

    சமர்த்தா, கர்வியா?

    உனையறிந்தால்1 (1)

    கேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே?’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி? கர்வமா?

    விளக்கம்: கர்வத்தால் இல்லை. தன் நல்ல குணத்தைத் தானே உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சி அது.

    குழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்க்க முடியாது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். `நீ எவ்வளவு சமர்த்து!’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான்.

    சிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, `உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்!’ என்று திட்டுவார்கள். தனக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று குழந்தையின் மனம் நொந்துவிடும்.

    பெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும்? பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் `வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது?

    குழந்தைகளைப் புகழ எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!

    குளித்துவிட்டு வரும்போது, `பளபளன்னு இருக்கியே!’ சாப்பிட்டு முடித்தவுடன், `தொப்பை அழகா, குண்டா இருக்கே!’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், `யாரிது! அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே!’ — இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும்.

    சிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள்.

    `பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்!’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

    அதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி.
    இது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பாவம்!

    நாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

    துணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன்.

    கதை: அப்போது எனக்குப் பதினான்கு வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பேர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை.

    `எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்!’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், `நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லிற்றா?’ என்று ஏசுவார்.

    நான் ஒரு முறை துணிந்து, `எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன்.

    எனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச் சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது.

    வகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை! இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?

    ஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார். அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை கணக்கில் சந்தேகம் கேட்க அவரை நாடினேன். நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதித்தேன். வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை!

    அன்று கற்ற பாடம், தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல என்பதே. தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. `எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்!’ என்று கேட்பதில் என்ன வெட்கம்?

    சிறு குழந்தைகளுக்கு இயற்கையாகவே இது தெரியும். தூங்கப் போகுமுன் ஒரு கதை சொன்னால், தினமும் அதேதான் வேண்டும் என்பார்கள். திரும்பத் திரும்ப ஒரே கதையைக் கேட்டாலோ, அல்லது படித்தாலோ ஞாபக சக்தி அதிகரிக்குமாம். இது புரியாமல், `மந்தம்!’ என்று அவர்களைப் பழித்தால், யாருக்கு புத்தி மட்டு?

    சில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். `என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா?’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். ஆனால், `எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். (அடிக்கடி அல்ல!) அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் … (9)

    நிர்மலா ராகவன்

    வாழ்வின் மறுபக்கம்

    உனையறிந்தால்

    கேள்வி: தந்தையை இழந்து நிற்கும் ஒரு சிறுவனுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது?

    விளக்கம்: பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தால், தன் நண்பன் இறந்துவிட்டான் என்பதைக் கேட்டு அதிர மாட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்வும், சாவும் இரவு, பகல் போலத்தான். ஒன்று மாற்றி ஒன்று வந்தே தீரும். `நேத்திக்குத்தானே செத்துப்போனான்? இன்னிக்கு ஏன் ஸ்கூலுக்கு வரலே?’ என்று அப்பாவித்தனமாகக் கேட்பான்.
    அப்படிப்பட்ட குழந்தையிடம் `மரணம்’ என்றால் என்னவென்று விளக்க வேண்டுவது அவசியம்.

    `தாத்தா செத்தா ஏன் எல்லாரும் அழறா? ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போங்களேன்!’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் என் மகன். மூன்றே வயதே ஆகியிருந்ததில், மரணத்துக்கும், நோய்க்கும் வித்தியாசம் புரியவில்லை.

    தெருவில் விரைந்த கார்களினால் நசுக்கப்பட்டு, உருத்தெரியாது கிடக்கும் தவளையை சசிக்கு இப்படி அறிமுகப்படுத்தினேன்: `இந்த தவளை செத்துப்போச்சு. தாத்தா மாதிரி. நடக்க முடியாது — கால் இல்லே..,’ என்ற ரீதியில் ஆரம்பித்தேன்.
    நாளடைவில், அவனுக்கு அது ஒரு விளையாட்டாய் ஆயிற்று. `FROG செத்துப்போச்சு. பாக்க முடியாது — கண் இல்லே, நடக்க முடியாது, பேச முடியாது, காது கேக்காது’ என்று ஒப்பிப்பான். மரண பயம் போயிற்று. அந்த ஆண்டே தான் சாகப்போகிறோம் என்று தெரிந்திருந்தது சசிக்கு.

    கதை: எனக்குத் தெரிந்த ஒருவர் எதிர்பாராவிதமாக (தூக்கத்திலேயே, 34 வயதில்) இறந்தபோது, அவரது ஒரே மகனுக்கு எட்டு வயது. அவர்களிடையே இறுகிய பிணைப்பு இருந்தது. இயந்திர கதியில் தந்தைக்கான ஈமச்சடங்குகளைச் செய்தாலும், மரணம் என்றால் என்னவென்று சரியாகப் புரியாத பருவம்.
    முப்பது பிராயம்கூட நிரம்பாத தாயுடன், வீட்டுக்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் அழுது புலம்பியதைக் கண்ட பையனுக்கு ஒன்றுதான் புரிந்தது: இனி தான்தான் வீட்டில் ஆண்பிள்ளை. அம்மாவைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பாவை இனி பார்க்கவோ, பேசவோ முடியாது! நிதரிசனம் வருத்தமளிப்பதாக இருந்தாலும், அழுதால், அம்மாவின் துக்கம் அதிகரிக்கும் என்றெல்லாம் தோன்றிப் போயிற்று.

    அடுத்த பத்து வருடங்கள் அவன் மிக பொறுப்பாக நடந்துகொண்டு, கல்வியிலும் சிறந்து, தாய்க்கு மகிழ்ச்சியூட்டப் பார்த்தான். ஆனால் அவளோ! `இப்போதெல்லாம் என் மகன் யார்கூடவும் பேசறதே இல்லே!’ என்று ரகசியக் குரலில் தெரிந்தவர்களிடமெல்லாம் எடுத்த எடுப்பிலேயே சொல்லிப் புலம்புவாள்.

    உற்றாரின் சாவு தன்னைப் பாதிக்கவில்லை என்பதுபோல் காட்டிக்கொள்பவன், தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். அவனுடைய வளர்ச்சியில் ஏதோ ஒரு குறை ஏற்பட்டு விடுகிறது. `துக்கம்’ என்றிருந்தால், அழுதுதான் தீர்க்க வேண்டும். வேறு வழியே கிடையாது.

    சில சிறுவர்கள் துக்கத்தை கோபத்தின்மூலம் வெளிப்படுத்துவார்கள். கோபம் — தம்மை இப்படி நிராதரவாக விட்டுவிட்டுப் போனவர்மேல்; தம்மீதும், பிறர் மீதும் — அந்த மரணத்தைத் தடுக்கத் தெரியாத குற்றத்துக்காக. `எனக்கு ஒரு பாதிப்பும் இல்லையே!’ என்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். ஆனால், உள்ளுக்குள் சொல்லத் தெரியாத உணர்வுகளுடன் குமைவார்கள்.

    நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால், `ஒங்கப்பா போயிட்டார்’ என்று ஒரு குழந்தையிடம் மொட்டையாகக் கூறுவது சரியல்ல. எதனால் இறந்தார், உடலை எங்கே கொண்டு போனார்கள், என்ன செய்தார்கள் — இப்படி விரிவாக. இல்லாவிட்டால், துக்கமும், குழப்பமும் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள் கவுன்செலர்கள்.

    குழந்தைகளோ, பெரியவர்களோ, மரணம் ஒருவரை ஆட்டுவிக்கும் விதமே தனி.

    கதை:என் பக்கத்து வீட்டில் குடியிருந்த நூருல் (உண்மைப் பெயரில்லை) என்ற மலாய் பெண்மணி தன் சோகக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள்.
    அவளுடைய ஒரே மகன் பத்து வயதாக இருந்தபோது, ஏதோ நோய் கண்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். நூருல் கூடவே இருந்தாள்.

    ஆனால், அவள் அருகில் இல்லாத சமயம், அவன் உயிர் பிரிந்துவிட, அவளிடமிருந்து மகனுடைய மரணம் மறைக்கப்பட்டது. ஏற்கெனவே இருதயம் பலகீனமாயிருந்தவளுக்கு ஏதேதோ மருந்து கொடுத்துத் தூக்கத்திலேயே ஆழ்த்திவிட்டார்கள் — அவளால் அந்த துக்கத்தைத் தாங்க முடியாது என்றெண்ணிய குடும்பத்தினர்.

    நூருல் கண்விழித்தபோது, மகனின் உடல்கூட இல்லை. அவனை இனி என்றுமே பார்க்க முடியாது என்ற செய்திதான் கிடைத்தது. அந்த அதிர்ச்சி தாங்கமுடியாது, பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப்பற்றிப் பேசுவாள். பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும், அவளுடைய மகனைப்பற்றி யாராவது பேச்செடுத்தாலே கதறி அழுவாளாம்.

    அவளுடைய குடும்பத்தினர் இதைத் தலைக்குனிவெனக் கருதினர். அவளுடைய மகள், `என் தம்பியைப்பத்தி ஒங்ககிட்ட சொல்லிப் புலம்பி இருப்பாங்களே! எங்கம்மாவுக்குப் பைத்தியம், ஆன்ட்டி!’ என்று முகத்தைச் சுளித்தபடி என்னிடம் கூறினாள். அந்த இளம்பெண்ணுக்குப் புரியவில்லை ஒரு தாயின் மனம். (நீரில் மூழ்கிவிட்ட என் மகனுடைய உடலைக் கட்டிக்கொண்டு அவள் கதறியபோது எனக்குப் புரிந்தது — அவ்வளவு காலமாக வெளிவராத துக்கம் இப்போது அவள் நேசித்த இன்னொரு சிறுவனது மரணத்தில் பீறிட்டுக் கிளம்புகிறது என்று).

    “ஒரு குழந்தையோ, தாயோ இறந்தால் பெரியவர்கள் எப்படி அதைத் தாங்கிக்கொள்ள இயலும்?” (என்னை நன்றாகக்கூடத் தெரியாத சிலர் நேரில் என்னிடம் கேட்ட கேள்வி இது).

    நான்: இறந்த நபருடன் நீங்கள் ஒன்றாக இருந்திருப்பீர்கள். அதில் எந்த தருணத்தில் அவரது இழப்பை பெரிதும் உணர்கிறீர்கள்?

    கூடவே இருந்த தாயை இழந்த மாது : நானும், அம்மாவும் பால்கனியில் உட்கார்ந்து ஒன்றாகப் பேசிக்கொண்டு டீ குடிப்போம். இப்போது தனியாக இருந்தால், அழுகை வருகிறது.

    நான்: எப்போதும்போல இரண்டு கப் டீ போட்டு, `அம்மா! இது உங்களுக்கு,’ என்று சொல்லுங்கள். அம்மா எதிரில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அன்று நடந்ததில் உஙகளைப் பாதித்ததை வழக்கம்போல் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். பிறகு டீயைக் கீழே கொட்டிவிடலாம். சில நாட்கள் இப்படிச் செய்தால், மனம் சற்று லேசாகிவிடும்.

    சிலர் பார்க்குமிடங்களில் எல்லாம் இளமையில் எதிர்பாராவிதமாக மாண்டவரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். பார்ப்பவர்கள், `யாரிது? என்று கேட்க, கடந்தவைகளை ஒரு விவரம் குறையாமல் கூற, துக்கம் மீண்டும் மீண்டும் மேலெழுமே!

    துக்கத்தைத் தாளமுடியாது போனால், நெருங்கிய உறவினர்களிடம், நாம் சொல்வதை அப்படியே புரிந்துகொள்ளக்கூடிய நண்பர்களிடம் மாண்டவரைப்பற்றிப் பேசுவது அவசியம். பேசும்போது கண்ணீர் பெருகினாலும், ஆறுதல் அளிக்கும் வழி இது.

    `எந்த துக்கமும் ஒன்றரை வருடங்களுக்குமேல் இருக்காது. தானே கதையாகிடும்,’ என்றார் என் தாய், எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்.

    நான் ஒப்ப மாட்டேன். மனத்தடியில் ஒரு பொறி இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதாவது நினைவு எழும்போது, துக்கமும் கிளர்ந்து எழும்– காலமெல்லாம்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் (8)

    நிர்மலா ராகவன்

    தெரியக்கூடாத  இரகசியங்களல்ல

    உனையறிந்தால்

    மூன்று வயதுவரை ஆடையின்றி வீட்டுக்குள் ஓடியாடிக் கொண்டிருந்த பையனுக்கு மழலையர் பள்ளிக்குப் போனதும் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. `பெண்கள் ஏன் தனி டாய்லெட்டுக்குப் போகிறார்கள்?’

    டிராயரைச் சரியாகப் போட்டுக்கொள்ளத் தெரியாமல் அவன் வெளியே வர, `ஷேம், ஷேம்!’ என்று அவனையொத்த பிற மாணவர்கள் இணைந்து பாட, குழப்பம் அதிகரித்தது.

    விரைவில், அவனும் அவர்களைப்போல நடக்கக் கற்றான். வீட்டில் குட்டித் தம்பிக்கு அம்மா டயாபர் மாற்றும்போது, `ஷேம், ஷேம்!’ என்று சொல்லிச் சிரித்தான்.

    தன்னைப்போலவே பிறருக்கும் கண், காது எல்லாம் இருக்கின்றன என்றவரை அவனுக்குப் புரிந்தது. அம்மாவுக்கும் `ஷேம் ஷேம்’ இருக்குமோ?

    அன்று அம்மா குளிக்கப் போகையில், `நான் ஒன் ஷேமைப் பாக்கணும்,’ என்றபடி, தானும் உள்ளே நுழையப்போனான்.
    `இந்த வயசிலேயே கெட்டுப் போயிட்டியா?’ என்று அம்மா கண்டபடி திட்டியிருந்தால், அந்த நிகழ்ச்சி அவன் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து, ஏதாவது பிரச்சனையில் கொண்டுவிட்டிருக்கலாம். அவளோ, அவனை மெல்லத் தள்ளிவிட்டு, கதவைச் சாத்திக்கொண்டாள். பின்பு, அப்போதுதான் குளித்திருந்த ஒரு பெண் குழந்தையின் நிர்வாணமான உடலைக் காட்டி, `இது பொண்ணு. நீ பையன்!’ என்று விளக்க, அவன் வாயை மூடியபடிச் சிரித்தான். அந்த வயதில் புதிய அனுபவங்கள் எல்லாமே வேடிக்கை.

    பெரியவர்களுக்கு மட்டும் மார்பகம் ஏன் பெரிதாக இருக்கிறது என்ற ஆர்வம் மூன்று, நான்கு பெண் குழந்தைகளுக்கு உண்டாகும். தற்செயலாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, பேச்சை மாற்றிவிடலாம். அவர்களும் மறந்து விடுவார்கள். ஆனால், பிறர் சிரிக்கிறார்களே என்று அதைப்பற்றியே பேசுவதும் சரியல்ல. பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் வேண்டாத முயற்சி இது.

    ஏன் மாத விலக்கு வருகிறது என்று புரியாது, உதிரப்போக்கால் தான் இறந்துவிடுவோமோ என்று பயந்ததாகப் பல பெண்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

    நான் பதினான்கு வயது மலாய் மாணவிகளிடம் கலந்து பேசியபோது, வயதுக்கு வந்ததும், `இனி பையன்களுடன் அதிகம் பேசாதே!’ என்று மட்டும் தாய்மார்கள் அறிவுரை வழங்கியதாகச் சொன்னார்கள். வேறு ஒன்றும் சொல்லவில்லையாம். நான் ஒரே வரியில் உடலுறவை விளக்கினேன், எந்தவித உணர்ச்சியுமில்லாது. (விஞ்ஞானப் பாடத்தில், குரலில் உணர்ச்சி காட்டாது தகவல்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்).

    `இவ்வளவுதானா! இதற்கு என்ன, இவ்வளவு ஆர்ப்பாட்டம்!’ என்றாள் ஒரு மாணவி.

    பழமைவாதிகளான பெற்றோர், `தானே தெரிந்துவிட்டுப் போகிறது!’ என்ற அசிரத்தையுடன், என்ற ரீதியில் உடலுறவைப்பற்றிப் பேசவே மறுப்பார்கள். ஒரு குடும்பத்தில், பதின்ம வயது ஆண் ஒருவன் பெண்ணைப்பற்றியோ, இல்லை, பெண் ஆண்களைப்பற்றியோ பேசுவது தகாது என்பதுபோல் நடந்துகொண்டால், பிள்ளைகள் குழம்பி விடுவார்கள். கல்யாணத்துக்குப் பிறகு பிரச்னைகள் ஏற்படலாம்.

    30, 35, 45 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான மூன்று பெண்கள் என்னிடம் கூறியது: `அவர் என்னைத் தொட வந்தபோது, `இதெல்லாம் தப்பு’ என்று நான் என் கணவரிடம் மன்றாடினேன். அவர் வாரக்கணக்கில் என்னுடன் இதைப்பற்றி என்னிடம் பேசினார்’.

    தம்மை எவ்வளவு அறிவிலிகளாக வளர்த்திருக்கிறர்கள் பெற்றோர் என்று அவர்கள் மீதும், தம்மீதும் ஆத்திரம் அவர்களுக்கு.

    பதினெட்டு வயதுப்பெண் ஒருத்தி இப்படித்தான் குழந்தைத்தனம் மாறாமல் இருந்தாள். தில்லியில் பஸ்ஸில் போகும்போது எல்லா ஆண்களும் தன்னை ஏன் இடிக்கிறார்கள் என்று குழம்பி, என்னிடம் ரகசியமாகக் கேட்டாள். பெற்றோரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாது, `நான் இனி பஸ்ஸில் போக மாட்டேன். கார் வாங்கிக் கொடுங்கள்,’ என்று நச்சரித்திருக்கிறாள். அவள் தாயிடம் விசாரித்தேன். நான் நினைத்தபடியே, தாய்க்கு ஆண்-பெண் உறவைப்பற்றி அவளிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பெண்ணிடம் நான் விளக்கிச் சொல்லி, புண்ணியம் கட்டிக்கொண்டேன்! அந்தப் பெண் சர்வசாதாரணமாக, `எங்கம்மாவுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் தெரியாது,’ என்றாள்.

    முன்காலத்தில், கூட்டுக் குடும்பங்களாக இருந்தபோது, அக்கா, அத்தை என்று யாராவது ஒரு பெண்ணின் கர்ப்பம், பிரசவம் நிகழும். பன்னிரண்டு வயதில் ரகசியமாக வைக்கப்பட்டவை லேசாகப் புரிய ஆரம்பிக்கும். இப்போது அப்படியா! பெற்றோர் நாணிக் கோணாமல் எடுத்துச் சொன்னால், அதை ஏற்பார்கள் குழந்தைகள். இல்லாவிடில், தவறான முறைகளில் நண்பர்களிடமிருந்து கற்கும் அபாயம் இருக்கிறது.

    ஒரு குழந்தையின் இயற்கையான ஆர்வமும், தனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்ற பெருமையும் புரியாது, அலட்சியமோ, அவமதிப்போ செய்தால், அதன் பாதிப்பு பல வருடங்கள் நிலைக்கும்.

    படித்த கதை: ஆலோசகராக (COUNSELLOR — நாடி வருபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்) பணியாற்றிய ஒரு பாதிரியார் தனது புத்தகத்தில் எழுதியிருந்தது:

    “எனக்கு நினைவு தெரிந்த நாளாக, `கண் எங்கே?’ என்று யாராவது கேட்டால் கண்ணைச் சிமிட்டி, `கை?’ என்று கேட்டபோது பெருமையுடன் கையைத் தூக்கிக் காட்டியிருக்கிறேன். மூன்று வயதில், யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால், புதிய உறுப்பு இதுதான் பெருமையுடன் அதைக் காட்டி, அதன் பெயரும் எனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்வேன். அதிர்ச்சியும், அவமானமுமாக, என் பெற்றோர் என்னை அவசரமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவார்கள்.

    அப்போது, எனது ஆண் உறுப்பு ஒரு அவமானச் சின்னம்தான் என்று தோன்றிப்போயிற்று. அதனால், சிறுநீர் கழிப்பதுகூட கஷ்டமாக ஆகியது. நான் செய்யும் காரியம் யாருக்கும் தெரியக்கூடாது என்று குழாயைத் திறந்துவிடுவேன். வளர்ந்து பெரியவனானதும்கூட இதே நடத்தை தொடர்ந்தது. குழாய்த் தண்ணீர் ஓசை இருந்தால்தான்தான் சிறுநீர் கழிக்க முடிந்தது”.

    தமது அந்தரங்கமான பாகங்களின் பெயர்களோ, அல்லது அவைகளின் பயன் என்ன என்றோ குழந்தைகளுக்குத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுவது இயற்கை. ஒரு குழந்தை எப்போது தனக்குப் புரியாத ஒன்றைப்பற்றி அறிய விரும்பி, கேள்வி கேட்கிறதோ, அப்போதே அது பதிலுக்கும் தயார் என்பதை உணரலாம். எளிமையான, அதிர்ச்சி தராத விதத்தில் விளக்கினால், குழப்பமின்றி, மன ஆரோக்கியத்துடன் வளரும்.

    தொடருவோம்.

    Share
  • சாக்லேட்

    நிர்மலா ராகவன்

    பெரியநாயகி கொடுத்திருந்த தந்தி வெள்ளிக்கிழமை மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிடைத்தது.
    `அப்பாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது!’

    எதுவும் செய்ய இயலாதவளாக அந்த எழுத்துகளை வெறித்துப் பார்த்தாள் தேவானை. நினைத்தவுடன் புறப்பட்டுப் போக, இந்தியா என்ன, கூப்பிடு தூரத்திலா இருக்கிறது!

    அத்துடன், காலாவதியாகி இருந்த அவளுடைய மலேசிய கடப்பிதழை அப்படியெல்லாம் அவசரமாக புதுப்பிக்க இயலாது. அது கையில் கிடைப்பதற்குள், அப்பா இந்த உலகத்தைவிட்டே போனாலும் போய்விடுவார்.

    அந்த நினைப்பில் வருத்தமில்லை. விரக்திதான். அம்மா இருக்கும்போதே வந்த யோசனைதானே!

    `என்னை எதுக்கும்மா இவ்வளவு தூரத்திலே கட்டிக் குடுத்தீங்க?’ என்று தேவானை சிணுங்கியபோது, `நல்லாக் கேளு! அப்பவே நான் ஒங்கப்பாகிட்டே தலைபாடா அடிச்சுக்கிட்டேன். பக்கத்து வீட்டுப் பையன்! தெரிஞ்சவன், நல்லவன்! அதுக்காக கண்காணாம மகளை அனுப்பணுமான்னு எவ்வளவு கெஞ்சினேன்! ஹூம்! நான் சொல்றதை எப்போ கேட்டிருக்காங்க, இப்போ கேக்க!’ என்று பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தாள், ஆற்றாமையுடன். `வரதட்சணை எதுவும் வேண்டாம், மாமான்னு மாப்பிள்ளை சொல்லவும், ஒரே வாரத்திலே ஒன் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டாங்க!’

    அப்பாவுக்குத் தன்னைவிட பணம்தானே பெரிதாகப் போய்விட்டது என்ற வருத்தம் அப்போது எழுந்தது. ஆனால், பெற்றவளின் எண்ணப்போக்கு வேறுமாதிரி இருந்தது.

    `இப்போ யோசிச்சா, அதுவும் நல்லதுதான்னு படுது. ரெண்டு காரும், பங்களாவுமா ராணி மாதிரியில்லே இருக்கே, நீ!’
    தேவானை மௌனமாக இருந்தாள்.

    கணவர் நல்லவர்தான். ஆனால், உலகத்தில் எல்லாரும் தன்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணி ஏமாந்தவர். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட, பங்களாவையும், பவுன் ஐம்பது வெள்ளியாக இருந்த காலத்தில் அவள் வாங்கி வைத்திருந்த நகைகள் பலவற்றையும் விற்க வேண்டியிருந்தது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்லி, வீணாக அவளையும் கவலைக்கு உள்ளாக்குவானேன்!

    `அடிக்கடி வரக்கூட முடியாது! ஆயிரக்கணக்கிலே இல்லே, பிளேனுக்கு அழணும்!’ என்று முணுமுணுக்கத்தான் அவளால் முடிந்தது.

    `நாங்க இருக்கிறவரைக்கும்தானே வரப்போறே! போனப்புறம் வந்து என்ன ஆகப்போகுது!’
    அதுதான் அம்மாவைக் கடைசியாகப் பார்த்தது.

    அப்பாவை எப்போது இறுதியாகப் பார்த்தோம் என்று யோசித்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர்.

    அதற்கு முன்னால் ஒருமுறை போனபோது, `ஒங்களுக்கு என்ன வாங்கிட்டு வர்றதுன்னு தெரியலேப்பா. பெரியநாயகிக்கு ஜப்பான் நைலக்ஸ் புடவை, அம்மாவுக்கு பாதாம் பருப்பு, கோக்கோ…,’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப்பா குறுக்கிட்டார். ‘கோக்கோ விளையற ஊரா? அப்போ சாக்லேட் மலிவாக் கிடைக்குமே!’
    `நீங்க சாப்பிடுவீங்களாப்பா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் மகள்.

    அப்பா ரொம்ப ஆசாரம். மணிக்கணக்காக பூசையறையில் உட்கார்ந்து கந்த புராணம் படிப்பார்.
    அப்பா அலட்சியமாகப் பதிலளித்தார். `கையாலேயா பண்ணறான்! எல்லாமே மெஷின்தானே!’
    அடுத்த முறை, ஞாபகமாக, விமான தளத்தில் ஒன்றரையடி நீள சாக்லேட்டை வாங்கினாள். பாலுடன், பாதாம், முந்திரி எல்லாம் போட்டது. அதைக் கையில் வாங்கிக்கொண்ட அப்பாவின் முகம் பிரகாசிப்பதை மனக்கண்ணால் கண்டு ஆனந்தப்பட்டாள்.

    அவளை வரவேற்க வந்திருந்தாள் பெரியநாயகி.
    `என்னடி, இவ்வளவு குண்டாப் போயிட்டே?’ என்று சிரித்த அக்காளிடம், `ஷூகர்!’ என்று, தனக்கு இனிப்பு வியாதி வந்திருக்கும் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டாள்.

    `அப்பா முந்தி மாதிரி இல்லேக்கா. அம்மா போனதிலேருந்து, ஓயாம கத்திக்கிட்டு இருக்காரு!’ என்றாள் ரகசியக் குரலில் — பெங்களூரில் இவள் பேசுவது கோயம்புத்தூரில் இருந்தவருக்குக் கேட்டு விடுமோ என்று அஞ்சுவதுபோல்.
    தேவானையால் நம்ப முடியவில்லை. சாத்வீகமான அந்த அப்பாவா!
    `ஏன்?’ என்று கேட்டுவைத்தாள்.

    `வயசான காலத்திலே ஒண்டியாத் திண்டாடறாரு. சாவுப் பயம் வேற!’ என்று நொடித்தவள், `நீ மொதல்ல அங்க போகாதே. எங்கூடவே தங்கிக்க. திரும்பிப் போக ஒரு வாரம் இருக்கறப்போ அங்க போனாப் போதும். அப்பாவைத் தாங்கிக்க ஒன்னால முடியாது!’ என்றாள் தங்கை, தேவானை பேசவே இடங்கொடுக்காது.

    வீட்டுக்குப் போனதும், `எனக்குத் தெரியும். நீ எங்களுக்காக அள்ளிக்கிட்டு வந்திருப்பே!’ என்றபடி, உரிமையுடன் அக்காளின் பெட்டியைத் திறந்தாள் பெரியநாயகி.

    மேலாக வைக்கப்பட்டிருந்த ஊதா நிறக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பொருள் கண்ணில் பட, `ஹை! சாக்லேட்!’ என்று தாவி எடுத்தாள்.

    `அது அப்பாவுக்கு!’ என்று தேவானை தர்மசங்கடத்துடன் மறுத்தபோது, பெரியநாயகியின் முகம் இறுகியது.
    அப்போது எழுந்த அவமானத்தை ஒரு சிறு சிரிப்புடன் சமாளித்துக் கொண்டு, `வெளியிலே வாங்கினது எதையும் அப்பா சாப்பிட மாட்டாரே! மறந்துட்டியா?’ என்று கேட்டாள்.

    `போன தடவை அப்பாதான் கேட்டார். மெஷின்ல பண்ணினது பரவாயில்லேன்னு சொன்னார்..!’
    தங்கை முகத்தைச் சுளித்தாள். சாகப்போகிற வயசிலே சாக்லேட் ஒரு கேடா!

    `நீயோ இனிப்பு சாப்பிட முடியாது. அது அப்பாவுக்கு!’ தேவானையின் மறுப்பை அலட்சியம் செய்தாள். `வெளியில் வெச்சா உருகிப் போயிடும்!’

    மனதுக்குள், `வெளிநாட்டில் சீரும் சிறப்புமாக இருக்கிற உனக்கு, தங்கைக்கும் ஒன்றோ, இரண்டோ வாங்கி வர வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? சரியான கருமி!’ என்று வைதாள்.

    சாயங்காலம், கல்லூரி முடிந்து வந்த மகனிடம், `பெரியம்மா ஒனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காங்கன்னு பாரு!’ என்று ஒரு பெரிய விள்ளலைக் கொடுத்தாள்.

    அவர்களுக்காக அக்காள் வாங்கி வந்திருந்த துணிமணிகள், கேமரா, ரேடியோ — இவையெல்லாம் இருக்க, அப்பாவுக்காக அவள் ஆசையாகக் கொண்டு வந்திருந்த ஒரே சாமானை அவள் வீட்டுக்கு வந்து விசாரித்தவர்களிடம் எல்லாம் காட்டி, `எவ்வளவு பெரிசு பாத்தீங்களா? ஏர்போர்ட்டிலே வாங்கினாளாம்!’ என்று பீற்றிக் கொண்டாள் பெரியநாயகி. அவர்களுக்கும் சிறிது கொடுக்க வேண்டியதாகப் போயிற்று.

    அங்கிருந்து புறப்படும் நாள் வந்தபோது, ஏதோ விடுதலை கிடைத்ததுபோல் இருந்தது தேவானைக்கு. `சாக்லேட்?’ என்று நினைவுபடுத்தினாள்.

    `இப்பவே எதுக்கு? புறப்படறப்போ எடுத்துக்கிட்டா போதும். உருகிடும்!’ என்று சால்ஜாப்பு சொன்னாள் தங்கை.
    ஞாபகமாக, வாசலில் டாக்ஸி வந்து நின்றதும், மீண்டும் கேட்டாள் தேவானை.

    உதட்டைச் சுழித்தபடி, ஒரு குழந்தையின் உள்ளங்கை அகலத்திற்கு ஒரு துண்டை உடைத்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தாள் பெரியநாயகி. மீதிப் பங்கு, மீண்டும் ஐஸ் பெட்டிக்குள் சரணடைந்தது.
    அப்போது எழுந்த அதிர்ச்சியை, வருத்தத்தை, கீழுதட்டைக் கடித்தபடி அடக்கிக் கொண்டாள் தேவானை.

    செல்லப் பெண்ணைக் கண்டு மலர்ந்த முதியவரின் முகம் அவள் அளித்ததை ருசித்ததும், இன்னும் விரிந்தது.
    `ரொம்ப நல்லா இருக்கேம்மா! இன்னும் கொஞ்சம் வாங்கிட்டு வந்திருக்கக் கூடாது?’ என்று அவர் உரிமையாகக் கேட்டபோது, தேவானைக்கு அழுகை வந்தது.

    அடுத்த முறை நேராக அப்பாவைப் பார்க்க வரவேண்டும். நிறைய சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்து, அவர் பூரிப்பதைப் பார்த்துத் தானும் மகிழ வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டாள்.
    ஆனால், அதற்கான வேளை வரவேயில்லை.

    மறுநாளே இன்னொரு தந்தி வந்தபோது, அதைப் பிரிக்காமலே அழ ஆரம்பித்தாள்.
    அப்பா.. நான்கு வயதுவரை அவளைத் தோளில் போட்டு `ஆட்டுக்குட்டி’ தூக்கிய அப்பா. அதற்குப்பின், முதுகில் உப்பு மூட்டை. ராத்திரி தூங்குகையில், கெட்ட கனவு கண்டு பயந்த போதெல்லாம் சமாதானப்படுத்தி, தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்ட அப்பா.

    அவள் பெரியவளானதும், எப்போதும்போல் அப்பா கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சியபோது, அவள் வெட்கப்பட, `அப்பாதானேம்மா!’ என்று சிறு வருத்தத்துடன் சொன்னவர்.
    பள்ளி நாட்களில், படிப்பிலும் பேச்சுப் போட்டியிலும் அவள் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும் கோயிலில் விசேட ஆராதனைக்கு ஏற்பாடு செய்து கொண்டாடியவர்.

    அதிகம் யோசியாது அவளுடைய திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அதற்கு முதல்நாள் அவளிடம் தனிமையில், `நான் ராத்திரியெல்லாம் அழுதுக்கிட்டே இருந்தேன். இனிமே ஒன்னை எப்போ பார்ப்பேனோ!’ என்று குழந்தைபோல் ஏங்கியவர்.

    தான் முதன்முறை கருவுற்றபோது, `தேவானை ஒரு நல்ல மகளாகவும், சிறந்த மாணவியாகவும் இருந்தாள். அவள் நல்ல தாயாகவும் இருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமே கிடையாது!’ என்று கணவருக்கு, முதன்முறையாக, கடிதம் எழுதி இருந்த அப்பா.

    அந்த அப்பாவின் ஆசை கடைசியில் நிறைவேறாமலே போய்விட்டது.

    `நாளைக்கு ஒன் பிள்ளைங்க ஒனக்கு எதுவும் செய்ய மாட்டாங்கடி. அவங்க பிள்ளைங்களுக்குத்தான் செய்வாங்க. அப்போ நீ வேதனைப் படறதையும் பாக்கத்தானே போறேன்!’ என்று உரக்கவே அரற்றினாள் தேவானை.

    ஓரிரு வாரங்கள் கடந்ததும், தங்கையிடமிருந்து நீண்ட கடிதம் ஒன்று வந்தது. `அப்பாவின் காரியங்கள் நல்லபடியாக நடந்தன. இருபதாயிரம் செலவழித்தேன்!’ என்று பெருமையாக எழுதியிருந்தாள்.

    வெறி கொண்டவளாக, கடிதத்தைக் கிழித்துப் போட்டாள் தேவானை.

    (தமிழ் நேசன், 2011, வலைத்தமிழ், சிறுகதைகள்.காம்)

    Share
  • ஒரு பேருந்துப் பயணம்

    நிர்மலா ராகவன்

    “என்னை விட்டுடுங்க! இதுதான் என்னோட கடைசி வெளிநாட்டுப் பயணம்!” முகத்தில் அருவருப்புடன், முணுமுணுப்பான குரலில் கூறிய மனைவியைப் பார்த்தார் அருண். தன்னால்தானே அவளுக்கு இவ்வளவு கஷ்டம் என்ற நினைப்பில் சற்று குற்ற உணர்வு உண்டானது அவருக்கு.

    “கொஞ்ச நேரம்தானே பிரபா? புதுச்சேரியிலிருந்து மூணே மணி நேரம்! கடற்கரைவழியா போய், சென்னையில கொண்டு விட்டுடுவான்!”

    “ஆயிரக்கணக்கா, மலேசிய ரிங்கிட்டில செலவழிச்சுக்கிட்டு பிளேனில வந்திருக்கோம், உல்லாசமா சுத்திப் பாக்க! டாக்ஸிக்கு இரண்டாயிரம், இல்லே மூவாயிரம் ரூபாய் குடுக்க கருமித்தனப்பட்டுக்கிட்டு, யாராவது இப்படி பஸ்ஸில வருவாங்களா!”

    “நம்ப ரெண்டு பேருக்கும் பஸ் டிக்கட் நூறு ரூபாய்கூட ஆகலம்மா. மிச்சம் பிடிக்கிற காசில, நீ இன்னொரு பட்டுப் புடவை வாங்கிட்டுப் போயேன்!”

    அவரது நைச்சியப் பேச்சு பிரபாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவள் கவனம் லயித்திருந்தது. எண்ண ஓட்டம் அவளைச் சுற்ற ஆரம்பித்தது.

    ஒல்லியா இருந்தாலும், பொண்ணு நல்ல களை!
    கழுத்தில் முத்து மாலை- – அதில் தோல் உரிந்திருந்தது.
    கல்யாணமாகாத பெண் போலிருக்கு! பாவம், ஏழை!
    நீண்ட ஒற்றைப்பின்னல். அதன் நுனியில் ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள்.

    சரியான பட்டிக்காடு! பெயர் என்னவாக இருக்கும்? சரி, அருக்காணி என்று வைத்துக்கொள்வோம்.
    பொழுதைக் கழிக்க, பிரபாவுக்கு இது ஒரு நல்ல விளையாட்டாகப் போயிற்று.

    பின்னலுக்கு மேலே சாமந்தி, அரளி, `பச்சை’ என்ற வாசனை இலை — எல்லாம் வைத்துக் கட்டிய தலைகொள்ளாத கதம்பம்.

    தலை கனக்காதோ!

    ஏறியதிலிருந்து, தலையைப் பரபரவென்று சொறிந்து கொண்டிருந்தாள் அருக்காணி.

    இப்படியா தலையைப் பிடுங்கிக்கொள்ளும் ஒரு பெண், நாலு பேர் பார்க்கிறார்களே என்ற கூச்சம்கூட இல்லாமல்!
    ஒருவாறாக, இரு விரல்களின் நுனியைச் சேர்த்து, மயிர்க்காலை பாடாய் படுத்திக் கொண்டிருந்த பேனை எடுத்து, இன்னொரு கை கட்டைவிரலால் அவள் சொடுக்கியபோது, பிரபாவுக்குக் குமட்டியது.

    ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்… நல்லாத்தான் சொல்லி வெச்சிருக்கான், பாட்டிலே!
    `சென்னைக்குப் போனதும், முதல் வேலையா மருந்துக் கடையிலே நல்ல மருந்தாக வாங்கி, தலையில அழுந்தத் தேய்ச்சுக்கணும்! முன் சீட்டிலிருந்து பரவிடாது!’ என்று பிரபாவின் எண்ணம் போயிற்று.

    பஸ் வழியில் எங்கோ நின்றது. கையில் ஒரு குழந்தையுடன் ஒரு மாது ஏறினாள். இன்னொரு தோளில் ஒரு பெரிய பை. வெளிறியிருந்த நீல நிற நைலான் புடவை. பரட்டைத் தலை என்று பிரபா தன் மனதில் குறித்துக் கொண்டாள்.
    “யாரும்மா? கையில பிள்ளையோட எப்படி நிப்பே? அடுத்த பஸ்ஸிலே வா. எறங்கு, எறங்கு!” கண்டக்டரின் அதிகாரக் குரல் சிலரை அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

    வேறு சிலர், `இதெல்லாம் தினம் தினம் நடக்கிறதுதானே!’ என்று நினைத்தவர்களாக, வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டோ, `இஞ்சி மொரப்பா! அஞ்சே ரூபா! தலை சுத்தலுக்கு வாங்கிக்குங்க!’ என்று கூவியபடி விற்ற பையனை அழைத்துக்கொண்டோ இருந்தனர். இஞ்சியை வேகவைத்து, சீனிப்பாகில் இட்டுக் காய வைத்திருந்த விரல்களை நினைவூட்டும் துண்டங்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.

    `அநியாயம்! இதுக்கு அஞ்சு ரூபாயா!’ என்று பேரம் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.
    யாரும் அத்தாய்க்குத் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, நின்றுகொண்டே பயணம் செய்ய ஒப்பவில்லை.
    “ஒனக்கு எத்தனை வாட்டி சொல்றது? எறங்கு!’ கண்டக்டர் ஆக்ரோஷமாகக் கத்தினார். அவள் இறங்க யத்தனித்தாள்.

    “அவங்க எறங்க வேணாம்!” அபயக் குரல் கேட்டது. அருக்காணிதான்.
    “பிள்ளையை இப்படிக் குடுங்க!” என்று தன் கையை நீட்டி, பிடுங்காத குறையாக குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
    கறுப்புச் சாந்தில் பெரிய பொட்டு, நெற்றியிலும் கன்னத்திலும். அதைவிடப் பெரிய கண்களால் தன்னைத் தோளில் தூக்கிக் கொண்டவளை உற்றுப் பார்த்தது.

    “என்னடா முழிச்சு முழிச்சுப் பாக்கறே?” என்று கொஞ்சியபடி, “அதோ பாத்தியா! எத்தினி பஸ்!” என்று வெளியில் கைகாட்டினாள் அருக்காணி.

    குழந்தைக்கு என்ன, ஆறு மாசமிருக்குமா?
    பிரபா சுவாரசியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பஸ் புறப்பட்டது. வழியில் தெரிந்த காட்சிகளை எல்லாம் அருக்காணி விளக்க, `இதற்குமேல் என் மூளை வேலை செய்யாது!’ என்பதுபோல், குழந்தை கண்களை மூடிக்கொண்டது. அது தூங்க வசதியாக, மடியில் கிடத்திக் கொண்டாள் அப்பெண்.

    பஸ்ஸின் குலுக்கலில் கண்ணயர்ந்த பிரபா இரண்டு மணி பொறுத்துதான் விழித்தாள்.
    “அம்மா எறங்கப் போறாங்கடா!” என்று பிரியாவிடை கொடுத்த அருக்காணி, குழந்தையை அதன் தாயிடம் நீட்டினாள். அவளை விட்டுப் பிரிய மனமில்லாததுபோல், குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அவளுடைய புடவையை இறுகப் பற்றியிருந்தது.

    “பிள்ளையை நல்லா பாத்துக்கிச்சு!” என்று பொதுவாகச் சொல்லியபடி, அந்த தாய் இறங்கினாள்.
    வாய் உபசாரமாக நன்றி கூறத் தெரியாத பாமரப் பெண்!

    சென்னையும், ஓடும் மாந்தர்களும், மனிதர்கள், வாகனங்களின் இரைச்சலும் சேர்ந்து வந்தன.

    “பஸ்ஸிலே இவ்வளவு பேரை அடைப்பாங்கன்னு தெரியாம போச்சு. என்னென்னமோ எண்ணை நாத்தம்! மூச்சுக்கூட விட முடியல!” கோயம்பேடில் இறங்கி, ஆட்டோவில் இறங்கும்வரை மௌனமாக இருந்த அருண், முதன்முறையாகப் பேசினார். “இனிமே பஸ்ஸே வேண்டாம்பா! டாக்சிதான்!” உடலைக் குலுக்கிக் கொண்டார்.

    “ஒரு புத்தகத்தோட மதிப்பை அதோட அட்டையை வெச்சு எடைபோடக் கூடாதுன்னு சரியாத்தான் சொல்லி வெச்சிருக்காங்க!”
    தான் என்ன சொல்கிறோம், இவள் சம்பந்தா சம்பந்தம் இல்லாது என்ன சொல்கிறாள் என்று, மனைவியைத் திரும்பிப் பார்த்தார் அருண்.

    `பாவம்! ரொம்ப நேரம் பஸ்ஸிலே வந்தது இவளுக்குத் தலை சுத்திப் போயிருக்கு!’ என்று பரிதாபப்பட்டுக் கொண்டவர், `ஹோட்டலிலே ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடிச்சா சரியாப் போயிடும்!’ என்று ஒரு முடிவும் எடுத்தார்!

    (மக்கள் ஓசை, 2010, சிறுகதைகள்.காம்)

    Share
  • உன்னையறிந்தால் ….. ! (7)

    பதின்ம வயதினர்

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்

    கேள்வி: என் மகளைச் சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக, அவள் விருப்பப்படியெல்லாம் நடக்கப் பழக்கிவிட்டேன். ஆனால், பதினைந்து வயதிலும் தன் விருப்பப்படிதான் நடப்பேன், நான் எதுவும் கேட்கக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள். டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது?

    விளக்கம்:

    பால்ய விவாகமும், தந்தையின் தொழிலையே கற்று, மகன் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டபோதும், `பருவ வயது 13 – 18’ என்றெல்லாம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் குழந்தைகளாகக் கருதப்பட்டார்கள். (ஆனால், அந்தந்த வயதுக்கு மீறிய பொறுப்புகளும் அவர்கள்மீது திணிக்கப்பட்டன).

    சுமார் 65 ஆண்டுகளாகத்தான் பதின்ம வயதினர் குழந்தைகளும் இல்லை முதிர்ச்சியுற்ற பெரியவர்களும் இல்லை, இவர்கள் வேறு ஒரு பிரிவினர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய உளவியலைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    இந்த வயதினர், `நியாயம்’, `அநியாயம்’ என்ற முறையில்தான் எந்த பிரச்னையையும் அணுகுவர். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். உடலிலும், மனதிலும் மாற்றம். ஆனால், இதைச் சரிவர விளக்குவார் யாருமில்லை. `இதையெல்லாமா சொல்லித் தருவார்கள்!’ என்று கூசியபடி விளக்கினால், இந்த விஷயத்தில் வேண்டாத ஆர்வம்தான் வரும். அபாயமான விளைவுகளை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடத் தூண்டும் துணிச்சலும் இந்தப் பருவத்தினருக்கு இயற்கையிலேயே எழுகிறது.

    இதையெல்லாம் புரிந்துகொண்டு, சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும் ஒரு பொருட்டாக மதித்துப் பெற்றோர் நடக்க வேண்டும்.

    குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, யாராவது வீட்டில் இருக்க வேண்டுவது அவசியம். எப்போதாவது வெளியில் போகவேண்டிய அவசியம் நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு — எங்கே போயிருக்கிறீர்கள், எப்போது திரும்புவீர்கள், சாப்பிட என்ன, எங்கே வைத்திருக்கிறீர்கள் — இப்படி. இதைப் படிக்கும்போது, பெற்றோர் தம் கூடவே இருப்பதுபோல உணர்வார்கள் குழந்தைகள்.

    `என் மகள் (வயது 17) வெளியே போகும்போது, நான் கேட்காவிட்டாலும், போகுமிடத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போகிறாள். அவளுடைய சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்து வைக்கிறாள்!’ என்று என்னிடம் கூறி அதிசயப்பட்டாள் என்னுடன் வேலை பார்த்த ஒரு மாது. என்னைவிட ஏழு வயது பெரியவள். இந்த தாய், மகள் சிறுமியாக இருந்தபோது, இதேபோன்ற கரிசனத்தை (நான் சீக்கிரமே திரும்பி விடுவேன், அனாவசியமாக கவலைப்படக்கூடாது), மரியாதையை அவளுக்கு வழங்கியிருக்கிறாள் என்று ஊகித்துச் சொன்னேன். தான் பெற்றதைத் திருப்பி அளிக்கிறாள் பெண். இதில் அதிசயப்பட என்ன இருக்கிறது?

    பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் நண்பர்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். பண்டிகை நாட்களின்போது, நண்பர்களை வீட்டுக்கு அழைக்கச் சொல்லுங்கள். ஒரு சிலர், உங்கள் குடும்பத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படும் மரியாதை, தைரியம், ஒழுக்கம் போன்ற சில கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும். அவர்களைப்பற்றிப் பிறகு பேசுங்கள். ஆத்திரமின்றி, நட்புணர்வோடு. நாம் கொண்டிருக்கும் அக்கறை குழந்தைகளுக்குப் புரியும்.

    உதாரணமாக, ஒரு பெண் பதினைந்து வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்கிறாள். அவளுடன் ஊர்சுற்றுவதில் ஒத்துப்போகாத தோழியை `பழைய காலம்! அம்மாவின் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து போகிறவள்!’ என்று பலவாறாகப் பழிக்கிறாள். திரும்பத் திரும்ப இப்படியே செய்தால், எவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறாள்.

    அவள் நினைத்தபடியே, பெண்ணும் அம்மாவுடன் சண்டைக்குப் போகிறாள், `என் வயதொத்த பெண்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் சந்தோஷமா இருந்தா ஒங்களுக்குப் பொறுக்காதே! என் சிநேகிதிகளோட அம்மா இவ்வளவு மோசம் இல்லே!’ என்று.

    தாய் தானும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினால், காரியம் கெட்டுவிடும். ஏன் தெரியுமா?

    பதின்ம வயதுப் பையனாக இருந்தால், முன்பின் யோசியாமல், ஏதோ உணர்ச்சிவசத்தில் தப்பு செய்கிறான். வயது வந்தவர்களோ, நன்றாக யோசித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, நிறையப் புகழ்ந்து, அவளை வசப்படுத்தப் பார்ப்பார்கள்.

    பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு உடல் வளர்ந்திருக்கிற அளவுக்கு உலக விவரம் புரிவதில்லை. மனதளவில் அவள் குழந்தைதான். யாராவது, `ஒன்னைப் பாத்தா சின்னப்பொண்ணா தெரியல. என்னமா வளர்ந்திருக்கே! எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கே! புத்திசாலி!’ என்றெல்லாம் புகழும்போது, மயங்கிவிடுகிறாள்.

    (எத்தனை வயதானாலும், நம்மை முகத்துக்கு நேர் புகழ்கிறவர்கள் ஏதாவது ஆதாயம் எதிர்பார்த்துத்தான் அப்படிச் செய்கிறார்கள். அப்படி யாராவது புகழ்ந்தால், `நன்றி,’ என்றுவிட்டு, போய்க்கொண்டே இருக்க வேண்டும். பத்து வயதிலேயே உங்கள் குழந்தைக்கு இதைச் சொல்லிவைங்கள். அதிகம் ஏமாற மாட்டார்கள்).

    இப்படி, உலகத்தின் நடப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், பெண் யோசிக்க ஆரம்பிக்கிறாள். எப்போதும் நம் நன்மையைத்தான் கோருவாள் தாய் என்ற நம்பிக்கையுடன், `ஓ! அதான் என் ஃப்ரெண்ட் என்னைப் பாத்து பொறாமைப்படுகிறாளா!’ என்று தெளிந்து, எந்தக் குழப்பத்திலும் சிக்காமல் தப்புகிறாள்.

    ஆம், `சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடப்பவர்கள் எப்போதும், தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையே என்ற ஏக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    எது சரி, எது தவறு என்று விளக்க ஒரு பெண்ணோ, பிள்ளையோ தவறு செய்யும்வரை காத்திருக்க வேண்டாம். உங்களுடன் தனியாகப் பிரயாணம் செய்யும்போதோ, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போதோ, பொதுவாக இந்த வயதினருக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும், அவைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் பேச்சுவாக்கில் சொல்லுங்கள்.

    உதாரணமாக, சிறு வயதிலிருந்தே தாயிடம் அனுமதி கேட்டு விளையாடப் போகும் வழக்கமுடைய பெண், `இருட்டுவதற்குள் வர வேண்டும்,’ என்று தாய் சொன்னபடி நடந்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பதினைந்து வயதிலும், `என் சிநேகிதி வீட்டில் ஒரு பார்ட்டி. டீன் ஏஜ் பையன்களும் வருவார்கள். நான் போகட்டுமா?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

    `எங்க காலத்திலே..,’ என்று ஆரம்பித்தால், `போர்!’ என்று முகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள்.
    `ஆண்பிள்ளை,’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஏதேதோ கற்பனை செய்து, அதிலேயே பயந்து கத்தும் தாய் தன் மகளின் மதிப்பில் தாழ்ந்து விடுகிறாள்.

    `வேண்டாம். அப்பா கோபிப்பார்,’ என்னும் தாயோ தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாள்.
    முன்கூறியபடி விளக்கிவிட்டு, `ஒனக்கு என்மேல வருத்தம். தெரியும். இன்னும் நாலு வருஷம் போனா, நான் ஒன் நன்மைக்குத்தான் சொன்னேன்னு புரியும்!’ என்று, அவளுடைய உணர்வுக்கு ஆதரவு கொடுத்துப் பேசுங்கள். (`உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது,’ என்று கூறினால், நம்மை எவ்வளவு எதிர்ப்பவரும் சற்று அடங்கிவிடுவார்).

    உணர்ச்சிபூர்வமான இந்த வயதினர் தெரியாத்தனமாக ஏதாவது பிழை புரிந்துவிட்டு, ஆத்திரமும், அவமானமும் அடைவது சகஜம். தவறு செய்வது மனித இயல்பு என்று ஒவ்வொரு முறையும் பக்கபலமும், பாதுகாப்பும் அளியுங்கள். முடிந்தால், அந்த வயதில் நீங்கள் அதேபோல் எதையாவது செய்துவிட்டு, அதை மறைக்கப் பார்த்ததை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எனக்குப் பிடித்த தேங்காய் துவையலை கல்லுரலில் அரைக்கச் சொன்னார்கள் என் பாட்டி. அவர்கள் புளி நிறையப் போடுவார்கள். எனக்குப் புளித்தால் பிடிக்காததால், பாதியை எடுத்து, கல்லுரலின் பின் பக்கத்தில், சுவரருகே ஒட்டிவிட்டேன், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி. `புளிப்பே இல்லையே! பாதி புளியை ஒளிச்சு வெச்சுட்டியா?’ என்று பாட்டி சந்தேகப்பட்டுக் கேட்டபோது, `இல்லவே இல்லை,’ என்று சாதித்து விட்டேன்!

    பொய்தான். என்ன செய்வது!
    அது பாட்டிக்கும் புரிந்ததால்தானே சிரித்தார்கள்! என் வயதில் அவர்கள் என்ன தில்லுமுல்லு செய்தார்களோ!

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …… (6)

    நிர்மலா ராகவன்

    வெற்றிப்பாதையில் முட்கள்

    உனையறிந்தால்111

    கேள்வி: எந்தச் சமயத்திலும் பிறரை நோகடிக்கக் கூடாது என்பது சரிதானா? எல்லோரிடமும் சிரித்துப் பேசுவது சிலருக்கு மட்டும் எப்படி கைவருகிறது?

    பதில்: இப்படி நடப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள் என்று சொல்ல முடியாது. எப்போதும் சிரிப்பது, அதுவும் உரக்கச் சிரிப்பது, மகிழ்ச்சியின் அறிகுறி என்று அர்த்தமாகாது.

    சிறு வயதில் தாய், தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகிய எல்லாரிடமும் பாராட்டு பெற விரும்பிய ஒரு பெண் பிறருக்கு என்ன பிடிக்கும் என்று குறிப்பால் அறிந்து, அதன்படி நடக்கிறாள்.

    யாரையாவது எதிர்த்தால், அதற்காகத் திட்டு விழும், தன்னை `நல்ல பொண்ணு!’ என்று புகழமாட்டார்கள் என்று புரிந்து போகிறது. அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு காரியமுமே பிறர் என்ன சொல்வார்களோ என்ற அடிப்படையில்தான் இருக்கும்.

    பெரியவளாக ஆன பின்னரும், இதே போக்கு தொடர்கிறது. `எனக்கு எதிரிகளே கிடையாது. எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாள்.

    இவளுக்கு எதிரிடையான பெண் ஒருத்தியே எடுத்துக்கொள்வோம். அவளைக் கண்டனம் செய்பவர்கள்தாம் அதிகம்.

    1 `உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் கர்வம்!’
    2 `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.
    3 `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’

    இந்த மாதிரி கேள்விக் கணைகளைத் தொடுத்து, யாராவது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்களா?
    கவலையை விடுங்கள். பிரச்னை உங்களிடம் இல்லை. கேட்டவரிடம்தான்.

    `ஏன் என்னால் முன்னுக்கு வரவே முடியவில்லை?’ என்று வருந்துபவர்கள், பிறர் தம் முன்னேற்றத்தைத் தடுக்க எந்தெந்த வழிகளை எல்லாம் கையாளுவர் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய நைச்சியமான பேச்சால் பாதிப்பு அடையாமல் இருக்க முடியும்.

    (1)`கர்வி’ என்று நம்மை ஒருவரைப் பழித்தால், நம்மிடம் ஏதோ சிறப்பு இருக்கிறதென்று எதிராளி உணர்ந்திருக்கிறார் என்று அர்த்தம். அந்தச் சிறப்பே நம் பலமாக, வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக ஆகவிடாமல் தடுக்கும் முயற்சி இந்த ஏளனம் கலந்த குற்றச்சாட்டு.

    பிறரை ஓயாது பழித்துவிட்டு, `ஏனோ ஒருவருக்கும் என்னைக் கண்டால் பிடிப்பதில்லை!’ என்று புலம்புவார்கள் இத்தகையவர். இல்லாவிட்டால், தன்னைப்போன்ற இன்னொருவருடன் நெருங்கிய நட்பு கொண்டு, பிறரைப் பழிப்பதிலேயே நிறைவு கண்டுவிடுவர்.

    கதை:

    நான் ஒரு புதிய பள்ளிக்கு மாற்றலாகிப் போனேன். இரு சீன ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து, என்னை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார்கள், `நீ புதியவள். உனக்கு ஒன்றும் தெரியாது,’ என்பதுபோல. இத்தனைக்கும் எனக்கு முன் அனுபவம் இருந்தது. நான் பட்டதாரி ஆசிரியை, அவர்களைவிட உயர்ந்த பதவி வரிசையில் இருந்தேன் என்ற ஆத்திரமாக இருக்கலாம்.

    பொறுக்கிறவரை பொறுத்துவிட்டு, அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினேன். பின்பு, `என்னையும் உன்னைமாதிரி முட்டாள் என்று நினைத்தாயா?’ (You think I am stupid like you, aah?”) என்று ஒருத்திக்குப் பதிலடி கொடுத்தேன், ஒரு முறை. அவர்கள் பேசும் முறையையே கையாண்டதால், அவர்களுக்கு என் ஏளனம் புரிந்தது.

    அவ்விருவர் முகத்திலும் ஒரே ஆத்திரம். ஆனால், அவர்களுக்கு மேலே எதுவும் பேசும் தைரியம் இருக்கவில்லை.
    அதன்பின் என்ன! போலியான, திகட்டும் அளவுக்கு பணிவுதான் என்னிடம்!

    (2) `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.

    பிறரது எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் பொறுப்பில்லை. நாம் சொல்வதையோ, செய்வதையோ பிறர் ஏற்றுக்கொள்ள முடியாதது நம் தப்பா?

    பல பெரியவர்கள் இம்மாதிரி பேசி, தம் குழந்தைகளை, `தாம் நொந்தாலும் பரவாயில்லை, பிறரை நோகடிக்கக்கூடாது,’ என்பதுபோல் என்றுமே சுயமாகச் சிந்தித்து நடக்கும் திறனில்லாது பழக்கிவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளும் பிறருடைய உணர்ச்சிக்கே மதிப்பு கொடுத்து, ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசப் பழகுகிறார்கள். பிறர் சொல்வது சரியோ, இல்லையோ, அதை ஆமோதித்து ஏற்றால் அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிகிறது.

    இக்குழந்தைகள் பெரியவர்களானதும், தாமே ஏதாவது செய்ய முயன்றுவிட்டு, அதுவும் பிழையாகிப் போனால் என்ன ஆகும்?

    ஒரேயடியாகக் கூசிப்போய், பிறருடைய பழிக்கும், கேலிக்கும் அஞ்சி, புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சலை இழந்துவிடுகிறார்கள். `நான் போட்டியில் எல்லாம் கலந்துகொள்ள மாட்டேம்பா. வெற்றி பெறாவிட்டால், கேவலம்!’ என்று பெருமை பேசுவார்கள்.

    அவர்களைப்போலவே பலரும் இருப்பதால், தாம் செய்வதுதான் சரி என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். வெகு சிலரே வெற்றிப் பாதையில் பீடுநடை போடுவது இதனால்தான்.

    தலைமைப் பொறுப்பு வேண்டுமெனில், சுய சிந்தனை அவசியம். எதிர்ப்புக்கு அஞ்சக்கூடாது. நமக்குச் சரியெனப்பட்டதை, அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவரை, துணிந்து செய்ய வேண்டும்.

    `எனக்காக இதைச் செய்யக்கூடாதா!’ என்று நமக்கு உடன்பாடில்லாத காரியங்களைச் செய்யத் தூண்டுபவர் நம் நலனிலும், நிம்மதியிலும் அக்கறை கொண்ட நண்பரே அல்லர்.

    கதை:

    ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தேன். அதை அளித்தவர் பெரிய அதிகாரி. ஒவ்வொருவரிடமாகப் போய், அவர்களை வற்புறுத்தி, மது குடிக்க வைத்தார். கூட இருந்தவர்களும் குடிக்காதவர்களைக் கேலி செய்தார்கள்.

    என்னருகே வந்தார். என்னைவிடப் பத்து வயது பெரியவரான அவர் எதுவும் பேசுமுன், `குடிப்பதை விட்டுவிடுங்கள் என்று நான் சொன்னால் கேட்பீர்களா?’ என்று சாந்தமாக, நான் அவரைக் கேட்டேன்.

    `Of course not!’ என்று ஆணித்தரமாகப் பதில் வந்தது.
    `நான் மட்டும் நீங்கள் சொல்வதைக் கேட்பேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?’ என்று நான் கேட்க, அவர் முகம் அதிர்ச்சியைக் காட்டியது. தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். அதிலிருந்து எனக்கு ரொம்ப மரியாதை!
    (3) `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’

    தன்னம்பிக்கை இல்லாத எவருக்குமே நாம் வித்தியாசமாக இருந்தால், பயம் உண்டாகும். எப்படியாவது தங்களைப்போல் மாற்றிவிட பெருமுயற்சி செய்கிறார்கள். நாம் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்த்துவதுபோல, `சுயநலமி,’ `அகம்பாவம் பிடித்தவள்’ என்று பல பெயர்களைச் சூட்டுவர். அவர்களை லட்சியம் செய்யவே கூடாது.

    கொஞ்சம் புத்திசாலியான வேறு சிலர், `உங்கள் புத்திசாலித்தனத்துக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று, புகழ்வதுபோல் குழி பறிப்பர். ஒரு வேளை, அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று யோசித்து, அவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது வீண்.

    பழியையும், வருத்தத்தையும் நாம் ஏற்காத பட்சத்தில், அவை சொன்னவரையே போய்ச் சேரும், சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல். நாமும் எப்போதும்போல் நிமிர்ந்தே நடக்கலாம்.

    அச்சத்தாலோ, பொறாமையாலோ நம்மை முதலில் ஏற்காதவர்களே என்றாவது நம் உதவி தேடி வருவார்கள். `என்னைப் பழித்தாயே!’ என்று குத்திக் காட்டாது உதவலாம்.

    தொடரும்

    Share